என் மலர்
நீங்கள் தேடியது "Instagram love"
- ஒரு கட்டத்தில் இருவரும் கரைக்கு திரும்பாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர்.
- பிரவீன்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது 21). இவர் பி.பி.ஏ. முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக முன்பு திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் சண்டையிட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் உள்ள விநாயகர் கோவில் குளத்தின் ஓரம் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பிரவீன்குமார் ஒரு கட்டத்தில் அங்குள்ள குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்ட காதலியும், பிரவீன்குமாரை காப்பாற்றுவதற்காக சற்றும் யோசிக்காமல் குளத்தில் குதித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவரும் கரைக்கு திரும்பாமல் தண்ணீரில் தத்தளித்து கொண்டு இருந்துள்ளனர். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்ற அபயக்குரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து குளத்தில் பார்த்துள்ளனர். அங்கு இருவரும் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளனர். உடனடியாக அவர்கள் கிணற்றில் குதித்து இருவரையும் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பிரவீன்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது காதலி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரவீன்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பிரவீன்குமாரின் குடும்பத்தினர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் காதலர்கள் குளத்தில் குதித்ததில் காதலன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- குமரேசனும்-அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர்.
- தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பினார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த செங்கராயன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுசியா (வயது 23). இவர் சென்னை கிளாம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்துள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் 'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் நேரில் சந்தித்தனர். பின்னர் இளைஞரின் சொந்த ஊரான மாங்குடி கிராமத்திற்கு சென்ற காதல் ஜோடியை குமரேசனின் பெற்றோர் ஏற்க மறுத்து திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து குமரேசனும்-அனுசுயாவும் திருச்சி தனியார் விடுதியிலேயே சில நாட்கள் தங்கியிருந்தனர். இந்த தகவலை அறிந்த குமரேசனின் பெற்றோர், அனுசுயாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.
செங்கராயன் கட்டளை கிராமத்திலிருந்து திருச்சி சென்ற அனுசுயாவின் உறவினர்கள், அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர். மேலும் அனுசுயாவை கண்டித்து அவரது செல்போனையும் வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அனுசுயாவை, சின்ன பட்டாக்காடு கிராமத்தில் உள்ள தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இல்லத்தில் கடந்த 10 நாட்களாக தங்க வைத்தனர். சின்ன பட்டாக்காடு கிராமத்தில் இருந்தபடியே அனுசியா, இந்த தகவலை தனது காதலனுக்கு செல்போன் மூலம் ரகசியமாக தெரிவித்துள்ளார். இதையடுத்து காதலன் குமரேசன் வாடகை கார் மூலம் அரியலூர் மாவட்டம் சின்ன பட்டாக்காடு கிராமத்திற்கு தனது நண்பர்களுடன் வந்தார்.
தெருமுனையில் காரை நிறுத்திய குமரேசன் தனது நண்பர்கள் 3 பேரை அனுப்பினார். அங்கு 3 பேரும் அனுசுயா தங்கி இருக்கும் வீட்டில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதுபோல் கையில் மஞ்சள் பை ஒன்றை பிடித்தபடியே நடந்து சென்றனர்.
காதலனின் நண்பர்களை கண்டதும், அக்கா குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்த அனுசியா குழந்தையை அப்படியே விட்டு விட்டு எழுந்து ஓட ஆரம்பித்தார். காரில் காத்திருந்த காதலன் குமரேசனுடன் கைகோர்த்த அவர், சட்டென்று ஏறி வண்டியில் அமர்ந்து கொண்டார். உடனே அவரது நண்பர்களுடன் காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச் சென்றனர். தனது சகோதரி காரில் ஏறி தப்பி செல்வதைக் கண்ட ஐஸ்வர்யா சத்தம் போட்டு கத்தி கூச்சலிட்டார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வருவதற்குள் அனுசியாவை காருக்குள் அழைத்து சென்றதோடு தடுக்க முயன்றவர்களை கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர். அனுசுயா காரில் ஏறி நொடிப் பொழுதில் தப்பிச்செல்வதை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
மேலும் இந்த களேபரத்தில் அனுசியாவின் அக்கா மகளான மித்ராவின் காதுப்பகுதியில் இளைஞர்கள் எடுத்து வந்த கத்தி பட்டதில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளிவந்தது. இதனால் குழந்தை மித்ரா கதறி அழும் காட்சிகளும், மின்னல் வேகத்தில் கார் கிராமத்தினுள் பறந்து செல்லும் காட்சிகளும் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உடனடியாக குழந்தை மித்ரா தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அனுசியாவின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கீழப்பழுவூர் போலீசார், விசாரணை செய்து தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே அனுசியாவுக்கும், குமரேசனுக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டதாகவும், அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
- விசாரணையில் சிறுவன் புதுக்கோட்டையை சேர்ந்தவன் என்பதும் சிறுமி கடலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் திருப்பூர் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் மற்றும் 14 வயதுடைய ஒரு சிறுமியும் எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர்.
சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுவன் புதுக்கோட்டையை சேர்ந்தவன் என்பதும் சிறுமி கடலூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு இருவரும் போன் நம்பரை பரிமாறி கொண்டுள்ளனர். முதலில் நண்பர்களாக பேசி வந்த இருவரும் பின்னர் காதலிக்க தொடங்கினர். கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். வீட்டில் தெரிந்தால் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் இருவரும் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் சந்தித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து எங்கே செல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கி உள்ளனர். போலீசார் இருவரையும் திருப்பூரில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களை திருப்பூருக்கு வரவழைத்துள்ளனர்.
- மனமுடைந்த ஷாலினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
- போலீசார் பொன்னையன் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி சேர்ந்தவர் ஷாலினி (வயது 27). எம்ஏ பட்டதாரி. ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பால்பண்ணை விஸ்வாஸ் நகர் பகுதியைச் சேர்ந்த பொன்னையன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் அந்தப் பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் தனிமையில் சந்தித்தனர். அப்போது திருமண ஆசை காட்டி பொன்னையன் ஷாலினியுடன் உல்லாசமாக இருந்தார். இதில் அவர் கர்ப்பம் ஆனார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு முறையிட்டார்.
அப்போது பொன்னையன் கர்ப்பமாக இருக்கும் போது திருமணம் செய்து கொண்டால் அக்கம் பக்கத்தினர் அசிங்கமாக பேசுவார்கள். கர்ப்பத்தை கலைத்து விடு. நான் உன்னை ஏமாற்ற மாட்டேன் என உறுதி அளித்தார். இதை நம்பிய ஷாலினி தனது கர்ப்பத்தை கலைத்தார். அதன் பின்னர் திருமணத்தை தள்ளிப் போட்டார்.
இதனால் மனமுடைந்த ஷாலினி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே தகவல் அறிந்த பொன்னையன் காதலியை பார்க்க ஓடி சென்று மருத்துவமனையில் அவரை கவனித்துக் கொண்டார். அப்போது மீண்டும் திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்ததால் உறவினர்கள் பிரச்சனையை காவல்துறைக்கு தெரியப்படுத்தாமல் மறைத்து விட்டனர்.
பின்னர் மருத்துவ மனையில் இருந்து ஷாலினி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பின்னர் காதலனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தினார். அதன் பின்னர் பொன்னையன் அவருடன் ஆன உறவை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஷாலினி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினியை சந்தித்து புகார் மனு அளித்தார். பின்னர் கமிஷனர் உத்தரவின் பேரில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் பொன்னையன் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- புவனேஸ்வரி திருமணம் ஆனவர் என தெரிந்தும் அவருடன் சந்துரு பழகி வந்துள்ளார்.
- கண் இமைக்கும் நேரத்தில் வாலிபர் தன் உடலில் தீ வைத்து அதே வேகத்தில் புவனேஸ்வரியையும் கட்டிபிடித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையைச் சேர்ந்தவர் வாசிமலை. கூலித் தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 30). இவரும் மதுரை பேரையூரைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் சந்துரு (வயது 23) என்பவரும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தனர். இவர்கள் பழக்கம் நாளுக்கு நாள் நெருக்கமானது.
புவனேஸ்வரி திருமணம் ஆனவர் என தெரிந்தும் அவருடன் சந்துரு பழகி வந்துள்ளார். இந்த விபரம் புவனேஸ்வரி குடும்பத்துக்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சந்துருவுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். இதனால் மன வேதனையடைந்த சந்துரு நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. உன்னை நேரடியாக பார்க்க உன் வீட்டுக்கே வருகிறேன் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதன்படி நேற்று அவரது வீட்டுக்கு வந்த சந்துரு என்னிடம் ஏன் பேச மறுக்கிறாய்? என கண்ணீர் வடிக்க கேட்டுள்ளார். ஆனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வேடிக்கை பார்த்ததால் இங்கிருந்து உடனடியாக சென்று விடு என அவர் கூறியுள்ளார். அதனை கேட்காமல் சந்துரு தான் மறைத்து கொண்டு வந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி உன் கண் முன்னால் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறினார்.
கண் இமைக்கும் நேரத்தில் தன் உடலில் தீ வைத்து அதே வேகத்தில் புவனேஸ்வரியையும் கட்டிபிடித்தார்.
இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்கள் மீது சாக்குப் போட்டு அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இருவரும் நேற்று யாகத் பாஷா வீட்டுக்கு வந்து விட்டனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வந்தனர்.
விழுப்புரம்:
திண்டிவனம் ரோஷனை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் யாகத் பாஷா (வயது 25). இவரும், செஞ்சியை அடுத்த அஞ்சேரி சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகள் பிரியதர்ஷினி (22) யும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் நேற்று யாகத் பாஷா வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என பிரியதர்ஷியின் தந்தை ஜெயராம் செஞ்சி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வந்தனர். இதை அறிந்த யாகத் பாஷா பிரியதர்ஷினி இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தனர். அவர்களை விசாரித்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். செஞ்சி போலீசார் அவர்களை விசாரித்து விசாரணைக்கு பிறகு 2 பேரையும் யாகத் பாஷா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.






