என் மலர்
நீங்கள் தேடியது "கொள்ளை"
- கொள்ளை நடந்த தினத்தன்று, நகரின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் போலீசார் பல சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனங்களைச் சோதனையிட்டனர்.
- அதே இடத்தில் இருந்தபடி வயர்லெஸ் தகவல் தொடர்புகளையும் அவர் கண்காணித்துள்ளார்.
கர்நாடகாவின் பெங்களூருவில் கடந்த நவம்பர் 19-ஆம் தேதி, ஏ.டி.எம்.களுக்குப் பணம் ஏற்றிச் சென்ற CMS Info Systems நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை இடைமறித்த கும்பல், துப்பாக்கி முனையில் 7.11 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றது.
இந்த வழக்கை துப்பு துலக்கிய பெங்களூரு காவல்துறை ஐதராபாத்தில் வைத்து, கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவர்களில் அன்னப்பா நாயக், பெங்களூரு கிழக்கு கோவிந்தபுரா காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஆவார். சேவியர் CMS Info Systems நிறுவனத்தின் ஊழியர் ஆவார்.
மூன்றாவது நபர் கோபி பிரசாத், கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தின் வழித்தடத்தை டிராக் செய்வதில் பங்காற்றியவர் ஆவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி கான்ஸ்டபிள் அன்னப்பா நாயக் என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
தான் ஒரு போலீஸ் என்பதால் போலீசிடம் சிக்காமல் கொள்ளையடிப்பதற்கான நுணுக்கங்களை அவரே தனது கூட்டாளிகளுக்கு சொல்லிக்கொடுத்துள்ளார்.
சிக்கியது எப்படி?
கொள்ளை நடந்த தினத்தன்று, நகரின் தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் போலீசார் பல சோதனைச் சாவடிகளை அமைத்து வாகனங்களைச் சோதனையிட்டனர்.
அன்னப்பா நாயக் அங்கு பணியில் இல்லாதபோதும், அவர் ஒரு சோதனைச் சாவடிக்கு வந்துள்ளார்.
அங்குப் பணியில் இருந்த தலைமை காவலரை அணுகிய அவர், கொள்ளை குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளார்.
கொள்ளையர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்திய வாகனத்தைக் கண்டுபிடித்துவிட்டார்களா என்று குறிப்பாகக் கேட்டுள்ளார். மேலும், இணையத்தில் பரவிய ஒரு புகைப்படத்தைக் காட்டி அது உண்மையானதா என்றும் கேட்டுள்ளார்.
அதே இடத்தில் இருந்தபடி வயர்லெஸ் தகவல்தொடர்புகளையும் அவர் கண்காணித்துள்ளார்.
இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. வேறு ஒரு காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி இங்கு வந்து ஏன் இவ்வளவு ஆர்வம் காட்ட வேண்டும் என்று தலைமை காவலர் சந்தேகம் அடைந்தார். இது குறித்து மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பின்னர் அவர் விசாரணைக்காகக் காவலில் எடுக்கப்பட்டார்.
தீவிர விசாரணையில், கொள்ளையில் தனக்கு இருந்த பங்கை அன்னப்பா ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் சேவியருடன் அவருக்கு இருந்த தொடர்புகளை அவரது செல்போன் அழைப்புகள் உறுதிப்படுத்தின.
தற்போது, அன்னப்பா நாயக் மற்றும் இரு குற்றவாளிகள் பத்து நாட்கள் காவல் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர்.
- ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
பெங்களூருவில் பட்டப்பகலில் ஏடிஎம் வாகனத்தை கடத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப HDFC வங்கி கிளையில் இருந்து ஒரு வேன் பணத்தை ஏற்றிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டொயோட்டா இன்னோவா கார் இவர்களை திடீரென வழிமறித்து நிறுத்தியது.
இன்னோவாவில் இருந்த 7 பேர் வங்கி ஊழியர்களை அணுகி, தாங்கள் ரிசர்வ் வங்கியை சேர்ந்தவர்கள் எனக்கூறி ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது அந்த கும்பல் பணத்தை தங்களது காருக்கு வலுக்கட்டாயமாக மாற்றியுள்ளனர். பின்னர் ஊழியர்களை வேறு ஒரு இடத்தில இறக்கிவிட்டு பணத்துடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து, காவல்துறையினர் சிறப்பு குழுக்களை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- நட்பு அடிப்படையில் ஆனந்த் அவ்வப்போது உதவிகள் செய்து வந்ததாக தெரிகிறது.
- ஏழையான காதலிக்கு நகை வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டேன்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பள்ளியாடி முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் (வயது 29). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருவட்டார் பகுதியை சேர்ந்த ஆனந்த் (26) என்பவர் பெயிண்டிங் வேலைக்கு வந்தார். அப்போது அவருடன் ஆனந்துக்கு நட்பு ஏற்பட்டது. அதே சமயத்தில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசரின் தாயார் ரெஜி (63) உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு நட்பு அடிப்படையில் ஆனந்த் அவ்வப்போது உதவிகள் செய்து வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருடைய தாயார் அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதற்கான காரணத்தை கேட்ட போது, கழிவறையில் தான் திடீரென மயங்கியதாகவும், பிறகு கண் விழித்த போது தான் அணிந்திருந்த நகை, கம்மல் உள்பட 11 பவுன் நகையை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார். உடனே இதுபற்றி தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் நகை பறித்தது, ஆனந்த் என்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்துசென்று விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நான் பி.இ. படித்து விட்டு அதற்குரிய வேலை கிடைக்காமல் இருந்ததால் பெயிண்டிங் வேலை செய்து வந்தேன். ஒரு பெண்ணை காதலித்தேன். அவரையே திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன். ஏழையான காதலிக்கு நகை வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் போதுமான பணம் இல்லை. இந்தநிலையில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் வீட்டிற்கு சென்றபோது அவரது தாயார் கழிவறையில் மயங்கி கிடந்தார். மேலும் நகை, கம்மல் அணிந்திருந்தார். இதனை பார்த்ததும் எனது எண்ணம் தவறான பாதைக்கு மாறியது. அந்த நகையை பறித்து காதலிக்கு கொடுக்க முடிவு செய்தேன். அதன்படி 11 பவுன் நகையை பறித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்தேன். ஆனால் போலீஸ் விசாரணையில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டார்.
- கொள்ளை சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தினர்.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நாச்சியார்பேட்டை பகுதியில் ரெயில் நிலையம் பகுதியில் இரச்சகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் பூசாரிகளாக பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றனர். இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது சாமிக்ககான பூஜை பொருட்கள் மற்றும் வெள்ளி பொருட்கள் வைத்திருக்கும் பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவுக்குள் இருந்த 3 ஜோடி வெள்ளி கண்மலர், நெத்திபட்டை, மூக்கு பட்டி மற்றும் பட்டுப் புடவைகள் என சுமார் 40 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
மேலும் கோவில் கதவின் பூட்டு உடைப்பதற்கு பயன்படுத்திய கடப்பாரையும், உடைக்கப்பட்ட பூட்டும் அருகிலேயே கிடந்தது. இது குறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் கேமராக்கள் எதுவும் இல்லாததால் அருகில் உள்ள விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு, குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது.
- வேணி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் ஒன்பதாவது வீதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் வேணி (வயது 41). இவருடன் அவரது வயதான தாயாரும் தங்கியுள்ளார். இந்தநிலையில் இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு மதுரை சென்றிருந்தார். அங்கு உறவினர்கள் சார்பில் பாண்டி கோவிலில் நடை பெற்ற கிடாவெட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு நேற்று நள்ளிரவில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேணி, அச்சத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டின் அறைகளில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் தனி அறையில் வைக்கப்பட்டிருந்த பீரோவை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து வேணி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். அருகில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பூட்டியிருந்த வீட்டில் வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
- காவலாளி கொடுத்த தகவலின் பேரில் கடை விற்பனையாளர்கள், சூப்பர்வைசர் விரைந்து வந்தனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை திருச்சி சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் அதிகளவில் வந்து மது அருந்துவார்கள்.
இதனால் இக்கடையில் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் திருச்சி சாலையில் அமைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் லாரி டிரைவர்கள் இக்கடை அருகில் தங்கள் வாகனங்களை நிறுத்தி மது பாட்டில்களை வாங்கி செல்வார்கள்.
இங்கு 2 விற்பனையாளர்களும், ஒரு சூப்பர்வைசர்களும் பணியில் உள்ளனர். இவர்கள் இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றனர்.
கடைக்கு காவலர் பணியில் அப்பதியை சேர்ந்தவர் ஈடுபட்டிருந்தார்.
இந்தநிலையில் நேற்று மிலாடி நபியை முன்னிட்டு கடை திறக்காமல் இருந்தது. நள்ளிரவில் மர்ம நபர்கள் கடைக்கு வந்துள்ளனர். அவர்களை காவலாளி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு மர்ம நபர்கள் சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் எனமிரட்டி கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பல ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை அள்ளிச் சென்றனர்.
இது குறித்து காவலாளி கொடுத்த தகவலின் பேரில் கடை விற்பனையாளர்கள், சூப்பர்வைசர் விரைந்து வந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து மோப்ப நாய் தீரன் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை போன மதுபான கடையில் இருந்து திருச்சி சாலை வரை ஓடிச் சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அரசு மதுபான கடையில் கொள்ளை அடித்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
- யமுனாபாய் வீட்டுக்கு திரும்பி சென்றபோது வீட்டில் நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
வண்டலூர்:
சிங்கப்பெருமாள் கோவில், பாரதியார் தெருவை சேர்ந்தவர் யமுனாபாய். இவரது மகன் ரத்தீஸ். தி.மு.க.பிரமுகரான இவர் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளராக உள்ளார். பஸ், லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். யமுனாபாய் தனியாகவும், ரத்தீஸ் குடும்பத்துடன் தனியாகவும் அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
நேற்று மாலை யமுனாபாய் வீட்டை பூட்டிவிட்டு மகன் வீட்டுக்கு வந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் யமுனாபாயின் வீட்டுக்குகள் பூட்டை உடைத்து புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த 140 பவுன் நகை மற்றும் விலை உயர்ந்த பொருட்களை அள்ளிசென்று விட்டனர்.
இன்று காலை யமுனாபாய் வீட்டுக்கு திரும்பி சென்றபோது வீட்டில் நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மறைமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
யமுனாபாய் வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும் நேரத்தை நோட்ட மிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.
- வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
- கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி அருகே உள்ள பாளேகுளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவர் வேலம்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தெய்வானை. இவர் பாளேகுளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இருவரும் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கணவன்-மனைவி இருவரும் காலை பள்ளிக்கு சென்று மாலையில் தான் வீட்டிற்கு வருவார்கள். இவரது வீட்டில் யாரும் இல்லாததை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் காலை பள்ளிக்கு சென்ற தெய்வானை மீண்டும் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த நாய் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது.
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 55 பவுன் தங்க நகைகள், ரூ.5 லட்சம் பணம் திருடுபோயி இருந்தது தெரியவந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி கணவனுக்கு போன் செய்து தெய்வானை கத்தி கதறி உள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நாகரசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த ஆசிரியர் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாய் உதவியுடன் கொள்ளையர்களை தேடினர். ஆனால் நாய் சிறிது தூரம் சென்று நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் கொள்ளையர்களின் கைரேகை எதுவும் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்தனர்.
வீட்டில் பகல் நேரங்களில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் நேற்று வீட்டில் பின்புற கேட்டின் வழியாக புகுந்துள்ளனர். அங்கு கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்துள்ளனர். அதில் இருந்த நகை, பணம் ஆகியவையை கொள்ளை அடித்து சென்றனர்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வீடுகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்புகள் வேண்டுமென போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் சிசிடிவி கேமரா பொருத்தவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் பகலில் ஆளில்லாதது நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பணம் நகை கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.25 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் கொள்ளை போனது தெரிந்தது.
- போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
சூரத்:
குஜராத் மாநிலம் சூரத் நகரில் வைரங்கள் பட்டை தீட்டப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்குள்ள ஒரு பிரபல பட்டை தீட்டும் ஆலை தொடர் விடுமுறை காரணமாக மூடப்பட்டது.
இந்தநிலையில் நேற்று விடுமுறை முடிந்து அந்த ஆலையை திறந்தபோது அங்குள்ள லாக்கர் உடைக்கப்பட்டு ரூ.25 கோடி மதிப்புள்ள வைரக்கற்கள் கொள்ளை போனது தெரிந்தது.
இதுகுறித்து உரிமையாளர்கள் போலீசுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம கும்பலுக்கு வலைவீசி உள்ளனர்.
- போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
- குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி. ஓய்வு பெற்ற அரசு கலைக் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சாவித்திரி. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் குளித்தலை பகுதியில் மெட்ரிக் பள்ளி நடத்தி வருகிறார். அந்த பள்ளியில் தாளாளராகவும் உள்ளார். தற்போது இவர்கள் தங்களது வீட்டை புதுப்பித்து கட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கருணநிதி குடும்பத்துடன் வெளியூர் சென்றனர். பின்னர் நேற்று இரவு 11 மணி அளவில் வீட்டிற்கு வந்தனர். பின்னர் நள்ளிரவில் அனைவரும் தூங்கச் சென்றனர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் இவர்களது வீட்டின் பின்பகுதி வழியாக மர்ம 3 நபர்கள் நுழைந்தனர். முகமூடி அணிந்திருந்த அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு சென்றனர்.
சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த அவரது இளைய மகள் பல் மருத்துவர் அபர்ணா விழித்து பார்த்தார். அப்போது 3 பேர் முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் நிற்பதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். உடனே மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். சத்தம் கேட்டு கருணநிதி, சாவித்திரி ஆகியோர் அங்கு வந்தனர். உடனே கொள்ளையர்கள் அபர்ணாவை அரிவாளால் தாக்கினர். உடனே தாய் சாவித்திரி தடுத்தார். இதில் அபர்ணா, சாவித்திரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் கொள்ளையர் கத்தி, அரிவாள் முனையில் அங்கு இருந்த ரூ. 9 லட்சம் மற்றும் 31 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர். இது குறித்து மற்றவர்களுக்கு தகவல் தெரிவிக்க கூடாது என்பதற்காக அவர்கள் 3 பேரின் செல்போன்களையும் பறித்தனர். பின்னர் கொள்ளையர் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி கருணாநிதி அக்கம்பக்கத்தினர் மூலமாக குளித்தலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர் தாக்கியதில் காயம் அடைந்தசாவ்த்திரி, அபர்ணாவை போலீசார் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா விரந்து வந்து விசாரணை நடத்தி னார். கொள்ளையர்கள் குறித்து சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் தடயங்களை பதிவு செய்தனர். மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்திலிருந்து குளித்தலை மணப்பாறை ரயில்வே கேட் வரை மோப்பம் பிடித்தபடி சென்று நின்று விட்டது.
குளித்தலை நகரில் ஆட்கள் நடமாட்டம் உள்ள மையப் பகுதியில் அதிகாலையில் வீடு புகுந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
குற்றவாளிகளை பிடிப்பதற்காக போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குளித்தலை நகரின் முக்கிய பகுதியில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
- படுக்கை அறையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்தது.
- வெறும் 4 நிமிடம் 10 நொடிகளில் கொள்ளையை அரங்கேற்றி அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நீதிபதி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, தலைநகர் இந்தூரில் உள்ள ரமேஷ் கார்க் உடைய வீட்டுக்குள் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நுழைந்து படுக்கை அறையில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை கொள்ளை அடித்தது.
ஒரு திருடன் நகைகளை எடுத்துக்கொண்டிருந்த நிலையில் மற்றொரு திருடன் இரும்புக் கம்பியை அங்கு படுக்கையில் தூங்கிக்கொண்டிருந்த நீதிபதியின் மகன் ரித்விக் -ஐ நோக்கி நீட்டியபடி இருந்தான்.
ரித்விக் ஒருவேளை தூக்கத்தில் இருந்து எழுந்திருந்தால் அவரை அந்த கம்பியால் தாக்க திருடன் தயாராக இருந்தது அறையின் சிசிடிவி வீடியோவில் தெரிந்தது.
வெறும் 4 நிமிடம் 10 நொடிகளில் கொள்ளையை அரங்கேற்றி அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. ஜன்னல் இரும்பு கிரில் கதவை வெட்டி அவர்கள் உள்ளே நுழைந்தது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் அந்த கும்பலை தேடி வருகின்றனர்.
- நகைகளை எடுத்து தங்கள் பைகளில் நிரப்பியுள்ளனர்.
- கடையில் இருந்து சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் நகைக்கடையில் பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காசியாபாத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் நேற்று (வியாழக்கிழமை) மதியம் 3:30 மணியளவில், உணவு டெலிவரி ஊழியர்கள் போல மாறுவேடத்தில் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர்.
வீடியோவில், ஹெல்மெட் அணிந்து, ஸ்விக்கி மற்றும் பிளிங்கிட் டெலிவரி ஊழியகர்கள் போல உடையணிந்த இரண்டு பேரும் நகைகளை எடுத்து தங்கள் பைகளில் நிரப்பினர். பின்னர் அவர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றனர்.
கடையில் இருந்து சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






