என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாரணை"

    • வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
    • விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் அடுத்த கோட்டைபாளையத்தில், தனியார் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த காப்பகத்தில் தாய், தந்தை இல்லாத ஆதரவற்ற 26 குழந்தைகள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த காப்பகத்தில் சிறுவர்கள் அனைவரும் அமர்ந்து படித்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் காப்பகத்தில் உள்ளவர், அங்கு படித்து கொண்டிருக்கும் சிறுவர்களில் ஒரு சிறுவனை எழுப்பி விசாரிக்கிறார். பின்னர் அந்த சிறுவனை தனது பெல்ட்டை எடுத்து தாக்குகிறார்.

    வலி தாங்க முடியாத அந்த சிறுவனோ நான் எதுவும் செய்யவில்லை என கூறியபடியே ஐயோ.. ஐயோ என கத்துகிறார். ஆனாலும் கொடூர நெஞ்சம் கொண்ட அந்த நபர், சிறுவனின் அலறல் சத்தத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து சிறுவனை தாக்கி கொண்டே இருக்கிறார்.

    வலியால் துடித்த சிறுவன் அவரிடம் இருந்து தப்பி கீழே சென்று அமர்ந்துள்ளார். அப்போதும் அந்த நபர், சிறுவனை பெல்ட்டால் சரமாரியாக தாக்குகிறார். இதனை அங்கு இருந்த மற்ற சிறுவர்கள் பார்த்து அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.

    இப்படி சிறுவனை அந்த நபர் கொடூரமாக தாக்குவதும், சிறுவன் வலி தாங்க முடியால் அலறி கொண்டும் இருப்பதை அங்கு பணியில் இருந்த மற்றவர்கள் பார்த்து அதனை தடுக்காமல், ஓரமாக நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில் காப்பகத்தில் சிறுவனை நபர் ஒருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் முடிவில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக கலெக்டர் பவன்குமார் கூறும்போது, சர்க்கார் சாமகுளம் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவன் பெல்டால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல்துறை மற்றும் கோவை மாவட்ட குழந்தைகள் நலத்துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை முடிந்ததும் சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • விசாரணை படத்தின் ஆஸ்கார் பிரச்சாரத்திற்காக தனுஷ் ரூ.3.5 கோடி செலவு செய்தார்
    • விசாரணை படம் தியேட்டரில் கிட்டத்தட்ட ரூ. 3 கோடியே 75 லட்சங்கள் வரை வசூலித்தது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான 'விசாரணை' படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், ஆங்கில யூடியூப் சேனலான தி ஹாலிவுட் ரிபோர்ட்டர் சேனலுக்கு பேட்டி அளித்த வெற்றிமாறன், விசாரணை படம் குறித்து இதுவரை தெரியாத பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    பேட்டியில் பேசிய வெற்றிமாறன், "விசாரணை படத்தின் கதையோடு தனுஷைச் சந்திக்கச் சென்றேன். படத்திற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று மட்டும் கேட்டார். நான் சொன்ன பணத்தை அவர் கொடுத்தார். பின்பு விசாரணை படத்தின் ஆஸ்கார் பிரச்சாரத்திற்காக தனுஷ் ரூ.3.5 கோடி செலவு செய்தார். அந்த மாதிரியான தயாரிப்பாளர் கிடைக்கமாட்டார்.

    விசாரணை படத்தை நாங்கள் ரூ.2 கோடியே 75 லட்சத்திற்கு எடுத்தோம். இந்த படத்தில் நானும் நடிகர் தினேஷும் நடிகர் கிஷோரும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரும் எடிட்டர் கிஷோரும் சம்பளம் வாங்கவில்லை.

    சமுத்திரக்கனி மட்டும் ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டார். அவருக்கு நாங்கள் சம்பளம் வாங்கவில்லை என்று தெரியாது. தெரிந்திருந்தால் அவரும் அட்வான்ஸ் வாங்கி இருக்கமாட்டார்.

    விசாரணை படம் தியேட்டரில் கிட்டத்தட்ட ரூ. 3 கோடியே 75 லட்சங்கள் வரை வசூலித்தது. அந்த வகையில் அந்த படம் வெற்றிப் படம் தான். ஒருவேளை அந்த படத்திற்கான நாங்கள் சம்பளம் வாங்கி இருந்தால் அந்த படத்தை அப்போது வணிக ரீதியாக வெற்றி படமாக மாற்றி இருக்க முடியுமா என்று தெரியவில்லை.

    இன்று விசாரணை படத்தை உருவாக்க வேண்டும் என்றால் ரூபாய் 8 கோடிகள் வரை செல்வாகும். நாங்கள் அந்த படத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்தோம். இந்த கதையை உலகத்திற்குச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு இருந்தேன்" என்று தெரிவித்தார்.

    • தற்போது அரசு மருத்துவமனையில் சிறுமியும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.
    • பள்ளி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூக நலத்துறை துணை இயக்குநருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் ஷாஹாபூர் தாலுகாவில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவத்தன்று மதியம் 2.30 மணியளவில் பள்ளியின் கழிப்பறையில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த சம்பவம் பள்ளி மற்றும் விடுதி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தாயும், சேயும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது, ஷாஹாபூர் அரசு மருத்துவமனையில் சிறுமியும், குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

    இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி நிர்மலா, ஷாஹாபூர் போலீஸ் நலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாணவியிடம் விசாரித்தபோது தனது கர்ப்பத்துக்கு யார் காரணம் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதை அதிகாரிகள் ரகசியமாக வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே பள்ளி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்ட சமூக நலத்துறை துணை இயக்குநருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து பள்ளியின் முதல்வர் பாசம்மா, விடுதி வார்டன், அறிவியல் ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை கர்நாடக மாநில கல்வி நிறுவன நிர்வாக இயக்குநர் காந்தராஜு, இடைநீக்கம் செய்தார்.

    இது குறித்து போலீஸ் துணை ஆணையர் ஹர்ஷல் போயர் கூறுகையில், பள்ளி நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க தவறிவிட்டது. இந்த வழக்கு குழந்தை திருமணம் உட்பட பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

    கர்நாடக மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் சஷிதர் கோசம்பே கூறுகையில், பள்ளி ஊழியர்கள் மாணவி குழந்தை பெற்ற சம்பவத்தை ரகசியமாக வைத்திருந்ததாகவும், அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.

    • வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
    • கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே, அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, அஜித்குமார் கொலை வழக்கில் அவரது குடும்பத்திற்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் கூடுதல் இழப்பீடு தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகலாம் என அறிவுறுத்தி நீதிபதிகள் வழக்கில் நீதிமன்ற உத்தரவை அரசு முறையாக நிறைவேற்றி வருவதாகவும், அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர். 

    • கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர்.
    • சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27) என்பவர் திருட்டு புகார் தொடர்பாக போலீசாரால் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவை சேர்ந்த கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தார்.

    அதன்படி கடந்த வாரம் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக திருப்புவனம் போலீஸ் நிலையத்திலிருந்து அவர்கள் வழக்கு ஆவணங்களை பெற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மற்றும் திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில், அஜித்குமாரை அடைத்து வைத்து தாக்கிய இடங்களில் ஆய்வு செய்து நேரடி விசாரணை மேற்கொண்டனர்.

    கடந்த 19-ந்தேதி அஜித்குமார் தாக்கப்பட்டது குறித்து அவரது சகோதரரிடம் செய்து காண்பிக்குமாறு கூறி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தில் தொடர்புடைய திருப்புவனம் பகுதியில் உள்ள பேக்கரியில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

    இந்த நிலையில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்புவனத்தில் சாட்சிகளிடம் 2-வது முறையாக விசாரணை நடத்தினர். அதன்படி தனிப்படை போலீசாருடன் அஜித்குமாரை வேனில் அழைத்து சென்ற போலீஸ்காரர் ராமச்சந்திரன், அஜித்குமார் சகோதரர் நவீன்குமார், கோவில் ஊழியர்கள் பிரவீன் மற்றும் வினோத், ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விபத்து குறித்து இதுவரை இந்திய அரசு ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை மட்டுமே நடத்தியுள்ளது.
    • அதில் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

    அகமதாபாத்தில் ஜூன் 12 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமான விபத்து விசாரணையில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா.) உதவியை இந்தியா நிராகரித்துள்ளது.

    260 பேர் உயிரிழந்தஇந்த விபத்து உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களில் இங்கிலாந்து உள்ளிட்ட வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

    இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில், ஐ.நா.வின் சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பு (ICAO) இந்த விபத்து விசாரணையில் உதவுவதற்காக தனது ஒரு புலனாய்வாளரை இந்தியாவிற்கு அனுப்ப முன்வந்தது.

    வழக்கமாக, ஐ.நா.விடம் உதவி கோரப்பட்ட பிறகே இதுபோன்ற உதவிகளை வழங்கும். ஆனால் இந்த முறை, ஐ.நா. தானாக முன்வந்து உதவியை வழங்கியது. அந்த புலனாய்வாளருக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்க ஐ.சி.ஏ.ஓ. கோரியிருந்த நிலையில், இந்திய அதிகாரிகள் அதனை மறுத்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    முக்கியமான பிளாக் பாக்ஸ் தரவு பகுப்பாய்வில் தாமதம் ஏற்படுவதாக சில பாதுகாப்பு வல்லுநர்கள் ஏற்கனவே விமர்சித்திருந்த நிலையில் ஐ.நா. உதவியை இந்தியா மறுத்தது தெரியவந்தது.

    விபத்து குறித்து இதுவரை இந்திய அரசு ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை மட்டுமே நடத்தியுள்ளதாகவும், அதில் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படவில்லை என்றும் பாதுகாப்பு வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.

    இதற்கிடையே விமான விபத்து நடந்த சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பிளாக் பாக்ஸ் தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

    இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர், இந்தியா அனைத்து ஐ.சி.ஏ.ஓ. நெறிமுறைகளையும் பின்பற்றி வருவதாகவும், முக்கியமான நிகழ்வுகள் குறித்து ஊடகங்களுக்கு தகவல்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.    

    • நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததை அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
    • யஷ்வந்த் வர்மாவின் தவறான நடத்தையும், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

    அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, முன்னதாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றினார்.

    மார்ச் 14 அன்று, டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, பழைய பொருட்கள் வைக்கும் அறையில், கோடிக்கணக்கான ரூபாய் பணம் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

    இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவின் அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

    விசாரணைக் குழுவின் அறிக்கை, பணம் கண்டெடுக்கப்பட்ட அறை, நீதிபதி யஷ்வந்த் வர்மா மற்றும் அவரது குடும்பத்தினரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்ததை அறிக்கை உறுதிப்படுத்துகிறது.

    பாதி எரிந்த ரூபாய் நோட்டுகள், மறுநாள் அதிகாலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன. கிடைத்த நேரடி மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தவறான நடத்தையும், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன.

    எனவே இந்தக் குற்றச்சாட்டுகள் அவரைப் பதவி நீக்கம் செய்வதற்குப் போதுமானவை என்று விசாரணை அறிக்கை திட்டவட்டமாகக் கூறுகிறது.

    • சம்பவ இடத்திற்கு ஆந்திர உள்துறை அமைச்சர் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.
    • இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் சிம்மாச்சலத்தில் உள்ள கோவிலில் புதிதாக கட்டப்பட்ட சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

    வராஹலட்சுமி நரசிம்ம சுவாமியின் நிஜரூப தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த போது ரூ.300 டிக்கெட் வழங்கும் வரிசையில் அமைக்கப்பட்டு இருந்த 20 அடி நீள சுவர் இடிந்து விழுந்தது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்புப் பணியை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு ஆந்திர உள்துறை அமைச்சர் நேரில் வந்து மீட்பு பணிகளை பார்வையிட்டார்.



    விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் நீடித்த பலத்த மழை மற்றும் பலத்த காற்று காரணமாக சுவர் இடிந்து விழுந்ததாக கூறினர்.

    இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

    • எந்த நரம்பை வெட்டினால் மரணம் ஏற்படும் என்று கூகுளில் முன்னாள் டி.ஜி.பி மனைவி தேடியுள்ளார்.
    • கடந்த 15 ஆண்டுகளாக பல்லவி மனநோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வந்தவர் ஓம்பிரகாஷ் (வயது 68). முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. இவரது மனைவி பல்லவி. இவர்களுக்கு கார்த்திகேஷ் என்ற மகனும், கிருதி என்ற மகளும் உள்ளனர். கார்த்திகேசுக்கு திருமணமாகி விட்டது. கிருதிக்கு இன்னும் திருமணமாகவில்லை. குடும்பத்தகராறு மற்றும் சொத்து பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் ஓம்பிரகாஷ் தனது மனைவி பல்லவியால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து எச்.எஸ்.ஆர். லே-அவுட் போலீஸ் நிலையத்தில் மகன் கார்த்திகேஷ் தனது தாய், தங்கை மீது பரபரப்பு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஓம்பிரகாஷின் மனைவி பல்லவியை கைது செய்தனர். அவரது மகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    போலீசாரின் விசாரணையில் கடந்த 15 ஆண்டுகளாக பல்லவி மனநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. மேலும் குடும்பத்தகராறு காரணமாக அடிக்கடி ஓம்பிரகாஷ் துப்பாக்கியை காட்டி மனைவி, மகளை மிரட்டியதும் பதிலுக்கு அவர்கள் ஓம் பிரகாசுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்ததும் தெரியவந்தது.

    இதன் தொடர்ச்சியாகவே சம்பவத்தன்றும் இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் ஓம்பிரகாஷை அவரது மனைவி பல்லவி கழுத்தில் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    மேலும் போலீசார் பல்லவியின் செல்போனை கைப்பற்றி சோதனை நடத்திய போது அவர் தனது தோழி ஒருவருக்கு வீடியோ கால் செய்து கொலை செய்யப்பட்ட தனது கணவரின் உடலை காட்டியதும் தெரியவந்தது.

    அதோடு இல்லாமல் ஓம் பிரகாஷ் கொலை செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு பல்லவி கூகுளில் கழுத்து பகுதியில் எந்த நரம்பு மற்றும் ரத்த நாளங்களை வெட்டினால் ஒருவர் மரணம் அடைவார் என்று தேடியுள்ளார். அதன் அடிப்படையிலேயே அவர் ஓம்பிரகாைஷ கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்த பகீர் தகவலும் வெளியாகி உள்ளது. தொடர்ந்து இந்த கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடிகர் அஜீத்தின் குட் பேட் அக்லி உள்பட பல தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஷைன் டாம் சாக்கோ.
    • கேரளாவில் பிரபலமான இவர், போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி வழக்கை சந்தித்து வருகிறார்.

    நடிகர் அஜீத்தின் குட் பேட் அக்லி உள்பட பல தமிழ், மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. கேரளாவில் பிரபலமான இவர், போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கி வழக்கை சந்தித்து வருகிறார்.

    கடந்த புதன்கிழமை கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு போதைப் பொருள் தடுப்பு போலீசார் சோதனைக்கு சென்ற போது, அங்கிருந்து நடிகர் ஷைன் டாம் சாக்கோ தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. இது தொடர்பான சி.சி.டி.வி. கேமரா பதிவுளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். 3-வது மாடியில் இருந்து குதித்து அவர் தப்பித்தது ஏன்? என்பது தொடர்பாக விசாரிக்க போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.

    நடிகர் ஷைன் டாம் சாக்கோ தலைமறைவானதால் அவரது தந்தையிடம் போலீசார் சம்மனை வழங்கினர். இதனை தொடர்ந்து நேற்று காலை நடிகர் ஷைன் டாம் சாக்கோ கொச்சி வடக்கு போலீஸ் நிலையத்தில்  ஆஜரானார். அவரிடம் போலீசார் ஓட்டலில் இருந்து தப்பி ஓடியது ஏன்? என்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். போதைப் பொருள் கும்பலுடன் அவருக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் கேள்வி எழுப்பி னர்.

    முதலில் தான் போதைப் பொருள் பயன்படுத்துவதில்லை என்று கூறிய அவர், போலீசார் பல்வேறு ஆதாரங்களை காண்பித்த பிறகு தனக்கு போதைப் பழக்கம் இருப்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் சம்பவத்தன்று ஓட்டலில் இருந்த போது போதைப் பொருள் எதையும் பயன்படுத்தவில்லை என்றும், தன்னை யாரோ தாக்க வருகிறார்கள் என்ற பயத்திலேயே ஓட்டலில் இருந்து தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் அவருக்கு போதைப்பொருள் வியாபாரி சஜீர் என்பவருடன் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் ஷைன் டாம் சாக்கோவை கைது செய்தனர். தொடர்ந்து அறிவியல் பரிசோதனைக்காக அவரது தலைமுடி மற்றும் நகங்களை சேகரித்த போலீசார் பினனர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். மேலும் விசாரணைக்காக நாளை (21-ந் தேதி) காலை 10 மணிக்கு மீண்டும் ஆஜராக போலீசார் அறிவுறுத்தினர்.

    இந்த விசாரணையின் போது நடிகை வின்சி அலோ சியஸ் புகார் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ, அந்த புகாரில் எந்த அடிப்படையும் இல்லை. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களே உண்மையை சொல்லட்டும். நான் படப்பிடிப்பு தளத்தில் நடிகையிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றார்.

    • சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.
    • வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

    தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாட்களாக நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.

    அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்பட்டது.

    சோதனைகள் முடிவடைந்த நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரனவிச்சந்திரன் விசாரணைக்கு ஆஜரானார்.

    இதில், கே.என்.ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறையினர் சுமார் ஒரு மணி நேர விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிந்த நிலையில் கே.என்.ரவிச்சந்திரன் மீண்டும் புற்பட்டார்.

    • பிணையில் செல்ல இயலாதவர்களுக்கு சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும்.
    • குற்ற செயல்கள் மீண்டும் செய்யாமல் இருக்க அறிவுரை கூறினார்.

    பாபநாசம்:

    பாபநாசம் கிளை சிறையில் சிறைச்சாலை நீதிமன்றம் நடைபெற்றது பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல் கனி சிறைச்சாலை நீதிமன்றத்தை நடத்தினார்.

    முன்னதாக சிறைச்சாலை பற்றியும், சட்ட உதவி மையத்தின் செயல்பாடுகள் பற்றியும் விசாரணை கைதிகளுக்கு விளக்கமாக கூறினார். மேலும் விசாரணை கைதிகள் ஒவ்வொரு இடமும் குற்றத்தின் தன்மைகள் பற்றி கேட்டறிந்தார்.

    வழக்கறிஞர் வைத்து பிணையில் செல்ல இயலாதவர்களுக்கு சட்ட உதவி மையத்தின் மூலமாக வழக்கறிஞர் நியமிக்கப்படும் என்று கூறினார்.

    மேலும் இது போன்ற குற்ற செயல்கள் மீண்டும் செய்யாமல் இருக்கவும் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக வாழவும் அறிவுரை கூறினார் இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்டப்பணியாளர் தனசேகரன் செய்திருந்தார்.

    ×