என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள்"

    • பெண்களின் மிகப்பெரிய காப்பீடு என்பது உங்கள் கருமுட்டைகளை சேமிப்பதுதான்.
    • பெண்கள் Career மீது அதிக கவனம் செலுத்துவது, புதிய இந்தியா பிறந்துள்ளதை காட்டுகிறது

    தடுப்பூசிகளால் ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதாகக்கூறி சர்ச்சையில் சிக்கிய Zoho இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அடுத்ததாக இளைஞர்கள் தங்களது 20 வயதுக்குள்ளாகவே திருமணம் முடித்து குழந்தை பெற்றுக்கொள்வது அவசியம் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஸ்ரீதர் வேம்புவின் கருத்து இணைய தளத்தில் பேசும்பொருளாகியுள்ளது. இந்நிலையில், ஸ்ரீதர் வேம்புவின் கருத்துக்கு நேர்மாறாக பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை விட Career மீது அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ராம்சரண் மனைவி உபசனா தெரிவித்துள்ளார்.

    ஐஐடி ஹைதராபாத்தில் தான் உரையாற்றிய உபசனா, "அண்மையில் பங்கேற்ற ஐஐடி ஹைதராபாத் நிகழ்வில் எத்தனை பேருக்கு திருமணம் வேண்டும் என கேட்டேன். மாணவிகளை விட மாணவர்களே அதிகம் கை உயர்த்தினர். ஆண்களை காட்டிலும் பெண்களே Career மீது அதிக கவனம் செலுத்துவது, புதிய இந்தியா பிறந்துள்ளதை காட்டுகிறது

    பெண்களின் மிகப்பெரிய காப்பீடு என்பது உங்கள் கருமுட்டைகளை சேமிப்பதுதான். ஏனென்றால், நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும், எப்போது குழந்தைகளைப் பெற விரும்புகிறீர்கள், எப்போது நிதி ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். அதனால் தான் இன்று, நான் என் சொந்தக் காலில் நிற்கிறேன், நான் எனக்காகவே சம்பாதிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை உபசனா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரும் அவரது கருத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு உபசனா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஒரு ஆரோக்கியமான விவாதத்தைத் தூண்டியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் & உங்கள் மரியாதைக்குரிய பதில்களுக்கு நன்றி.

    ஒரு பெண் சமூக அழுத்தத்திற்கு அடிபணிவதற்குப் பதிலாக காதலுக்காக திருமணம் செய்து கொள்வது தவறா?

    சரியான துணையைக் கண்டுபிடிக்கும் வரை அவள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது தவறா?

    ஒரு பெண் தனது சொந்த சூழ்நிலைகளின் அடிப்படையில் எப்போது குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வு செய்வது தவறா?

    திருமணத்தைப் பற்றி அல்லது சீக்கிரம் குழந்தைகளைப் பெறுவதை மட்டும் யோசிப்பதை விட, ஒரு பெண் தனது இலக்குகளை நிர்ணயித்து, தனது வாழ்க்கையில் கவனம் செலுத்துவது தவறா?

    நான் 27 வயதில் காதலித்து திருமணம் செய்து கொண்டேன், அதை நான் என் சொந்த விருப்பத்தில் முடிவு எடுத்தேன். 29 வயதில், தனிப்பட்ட மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக என் கருமுட்டைகளை சேமித்து வைக்க முடிவு செய்தேன். 36 வயதில் எனது முதல் குழந்தையை பெற்றெடுத்தேன். இப்போது 39 வயதில் இரட்டை குழந்தைகளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    எனக்கு, திருமணம் மற்றும் Career ஆகிய இரண்டும் எனக்கு முதன்மையானவை. அவை நிறைவான வாழ்க்கையின் அர்த்தமுள்ள பகுதிகள். ஆனால் நான் அதற்கான காலக்கெடுவை தீர்மானிக்கிறேன்! அது privilege அல்ல, அது என் உரிமை!" என்று தெரிவித்துள்ளார்.

    2011 இல், உபாசனாவும் ராம் சரணும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர், மேலும் அவர்கள் 2012 இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் முதல் குழந்தை, கிளின் காரா, 2023 இல் பிறந்தார். மேலும் உபாசனா தற்போது இரட்டை குழந்தைகளை எதிர்பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எல்லாருக்கும் மருதாணி ஒரே அளவாக சிவக்காது. சிலருக்கு நன்றாக சிவக்கும்; சிலருக்கு குறைவாக சிவக்கும்!
    • அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகளை பயன்படுத்துங்கள்!

    பண்டிகைகளாக இருந்தாலும் சரி, வீட்டு விசேஷங்களாக இருந்தாலும் சரி மேக்கப் இல்லாமல் அந்த நிகழ்ச்சி இப்போதெல்லாம் முழுமையடைவதில்லை. அதுவும் மெஹந்தி இல்லாமல் சொல்லவே தேவையில்லை. முன்பெல்லாம் பண்டிகை தினத்திற்கு முன்தினம் இரவு கையில் மருதாணி வைக்காமல் பெண்கள் தூங்கமாட்டார்கள். ஏன் ஆண்களும் வைத்துக்கொள்வர். மற்ற பண்டிகைகளைவிட தீபாவளி அப்படித்தான் போகும். தீபாவளிக்கு முந்தைய இரவு கை நிறைய மருதாணி வைத்துக்கொண்டு நல்ல தூக்கத்தில் இருக்க அதிகாலையில் எண்ணெய்க்குளியல் போட சொல்வார் அம்மா. எழுந்தவுடன் முகம் கூட கழுவாமல் கையை கழுவி, சகோதரர், சகோதரிகளிடத்தில் சென்று யார் கை அதிகமாக சிவந்திருக்கு என்று பார்த்தபின்தான் முகம் கழுவுவோம். அப்படி ஒரு ஆர்வம் மருதாணி போடுவதில். இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது.

    பலரும் மருதாணி போட காத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கான பதிவுதான் இது. வீட்டில் நாம் அனைவரும் ஒரேநேரத்தில் மருதாணி போட்டாலும், எல்லோருக்கும் ஒரே அளவு சிவந்திருக்காது. சிலருக்கு அதிகமாக சிவந்திருக்கும், சிலருக்கு மிதமான அளவில் சிவந்திருக்கும், சிலருக்கு மிகவும் குறைவாக சிவந்திருக்கும். அதற்கு காரணம் அவரவரது உடல்நிலை. இருப்பினும் ஈரம் எளிதில் காய்வதாலும் பலருக்கு சிவந்திருக்காது. சிலர் மருதாணி வைத்துவிட்டு அப்படியே தூங்கும்போது கையில் இருந்து விழுந்துவிடும். இந்நிலையில் மருதாணி எளிதில் சிவக்க சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம். 


    மருதாணியை அரைத்த உடனேயே போடவேண்டும்

    * இலைகளிலேயே அதிகம் சிவக்கும் தன்மைகொண்ட மருதாணி இலைகள் இருக்கும். அதனை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு, கொஞ்சம் சர்க்கரை கலந்துவிட்டு பின்னர் மருதாணி போடலாம். இது நல்ல சிவப்பு நிறத்தை அளிக்கும். மேலும் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக, மருதாணி காய காய அதன்மீது விட்டுவருவதும் நல்ல நிறத்தை கொடுக்கும். 
    * அதுபோல யூக்கலிப்டஸ் தைலத்தை மருதாணி வைத்துள்ள இடத்தில் தடவினால் நல்லநிறம் கொடுக்கும். 
    * மருதாணியை கழுவ சோப்புத் தண்ணீரை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் அது நிறத்தை நீக்கும். அதுபோல மருதாணி போட்டு சிறிது நேரத்திலேயே எடுத்துவிடக்கூடாது. அதனால்தான் பலரும் தூங்குவதற்கு முன் கையில் மருதாணி வைத்து தூங்குவார்கள். பகலில் வேலைகள் நிறைய இருக்கும். அதனால் மருதாணியை உடனே எடுக்கவேண்டிய சூழல்வரும். முடிந்தவரை இரவு நேரத்தில் போட்டுவிட்டு, காலையில் கையை கழுவுங்கள்.
    * கிராம்பை நன்றாக தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை மருதாணி அரைக்கும்போது பயன்படுத்தினால் நல்ல சிவப்பாக நிறம் இருக்கும்.
    * அதுபோல முதலில் கைக்கழுவ தண்ணீரை பயன்படுத்தாமல், கடுகு எண்ணெயை பயன்படுத்தி மருதாணியை நீக்க வேண்டும். கடுகு எண்ணெய்க்கு பதில் யூக்கலிப்டஸ் எண்ணெய் பயன்படுத்தலாம். 

    அழகிற்காக மட்டுமின்றி உடல் சூட்டை தணிப்பதற்காகவும், உடலில் உள்ள பித்தத்தை குறைப்பதற்காகவும் என மருதாணி வைப்பதற்கு மருத்துவ ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன. 

    • ஒரு மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாளில் இருந்து 35 நாட்களுக்கு இடையில் நடக்கிறது.
    • கர்ப்பமாக இருப்பதில் சிரமம் ஏற்படும் வரை பலருக்கு தங்களுக்கு PCOS இருப்பது தெரியாது.

    ஒவ்வொருவரிடையேயும் மாதவிடாய் சுழற்சி வேறுபடும். குறிப்பிட்ட தேதியைவிட சிலருக்கு முன்னதாகவே மாதவிடாய் வந்துவிடும். சிலருக்கு நாட்கள் தள்ளிச்சென்று மாதவிடாய் வரும். சிலருக்கு ஆறு மாதம் என நீண்ட நாட்கள் மாதவிடாய் வராமலும் இருக்கும். பொதுவாக ஒரு மாதவிடாய் சுழற்சி என்பது 21 நாளில் இருந்து 35 நாட்களுக்கு இடையில் நடக்கிறது. எனவே மாதவிடாய் நாள் என்பது நபருக்கு நபர் மாறுபடுகிறது. உங்கள் மாதவிடாய் சுழற்சி 21 நாட்களுக்கு குறைவாக இருந்தாலோ அல்லது அடிக்கடி நீங்கள் மாதவிடாய்க்கு உள்ளானால் உங்கள் உடலில் எதாவது பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அப்படியான சில சாத்திய காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    ப்ரீமெனோபாஸ்

    இது மாதவிடாய் நிறுத்தம் ஏற்படுவதற்கு முந்தைய காலமாகும். பொதுவாக நாற்பது வயது அல்லது அதற்கு பிறகு இது தொடங்குகிறது. இந்த நேரத்தில் ஹார்மோன்களின் அளவுகளில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால் ஒவ்வொரு மாதமும் அண்ட விடுப்பு அதாவது மாதவிடாய் சரியாக நிகழாது. சிலருக்கு அடிக்கடி மாதவிடாய் ஏற்படவும் வாய்ப்புள்ளது.  மாதவிடாய் சுழற்சிகள் கணிக்க முடியாததாக இருக்கும். 

    தீவிர உடற்பயிற்சி

    தீவிர உடற்பயிற்சி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும் அல்லது உங்கள் மாதவிடாய் சுழற்சியை முற்றிலுமாக நிறுத்தலாம். பெரும்பாலும், பெண் விளையாட்டு வீரர்கள் பலருக்கு இந்த பிரச்சனை பொதுவாக காணப்படுகிறது. ஏனெனில் தீவிர உடற்பயிற்சி செய்யும்போது நாம் உண்ணும் உணவைவிட அதிகளவு ஆற்றம் தேவைப்படுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது, உங்கள் உடலின் கலோரி எரிப்பு அளவு அதிகரித்து, அது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதனால் போதுமான ஆற்றல் இல்லாமல், உங்கள் உடல் அண்டவிடுப்பிற்கு தேவையான இனப்பெருக்க ஹார்மோன்களை உற்பத்தி செய்யாது. 

    எடை ஏற்ற, இறக்கங்கள்

    குறைந்த காலத்தில் அதிக எடை இழப்பு அல்லது எடை அதிகரிப்பு இவை இரண்டில் எது நடந்தாலும் அது உங்கள் ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால் மாதவிடாயில் பாதிப்பு ஏற்படுகிறது. மாதவிடாய் சுழற்சி எடை மாற்றங்களுடனும் தொடர்புடையது. 

    மாதவிடாய் சுழற்சியில் மன அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது

    மன அழுத்தம்

    மன அழுத்தம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். அதில் ஒன்று மாதவிடாய் பாதிப்பு. கடுமையான மன அழுத்தம் உங்கள் ஹார்மோன் அளவை சீர்குலைத்து, ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு வழிவகுக்கும். இவை உங்கள் வாழ்வில் நிகழும் அதிர்ச்சிகரமான சம்பவம் அல்லது வேறு சமபவங்களால் கூட நிகழலாம். காரணம் எதுவாக இருந்தாலும் மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் மட்டுமே மீண்டும் ஹார்மோனை சகஜ நிலைக்கு கொண்டு வர முடியும்.

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS)

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) என்பது ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படும் ஒரு பொதுவான நிலை. இது குழந்தை பிறக்கும் வயதின் அடிப்படையில் 10 பெண்களில் ஒருவரை பாதிக்கிறது. கர்ப்பமாக இருப்பதில் சிரமம் ஏற்படும் வரை பலருக்கு தங்களுக்கு PCOS இருப்பது தெரியாது. இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கும். மேலும் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்ச்சி மற்றும் கருவுறுதல் பிரச்சினைகள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். 

    இது பொதுவாக மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும் காரணிகளாகும். சத்தான உணவுமுறை அல்லது உடலில் ரத்தம் இல்லையென்றாலும் மாதவிடாய் வருவது தள்ளிப்போகும். இதனால் மாதவிடாய் குறைவாக இருந்தாலோ அல்லது வராமல் இருந்தாலோ தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. 

    • சமூகமே பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணியாக இருக்கிறது.
    • எல்லாவற்றிலும் சுதந்திரமாக இருக்கும் ஆண், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் சமூகம் அனுமதிப்பதில்லை.

    சின்ன விஷயத்திற்கு எல்லாம் அழுவாள். எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள். எதாவது பேசிக்கொண்டே இருப்பாள் என பெண்ணை தங்கள் கணவன்மார்களோ அல்லது குடும்பத்தினரோ கூறுவர். இதனால் பெண் மிகவும் உணர்ச்சிமிக்கவள் என அனைவரிடமும் ஒரு பொதுக்கருத்து நிலவியுள்ளது. ஆனால் அது உண்மையல்ல. பெண்போல ஆணும் உணர்ச்சியுள்ளவனே. பாலினம் என்பதை பார்க்கமால் இங்கு ஆண், பெண் இருபாலருக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இங்கு குறிப்பிட்டு பார்க்கவேண்டிய விஷயம் என்னவென்றால், பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை உடனே வெளிப்படுத்துவார்கள். ஆண்கள் தாங்கள் 'ஆண்கள்', தங்களுக்கென்று சமூகத்தில் ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது எனக்கூறி உணர்ச்சிகளை அனைவரது முன்பும் வெளிப்படுத்தமாட்டர்கள். இதனாலேயே பெரும்பாலும் பெண்கள் அதிக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என நாம் கூறுகிறோம். மேலும் இங்கு எதனால் பெண் உணர்ச்சிவசப்படுகிறாள் என்பதையும் கவனிக்க வேண்டும். பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை, சமூகம் அவர்களை செய்ய வைத்திருக்கும் வேலை, கலாச்சார எதிர்பார்ப்புகள் இவையனைத்துமே ஒரு பெண் உணர்ச்சிவசப்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.

    பாலினம்...

    குழந்தை, சிறுமி, இளம்பெண், மனைவி என ஒவ்வொரு நிலையிலும் அவர்களின் உணர்வுகளை வெவ்வேறு விதமாக வெளிக்காட்ட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் அவர்களாக இருக்க சமூகம் அனுமதிப்பதில்லை. இளம்பெண் என்றால் விளையாடக்கூடாது, இதுபோல உடையணியக்கூடாது, இதை செய்யக்கூடாது, இவர்களுடன் பேசக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள். தங்கள் சுதந்திரம் அனைத்தும் அடைக்கபடும்போது அந்த உணர்ச்சிகள் வேறுவிதமாக வெளிப்படும். இதற்கு நேர்மார் ஆண்களின் வாழ்க்கை. எல்லாவற்றிற்கும் சுதந்திரம் பெறும் ஆண், உணர்ச்சிகளை வெளிப்படுத்த மட்டும் சமூகம் அனுமதிப்பதில்லை. ஆண்கள் அழக்கூடாது என்பதுபோல. இதனால் பெண்கள் அதிக உணர்வுமயமானவர்கள் என்ற தோற்றம் ஏற்படுகிறது. 

    கலாச்சாரம்

    பெண்கள் என்றாலே சாந்தி. சாந்தமாக இருந்தால்தான் அவள் பெண். இல்லையென்றால் அடங்காப்பிடாரி, ராட்சசி, பொம்பளையா அவ என பல்வேறு பட்டங்கள். கலாச்சாரங்கள்படி பெண்கள் என்றால் அனுதாபம் கொள்ள வேண்டியவர்களாகவும், பாதுகாக்கப்படவேண்டியவர்களாகவும் காட்டப்படுகிறது. உணர்வுமயமாக இருப்பதுதான் பெண்களின் குணம் என்பதுபோல சித்தரிக்கப்படுகிறது. இப்படி இருந்தால்தான் அவள் பெண் என்ற பிம்பங்கள். கலாச்சாரத்தில் பெண்களுக்கு இருக்கும் சடங்குகளை ஒப்பிட்டால், ஆண்களுக்கு சடங்குகளே இல்லை. வயதுக்கு வந்தால் ஒரு சடங்கு, திருமணம் என்றால் ஒரு சடங்கு, குழந்தை தரித்தால் ஒரு சடங்கு, கணவன் இறந்தால் ஒரு சடங்கு இப்படி பெண்ணின் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு சடங்கு. ஆனால் ஆண்களுக்கு இதுபோன்று எத்தனை சடங்குகள் உள்ளன? மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது என்றால் அந்தப் பெண்ணை சுற்றி அவ்வளவு பேர் இருப்பார்கள். மாதவிடாய் என்பது அப்போதுதான் அவளுக்கு முதலில் வந்திருக்கும். அதுகுறித்தே முழுதாக தெரியாமல் ஒருவித அச்ச, குழப்ப உணர்வில் இருப்பாள். எல்லோரும் தங்களை கொண்டாடுவதால் ஒரு சந்தோஷமும் இருக்கும்.


    பெண் தன் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள்!

    அப்போது விழா நடத்துகையில் உறவினர்கள் மத்தியில் தான் மட்டும் கவனிப்படுவது ஒரு கூச்ச சுபாவத்தை கொடுக்கும். இதனை வெட்கம் எனக்கூறுவது. ஒரு ஆணை 100 பேருக்கு மத்தியில் உட்காரவைத்து அவனை மட்டும் பார்த்தால் அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் வெட்கம்தான் வரும். அதுபோல வளையலணி விழா. தான் அம்மாவாகப்போவதை நினைத்து சந்தோஷத்துடன் பெண் இருப்பாள். ஆணும் அப்படித்தான் இருப்பான். ஆனால் பெண்ணுடைய உணர்வை மட்டும் இங்கு வெளிப்படுத்துவோம். அதுபோல இறப்பு சடங்கு. தன்துணை இறந்த சோகமே தாளாமல் இருக்கும்போது அவரை உட்காரவைத்து பூ, பொட்டு அழிப்பது. இது இன்னும் வலியை கொடுக்க அவள் அழுவாள். இப்படித்தான் இருபாலருக்கும் இருக்கும் உணர்வுகளை சமூகமே கலாச்சாரம் என்ற பெயரில் பெண்களுக்கு மட்டும் சாத்துகிறது. அதுபோல பெண்ணை சகுனமாக சித்தரிப்பது, இவள் ராசியில்லாதவள், இவள் வந்தால் விளாங்காது, அப்பாவை விழுங்கியவள், கணவனை விழுங்கியவள் என்று... ஆனால் நாம் என்றுமே ஒரு ஆணை ராசியில்லாதவன் எனக் கூறியதே இல்லை. 

    அன்பு...

    அன்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெண் உடனே தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவாள். சத்தமாக சிரிப்பது, பூரிப்படைவது, அன்பு கிடைக்காதபோது அதிகம் ஏங்குவது, உடைந்து அழுவது, கோபமாக கத்துவது என சூழ்நிலைக்கு ஏற்ப வெளிபடும் உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவாள். ஆனால் ஆண் எப்போதும் அனைத்து உணர்வுகளைவும் மனதுக்குள்ளேயே அடக்கிகொள்வான். வெகு சில நேரங்களிலேயே ஆண்கள் அழுவதை பார்க்கமுடியும். இதுபோன்ற காரணங்களால்தான் பெண்கள் அதிக உணர்ச்சிமிக்கவர்கள் எனக் கூறுகிறோம். ஆனால் ஆண்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளது.   

    • 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை துர்கா பவானி விழாக்கள் நடத்தப்படுகின்றன.
    • திருவிழாவிற்கு முந்தைய நாள் சீதம்மா வணங்கப்படுகிறார்.

    தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் வால்யநாயக் தண்டா என்ற கிராமத்தில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது.

    ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு மருமகளாக மாறினால் அவள் வாழ்நாள் முழுவதும் இறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளுக்கு முன்பு காலரா பரவிய போது கிராமத் தலைவர் சீதம்மா மற்றும் மாரியம்மாவை வணங்கினார்.

    கிராமத்தில் மருமகள்கள் காலரா வராவிட்டால் இறைச்சியைத் தொட மாட்டோம் என்று அப்போது சத்தியம் செய்தனர். இந்த கிராமத்தில் காலரா வராததால் இது தெய்வங்களின் அருள் என்று நம்பி இந்த வழக்கத்தைத் தொடர்கிறார்கள்.

    2 ஆண்டுகளுக்கு ஒருமுறை துர்கா பவானி விழாக்கள் நடத்தப்படுகின்றன. திருவிழாவிற்கு முந்தைய நாள் சீதம்மா வணங்கப்படுகிறார். வெள்ளி அம்மனின் சிலைகள் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

    கிராமத்து குழந்தைகள் அல்லது ஆண்கள் யாராவது இறைச்சி சாப்பிட வேண்டியிருந்தால் அவர்கள் கிராமத்திற்கு வெளியே வெவ்வேறு சமையல் பாத்திரங்களில் சமைத்து, சாப்பிட்டு குளித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு வருவார்கள் என்று கிராம மக்கள் கூறினர்.

    • தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன.
    • கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர்.

    புதுடெல்லி:

    'பெண்களுக்கான பாதுகாப்பான நகரங்கள்-2025'ன் பட்டியலை நேற்று தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள 31 நகரங்களில் 12 ஆயிரத்து 770 பெண்களிடம் கருத்துக் கேட்டு விவரங்கள் பதிவு செய்யப்பட்டு நகரங்களின் தரவரிசை பட்டியலிடப்பட்டது. பல்கலைக்கழக மற்றும் சட்டக்கல்லூரி நிபுணர்கள், கல்வியாளர்கள் கொண்ட குழு இந்த கருத்துக்கணிப்பில் ஈடுபட்டது. அந்த கருத்துக்கணிப்பில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    நாகாலாந்தின் தலைநகரமான கோஹிமா, பெண்களுக்கு அதிக பாதுகாப்பு உள்ள நகரமாக பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது. அங்கு பெண்களுக்கு நல்ல மரியாதையும், நிகழ்வுகளில் சரிசமமான பங்களிப்பும் கிடைப்பதாக பெண்கள் கூறி உள்ளனர். பெண்களுக்கான கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இந்த தரவரிசையில் பீகாரின் பாட்னா, ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரங்கள் கடைசி இடங்களில் உள்ளன, அங்கு பெண்களுக்கு நிறுவன ரீதியான மதிப்புகள், கட்டமைப்பு வசதிகள் மோசமான நிலையில் இருப்பதாகவும், ஆணாதிக்க முறைகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்து உள்ளனர்.

    கோஹிமா, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஐஸாவல், காங்டாக், இடாநகர், மும்பை ஆகியவை சிறந்த பாதுகாப்பான நகரங்களாக வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. ராஞ்சி, ஸ்ரீநகர், கொல்கத்தா, டெல்லி, பரிதாபாத், பாட்னா, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் அந்த வரிசையில் பின்தங்கிய நிலையில் உள்ளன.

    ஒட்டுமொத்தமாக கணக்கெடுக்கப்பட்டதில் 60 சதவீதம் பெண்கள், தங்கள் நகரத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், 40 சதவீத பெண்கள் பாதுகாப்பை உணரவில்லை என்றும் அல்லது பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

    கல்வி நிறுவனங்கள் பகலில் பாதுகாப்பாக இருப்பதாக 86 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால் இரவிலும், கல்வி வளாகத்திற்கு வெளியிலும் பாதுகாப்பு அப்படி உணர்வதில்லை என்று கூறி உள்ளனர்.

    இரவில் பொது போக்குவரத்து மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் அதிகம் இருப்பதாக பலரும் தெரிவித்து உள்ளனர்.

    பணியிடங்களில் பாதுகாப்பாக இருப்பதாக 91 சதவீதம் பெண்கள் தெரிவித்து உள்ளனர். 50 சதவீதம் பேர் பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிரான விதிகள் இருக்கிறதா என தெரியவில்லை என்று கூறி உள்ளனர்.

    பாதுகாப்பு புகார்களில் அதிகாரிகள் திறம்பட செயல்படுவார்கள் என்று நான்கில் ஒரு பங்கு பெண்கள் மட்டுமே நம்புவதாக தெரிவித்து உள்ளனர். தற்போதைய பாதுகாப்பு முயற்சிகள் ஓரளவு போதுமானவை என்று 69 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு முயற்சிகளில் குறைபாடு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

    பொது இடங்களில் துன்புறுத்தலை அனுபவித்து உள்ளதாக 7 சதவீதம் பெண்கள் கூறி உள்ளனர். அதே வேளையில் 24 வயதுக்கு உட்பட்ட பெண்களில் 14 சதவீதம் பேர் பாலியல் தொல்லையை அனுபவித்து உள்ளதாக கூறி உள்ளனர். அதாவது இளம்பெண்கள் 2 மடங்கு துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்களாம்.

    துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக சுற்றுப்புறங்கள் இருப்பதாக 39 சதவீதம் பேரும், போக்குவரத்து இடங்கள் துன்புறுத்தலுக்கு வாய்ப்புள்ள இடமாக 29 சதவீதம் பேரும் தெரிவித்து உள்ளனர்.

    பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பெண் மட்டுமே புகார் அளிப்பதாகவும், 2 பங்கு துன்புறுத்தல்கள் பலவித காரணங்களால் கண்டுகொள்ளாமல் விடப்படுவதாகவும் அறிக்கை கூறுகிறது.

    • போதைப் பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • போதைப் பொருள் வர்த்தகத்தில் மத்திய பிரதேசம் முந்திவிட்டது என்றார்.

    போபால்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய பிரதேச மாநில பெண்கள், நாட்டின் பிற பகுதிகளை விட அதிகமாக மது அருந்துகின்றனர். இதற்காக மத்திய பிரதேசத்துக்கு பதக்கம் அளிக்கவேண்டும்.

    மத்திய பிரதேசத்தை வளமான மாநிலமாக மாற்ற கனவு காணும் பா.ஜ.க. தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    போதைப் பொருளை ஒழிக்க பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நமது சகோதரிகளும், மகள்களும் போதைப் பொருளை பயன்படுத்த தொடங்கி விட்டனர். போதைப் பொருள் பயன்பாட்டிலும் மத்திய பிரதேச பெண்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.

    போதைப் பொருள் வர்த்தகத்தில் பஞ்சாப் போன்ற மாநிலங்களை மத்திய பிரதேசம் முந்திவிட்டது என தெரிவித்தார்.

    ஜிது பட்வாரியின் இந்தக் கருத்து அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், ஜிது பட்வாரிக்கு முதல் மந்திரி மோகன் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜிது பட்வாரியின் கருத்து, பெண்களுக்கு எதிரான காங்கிரசின் குறுகிய மனப்பான்மையை காட்டுவதாகவும், இதற்காக காங்கிரஸ் தலைவர் கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    • சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

    நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான 'மாமன்' திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

    இந்நிலையில், நடிகர் சூரி மதுரை அருகே ராஜாக்கூர் கிராமத்தில் தனது சொந்த ஊரில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவில் ஊர் மக்களோடு சேர்ந்து கும்மி அடித்து உற்சாக நடனம் ஆடியுள்ளார்.

    ஊர்த்திருவிழாவில் பெண்களுடன் சேர்ந்து சூரி கும்மி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர்.
    • ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    இந்தியா உள்ளிட்ட 50 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளில், ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோய்களால் அதிகம் பாதிக்கப்படும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா, பிரேசில், சீனா, எகிப்து, அரபு நாடுகள் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் இருந்து பெறப்பட்ட 15 ஆய்வு முடிவுகளின் அறிக்கை, மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

    23 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், ஆண்களை விட பெண்களே மோசமான இதய நோயால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதயநோய் அறிகுறிகளை கண்டறிதல், சிகிச்சை ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான வித்தியாசம் பிரமிக்க வைக்கும் அளவுக்கு பெரிதாக உள்ளது. அறிகுறிகள் தோன்றிய பிறகு ஆண்களை விட பெண்கள் தாமதமாகவே மருத்துவமனையை அணுகுகின்றனர். ஆண்களுக்கு நிகரான விகிதத்தில் மருத்துவமனையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    இதுமட்டுமின்றி, இளம் வயது பெண்களிடம் மாரடைப்பு விகிதம் அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டி உள்ளது. கடந்த 1995-2014-க்கு இடைப்பட்ட காலத்தில், 35 வயது முதல் 54 வயதுடைய பெண்களிடையே மாரடைப்பு விகிதம் 21 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதுவே ஆண்களுக்கான விகிதம் 30 சதவீதத்தில் இருந்து 33 சதவீ மாக உயர்ந்துள்ளது.

    பெண்கள் ஆண்டுதோறும் உடல் பரிசோதனை செய்து, தங்கள் உடல்நலனை கவனத்தில் வைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது.

    • தூக்க-விழிப்பு சுழற்சிகள் சூரிய ஒளியை சார்ந்திருக்கின்றன.
    • மனித உடல் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும் உயிரியல் கடிகாரத்தை அடிப்படையாக கொண்டது.

    இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிகிறார்கள். இரவு பணி என்றால் ஆண்கள்தான் செய்வார்கள் என்ற நிலை மாறி இரவிலும் பெண்கள் வேலை செய்ய தயாராகவே இருக்கிறார்கள். ஐ.டி. துறையை கடந்து பல இடங்களிலும் இரவு பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இரவு பணி பெண்களுக்கு சாதகமானதா? என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக அமைந்திருக்கிறது. இரவு பணியை தொடர்ந்து செய்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்? என்னென்ன பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்து பார்ப்போம்.

    இரவு வேலை செய்தால் என்ன நடக்கும்?

    தூக்க-விழிப்பு சுழற்சிகள் சூரிய ஒளியை சார்ந்திருக்கின்றன. காலையில் சூரிய கதிர்களோ, அதன் வெளிச்சமோ உடலில் படும்போது கார்டிசோல் அளவுகள் உயர்ந்து, அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உடலை உற்சாகப்படுத்தும். மறுபுறம் இரவில் இருள் சூழ தொடங்கியதும் மெலடோனின் ஹார்மோன் தூக்கத்திற்கு உடலை தயார்படுத்தும். பெண்கள் இரவு நேர வேலைகளில் ஈடுபடுவது கார்டிசோலை தூண்டிவிடுவதோடு மெலடோனின் உற்பத்தியை சீர்குலைத்துவிடும்.

    இரவு நேர வேலை செய்பவர்களுக்கு கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகமாவதாகவும், மெலடோனின் அளவு குறைவதாகவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

    அதிலும் பெண்கள் இரவு முழுவதும் வேலை செய்யும் வழக்கத்தை தொடரும்போது தூக்க-விழிப்பு சுழற்சியை தொந்தரவு செய்யும். உடலில் கார்டிசோல் அளவு அதிகரிப்பதற்கு வழிவகுத்து மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்துடன் ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். சுவாசக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

    சமீபத்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், 'இரவு பணியில் ஈடுபடும் பெண்களுக்கு மிதமாகவோ அல்லது கடுமையாகவோ ஆஸ்துமா ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    தூக்க சுழற்சி சீர்குலையும்

    இரவு பணியில் ஈடுபடுவது ஆரம்பத்தில் சிரமமாக தோன்றும். நாளடைவில் அதற்கு உடல் பழக்கமாகிவிடும் என்று பலரும் கூறுவதுண்டு. இரவுப்பணியில் ஈடுபடுபவர்களின் கருத்தும் அதுவாகவே இருக்கும். பெண்களை பொறுத்தவரை இரவுப்பணியில் ஈடுபடுவது இயற்கையான தூக்க சுழற்சியை கடுமையாக சீர்குலைத்துவிடும். ஆரம்பத்தில் சமாளிக்கக்கூடிய விஷயமாக தோன்றலாம். ஹார்மோன் சமநிலையின்மைக்கும் வழிவகுத்துவிடும். வேறு சில உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்திவிடும்.

    மனித உடல் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும் உயிரியல் கடிகாரத்தை அடிப்படையாக கொண்டது. பூமியின் இரவு, பகல் சுழற்சிக்கு ஏற்ப உடலும் தூக்க சுழற்சியை சீராக பராமரிக்கும். கார்டிசோல், மெலடோனின் ஆகிய இரண்டும் முக்கியமான தூக்க ஹார்மோன்களாகும். இதில் விழிப்பு நிலைக்கு தூண்டி, தூக்கத்தில் இருந்து எழுப்பும் பணியை கார்டிசோல் ஹார்மோன் செய்யும். இருள் சூழ தொடங்கியதும் உறக்க நிலைக்கு அழைத்து செல்லும் பணியை மெலடோனின் ஹார்மோன் மேற்கொள்ளும்.

    • சமைக்கும் போது வெளிப்படும் புகை மற்றும் புகை உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.
    • சமையலறையில் இருந்து வாயுக்கள் வெளியேறவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

    அம்மா... காலை உணவு ரெடியா:

    ஐயோ... சாப்பாடு வைக்க இவ்வளவு நேரமா?, அம்மா... எனக்கு கொஞ்சம் காபி கொடுங்க: ...

    இது தான் ஒவ்வொரு வீட்டிலும் காலை நேரத்தில் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது. கணவன் பிள்ளைகளுக்காக சமையல் அறையில் தினமும் பெண்கள் ஓடி ஓடி வேலை செய்கிறார்கள்.

    சமையலின் ருசியை மட்டும் பார்க்கும் பலர் சமையலறை எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அங்குள்ள காற்று மாசுபட்டால் அது நம் வீட்டு பெண்களை பாதிக்கும்.

    இந்தியப் பெண்கள் ஒரு நாளைக்கு மூன்றரை மணி நேரம் சமையலறையில் செலவிடுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. பல வீடுகளில் சமையலறைக்குள் போதுமான வெளிச்சம் மற்றும் காற்று செல்லவும். அங்கு வெளியாகும் புகை மற்றும் வாயுக்களை காற்றோட்டம் செய்யவும் போதுமான காற்றோட்டம் இல்லை..

    இது பல நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சமைக்கும் போது வெளிப்படும் புகை மற்றும் புகை உலகளவில் மில்லியன் கணக்கான மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.

    2020-ம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு பாதுகாப்பற்ற சமையல் நடைமுறைகள் காரணமாக வீடுகளில் ஏற்படும் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 3.2 மில்லியன் பெண்கள் இறப்பதாக மதிப்பிட்டுள்ளது. இவற்றில், 32 சதவீதம் இதய நோய், 23 சதவீதம் பக்கவாதம், 21 சதவீதம் சுவாச நோய்கள், 19 சதவீதம் மற்றும் 6 சதவீதம் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை பாதிக்க வாய்ப்பு உள்ளது.

    சமையலறை வாயுவிலிருந்து வெளியாகும் நைட்ரஜன் டை ஆக்சைடை நீண்ட காலமாக உள்ளிழுப்பது ஆயிரக்கணக்கான ஆஸ்துமா தாக்குதல்களுக்கு காரணமாக இருக்கலாம்.

    சமையலறையில் இருந்து வாயுக்கள் வெளியேறவில்லை என்றால் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

    சுவாச நோய்கள் தலைவலி, சோர்வு, கண்களில் எரிதல் கண்களில் நீர் வடிதல் மற்றும் அதிகரித்த ஒவ்வாமைகளை ஏற்படுத்தும்.



    ஆஸ்துமா உள்ளவர்களுக்கு எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    கியாஸ் எரிவதால் அறைக்குள் நைட்ரஜன் டை ஆக்சைடு கார்பன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு வெளியாகின்றன. அதிக வெப்பநிலை எண்ணெயில் உணவை வறுக்கும்போது அதிக மாசுக்கள் வெளியிடப்படுகின்றன.

    சிலர் இன்னும் மரம் மற்றும் கரியைப் பயன்படுத்தி சமைக்கிறார்கள். இது கார்பன் டை ஆக்சைடு நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் புகையை அறைக்குள் வெளியிடுகிறது.

    சமையல் அறையில் வெப்பமான வானிலை நீரிழப்பு மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

    நீண்ட நேரம் நின்று சமைப்பது கீழ் முதுகு மற்றும் குதிகால் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. பயோமாஸ் எரிபொருளை அதிகமாக உள்ளிழுப்பது பெண்களுக்கு நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடையது. இது நுரையீரல் திசுக்களுக்கு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தும்.

    சமைக்கும் போது வெளியாகும் புகை மற்றும் வாயுக்கள் வெளியேற அனுமதிக்க கதவுகள் மற்றும் ஜன்னல்கள் திறந்து வைக்கப்பட வேண்டும்.

    முடிந்தவரை குறுகிய நேரத்தில் சமையலை முடிக்க முயற்சி செய்யுங்கள்.

    அடிக்கடி சமையலறையை விட்டு வெளியே வந்து கொஞ்சம் தண்ணீர் குடித்து சிறிது நேரம் நடப்பது நல்லது.

    புகை மற்றும் வாயுக்களை வெளியேற்றுவதற்கு வெளியேற்றும் விசிறிகள் மற்றும் புகைபோக்கிகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

    மின்சார அடுப்பு மூலம் இழப்பை ஓரளவு குறைக்கலாம்.

    ஏற்கனவே சுவாசப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தூண்டல் அடுப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

    சமையலறைகள் சிறியதாகவும், காற்று மற்றும் வெளிச்சம் குறைவாகவும் இருக்கும்போது பெண்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    கியாஸ் மற்றும் சமையல் எண்ணெய்களை சூடாக்குவதால் வெளியாகும் வாயுக்களால் பெண்கள் ஆஸ்துமாவை உருவாக்கும் அபாயத்தில் உள்ளனர். வீட்டில் இருக்கும் பெண்களும் வெளியில் இருந்து வரும் தூசியால் நோய்வாய்ப்படுகிறார்கள் என சுவாச நோய் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • 6 மாதத்திற்கு பின்னர் தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
    • ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக தாய்ப்பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    சென்னை:

    திருமணமான பெண்கள் அனைவருமே தாய்மைக்கு ஏங்குகிறார்கள். கர்ப்பிணியாகி, குழந்தையை பெற்றெடுத்த பின்னர், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வளர்க்கவும் விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் வேலைக்கு போகும் பெண்களாக இருந்தால் சரியான நேரத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்துப்போகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏறக்குறைய 40 சதவீத தாய்மார்கள் குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்று மகப்பேறு டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    இதுதொடர்பாக, சென்னை எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-

    குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பாலை தவிர குழந்தைகளுக்கு தண்ணீர் போன்ற வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. குழந்தை பிறந்து சில மாதங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை.

    தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதில்லை.

    இதனால் எளிதில் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. சரியான தாய்ப்பால் கிடைக்காததால் 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.

    6 மாதத்திற்கு பின்னர் தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.ஆனால் தாய்ப்பாலுக்கு பதில் வேறு உணவுகள் கொடுக்கும்போது குழந்தைகளுக்கு ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக தாய்ப்பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு கருப்பை விரைவில் சுருங்குதல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைதல் போன்ற நன்மைகளும் உள்ளன. தமிழ்நாட்டில் தாய்ப்பால் வங்கி அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் உள்ளன.

    தாய் அல்லது குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாத நேரத்தில் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. தாய்ப்பாலை ஒப்பிடுகையில், தாய்ப்பால் வங்கியில் உள்ள பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலில் சத்துக்கள் குறைவாகவே உள்ளது. எனவே அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கட்டாயம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    ×