என் மலர்
நீங்கள் தேடியது "சு வெங்கடேசன்"
- இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45% வரையிலும் குறு சிறு நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடந்தேறுகின்றன.
- குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளைப் பெறுவது மிகவும் சிரமமானதாக உள்ளது.
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அமெரிக்க வரிவிதிப்பு நெருக்கடி தீரும் வரை வராக்கடன்களாக அறிவிப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அமெரிக்கா விதித்த கூடுதல் இறக்குமதி வரியின் காரணமாக பல சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSMEs) கடுமையான இன்னல்களுக்குள்ளாகியுள்ளன; இதன் விளைவாக வங்கிக் கடன்களைச் செலுத்த முடியாமல், அவை வராக்கடன்களாக (NPAs) ஆக மாறும் அபாயமும் உள்ளது என எனது கவனத்திற்கு தொழில் முனைவோர்களால் கொண்டு வரப்பட்டுள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி குறு சிறு நடுத்தர தொழில்கள் மீது கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 45% வரையிலும் குறு சிறு நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடந்தேறுகின்றன. ஜவுளி, கடல் உணவு, நகைகள் ஆகிய துறைகள்—அமெரிக்காவுக்கான இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 25% பங்கைக் கொண்டுள்ள இவை - மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்தத் துறைகளில் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு 70% க்கும் அதிக பங்கு உள்ளது. இரசாயன துறையும் கடும் பாதிப்பை எதிர்கொள்கிறது; அந்தத் துறையின் ஏற்றுமதியில் குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு 40% பங்கு உண்டு.
தமிழ்நாட்டில் இத்தாக்கம் மிகவும் கடுமையாக உள்ளது, ஏனெனில் இது ஜவுளி ஏற்றுமதியில் முக்கிய மாநிலமாகும்; இவற்றில் பெரும்பாலான அலகுகள் குறு சிறு நடுத்தர தொழில்களை சேர்ந்தவையே. வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் அறிவுறுத்தலின்படி, விநியோகங்கள் ஒத்திவைக்கப்பட்டதால் திடீரெனக் கையிருப்புகள் அதிகமாகக் குவிந்து வருகின்றன. நூற்பு முதல் உடை தயாரிப்பு வரை உள்ள முழு வழங்கல் சங்கிலியும், இந்த வரிப் போரின் காரணமாக கடந்த மாதத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திலேயே மாற்று ஏற்றுமதி சந்தைகளைப் பெறுவது மிகவும் சிரமமானதாக உள்ளது.
இந்த நிலைமை குறு சிறு நடுத்தர தொழில்கள், வங்கிகளின் கடன் பொறுப்புகளை நிறைவேற்றுவதை கடினமாக்கி கடன் செலுத்த தவறும் கடன்களை வராக்கடன் வகைக்கு தள்ளக்கூடும்; இதன் விளைவாக அந்நிறுவனங்களின் எதிர்காலக் கடன் பெறும் தகுதியும் பாதிக்கப்படும்.
இந்தச் சூழலில், ஒன்றிய நிதியமைச்சரின் உடனடி தலையீட்டை நாடுகிறேன். மேலும், இந்திய ரிசர்வ் வங்கியிடம் (RBI) விதிமுறைகளை தளர்த்தவும், இந்த நெருக்கடியின் போது குறு சிறு நடுத்தர தொழில்களின் கடன் கணக்கை, வராக்கடனாக வகைப்படுத்தாமல் இருக்க வங்கிகளுக்கு அறிவுறுத்த செய்யுமாறும் வேண்டுகிறேன். அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய குறு சிறு நடுத்தர தொழில்களுக்கு மேற்கண்ட இறக்குமதி வரி உயர்வு பிரச்சினையில் சாதகமான தீர்வு கிடைக்கும் வரை இந்த நிவாரணம் தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல...
- பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.
உலகின் முதல் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் கிடையாது என்றும் முதன் முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன்தான் எனவும் பள்ளி மாணவர்கள் மத்தியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாகூர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், மதுரை பாராளுமன்ற தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
முப்பத்தி முக்கோடி தேவர்கள் விண்வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் போது அனுமன்தான் முதன் முதலில் விண்வெளிக்கு போனது என்று அனுராக் தாகூர் கண்டறிந்துள்ளது சாதாரண விசயமல்ல,
பா.ஜ.க.வினரின் அறிவு செயல்பாடு நாளுக்கு நாள் அபாரமாகிக் கொண்டிருக்கிறது.
நீல் ஆம்ஸ்டிராங் பெயரை அறிவியல் பாடத்திலிருந்து நீக்க பிஎம் ஶ்ரீ பள்ளிகளுக்கான சுற்றறிக்கையை தர்மேந்திர பிரதானிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
- ராஜினாமா செய்த தன்கரை அனுப்பிவைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள்?
- அதே இடத்திற்கு புதியவரையும் அனுப்பிவைக்க மாட்டோம் என்று குறைந்தபட்சம் அவரிடமாவது சொன்னீர்களா?
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஏற்கனவே குடியரசு துணைத்தலைவராக இருந்தவர் திடீரென இராஜினாமா செய்தார்.
அதன் பிறகு அவர் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்தான். அக்கட்சியால்தான் அந்நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார்.
அவ்வளவு பெரிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டுப் போனவர் என்னவானார் என்று இதுவரை நாட்டுக்குத் தெரியவில்லை.
இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வரவேற்க டில்லி விமான நிலையத்திற்கு நான்கு ஒன்றிய அமைச்சர்கள் சென்றுள்ளனர்.
ராஜினாமா செய்த தன்கரை அனுப்பிவைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள்? எங்கே அனுப்பிவைத்தீர்கள்?
அதே இடத்திற்கு புதியவரையும் அனுப்பிவைக்க மாட்டோம் என்று குறைந்தபட்சம் அவரிடமாவது சொன்னீர்களா?
பல லட்சம் வாக்காளர்களோடு சேர்த்து குடியரசு துணைத்தலைவரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது.
ஆளையே காணோம் என்ற பதட்டத்தில் நாடு இருக்க இதில் கூசாமல் ஆதரவு கேட்கிறது ஒரு கூட்டம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.
- மத்திய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே.
சென்னை:
மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
*தமிழ் புறக்கணிப்பு*
*இந்தி விசுவாசத்தை காட்டுவதில் ரெயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்?*
மத்திய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.
ஆகஸ்ட் 10, 2025 நடத்தப்பட்ட தென்னக ரெயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
இது மொழி உரிமை மீதான தாக்குதல் ஆகும். மத்திய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே.
ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்.
- இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் அரசு துரிதமாக மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகள், ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை மேலும் அனுமதிக்கக் கூடாது.
சென்னை:
மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிர்ச்சியளிக்கிறது. இடிபாடுகளில் சிக்கிய அனைவரையும் அரசு துரிதமாக மீட்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அறிவியலாளர்களின் எச்சரிக்கைகளுக்கு மாறாக சூழல் கூருணர்வு மிக்க பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.
நிலச்சரிவு அபாயமிக்க பகுதிகள், ஆற்றங்கரைகளில் ஆக்கிரமிப்புகளை மேலும் அனுமதிக்கக் கூடாது.
காலநிலை மாற்றம் கொண்டு வரும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
- ஜெகதீப் தன்கர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது.
- அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார்.
அவர் ராஜினாமா கடிதம் வெளியாகி பல மணிநேரம் கடந்துவிட்டது. அதிகாலையிலேயே தனது அலுவல் பணிகளைத் தொடங்குவதாகக் கூறிக்கொள்ளும் பிரதமருக்கு இன்னுமா செய்தி சென்றடையவில்லை?
பிரதமரும் அமைச்சரவைச் சகாக்களும் இன்னும் மெளனம் காப்பது ஏன்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர்.
- கீழடியில் 102 குழிதோண்டி பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.
சு. வெங்கடேசன் எம்.பி. எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ராஜஸ்தானில் உள்ள பஹஜ் என்ற இடத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளது. பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர். இதே முறையில் ஹரியானாவிலும் இமாச்சல பிரதேசத்திலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார்கள்.
கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.
ஆனால் ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு.
இவ்வாறு சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
- தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம்.
- ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்.
மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழின் தொன்மையையும், கீழடி உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம்.
கண்டறியப்பட்ட உண்மைக்காக இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன்.
ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்;
- மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது.
சென்னை:
புதிய நகைக் கடன் "நகல்" விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமையை பறிக்கிற வகையில் அமைந்திருப்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மே 28, 2025 அன்று சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஜூன் 4, 2025 அன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா பதில் அளித்துள்ளார். அதனை எக்ஸ் தள பக்கத்தில் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் பதில்,
தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே; உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்; இது தொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்பட உள்ளது; சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் பதில் அளித்துள்ளார்.
*முயற்சிகள் தொடரும்*
ஏற்கனவே நான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை சந்தித்து இப் பிரச்சினை மீதான தீர்வைக் கோரிய பின்புலத்தில் அவர் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தார்.
நகல் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் போது நாம் எழுப்பியுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காணப்படுமென்று நம்புகிறேன் என சு.வெங்கடேசன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- பொதுத்துறை, உள்ளாட்சித் துறைத் தணிக்கையை செய்வதற்கு சி.ஏ நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது.
- இந்த நிறுவனங்களைத் தணிக்கை செய்வதில் சி.ஏ.ஜி துறை அதிகாரிகளின் தனித்திறன் நிபுணத்துவமுடையது.
பொதுத்துறை மற்றும் உள்ளாட்சி துறைகளை தணிக்கை செய்ய தனியார் சிஏ நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாமென சிஏஜி அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்முக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார். அதில்,
அண்மையில் சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள ஒரு டெண்டர் அதிர்ச்சியளிக்கிறது. அது பொதுத்துறை, உள்ளாட்சித் துறைத் தணிக்கையை செய்வதற்கு சி.ஏ நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது. கணக்குத் தணிக்கை ஊழியர்களுடன் சேர்ந்து இந்த சி.ஏ நிறுவனங்கள் தணிக்கை செய்வார்களாம்.
இந்தியாவின் உயர்ந்த தணிக்கை அதிகாரியான சி.ஏ.ஜி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்டவர். நாடாளுமன்றத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். அவரது பணி அரசுடைமையான பொதுத்துறை, தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்களை தணிக்கை செய்வது ஆகும். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் (சி.ஏ) செய்யும் தணிக்கையும், சி.ஏ.ஜியின் தணிக்கையும் ஒன்றல்ல. இந்த நிறுவனங்களைத் தணிக்கை செய்வதில் சி.ஏ.ஜி துறை அதிகாரிகளின் தனித்திறன் நிபுணத்துவமுடையது.
அதேபோல் உள்ளாட்சி தணிக்கையும் சிஏஜியின் தணிக்கை வரம்புக்கு உட்பட்டதேயாகும். சுருக்கமாக சிஏஜி என்பவரும், அவரது கணக்குத் தணிக்கைத் துறையும், இந்திய மக்களின் நிதியின் பாதுகாவலர்கள் என்றால் மிகையாகாது.
இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் புரளும் இந்தத் தணிக்கையைத் தனியார் சி.ஏ நிறுவனங்கள் மேற்கொள்ள அழைப்பது என்பது சிஏஜியிடம் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கடமையை மீறுவதாகும். மேலும் இந்த நிறுவனங்களிடம் இருக்கும் ரகசியமான விவரங்களும் தனியார் கைகளுக்குப் போய்ச் சேரும் ஆபத்தும் உண்டு.
சி.ஏ.ஜி எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் பணிபுரிய வேண்டும் என்பதால்தான் அண்ணல் அம்பேத்கார் இயற்றிய அரசியலமைப்புச் சட்டம் அவரைத் தனி உரிமையுடன் வைத்தது. அந்த அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு மாறாக சிஏஜியே தனியாரை துணைக்கு அழைப்பது ஆபத்தானது.
எனவே சி.ஏ.ஜி உடனடியாக இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இந்தத் துறையின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களது நிதியைக் காப்பாற்ற முடியும். எனவே தனியார் சி.ஏ. நிறுவனங்களை அழைத்து வெளியிட்டிருக்கும் அறிவிக்கையை சி.ஏ.ஜி உடனடியாகத் திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் முழுமையாக அம்பலமாகியுள்ளது.
- தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தின் மூலம் உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு ரெயில் திட்டங்கள் முடக்கப்பட்டு, நிதி சரண்டர் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
"தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய ரெயில்வே திட்டங்கள் மீண்டும் சர்வே செய்ய ஏன் மாற்றப்பட்டது?" என்று நான் எழுப்பிய கேள்வியின் உண்மை இப்பொழுது வெளியாகியுள்ளது.
தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் ரெயில்வே வாரியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் முழுமையாக அம்பலமாகியுள்ளது.
தமிழக ரெயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தின் மூலம் உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழக ரெயில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பிங்க் புத்தகம் சென்ற ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின் தான் வெளியிட்டார்கள். இந்த ஆண்டு பிங்க் புத்தகத்தையே ஒழித்து விட்டு தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரங்கள் என்று நீண்ட நாள் கழித்து வெளியிட்டார்கள்.
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கி உள்ளார்கள் என்பதை நான் விமர்சித்த பின்பும் எவ்வளவு ஒதுக்கீடு என்பதையே மறைத்து வந்தார்கள்? சில திட்டங்களை சர்வே திட்டத்திற்கு ஏன் மாற்றியுள்ளார்கள் என்று நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இப்போது தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் ரெயில்வே வாரியத்துக்கு எழுதிய (மே 14 தேதி) கடிதத்தில் முழு உண்மையும் வெளிவந்துவிட்டது. இந்த திட்டங்களை அமல்படுத்தாமல் முடக்கவே இந்த குளறுபடிகளை செய்கிறார்கள் என்று நான் விமர்சித்தது உண்மையென்றாகிவிட்டது.
தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் எழுதியுள்ள கடிதத்தில் ரயில்வே வாரியம் 26. 9 .2019 கடிதம் மூலம் தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதாகவும் (freeze )அந்த திட்டங்களுக்கு இப்போது ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அந்த நிதியை திரும்பவும் சரண்டர் செய்வதாகவும் தெற்கு ரயில்வே கூறி உள்ளது.
திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; அத்திப்பட்டு- புத்தூர் ஆகிய இரு புதிய பாதை திட்டங்களும் ஏற்கனவே முடக்கப்பட்டதாகவும் அதனை விடுவித்தால் தான் (டிஃப்ரீஸ் )பணம் செலவு செய்ய முடியும் என்றும் எனவே இரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தலா ரூபா 42.70 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் எழுதியுள்ளார். வேறு சில திட்டங்களை முடக்க பட்டியலில் இருந்து விடுவிக்கவும் கோரி உள்ளார்.
ஈரோடு- பழனி புதிய பாதை திட்டம். இந்தத் திட்டம் செயல்படுத்த முடியாதது என்றும் அதனை கைவிட வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது. இதற்காக ஒதுக்கிய 52.135 கோடியை சரண்டர் செய்துள்ளார்கள்.
மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி புதிய பாதை திட்டத்தையே ஏற்கனவே முடக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான ஒதுக்கீடு ரூ 55.1667 கோடியை சரண்டர் செய்வதாகவும் கூறியுள்ளார்கள்.
ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்தை சுற்றுச்சூழல் காரணமாக கைவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரி உள்ளது. அதனால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாததால் அதற்கான ஒதுக்கீடு ரூபாய் 5.1239 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் கூறியுள்ளார்கள்.
அதைப்போல மூன்று இரட்டை பாதை திட்டங்களான காட்பாடி -விழுப்புரம்; சேலம்- கரூர்- திண்டுக்கல்; ஈரோடு -கரூர் ஆகியவை இன்னமும் திட்ட தயாரிப்பு கட்டத்தில் தான் உள்ளன எனவே இவற்றுக்கான ஒதுக்கீடு முறையே 200 கோடி 100 கோடி 100 கோடி ஆகியவற்றை செலவு செய்ய முடியாது என்றும் அதனை சரண்டர் செய்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த திட்டங்கள் மூன்றும் சர்வேக்கு மாற்றப்பட்டுள்ளது ஏன் என்று நான் கேட்டது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எனவே தமிழகத்தின் முக்கிய புதிய பாதை மற்றும் இரட்டை பாதை திட்டங்களையும் ஒன்றிய அரசு முடக்கியதை மறைக்கவே பிங்க் புத்தகம் வெளியிடுவதையே தவிர்த்தார்கள்.
தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதை மறைக்க ரயில்வே அமைச்சகம் தமிழக அரசு நிலம் கையகப்படுத்த வில்லை என்று பொய்யான குற்றச்சாட்டு சொன்னதை நாம் பார்த்தோம். தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முடக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும் என கோருகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தங்க நகையின் மீதான மூல ரசீதோ அல்லது உடமை உரிமை ஆவணமோ அவசியம்.
- கடன் பெறுபவரின் திருப்பி செலுத்தும் திறனோடு பொருந்துகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம் என்கிறது ஆர்.பி.ஐ.
சு. வெங்கடேசன் எம்.பி. எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நகைக்கடன் பெறுவது சம்பந்தமாக ரிசர்வு வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது. நகைக்கடன் பெறும்போது
"கடன் பெறுபவரின் திருப்பி செலுத்தும் திறனோடு பொருந்துகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்" என ரிசர்வு வங்கியின் புதிய நிபந்தனை கூறுகிறது.
பெரும்பாலான நகைக் கடன்தாரர்கள் தினக்கூலிகளாக, நிலையான மாதச் சம்பளம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வருமானத்திற்கான ஆவணச் சான்றை காண்பிப்பது என்பது இயலாததாகும். அதுமட்டுமல்ல
நகைக் கடனை பொறுத்தவரையில் அது 100% பாதுகாக்கப்பட்ட கடன் ஆகும். ஆகவே கடன்தாரரின் திரும்பச் செலுத்தும் திறனை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?.
அடுத்ததாக "தங்க நகையின் மீதான மூல ரசீதோ அல்லது உடமை உரிமை ஆவணமோ அவசியம் என்கிறது" புதிய விதிமுறை. தங்க நகைகள் என்பது பல பத்தாண்டுகளாகவோ அல்லது இரண்டு மூன்று தலைமுறையாகவோ இருந்து வரும் நிலையில் மூல ரசீதுக்கோ அல்லது உடமை உரிமை ஆவணமோ பெறுவது எளிதல்ல.
நகைக்கடன் என்பது எளிய, நடுத்தர மக்கள் கடன் பெறுவதற்கான கடைசி புகலிடமாகும். வங்கிகளைப் பொறுத்தவரை நூறு சதவிகிதம் லாபம் ஈட்டுதல் மட்டுமல்ல வராக்கடன் என்கிற பிரச்சனையே இதில் இல்லை. அப்படி இருக்கும் சூழலில் நகைக்கடன் மீது புதிதாக இவ்வளவு கடுமையான விதிமுறைகளை ரிசர்வு வங்கி ஏன் விதித்துள்ளது.
ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ள குறிப்பில் கருத்துகள் பெறுவதற்கான நகல் என்று சொல்லிவிட்டு, அடுத்த பாராவில் "இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
வங்கிகளை பொறுத்தவரை நூறு சதவிகித பாதுகாப்பானது, வராக்கடன் என்பது துளியும் இல்லாத ஒன்று நகைக்கடன். அதனால்தான் இது சம்பந்தமாக வங்கிகளிடமிருந்து எந்த புகாரும் இல்லை. அது மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நகையின் விலை கூடிக்கொண்டேதான் இருக்கிறதே தவிர குறையவே இல்லை. அப்படியிருக்கும் சூழலில் நகைக்கடன் சார்ந்து இவ்வளவு கடுமையான விதிமுறைகளை, அவசர அவசரமாக ரிசர்வு வங்கி விதிப்பதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.
கோடிக்கணக்கான மக்களின் நலனுக்கு எதிரானதாக உள்ள ரிசர்வு வங்கியின் நகைக்கடன் தொடர்பான புதிய நிபந்தனைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கீழ்க்கண்ட மனுவினை அளித்தேன். மனுவில் உள்ள விபரங்களை கேட்டறிந்த நிதியமைச்சர் இதன் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
இவ்வாறு சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.






