என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Reservation"

    • போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
    • பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

    மத்தியப் பிரதேசத்தின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி ஊழியர்கள் சங்கத்தின் மாகாணத் தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது,"ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்குக் கொடுக்கும் வரை அல்லது அவருடன் உறவை வளர்த்துக் கொள்ளும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதால், வர்மாவின் பேச்சை பிராமண அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. சந்தோஷ் வர்மாவின் கூற்று ஆபாசமானது, சாதிய ரீதியானது மற்றும் பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

    விரைவில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பிராமண சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என அகில இந்திய பிராமண சங்கத்தின் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

    • பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.
    • காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.

    தெலங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் இன்று பந்த் தொடங்கியது. இந்த பந்த் நடவடிக்கைக்கு ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பந்த் நடவடிக்கையால் தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.

    உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.

    தெலுங்கானா அரசின் அரசாணைக்கு அக்டோபர் 9ம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

    • இன்னும் கூட ஜாதி என்னும் சாத்தான் நம் மண்டையில் இருந்து ஆட்டிப்படைத்து வருகிறது.
    • அனைத்து தரப்பு மக்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் நாடு வளரும். அதற்கு இடஒதுக்கீடு தேவை

    இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்ற வாதத்தை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன் என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியுள்ளார்.

    தனியார் கல்லூரியில் மாணவர்கள் உடனான கலந்துரையாடலில் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இவ்வாறு தெரிவித்தார்.

    கல்லூரியில் நடைபெற்ற அரசியலமைப்பு தினக் கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்று பேசிய ஆனந்த் வெங்கடேஷ், " இன்னும் கூட ஜாதி என்னும் சாத்தான் நம் மண்டையில் இருந்து ஆட்டிப்படைத்து வருகிறது. இடஒதுக்கீடு நம் நாட்டிற்கு தேவை. இங்கு அனைவரும் சமமாக ஆகும் வரை இடஒதுக்கீடு தொடரவேண்டும். இடஒதுக்கீட்டால் தரம் கெடுகிறது என்ற வாதத்தை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் வாய்ப்பு கொடுத்தால் நாடு வளரும். அதற்கு இடஒதுக்கீடு தேவை" என்று தெரிவித்தார்.

    • உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.
    • பி.ஆர்.கவாய் அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி பேசி வருகிறார்.

    கடந்த மே மாதம் உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றத்தில் இருந்து அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தி பேசி வருகிறார்.

    இந்நிலையில், உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஊழியர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு இடஒதுக்கீடு நடைமுறையை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய். அமல்படுத்தியுள்ளார்

    பதிவாளர், சீனியர் தனி உதவியாளர், நூலக உதவி மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களில் பட்டியலின பிரிவினருக்கு 15%, பழங்குடியினர் பிரிவினருக்கு 7.5% பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

    • ரெயில் புறப்படும் 8 மணி நேரத்திற்கு முன் பயணிகள் அட்டவணை வெளியிடப்படும்.
    • இதனால் பயணிகளுக்கு ஏற்படும் கடைசிநேர பதற்றம் தவிர்க்கப்படும் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    மத்திய ரெயில்வே வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ரெயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்த பயணிகளின் அட்டவணை தயாரித்து வெளியிடப்படுகிறது. இது பயணிகளுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தியதாக கூறப்பட்டது. இந்த நடைமுறையை மாற்றி ரெயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன் பயணிகளின் அட்டவணையை தயாரிக்க ரெயில்வே வாரியம் ஆலோசனை வழங்கியது.

    மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, எந்த இடையூறும் இல்லாதவாறு இதை படிப்படியாக செயல்படுத்துமாறும் ரெயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நடவடிக்கை மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் தங்களுடைய டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.

    அவர்களுக்கு ஏற்படும் கடைசிநேர பதற்றமும் தவிர்க்கப்படும். தொலைதூர பயணிகள், புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பயனளிக்கும். காத்திருப்போர் பட்டியல் உறுதிபடுத்தப்படவில்லை என்றால் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்வதற்கு இந்த நடைமுறை மிகவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

    • காடுவெட்டி குரு இருந்திருந்தால் நானும் மற்றவர்களைப் போல் மேடைக்கு கீயே தம்பிகளோடு அமர்ந்திருப்பேன்.
    • தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சொந்தங்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    12 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் இந்த மாநாட்டில் என் சகோதரன் காடுவெட்டியார் இல்லையே என்பது வருத்தம்.

    காடுவெட்டி குரு இருந்திருந்தால் நானும் மற்றவர்களைப் போல் மேடைக்கு கீயே தம்பிகளோடு அமர்ந்திருப்பேன்.

    தமிழ்நாடு மட்டுமல்ல வெளிநாடு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த சொந்தங்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்துதான் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நமது வன்னிய சமூகத்தினர் 140 நாடுகளிலே வாழ்கின்றனர்.

    வன்னியர்களின் வரலாறு இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை. நாகசாமி படையாட்சி, அஞ்சலை அம்மாள், ஐயா ஆனைமுத்து பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இடஒதுக்கீடு என்றாலே பாமக மற்றும் ராமதாஸ் பங்களிப்பபை மறக்க முடியாது.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருந்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க காதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.

    பலமுறை ஆட்சிக்கு வருவதற்கு உதவிய வன்னியர் சமுதாயத்திற்கு திமுக திரோகம் செய்கிறது. கருணாநிதி இருந்திருந்தால் நிச்சயம் சமூக நீதி அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இருப்பார்.

    நல்ல கல்வியை கொடுத்தால் இளைஞர்கள் நல்ல வேலைக்கு போவார்கள். மதுவுக்கு ஏன் அடிமையாக போகிறார்கள்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அவ்வளவுதான் முழு விளையாட்டு. மனுதாரரும் அதே விளையாட்டை விளையாடுகிறார்
    • ஏன் ஒரு குறிப்பிட்ட குடும்பம் அல்லது குழுவிற்கு மட்டும் இருக்க வேண்டும்?

    ரெயில் பெட்டியில் இடம்பிடித்தவர்கள் மற்றவர்கள் உள்ளே வருவதை விரும்பாததைப் போல் நாட்டில் இடஒதுக்கீடு மாறிவிட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மகாராஷ்டிராவில் உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் மனுவை இன்று  நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தைத் தெரிவித்தது.

    மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், மகாராஷ்டிரா அரசு அமைத்த ஆணையம், அரசியல் ரீதியாக பின்தங்கியவர்களா இல்லையா என்பதைக் கண்டறியாமல் உள்ளாட்சித் தேர்தல்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதாக வாதிட்டார்.

    அப்போது பேசிய நீதிபதி சூர்ய காந்த், இந்த நாட்டில் இடஒதுக்கீடு ரெயில்வே வணிகத்தை போலவே மாறிவிட்டது. ரெயில் பெட்டியில் ஏறியவர்கள் வேறு யாரும் உள்ளே வருவதை விரும்ப மாட்டார்கள். அவ்வளவுதான் முழு விளையாட்டு. மனுதாரரும் அதே விளையாட்டை விளையாடுகிறார் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் சங்கரநாராயணன், அரசியல் ரீதியாக பின்தங்கிய நிலை என்பது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையிலிருந்து வேறுபட்டது. ஓபிசிக்களை அரசியல் ரீதியாக பின்தங்கியவர்களாகக் கருத முடியாது. இடஒதுக்கீட்டின் நோக்கத்திற்காக, ஓபிசிகளுக்குள், அரசியல் ரீதியாக பின்தங்கிய மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு பதிலளித்த நீதிபதி, அனைவரையும் உள்ளடக்கிய கொள்கையைப் பின்பற்றும்போது மாநிலங்கள் பல்வேறு வகுப்புகளை அங்கீகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

    அதில் சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்புகள், அரசியல் ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் இருக்கும். அவர்களுக்கு ஏன் சலுகைகள் மறுக்கப்பட வேண்டும்? அது ஏன் ஒரு குறிப்பிட்ட குடும்பம் அல்லது குழுவிற்கு மட்டும் இருக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து இந்த மனு மீது மகாராஷ்டிர அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  

    • மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் ஓபிசி பிரிவில் வருகின்றனர்.
    • முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டை 4 சதவீதத்தில் இருந்து இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக அதிகரிக்கும்படி ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

    கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவரான ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்து. அந்த அறிக்கையை கடந்த 2024 பிப்ரவரியில் முதலமைச்சர் சித்தராமையாவிடம் ஜெயபிரகாஷ் ஹெக்டே வழங்கினார்.

    இந்த அறிக்கை நேற்று முன்தினம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீது வரும் 17-ந்தேதி நடைபெறும் சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடைபெற உள்ளது

    இந்நிலையில் ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க அந்த அறிக்கையில் சிபாரிசு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    கணக்கெடுப்பின்படி,  மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) மக்கள் தொகை 4.18 கோடியாகவும், பட்டியல் சாதியினரின் (SC) மக்கள் தொகை 1.09 கோடியாகவும், பட்டியல் பழங்குடியினரின் (ST) மக்கள் தொகை 42.81 லட்சமாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்படி மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவீதம் பேர் ஓபிசி பிரிவில் வருகின்றனர். எனவே அவர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ஓபிசி-களுக்கான இடஒதுக்கீட்டை தற்போதைய 31 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக உயர்த்த ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. இந்த பிற்படுத்தப்பட்ட ஓபிசி சமுதாயங்கள் ஒவ்வொரு வர்க்கமாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிக்க ஆணையம் பரிவித்துள்ளது.

    இதன்மூலம் ஓபிசி பிரிவில் இருக்கும் 2 முக்கிய சமுதாயங்களான லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமுதாயங்களின் இடஒதுக்கீடும் தலா 3 சதவீதம் அதிகரிக்கும். இந்த இரண்டு சமூகங்களை சேர்த்தவர்களே கர்நாடக அரசியலில் கோலோச்சி வருவது குறிப்பிடத்தக்கது. லிங்காயத் சமூகம் மாநிலத்தில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது.

    மேலும் மாநிலத்தில் 75 லட்சத்து 27 ஆயிரம் பேர் (18.08 சதவீதம்) உள்ள முஸ்லிம் மக்களை பிறப்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவும் ஆணையம் சிபாரிசு செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் தற்போது முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவர்களின் எண்ணிக்கையை பொறுத்து 4 சதவீதத்தில் இருந்து இடஒதுக்கீட்டை 8 சதவீதமாக அதிகரிக்கும்படி ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது.

    மேற்கூறிய இந்த பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டால் கர்நாடகாவில் ஏற்கனவே உள்ள இடஒதுக்கீடுகளுடன் சேர்த்து மாநிலத்தின் மொத்த இடஒதுக்கீடு 85% ஆக உயரும். 

    • முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.
    • எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.

    கர்நாடகாவில் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரசு டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசோதா நகலை கிழித்து சபாநாயகர் மீது வீசி பாஜக எம்எல்ஏக்கள் வீசி அமளியில் ஈடுபட்டனர். இதனால் 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத ரீதியான இடஒதுக்கீடு அரசியலமைப்புக்கு எதிரானது என்று தெரிவித்தார்.

    முஸ்லிம்களுக்கு கர்நாடக அரசு வழங்கிய 4 சதவீத இடஒதுக்கீட்டை முன்வைத்து பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.

    குறிப்பாக இந்த இடஒதுக்கீடு தொடர்பாக சமீபத்தில் பேசிய கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார், தேவைப்பட்டால் அரசியலமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று பேசியிருந்தார்.

    இந்த பாயிண்டை பிடித்த ஜேபி நட்டா, காங்கிரஸ் அரசியலமைப்பை மாற்ற முயற்சிக்கிறது. மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று பாபாசாகேப் அம்பேத்கர் தெளிவாகக் கூறியுள்ளார். ஆனால் காங்கிரஸ் அரசாங்கம் தெற்கில் முஸ்லிம்களுக்கு ஒப்பந்தங்களில் நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளது.

    கர்நாடக துணை முதல்வர் அங்குள்ள சபையில், தேவைப்பட்டால், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறினார். அங்கு அரசியலமைப்பை துண்டு துண்டாக கிழிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதில் சொல்ல வேண்டும் என்று சீறினார்.

    மேலும் இதுதொடர்பாக அவையில் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, இந்திய அரசியலமைப்பில் மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு இருக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், அரசியலமைப்புச் சட்டப் பதவியில் அமர்ந்து, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்படும் என்று கூறும்போது, அதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தனது கருத்துக்கு டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 'நான் அரசியலமைப்பை மாற்றுவேன் என்று ஒருபோதும் சொல்லவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளின்படி திருத்தங்கள் இருக்கும் என்று பொருள்படவே கூறினேன்.

    இயல்பாக பேசியதை வைத்துக்கொண்டு பாஜக பொய்ப் பிரசாரம் செய்கிறது. எனது வார்த்தைகளை தவறாக சித்தரித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். நான் 36 வருடங்களாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறேன். எனக்கும் பொது அறிவு இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில், நான் நட்டாவை விட விவேகமான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எங்கள் கட்சி ஒரு தேசிய கட்சி. எங்கள் கட்சிதான் இந்த நாட்டுக்கு அரசியலமைப்பை கொண்டு வந்தது என்று தெரிவித்தார்.  

    • அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.
    • ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா?

    அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு எடுத்த முடிவு குறித்த விவாதம் அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் அரசியலமைப்புச் சட்டம் மத அடிப்படையிலான ஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார்.

    பெங்களூரில் ஆர்எஸ்எஸ் அகில பாரதிய பிரதிநிதி சபா விழாவில் இன்று கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் ஹோசபாலே பேசினார்.

    அப்போது, "பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதைச் செய்பவர் நமது அரசியலமைப்பின் சிற்பியான அம்பேத்கருக்கே எதிரானவர்.

    முஸ்லிம்களுக்கு மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவால் மேற்கொள்ளப்பட்ட முந்தைய முயற்சிகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார்.

    மகாராஷ்டிராவில் 17 ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை குறித்த சர்ச்சை பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஹோசபாலே, ஔரங்கசீப் போன்றோர் சின்னமாக மாற்றப்பட்டனர். ஆனால் சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட அவரது சகோதரர் தாரா ஷிகோ போன்றோர் மறக்கப்பட்டனர். இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிராகச் சென்றவர்கள் சின்னங்களாக மாற்றப்பட்டனர்.

    ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடியவர்கள் மட்டும்தான் சுதந்திரப் போராளிகளா, படையெடுப்பாளர்களை எதிர்த்தவர்கள் சுதந்திரப் போராளிகள் கிடையாதா? என்று கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து பேசிய வர படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று தெரிவித்தார்.

    • சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர்.
    • ஒவ்வொருவராக தூக்கிச் சென்று சபையிலிருந்து வெளியேற்றினர்.

    கர்நாடக சட்டமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காக எதிர்க்கட்சியான பாஜகவைச் சேர்ந்த 18 உறுப்பினர்களை 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் யு.டி.காதர் உத்தரவிட்டுள்ளார்.

    அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு தரும் மசோதா இன்று கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்எல்ஏக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். மேலும் அரசியல்வாதிகள் மீதான ஹனி டிராப் மோசடி முயற்சிகள் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர். 

    சில பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர். மேலும் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி அவர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து சட்டமன்ற விதி 348 இன் கீழ், அவை நடவடிக்கைகளை சீர்குலைத்ததற்காகவும், உத்தரவைப் பொருட்படுத்தாமல், ஒழுங்கற்று மரியாதைக் குறைவான முறையில் நடந்து கொண்டதற்காகவும் 18 பாஜக எம்எல்ஏக்களை 6 மாத காலத்திற்கு அவையில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

    இடைநீக்கம் செய்யப்பட்டவர்களின் பெயர்களை சபாநாயகர் கூறிக் கொண்டிருந்தபோது, அவர்கள் வெளியேறாததால், பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை ஒவ்வொருவராக தூக்கிச் சென்று சபையிலிருந்து வெளியேற்றினர்.

    • ஏற்கனவே அரசு டெண்டர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருந்து வருகிறது.
    • பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர்.

    அரசு ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்போது கடும் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு மசோதா நகலை கிழித்து சபாநாயகர் யுடி காதர் மீது வீசி பரபரப்பை கிளப்பினர்.

    கடந்த மாதம், முஸ்லிம் எம்எல்ஏக்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி முதல்வர் சித்தராமையாவிடம் ஒரு மனுவை சமர்ப்பித்தது. இதை ஏற்றுக்கொண்ட முதல்வர் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசு இதுதொடர்பாக புதிய மசோதாவை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்துள்ளது.

    ஏற்கனவே அரசு டெண்டர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இருந்து வரும் நிலையில் அதோடு சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடும் சேர்க்கப்பட்டுள்ளதில் எந்த தவறும் இல்லை என அரசு வாதிடுகிறது. ஆனால் எதிர்க்கட்சியான பாஜக, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று போராடி வருகிறது.

     

    இந்த நிலையில்தான் இன்று தாக்கல் செய்யப்பட்ட மசோதா சட்டமன்றத்தில் பெரும்பான்மையாக உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதரின் இருக்கை முன்பு திரண்டு கோஷமிட்டனர்.

    அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் வழங்கும் மசோதா நகலை கிழித்து அவர் மீதுவீசினர். சில பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் அமர்ந்திருந்த இருக்கை அருகே சென்று மசோதா நகலை கிழித்து அவர் மீது வீசினர். இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் பாஜக எம்எல்ஏக்களை வலுக்கட்டமையாக அவையை விட்டு வெளியேற்றும் சூழல் ஏற்பட்டது.

    ×