என் மலர்
திருவாரூர்
- ரோபர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் மாயனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோபர்ட் (வயது 40). ஆட்டோ டிரைவர்.
இவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சுபலெட்சுமி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். 8 மாதங்கள் குடும்பம் நடத்திய நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதையடுத்து சுபலெட்சுமி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.இது தொடர்பாக ரோபர்ட்டுக்கும், சுபலட்சுமியின் அண்ணன் சிவநேசனுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் இன்று காலை மாயனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறப்பிற்காக பிளக்ஸ் பேனர் வைக்கும் பணியில் சிவனேசன் அவரது நண்பர் கோபி உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ரோபர்ட்டுக்கும், சிவநேசனுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மற்றவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரோபர்ட் ஊராட்சி மன்றம் அலுவலகம் அருகே வந்து கொண்டிருந்தபோது சிவநேசன், கோபி உள்ளிட்ட 6 பேர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டனர். அப்போது தகராறு முற்றி சிவனேசன் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து ரோபர்ட்டை கத்தியால் குத்தி தலையில் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இந்த தாக்குதலில் ரோபர்ட் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கரூண் கரட் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து ரோபர்ட் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் பேரில் வடபாதிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிவனேசன் ,கோபி உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனவைி அவரை பிரிந்து சென்று விட்டார்.
- வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், பெரும்பண்ணையூர் செல்வம் தெருவை சேர்ந்தவர் உத்திராபதி (வயது 67). இவரது மனைவி பட்டு (64).
இந்த முதிய தம்பதியினருக்கு திருநாவுக்கரசு என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி கணவன் வீட்டில் வசித்து வருகின்றனர். மகன் திருநாவுக்கரசுவிற்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணமான நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனவைி அவரை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு திருநாவுக்கரசு உயிரிழந்து விட்டார்.
இந்த நிலையில் 6 மாதத்திற்கு முன்பு மருமகள், தனது வீட்டிற்கு புதிய பூட்டு போட்டு பூட்டியதுடன், வீட்டிற்கு வந்த தங்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து கடந்த 6 மாதமாக மகள் வீட்டில் வசித்து வந்த நிலையில் தற்போது தங்கள் வீட்டை மருமகளிடம் இருந்து மீட்டு கொடுக்க வேண்டும் என திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சவுமியாவிடம் மனு அளித்துள்ளனர். மனுவை பெற்று கொண்ட வருவாய் கோட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
- காரில் வந்த அதிகாரிகள் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவாக சேர்ந்து சோதனையில் ஈடுபடுகின்றனர்.
- தற்போது 2-வது முறையாக சோதனை நடைபெறுகிறது.
மன்னார்குடி:
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறி சென்னை, திருவாரூரில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் (வயது 38) என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து காரில் வந்த அதிகாரிகள் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவாக சேர்ந்து சோதனையில் ஈடுபடுகின்றனர்.
தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரது வீட்டில் அந்த இயக்கத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள், தடயங்கள் எதுவும் இருக்கின்றதா? என்பது குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது செல்போன்களையும் கைப்பற்றி, அதில் ஏதேனும் தகவல்கள் இருக்கின்றதா? என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த 2021-ம் ஆண்டு இவரது வீட்டில் ஏற்கனவே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக சோதனை நடைபெறுகிறது.
என்.ஐ.ஏ. சோதனையை யொட்டி பாபா பக்ருதீன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் மன்னார்குடியில் காலை முதல் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
- மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரகம் அபிவிருத்தீஸ்வரம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 55). கந்தசாமி ஏற்கனவே இறந்து விட்டார்.
இந்த தம்பதிக்கு 2 மகன், 3 மகள்கள் உள்ளனர். இதில் இரண்டு மகள்களுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் ஏற்கனவே இறந்து விட்டார்.
இவரது மகள் மஞ்சு பிரியா குடவாசலில் ஒரு டெய்லர் கடையில் பணிபுரிந்து வருகிறார். மகன் பிரசன்னா எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இவர்கள் 3 பேரும் திருவாரூர் அருகே அபிவிருத்தீஸ்வரம் காளியம்மன் கோவில் தெருவில் ஒரு ஓட்டு வீட்டில் குடியிருந்து வந்தனர்.
இந்நிலையில் மஞ்சுபிரியா வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டில் தாய் ராஜலட்சுமி, தம்பி பிரசன்னா ஆகிய இருவரும் சுவற்றில் சாய்ந்த நிலையில் கிடந்துள்ளனர்.
இதைப் பார்த்த மஞ்சு பிரியா ஓடிச்சென்று தனது தாயை தொட்டுள்ளார். அப்போது மஞ்சு பிரியாவை மின்சாரம் தாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டனர்.
பின்னர் மின்சாரம் தாக்கி ராஜலட்சுமி, பிரசன்னா ஆகியோர் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து கொரடாச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தாய், மகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக மஞ்சு பிரியா கொரடாச்சேரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மின்சாரம் தாக்கி தாய் மற்றும் மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் கிறிஸ்தவனாக இருப்பது பற்றி பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
- சனாதனத்தை கண்டிப்பதற்காகவே தன்னை கிறிஸ்தவன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிக் கொள்வது போன்று தெரிகிறது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்தவ நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் கிறிஸ்தவனாக இருப்பது பற்றி பெருமைப்படுவதாக தெரிவித்தார். இது முற்றிலும் தவறான போக்கு மற்றும் கண்டிக்கத்தக்கது.
பொதுவாழ்வில் இருப்பவர்கள் ஒரு மதத்தை சார்ந்தவர்களாக இருந்து கொண்டு மற்றொரு மதத்தை விமர்சிப்பதும், குறிப்பாக இந்து மதம் நம்புகின்ற சனாதனத்தை விமர்சிப்பதும் கண்டிக்கத்தக்கது. சனாதனத்தை கண்டிப்பதற்காகவே தன்னை கிறிஸ்தவன் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிக் கொள்வது போன்று தெரிகிறது.
அமைச்சர்கள் எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் பொதுவானவர்கள் என்பதை உணர்ந்து, தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்:
வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவையொட்டி இன்று தியாகராஜ சாமி பாத தரிசனம் நடைபெற்று வருகிறது. முன்னதாக நேற்று இரவு தியாகராஜ சுவாமிக்கு திருவாதிரை மகா அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை நடராஜருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் தியாகராஜ சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பதஞ்சலி, வியக்ரபாத முனிவர்களுக்கும், பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாத தரிசனமும், தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் நடராஜ பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்ட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மனுடன் வீதியுலா வந்து சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது. இவ்விழாவில் கோவிலின் வெளிப்புறத்தில் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாத தரிசனம் செய்து வருகின்றனர்.
பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசார் கோவில் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- சர்ச்சையான கருத்துக்களை பெரியார் எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை.
- தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க திட்டம்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் கூறியதாக சில சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியது போல், எந்த ஒரு சர்ச்சையான கருத்துக்களையும் பெரியார் எழுதியதும் இல்லை, பேசியதும் இல்லை.
இந்த நிலையில் பெரியாரின் நன்மதிப்பையும், அவரது புகழையும் குறைக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இன்றி, தரவுகளும் இன்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.
சீமானின் இந்த பேச்சு பெரியாரின் புகழை சீர்குலைப்பது மட்டுமின்றி, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கவும் திட்டமிட்டு பேசியதாக தெரிகிறது.
எனவே, சீமான் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரின் பேரில், ஆதாரமற்ற தரவுகளை கொண்டு அவதூறாக பேசியது மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக 2 பிரிவுகளின் கீழ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதேபோல், திராவிடர் விடுதலை கழக நிர்வாகி செந்தில், திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன் பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது.
- முடிவில் தேசிய கீதம் பாடுவது தான் மரபு.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழா, சுதந்திர போராட்ட வீரர் நல்லக்கண்ணு நூற்றாண்டு பிறந்தநாள் விழா ஆகியவை நடந்தது. முன்னதாக திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் கொடியேற்றும் நிகழ்வு நடத்தப்பட்டு, பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இதனை கைவிட வேண்டும்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சட்டப்பேரவையை அவமதித்து வருகிறார். கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் பாதி உரையை படிக்காமல் சென்றார். இந்த ஆண்டு சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடவில்லை என கூறுகிறார்.
பேரவையின் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்தும், முடிவில் தேசிய கீதம் பாடுவது தான் மரபு என்பது கவர்னருக்கு தெரியும். இருந்தாலும் ஏதாவது குறைகூறி சட்டபேரவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறார்.
பா.ஜ.க. தலைவர்கள் தேசியத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்வதாக பொய் பிரசாரம் செய்கின்றனர். தேசியத்திற்கு எதிராகவும், அரசியல் அமைப்புக்கு விரோதமாகவும் செயல்படும் பா.ஜ.க. கட்சி, அதை மூடி மறைப்பதற்காக மற்றவர்கள் மீது பழி போடுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 10-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
- அன்றைய தினம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ தலங்களில் ஒன்றாகும்.
மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா நேற்று பகல் பத்து உற்சவத்துடன் தொடங்கியது.
விழாவின் முதல் நாளையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ராஜகோபாலசுவாமி திருமண கோலத்தில் பாமா ருக்மணியுடன் எழுந்தருளி கோவிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அப்போது கோவில் யானை செங்கமலம் வெண்சாமரத்தை தும்பிக்கையில் ஏந்தி ராஜகோபால சுவாமிக்கு வீசி, வணங்கியவாறு 3 முறை சுற்றி வந்தது. தொடர்ந்து, பன்னிரு ஆழ்வார்களும் இசை வாத்தியங்கள் முழங்க தனி நடையுடன் ராஜகோபால சுவாமி முன் தோன்றினர்.
வழக்கமாக பூர்வாங்க பூஜையின் போது பட்டாச்சாரியர்கள் தான் உற்சவர்களுக்கு சாமரம் வீசி வணங்குவர். ஆனால், கோவில் யானை சுவாமிக்கு சாமரம் வீசியது அங்கு திரண்டிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி பெருவிழா வருகிற 10-ந்தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
அன்றைய தினம் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மோட்டார் சைக்கிளிலில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
- வேன் டிரைவரை கைது செய்த போலீசார் வேனை பறிமுதல் செய்துள்ளனர்.
பேரளம்:
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கடகக்குடி, ஆட்டூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் வினோத் (வயது 30), பசுபதி (28), இளையரசன் (26).
இவர்கள் 3 பேரும் கூலிதொழிலாளர்கள். இந்நிலையில் நேற்று 3 பேரும் வேலைக்கு சென்று விட்டு ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர். அவர்கள் பேரளத்திலிருந்து பூந்தோட்டம் நோக்கி திருவாரூர் - மயிலாடுதுறை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
பேரளம் அருகே இஞ்சிகுடி கடைத்தெருவில் என்ற இடத்தில் சென்றபோது சிவகங்கையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளிலில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் சிவகங்கை பகுதியைச் சேர்ந்த அசோக்பாபு என்பவரை கைது செய்து வேனை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மத்திய அரசு சர்பாசி சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
- விவசாயிகள் சொத்துக்கள் அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் திருச்சியில் நடத்தப்படும் கண்காட்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். விவசாயிகள் சொத்துக்கள் அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மத்திய அரசு சர்பாசி சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயச் சட்டத்தை கொண்டு வரவேண்டும். இதனை வலியுறுத்தி கடந்த 26-ம் தேதி முதல் பஞ்சாப் மாநிலம் கண்ணுரி பார்டரில் ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் ஜெகசித் சிங் டல்லேபாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ரெயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஃபெஞ்சல் புயலானது இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது.
- 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. இந்த ஃபெஞ்சல் புயலானது இன்று மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன், அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் இயங்கினல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எச்சரித்துள்ளார்.
முன்னதாக, சென்னை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உட்பட 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.