என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    சிறுதொழில் மூலம் ஹோம் மேக்கர்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! மகளிருக்கு நிதி சுதந்திரம் அவசியம்!
    X

    சிறுதொழில் மூலம் ஹோம் மேக்கர்களும் தொழில்முனைவோர் ஆகலாம்! மகளிருக்கு நிதி சுதந்திரம் அவசியம்!

    வீட்டு வேலையை செய்து கொண்டே, எப்போது வேண்டுமானாலும் சிறுதொழிலை செய்யலாம்.

    திருமணத்திற்கு முன்பு வேலைக்கு செல்லும் பல பெண்களால், திருமணத்திற்கு பின் அந்த வேலையை தொடர்வது சிரமமாக உள்ளது. திருமணமான பெண்களுக்கு வேலை செய்வது என்பது கடினம் கிடையாது. அலுவலகத்திற்கு சென்று வருவதுதான் கடினம். இதுவே திருமணமல்லாமலும் குடும்ப சூழ்நிலைகளால் சிலரால் தினசரி அலுவலங்களுக்கு சென்று பணியாற்ற முடியாது. சூழ்நிலையால் வேலை இல்லாமல், வேலைக்கு செல்ல இயலாமல் இருக்கும் பெண்கள் வீட்டிலேயே சிறுதொழில் தொடங்கலாம். உங்களுக்கு உகந்த நேரம், அதாவது நீங்கள் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, குழந்தைகளை கவனித்து விட்டு மீதமிருக்கும் நேரத்தில் பிடித்த தொழிலை செய்யலாம். அதற்கான சில யோசனைகளை இங்கே காணலாம்.

    ஊறுகாய்

    சமையல் தெரிந்த பெண்கள் ஊறுகாய் தொழில் செய்யலாம். நல்ல லாபம் கிடைக்கும். முதலில் ஒரு சிறிய முதலீடு, அதாவது ரூ. 10 ஆயிரம் ரூபாய் அளவு முதலீடு செய்து பாருங்கள். வெளியூர்களில் தங்கி வேலைக்கு செல்லும் இளைஞர்கள், மகளிர் பலரும் இதனை வாங்கி பயன்படுத்துவர். இதற்கு ஊறுகாயை ஆன்லைன் மூலம் விற்கவேண்டும். அப்படி ஆன்லைன் வேண்டாம் என்றால், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மளிகை கடைகளில் முதலில் கொஞ்சம், கொஞ்சம் போடுங்கள். ஊறுகாய் நன்றாக இருந்தால், அடுத்தடுத்து உங்களிடம் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள். ஊறுகாயை மொத்த சந்தை, சில்லறை சந்தை எனப் பல்வேறு வழிகளில் விற்பனை செய்து சம்பாதிக்கலாம். உங்கள் ஊறுகாய் நன்கு விற்பனையானால் பின்னர் முதலீட்டை அதிகமாக்குங்கள்.

    கேட்டரிங்

    சிலருக்கு கைப்பக்குவம் நன்றாக இருக்கும். அவர்கள் எல்லாம் கேட்டரிங் தொழிலை தொடங்கலாம். பெரிய பெரிய கல்யாணம், விழாக்கள் அப்படி இல்லையென்றாலும் வீடுகளுக்கு அதாவது படிக்கும் அல்லது வேலைக்கு செல்லும் இளைஞர்கள் பலருக்கும் உணவு செய்து தரலாம். அப்படி இந்த தொழிலை ஆரம்பித்தால் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் ஒரு விளம்பரம் கொடுத்தால் போதும். மாணவர்கள், வேலைக்கு செல்வோர் வீட்டு சாப்பாட்டை விரும்பி உங்களிடம் ஆர்டர் கொடுப்பார்கள். இதில் நல்ல லாபம் கிடைக்கும். மூன்று வேலைகளிலும் சமைக்க இயலாது என்றாலும், மதிய அல்லது இரவு உணவு மட்டும் முயற்சி செய்து பாருங்கள்.

    கைவினைப்பொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது

    அழகுசாதனப் பொருட்கள்

    இப்போதெல்லாம் பெண்கள் பலரும் ரசாயனங்கள் கலந்த அழகுப் பொருட்களைவிட இயற்கையாக தயாரிக்கும் பொருட்களையே விரும்புகின்றனர். ஆகையால் கற்றாழை ஜெல், குளியல் சோப்புகள், எண்ணெய் போன்றவற்றை வீட்டிலேயே செய்து விற்கலாம். முதலில் தெரிந்தவர்களிடம் அறிமுகப்படுத்தி நம்பிக்கை பெற்றபின் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மூலம் விற்கலாம். வரவேற்பை பொறுத்து பின்னர் கடைகளிலும் விற்கலாம்.

    ஆரி வொர்க்

    இப்போதெல்லாம் பெண்கள் பலரும் டிசைனிங் அதிகம் உள்ள ஆடைகளைத்தான் விரும்புகின்றனர். நீங்கள் கடையில் துணியை மெட்டீரியலாக வாங்கி அதில் மணி, முத்துகள், ஜரிகைகள் வைத்து தைத்து விற்கலாம். இல்லையென்றால் நூலை வைத்தும் எம்ப்ராய்டரிங் செய்யலாம். இந்த துணிகளுக்கு பெண்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. தையல் தெரிந்தவர்களுக்கு இது எளிதாக இருக்கும். இதுபோல இன்னும் நிறைய சிறுதொழில்கள் உள்ளன. நிதி சுதந்திரம் என்பது மகளிருக்கு அவசியமான ஒன்று. இதுபோன்ற சிறுதொழில்கள் மூலம் நீங்களும் தொழில்முனைவோர் ஆகலாம்.

    Next Story
    ×