என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பாஜக? - எம்.பி. சு.வெங்கடேசன்
- இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே நேற்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
- அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டது என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும். அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்" என்று தெரிவித்தார்.
இதையடுத்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான எந்த அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து தற்போதுவரை பெறவில்லை என தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தனது எக்ஸ் பதிவில், "ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தவும், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் நுழையவும் இந்தியா ஒப்புக்கொண்டது" என்று தெரிவித்தார்.
இந்த பதிவை பகிர்ந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "பிரதமர் மோடி அமெரிக்காவிடம் சரணாகதி அடைந்தார் என்பதை உறுதி செய்கிறார் அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர்.
இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் இருப்பதாகவே நேற்று அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார். ஆனால், அதற்கு மாறாக இந்தியா ஒப்புக்கொண்ட முடிவுகளைப் பட்டியலிடுகிறார் அமெரிக்க அதிகாரி.
இந்தியாவின் நிர்வாகத்தை அமெரிக்காவுக்கு உள் வாடகைக்கு விட்டதா பா.ஜ.க.?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.






