என் மலர்
திருச்சிராப்பள்ளி
- விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள்.
- விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளது.
கே.கே.நகர்:
இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை (29-ந்தேதி, திங்கட்கிழமை) புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து ராணுவ விமானம் மூலமாக திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று அங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.
பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். இங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்லும் வகையில் அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் திருச்சி விமான நிலையத்தில் இயக்குனர் ராஜூ மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமிஷனர் திலீப் நம்பூதிரி ஆகியோர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் திருச்சி விமான நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள்.
அதற்கு அடுத்தபடியாக விமான நிலைய வாகன நிறுத்தம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்தில் முனைய நுழைவு வாயிலில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் பயணிகளின் உடமைகளை சோதனை செய்து வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து பயணிகளின் உடைமைகள் அதிநவீன ஸ்கேனர் கருவின் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட பின்பு முனையத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
விமான நிறுவனத்தினர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதுகாப்பானது நாளை மறுநாள் (30-ந்தேதி) வரை தொடரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நேற்று முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை முன்னிட்டு ராணுவ விமானம் தரையிறங்கி ஒத்திகை நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
- இந்திய தண்டனைச் சட்டத்தில் ஆன்லைன் மூலமாக கைது என்ற முறை இல்லை.
- இது போன்ற மோசடி மிரட்டலுக்கு படித்தவர்களே ஏமாந்து நிற்பது வருத்தம் அளிக்கிறது.
திருச்சி:
திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57), அரசு அதிகாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர், டெல்லியில் இருந்து பேசுவதாகவும், தன்னை ஒரு போலீஸ் அதிகாரி என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைதான ஒரு முக்கிய புள்ளியிடமிருந்து பல்வேறு வங்கிகளின் 147 ஏ.டி.எம். கார்டுகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. அதில் உங்களின் ஏ.டி.எம். கார்டும் இருக்கிறது. ஆகவே உங்களுக்கும், அவருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் உங்களை ஆன்லைனின் கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) செய்யப் போகிறோம்.
கைது செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை நாங்கள் கூறும் வங்கி கணக்குக்கு அனுப்புங்கள். விசாரணைக்குப் பின்னர் நீங்கள் குற்றவாளி அல்ல என்று தெரியவந்தால் அந்த பணம் விடுவிக்கப்பட்டு மீண்டும் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும் என கூறி உடனடியாக இணைப்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அரசு அதிகாரியான கந்தசாமி அதிர்ச்சியில் உறைந்தார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஒரு மகள் டாக்டராக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. மகளின் திருமணத்துக்காக மனைவியின் நகைகளை அடமானம் வைத்தும், வேறு வகைகளிலும் ரூ.90 லட்சம் பணத்தை தனது வங்கி கணக்கில் இருப்பு வைத்திருந்தார்.
இந்த அபாண்ட குற்றச்சாட்டினால் மகள்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுவிடுமே என கருதி பதட்டத்தில், அவர் அந்த மோசடி பேர்வழியின் மிரட்டலை உண்மை என்று கருதி, பயந்து தனது வங்கி கணக்கில் இருந்த ரூ.90 லட்சம் பணத்தை அந்த நபர் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பி விட்டார்.
செல்போனில் வந்த இந்த மிரட்டல் தொடர்பாக கந்தசாமி தனது மகன், மகளிடமோ அல்லது உறவினர்களிடமோ எந்தவித ஆலோசனையும் செய்யாமல், அவர்களுக்கு தெரிவிக்காமல் பணத்தை அனுப்பியுள்ளார்.
பின்னர் தான் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்ததை எண்ணி வருந்தினார். அதன் பின்னர் தனது நண்பரான வழக்கறிஞர் ஒருவரை சந்திக்க சென்ற போது, கந்தசாமி வழக்கத்துக்கு மாறாக சோர்வாக இருந்ததை பார்த்து என்ன வென்று கேட்டபோது நடந்த சம்பவங்களை கூறி அழுது புலம்பியுள்ளார்.
அதன் பின்னரே திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மோசடி பேர்வழிகள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ஓய்வு பெற்ற அதிகாரிகளை குறிவைத்து ஆன்லைனில் கைது என மிரட்டி பணம் பறிக்கும் நூதன மோசடி சமீபகாலமாக அதிகமாக அரங்கேறி வருகிறது. இது போன்று வாரத்தில் இரண்டு புகார்கள் வருகிறது.
இந்திய தண்டனைச் சட்டத்தில் ஆன்லைன் மூலமாக கைது என்ற முறை இல்லை. இது போன்ற மோசடி மிரட்டலுக்கு படித்தவர்களே ஏமாந்து நிற்பது வருத்தம் அளிக்கிறது. மேற்கண்ட சம்பவத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஆன்லைனில் கைது செய்வது போன்ற வீடியோ காட்சிகளையும் கந்தசாமிக்கு அனுப்பி மிரட்டி உள்ளனர். பதட்டத்தில் பணத்தை அனுப்பியுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் உங்களுக்கு தொடர்பு கொண்டு ஆன்லைனில் கைது அல்லது வேறு காரணங்களை சொல்லி மிரட்டி பணம் கேட்டால் அச்சப்படாதீர்கள். உடனடியாக 1930 என்ற டோல் பிரீ நம்பருக்கு தொடர்பு கொண்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பணத்தை அனுப்பி சில நிமிடங்கள் மட்டுமே ஆகியிருந்தால் அந்த வங்கி கணக்கை முடக்கி பணத்தை திரும்ப பெற முடியும். ஆகவே குடும்ப அவமானம் என்றெல்லாம் எண்ணிக் கொண்டு புகார் அளிக்காமல் இருப்பது மோசடி பேர்வழிகளுக்கு சாதகமாகி விடுகிறது. சமீபத்தில் ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. அதிகாரி ஒருவர் ஆன்லைனில் கைது மிரட்டலுக்கு பயந்து ரூ.27 லட்சத்தை இழந்து தவிக்கிறார் என்றனர்.
- திட்டம் குறித்த விரிவான விவரங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விரிவான ஆய்வுக்காக பொது-தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாரணாசி, புவனேஸ்வரம், அமிர்தசரஸ், ராய்ப்பூர், திருச்சி உள்பட 11 விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதை மத்திய அரசு வேகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் குறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் ஆய்வு செய்தது.
திட்டம் குறித்த விரிவான விவரங்கள், மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான ஆய்வுக்காக பொது-தனியார் கூட்டாண்மை மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி உள்ளிட்ட 5 பெரிய விமான நிலையங்களும், திருப்பதி உள்ளிட்ட 6 சிறிய விமான நிலையங்களுடன் இணைக்கப்பட்டு குத்தகைக்கு விடப்படும் என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து இணை மந்திரி முரளிதர் மோஹோல் ஏற்கனவே கூறியுள்ளார்.
- காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் பூதாகரமாகியுள்ளது.
- நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் தான் காங்கிரசின் அடிபட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள்.
திருச்சி:
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் ஓராண்டுக்கு முன்னரே களத்தில் அனல்பறக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளப்போகும் கட்சியும் தங்களுக்கான கூட்டணியை இன்னும் இறுதிசெய்யாத நிலையில் அத்தனை தொகுதிகளில் வெல்வோம், இத்தனை தொகுதிகளில் வெல்வோம் என்று கூக்குரலிட்டு வருகிறார்கள்.
கடைசி நேரத்தில் கூட்டணியில் மாற்றங்கள் வரும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்தபோதிலும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் ஒரு அணியும், விஜய்யின் த.வெ.க. கூட்டணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு அணியாகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டன. இதர கட்சிகளாக தே.மு.தி.க. தனது கூட்டணி குறித்து வருகிற 9-ந்தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்போம் என்று அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க., பா.ம.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. தொண்டர் மீட்புக்குழு போன்றவை விரைவில் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என கூறியுள்ளன. அதன் அடிப்படையில் 4 முனை போட்டியா அல்லது 5 முனை போட்டியா என்பது வெகுவிரைவில் தெரியவரும்.
கட்சி தொடங்கிய பின்னர் முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விஜயின் த.வெ.க. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்காக அக்கட்சியும் கூட்டணி கதவுகளை திறந்து வைத்துள்ளது.
இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தபோதிலும் அதன் மூத்த நிர்வாகிகள் தற்போது வரை எந்த விமர்சனமும் செய்யாதது சந்தேகங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுசாமி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் பூதாகரமாகியுள்ளது.
இது தொடர்பாக திருச்சி வேலுச்சாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் நான் மட்டுமல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எங்களது மாவட்ட தலைவர், மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசியுள்ளனர். விஜய் பற்றி பேசும்போது அங்கு திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு உள்ளது.
காங்கிரசின் அடிமட்ட தொண்டர்கள் தி.மு.க. மீது கோபத்தில் இருப்பது உண்மைதான். ஒரு இயக்கம் அடிமட்டத்தில் வளர வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். ஆனால் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் அவமானப்படுத்தியதாக தொண்டர்கள் கருதுகிறார்கள்.
பல இடங்களில் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. ஒரு சில இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு அந்த இடங்களிலும் பண பலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்தார்கள். அந்த குமுறல் தான் இன்றைக்கு ஆர்ப்பரிப்பாக வெளிப்படுகிறது. எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கிவிடும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள்.
எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருப்பவர்கள், ஒரு சில பயனாளிகளை தவிர யாரும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிருவரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு மற்ற காங்கிரஸ் கட்சியினரை கீழ்த்தரமாக நடத்துவதாக நினைக்கிறார்கள். கூட்டணி தோழமை என கூறிவிட்டு காங்கிரசை வேரறுக்கும் வேலையைத்தான் தி.மு.க. செய்தது.
நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் தான் காங்கிரசின் அடிபட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள். இது நூற்றாண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் தெரியும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே அது பெருந்தலைவர் காமராஜர் தான். ஆனால் அவரையும் அவமானப்படுத்தினார்கள். ஆனால் தி.மு.க. தலைமை உடனடியாக அதை கண்டிக்கவில்லை. இது போன்ற கோபத்தின் வெளிப்பாடுதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை சரியான முடிவு எடுக்கும் என தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும். காங்கிரசும் அவ்வாறு முடிவு எடுக்கும் என தொண்டர்கள் நம்புகிறார்கள்.
ஒரு சாரார் தி.மு.க. கூட்டணியை விரும்புவதாகவும், மற்றொரு தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியை விரும்புவதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை. அவ்வாறு கூறி காங்கிரசை துண்டாக்க முடியாது. அடிபட்ட காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டுமொத்த மனநிலையும் தி.மு.க. கூட்டணி கூடாது என்பதாகத்தான் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் காங்கிரசை த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க தூண்டுகிறது என்றார்.
- உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
- மிக குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளனர்.
திருச்சி:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வரைவு வாக்காளர் பட்டியல் குறித்து அவர் கூறியதாவது:-
* வாக்குரிமையையே காப்பாற்ற போராட வேண்டிய நிலை உள்ளது.
* உயிரோடு இருப்பவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
* மிக குறுகிய காலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை நடத்தி முடித்துள்ளனர்.
* களத்திற்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது.
* ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் களத்தில் நின்றவர் யார்? என்று கேள்வி எழுப்பினார்.
- கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது.
- கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 மகள்கள் என 4 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.
திருச்சி:
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக போற்றப்படும் ஸ்ரீரங்கத்திற்கு ஆண்டின் அனைத்து நாட்களிலும் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அறை வசதிகள், தங்கும் விடுதிகள், உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் கூடிய யாத்ரி நிவாஸ் கட்டப்பட்டது.
இன்று ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியுள்ளதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் 21 நாட்களும் கண்டுகளிக்கும் வகையில் இந்த யாத்ரி நிவாசில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் (வயது 67) மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி (65) ஆகியோர் தங்களது 2 மகள்களுடன் கடந்த 10-ந்தேதி ஸ்ரீரங்கம் வருகை தந்தனர்.
பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தும் வகையில் அவர்கள் ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாசில் அறை எடுத்து தங்கியிருந்தனர். இதற்கிடையே கடந்த 2 நாட்களாக அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து நிவாஸ் ஊழியர்கள் அந்த அறைக்கு முன்பாக நின்றுகொண்டு பலமுறை கதவை தட்டியும் உள்ளே இருந்து எந்தவிதமான பதிலும் வரவில்லை. அத்துடன் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் உடனடியாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கு கணவன், மனைவி மற்றும் அவர்களது 2 மகள்கள் என 4 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.
உணவில் விஷம் கலந்து அவர்கள் தற்கொலை செய்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
- தி.மு.க. ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை.
- பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.
திருச்சி:
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ சிந்தாமணியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி பல்நோக்கு அலுவலக பயன்பாட்டு கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கல்வியில் சிறந்த மாநிலம் தமிழகம் என தமிழக முதலமைச்சர் கூறியது தரவுகள் அடிப்படையிலேயே தான். தற்போது அது உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் முதலமைச்சர் கூறுவது மாய பிம்பம் என அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழகத்தில் பள்ளி இடைநிற்றல் என்ற தவறான கருத்து பரப்பப்படுகிறது, அது உண்மையில்லை. தமிழகத்தில் ஆரம்ப கல்வியில் இடைநிற்றல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அளவில் உயர்நிலை, மேல்நிலைக் கல்வியில் இடைநிற்றல் 14 சதவீதமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் 7.7 சதவீதமாகவே உள்ளது.
இதில் மாணவர்கள் பலர் பள்ளிப்படிப்பை இடையிலேயே நிறுத்திவிட்டு ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளில் சேருகின்றனர். எனவே இடைநிற்றல் சதவீத கணக்கில் வருகிறது. மேலும் இந்த சதவீதமும் குறையும். தி.மு.க. ஒருபோதும் விளம்பரத்திற்கான அரசாங்கம் இல்லை.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது வேதனைக்குரிய செய்தி. இந்த துயர செய்தி குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பலியான மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டாலும் போன உயிர் திரும்ப வராது. மாணவர் தரப்பில் வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும். இறந்த மாணவனின் சகோதரருக்கு கல்வி சார்ந்த உதவிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
- இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார்.
- நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.
திருச்சி:
திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உறையூர் பகுதி பெருமாள் கோவில் 39-வது வார்டில் நடைபெற்ற 'என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி' கூட்டம் தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் கடந்த பத்தாண்டு காலத்தில் என்னென்ன பணிகள் விடுபட்டு போயிருந்ததோ, அந்தப் பணிகளையும் சேர்த்து இந்த நான்கரை ஆண்டு காலங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை நமக்கு வழங்கி இருக்கிறார். குறிப்பாக நம்முடைய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் சமச்சீரான வளர்ச்சியை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார்.
மத்திய அரசு வேண்டுமென்றே என் மீது வழக்கு தொடுத்து இருக்கிறது. நேருவை அடித்தால் இந்த பகுதியில் தி.மு.க.வை அழித்து விடலாம் என்ற உள்நோக்கத்தோடு அதற்கான பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் ஒரு தவறும் செய்யவில்லை, செய்ததும் இல்லை, செய்யப்போவதும் இல்லை என்ற உறுதியை உங்களுக்கு அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்தில் தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களில் ரூ.1,020 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், அது தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை பரிந்துரை கடிதம் அளித்திருந்தது. அதுதொடர்பாக அவர் கூறுகையில், மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றும், பிரச்சனையை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- மற்ற சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இந்த இரண்டு நேரங்களில் மட்டும் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான சேவைகள் இயக்கப்படுகிறது.
- விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதிக இருக்கைகளை கொண்ட ஏர்பஸ் விமானமாக இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி:
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அதிக அளவில் வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்டவைகளுக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன.
அதேபோல் உள்நாட்டு விமான சேவைகளாக டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகளை இண்டிகோ நிறுவனம் அளித்து வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் சேவைகள் ஏ.டி.ஆர். விமானங்களை கொண்டு இயக்கப்பட்டு வருகிறது.
அதில் குறிப்பாக திருச்சியில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் 6 சேவைகளாக திருச்சி விமான நிலையத்திலிருந்து காலை 7.35, 10.35, மதியம் 12.40, 2.55, இரவு 7.45, 10.15 உள்ளிட்ட நேரங்களில் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. இந்த நிலையில் காலை 10.35 மற்றும் மாலை 5.55 மணிக்கு இயக்கப்படும் இரண்டு சேவைகளை மட்டும் நாளை (16-ந்தேதி) முதல் 31-ந்தேதி வரை இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் விமானங்களை கொண்டு இயக்க உள்ளது.
மற்ற சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இந்த இரண்டு நேரங்களில் மட்டும் திருச்சியில் இருந்து சென்னைக்கு விமான சேவைகள் இயக்கப்படுகிறது. இந்த சேவையானது விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு அதிக இருக்கைகளை கொண்ட ஏர்பஸ் விமானமாக இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவைகள் பொதுமக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இருக்கும் என்று இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
- தேர்தலை குறி வைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
- இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது.
திருச்சி:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடியை தொடுவதாக உள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் ஒரு கோடி மகளிர்க்கு உரிமை தொகை வழங்கி வந்ததாகவும், தற்போது 36 லட்சம் பேரை கூடுதலாக இணைத்து வழங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது?
60 வருடங்களாக இந்த இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் தினமும் ரூ.30 சம்பாதிக்க முடியாத ஒரு நிலையைத் தான் இந்த ஆட்சியாளர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது தானே உண்மை. இன்னும் இரண்டு மாதத்தில் தேர்தல் வருகிறது. ஆகவே தேர்தலை குறி வைத்து கூடுதல் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் விளம்பர அரசியலைத் தாண்டி இவர்கள், சேவை மற்றும் மக்கள் அரசியலுக்கு வரவில்லை, வரமாட்டார்கள். மக்கள் அரசியல் வந்தால் இந்த மக்கள் உழைத்து சம்பாதிப்பதற்கு வசதியை ஏற்படுத்தி இருப்பார்கள். இந்தக் கூடுதல் பேருக்கு மகளிர் உரிமை தொகையை ஏன் கடந்த ஆண்டு கொடுக்கவில்லை?
அதேபோன்று மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினியையும் பிப்ரவரி மாதத்தில் கொடுக்க இருப்பதாக சொல்கிறார்கள். இந்த மக்கள் எப்போது விழிக்க போகிறார்கள் என தெரியவில்லை. பத்து லட்சம் கோடி கடனை ஏற்படுத்தியிருக்கும் தி.மு.க. அரசாங்கம், ஒரு நலத்திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்தி இருக்கிறது என சொல்லுங்கள்.
பஸ்சில் மகளிருக்கு இலவச கட்டணம், அந்த பணத்தை அவரது தந்தை, சகோதரனிடம் வாங்கிக் கொள்கிறார்கள். தன்மானம் மிக்க தமிழன் தனது தாய் ரூ.ஆயிரத்துக்கு கையேந்தி நிற்பதை ஏற்கமாட்டான்.
இவர்களுக்கு தேர்தலுக்கு முன்பாக ஏன் அக்கறை வரமாட்டேன் என்கிறது. தமிழகத்தில் எந்த அமைச்சர் துறையில் ஊழல் நடக்கவில்லை? இடி வந்தால் டாடி, மோடியை பார்க்க ஓடுகிறார். மூன்று நிதி ஆயோக் கூட்டங்களில் கலந்து கொள்ளாத முதல்வர் ஏன் ஓடிச் சென்றார்.
நாட்டின் வளர்ச்சியை பற்றி சிந்திப்பவர்கள் ஜாதி, மதம், கடவுளை பற்றி சிந்திக்க மாட்டார்கள். இதுவரை முருகன் மீது வராத பாசம் ஏன் இப்போது அவர்களுக்கு வருகிறது. காவிரி நீர் பிரச்சனைக்காக இவர்கள் போராட்டம் நடத்தினார்களா?
அயோத்தி பிரச்சனையை வைத்து அரசியல் செய்தார்கள். இப்போது அங்கு ராமர் கோவில் கட்டி விட்டதால் சர்ச்சை நீங்கி அந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததால் முருகனை கையில் எடுத்திருக்கிறார்கள். அதன் மூலம் திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சனையாக்க முயற்சி நடக்கிறது.
இந்தியாவில் ஐந்து ஆண்டுகள் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது பா.ஜ.க. என கருணாநிதி பாராட்டி பேசி உள்ளார். பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு தி.மு.க.வே காரணம்.
பா.ஜ.க.வுக்கு சதி திட்டம் தீட்டி கொடுப்பது தி.மு.க. தான். அவர்கள் வந்து விடுவார்கள் வந்து விடுவார்கள் என பயமுறுத்தி சிறுபான்மை வாக்குகளை தக்க வைக்க தி.மு.க. அரசியல் செய்கிறது.
இந்துக்களின் பாதுகாவலர்கள் என பா.ஜ.க. அரசியல் செய்கிறது. ஆர்எஸ்எஸ் நடத்திய நிகழ்வில் பாரதி குறித்து நான் பேசினேன். தி.மு.க. மேடையிலும் பாரதி குறித்து பேச சொன்னால் பேசுவேன்.
தமிழ் என் தாய். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பான். திராவிட மேடைகளில் 12 ஆண்டுகள் நான் பேசியது அப்போது இனித்ததா?
இவ்வாறு அவர் கூறினார்.
- பாரதியை எங்கு வேண்டுமானாலும் பேசுவேன்.
- பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'விஜில்' என்ற பிரிவு நடத்திய விழாவில், பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா, நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பாரதி கண்ட வந்தே மாதரம்' எனும் தலைப்பில் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், நான் பாரதியின் கொள்கை வாரிசு. பாரதியை நிராகரிக்கும் இடத்தில், என் தமிழ் நிராகரிக்கப்படுகிறது. பாரதியின் புகழைப் பாட, பாகிஸ்தானுக்கு வேண்டுமானாலும் செல்வேன் என்று கூறினார்.
இந்நிலையில் RSS நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பாரதியை எங்கு வேண்டுமானாலும் பேசுவேன்.
* பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்.
* எங்கு பேசினேன் என பார்க்காதே, என்ன பேசினேன் என பாருங்கள்.
* பா.ஜ.க. தலைவர்களை தி.மு.க.வினர் புகழ்ந்து பேசியதை சுட்டிக்காட்டி அவர் பதில் அளித்தார்.
- வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது.
- தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் என் சொந்தம்.
திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முருகன் சைவக் கடவுளா, இந்து கடவுளா. முருகன் என் ரத்தம், என் இன கடவுள்.
சிவனும் முருகனும் இந்து கடவுளா என என்னுடன் விவாரம் செய்யத் தயாரா?
அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சனை தற்போது தீர்ந்துவிட்டதால் தமிழ்நாட்டில் முருகனை வைத்து அரசியல் செய்கின்றனர்.
முருகனை கும்பிட வேண்டாம் என யாராவது உங்களை எதிர்த்தார்களா? எதை வைத்து அரசியல் செய்வது என தெரிய வேண்டாமா?
வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றும் விவகாரத்தை வைத்து திட்டமிட்டு பிரச்சனை உருவாக்குகிறார்கள்.
தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் என் சொந்தம்.
இவ்வாறு அவர் கூறினார்.






