என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்து"

    • சீட் பெல்ட் அணிவதற்குள் ராக் அண்டு ரோல் ராட்டினத்தை இயக்கியதால் விபத்து.
    • ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்துள்ளார்.

    சீட் பெல்ட் அணிவதற்குள் ராக் அண்டு ரோல் ராட்டினத்தை இயக்கியதால் கல்லூரி மாணவி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஜப்ரீன் பாத்திமா கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ராட்டினத்தை அஜாக்கிரதையாக இயக்கியதாக தனியார் பொழுதுபோக்கு பூங்கா ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆட்டோ சாலையோரமாக இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
    • மாணவிக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் உள்ள வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன் (வயது 30). இவர் தச்சநல்லூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 20-ந்தேதி காலை இவர் கல்லூரி பஸ்சை மதுபோதையில் ஓட்டிச்சென்றபோது நெல்லை-கடையம் சாலையில் சுத்தமல்லி அருகே உள்ள விஸ்வநாதன் நகர் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது அதிவேகத்தில் மோதினார்.

    இதில் ஆட்டோ சாலையோரமாக இருந்த பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் இருந்த டிரைவரான சுத்தமல்லியை அடுத்த நடுக்கல்லூரை சேர்ந்த மனக்காவலம் பெருமாள் (49)மற்றும் சுத்தமல்லி அருகே பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளான சுத்தமல்லியை சேர்ந்த யஸ்வனி (15), பழவூர் கிராமத்தை சேர்ந்த செல்வபாலா (15) மற்றும் 10-ம் வகுப்பு மாணவன் முத்து அருள்(15) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தொடர்ந்து 4 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாணவி செல்வபாலாவின் உடல்நிலை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நாளில் இருந்தே மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. இந்த நிலையில் மாணவிக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    சுமார் 4 நாட்களாக அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் மாணவியின் உயிரை காப்பாற்ற போராடிய நிலையில் செல்வபாலா சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி விசாரணை நடத்தி கொலையாகாத மரணம் விளைவிக்க முயற்சி என வழக்குப்பதிவு செய்து டிரைவர் இசக்கியப்பனை கைது செய்திருந்த நிலையில், தற்போது மாணவி இறந்துவிட்டதால் கொலையாகாத மரணத்தை ஏற்படுத்தியதாக வழக்கை மாற்றம் செய்துள்ளனர். 

    • பாலத்தின் சாலை சேதமடைந்துள்ளதால் பராமரிப்பு பணிக்காக சாலையின் நடுவே தடுப்புக்கட்டை வைக்கப்பட்டு உள்ளது.
    • மேம்பாலத்தில் சுற்றுலா வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    புதுச்சேரி:

    விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் புதுச்சேரி திருவண்டார் கோவில் பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் சாலை சேதமடைந்துள்ளதால் பராமரிப்பு பணிக்காக சாலையின் நடுவே தடுப்புக்கட்டை வைக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வழியாக கோவை நோக்கி நள்ளிரவு 12 மணியளவில் சுற்றுலா வேன் சென்றது.

    திருவண்டார் கோவில் மேம்பாலத்தில் வந்த போது திடீரென சுற்றுலா வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு கட்டையில் மோதியது. இதில் மேம்பாலத்தில் சுற்றுலா வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 2 சிறுவர்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது.
    • விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கழுவனை சேரியை சேர்ந்தவர்கள், காரியாபட்டியில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

    இவர்கள் அனைவரும் அருப்புக்கோட்டை அருகே செட்டி குறிச்சி விளக்கு அருகே சென்று கொண்டிந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் கோயமுத்தூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற கார் எதிர்பாராத விதமாக பக்தர்கள் மீது மோதியது.

    இதில் கழுவனை சேரியை சேர்ந்த முத்து மகன் சடைய கருப்பன் (வயது 35), அதே பகுதியை சேர்ந்த முத்துராசு மகன் முத்துப்பாண்டி (35) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து பந்தல்குடி இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் பலியான இருவருக்கும் திருமணமாகி மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். 

    • இழப்பீடு பெற்ற பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஏர் இந்தியாவை மீண்டும் அணுக முடியாது.
    • ரூ.1 கோடிக்கும் ரூ.260 கோடிக்கும் இடையே உள்ள இடைவெளி தான் நாம் சிந்திக்க வேண்டிய இடமாகும்.

    மனித உடல் என்பது ஒரே மாதிரியான கூறுகளால் ஆனது. ஆனால் மனித உயிரின் மதிப்பு என்பது எந்த காலத்திலும் சமமாக இருந்ததில்லை. சமூகத்தின் எந்த அடுக்கில் இருக்கிறோம் என்பதை பொறுத்தே அது இருந்திருக்கிறது.

    நவீன காலத்தில் அரசுகள் மனிதன் வாழ்வதற்கான உரிமையை சமமாக வழங்குவதாக கூறுகின்றன. அனைத்து நாட்டு அரசியலமைப்புகளிலும் அந்த வரி இருக்கிறது.

    உணவு, மருத்துவம் உள்ளிட்ட அதற்கான திட்டங்களும் அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன. ஆனாலும் சமூகம் இன்னும் பரபட்சமானதாகவே இருந்து வருகிறது. ஒரு நாட்டுக்குள் இருக்கும் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பதை தாண்டி நாடுகளுக்கிடையேயான இடைவெளியும் கவனிக்கத்தக்கது.

    அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு குடிமகனின் உயிருக்கு இருக்கும் மதிப்புக்கும் பின்தங்கிய மற்றும் வளரும் நாடுகளில் இருப்போரின் உயிருக்கு இருக்கும் மதிப்புக்குமே பாரிய வித்தியாசம் உள்ளது. அமெரிக்காவில் ஒரு துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்தால் அது அந்த வாரத்தின் பரபரப்பாக மாறுகிறது.

    ஆனால் சூடானில் கிளர்ச்சியாளர்களால் ஒரே கிராமத்தில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை, குறைந்தபட்சம் பேசுபடுவதோ அல்லது உலகளவில் ஆவணமாவதோ கூட கிடையாது.


    இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டதற்கும் அதற்கு பழிவாங்க காசாவில் 70,000 மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் மற்றொரு உதாரணம்.

    இது ஒரு புறம் இருக்க, அதிகாரம் மக்களின் உயிரின் மீது எத்தனை மதிப்பளிக்கிறது என்பதுமே கேள்விக்குரிய ஒன்றே.

    ஒரு விபத்து நிகழ்ந்தால் உயிரிழந்தவர்களுக்கு இவ்வளவு இழப்பீடு, காயமடைந்தவர்களுக்கு இவ்வளவு என அறிவிக்கப்டுகிறதே தவிர அதுபோன்ற விபத்து அல்லது தவறுகளை அடுத்து நிகழாமல் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் அரசுகள் தரப்பில் நிர்வாக மட்டத்தில் மேற்கொள்ளப்டுகிறதா என்பது பெரிய கேள்விக்குறியே.

    மனித உயிர் விலைமதிப்பற்றது. இருப்பினும் இழப்பீடு என்பது உயிரிழந்தவரின் வெற்றிடத்தை நிதி ரீதியாக எதிர்கொள்ள குடும்பத்திற்கு தேவை என்பதும் மறுக்க முடியாதது.

    இதன் அடிப்படையில் எவ்வளவு இழப்பீடு அளிக்கப்படுகிறது என்பது ஒரு உயிருக்கு அதிகாரம் எவ்வளவு மதிப்பளிக்கிறது என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது. அந்த வகையில் அண்மையில் இழப்பீடு குறித்து வந்த 2 செய்திகள் ஒப்புநோக்கத்தக்கவை.

    ஒன்று கடந்த ஆண்டு ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 260 பேருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடு.

    ஏர் இந்தியா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கும் செயல்முறை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இழப்பீடு பெற்ற பிறகு பாதிக்கப்பட்டவர்கள் ஏர் இந்தியாவை மீண்டும் அணுக முடியாது எனவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

    எனவே உயிரிழந்த 260 பேருக்கும் தலா ரூ.1கோடி வீதம் இழப்பீடாக மொத்தம் ரூ.260 கோடி வழங்கப்படுகிறது.

    மற்றொரு செய்தி, அமெரிக்காவில் கடந்த 2023 ஜனவரியில் சாலையைக் கடக்க முயலும்போது அதிவேகத்தில் வந்த போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த 23 வயது இந்திய மாணவி ஜான்வி கண்டுலா குடும்பத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் வழங்கியுள்ள நிவாரணம்.

    கடந்த வெள்ளிக்கிழமை கிங் கவுண்டி உயர் நீதிமன்றம், ஜான்வியின் குடும்பத்தினருக்கு 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ.260 கோடி) தொகையை நகரத்தின் காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. போலீஸ் அதிகாரி வாகனத்தை சுமார் 119 கி.மீ வேகத்தில் ஓட்டி சென்றதே ஜான்வியின் உயிரிழப்புக்கு காரணம்.

    எனவே எந்த தவறும் செய்யாமல் கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு ரூ.260 கோடி இழப்பீடு பொருத்தமானது என அந்நாட்டு நீதிமன்றம் கருதியது.

    அகமதாபாத் விமான விபத்திலும் பயணிகள் எந்த தவறும் செய்யவில்லை. இருப்பினும் அவர்களின் உயிருக்கு மதிப்பு ரூ.1 கோடி என்று முடிவுகட்டபடுகிறது. ரூ.1 கோடிக்கும் ரூ.260 கோடிக்கும் இடையே உள்ள இடைவெளி தான் நாம் சிந்திக்க வேண்டிய இடமாகும்.  

    • நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
    • இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக சிறிய ரக விமானம் ஒன்று நடுரோட்டில் சட்டெனத் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நடுரோட்டில் தரையிறங்கிய விமானம் அங்கிருந்த 3 வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

    இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது.
    • வைஷ்ணவி (11), சாயா (7) மற்றும் கரிஷ்மா (9) ஆகிய மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர்.

    மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில்  ரூலி பகுதியில் உள்ள அஹ்ரௌலி கிராமத்தில் மாதா கோயில் அமைந்துள்ளது.

    கோயிலின் பழைய கூரையை இடித்துவிட்டு, அங்கு கோபுரம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று (பிப்ரவரி 9) மதியம் 2 மணியளவில் பணியின்போது எதிர்பாராதவிதமாக கூரை இடிந்து விழுந்தது. 

    கோயிலில் வழிபட வந்திருந்த பக்தர்கள் மீது மேற்கூரை இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி வைஷ்ணவி (11), சாயா (7) மற்றும் கரிஷ்மா (9) ஆகிய மூன்று சிறுமிகள் உயிரிழந்தனர். 

    இந்த விபத்தில் மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 'ரெட் பேர்டு ஏவியேஷன்' நிறுவனத்திற்குச் சொந்தமான Cessna 172 ரக சிறிய பயிற்சி விமானம்
    • எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து எனத் தகவல்

    கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் தனியார் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. விஜயபுரா மாவட்டத்தில் உள்ள பபலேஷ்வர் தாலுகாவிற்குட்பட்ட மங்களூரு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் விமானம் விழுந்து நொறுங்கியது. இரண்டு இருக்கைகள் கொண்ட விமானத்தில் பயிற்சியாளர் மற்றும் ஒரு பயிற்சி விமானி மட்டும் இருந்துள்ளனர். விமானம் விழுவதற்கு முன்பாகவே இருவரும் அதிலிருந்து வெளியேறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    இருப்பினும், இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது 'ரெட் பேர்டு ஏவியேஷன்' நிறுவனத்திற்குச் சொந்தமான Cessna 172 ரக சிறிய பயிற்சி விமானம் என கூறப்படுகிறது. கல்புர்கியில் இருந்து பெலகாவி நோக்கிச் சென்றபோது, எஞ்சினில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    • ராட்டினத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் இருந்தபோது ராட்டினத்தின் பகுதி அவர் தலையில் இடித்தது.
    • விபத்து நடந்த சமயம் மக்கள் சிதறி ஓடியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அரியானா மாநிலம் பரிதாபாத், சூரஜ்குண்ட்-இல் பொருட்காட்சி மேளா நடந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று மேளாவில் ராட்சத ராட்டினம் திடீரென நடுப்பகுதியில் உடைந்து விழுந்தது. ராட்டினம் உயரத்தில் சுற்றிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததால், அதில் இருந்தவர்கள் கீழே தூக்கி வீசப்பட்டனர்.

    இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.

    அவர் ராட்டினத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சியில் இருந்தபோது ராட்டினத்தின் பகுதி அவர் தலையில் இடித்தால் படுகாயமடைந்துய் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    விபத்தில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மேளாவில் ஏராளமான மக்கள் கூடியிருந்த நிலையில் விபத்து நடந்த சமயம் மக்கள் சிதறி ஓடியதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாததே இந்த விபத்திற்குக் காரணம் என்று ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

     

    • கல்லூரி பஸ் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் சோளிங்கர்-வாலாஜா சாலையில் வந்தது.
    • தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    புலிவலம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி பஸ் இன்று காலை 20-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் சோளிங்கர்-வாலாஜா சாலையில் வந்தது.

    பெருங்காஞ்சி ஏரிக்கரை பகுதியில் வந்தபோது எதிரே வந்த தனியார் நிறுவனத்தின் லாரி கட்டுப்பாட்டை இழந்து கல்லூரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் கல்லூரி பஸ்சில் வந்த மாணவிகள், 2 டிரைவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கடந்த சில நாட்களாகவே திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் சமயபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
    • சிறுவாச்சூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவில் சென்று கொண்டிருந்தனர்.

    பெரம்பலூர்:

    சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. ஆண்டின் அனைத்து மாதங்களிலும் நடைபெறும் பல்வேறு விசேஷங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    குறிப்பாக பூச்சொரிதல், தைப்பூசம், சித்திரை திருவிழாக்களின்போது பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம் உள்ளிட்ட நேர்த்திக்கடன்கள் செலுத்துவது வழக்கம்.

    அதேபோல் திருச்சி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும் வந்து சமயபுரம் மாரியம்மனை தரிசித்து செல்கிறார்கள். அந்த வகையில் தற்போது தைப்பூச திருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (31-ந்தேதி) தெப்பத்திருவிழாவும், நாளை (1-ந்தேதி) கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பாடும், அன்று இரவு வட திருக்காவேரி கரையில் ரெங்கநாதரிடமிருந்து சீர் பெறும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாகவே திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் சமயபுரம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    அதேபோல் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகேயுள்ள தொழார் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிந்து நேற்று காலை ஒரு குழுவாக சமயபுரம் நோக்கி பாதயாத்திரையாக புறப்பட்டனர். வழியில் ஆங்காங்கே அமர்ந்து ஓய்வெடுத்தவாறு வந்தனர். அவர்கள் இன்று அதிகாலை பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது சுமார் 5 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மின்னல் வேகத்தில் சென்ற கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பக்தர்கள் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அந்த பகுதி முழுவதும் பெண் பக்தர்கள் மரண ஓலக்குரல் ஒலித்தது.

    இதைப்பார்த்த அந்த குழுவில் இடம்பெற்றிருந்த நடந்து வந்த பக்தர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தனர். அதேபோல் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களும் உடனடியாக நிறுத்தி விட்டு விபத்து நடந்த இடத்திற்கு வந்தனர். இந்த கோர விபத்தில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம், தொழார் குடிக்காட்டை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி மலர்கொடி (வயது 35), திருநாவுக்கரசு மனைவி சசிகலா (47), சுப்ரமணி மனைவி விஜயலட்சுமி (40), சேலம் மாவட்டம், கெங்க வல்லியை சேர்ந்த மருத முத்து மனைவி சித்ரா (40) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் தொழார் குடிக்காட்டை சேர்ந்த பரமசிவம் மனைவி ஜோதிலட்சுமி (57) என்பவர் படுகாயமடைந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காகவும் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சென்னை திரிசூலம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த கவுதம் (24) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் விபத்துகளில் சிக்கி பலியாவது தொடர் கதையாகி வருகிறது. இதுபோன்ற விபத்துகளை தடுக்க பாதுகாப்பு கவசங்கள் அணிய பக்தர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வாங்கினார்.
    • ரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.

    ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்தவர் போய வசுந்தரா (வயது 34). இவரும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு டாக்டரும் காதலித்து வந்தனர். ஆனால் இந்த காதல், திருமணம் வரை செல்லாமல், இடையிலேயே முறிந்தது.

    அந்த டாக்டர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அப்பெண்ணும் ஒரு டாக்டர்தான். கர்னூலில் ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    ஆனால், தனது முன்னாள் காதலரை வேறு ஒரு பெண் திருமணம் செய்ததை போய வசுந்தராவால் ஜீரணிக்க முடியவில்லை. பொறாமை அடைந்த அவர், முன்னாள் காதலரை பழிவாங்கவும், தம்பதிகளை பிரிக்கவும் திட்டமிட்டார்.

    அதற்காக முன்னாள் காதலரின் மனைவிக்கு எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை செலுத்த திட்டமிட்டார். அரசு ஆஸ்பத்திரியில் எச்.ஐ.வி. நோயாளிகளிடம் சேகரிக்கப்பட்ட ரத்தத்தை வாங்கினார். ஆராய்ச்சிக்கு தேவைப்படுவதாக பொய் சொல்லி, அதை பெற்றார்.

    அந்த ரத்தம் அடங்கிய பாட்டிலை பிரிட்ஜில் வைத்து பராமரித்தார்.

    சம்பவத்தன்று, போய வசுந்தராவின் முன்னாள் காதலரின் மனைவி, கல்லூரியில் பணி முடிந்து, மதிய உணவுக்காக வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது, தனக்கு தெரிந்த நர்ஸ் காங்கே ஜோதி (40) என்பவரின் 2 மகன்களை மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்று, பெண் டாக்டரின் ஸ்கூட்டர் மீது மோதச் செய்தார்.

    அவர் நினைத்ததுபோல், பெண் டாக்டர் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனே அவருக்கு உதவுவதுபோல் போய வசுந்தரா நெருங்கினார். ஒரு ஆட்டோவை வரவழைத்தார்.

    ஆட்டோவில் பெண் டாக்டரை ஏற்றியபோது அவருக்கு எச்.ஐ.வி. கலந்த ரத்தத்தை ஊசி மூலம் செலுத்தினார். பெண் டாக்டர் கத்தி கூச்சலிட்டார். அதற்குள் போய வசுந்தரா அங்கிருந்து தப்பிச் சென்றார்.

    இதுபற்றி அவரின் முன்னாள் காதலரான டாக்டர், கர்னூல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    போய வசுந்தரா, நர்ஸ் காங்கே ஜோதி, அவரின் 2 மகன்கள் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    ×