என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாராஷ்டிரா"

    • அஜித் பவாரின் மகனும் இந்த சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.
    • போதுமான தூரம் இல்லை என்றாலும், தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.

    அஜித் பவார் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை எதிர்த்து சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதாலும், பாஜக உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக கடுமையாக விமர்சித்ததாலும் அவரின் மரணத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பின.

    மேலும் பெரிய சேதங்களை தாங்கும் விமானத்தின் கருப்பு பெட்டி இந்த விபத்தில் சேதமடைந்ததாக கூறப்பட்டதால் சந்தேகம் மேலும் வலுத்தது. அஜித் பவாரின் மகனும் இந்த சந்தேகத்தை எழுப்பியிருந்தார்.

    இந்த சூழலில் இந்த விபத்து குறித்து விமான விபத்து விசாரணை வாரியம் (AAIB) தற்போது தனது முதற்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    அறிக்கைபடி, விபத்து நடந்த சமயத்தில் பாராமதி பகுதியில் மோசமான வானிலை காரணமாக பார்வை தூரம் மிகக் குறைவாக இருந்துள்ளது. விமானங்கள் தரையிறங்குவதற்கு குறைந்தபட்சம் 5,000 மீட்டர் கண்பார்வை தூரம் தேவை. ஆனால், விபத்தின் போது இது மிகவும் குறைவாக இருந்துள்ளது.

    விமானம் தரையிறங்கும் முன் விமானிகள் பார்வை தூரம் குறித்துக் கேட்டபோது, கட்டுப்பாட்டு அறையிலிருந்து 3,000 மீட்டர் இருப்பதாகப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது தரையிறங்குவதற்குப் போதுமான தூரம் இல்லை என்றாலும், தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    விபத்து நடந்த அன்று கட்டுப்பாட்டு அறையை ஒரு பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த தரைவழி பயிற்றுவிப்பாளர் இயக்கியுள்ளார். அவரே விமானிகளுடன் தொடர்புகொண்டு தரையிறங்க அனுமதி அளித்துள்ளார்.

    பாராமதி விமான நிலைய ஓடுதளம் கடைசியாக 2016-ல் தான் சீரமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடுதளத்தில் உள்ள அடையாளக் குறிகள் மங்கிப் போயிருந்தன. மேலும், ஓடுதளத்தில் ஜல்லிக்கற்கள் சிதறிக் கிடந்ததையும் விசாரணைக்குழு கண்டறிந்துள்ளது.

    இந்த விபத்தில் காக்பிட் குரல் பதிவுக்கருவி சேதமடைந்துள்ளது. தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் உதவியுடன், அதில் உள்ள தரவுகளைப் பதிவிறக்கம் செய்து ஆய்வு செய்ய AAIB திட்டமிட்டுள்ளது.

    கட்டுப்பாடற்ற விமான நிலையங்களில் பாதுகாப்புத் தரநிலைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என AAIB பரிந்துரைத்துள்ளது.

    விபத்துக்கான மூலக் காரணம் மற்றும் உண்மைகளை வெளிக்கொண்டு வர முழு அளவிலான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக AAIB தெரிவித்துள்ளது. 

    • தவறான புரிதலால் ஏற்பட்ட புகார் என குற்றம்சாட்டப்பட்டவர் வாதிட்டார்.
    • உயர் நீதிமன்ற ஊழியர்களின் மருத்துவ நல நிதிக்கு செலுத்த வேண்டும்

    மகாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த 52 வயது தொழிலதிபர் ஒருவர் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மடிக்கணினி வாங்கித் தர மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    2024 ஆகஸ்ட் மாதம், 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி, தொழிலதிபரான தனது தாய்மாமன் மீது பாலியல் புகார் அளித்தார்.

    பள்ளிக்குச் செல்லும்போது அவர் தவறான குறுஞ்செய்திகள் அனுப்பியதாகவும், ஒருமுறை தன்னை தவறாகத் தொட்டு முத்தம் கேட்டதாகவும் அந்தச் சிறுமி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையின் போது, இது ஒரு தவறான புரிதலால் ஏற்பட்ட புகார் என்றும், தற்போது குடும்ப உறுப்பினர்களிடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரும் வழக்கை மேலே தொடர விருப்பமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.ஆர். போன்ஸ்லே தலைமையிலான மும்பை உயர்நீதிமன்ற அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து அவர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்தனர்.

    மேலும் தங்கள் உத்தரவில், பாதிக்கப்பட்ட சிறுமி மேற்படிப்புக்கு செல்ல உள்ளதால், அவருக்கு ஆப்பிள் மேக்புக் அல்லது அதற்கு இணையான ஒரு உயர்தர லேப்டாப்பை ரூ.1.5 லட்சம் அபராதத் தொகையில் இருந்து வாங்கித் தர வேண்டும்.

    லேப்டாப் வாங்கியது போக மீதமுள்ள தொகையை உயர் நீதிமன்ற ஊழியர்களின் மருத்துவ நல நிதிக்கு செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    • தீவிர வெப்பத்திலும் அழியாத கருப்புப் பெட்டி எப்படி சேதமடைந்தது.
    • தெலுங்கு தேசம் கட்சிக்கும் நிறுவனத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

    மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ம் தேதி நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவருடன் மேலும் நால்வர் உயிரிழந்தனர்.

    அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளாட்சி தேர்தலில் பாஜவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். மேலும் அவர் உடைந்த தேசியவாத காங்கிரசை ஒன்றிணைக்க இருந்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

    உள்ளாட்சிகளில் பாஜக ஊழல் செய்வதாக அஜித் பவார் பிரசாரங்களில் விமர்சித்து வந்தார். எனவே அவரின் மரணம் விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட ஒன்றா என எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி வந்தன.

    இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து அண்மையில் மீட்கப்பட்ட கருப்பு பெட்டி தீயில் கருகி சேதமடைந்திருந்தது. கருப்பு பெட்டியில் பதிவாகி உள்ள தகவல்களை வைத்தே விமான விபத்து எப்படி நடந்தது என்பதை கண்டறிய முடியும்.


    இந்த விபத்தில் சதிச் செயல் இருக்கலாம் என்று பலரை போலவே அஜித்பவாரின் மருமகனும் எம்.எல்.ஏவுமான ரோஹித் பவார் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வருகிறார்.

    தீவிர வெப்பத்திலும் அழியாத கருப்புப் பெட்டி எப்படி சேதமடைந்தது என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    விபத்துக்குள்ளான விமானத்தின் மதிப்பு ரூ.35 கோடி மட்டுமே, ஆனால் அது ரூ.210 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்பதை ரோஹித் பவார் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதன் பின்னணியில் உள்ள நிதி நோக்கங்கள் குறித்து விசாரணை தேவை என அவர் கோரியுள்ளார்.

    விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய வி.எஸ்.ஆர் நிறுவனத்திற்கும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ரோஹித் குற்றம் சாட்டியுள்ளார்.

    விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் வரும் விமான போக்குவரத்து இயக்குனரகமான DGCA அதிகாரிகள் இந்த நிறுவனத்திற்கு சாதகமாக செயல்பட வாய்ப்புள்ளது.

    எனவே விசாரணை முடியும் வரை அமைச்சர் பதவியில் இருந்து ராம் மோகன் நாயுடு விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு ரோஹித் பவார் விரிவான கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். 

    • மராத்தாக்களுக்கு 21% மற்றும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கியது.
    • இந்த முடிவை ரம்ஜான் பரிசு என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

    இந்நிலையில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 சதவீத இடஒதுக்கீட்டை செல்லாது என அறிவித்து மகாராஷ்டிரா அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக, அப்போதைய காங்கிரஸ்-என்சிபி கூட்டணி அரசு அவசரச் சட்டம் மூலம் இந்த 5% இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது.

    2014 தேர்தலுக்குப் பிறகு பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த அவசரச் சட்டம் சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் அந்த அவசரச் சட்டம் காலாவதியானது.

    மேலும், மராத்தாக்களுக்கு 21% மற்றும் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கியது, உச்ச நீதிமன்றம் விதித்துள்ள 50% இடஒதுக்கீடு உச்சவரம்பை மீறுவதாகக் கூறி மும்பை உயர்நீதிமன்றமும் இதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.

    இந்நிலையில் நீண்ட காலமாக நீடித்து வந்த இந்த சட்ட ரீதியான இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அந்த இடஒதுக்கீடு இனி செல்லாது என்பதை அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    பாஜக அரசின் இந்த முடிவை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி வர்ஷா கெய்க்வாட் "ஒருபுறம் அனைவருக்குமான வளர்ச்சி என்று பேசிக்கொண்டு, மறுபுறம் பின்தங்கிய சமூகத்தினரின் உரிமைகளைப் பறிப்பது இந்த அரசின் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

    ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் இம்தியாஸ் ஜலீல், இந்த முடிவை ரம்ஜான் பரிசு என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.   

    • ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.
    • கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.

    மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ. 400 கோடி கொள்ளை சமைப்பவத்தில் அதிர்ச்சி உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    சந்தீப் பாட்டில் என்ற லாரி ஓட்டுநர், கடந்த அக்டோபர் 22 அன்று கர்நாடகாவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு செல்லாத 2000 ரூபாய் நோட்டுகளாக ரூ.400 கோடியைக் கொண்டு சென்றபோது, தன்னை ஏழு பேர் கொண்ட கும்பல் தாக்கி, பணத்தைக் கொள்ளையடித்ததாக போலீசில் புகார் அளித்தார்.

    சந்தீப் பாட்டில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மகாராஷ்டிர போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு பேரைக் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சந்தீப் குறிப்பிட்ட பயண பாதை, சம்பவ நடந்ததாகச் சொல்லப்பட்ட நேரம், அவரது செல்போன் அழைப்பு விவரங்கள் ஆகியவற்றில் பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

    எதுவுமே அவர் சொன்ன விவரங்களுடன் ஒத்துப்போகவில்லை. விரிவான விசாரணைக்கு பிறகு, அப்படி ஒரு கொள்ளைச் சம்பவமே நடக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    நேற்று இந்த வழக்கை விசாரித்த மகாராஷ்டிராவின் இகத்புரி நீதிமன்றம், கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது.

    மேலும், தவறான தகவலைக் கொடுத்து போலீசாரையும் நீதிமன்றத்தையும் திசைதிருப்பிய ஓட்டுநர் சந்தீப் பாட்டில் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. சந்தீப் பொய் புகார் அளிக்க என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.  

    • அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர்.
    • அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்.

    மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் சில்லோட் பகுதியில் ரஹிமாபாத் கிராமம் அமைந்துள்ளது.

    இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவசேனாவை சேர்ந்த சில்லோட் தொகுதியின் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான அப்துல் சத்தார் ரஹிமாபாத் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

    அப்துல் சத்தாரின் வருகைக்கு பாஜக மற்றும் சில அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவர் சென்ற பிறகு, கோவிலின் புனிதத்தைக் காப்பதாகக் கூறி அவர்கள் கோவில் வளாகம் முழுவதும் கோமியம் தெளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சில்லோட் நகர பாஜக தலைவர் மனோஜ் மொரல்லு இது குறித்துக் கூறுகையில், "அப்துல் சத்தார் மாட்டுக்கறி உண்பவர் என்பதால், அவர் கோவிலுக்குள் வந்தது அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டது.

    அவர் முஸ்லிம்களையும் இந்துக்களையும் ஏமாற்றி வருகிறார். சமீபத்தில் ஹஜ் பயணம் சென்று வந்தவர், இப்போது கோவிலுக்கு வந்து நாடகமாடுகிறார். அதனால்தான் நாங்கள் கோமியம் தெளித்து சுத்திகரித்தோம்." என்று கூறினார்.  

    • பெண்ணைக் காதலித்து வந்தபோதும், ஷிபாவுடனும் உறவைத் தொடர்ந்துள்ளார்.
    • குண்டு, ஷிபாவின் கன்னம் வழியாகப் பாய்ந்து மண்டை ஓட்டுக்குள் சிக்கிக் கொண்டது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் சிவாஜி நகரைச் சேர்ந்தவர் 19 வயதான ஷிபா ஷேக். இவர் ஒரு இளைஞரைக் காதலித்து வந்தார்.

    அந்த இளைஞர் ஏற்கனவே 25 வயதுடைய மற்றொரு பெண்ணைக் காதலித்து வந்தபோதும், ஷிபாவுடனும் உறவைத் தொடர்ந்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்ததும் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்த 25 வயதுப் பெண், ஷிபாவை பேசுவதற்காக புர்கானியா மசூதி அருகே வருமாறு அழைத்துள்ளார்.

    அங்கு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்தப் பெண் தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து ஷிபாவை சுட்டுவிட்டுத் தப்பியோடினார்.

    தோட்டா ஷிபாவின் கன்னம் வழியாகப் பாய்ந்து மண்டை ஓட்டுக்குள் சிக்கிக் கொண்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் ஷிபா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளியான 25 வயது பெண்ணையும், அவருக்கு உதவியாக இருந்த 23 வயது இளைஞர் ஒருவரையும் மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். 

    • மகாராஷ்டிராவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே சாதி இல்லாத கிராமம் என்றால் அது சவுண்டாலாதான்.
    • இது ஒரு சிறிய முயற்சி, ஆனால் அது நீண்ட தூரம் செல்லும்

    சாதி அரசியல் இந்திய சமூகத்தைப் பிளவுபடுத்தி வரும் நேரத்தில், மகாராஷ்டிராவின் சவுண்டாலா கிராமத்தில் ஒரு சிறிய ஆனால் முக்கிய மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாகவே முற்போக்கு சிந்தனை கொண்ட கிராமமாக திகழ்ந்து வரும் சவுண்டாலா, தற்போது கிராம சபையின் முறையான ஒப்புதலுடன், "அம்சி ஜாத்... மானவ்" (எனது சாதி மனிதநேயம்) என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு தன்னை சாதி இல்லாத கிராமமாக அறிவித்துள்ளது.

    இதன்மூலம் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல இந்தியாவிலேயே சாதி இல்லாத கிராமம் என்றால் அது சவுண்டாலாதான். அகமதுநகர் என்று முன்னர் அழைக்கப்பட்ட அஹில்யநகர் மாவட்டத்தின் நெவாசா தாலுகாவில் அமைந்துள்ள சவுண்டாலாவில் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    இதுதொடர்பாக பேசியுள்ள அக்கிராமத்தினர்,

    "இது ஒரு சிறிய முயற்சி, ஆனால் அது நீண்ட தூரம் செல்லும். சவுண்டாலா இப்போது சாதி இல்லாத கிராமமாக மாறியுள்ளது. பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்களும், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் கூட இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    கூட்டத்தில், யாரும் சாதியைப் பின்பற்றவோ அல்லது சாதி அடிப்படையிலான நடைமுறைகளில் ஈடுபடவோ கூடாது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. நாங்கள் 'அம்சி ஜாத்... மானவ்' மூலம் வழிநடத்தப்படுவோம். மக்கள் மனிதநேயத்தைப் பின்பற்றுவார்கள்.


    கிராம கூட்டத்தின்போது

    உண்மையில், எங்களுக்கு சாதியில் நம்பிக்கை இல்லை. மனிதநேயம்தான் மிகப்பெரிய சாதி மற்றும் மதம். அனைவரும் சமம்" என தெரிவித்துள்ளனர்.

    முற்போக்கு எண்ணங்களை கொள்கைகளாக கொண்ட தமிழ்நாட்டைவிட பன்மடங்கு முற்போக்கில் சிறந்து விளங்குகின்றனர் சவுண்டாலா கிராம மக்கள். பாலின உணர்திறன், குழந்தை திருமணத்தை தடை செய்தல்,  கைம்பெண்களின் மறுமணத்தை அனுமதித்தல், குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கை, பெண் கல்வியை ஊக்குவித்தல் மற்றும் அரசியல் செயல்பாட்டில் பெண்கள் பங்கேற்பை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல முற்போக்கான தீர்மானங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அக்கிராமத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

    முற்போக்கு கொள்கைகளை பேசுவது மட்டும் மாற்றமில்லை. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு உதாரணமாய் திகழ்கிறது இந்த சவுண்டாலா கிராமம். கடந்த 2007ல், 'எவ்வித மோதலும் இல்லாத கிராமம்' என்ற விருதை சவுண்டாலா கிராமம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    • 2008 முதல் 2009 வரை மகாராஷ்டிர மாநில அமைச்சராக இருந்துள்ளார்.
    • கடந்த ஆண்டுதான் பாஜக-வில் இணைந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

    பார்பானி மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளில் பாஜக தலைவர் சுரேஷ் வார்புட்கரின் குடும்பத்தினர் 5 பேர் போட்டியிட்டனர்.

    வார்புட்கரின் மகள் சோனால் தேஷ்முக்த், மகன் சம்ஷேர் வார்புட்கர், மருமகள் ப்ரேர்னா வார்புட்கர், மருமகன் உத்கார்ஷ் வார்புட்கர், அஜித் வார்புட்கர் ஆகியோர் போட்டியிட்டனர்.

    இதில் அஜித் வார்புட்கர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். இவர் பாஜக சார்பில் போட்டியிட்ட உத்கார்ஷ் வார்புட்கரை 111 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

    சோனால் தேஷ்முக்த் சிவ சேனா (UBT) சார்பில் போட்டியிட்டார். இவர் பாஜக-வின் திலிப் தேஷ்முக்த்-யிடம் 2674 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    சம்ஷேர் வார்புட்கர் சிவ சேனா (UBT) வேட்பாளர் பாண்டுரங் கில்லாரேயிடம் 1,604 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மருமகள் பிரேர்னா 2,098 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    சுரேஷ் வார்புட்கர் மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் பாஜக-வில் கடந்த ஆண்டு இணைந்தார். 2008 முதல் 2009 வரை விவசாயத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

    • அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் மோகன் தனது உடைகளை மாற்றிக்கொள்வார்.
    • ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் வாகனத்தை தானேயில் உள்ள ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் சியோன் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயது மோகன் கோகடே.

    மோகனின் குடும்பம் நன்கு படித்த மற்றும் வசதியான குடும்பம். இவரது சகோதரி துபாயிலும், சகோதரர் அமெரிக்காவிலும் வசிக்கின்றனர்.

    இவரது ஒரு மகன் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட், மற்றொரு மகன் இன்ஜினியர் ஆவார். மோகன் முன்பு தனது தந்தையுடன் சேர்ந்து தோட்ட தொழில் செய்து வந்தார்.

    வசதியான பின்னணி இருந்தும், ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதால் அவர் பெரும் கடன் சுமைக்கு ஆளானார். இந்தக் கடனை அடைப்பதற்காக திருட்டுத் தொழிலை தொடங்கியுள்ளார்.

    சியோன் மற்றும் பிற இடங்களில் நகை பறிப்புகளில் மோகன் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த ஜனவரி 25 அன்று சியோனில் ஒரு பெண்ணிடம் பைக்கில் சென்று சங்கிலியை பறித்துச் சென்றார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

    அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் மோகன் தனது உடைகளை மாற்றிக்கொள்வார். மேலும் எப்போதும் ஹெல்மெட் அணிந்திருப்பார்.

    அவர் உடைகளை மாற்றினாலும், ஒவ்வொரு முறையும் அதே ஜோடி ஷூக்களை அணிந்திருந்தார். போலீசார் சுமார் 80 சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்தபோது, முகம் தெரியாவிட்டாலும் அவர் அணிந்திருந்த ஷூக்கள் மட்டும் மாறாமல் இருந்ததைக் கவனித்தனர். இதுவே அவர் பிடிபட முக்கியத் துப்பாக அமைந்தது.

    மோகன் நெரூலில் ஒரு இருசக்கர வாகனத்தைத் திருடி, அதைப் பயன்படுத்தி சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    ஒவ்வொரு குற்றத்திற்குப் பிறகும் வாகனத்தை தானேயில் உள்ள ஒரு பகுதியில் நிறுத்திவிட்டு தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

    அவர் மீண்டும் அடுத்த திருதிற்காக வாகனத்தை எடுக்க வந்தபோது, ஷு அடையாளத்தை வைத்து போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

    சுமார் 20-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் இவருக்குத் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.   

    • தனது காரில் வந்து இறங்கிய சந்தர்கனி நேராக கட்டிடத்தின் 17வது மாடியில் ஏறினார்.
    • வாட்ச்மேன் அவரை சமாதானம் செய்து 10வது மாடி வரை அழைத்து வந்தார்.

    மகாராஷ்டிராவின் சோலாப்பூரை சேர்ந்த தொழிலதிபர் சுனில் மோதிலால் சந்தர்கனி (59). இவர் முல்தானி என்ற பிரபல பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார்.

    நேற்று மதியம், சோலாப்பூரின் விஜய்பூர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றுக்கு தனது காரில் வந்து இறங்கிய சந்தர்கனி நேராக கட்டிடத்தின் 17வது மாடியில் ஏறினார்.

    மொட்டை மாடியின் விளிம்பில் நின்று கடவுளிடம் கைகூப்பி சந்தர்கனி பிரார்த்தனை செய்த வண்ணம் இருந்தார். அவரை கண்ட வாட்ச்மேன் வேகமாக மேலே சென்று அவரை கீழே அழைத்து வர முயன்றார்.

    அவரை சமாதானம் செய்த வாட்ச்மேன், அவருடன் கீழே இறங்கினார். ஆனால் 17வது மாடியில் இருந்து 10வது மாடிக்கு இருவரும் வந்தபோது சந்தர்கனி, தனது கார் சாவியை மேலேயே மறந்து வைத்துவிட்டதாக கூறி மீண்டும் 17வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

    அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணங்களை விசாரித்து வருகின்றனர்.

    அவர் கைகூப்பி பிரார்த்தனை செய்த சிசிடிவி காட்சி தற்போது வேகமாக பரவி வருகிறது. 

    • தெலுங்கானாவை சேர்ந்த பிரபாகரின் தலைக்கு ரூ.25 லட்சம் விலை வைப்பட்டிருந்தது.
    • இந்தத் தாக்குதலின் போது பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.

    மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூத்த நக்சல் தலைவர் பிரபாகர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்குப் பதிலடி கொடுத்த கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

    கொல்லப்பட்டவர்களில் நக்சலைட் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான பிரபாகர் என்பவரும் அடங்குவார். தெலுங்கானாவை சேர்ந்த பிரபாகரின் தலைக்கு ரூ.25 லட்சம் விலை வைப்பட்டிருந்தது.

    கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏகே-47 ரகத் துப்பாக்கிகள் உள்ளிட்ட  ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்தத் தாக்குதலின் போது பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ×