என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhya Pradesh"

    • 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • நேற்றுவரை மூன்று பேர் உயிரிழந்தநிலையில், இன்று இறப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள பகீரத்புராவில், கழிவுநீர் கலந்த குடிநீரைப் பருகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    டிசம்பர் 25 அன்று இந்தூர் நகராட்சி மூலம் விநியோகிக்கப்பட்ட தண்ணீரின் சுவை வித்தியாசமாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பகீரத்புரா குடியிருப்பாளர்கள் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து, பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்றுவரை மூன்று பேர் உயிரிழந்தநிலையில், இன்று இறப்பு எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.

    மூன்றுபேர் உயிரிழந்ததை அடுத்து நேற்று நள்ளிரவில் முதலமைச்சர் மோகன் யாதவ் நகராட்சி மற்றும் பொதுச் சுகாதாரத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்தார். இதன்படி, மண்டல அதிகாரி சாலிகிராம் சித்தோலே மற்றும் உதவிப் பொறியாளர் யோகேஷ் ஜோஷி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பொதுச் சுகாதாரப் பொறியியல் துறை கண்காணிப்புப் பொறியாளர் சுபம் ஸ்ரீவஸ்தவாவும் உடனடியாகப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். 

    இது ஒரு சோகமான நிகழ்வு எனக்குறிப்பிட்டுள்ள அம்மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார். சிகிச்சையில் இருப்பவர்களின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்கும் எனவும் தெரிவித்தார். இதனிடையே இச்சம்பவத்திற்கு அம்மாநில காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 

     

    • புதிதாக போட்ட சாலை பெயர்ந்து வந்ததால் பெண் மந்திரி அதிர்ச்சி.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.

    மத்திய பிரதேச மாநிலம் ரைகான் தொகுதிக்கு உட்பட்ட சாட்னாவில் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநில பெண் மந்திரியான பிரதிமா பக்ரி ஆய்வுக்கான சென்றார்.

    அப்போது அவர் செல்லும் போடி- மங்காரி பகுதியில் சாலை போடப்பட்டிருந்தது. அந்த சாலையில் தரம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தார். உடனடியாக தனது காரில் இருந்து இறங்கினார்.

    நேராக சாலையின் கரையோரம் சென்று தனது காலால் சாலையை மிதித்தார். அப்போது சாலை பெயர்ந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது காலால் மிதிக்க மிதிக்க சாலையோரம் பெயர்ந்து கொண்டே சேதமானது. இதனால் கோபம் அடைந்து, இதுதான் புதிய சாலையின் லட்சணமா என திட்டினார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச்சடங்கு
    • ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தானாகவே தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா?

    மத்தியப் பிரதேசத்தில் 23 வயது பெண் ஒருவர் தனது சொந்த விருப்பப்படி திருமணம் செய்துகொண்டதால், அவரது உருவப்பொம்மையை வைத்து குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்து, அதனை எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் உறவுகள், மரபுகள் மற்றும் சமூக சிந்தனை குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரைச் சேர்ந்த சவிதா குஷ்வாஹா என்ற பெண் வீட்டிலிருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் குடும்பத்தினர் அவரை ஊர்முழுவதும் தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால், போலீசிடம் புகாரளித்துள்ளனர். பல நாட்கள் தேடிய பிறகு, போலீசார் சவிதாவைக் கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு குடும்பத்தினரும் வரவழைக்கப்பட்டனர்.

    போலீசார் சவிதாவை குடும்பத்தினருடன் செல்ல கூறியுள்ளனர். ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த சவிதா, அவர்களுடன் செல்ல விருப்பமில்லை எனவும், தான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், துக்கத்திலும், கோபத்திலும் எடுத்த ஒரு முடிவு இப்போது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.


    சவிதாவின் குடும்பத்தினர் அவரைப்போன்றே ஒரு உருவப்பொம்மையை வடிவமைத்து, அதற்கு இறுதி சடங்குகள் செய்து, அதனை சவப்பெட்டியில் வைத்து மேள, தாளத்துடன் இறுதி ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று எரித்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக ஊர்முழுவதும் அறிவித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை இணையத்தில் பார்த்த பலரும் ஒரு இளம் பெண் தனது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது உண்மையிலேயே குற்றமா? குடும்பம் மற்றும் சமூகத்தின் விதிமுறைகள் ஒருவரின் சொந்த வாழ்க்கையை விட முக்கியமானதாக மாறுகிறதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

    மறுபக்கம் இதுதொடர்பாக பேசியுள்ள சவிதாவின் சகோதரர், "எங்கள் குடும்பத்தை பொறுத்தவரை இது சகோதரியின் இழப்பு மட்டுமல்ல. பல வருட வளர்ப்பு, நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளின் சிதைவு. சவிதா வீட்டில் பாசமாக வளர்க்கப்பட்டார். அவளுடைய ஒவ்வொரு தேவையும், விருப்பமும் பூர்த்தி செய்யப்பட்டது. ஆனாலும், அவள் வீட்டை விட்டு வெளியேறியது குடும்பத்தை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது சவிதாவின் இறுதிச்சடங்கு அல்ல. அவளுடைய எதிர்காலத்திற்கான என் பெற்றோரின் கனவுகளுக்கான இறுதிச்சடங்கு" என தெரிவித்தார்.

    • 12 முதல் 15 வயதுக்குள்பட்ட ஆறு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கும் தற்போது எச்.ஐ.விக்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தலசீமியா என்பது ஹீமோகுளோபின் உற்பத்தியை பாதிக்கும் மரபணு ரத்தக்கோளாறு ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

    அந்த வகையில் மத்தியபிரதேசத்தின் சத்னா, ஜபல்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் உதவியுடன் ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் தலசீமியா நோய்க்கு ரத்தம் செலுத்தி கொண்ட 12 முதல் 15 வயதுக்குள்பட்ட ஆறு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ரத்த வங்கி மூலம் ஏற்றப்பட்ட ரத்தம் வழியேதான் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

    இது குறித்து 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை கடந்த டிசம்பர் 16-ம் தேதி 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது

    அக்குழு தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் தேவேந்திர படேல் மற்றும் ஆய்வக டெக்னீஷியன்களான ராம் பாய் திரிபாதி, நந்தலால் பாண்டே ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், சத்னா மாவட்ட மருத்துவமனையின் சிவில் சர்ஜன் மனோஜ் சுக்லாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    முறையான பதில் அளிக்காத பட்சத்தில் அவர் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கும் தற்போது எச்.ஐ.விக்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முழுமையான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.  

    • அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

    மத்திய வேளாண் அமைச்சரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    உளவுத்துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் ஐ.எஸ்.ஐ.யால் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த எச்சரிக்கைகளால் போபாலில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தற்போதுள்ள பாதுகாப்புக்கு கூடுதலாக மேலும் சில வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இன்று, போபாலில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ், 10க்கும் மேற்பட்ட என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுடன், தற்காப்பு உள்ளிட்டவற்றில் பயிற்சி பெற்ற மொத்தம் 55 பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புனே:

    சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ந்டந்து வருகிறது.

    இந்நிலையில், புனேவில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரீகர் பரத் 39 ரன்னும், நிதிஷ் ரெட்டி 25 ரன்னும் எடுத்தனர்.

    மத்திய பிரதேச அணி சார்பில் ஷிவம் ஷுக்லா 4 விக்கெட்டும், திரிபுரேஷ் சிங் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய மத்திய பிரதேச அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. நிதிஷ்குமார் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை நிதிஷ் ரெட்டி பெற்றுள்ளார்.

    அடுத்து இணைந்த ரிஷப் சௌகான்-ராகுல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரிஷப் சௌகான் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

    இறுதியில், மத்திய பிரதேச அணி 17.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணி வெற்றியைப் பதிவுசெய்தது.

    • ரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடந்து வருகிறது.
    • வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    அந்த வகையில் ஆளும் பாஜக தலைமையிலான அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை வேண்டுமென்றே நீக்குவதாக கூறி SIRக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் காங்கிரஸ் இளைஞரணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் தடுப்புகளில் ஏறியதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இதேபோன்ற ஒரு போராட்டம் உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கேயும் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றதால் குழப்பமான சூழல் நிலவியது.

    SIR-க்கு எதிராக காங்கிரஸ் வாக்கு திருடனே, நாற்காலியை விட்டு வெளியேறு என்ற தலைப்பில் நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

    வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களாக ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக SIR நடைபெற்ற பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
    • பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

    மத்தியப் பிரதேசத்தின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி ஊழியர்கள் சங்கத்தின் மாகாணத் தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது,"ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்குக் கொடுக்கும் வரை அல்லது அவருடன் உறவை வளர்த்துக் கொள்ளும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதால், வர்மாவின் பேச்சை பிராமண அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. சந்தோஷ் வர்மாவின் கூற்று ஆபாசமானது, சாதிய ரீதியானது மற்றும் பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

    விரைவில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பிராமண சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என அகில இந்திய பிராமண சங்கத்தின் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

    • வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி
    • ஏற்றுமதி குறைவால், உள்நாட்டில் இருப்பு கூடி, மண்டிகளில் குறைந்த விலைக்கு வாங்கப்படுவதாக விவசாயிகள் வேதனை.

    விலைச்சரிவால் அடிப்படை உற்பத்தி மற்றும் போக்குவரத்து செலவை கூட எடுக்க முடியவில்லை என விரக்தியில், வெங்காயத்திற்கு விவசாயிகள் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

    மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தின் தம்னார் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுதான் இது. கிராமத்தில் உள்ள தகன மைதானத்தில் ஒரு பாடையில் வெங்காயத்தை கொட்டி, அதற்கு பூமாலை போட்டு, மனிதருக்கு இறுதி சடங்கு செய்வது போல அனைத்து காரியங்களையும் செய்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தின் மால்வா மற்றும் நிமர் பகுதிகள் இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், வெங்காயத்திற்கு சரியான விலை கிடைக்காததால் இந்த நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மண்டிகளில் வெங்காயம் கிலோவுக்கு 1 முதல் 10 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். சிலர் 1 -2 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.  

    நியாயமான விலை கிடைக்காததால் இந்த வெங்காய ஊர்வலம் நடத்தப்பட்டது. எங்களுக்கு நிறைய நஷ்டம் ஆகியுள்ளது. அரசு இன்னும் விழித்துக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? என இறுதிச் சடங்கில் பங்கேற்ற விவசாயி பத்ரி லால் தாக்கட் தெரிவித்தார்.

    "இந்த நூதன போராட்டம் தொடர்பாக பேசிய மற்றொரு விவசாயி, "வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. இந்த விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி. அதிக கனமழையால் இரண்டாவது பயிரும் வீணானது. இப்போது வெங்காயமும் காய்ந்துவிட்டது. அதனால்தான் இறுதி ஊர்வலம் நடத்தினோம். எங்கள் செலவை ஈடுகட்டும் விலையைக்கூட அரசு வழங்கவில்லை" என தெரிவித்தார்.

    வெங்காயத்தின் மீதான நீண்டகால வரியால்தான் சர்வதேச சந்தைகளில் இந்தியா போட்டியிட முடியவில்லை எனவும், இதன் விளைவாக ஏற்றுமதி சரிந்து உள்நாட்டில் இருப்பு அதிகமாவதால், மண்டியில் குறைவான விலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த இறுதி ஊர்வலம் வெறும் ஆரம்பம்தான் எனவும், நியாயமான விலை உறுதி செய்யப்படாவிடில் பிராந்தியம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர். 

    • பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.
    • இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்தியாவின் முதல் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாள் கடந்த 31 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. வல்லபாய் படேலின் பிறந்தநாள் தேசிய ஒருமைப்பாட்டு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

    மத்தியப் பிரதேசத்தில் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது பாஜக எம்.பி கணேஷ் சிங் கிரேனில் ஏறி அம்பேத்கர் சிலைக்கு மாலை போட முயன்றார்.

    அப்போது அவர் கிரேனில் சிக்கிக் கொண்டதால் ஆத்திரத்தில் ஆப்ரேட்டரை அடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை
    • மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    மத்தியப் பிரதேசத்தில் நிலத் தகராறில் பாஜக தலைவரும் அவரது ஆதரவாளர்களும் ஒரு விவசாயியை கொடூரமாகக் கொலை செய்தனர்.

    குணா மாவட்டம், கணேஷ்புரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் ஸ்வரூப் (40 வயது). இவரின் நிலத்தை கேட்டு உள்ளூர் பாஜக பூத் கமிட்டி தலைவர் மகேந்திரா நாகர் தகராறு செய்து வந்தார். ஆனால் ராம் ஸ்வரூப் அதற்கு உடன்படவில்லை. 

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், பாஜக தலைவர் மகேந்திரா நாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விவசாயி ராம ஸ்வரூப்பை கம்பிகள் மற்றும் தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கினர்.

    மேலும் அவர்கள் வந்திருந்த தார் ஜீப்பை ராம் ஸ்வரூப் மீது ஏற்றினர். இதில், படுகாயமடைந்த ராம் ஸ்வரூப்பை கிராம மக்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றபோது துப்பாக்கிகளை காட்டு மிரட்டி சுமார் ஒரு மணி நேரம் அவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 

    முன்னதாக தந்தை ராம் ஸ்வரூப்பை காப்பாற்ற ஓடிவந்த அவரது மனைவி மற்றும் 2 மகள்களும் தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டனர்.

    இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள ராம் ஸ்வரூப்பின் மகள், "என் தந்தையைக் காப்பாற்ற நான் சென்றபோது, அவர்கள் என்னைத் தள்ளி கீழே தள்ளிவிட்டு, என் மீது அமர்ந்து என் உடையைக் கிழித்தனர்.

    எங்களை அச்சுறுத்தத் துப்பாக்கியால் சுட்டனர். என் தந்தை மீது ஜீப்பை ஏற்றினர். அவர் அலறியபோதும் அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததால் யாரும் உதவத் துணியவில்லை" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

     

    மகேந்திரா நாகர் நீண்டகாலமாக சிறு விவசாயிகளை அச்சுறுத்துவதையும் அவர்களின் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்ததாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் மகேந்தர் நாகர், அவரது மகன்கள், மனைவி உள்ளிட்ட 14 பேர் மீது கொலை மற்றும் பெண்களுக்கு மானபங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையில், மகேந்திரா நாகரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கக் கோரி மூத்த தலைவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதாக குணா மாவட்ட பாஜக தலைவர் தர்மேந்திர சிகார்வார் தெரிவித்துள்ளார்.  

    • பள்ளி மாணவிகள் மாணவிகள் மதுபானம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது.
    • விற்பனையாளர் கேள்வியின்றி அவர்களுக்கு மதுபானம் வழங்கியது கேள்விகளை எழுப்பியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடையில் மாணவிகள் தங்கு தடையின்றி அரசு கடையில் மதுவாங்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் வழி தவறி செல்லும் அதிர்ச்சி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதை பார்க்க முடிகிறது. சில மாணவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாவது, சிலர் மற்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சம்பவங்களும் நடந்துள்ளன.

    பள்ளி மாணவர்கள் தவறான வழிக்கு செல்லக்கூடாது என அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வழிப்புணர்களை ஏற்படுத்தி வருகிறது. வயது நிரம்பாதவர்கள் போதைப்பொருட்கள் வழங்கினால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. விற்பனையாளர்களை தண்டிக்க சட்டமும் வழிவகை செய்கிறது.

    இந்த நிலையில்தான், மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி சீருடையில் மாணவிகள் மதுபானம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மாநிலத்தின் சட்டம் மற்றும் சமூக வழிப்புணர்வு குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது.

    மண்ட்லா மாவட்டத்தில் உள்ள நைன்பூரில் மாணவிகள் அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்குகின்றனர். இதில் என்ன அவலம் என்றால், கடைக்காரர் எந்தவித கேள்வியின்றி அவர்களுக்கு மதுபானம் வழங்கியதுதான்.

    சமூக வலைத்தளங்களில் பரவியதால், உள்ளூர் அதிகாரிகள் தர்ம சங்கடத்திற்கு ஆளாகியுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், துணை கலெக்டர், தாசில்தான், உள்ளூர் போலீசார் அந்த மதுபான கடைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அதிகாரிகள் வீடியோவை பரிசோதனை செய்ததில், விற்பனையாளர் மதுபானம் வழங்கியது உறுதிப்படுத்தப்பட்டது. இது பொது உரிமம் நிபந்தனைகள் மீறுவதாகும். மதுபான சட்டத்தின்கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

    இதுதொடர்பாக கலால்துறை விரிவான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி துணை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    அந்த மாணவிகள் மது அருந்தினரா? அல்லது யாருக்காவது வாங்கி சென்றார்களா? என்ற கோணத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    ×