என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆரோக்கியம்"

    • வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது.
    • மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு.

    காலை மெல்லோட்டம் உடலுக்கு பலவித நன்மைகளை அளிப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் உடற்பருமனானவர்கள் பலர் மெல்லோட்டம் ஓட மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்.

    இன்று வெறும் 10 அடி தூரம் மெல்லோட்டம் செய்தாலே பலருக்கு மூச்சு வாங்கும், வியர்த்துக்கொட்டும். இதனால் வேக நடையே சிறந்தது என எண்ணி பலர் கை, கால்களை வீசியபடி வேக நடை செல்வர்.

    வேகநடை, ஓட இயலாத முதியோர் பலருக்கு உதவும் ஓர் உடற்பயிற்சியாக உள்ளது. ஆனால் மெல்லோட்டமே உடல் எடை குறைக்க சிறந்த வழி என்போரும் உண்டு. காலை நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி செய்வோர் வேக நடை, மெல்லோட்டம் இடையே உள்ள வேறுபாட்டை அறிவது நல்லது.

    நடக்கும் வேகத்தில் மெல்லோட்டம் செய்வது, அதாவது நிமிடத்துக்கு 50 அடி எடுத்து வைத்து மெல்லோட்டம் செய்வது உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஓர் உடற்பயிற்சி முறை.

    கட்டுடல் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள் இதுபோல தினமும் காலை பல கி.மீ., மெல்லோட்டம் செல்வார்கள். இது இதயத்துடிப்பை அதிகரித்து, வியர்வையை வெளியேற்றி மன அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால் மெல்லோட்டம் கால்களின் தசை நாரில் தசைப்பிடிப்பு, காயம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    இளைஞர்கள், நடுத்தர வயதினர் மெல்லோட்டம் ஓடும்போது சரியான வேகத்தில் ஓடுவது நல்லது.

    வேகநடை மூலம் குறைவான கலோரிகளே எரிக்கப்படும். வேக நடை பயிலும்போது கைகளை முன்னும் பின்னும் வேகமாக ஆட்டி நடப்பது அதிக பலனைத் தரும். வேகநடை முதியோருக்கு ஏற்ற ஓர் சிறந்த கார்டியோ பயிற்சி. இதனை தினமும் செய்வதால் உடற்பருமனானவர்களின் உடற்தசைகளின் அடியில் உள்ள கொழுப்புப் படலம் எரிக்கப்பட்டு உடல் எடை குறையும். வேக நடை பயில்வது மிக எளிய கார்டியோ உடற்பயிற்சிக்கு சமமானது. வேக நடை பயில்வது மெல்லோட்டம் அளவுக்கு விரைவில் பலனைத் தராது என்றபோதும், உடல் களைப்படையாமல் நீண்டநேரம் செய்ய ஏற்ற உடற்பயிற்சிகளுள் சிறந்தது.

    வேகநடை, மெல்லோட்டம் ஆகிய இரண்டிலுமே சாதக பாதகங்கள் உள்ள நிலையில் உங்கள் உடல் நிலைக்கேற்ப நீங்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம்.

    • வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.
    • இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது.

    நம் உடலில் நோய் வருவதற்கு முக்கிய காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான். அதனை அதிகரிக்க அதிமதுர மிளகுப்பாலும் பருகி வரலாம். இந்த பாலை தயாரிக்க அதிமதுரம் கால் டீஸ்பூன், இலவங்கம் ஒரு துண்டு, மஞ்சள் தூள் இரண்டு டீஸ்பூன், மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன் தேவைப்படும். இவை அனைத்தையும் ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் கலந்து குடித்தால் போதும். காரத்தன்மை சற்று அதிகமாக இருந்தால் அவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொள்ளலாம்.

    வறட்டு இருமல், சளி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் விரைவில் பலன் கிடைக்கும். இதை காலை உணவுக்கு பிறகும், இரவு உணவுக்கு முன்பும் குடிக்க வேண்டும். மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்.

    அதிமதுரத்தில் உள்ள ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். உடல் பலவீனம் மற்றும் சோர்வாக இருப்பவர்களுக்கு உடல் ஆற்றலின் அளவை அதிகரிக்கச் செய்யும். இலவங்கம் பாக்டீரியாவை அழிக்கக்கூடியது. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை தடுக்கும். மேலும் வைரஸ் தொற்று, காய்ச்சலை தவிர்க்கவும், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யவும் இந்த அதிமதுர மிளகுப்பால் பெரிதும் உதவும்.

    • ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை.
    • கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

    டீ, காபியுடன் பால் கலந்து பருகும் வழக்கத்தைத்தான் பலரும் பின்பற்றுகிறார்கள். பாலை தவிர்த்து பிளாக் டீ, பிளாக் காபி என்ற கருப்பு நிற பானம் பருகுபவர்களும் இருக்கிறார்கள். இதில் எந்த கருப்பு பானம் ஆரோக்கியமானது என்று பார்ப்போம்.

    கருப்பு காபி (பிளாக் காபி):

    கருப்பு காபியை அதிகம் விரும்புபவர்கள் உடற்பயிற்சி ஆர்வலர்களாகத்தான் இருக்கிறார்கள். ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு ஒரு கப் காபி பருகுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. காபியில் உள்ளடங்கி இருக்கும் அதிக காபின் உடற்பயிற்சி செய்வதற்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

    மேலும் கருப்பு காபியில் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் பல்வேறு வகையான ஆன்டி ஆக்சிடென்டுகள், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன. ஒரு கப் கருப்பு காபியில் பெரும்பாலும் கலோரிகள் இருப்பதில்லை. சர்வதேச தொற்றுநோயியல் ஆய்விதழில், 'கருப்பு காபி' குடிப்பவர்களுக்கு உடல் பருமன் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    காபியில் இருக்கும் அதிக காபின் சிலருக்கு நடுக்கம், பதற்றம் அல்லது தூக்க கோளாறு பிரச்சினையை ஏற்படுத்தும். அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் வயிற்று அசவுகரியத்தை உண்டாக்கும். கருப்பு காபியை அதிகம் பருகுவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும்.

    கருப்பு தேநீர் (பிளாக் டீ):

    கருப்பு காபி, கருப்பு தேநீர் இரண்டுமே ஒரே மாதிரியானவை என்றாலும் பிளாக் டீயில் காபின் குறைவாக இருக்கும். அத்துடன் நிறைவுற்ற கொழுப்புகள் இருப்பதில்லை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும் கொண்டது. இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

    ஐரோப்பிய ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், கருப்பு தேநீரை தொடர்ந்து பருகுபவர்களால் கூடுதலாக உடல் எடையை குறைக்க முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் உடல் பருமன் கொண்டவர்கள் பருகுவதற்கு ஏற்ற பானமாக கருப்பு தேநீர் விளங்குகிறது. ஒரு கப் கருப்பு தேநீரில் 2 கலோரிகளே உள்ளது குறிப்பிடத்தக்கது. வயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்க கருப்பு டீ சிறந்த தேர்வாகும்.

    எது சிறந்தது?

    இரண்டு பானங்களையும் மிதமாக பருகினால் ஆரோக்கியமானவை. உடல் இயக்க செயல்பாடு மற்றும் உடல் நலனை கருத்தில் கொண்டு எந்த பானத்தை தேர்வு செய்வது என்று முடிவு செய்யலாம். குறிப்பாக காலையில் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை கொண்டிருப்பவர்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடலுக்கு தேவையான ஆற்றலை பெறவும் கருப்பு காபியை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

    சின்ன விஷயத்திற்கும் சட்டென்று பதற்றம் கொள்பவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கருப்பு காபியை தவிர்க்க வேண்டும். மேலும் மாலை மற்றும் இரவு நேரத்தில் கருப்பு காபி பருகக்கூடாது. ஏனெனில் அது தூக்கத்தை பாதிக்கும். காபின் அதிகமாக உட்கொள்ள விரும்பவில்லை என்றால் கருப்பு தேநீர் சிறந்த தேர்வாக அமையும்.

    • குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
    • வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம்.

    டிசம்பர் மாதத்தில்தான் பொதுவாக குளிர்காலம் தொடங்கும் என்றாலும், பருவமழைக்காலமான அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை குளிர்ந்த காற்று வீசக்கூடும். அதனால் இந்த காலகட்டங்களில் நாம் பாதுகாப்பாக இருப்பது நல்லது. குறிப்பாக முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் காது வலி அடிக்கடி ஏற்படும். குளிர்காலத்தின் போது ஏற்படும் காது வலி இயல்பானது என பலர் நினைக்கின்றனர். ஆனால் உரிய நேரத்தில் கவனிக்கத் தவறினால், காதில் ஏற்படும் வலி அதிகரித்து பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். குளிர்காலத்தில் ஏன் காது வலி ஏற்படுகிறது? இதை சமாளிப்பது எப்படி? என்பதை பற்றி பார்ப்போம்.

    சளி, மூக்கடைப்பு பிரச்சனையால் காது வலி வருமா?

    குளிர்காலத்தின் போது காற்றில் வழக்கத்தை விட அதிகமாக தூசு நிறைந்து இருக்கும். இதன் காரணமாக சுவாசிக்கும் காற்று மூக்கு வழியாக நுழையும் போது அலர்ஜி ஏற்படுகிறது. குறிப்பாக சளி தொந்தரவு இருக்கும் நபர்களுக்கு யூஸ்டேஷியன் குழாயினுள் தூசு நுழைவதன் காரணமாக காது வலி இயல்பாகவே ஏற்படுகிறது. காதில் ஏற்படும் இந்த வலியின் காரணமாக முகத்துடன் இணைந்துள்ள நரம்பில் அழுத்தம் ஏற்பட்டு, அந்த நரம்பின் செயல்பாடு பாதிப்புக்குள்ளாகிறது. இதன் விளைவாக முகத்தில் உள்ள தசைகளின் செயல்பாடும் முடங்கிப்போய்விடுகிறது. இது 'பெல்ஸ் பாலஸி' என்று அழைக்கப்படுகிறது.

    குளிர்காலத்தின்போது மற்ற நபர்களை விட சைனஸ் பாதிப்பு இருக்கும் நபர்களுக்கு காது வலி ஏற்படும் வாய்ப்பு அதிகம். குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்று உள் நுழையும்போது மூக்குக்கு உள்ளே இருக்கும் சதைகள் வீங்கும். இதனால் அவர்களுக்கு காது வலி, தலை வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.



    காது வலி ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

    வீட்டில் இருக்கும் போது காதுகளை முழுவதுமாக மூடும் வகையில் குல்லா அணிந்து கொள்ளலாம். அது குளிர் காற்று காதுக்குள் செல்வதைத் தடுக்க உதவும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது காதையும், மூக்கையும் சேர்த்து மூடும் வகையில் 'ஸ்கார்ப்' அணிந்து கொள்ளலாம்.

    குளிர் காற்று காரணமாக ஏற்படும் காது வலிக்கு நீராவி பிடிப்பது நல்லது. அப்போது மூக்கினுள் ஈரப்பதம் நிறைந்த சூடான காற்று சென்று நிவாரணம் தேடித்தரும். அதன் பிறகும் காது வலி இருந்தால், மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

    எதனால் ஏற்படுகிறது?

    நமது மூக்கையும், காதையும் இணைக்கும் ஒரு குழாய்தான் குளிர்காலத்தில் ஏற்படும் காது வலிக்கு முக்கிய காரணம். யூஸ்டேஷியன் குழாய் என்று அழைக்கப்படும் இந்தக் குழாய், குளிர்காலத்தின் போது மூக்கின் வழியாக உடலுக்குள் நுழையும் குறைந்த ஈரப்பதம் கொண்ட வறண்ட குளிர் காற்றின் காரணமாக மூடிக்கொள்கிறது. இந்தக்குழாய் மூடுவதன் விளைவாக, காது சவ்வுகள் இறுக்கமாகி காது வலி உண்டாகிறது.

    • ரசாயனப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவது ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான அளவிற்கு நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும்.
    • சுத்தம் செய்யும்போது வெளியாகும் புகை மற்றும் துகள்கள் சுவாச பாதைகளை சேதப்படுத்தி நுரையீரலுக்கு பங்கம் விளைவிக்கின்றன.

    வீட்டை சுத்தம் செய்வதற்கு ஸ்ப்ரேக்கள் மற்றும் ரசாயனப் பொருட்களை அடிக்கடி பயன்படுத்துவது ஒரு நாளைக்கு 20 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமமான அளவிற்கு நுரையீரலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

    குறிப்பாக தொடர்ந்து வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும் பெண்களுக்கு காலப்போக்கில் நுரையீரல் செயல்பாடு பாதிப்புக்குள்ளாவதையும் நார்வே ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

    சுத்தம் செய்யும்போது வெளியாகும் புகை மற்றும் துகள்கள் சுவாச பாதைகளை சேதப்படுத்தி நுரையீரலுக்கு பங்கம் விளைவிக்கின்றன. எனவே நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க ரசாயன கலப்பில்லாத இயற்கை பொருட்களை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கின்றனர்.

    • வாரத்திற்கு மூன்றுமுறையாவது பீட்ரூட் எடுத்துக்கொள்ளுங்கள்.
    • பீட்ரூட் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

    நாம் சுவைக்காகவே பெரும்பாலும் நிறைய காய்கறிகளை எடுத்துக்கொள்வோம். அதுவும் சைடிஸ் இல்லாமல் சாதம் இறங்காது என்பதற்காகத்தான், எதாவது ஒரு பொரியலை சாப்பிடுவோம். அப்படி நாம் சாப்பிடக்கூடிய பொரியல்களில் ஒன்றுதான் பீட்ருட். பலரும் அதிகமாக உருளைக்கிழங்குதான் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் பீட்ரூட்டின் ஊட்டச்சத்து நன்மைகளை நீங்கள் அறிந்தால் தினசரியாக எடுத்துக்கொள்ள தொடங்கிவிடுவீர்கள். பீட்ரூட்டின் ஆரோக்கிய நன்மைகளை காண்போம். 

    இரத்த அழுத்த மேலாண்மை

    பீட்ரூட்டில் அதிகளவு நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்படுகின்றன. நைட்ரிக் ஆக்சைடு இரத்த நாளங்களைத் தளர்த்தி, விரிவுபடுத்தும். மேலும் ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துகிறது.

    செரிமானம்

    ஒரு கப் பச்சை பீட்ரூட் 3.81 கிராம் நார்ச்சத்தை உடலுக்கு வழங்குகிறது. இது தினசரி மதிப்பில் (DV) சுமார் 13.61% ஆகும். நார்ச்சத்து என்பது செரிமானத்தை ஆதரிக்க உதவும் ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். இது குடல் இயக்கத்தை சீராக, மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது உதவுகிறது. மேலும் நீண்டநேரம் வயிறு நிரம்பி இருக்கும் உணர்வை தருகிறது.

    ஆக்ஸிஜனேற்ற அழற்சி எதிர்ப்பு பண்புகள்

    பீட்ரூட்டில் அதிகளவு பெட்டாலைன் உள்ளது. இது சிறந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட ஒரு சேர்மமாகும். ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களிலிருந்து காக்க உதவுகிறது. 

    இதய ஆரோக்கியம்

    பீட்ரூட் ரத்தத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதோடு, இதில் உள்ள பீட்டெய்ன் அமினோ அமிலமும் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீட்டெய்ன், ஹோமோசைஸ்டீன்-ஐ மற்ற இரசாயனங்களாக மாற்ற உதவுகிறது, இதனால் அதன் இரத்த அளவு குறைகிறது.

    பீட்ரூட் ரத்தத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இதில் உள்ள பீட்டீன் அமினோ அமிலமும் இரத்தத்தில் ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைக்கிறது. உதவுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான ஹோமோசைஸ்டீன் அளவைக் குறைப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. பீட்டெய்ன், ஹோமோசைஸ்டீன்-ஐ மற்ற இரசாயனங்களாக மாற்ற உதவுகிறது, இதனால் அதன் இரத்த அளவு குறைகிறது. 


    பீட்ரூட் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்

    மூளை ஆரோக்கியம்

    பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் வயதானவர்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வயதாகும்போது இரத்த ஓட்டம் இயற்கையாகவே குறையத்தொடங்கும். நைட்ரிக் ஆக்சைடு மூளையில் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். இதனால் நினைவாற்றல் மற்றும் முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கிறது. 

    கல்லீரல் ஆரோக்கியம்

    கல்லீரல் இரத்தத்தை வடிகட்டுதல், நச்சு நீக்குதல், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்தல் என உடலின் பல்வேறு முக்கிய பணிகளை செய்கிறது. பீட்ரூட்டில் உள்ள பீட்டெய்ன், கல்லீரலில் கொழுப்பு படிவதைக் குறைத்து, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். கல்லீரல் தொடர்பான பிற நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.  

    ஒரு கப் பீட்ரூட்டில் உள்ள ஊட்டச்சத்துகள்

    கலோரிகள் 58, கொழுப்பு 0.231 கிராம் , சோடியம் 78 மிகி, கார்போஹைட்ரேட்டுகள் 13 கிராம், நார்ச்சத்து 3.81 கிராம், புரதம் 2.19 கிராம் உள்ளது. மேலும் பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பொட்டாசியம் இதயம், தசை மற்றும் நரம்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது. ஃபோலேட் திசு வளர்ச்சி மற்றும் இரத்த சிவப்பணு உற்பத்தியை ஆதரிக்கும் ஒரு பி வைட்டமின் ஆகும். வைட்டமின் சி தோல், எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 

    • அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.
    • யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள்.

    நான், என் முகம், என் சருமம் பார்ப்பதற்கு அழகாக, பொலிவாக தெரியவேண்டும் என பலரும் நினைப்போம். இதற்கு பொருட்செலவு, பணச்செலவு, நேரச்செலவு என அனைத்தையும் செய்வோம். ஆனால் எதற்கு இவ்வளவு மெனக்கெடல்கள்? பொருட்செலவு? பணச்செலவு? நம் முகத்தில் மாற்றத்தை உண்டாக்குவதுதான் உண்மையான அழகா? உண்மையில் எது அழகு? பார்ப்போம்.

    "அழகு என்பது ஒருவரின் பார்வையில்தான் உள்ளது". ஆம், நாம் பலமுறை புத்தகங்களில் அல்லது பேச்சாளர்களால் அல்லது ஏதோ ஒருவகையில் கேள்விப்பட்டிருக்கும் இந்த சொற்றொடர் உண்மையில் அழகு என்பது நாம் ஒருவரை பார்க்கும் விதத்தில்தான் உள்ளது. ஒருவரை அப்படியே அவராகவே ஏற்றுக்கொள்வதில்தான் உள்ளது. இந்த சமூகத்தில் அழகு என்றால் அளவு உள்ளது. அதாவது முகம் உட்பட உதடு, மூக்கு, உடல்வாகு என அனைத்திற்கும் ஒரு அளவு உள்ளது. அது இந்த அளவில் இருந்தால்தான் அழகு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நிறமும். தமிழர்களின் நிறமே, ஏன் இந்தியர்களின் நிறமே கருப்புதான் எனக்கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கே வெள்ளையாக வேண்டும் என்பதுதான் ஆசை. வெள்ளையாக இருப்பதுதான் இங்கு அழகு. அழகென்றால் இப்படித்தான் இருக்கும் என ஒரு இலக்கணம் இந்த சமூகத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த இலக்கணத்தை தாண்டிய அழகு எது? இந்த கேள்வியை ஒரு  10 பொதுமக்களிடம் முன்வைத்தால், அவர்கள் அனைவரிடத்திலும் இருந்து பத்து பதில்கள் வரும். 

    ஒவ்வொரு பதிலும் ஒவ்வொன்றாக இருக்கும்போது அவர்களின் புரிதல்கள், பார்வைகள் வேறுபட்டது என்பது நமக்குத் தெரியும். ஆம், உண்மையில் அனைவரின் பார்வையும் வேறுபட்டது. எல்லோருடைய கண்களுக்கும் நாம் அழகாக தெரிவோமா என்றால் இல்லை. சமூகத்தின் அழகு இலக்கண வரையறைப்படி இருக்கும் ஒருவரை அனைவருக்கும் பிடிக்காது. அந்த இலக்கணத்தை விரும்புபவர்களுக்கு மட்டும்தான் அவர்களை பிடிக்கும். அப்போது எப்படி நம்மை பிடிக்கும்? எதனால் நம்மை பிடிக்கும்? எதுதான் அழகு?


    குழந்தைகளின் புன்னகையும் ஒரு அழகுதான்

    உலகில் படைக்கப்பட்ட அனைத்துமே அழகுதான். நான், நீங்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்கள், எழில் கொஞ்சும் இயற்கை வளம், தெரியாதோரின் கருணை, காரணமே இன்றி அழுத்தத்தில் சாலையில் தனியாக நடந்து செல்லும் நம் மனதை புன்னகைக்க வைக்கும் குழந்தை, என்றோ ஓர்நாள் தடவியதற்காக பார்க்கும்போதெல்லாம் வாலாட்டும் நாய்க்குட்டி, பாதையை அறிந்து பயணம் செய்யும் நமக்கு பயணத்தின்போது வழிசொல்லி "பத்திரமாக செல்" எனக்கூறும் யாரென்றே தெரியாத நரைவிழுந்த மூதாட்டி, அம்மாவின் தலையில் இருக்கும் கனகாம்பரம் என அடுக்கிக்கொண்டே போகலாம். இவையனைத்தும்தான் அழகு. ஆறுதல் தரும் அன்பை உமிழும் அனைவருமே அழகானவர்கள்தான். அவர்களின் வார்த்தைகள்தான் அழகானவை. அன்பின் வழியது வருவது அனைத்துமே அழகானதுதான்.

    யாரை பார்த்தால் நம் முகம் பூக்கிறதோ அவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள். பிடித்த பெண்கள் அனைவரும் ஆண்களின் கண்களுக்கு தேவதைதான். பிடித்த ஆண்கள் அனைவரும் பெண்களுக்கு இளமாறன்தான். மொத்தமாக அகமும், அகத்தின்வழி நாம் ஒருவருக்கு அளிக்கும் புன்னகையும்தான் உண்மையான அழகு. இறுதியாக, நீங்கள் அழகாக தெரியவேண்டும் என்றால் எதுவும் செய்யவேண்டாம், புன்னகையை மற்றவருக்கு பரிசளியுங்கள். 

    • பாஞ்சாலி, தனது கணவர்கள் பேச்சை கேட்டதில்லை. தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்டு நடந்தவர்.
    • சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான்.

    கணவனா? தோழனா? என்னும் நம் தலைப்பிலேயே எவ்வளவு அர்த்தங்கள், பொருட்கள் நிறைந்துள்ளன. பெரும்பாலான பெண்களிடம் உங்கள் கணவரா? தோழரா? எனக்கேட்டால், தோழரையே சொல்வார்கள். ஏன் மகாபாரத நாயகி திரௌபதியை கேட்டிருந்தால்கூட தனது தோழர் கிருஷ்ணனைத்தான் கூறியிருப்பார். " ஐந்து ஆண்களுக்கு மனைவியான பாஞ்சாலி தனது கணவர்கள் எவரின் பேச்சையும் கேட்டதில்லை, தனது அன்புத் தோழன் கண்ணனின் பேச்சை மட்டுமே கேட்கவில்லை. நடந்தவர்" என பலரும் சொல்வதே அந்த பதிலுக்கு காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த பதிலுக்கான உண்மையான காரணம் என்ன?

    குந்தியின் சொல்லோ, அல்லது முன்ஜென்ம வரமோ ஏதோ ஒரு காரணத்தால் திரௌபதி ஐந்து கணவர்களை ஏற்க வேண்டிய சூழல். ஏற்றாள். ஐந்து கணவர்கள் இருந்தும் அவளுக்கு ஆறுதலாக இருந்தது யார்? அவளது தோழன் கிருஷ்ணன்தானே. எப்போதெல்லாம் அவள் மனம் குழப்பத்தில் ஆழ்கிறதோ, எப்போதெல்லாம் அவள் இடரை அனுபவிக்கிறாளோ அப்போதெல்லாம் உறுதுணையாக இருந்து தோள் கொடுத்தவன் கண்ணன் ஒருவன்தானே. தனது மனைவியை சூதாட்டத்தில் வைத்து விளையாடியவர்களா? இல்லை சபையில் தனது துயில் உரியபோது துணி கொடுத்து அவள் மானத்தை காப்பாற்றியவனா? யாரைச் சொல்வாள்?

    தர்மத்தில் சிறந்தவன் யுதிர்ஷ்டன். பலத்தில் சிறந்தவன் பீமன். வில்வித்தையில் சிறந்தவன் அர்ஜுனன். திரௌபதியால் முதலில் மாலை சூட்டப்பட்ட, முதலில் நேசிக்கப்பட்ட கணவன். குதிரைகள் பற்றிய அறிவிலும், அழகிலும் சிறந்து விளங்கியவன் நகுலன். திரௌபதி துயில் உரியப்படுவது உட்பட முக்காலத்தையும் முன்னரே அறிந்தவன் சகாதேவன். இப்படி உலகில் சிறந்திருந்த இவர்களின் தர்மமோ, அறமோ, திறனோ, எதுவாலும் திரௌபதி துயில் உரியப்படுவதை தடுக்க முடியவில்லை. தடுக்கவில்லை. அத்தனை பலம் கொண்ட பீமன், வில்வித்தையில் சிறந்த அர்ஜூனன், ஞானத்திலும், வீரத்திலும், தர்மத்திலும் சிறந்திருந்த பீஷ்மர் உட்பட அரங்கில் சில தர்மர்கள் நினைத்திருந்தால், தடுத்திருந்தால் திரௌபதி அந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கமாட்டாள். தன்னை அர்ப்பணித்த கணவன்மார்களே உதவாதபோது, கையில் சிறிது காயம் பட்டபோது தனது உடையை கிழித்து கண்ணனுக்கு கட்டியதை நினைவுகூர்ந்து, துணியை விட்டு மானம் காத்தான் கிருஷ்ணன். இதில் யார் சிறந்தவர்கள்? யார் திரௌபதி மீது உண்மையான பாசமும், அன்பும், அக்கறையும் கொண்டிருந்தவர்கள்? நட்பின் அடிப்படையில் வந்த ஒருவர் தனக்காக இவ்வளவு செய்யும்போது, காதல், திருமணப் பந்தம் மூலம் வந்த கணவர்கள் பயனற்றதாக இருந்தது ஏன்?


    திரௌபதிக்கு கண்ணன் உதவும் காட்சி

    இந்த பாண்டவர்களைப் போல பல கணவர்மார்கள் உள்ளனர். எப்போது தனது துணைக்கு தேவையோ அப்போது உதவமாட்டார்கள். சிறந்த உறவில் கணவன் தோழனாகவும் இருப்பான். அப்படி இருந்தால்தான் அந்த உறவு சிறக்கும். தோழன் கணவனாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு கணவன் கண்டிப்பாக தோழனாக மாறமுடியும். பெண்களின் பதிலுக்கும் இதுதான் காரணம். தன் உணர்வுகளை மதிக்கும் ஒருவரையே பெண் தேர்ந்தெடுப்பாள். 

    • எல்லா கர்ப்பிணி பெண்களுக்குமே 4-வது மாதத்தில் சிறுநீர் தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும்.
    • சிறுநீர் பரிசோதனை நெகட்டிவ் ஆக வந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

    பெண்களை பொருத்தவரை கர்ப்ப காலங்களில் அவர்களுக்கு நிறைய சந்தேகங்கள் ஏற்படும். அவர்களில் பலரும் தங்களின் சந்தேகங்களை அவர்களது மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். அதேபோல் பெண்கள் பலருக்கும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் சிறுநீர்க்குழாய் தொற்று தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. என்னிடம் சிகிச்சை பெற வரும் கர்ப்பிணி பெண்கள் பலரும் சிறுநீர்க்குழாய் தொற்று பிரச்சனை தொடர்பான பலவித சந்தேகங்களை கேட்டுள்ளனர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீர்க்குழாய் தொற்று எப்படி ஏற்படுகிறது?

    அந்த வகையில் சிறுநீர்க்குழாய் தொற்று என்பது கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதை பல பெண்களும் எதிர்கொள்கிறார்கள். சிறுநீர்க்குழாய் தொற்று பாதிப்புகள் எப்படி ஏற்படுகிறது? அதற்கான தீர்வுகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

    பெண்களின் கர்ப்பகாலத்தில் முதல் 3 மாதங்கள், நடுவில் உள்ள 3 மாதங்கள் மற்றும் கடைசியில் உள்ள 3 மாதங்கள் ஆகிய காலகட்டங்களை எடுத்துக் கொண்டால், கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில் சிறுநீர்க்குழாய் தொற்று என்பது மிகவும் பொதுவாக ஏற்படக்கூடிய ஒன்றாகும்.

    ஏனென்றால் ஒரு பெண் கர்ப்பிணியாக இருக்கும் காலகட்டத்தில் கரு உருவான பிறகு அது வளரத் தொடங்கும். அந்த கருவானது பெரிதாக வளர வளர கர்ப்பப்பையும் பெரிதாகி விரிவடையும். சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று மிகவும் பக்கத்தில் இருக்கும். கர்ப்பப்பை விரிவடையும்போது சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று மிகவும் நெருக்கமாக காணப்படும்.

    எனவே அதுபோன்ற கால கட்டத்தில் சிறுநீர்க்குழாய் தொற்றானது, கர்ப்பப்பையில் மிகவும் எளிதாக பரவுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அதோடு அந்த கர்ப்பப்பை வளர்ந்து பெரிதாகும்போது, சிறுநீர்க்குழாயில் ஏற்படும் அழுத்தம் காரணமாக கர்ப்பிணிகளுக்கு சிறுநீர்த்தேக்கம் என்பது அதிகம் இருக்கும்.

    இந்த காலகட்டத்தில் பல பெண்களுக்கு கர்ப்பப்பை பின்னோக்கி சாய்ந்த நிலையில் காணப்படும். அப்படி சாய்ந்த நிலையில் கர்ப்பப்பை இருக்கும்போது, அது சிறுநீர்க்குழாய்க்கு அழுத்தத்தை கொடுக்கும். இதன் காரணமாக சிறுநீரானது திரும்பி செல்லும் நிலை ஏற்படும். இதனால் சிறுநீர்க்குழாயில் தொற்று உருவாகும்.

    சிறுநீர்க்குழாய் தொற்று உருவாவதற்கான முக்கிய காரணங்கள்:

    மேலும் இதற்கு முக்கிய காரணமே சிறுநீர்க்குழாய் மற்றும் யோனிப்பகுதி ஆகியவை கர்ப்பப்பையின் பக்கத்தில் இருப்பதுதான். அதனால் தான் கர்ப்பிணிகளுக்கு பல நேரங்களில் அறிகுறி எதுவுமே இல்லாமல் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படும். அறிகுறி இல்லாமல் சிறுநீர்க்குழாய் தொற்று எப்படி வரும் என்றால், பொதுவாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு காய்ச்சல் வரும், குளிர் ஜுரம் வரும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்பது போல் தோன்றும். மேலும் அவர்கள் சிறுநீரை அடக்கமுடியாமல் சிரமப்படுவார்கள்.

    இந்த அறிகுறிகளானது கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பொதுவான அறிகுறிகள் என்பதால் கர்ப்பிணிகள் பலரும் இதை பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் சிறுநீர்க்குழாய் தொற்றுக்கும் இதே அறிகுறிகள் தான் என்பதை பெண்கள் கவனிக்க தவறி, தவறு செய்து விடுவார்கள். அதனால் தான் அவர்கள் சிறுநீர்க்குழாய் தொற்று பற்றி கவலைப்பட மாட்டார்கள்.

    ஆனால் கர்ப்பிணி பெண்களுக்கு முதல் 3 மாதங்களில் சிறுநீர்க்குழாய் தொற்று அதிகரித்து காணப்படுவது மிகவும் பொதுவான விஷயம். ஆனால் சிலருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கர்ப்பகாலத்தில் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படும். பொதுவாகவே சிறுநீர்க்குழாயும், கர்ப்பப்பையும் மிகவும் பக்கத்தில் இருப்பதால், கர்ப்பப்பை வளரும்போது ஏற்படும் அழுத்தம் காரணமாக சிறுநீர் தேங்குவது என்பது அதிகம் இருக்கும். பல நேரங்களில் அதனால் சிறுநீர்க்குழாய் தொற்றானது அறிகுறி இல்லாமல் இருக்கும்.

    எனவே தான் கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற சிறுநீர்க்குழாய் தொற்று பாதிப்பை அறிகுறியற்ற பாக்டீரியூரியா (ஏசிம்டமேட்டிக் பாக்டீரியூரியா) என்று சொல்கிறோம். அறிகுறியற்ற பாக்டீரியூரியா என்றால் இந்த காலகட்டத்தில் அறிகுறியே இல்லாமல் சிறுநீரில் தொற்றுக்கள் இருக்கும்.

     

    டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

    சிறுநீர்க்குழாய் தொற்றுக்களை கண்டறிவதற்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை:

    அதனால் தான் எல்லா கர்ப்பிணி பெண்களுக்குமே 4-வது மாதத்தில் சிறுநீர் தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். மேலும் கூடவே ஒரு யோனி ஸ்வாப் பரிசோதனையும் செய்ய வேண்டும். இது பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுக்களை கண்டறியும் பரிசோதனை ஆகும். ஏனென்றால் அறிகுறியே இல்லாமல் தொற்றுக்கள் பரவும் நிலையில், இந்த தொற்றுக்களானது கர்ப்பப்பையில் இருக்கும் கருவையும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

    அதனால்தான் அறிகுறியற்ற பாக்டீரியூரியாவினால் நிறைய பெண்களுக்கு குறை மாதத்தில் குழந்தை பிறப்பது, குறை மாதத்தில் பனிக்குட நீர் உடைவது, குழந்தையின் எடை குறைவாக இருப்பது போன்ற பல்வேறு வகை பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்ட ஒரு விஷயம் ஆகும்.

    அதற்காகத்தான் எல்லா கர்ப்பிணிகளுக்கும் 4-வது மாதத்தில் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்வது அவசியமானதாகும். இந்த பரிசோதனையின்போது தொற்றுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால், அதற்கு குறிப்பிட்ட ஆன்டிபயாடிக் மருந்து கொடுத்து முழுமையாக சரிசெய்து விடுவோம். இதில் ஒரு லட்சம் தொற்றுக்கள் இருந்து, ஆனால் அதற்குரிய அறிகுறி இல்லாவிட்டால் கூட கண்டிப்பாக இவர்களுக்கு சிகிச்சை முறைகள் தேவைப்படும்.

    கர்ப்பகாலத்தில் இந்த சிறுநீர்க்குழாய் தொற்றுக்கள் என்பது மிகவும் பொதுவானது. இதற்கு குறிப்பிட்ட மற்றும் பாதுகாப்பான ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த காலகட்டத்தில் கர்ப்பிணிகள் பொதுவாக சிறுநீரை கட்டுப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக நீர்ச்சத்து உள்ள நீராகாரங்களை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சிறுநீரை எளிதாக கழிப்பது போன்ற சூழல்களை உருவாக்கி்க கொள்ள வேண்டும். இதெல்லாம் ரொம்பவும் முக்கியமான விஷயம். இவை அனைத்தும் ஒவ்வொரு பெண்ணும் கர்ப்ப காலத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

    எனவே கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக சிறுநீர்க்குழாய் தொற்று இருந்தால் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீர்க்குழாய் தொற்றுக்கான மருந்துகள் மாத்திரைகள் எடுத்து முடித்த பிறகு, மீண்டும் ஒருமுறை சிறுநீர் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களின் சிறு நீர்க்குழாய் தொற்று பிரச்சனை முழுமையாக சரியாவதை உறுதி செய்ய முடியும். அதன்பிறகு பின்நாட்களில் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் வராமல் தடுக்க முடியும்.

    பெண்கள் கர்ப்பத்தை உறுதி செய்ய சிறுநீர் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும்?

    பெண்கள் பலரும் தாங்கள் கர்ப்பமாக இருக்கிறோமா என்பதை அறிந்து கொள்ள சிறுநீர் பரிசோதனை எப்போது செய்ய வேண்டும் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இருக்கும். ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு மாதாமாதம் சரியான நேரத்தில் வந்தால், மாதவிலக்கு தள்ளிப்போன ஒரே நாளில், அதாவது 31-வது நாளில் சிறுநீர் பரிசோதனை செய்யலாம்.

    ஆனால் சில பெண்களுக்கு மாதவிலக்கு வருவது 35 நாட்கள் அல்லது 45 நாட்கள் என தள்ளித் தள்ளிப்போகும். ஆனால் எதுவாக இருந்தாலும் முதலில் அவர்கள் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சிறுநீர் பரிசோதனை நெகட்டிவ் ஆக வந்தால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

    ஒரு வாரம் கழித்தும் மாதவிலக்கு வரவில்லை, ஆனால் நீங்கள் கருத்தரிப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக மீண்டும் ஒரு வாரம் கழித்து சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளலாம்.

    தேவைப்பட்டால் சில நேரங்களில் ரத்த பரிசோதனையில், பீட்டா எச்.சி.ஜி. என்ற ரத்த பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. இந்த பீட்டா எச்.சி.ஜி. பரிசோதனை மூலமாக, கருவின் ஆரம்ப நிலையிலேயே அதனுடைய வளர்ச்சியை தெரிந்து கொள்ள முடியும். இது ஒரு முக்கியமான பரிசோதனை ஆகும்.

    மாதவிலக்கு குறிப்பிட்ட காலத்தில் வராத பெண்கள் எப்போது கருமுட்டைகள் வெளியானதோ, அதில் இருந்து 17-வது நாள் சிறுநீர் பரிசோதனை செய்தால் பாசிட்டிவ் ஆக வர வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் நாங்கள் எங்களிடம் வரும் பெண்களுக்கு, எந்த நாளில் முட்டை வெளியானதோ, அந்த நாளில் இருந்து 17-வது நாளில் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொல்கிறோம்.

    பொதுவாக ஐ.வி.எப். முறையில் செயற்கை கருத்தரிப்பு செய்கிற பெண்களுக்கு, கருவை கர்ப்பப்பையில் எடுத்து வைத்த பிறகு 15-வது நாள் பரிசோதனை செய்து பார்க்க சொல்கிறோம். இந்த காலகட்டத்தில் அந்த கருவின் டிரோபோபிளாஸ்ட் பார்மேஷன் (கருவை சுற்றியுள்ள வெளிப்புற அடுக்கு) சரியாக இருக்கும். அதுதான் பீட்டா எச்.சி.ஜி. வருவதற்கான அடிப்படையான செல்களாக அமையும். இந்த செல்களில் இருந்து வெளியேறும் ஹார்மோன்களை வைத்து தான் கர்ப்பம் உறுதியாக இருக்கிறதா என்பதை பரிசோதித்து தெரிந்து கொள்ள முடியும்.

    • குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறானது!
    • எடை இழப்பு மற்றும் எடை அதிகரித்தலுக்கு குடல் புழுக்கள் ஒரு காரணியாக உள்ளன.

    "தம்பிக்கு, பாப்பாவுக்கு நாக்குப்பூச்சி மாத்திரை கொடுக்கணும். இந்த மாசம் நிறைய சாக்லேட் சாப்பிட்டா. வயித்துல புழு இருக்கும்" என நம்மை சுற்றி இருக்கும் சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என சிறுவயது குழந்தைகளின் பெற்றோர் கூற கேட்டிருப்போம். குழந்தைகளுக்கு குடலில் எளிதாக புழுக்கள் உருவாகும். அதனால் அவர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் கொடுப்பார்கள். ஆனால் அதை கேட்கும், பார்க்கும் நாம் என்றாவது குடல்புழு மாத்திரைகள் எடுத்துக்கொண்டுள்ளோமா? குடல் புழுக்கள் குழந்தைகளுக்கு மட்டும் வரும் என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறானது. குடல் புழுக்களால் பெரியவர்களுக்கும் ஆபத்து உள்ளது. நமது குடலில் புழுக்கள் உள்ளன என்பதை எவ்வாறு கண்டறியலாம். அதற்கான அறிகுறிகளை இங்கு காணலாம்.  

    அதிகப்படியான பசி

    நாம் வேளை வேளைக்கு சரியாக உணவு எடுத்துக்கொண்டாலும், அடிக்கடி பசி எடுக்கும். குடல் ஒட்டுண்ணிகள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் பாதிப்படையும். உதாரணமாக அஸ்காரியாசிஸ் போன்ற புழுக்கள் உடலில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். ஊட்டச்சத்துகள் உறியப்படும்போது நமக்கு அடிக்கடி பசி எடுக்கும். நாம் இடையில் நொறுக்குத்தீணிகள் எடுத்துக்கொண்டாலும் பசி அடங்கவில்லை என்றால் கண்டிப்பாக குடல் புழுக்களுக்கான அபாயம் உள்ளது. 

    பருக்கள், தோல் பிரச்சனைகள்

    தோல் வெடிப்புகள், புதிய தடிப்புகள் அல்லது அரிப்பு புள்ளிகள் போன்ற தோல் பிரச்சனைகள் பொதுவாக உணவு, ஹார்மோன்கள் அல்லது மன அழுத்தத்தால் ஏற்படுகின்றன. ஆனால் சில புழு தொற்றுகளும் தோலில் தடிப்புகள் அல்லது புண்கள் போன்ற வெளிப்பாடுகளைக் காட்டுகின்றன. உதாரணமாக, தோல் லார்வா மைக்ரான்ஸ் (கொக்கிப்புழு லார்வாக்களால் ஏற்படுகிறது) தோலில் ஊடுருவி அரிப்பு மற்றும் சிவப்பு நிற வெடிப்புகளை உருவாக்குகிறது. இவை வெளிப்புற பாதிப்புகள் என்றால், குடல் புழுக்கள் ஊட்டச்சத்து குறைபாடு, நோயெதிர்ப்பு மண்டல மாற்றங்கள் அல்லது வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் போன்ற இரண்டாம் நிலை ஏற்றத்தாழ்வுகள் மூலம் சருமத்தை பாதிக்கும். இது பருக்கள் மற்றும் தடிப்புகள் போன்ற அறிகுறிகளை காட்டும்.

    எடை மாற்றம்

    குடல் புழு தொற்று இருப்பதற்கான வழக்கமான அறிகுறிகள், வயிற்று வலி, வீக்கம், வாயு, குமட்டல் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். பெரியவர்களுக்கு இந்த அறிகுறிகள் சற்று மாறுபடும். லேசான அசௌகரியம், வாயு பிரச்சனைகள், வீக்கம், எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு இருக்கும்.


    பெரியவர்களும் குடல் புழு மாத்திரைகள் எடுத்துக்கொள்வது அவசியமானது 

    அரிப்பு

    என்டோரோபயாசிஸ் போன்ற நூல் புழுக்கள், அதாவது அதன் பெண் புழுக்கள் இரவில் குடலை விட்டு வெளியே வந்து ஆசனவாயைச் சுற்றியுள்ள தோலில் முட்டையிடுவதால், கடுமையான அரிப்பு மற்றும் அசௌகரியம் ஏற்படுகிறது. பெரும்பாலும் பெரியவர்கள் இந்த அறிகுறிகளை புறக்கணிக்கின்றனர். அதாவது வெறும் எரிச்சல், அவ்வளவு பெரிய விஷயமல்ல என்று நினைத்து இந்த தொற்றுகளை கண்டுகொள்வதில்லை.

    சோர்வு, இரும்புச்சத்து குறைபாடு

    புழுக்கள் உடலின் ஊட்டச்சத்துக்களை உண்ணும்போது, நமது உடல் போதுமான இரும்பு, புரதங்கள் அல்லது பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளை பெறும் வாய்ப்புகளை இழக்கிறது. இது சோர்வு, சிலநேரங்களில் ரத்த சோகைக்கு வழிவகுக்கும். மேலும் கடும் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். ஒருவருக்கு காரணமில்லாமல் தொடர்ச்சியாக சோர்வு இருந்தால் கண்டிப்பாக குடல்புழுக்கள் முக்கிய காரணமாக இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் தென்பட்டு, உங்களுக்கு குடல் புழுக்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், இரப்பை குடல் நிபுணரிடம் உங்கள் உடலில் தென்படும் அறிகுறிகளைக் கூறி ஆலோசனை பெறுங்கள்.  

    • பாதாமை அப்படியே எடுத்துக்கொள்வதை விட ஊறவைத்து எடுத்துக்கொள்வது இன்னும் ஆரோக்கியமானது.
    • ஒவ்வாமை உள்ளவர்கள் பாதாம் எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம்.

    உணவை தாண்டி உடல் ஆரோக்கியத்திற்காக பழங்கள், விதைகள், கொட்டைகள் போன்றவற்றையும் நாம் எடுத்துக்கொள்வோம். அந்த வகையில் நம்மில் பலரும் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்றுதான் பாதாம். பலரும் இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரியாமலேயே சாப்பிடுவர். ஆனால் இது உடலுக்கு பயக்கும் சில நன்மைகளை நாம் அறிந்தால் கண்டிப்பாக தினசரி உணவின் ஒரு பகுதியாகவே மாற்றிவிடுவோம். அப்படி என்ன நன்மைகளை கொண்டுள்ளது பாதாம், பார்ப்போம்.

    ஆக்ஸிஜனேற்றிகள்

    பாதாமில் வைட்டமின் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஈ ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களிலிருந்து காக்கிறது. வைட்டமின் ஈ நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த, இரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவுகிறது. மேலும் அல்சைமர் உள்ளிட்ட நரம்பியல் சிதைவுகளை எதிர்த்து போராடுகிறது. பாதாமில் இயற்கையான ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உட்பட பல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நன்மைகள் உள்ளன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் நாள்பட்ட நோய்களிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    ஊட்டச்சத்துகள்

    பாதாம் பருப்பு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இந்த கொட்டைகள் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் சிறந்த ஆதாரங்களாகும். நிறைவுறா கொழுப்புகள் எல்டிஎல் கொழுப்பை (low-density lipoprotein) குறைக்க உதவும். மெக்னீசியம் பாதாமில் அதிக அளவில் காணப்படும் மற்றொரு ஊட்டச்சத்து ஆகும். மெக்னீசியம் நரம்பு மற்றும் தசை செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது, இதயத் துடிப்பை சீராக வைத்திருக்கிறது மற்றும் எலும்புகள் வலுவாக இருக்க உதவுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் ஆதரிக்கிறது. 

    குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

    பாதாம் பருப்பு குடல் பாக்டீரியாக்கள் நன்றாக செயல்பட உதவுகிறது. 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பாதாம் சாப்பிடுபவர்களுக்கு, சாப்பிடாதவர்களை விட அதிக ப்யூட்ரேட் இருப்பது கண்டறியப்பட்டது. இது குடல் பாக்டீரியாக்கள் நன்கு செயல்படுவதைக் குறிக்கிறது. ப்யூட்ரேட் என்பது குடல் நுண்ணுயிரிகளால், செரிக்க முடியாத உணவு நார்ச்சத்தை பதப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஒரு கொழுப்பு அமிலமாகும். பாதாம் மற்றும் பாதாம் தோல் ஆகியவை ப்ரீபயாடிக்குகளாகக் கருதப்படுகின்றன. காரணம் இவை குடல் பாக்டீரியாக்கள் செழித்து வளர உதவுகின்றன. குடல் பாக்டீரியாக்கள் செழித்து வளரும்போது, அவை அதிக ப்யூட்ரேட்டை உற்பத்தி செய்கின்றன. ப்யூட்ரேட் ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. சில வளர்சிதை மாற்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.   


    உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் பாதாம் எடுத்துக்கொள்ளலாம்

    இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

    பாதாம் பருப்பு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம், இதயம் மற்றும் வாஸ்குலர் அமைப்பு உட்பட உடல் உறுப்புகளில் ஏற்படும் கூடுதல் அழுத்தத்தை குறைக்கிறது. இரத்த நாளங்கள் ஓய்வெடுக்கவும், தமனி விறைப்பைக் குறைக்கவும் உதவுகின்றன. கொட்டை வகைகள் நல்ல கொழுப்பை ஆதரிக்க உதவுகின்றன. அதிக கொழுப்பு உள்ளவர்கள் பாதாமை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது. 

    எடைக்குறைப்பு

    எடைக் குறைக்க விரும்புவர்கள் பாதாமை எடுத்துக்கொள்ளலாம். பாதாம் பசியை அடக்க உதவுகிறது. பாதாம் பருப்பு உடல் நிறை குறியீட்டெண் (BMI), இடுப்பு சுற்றளவு மற்றும் வயிற்றுப் பகுதி கொழுப்பு ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. மேலும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.   

    தோல் ஆரோக்கியம்

    மாதாவிடாய் பிரச்சனைகள் இருப்பவர்கள் பாதாம் எடுத்துக்கொள்ளலாம். மற்ற கொட்டைகளுடன் ஒப்பிடும்போது, பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், மெக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் ஃபோலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.  

    • காதல் மொழிகள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள்.
    • தொடுதல் மனித வாழ்வுக்கு மிக அவசியமான ஒன்று.

    காதல் ஒருவரை பைத்தியமாக்கும் எனக்கூறுவார்கள். அதற்கு காரணம் காதல் வந்தால் தனிமையில் சிரிப்பார்கள், கூட்டத்தின் மத்தியிலும் தனியாக உணர்வார்கள், ஏதோ ஒரு யோசனையிலேயே இருப்பார்களாம். அதாவது மற்றவர்கள் கூறுவதை செவிகொடுத்து கேட்க அவர்களுக்கு நேரம் இருக்காது. அதனால் அப்படி கூறுவார்களாம். இப்படிப்பட்ட இந்த காதலுக்கு 5 மொழிகள் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? எங்களுக்கு தெரிந்தது எல்லாம் தமிழும், ஆங்கிலமும்தான். அதென்ன 5 மொழிகள் என பலரும் ஆச்சர்யப்படலாம். ஆம் காதலில் 5 மொழிகள் உள்ளனவாம். அதாவது காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்தும் வழிகள். காதலில் இந்த மொழிகளைத்தான் பெரும்பாலும் பெண்கள் விரும்புவார்கள். 

    வார்த்தை

    நமது காதலரிடமோ அல்லது நமக்கு பிடித்தவர்களிடமோ வார்த்தைகள் மூலம் அன்பை வெளிப்படுத்துதல். நீ அழகாக இருக்கிறாய் எனக்கூறுதல், அவர்களை புகழ்தல், பாராட்டுதல், ஊக்குவித்தல், நான் இருக்கிறேன் என தைரியம் கொடுத்தல் போன்ற அனைத்தும் காதலின் முதல் மொழியாகும். இப்படி செய்யும்போது உண்மையில் உங்கள் அன்புக்குரியவர்கள் உள்ளிருந்து மகிழ்ச்சியடைவார்கள். ஒரு உறவு நீடிக்க தொடர்பு (communication) மிகவும் அவசியமானது. பல உறவுகளுக்கிடையே பேச்சு இல்லாததே அதன் பிரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. 

    நேரம்

    பலரும் தங்கள் துணையோடு நேரம் செலவிட விரும்புவர். பல திருமணங்கள் முடிவுக்கு வரக்காரணமே நேரம் ஒதுக்காமைதான். வேலை, வீடு என சாக்குப்போக்கு கூறாமல் உங்கள் துணைக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் விரும்புவது அதைத்தான். நேரம் பொன் போன்றது எனக்கூறுவார்கள். நேரத்தை கொடுக்காமல், நீங்கள் பொன்னையே கொடுத்தாலும் அதை பலரும் ஏற்கமாட்டார்கள். 

    தொடுதல்

    தொடுதல் என்பது உடலுறவை குறிப்பது அல்ல. தொடுதல் என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. அது காதலரைத்தான் தொடவேண்டும் என்றல்ல. உங்கள் நாய்க்குட்டியை கட்டியணைக்கலாம். நண்பர்களை ஆரத்தழுவலாம். தழுவுதல் மனித வாழ்க்கைக்கு ஒரு ஆறுதலைத் தரும். அதுபோல காதலில் ஒருவரின் கையை ஒருவர் பிடித்து நடப்பது போன்றவை பெண்கள் அதிகம் விரும்பும் ஒன்றாகும். பெண்களின் நகங்களை பிடித்து அவர்களுக்கு நெய்ல்பாலிஷ் போடலாம், மருதாணி போடலாம். அதுபோல பெண்களும் ஆண்களின் கையை பிடித்து அவர்களுக்கு ஆறுதல் கூறலாம். அன்பாக பேசலாம். இந்த தொடுதல் பலருக்கும் பல மனநன்மைகளை தருகிறது. 


    எந்த வழியாக, மொழியாக இருந்தாலும் காதலை வெளிப்படுத்துங்கள்

    துணைக்கு சேவை

    சொல்லைவிட செயலில்தான் ஒருவரின் காதல் வெளிப்படும். உங்களின் காதல் செயல்களாக இருந்தால், நீங்கள் அவர்களுக்காகச் செய்யும் சிறிய விஷயங்களைக்கூட அவர்கள் பெரிதாக எண்ணி மகிழ்ச்சி அடைவார்கள். அதாவது வீட்டில் அதிக வேலை இருந்தால், உங்கள் துணைக்கு ஆதரவாக பாத்திரங்களை சுத்தம் செய்யுதல், வீட்டை பெருக்குதல், குழந்தைகளை கவனித்தல், காதலர்கள் அலுவலக வேலைகளில் உதவுதல் என சின்ன சின்ன உதவிகளை செய்தாலே போதும்.

    பரிசு

    உங்கள் அன்பை பரிசுகள் மூலம் வெளிப்படுத்தலாம். அந்தப் பரிசின் அளவு முக்கியமல்ல, ஆனந்தம்தான் முக்கியம். பெண்கள் பரிசு கொடுத்தால் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற எண்ணம் பொதுவாகவே ஆண்களிடம் உள்ளது. ஆனால் அது பரிசுக்கான ஆனந்தமோ, மகிழ்ச்சியோ கிடையாது. பரிசு வாங்க அவர்கள் செலவிடும் நேரமும், அவர்களின் அந்த முயற்சியும் ஈர்க்கிறது, மகிழ்விக்கிறது. நமக்காக யோசித்து செய்கிறார்கள் என ஒரு ஆனந்தம். நாம் நேசிக்கும் ஒருவர் கொடுக்கும் பரிசுகள் பொக்கிஷமானவை.  

    இவை மட்டும்தான் காதல்மொழியா?

    இவை மட்டும்தான் காதலை வெளிப்படுத்துவதற்கான வழிகள் என்று இல்லை. அன்பை வெளிப்படுத்தவும், பெறவும் பல்வேறு வழிகள் உள்ளன. இவை அன்பை கட்டமைக்கக்கூடிய சில வழிகளே. வெளிப்படுத்தப்படாமலும் பல காதல்கள் இங்கு வாழ்கின்றன. ஆனால் சொல்லாமல் இருந்தால், அவர்கள் மீதான உங்கள் அன்பு எப்படி அவர்களுக்கு தெரியும்? ஆகையால் உங்கள் காதலை எந்த வழியாக இருந்தாலும் அந்த காதலின்வழி வெளிப்படுத்துங்கள். 

    ×