search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Womens"

  • மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பம் சரிபார்க்கும் பணி நடந்தது.
  • கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  கரூர்:

  கரூர் அரவக்குறிச்சி, கடவூர் ஆகிய வட்டத்திற்குட்பட்ட தடாகோவில், புங்கம்பாடி மேல்பாகம், காமராஜர் நகர், பள்ளப்பட்டி அப்பீஸ் நகர், ஷாநகர், சீத்தப்பட்டி, தரகம்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்களை களப்பணியாளர்கள் வீடு வீடாக நேரில் சென்று சரிபார்க்கும் பணியினை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  களப்பணியாளர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று ஆதார் எண், மின் கட்டணம், குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விவரம், சொந்தமாக வைத்திருக்கும் வாகனங்களின் விவரம் ,மேலும் ஆண்டு வருமானம் தொடர்பான விவரங்களை சேகரித்து அதற்கான தனிச்செயலியில் பதிவேற்றம் செய்யப்படும் இப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை பார்வையிட்டு களப்பணியாளர்களிடம் தங்களுக்கு ஒரு நாளைக்கு எத்தனை மனுக்களை விசாரிக்க வேண்டும் என்ற பட்டியலை நாள்தோறும் தேர்வு செய்து பணிகளை விரைவாகவும், சரியான விவரங்களையும் செயலியில் பதிவேற்றம் செய்ய களப்பணியாளர்களுக்கு ஆலோசனைகளை கலெக்டர் வழங்கினார்.

  • தனது 4 வயது மகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்தார்.
  • வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது

  திருப்பூர், ஆக.2-

  திருப்பூர் மாவட்டம் காங்கயம் இல்லியம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (வயது 43). இவர் கடந்த 2015-ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள தேங்காய் கொப்பரை களத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரது கணவர் விபத்தில் இறந்தார். அவருடைய மகனும் வேறொரு விபத்தில் இறந்தார். இதனால் தனது 4 வயது மகளுடன் ஆனந்தி தனியாக வசித்து வந்தார். வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தானும் விஷம் குடித்து தனது மகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதில் சிறுமி பரிதாபமாக இறந்தாள். தீவிர சிகிச்சைக்கு பின் ஆனந்தி உயிர் பிழைத்தார்.

  இது குறித்து காங்கயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஆனந்தியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த குற்றத்திற்கு ஆனந்திக்கு ஆயுள் தண்டனை, ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.

  இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.

  • செல்வ அரசி பிரச்சினைக்குரிய இடத்தில் சாணம் தட்டியதாக கூறப்படுகிறது.
  • அன்னக்கிளி, அவரது மகன்கள் ராபின், சுபின் ஆகியோர் சேர்ந்து செல்வ அரசியை கம்பால் தாக்கினர்.

  களக்காடு:

  திருக்குறுங்குடி அருகே உள்ள ஆவரந்தலை, மேலத்தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை மனைவி அன்னக்கிளி என்ற லெட்சுமி (வயது 58). இவருக்கும்,அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி செல்வ அரசிக்கும் (53) இடப்பிரச்சினை இருந்து வருகிறது.

  சம்பவத்தன்று செல்வ அரசி பிரச்சினைக்குரிய இடத்தில் சாணம் தட்டியதாக கூறப்படுகிறது. இதனை அன்னக்கிளி தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, மோதல் உருவானது. செல்வ அரசி, அவரது கணவர் கிருஷ்ணன் (61), அவரது மகன் மார்ஸ் நிக்ஸ் கோல்டன் (27) ஆகியோர் சேர்ந்து அன்னக்கிளியை தாக்கினர். அதனை தடுக்க வந்த அன்னக்கிளியின் மகன்கள் ராபின் (36), சுபின் (31) ஆகியோரையும் தாக்கினர். இதுபோல அன்னக்கிளி, அவரது மகன்கள் ராபின், சுபின் ஆகியோர் சேர்ந்து செல்வ அரசியை கம்பால் தாக்கினர். இந்த மோதலில் பெண்கள் உட்பட 4 பேர் காய மடைந்த னர். இதுபற்றி இரு தரப்பி னரும் திருக்குறுங்குடி போலீசில் தனித்தனியாக புகார் செய்த னர். போலீசார் இது தொடர்பாக இரு தரப்பை யும் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • ராஜபாளையம் பச்சமடம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா நடந்தது.
  • இதில் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி சென்று நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

  ராஜபாளையம்

  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்- தென்காசி ரோட்டில் பச்சமடம் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-வது நாளான நேற்று தண்டியல் தட்டு சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

  அதனை தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர், கருப்பசாமி, அம்மன் உள்ளிட்ட சாமிகளின் உருவங்களை பொறித்த முளைப்பாரிகள் முன் செல்ல குழந்தைகள், பெண் கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர்.

  இளைஞர்கள் நடனத்துடன் மேள தாளம் முழங்க கோவிலில் தொடங்கிய ஊர்வலம் பொட்டல்பட்டி, தெற்கு வைத்தியநாதபுரம், சங்கர பாண்டியபுரம், அம்பலபுளி பஜார் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

  ஊர்வலத்தின் இடையே சாரல் மழை குறுக்கிட்டாலும், மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் முளைப்பாரி ஏந்தி சென்று நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

  • களக்காட்டில் புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பெண்களுக்கும், 2-ம் கட்டமாக 24 பெண்களுக்கும் தையல், அழகு கலை பயிற்சி வழங்கப்பட்டது.
  • பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா களக்காடு சூழல் திட்ட அலுவலகத்தில் நடந்தது.

  களக்காடு:

  களக்காட்டில் புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 14 பெண்களுக்கும், 2-ம் கட்டமாக 24 பெண்களுக்கும் தையல், அழகு கலை பயிற்சியும், 14 பெண்களுக்கு அழகு கலை நிபுணர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா களக்காடு சூழல் திட்ட அலுவலகத்தில் நடந்தது. களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் தலைமை தாங்கினார். களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரி அன்பு சான்றிதழ்களை வழங்கினார்.

  அப்போது அவர் பேசுகையில், களக்காடு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு சூழல்மேம்பாட்டு திட்டத்தின் மூலம் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பட தையல் ,அழகு கலை பயிற்சியும், அழகு கலை நிபுணர் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. வனத்தையும், வன விலங்கு களையும் பாதுகாப்பதில் பொதுமக்கள் பங்களிப்பு அவசியமாகும். தேசிய புலிகள் ஆணையமும், வன வளத்தை பாதுகாக்க என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிராம மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளது. காடுகளை வனத்துறை அதிகாரியால் மட்டும் பாதுகாக்க முடியாது. பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

  விழாவில் களக்காடு சூழல் திட்ட வன சரகர் முகுந்தன், வனவர் சிவக்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், சூழல் மேம்பாட்டு திட்ட பணியாளர்கள், கிராம வனக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • முகம்மது சம்சுதீன் தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
  • பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என்று தெரிவித்தார்.

     அனுப்பர்பாளையம்  : 

  திருமுருகன்பூண்டி நகராட்சி கமிஷனராக இருந்த முகம்மது சம்சுதீன் தென்காசி மாவட்டம் சுரண்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக ஈரோடு மாவட்டம் பவானி நகராட்சி கமிஷனராக இருந்த தாமரை நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தாமரை திருமுருகன்பூண்டி கமிஷனராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு நகராட்சி தலைவர் குமார், துணைத் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து, வாழ்த்து தெரிவித்தனர்.

  புதிய கமிஷனராக பொறுப்பேற்ற தாமரை, மக்களுக்கான வளர்ச்சி திட்ட பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்கு கவுன்சிலர்கள் மற்றும் பொது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு தேவை என்று தெரிவித்தார். முன்னதாக தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப் பட்ட கமிஷனர் முகம்மது சம்சுதீனுக்கு வழியனுப்பு விழாநடைபெற்றது .

  இதில் தலைவர் குமார் தலைமையில் துணைத் தலைவர்,கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். அனைவருக்கும் கமிஷனர் முகம்மது சம்சுதீன் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

  • பெண்களின் குடுமிப்பிடி சண்டை வீடியோ காட்சி வைரலானது
  • சொத்து தகராறில்

  கரூர்:

  கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள செம்படாபாளையம் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருக்கு செல்வம்( வயது 55) என்ற மகனும், பாப்பாத்தி (50) என்ற மகளும் உள்ளனர்.

  இதில் ஐந்தரை சென்ட் நிலத்தை கோவிந்தராஜ் தனது மகளுக்கு எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.

  இந்த நிலையில் செல்வம் தங்கை பாப்பாத்தியின் நிலத்தை போலி ஆவணம் தயாரித்து அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

  வீடியோ வைரல்

  இது தொடர்பான குடும்பப் பிரச்சனை அண்ணன் தங்கை இருவருக்குள்ளும் நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்குள் தகராறு மூண்டது.பாப்பாத்தி அவரது மகன் நந்தினி ஒரு தரப்பாகவும், செல்வம் அவரது மனைவி தவமணி அந்த தம்பதியரின் மகன் யுவான் சங்கர் ஆகிய மூன்று எதிரணியாகவும் மோதிக்கொண்டனர்.

  ஆரம்பத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி கொடுமை குடுமி பிடி சண்டையானது. இதில் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது கரூர் பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இரு தரப்பினரும் வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • வாடிப்பட்டியில் வ.உ.சி. பிறந்தநாளையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
  • பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், த.மா.கா வட்டாரத்தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  வாடிப்பட்டி

  வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் வ.உ.சி. 151-வது பிறந்தநாள் விழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். யூனியன் ஆபீஸ் பிரிவிலிருந்து புறப்பட்டு காவல் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், போஸ்ட் ஆபீஸ், ஆட்டோ நிறுத்தம் வழியாக பஸ் நிலையத்திற்கு வந்தனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த வ.உ.சி. சிலை முன்பு முளைப்பாரி வைத்து வழிபாடு செய்தனர்.

  சங்க தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் பொன்னையா, பாபநாச மாரியப்பன், நாகமுத்து ராஜா, விக்கி ராம்மோகன் முன்னிலை வைத்தனர். செயலாளர் செந்தில் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன், துணைத் தலைவர் கார்த்தி, த.மா.கா வட்டாரத் தலைவர் பாலசரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் சந்தனபாண்டி நன்றி கூறினார்.

  • எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்க முயற்சி.
  • ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் முயற்சியை கையில் எடுத்துள்ளது.

   திருப்பூர் :

  திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வால்ரஸ் நிறுவனம் பின்னலாடை தொழிலுக்கு தேவையான பாலியஸ்டர் துணிகளை திருப்பூர் மட்டுமின்றி, நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும் வால்ரஸ் நிறுவனத்தின் மற்றொரு அங்கமான எஸ் இந்தியா கேன் அமைப்பு மூலமாக 1 லட்சம் தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியிலும், திருப்பூர் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது.

  இதற்காக அனைத்து தரப்பினருக்குமான ரெடிமேடு ஆடைகளை தயாரித்து, வால்ரஸ் நிறுவனத்திடமே வழங்கும் தொழில் வாய்ப்பையும் வால்ரஸ் நிறுவனம் நடைமுறைபடுத்தி வருகிறது. தமிழகத்தின் தென்மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் தாய்வீடு மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்புகள் இணைந்து ஏழை, எளியோர் மற்றும் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளனர்.

  தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் தாய்வீடு அமைப்பின் நிறுவனத்தலைவர் ஜான்பாண்டியன் திருப்பூரில் உள்ள வால்ரஸ் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு விற்பனை செய்யப்படும் துணிகள் மற்றும் ஆடைகளை பார்வையிட்ட பின்பு, வால்ரஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டேவிட்டுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

  வால்ரஸ் நிறுவனம் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்கும் முயற்சியை கையில் எடுத்துள்ளது. அந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில் தாய்வீடு அமைப்பு வால்ரஸ் நிறுவனத்தின் எஸ் இந்தியா கேன் அமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளது. தென் மாவட்டங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் அதிகமானவர்கள் உள்ளனர். அதில் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறவர்களை தேர்வு செய்து, அவர்கள் எந்த தொழில் செய்ய விரும்பினாலும் அவர்களுக்கு உதவி செய்ய தயாராக உள்ளோம்.

  மாணவர்கள், பெண்கள், இல்லத்தரசிகள் யார் வேண்டுமானாலும் தொழில் செய்ய முன்வரலாம். குறிப்பாக குடும்பத்தை முன்னேற்றும் இடத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். முதற்கட்டமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டு, பின்னர் இந்தியா முழுவதும் விரிவுப்படுத்தப்படும். தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்கள் தாய்வீடு, வால்ரஸ் எஸ் இந்தியா கேன் அமைப்புகளை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

  • பாலியல் துன்புறுத்தல்: பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்தது.
  • மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தற்கொலை மரணங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும்.

  மதுரை

  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட அலுவலகத்தில், பெண்கள் இந்தியா அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.

  புதிய நிர்வாகிகளாக தலைவர் கதீஜா, பொதுச்செயலாளர் சையது அலி பாத்திமா, பொருளாளர் கனகவள்ளி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தல் மற்றும் தற்கொலை மரணங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க வேண்டும், சமையல் எரிவாயுக்கான கூடுதல் வரியை ரத்து செய்து, விலை குறைப்பு செய்ய வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.