என் மலர்
நீங்கள் தேடியது "suspended"
- கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர்.
- கொலைக்கு உடந்தையாக இருந்த 4 பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த பசுபதிகோவில் திரவுபதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சிவமணிகண்டன் (வயது 28).
இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் குறித்து அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 6-ம் தேதி இரவு புகார் அளித்தார். இந்நிலையில் 7-ம் தேதி மாலை 5 மணிக்கு அய்யம்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே சிவ மணிகண்டன் நடுரோட்டில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கஞ்சா விற்பவர்கள் குறித்து போலீசில் புகார் அளித்ததன் காரணமாக சிவ மணிகண்டன் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் புகார் அளித்த சமயத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால் கொலையை தடுத்து நிறுத்தி இருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 3 பேர் ஜெயங்கொண்டம் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த சிறுவன் உள்பட 4 பேரை அய்யம்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிவ மணிகண்டன் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் விட்டதன் காரணமாக தான் குற்றவாளிகள் கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பதாகவும், புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காத அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிமதியை பணி இடைநீக்கம் செய்து, தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாஉல்ஹக் உத்தரவிட்டுள்ளார்.
- பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர் புத்தகத்தில் உள்ள இசைக்கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார்.
- மாணவரின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அருகே குனிச்சி மோட்டூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் விஜயகுமார் புத்தகத்தில் உள்ள இசைக்கருவிகள் குறித்து பாடம் நடத்தி உள்ளார்.
அப்போது, குறிப்பிட்ட ஒரு இசைக்கருவியின் பெயரை குறிப்பிட்டு அந்த இசைக்கருவியை குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாசிப்பார்கள் எனக்கூறி ஒரு மாணவரின் பாடப்புத்தகத்தில், மாணவரின் சாதி பெயரை குறிப்பிட்டு எழுதி அனைத்து மாணவர்கள் முன்னிலையில் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த மாணவன் வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் கூறி அழுதான். இதையடுத்து, 2 நாட்கள் கழித்து ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
பின்னர் குனிச்சி மோட்டூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவரின் சாதி பெயரை புத்தகத்தில் எழுதிய ஆசிரியரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, திருப்பத்தூர் தாசில்தார் நவநீதம், கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆசிரியர் விஜயகுமாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுலவர் உத்தரவிட்டுள்ளார். விஜயகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- வேளாண்மை துறை சிறப்பு செயலாளராக இருப்பவர் பிரசாந்த்.
- புகார்கள் தொடர்பாக விசாரிக்க தலைமை செயலாளருக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில அரசில் தொழில்துறை இயக்குனராக இருப்பவர் கோபால கிருஷ்ணன். வேளாண்மை துறை சிறப்பு செயலாளராக இருப்பவர் பிரசாந்த்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான இவர்கள் மீது அரசுக்கு புகார்கள் வந்தன. மத சார்பின் அடிப்படையில் வாட்ஸ்-அப் குழுவை கோபாலகிருஷ்ணன் உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் இந்து அதிகாரிகள் என்ற வாட்ஸ்-அப் குழுவை ஏற்படுத்தியதற்கு குழுவில் சேர்க்கப்பட்ட சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரசாந்த், கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெயதிலக்கிற்கு எதிராக சமூக ஊடகங்களில் தனிப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு இருந்ததாக புகார் கூறப்பட்டது. இந்த புகார்கள் தொடர்பாக விசாரிக்க தலைமை செயலாளருக்கு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டார்.
அதன்படி விசாரணை நடத்திய தலைமை செயலாளர் சாரதா முரளீதரன், சேவை விதிகளுக்கு எதிராக 2 அதிகாரிகளும் செயல்பட்டதால், அவர்கள் மீது விளக்கம் கேட்காமல் நடவடிக்கை எடுக்கலாம் என பரிந்துரை செய்திருந்தார். அதன்பேரில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கோபால கிருஷ்ணன், பிரசாந்த் ஆகியோரை சஸ்பெண்டு செய்து முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்தார்.
- அனில் குமாரை அங்குள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மதிய உணவு சாப்பிட வைத்தனர்.
- போலீஸ் நிலையத்தில் கைதிக்கு ராஜ மரியாதை செய்ததாக இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
ஆந்திரா மாநிலம் ராஜ மகேந்திரவரத்தை சேர்ந்தவர் அனில் குமார். பிரபல ரவுடியான இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தார் மற்றும் துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் குறித்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டார்.
இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் அனில் குமாரை கைது செய்து ராஜ மகேந்திரவரம் ஜெயிலில் அடைத்தனர். கடந்த வாரம் வேறொரு வழக்கு சம்பந்தமாக போலீசார் அனில் குமாரை 3 நாட்கள் காவலில் எடுத்தனர். லாக்கப்பில் வைத்து விசாரணை நடத்த வேண்டிய அனில் குமாருக்கு அங்குள்ள மேஜையில் தலையணையுடன் கூடிய படுக்கையை ஏற்பாடு செய்தனர்.
மேலும் அனில் குமாரை அங்குள்ள ஓட்டலுக்கு அழைத்துச் சென்று மதிய உணவு சாப்பிட வைத்தனர். அனில் குமார் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சத்தமாக போலீசாருக்கு உத்தரவிடும் காட்சிகளும் போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
போலீஸ் நிலையத்தில் கைதிக்கு ராஜ மரியாதை செய்ததாக இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 7 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஒரு வாரத்தில் இறுதி அறிக்கை வந்தவுடன் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் 7 பேரும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
- ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
வேலூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 30). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ராஜலட்சுமி வீட்டில் வேலைகள் செய்வதற்காக சிவக்குமாரை, சிறைத்துறை வார்டன்கள் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது டி.ஐ.ஜி. வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறி சிவக்குமாரை சிறை வார்டன்கள், காவலர்கள் சிறையில் தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக சிவக்குமாரின் தாயார் கலாவதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள் இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டனர்.
அதன்பேரில் வேலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து ஏற்கனவே வேலூர் சரக முன்னாள் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப்துல்ரகுமான், ஜெயிலர் அருள்குமரன் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து வார்டன்கள் சுரேஷ், சேது, சிறைக்காவலர்கள் ராஜூ, ரஷித், மணி, பிரசாந்த், ராஜா, தமிழ்செல்வன், விஜி, பெண் சிறைக்காவலர் சரஸ்வதி, செல்வி ஆகிய 11 பேர் நேற்று சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
- ஓட்டலை மூடி சீல் வைத்தனர்.
- சஸ்பெண்டு நடவடிக்கை பாயும்.
துறையூர்:
திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி சாலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ரத்னா ஓட்டலில் தமிழக அரசின் மதிய உணவுத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் முட்டைகளைக் கொண்டு ஆம்லெட், ஆப் பாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நிஜாஸ்டின் ஜோ தலைமையிலான அதிகாரிகள் ஓட்டலை ஆய்வு செய்தனர்.
அப்போது ஓட்டலின் சமையலறையில் தமிழக அரசின் சார்பில் விநியோகம் செய்யப்படும் 111 முட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துறையூர் போலீசார் ஒஒட்டல் உரிமையாளரான தேவரப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரத்தினம் (46) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ரத்தினம் மதுராபுரி அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வரும் வசந்தகுமாரி (58) என்பவரிடமிருந்து பள்ளி குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படும் முட்டைகளை குறைந்த விலைக்கு சட்டவிரோதமாக வாங்கி பயன்படுத்தியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளரான வசந்த குமாரியையும் துறையூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதை தொடர்ந்து வசந்தகுமாரி திருச்சி மகளிர் சிறையிலும், ரத்தினம் துறையூர் கிளை சிறையிலும் அடைக்கபப்ட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் ஓட்டலை ஆய்வு செய்ததில், சுகாதாரமற்ற முறையில் ஒட்டலை பராமரித்தது தெரியவந்தது.
இதை அடுத்து, உணவு பாதுகாப்புத் துறையினர் வட்டாட்சியர் உதவியுடன் ஓட்டலை மூடி சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே அரசின் இலவச முட்டைகள் ஓட்டளுக்கு சப்ளை செய்யப்பட்டது தொடர்பாக உயர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக சத்துணவு அமைப்பாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இதனால் அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை பாயும் என அரசு துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
- மாணவனின் தாயார் பள்ளிக்கு சென்று பள்ளி முதல்வரிடம் விசாரித்தார்.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் 5 வயது மாணவர் ஒருவர் பள்ளிக்கு கொண்டு வந்த டிபனில் அசைவ உணவு இருந்ததாக கூறி அந்த மாணவனை சஸ்பெண்டு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் தாயார் பள்ளிக்கு சென்று பள்ளி முதல்வரிடம் இது தொடர்பாக விசாரித்தபோது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது.
இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The principal of a private school in #UttarPradesh's #Amroha suspended a nursery student, allegedly for bringing non-vegetarian food in his lunch box to school. The incident came to light after a video, shot by the student's mother, went viral on social media.The video showed a… pic.twitter.com/J3D0ycd3gR
— Hate Detector ? (@HateDetectors) September 5, 2024
- பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கர்ப்பிணி நாற்காலியில் குழந்தை பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் இருந்த நோயாளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நெரெடி கும்மாவை சேர்ந்தவர் அஸ்வினி. நிறைமாத கர்ப்பிணியான அஸ்வினிக்கு நேற்று முன் தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது.
உறவினர்கள் அவரை பிரசவத்திற்காக தேவார கொண்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் மூலம் நல்கொண்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர் நிகிதா மற்றும் செவிலியர்கள் அஸ்வினியை பரிசோதித்து விட்டு பிரசவத்திற்கு இன்னும் கால அவகாசம் ஆகும் என தெரிவித்தனர்.
30 நிமிடங்களுக்கு பிறகு அஸ்வினியை நடை பயிற்சி செய்யுமாறு தெரிவித்தனர். அப்போது அஸ்வினிக்கு பிரசவ வலி அதிகரித்ததால் அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
நாற்காலியில் உட்கார்ந்த அஸ்வினிக்கு குழந்தை பிறந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த செவிலியர்கள் அஸ்வினியை பிரசவ வார்டுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
கர்ப்பிணி நாற்காலியில் குழந்தை பிரசவித்த சம்பவம் அப்பகுதியில் இருந்த நோயாளிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்காமல் கால தாமதம் செய்து பணியில் அலட்சியமாக இருந்த டாக்டர் நிகிதா, செவிலியர்கள் விஜயலட்சுமி, சைதம்மா, மவுனிகா, சரிதா ஆகியோர் சஸ்பெண்டு செய்து கலெக்டர் நாராயண ரெட்டி உத்தரவிட்டார்.
- ஒரு பாடலுக்கு தனது கைத்துப்பாக்கியுடன் நடனமாடினார்.
- தீபக் சர்மா துப்பாக்கியால் சுட்டவாறு நடனமாடியதாக கூறப்படுகிறது.
டெல்லி:
டெல்லி திகார் ஜெயிலின் கீழ் உள்ள மண்டோலி சிறையில் உதவி கண்காணிப்பாளராக தீபக் சர்மா பணியாற்றி வந்தார். இவர் கோண்டா பகுதியில் நடைபெற்ற ஒரு பிறந்த நாள் விருந்தில் பங்கேற்றுள்ளார்.
அந்த விழாவில் நடிகர் சஞ்சய்தத் நடித்த 'கல்நாயக்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு தனது கைத்துப்பாக்கியுடன் நடனமாடினார். அப்போது திடீரென தீபக் சர்மா வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறு நடனமாடியதாக கூறப்படுகிறது.
#JUSTIN: Tihar Jail administration has suspended Deepak Sharma, Assistant Superintendent, presently posted in Mandoli Central Jail No 15. A video went viral where he was waiving a pistol at a birthday party. @IndianExpress, @ieDelhi pic.twitter.com/nOo62m5Rwl
— Mahender Singh Manral (@mahendermanral) August 9, 2024
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதைப்பார்த்த பயனர்கள் தீபக் சர்மாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தீபக் சர்மாவை சஸ்பெண்டு செய்து சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- ஜார்க்கண்ட் சட்டசபையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், பா.ஜ.க.வும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததால் அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. இந்த கூட்டத்தொடர் தொடங்கும் முன் ஆளும் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில முக்கிய பிரச்சனைகள் தொடர்பான கேள்விகளுக்கு முதல் மந்திரி ஹேமந்த் சோரன் பதிலளிக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் சட்டசபையில் பரபரப்பு நிலவியது.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சோரன் பதிலளிக்க மறுத்ததையடுத்து, அதை கண்டித்து முழக்கங்கள் எழுப்பின.
இந்நிலையில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் நாளை பிற்பகல் 2 மணி வரை சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சபையை விட்டு வெளியேற மறுத்தனர். இதனால் அவர்களை சபை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
நேற்று இரவு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் சட்டசபையின் லாபியில் தங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10 மாணவர்களுக்கு தாறுமாறாக முடியை வெட்டினார்.
- பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கம்பம் மாவட்டம், கல்லூர் அடுத்த பெரம வஞ்சாவில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சிரிஷா என்பவர் ஆங்கில ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
பள்ளிக்கு வரும் மாணவர்கள் தலைமுடியை வெட்டிக்கொண்டு வர வேண்டும் என மாணவர்களிடம் பலமுறை வலியுறுத்தினார்.
ஆனாலும் மாணவர்கள் ஆசிரியை கூறும் அறிவுரையை ஏற்காமல் புள்ளிங்கோ கட்டிங் நீண்ட தலைமுடியுடன் பள்ளிக்கு வந்தனர். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த சிரிஷா கத்திரிக்கோலை எடுத்து வந்து 10 மாணவர்களுக்கு தாறுமாறாக முடியை வெட்டினார்.
உணவு இடைவேளையில் வீட்டிற்குச் சென்ற மாணவர்களின் தலையைக் கண்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த சம்பவம் குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.
பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மாணவர்களுக்கு தலைமுடி வெட்டிய ஆசிரியை சிரிஷாவை சஸ்பெண்டு செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
- பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது.
- பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் மேனகா தாமோர். இவர் கடந்த 19 ஆம் தேதி ஜெய்ப்பூர் பன்ஸ்வாராவில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் ஆயிரக்கணக்கான பழங்குடியின பெண்கள் கலந்துகொண்டனர்.
அக்கூட்டத்தில் பேசிய அவர், பழங்குடி மக்கள் இந்துக்கள் கிடையாது. பழங்குடிகளின் பண்பாடு இந்துக்களின் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது. இந்து பெண்களை போல பழங்குடி பெண்கள் தாலி அணிய வேண்டாம். குங்குமமும் வைக்க வேண்டாம். நான் கூட தாலி அணிவதில்லை. குங்குமம் வைப்பதில்லை. விரதம் கூட இருப்பதில்லை.
பள்ளிக்கூடங்கள் என்பது, கல்வியின் கோயில். ஆனால் இன்று பள்ளிக்கூடங்கள் கடவுள்களின் இல்லமாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலை மாற வேண்டும். பழங்குடியின பெண்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் விரதங்கள் கடைபிடிப்பதை நிறுத்துங்கள். சாமியார்கள், பூசாரிகள் சொல்வதை கேட்காதீர்கள். நாம் இந்துக்கள் அல்ல" என்று பேசினார்.
மேனகா பேசிய இந்த வீடியோ வைரலான நிலையில், ராஜஸ்தான் கல்வித்துறை இணை இயக்குநர், மேனகா தாமோரை இன்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மேனகா ராஜஸ்தான் கல்வி நிர்வாகத்திற்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டார். நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்" என்று அம்மாநில கல்வித்துறை இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
அரசுப்பள்ளி ஆசிரியராக பணியாற்றி வரும் மேனகா, ராஜஸ்தானில் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா (Adivasi Parivar Sanstha) என்ற கல்வி நிறுவனத்தின் நிறுவனர் என்பது குறிப்பிடத்தக்கது.