என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol"

    • இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
    • உத்திராட நாளில் (அதாவது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது.

    கொச்சி:

    கேரளாவில் ஓணம் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடந்த 10 நாட்கள் ஓணம் விழா நடந்தது. மாநிலத்தில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10 நாட்களில் ரூ.826 கோடிக்கு மது விற்பனை ஆனது. கடந்த ஆண்டு ரூ.776 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.50 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

    உத்திராட நாளில் (அதாவது ஓணம் பண்டிகைக்கு முந்தைய நாள்) மட்டும் ரூ.137 கோடிக்கு மது விற்பனையானது. கடந்த ஆண்டு அதே நாளில் ரூ.126 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது. இதை ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதலாக ரூ.11 கோடி மது விற்பனையானது குறிப்பிடத்தக்கது. நேற்று முன்தினம் 6 மதுபான சில்லறை விற்பனை கடைகளில் ரூ.1 கோடி மற்றும் அதற்கு கூடுதலாக மதுபானங்கள் விற்பனையானது. இதில் 3 சில்லறை விற்பனை கடைகள் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது.

    கொல்லம் மாவட்டம் கருணாகப்பள்ளி பகுதியில் உள்ள அரசின் சில்லறை விற்பனை கடையில் ரூ.1.46 கோடிக்கு மதுபானம் விற்பனையானது. இது மாநிலத்திலேயே அதிக அளவு விற்பனையான கடை ஆகும். அதற்கு அடுத்தபடியாக கொல்லம் அருகே உள்ள காவநாடு சில்லறை விற்பனை கடையில் ரூ.1.24 கோடிக்கும், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மன்னாவில் உள்ள எடப்பால் குற்றிப்பாலா சில்லறை மதுபான விற்பனை கடையில் ரூ.1.11 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

    திருச்சூர் மாவட்டம் சாலக்குடி மதுபான சில்லறை விற்பனை கடையில் ரூ.1.07 கோடிக்கும், இரிஞ்சாலகுடா மதுபான கடையில் ரூ.1.03 கோடிக்கும், கொல்லம் மாவட்டம் குண்டராவில் உள்ள மதுபான கடையில் ரூ.1 கோடிக்கும் மது விற்பனையாகி உள்ளது என்று கேரள அரசின் மதுபான விற்பனை கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போதைப் பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • போதைப் பொருள் வர்த்தகத்தில் மத்திய பிரதேசம் முந்திவிட்டது என்றார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய பிரதேச மாநில பெண்கள், நாட்டின் பிற பகுதிகளை விட அதிகமாக மது அருந்துகின்றனர். இதற்காக மத்திய பிரதேசத்துக்கு பதக்கம் அளிக்கவேண்டும்.

    மத்திய பிரதேசத்தை வளமான மாநிலமாக மாற்ற கனவு காணும் பா.ஜ.க. தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    போதைப் பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நமது சகோதரிகளும், மகள்களும் போதைப் பொருளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். போதைப் பொருள் பயன்பாட்டிலும் மத்திய பிரதேச பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.

    போதைப் பொருள் வர்த்தகத்தில் பஞ்சாப் போன்ற மாநிலங்களை மத்திய பிரதேசம் முந்திவிட்டது என தெரிவித்தார்.

    ஜிது பட்வாரியின் இந்தக் கருத்து அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஜிது பட்வாரிக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிது பட்வாரியின் கருத்து, பெண்களுக்கு எதிரான காங்கிரசின் குறுகிய மனப்பான்மையை காட்டுவதாகவும், இதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • மது அருந்தியதை பயணிகள் எச்சரித்தும், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை.
    • மது அருந்தியதை எதிர்த்துப் பேசிய மூத்த பயணியையும் அவர் மதிக்கவில்லை.

    நாகர்கோவிலில் இருந்து மதுரை சென்ற ரெயிலில் , பயணிகள் முன்னிலையில் ஒரு வடமாநிலத்தவர் வெளிப்படையாக மது அருந்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மது அருந்தியதை பயணிகள் எச்சரித்தும், அவர் அதைக் கண்டுகொள்ளாமல் தனது செயலைத் தொடர்ந்துள்ளார். இதை எதிர்த்துப் பேசிய மூத்த பயணியையும் அவர் மதிக்கவில்லை.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ரெயில்களில் இதுபோன்று அநாகரீகமான சம்பவங்களைத் தடுக்க, ரெயில்வே பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு காருக்குள் சென்று இருவரும் அதிக அளவு மது குடித்தனர்.
    • காரில் காற்றோட்டம் இல்லாததால் இருவரும் மூச்சு திணறி இறந்தனர்.

    ஆந்திர மாநிலம், கோவிந்தப்பா கண்டிகையை சேர்ந்தவர் திலீப் (வயது 25). கியாஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இவரது சகோதரர் வினய் (20). இவர் திருச்சானூரிலுள்ள சகோதரர் வீட்டில் தங்கி இருந்து திருப்பதி தேவஸ்தானத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இருவரும் நேற்று முன்தினம் இரவு திருச்சானூர் அடுத்த கலுவ கட்டா பகுதிக்கு காரில் வந்தனர். அப்போது காரை பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு காருக்குள் சென்று ஏ.சியை ஆன் செய்தனர். பின்னர் இருவரும் அதிக அளவு மது குடித்தனர்.

    ஏ.சி இரவு முழுவதும் ஓடிக்கொண்டு இருந்ததால் காரில் இருந்த பெட்ரோல் தீர்ந்து போனது. இதனால் ஏ.சி வேலை செய்யவில்லை. இருவரும் அதிக மது போதையில் இருந்ததால் ஏசி வேலை செய்யவில்லை என்பது தெரியவில்லை. காரில் காற்றோட்டம் இல்லாததால் இருவரும் மூச்சு திணறி இறந்தனர். கார் முழுவதும் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு இருந்ததால் காரில் இருப்பவர்கள் வெளியே தெரியவில்லை.

    நேற்று காலை திலீப்பின் தந்தை சந்தேகத்தின் பேரில் காரின் மீது இருந்த கவரை அகற்றினார். அப்போது மகன்கள் இருவரும் காரிலேயே இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    திருச்சானூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணங்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரில் ஏசியை ஆன் செய்து விட்டு மதுபோதையில் தூங்கினால் இது போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும் குடிமகன்கள் உஷாராக இருக்க வேண்டும்என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

    • தெலுங்கு நடிகரான நரேஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான அல்லெரி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
    • இவரது நடிப்பில் கடைசியாக பச்சல மல்லி என்ற திரைப்படம் வெளியானது.

    தெலுங்கு நடிகரான நரேஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான அல்லெரி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு அல்லெரி நரேஷ் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். அதன் பிறகு பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். இவரது நடிப்பில் கடைசியாக பச்சல மல்லி என்ற திரைப்படம் வெளியானது.

    இந்நிலையில் அல்லெரி நரேஷ் தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சித்தாரா எண்டெர்டெயின்மண்ட் மற்றும் பிரபல இயக்குநரான திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் மற்றும் நாக வம்சி இணைந்து தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார்.

    இப்படத்திற்கு ஆல்கஹால் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை மெஹெர் தேஜ் எழுதி இயக்குகிறார். இது ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • ஒன்று பழுதடைந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ மற்றொறு மிஷினை பயன்படுத்தி பணம் பெறலாம்.
    • டாஸ்க்மாக் கடைகளில் இனி மது பாட்டிகளை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டும் தான் வரும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் 4,778 சில்லறை விற்பனை கடைகள் மூலம் மது விற்பனை செய்யப்படுகிறது. இங்கு மது வகைகளுக்கு ஏற்ப, ஒரு பாட்டில்களுக்கு கூடுதலாக குறைந்தது ரூ.10 முதல் ரூ.50 வரை வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

    கூடுதல் பணம் வசூலிப்பது தொடர்பாக கேட்கும்போது மதுப்பிரியர்களுக்கும், டாஸ்மாக் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது. அப்போது அவர்கள் பேசுவதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றன. இதனால் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்படுகிறது.

    எனவே தமிழக அரசின் உத்தரவின் பேரில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் விசாகன், அனைத்து கடைகளிலும் மது பாட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தான் விற்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில் ஏராளமான ஊழியர்களையும் அவர், இடைநீக்கம் செய்தார். ஆனாலும் இந்த பிரச்சினை தீரவில்லை. தொடர்ந்து மது பாட்டிலுக்கு கூடுதல் தொகை தான் வசூலிக்கபட்டது.

    எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க டாஸ்மாக் நிர்வாகம், டிஜிட்டல் பண பறிமாற்ற முறையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தியது. ஒவ்வொரு கடையாக கொண்டு வரப்பட்ட இந்த முறை தற்போது அனைத்து கடைகளிலும் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒவ்வொரு கடைகளிலும் 2 'ஸ்வைப்பிங்' மிஷின்கள் வைக்கப்பட்டுள்ளன.

    ஒன்று பழுதடைந்தாலோ அல்லது சிக்னல் கிடைக்கவில்லை என்றாலோ மற்றொறு மிஷினை பயன்படுத்தி பணம் பெறலாம்.

    இதனால் ஏ.டி.எம். கார்டு, யு.பி.ஐ. பறிமாற்றம் மூலம் 2 சதவீதம் அளவுக்கு பணம் வசூலிக்கப்பட்டது. இப்போது 20 சதவீதத்தை தாண்டி டிஜிட்டல் பறிமாற்றம் நடக்கிறது.

    இருந்தாலும்....? ஒரு பாட்டிலுக்கு கூடுதல் தொகை வாங்குவது மட்டும் நிற்கவில்லை. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முடிவு செய்தது.

    இதையடுத்து டாஸ்மாக் நிர்வாகம் புதிய நடைமுறையை அமல்படுத்த உள்ளது. அதாவது சூப்பர் மாக்கெட்டுகளில் வாங்கிய பொருளை ஸ்கேன் செய்தால் அந்த பொருளின் விலை மட்டும் தான் 'ஸ்வைப்பிங்' மிஷினில் வரும். அந்த தொகையை மட்டும் தான் டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும்.

    அதேபோல டாஸ்க்மாக் கடைகளில் இனி மது பாட்டிகளை ஸ்கேன் செய்தால் அந்த பாட்டிலின் நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டும் தான் வரும். அந்த தொகையை மட்டும் தான் நாம் கார்டு மூலமாகவோ, யு.பி.ஐ. மூலமாகவோ செலுத்த முடியும். கூடுதல் தொகையை செலுத்த முடியாது.

    இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம், 'ஸ்வைப்பிங்' பணம் செலுத்தும் எந்திரத்தை வழங்கியுள்ள வங்கிகளிடம் ஆலோசனை நடத்தியது. சென்னையில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குனர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட வங்கி பிரதிநிதிகள், இன்னும் 10 தினங்களுக்குள், அதற்கான ஏற்பாட்டை செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர்.

    இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் மதுபாட்டிலுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மது போதையில் இருந்ததாக கூறப்படும் டாக்டர், ஆஸ்பத்திரியில் இருந்த கிரில் கேட்டை அடித்ததுடன், மற்றொரு கேட்டையும் உடைத்தாக கூறப்படுகிறது.
    • மருத்துவர்கள் மது போதையில் சிகிச்சை அளித்தால் வரக்கூடிய நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக காலை 6 மணிக்கு நோயாளிகள் வந்து காத்திருந்தனர். அப்போது ஆண்கள் மருத்துவப் பகுதியில் சிகிச்சை அளிக்கக்கூடிய பொது மருத்துவ பிரிவை சேர்ந்த டாக்டர் கண்ணன் என்பவர் காலை 6.30 மணிக்கு பணிக்கு வந்துள்ளார்.

    அப்போது மது போதையில் இருந்ததாக கூறப்படும் டாக்டர், ஆஸ்பத்திரியில் இருந்த கிரில் கேட்டை அடித்ததுடன், மற்றொரு கேட்டையும் உடைத்தாக கூறப்படுகிறது. பின்னர் அவர் புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதிக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

    இந்நிலையில் காலையில் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்திருந்த தூத்துக்குடி லூர்தம்மாள் புரம் பகுதியை சேர்ந்த சரோஜா என்ற பெண் இந்த சம்பவத்தை பார்த்து தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

    இது தொடர்பாக மருத்துவமனையில் பணியில் இருந்த சக டாக்டர்களிடம் புகார் தெரிவித்தார். இது பற்றி அவர் கூறுகையில், மருத்துவர்கள் மது போதையில் இருந்து சிகிச்சை அளித்தால் வரக்கூடிய நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் மற்றும் சிகிச்சையில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து பணியில் இருந்த டாக்டர் கண்ணன் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு வேறொரு டாக்டர் அமர்த்தப்பட்டு அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

    • ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்.
    • வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர் மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார்.

    மத்தியபிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் மது ஊற்றி குடிக்க கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அரசு தொடக்க பள்ளி ஆசிரியரான லால் நவீன் பிரதாப் சிங், மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் வகுப்பறையில் மாணவர்களுக்கு மது ஊற்றி குடிக்க கொடுத்துள்ளார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் சளி, இருமலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுவனை மருத்துவர் சிகரெட் பிடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அளவுக்கு அதிமாக மது குடித்த பொதுப்பணித்துறை ஊழியர் பலியானார்.
    • இதற்கிடையே தனிமையில் வசித்து வந்த ரவிச்சந்திரன் மது பழக்கத்துக்கு ஆளானார்.

    புதுச்சேரி:

    அளவுக்கு அதிமாக மது குடித்த பொதுப்பணித்துறை ஊழியர் பலியானார். புதுவை முருங்கப்பாக்கம் அங்காளம்மன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் பொதுப்பணித்துறையில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். இவரது சகோதரர் ரவிக்குமார் (வயது47). பொதுப்பணித்துறை தற்காலிக ஊழியரான இவர் முருங்கப்பாக்கத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி அவரது மனைவி 2 மகள்களுடன் நாகப்பட்டி னத்தில் தாய் வீட்டில் தங்கி ரேசன் கடையில் பணிபுரிந்து வருகிறார். இதனால் ரவிச்சந்திரன் குடிநீர் தேக்க தொட்டி அலுவலகத்திலேயே தங்கி பணிபுரிந்து வந்தார்.

    அவ்வப்போது ரவிச்சந்திரன் நாகப்பட்டி ணத்துக்கு சென்று மனைவி-மகள்களை பார்த்து விட்டு வருவார்.

    இதற்கிடையே தனிமையில் வசித்து வந்த ரவிச்சந்திரன் மது பழக்கத்துக்கு ஆளானார். சம்பாதிக்கும் பணத்தை அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து செலவழித்து வந்தார். இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

    அவருக்கு அவரது சகோதரர் சிவக்குமார் அறிவுரை கூறி இனிமேல் மது குடிக்க வேண்டாம் என்று கூறியும் அதனை செவிசாய்க்காமல் மீண்டும் ரவிச்சந்திரன் மது குடித்து வந்தார்.

    இந்தநிலையில்  ரவிச்சந்திரன் குடிநீர் தேக்க தொட்டி அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு உடல்நிலை மோசமானது. இதையடுத்து அங்குள்ள ஊழியர் ராஜி இதுபற்றி ரவிச்சந்திரனின் சகோதரர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சிவக்குமார் விரைந்து வந்து ரவிச்சந்திரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரவிச்சந்திரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுப்பிரமணி மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.
    • இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.

    ஈரோடு, டிச. 9-

    ஈரோடு, சடையம்பாளையம் ரோடு, முத்துசாமி காலனி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (66) தொழிலாளி.

    கடந்த அக்டோபரில் இவரது மனைவி செல்வி இறந்துவிட்டார். இதனால் மனவேதனையில் இருந்த சுப்பிரமணி சரியாக சாப்பிடாமல் மது அருந்தி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சுப்பிரமணி சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு வீட்டில் வாந்தி எடுத்துள்ளார்.

    அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி உயிரிழந்தார்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சுபேந்திரன் மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்தார்.
    • படுகாயமடைந்த சுபேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் கூலிதொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலத்திருப்பாலக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி ( வயது 41) விவசாயி. இவரது வீட்டில் அதே பகுதி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சுபேந்திரன் ( வயது 39) என்பவர் 15 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய கூலி வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் சுபேந்திரன் மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்ததால் அவர் சுபேந்திரனை வேலைவிட்டு நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த சுபேந்திரன் அடிக்கடி மது குடித்து விட்டு சக்கரவர்த்தியிடம் தகராறு செய்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி அரிவாளால் சுபேந்திரனை வெட்டினார். அதில் படுகாயம் அடைந்த சுபேந்திரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பரவக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சக்கரவர்த்தியை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    வெட்டி கொலை செய்யப்பட்ட சுபேந்திரனுக்கு கவிதா என்ற மனைவியும், 1 ஆண் ,2 பெண் குழந்தைகள் உள்ளது குறிப்பிடதக்கது.

    • மது அருந்தும் கூடாரமாக ரேஷன் கடை மாறிய நிலை உள்ளது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. பாளையம் ஏரிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ளதால், அங்கு மது பாட்டில்கள் வாங்கி வரும் மது பிரியர்கள், இந்த ரேஷன் கடையில் பட்டப்பகலில் அமர்ந்து மது அருந்துகின்றனர். சிலர் மது போதையில் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு, அந்த வழியாக செல்பவர்களிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.

    குறிப்பாக விடுமுறை நாட்களில் மது அருந்தும் கூடாரமாக ரேஷன் கடை மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியவில்லை. மது போதையில் சிலர் ரேஷன் கடையில் வாந்தி எடுத்து விடுகின்றனர். இதனால் மறுநாள் கடை திறக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மது பிரியர்களில் சிலர் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளில் அமர்ந்தும் மது அருந்துகின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடைக்கு செல்ல அச்சமடைந்து சாலையில் நின்று காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர். பெண் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டும், காணாதது போல் சென்று விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    ×