என் மலர்
நீங்கள் தேடியது "போலீசார்"
- போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரை சேர்ந்தவர் ஞானசுந்தர் (வயது 35). இவர் கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் வீடு இருக்கும் நிலையில், சுந்தர் தனது குடும்பத்தினருடன் வி.கே.புரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இதனால் கோல்டன் நகரில் உள்ள வீடு பூட்டிக்கிடந்தது. அவ்வப்போது அவர் தனது வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஞானசுந்தர் கோல்டன் நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.3 ஆயிரம் பணம், குத்துவிளக்கு உள்ளிட்ட பித்தளை பொருட்கள் திருட்டு போயிருந்தது.
வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பதை அறிந்த ஞானசுந்தர், கல்லிடைக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். போலீஸ்காரர் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
- ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- 3 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை:
சென்னையில் கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பலருக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.
இதனை ஏற்று போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பலரிடம் உங்களை கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஒருவரும் 2 சப்- இன்ஸ்பெக்டர்களும் மிரட்டி லட்சக்கணக்கில் வசூல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து லஞ்சம் பெற்றிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 50 லட்சம் வரை பணம் கைமாறி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
- திருடனுக்கு செருப்பு மாலை அணிவித்து போலீஸ் வாகனத்தின் மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
- இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
ஜம்மு காஷ்மீரின் பக்ஷி நகர் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்தை வாலிபர் ஒருவர் திருடியதாக கூறப்படுகிறது. அப்போது பணம் திருடிய வாலிபரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்தனர்.
அப்போது பொதுமக்களை அந்த வாலிபர் கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை விரட்டி சென்று கைது செய்தனர்.
பின்னர் அந்த வாலிபரின் சட்டையை கழற்றி அவரது கைகளை கட்டி, கழுத்தில் செருப்பு மாலை அணிவித்து போலீஸ் வாகனத்தின் மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
போலீசாரின் இந்த செயல் மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்று பலரும் விமர்சன கருத்துக்களை பதிவிட்டனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
- தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து திடீரென தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவத்தினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் கொடுப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அனந்த்நாக் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.
- போலீசார் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ வீதம் 200 பார்சல்கள் சுமார் 400 கிலோ உள்ளது.
திருவாரூர்:
திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேர் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 கிலோ கஞ்சா இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாகவும், சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அதிரடியாக தனியார் தங்கும் விடுதியில் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 2 கார்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த பால கோலானு விஷ்ணுவர்த ரெட்டி என்பவரின் ஆதார் அடையாள அட்டையை கொடுத்து இந்த தனியார் தங்கும் விடுதியில் 2 கார்களில் வந்த 5 பேர் தங்கியுள்ளது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரையும் கைது செய்தனர்.
மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தங்கும் விடுதிக்குள் சென்ற போது, 5 பேரை அழைத்துச் செல்வதற்காக வந்த நபர் அங்கிருந்து தப்பி விடுதியின் கேட்டில் ஏறி சாலையில் ஓடிவிட்டார்.
அவரை பின்தொடர்ந்து போலீசார் ஒருவரும் விரட்டி பிடிக்க முயற்சி செய்கிறார். இந்த சி.சி.டி.வி. காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் கைப்பற்றிய கஞ்சா 2 கிலோ வீதம் 200 பார்சல்கள் சுமார் 400 கிலோ உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கஞ்சா முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் வழியாக படகு மூலமாகவும் நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் இருந்து படகுகள் மூலமாகவும் இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவதாகவும் தெரிகிறது.
மேலும் இது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறதா என்கிற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவைச் சேர்ந்த இந்த நபர்களிடமிருந்து நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் கஞ்சாவை பெற்று இலங்கைக்கு அனுப்பி இருக்கலாம் என்கிறரீதியிலும் ஆந்திராவைச் சேர்ந்த 5 பேரிடம் தனியார் தங்கும் விடுதியில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா தொடர்ந்து எவ்வாறு பல சோதனை சாவடிகளை கடந்து எடுத்து வரப்படுகிறது என்பது குறித்தும் இதுவரை இந்த கும்பல் எத்தனை முறை இதே போன்று இலங்கைக்கு கஞ்சா கடத்தி இருக்கிறது என்பது குறித்தும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று திருவாரூர் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
- விஷ வண்டுகள் பொதுமக்களை தாக்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு.
- நான்கு இடங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் விஷ வண்டுகள் தொடர்ந்து பொதுமக்களை தாக்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
உடன் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி செயலர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாச னிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர்.
மனுவின் பேரில் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு போலீசார் இணைந்து கங்களாஞ் சேரிரியில் காலனி தெரு, பூண்டி, கீழத்தெரு, நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.
- அப்பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் துணி கடன் கேட்டு உள்ளார்.அதற்கு ஸ்ரீகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
- இந்நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்ற ஷாஜி நள்ளிரவில் மார்க்கெட்டிற்கு வந்து துணிக்கடைக்கு தீ வைத்துள்ளார்.
குழித்துறை, அக்.27-
மார்த்தாண்டம் அருகே நல்லூர் புளியங்விளாகத்தை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 67). இவர் மார்த்தாண்டம் மார்க்கெட்டில் துணிக்கடை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஷாஜி என்பவர் துணி கடன் கேட்டு உள்ளார்.அதற்கு ஸ்ரீகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அங்கிருந்து திரும்பிச் சென்ற ஷாஜி நள்ளிரவில் மார்க்கெட்டிற்கு வந்து துணிக்கடைக்கு தீ வைத்துள்ளார். தீ மளமளவென எரிவதை பார்த்ததும் மார்க்கெட்டில் இருந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். ஆனால் கடையின் முன் பகுதியில் கட்டப்பட்டு இருந்த பெட்ஷீட் மற்றும் துண்டுகள் எரிந்து நாசமானது. இதையடுத்து ஸ்ரீகுமார் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஷாஜியை தேடி வருகின்றனர்.
- வழிப்பறியில் ஈடுபட்ட 4 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
- மதுரை ஆரப்பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாதவன், சல்மான், கரிமேடு கார்த்திக், புட்டுத்தோப்பு பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூரை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 47). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு வந்த பொன்ராஜ் பண்டிகை முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூர் செல்வதற்காக கப்பலூர் பஸ் நிறுத்தத்திற்கு நடந்து வந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் மர்ம நபர்கள் பொன்ராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.1500 ரொக்கம் மற்றும் செல்போனை பறித்து விட்டு சென்று விட்டனர்.
திருப்பரங்குன்றத்ைத சேர்ந்தவர் விஜயகுமார் (35). இவர் மினி வேனில் ஆவின் பால் எடுத்து கொண்டு திருமங்கலம் பகுதியில் விநியோகம் செய்ய சென்றார். அப்போது 4 மர்ம நபர்கள் அவரை மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.
இதுபற்றிய புகாரின்பேரில் திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் 2 கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என தெரியவந்தது.
இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட மதுரை ஆரப்பாளையம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த மாதவன், சல்மான், கரிமேடு கார்த்திக், புட்டுத்தோப்பு பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 செல்போன், பணத்தை பறிமுதல் செய்தனர்.
- திருமங்கலத்தில் எல்லை பாதுகாப்பு படைவீரர் வீட்டில் திருட்டு நடந்துள்ளது.
- இதில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் விடத்தகுளம் ரோடு மீனாட்சி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது48). எல்லை பாதுகாப்பு படைவீரர். இவரது மனைவி தேவி (45). இவர்களது மகள் மோனிஷா. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் மோனி ஷாவை சென்னையில் உள்ள கணவர் வீட்டில் விட்டு வருவதற்காக கடந்த 30-ந் தேதி முருகேசன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் முருகேசன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 4 பவுன் நகை, லேப்டாப் உள்ளிட்டவைகளை திருடி சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டிற்கு வந்த முருகேசன் தனது வீட்டில் நகை கொள்ளை போனது பற்றி அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- உடையார்பாளையத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
- ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அறிவுரை
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் தலைமையிலான போலீசார் சிதம்பரம் நெடுஞ்சாலையில் தத்தனூர் காலேஜ் பகுதியில் நேற்று முன்தினம் இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தியது, ஹெல்மெட் அணியாமலும், அதிவேகமாகவும், விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்கியவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினர். பின்னர் புதிய மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அவர்களுக்கு அபராதம் விதித்தனர்."
- வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்ததாக தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஜவுளிக்கடை அதிபர் ஞானசேகரன் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ராஜபாளையம் ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் நம்பிராஜன் (வயது 35). இவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் தளவாய் புரத்தைச் சேர்ந்த இளங்கோ என்பவருக்கும் பழக்கம் இருந்தது. அப்போது எனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக இளங்கோ கூறினார். இதற்காக ஜவுளிக்கடை நடத்தி வரும் ஞானசேகரன், அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.அவர்கள் தனக்கு ரெயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.
இதையடுத்து அவர்களது ஜவுளி கடைக்கு சென்று 3 தவணைகளில் ரூ. 16 லட்சத்தை ரொக்கமாக கொடுத்தேன். அதன் பின் அவர்கள் பல்வேறு காரணங்களை கூறி வேலை வாங்கி தரவில்லை பணத்தை யும் திருப்பி தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படை யில் ஜவுளிக்கடை அதிபர் ஞானசேகரன் அவரது மகன் செந்தில்குமார் மற்றும் இளங்கோ ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 1-ம் தேதி உள்ளாட்சி தின சிறப்பு கிராம கூட்டம் நடந்தை அருகே புளியம்பட்டி அருந்ததியர் தெருவில் நடைபெற்றது.
- அந்த கிராம சபை கூட்டத்திற்கு வந்த 3-வது வார்டு கவுன்சிலர் வேணியின் கணவர் ரமேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நடந்தை அருகே புளியம்பட்டி அருந்ததியர் தெருவைச்சேர்ந்தவர் முருகேசன்( 50 ).இவரது மனைவி வசந்தா (46) .இவர் நடந்தை ஊராட்சி மன்ற தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி உள்ளாட்சி தின சிறப்பு கிராம கூட்டம் நடந்தை அருகே புளியம்பட்டி அருந்ததியர் தெருவில் நடைபெற்றது . அப்போது அந்த கிராம சபை கூட்டத்திற்கு வந்த 3-வது வார்டு கவுன்சிலர் வேணியின் கணவர் ரமேஷ் என்பவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரம் அவர் கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நோட்டை பிடுங்கி கிழித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து நடந்தை ஊராட்சி தலைவர் வசந்தா நல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில் ரமேஷ் பதுங்கி இருந்த இடத்தை பற்றி தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.






