என் மலர்
நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"
- ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா.
- டெல்லியில் பிரதமர் மோடியை நீரஜ் சோப்ரா, அவரது மனைவி ஆகியோர் சந்தித்தனர்.
புதுடெல்லி:
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் ஈட்டி எறிதலில் முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. அவர் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் (கவுரவ) ஆகவும் உள்ளார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியை நீரஜ் சோபரா, தனது குடும்பத்துடன் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று காலை லோக் கல்யாண் மார்க்கில் நீரஜ் சோப்ராவையும் அவரது மனைவி ஹிமானி மோரையும் சந்தித்தேன். விளையாட்டு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து சிறந்த கலந்துரையாடலை மேற்கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.
- நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95% வரை குறையும்
சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், "இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்போது, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும். இது முதலீடுகளை ஊக்குவிக்கும்.
நியூசிலாந்து அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி, உள்கட்டமைப்பு, சேவைகள், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய துறைகளை இலக்காகக் கொண்டு, 20 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டை எளிதாக்க உறுதியளித்துள்ளது
அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 1.1 முதல் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் வரை உயர்த்த இலக்கு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது இந்தியா நியூசிலாந்து இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் வாயிலாக நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 95 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன், "நாங்கள் இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளோம். இது நியூசிலாந்து விவசாயிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு வாய்ப்புகளைத் திறந்து, ஏற்றுமதியை அதிகரித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வருமானத்தை உயர்த்தி, அனைத்து நியூசிலாந்து மக்களும் முன்னேற உதவும்" என்று கூறினார்.
- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி அநேக இடங்களில் முன்னிலை பெற்றன.
- அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. 246 நகராட்சி, 42 நகர பஞ்சாயத்து ஆகிய 288 உள்ளாட்சிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது முதலே பா.ஜ.க கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றன.
இதேபோல, அருணாச்சல பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிரா மக்கள் வளர்ச்சியுடன் உறுதியாக நிற்கின்றனர். நகராட்சி மற்றும் நகர பஞ்சாயத்துத் தேர்தல்களில் பா.ஜ.க. மற்றும் மகாயுதி கூட்டணியை ஆசிர்வதித்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றி. வளர்ச்சிக்கான எங்களின் தொலைநோக்குப் பார்வை மீதான மக்களின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது. மகாராஷ்டிரா மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், புத்துணர்ச்சியுடன் பணியாற்றவும் உறுதி பூண்டுள்ளோம். இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த பா.ஜ.க. மற்றும் மகாயுதி தொண்டர்களுக்கு பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.
இதேபோல, அருணாச்சல பிரதேச உள்ளாட்சி தேர்தல் வெற்றி குறித்து அவர் விடுத்த பதிவில், நல்லாட்சி வழங்கிய அரசுக்கு அருணாச்சலப் பிரதேச மக்கள் அசைக்க முடியாத ஆதரவைக் கொடுத்துள்ளனர். இது மாநிலத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பணியாற்றும் எங்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
- நேற்று முதல் 2 நாட்களுக்கு பிரம்மபுத்திரா நதியில் படகு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- மொத்தம் 45 நிமிடம் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக நேற்று காலை மேற்கு வங்காளம் சென்றார். பின்னர் அங்கிருந்து அசாமிற்கு பிற்பகலில் சென்றார்.
கவுகாத்தியில் ரூ.4000 கோடியில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் வாகன பேரணி நடத்தி பா.ஜ.க. தலைமை அலுவலகம் சென்றார்.
2-வது நாளான இன்று பிரதமர் மோடி அசாம் போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அவருடன் அசாம் முதல்-மந்திரி ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து பிரம்மபுத்திரா நதியில் சொகுசு கப்பலில் பிரதமர் மோடி மாணவர்களுடன் உரையாற்றுகிறார்.
3 அடுக்குகள் கொண்ட எம்.வி.சராய்தேவ்-2 கப்பலில் அவர் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அசாமில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 மாணவர்கள் இதில் பங்கேற்கிறார்கள். மொத்தம் 45 நிமிடம் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதையொட்டி அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதலே பாதுகாப்புபடை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் நேற்று முதல் 2 நாட்களுக்கு பிரம்மபுத்திரா நதியில் படகு சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் கலந்துரையாடலுக்கு பிறகு திப்ருகர், நாம்ரூப் ஆகிய பகுதிகளில் பிரதமர் மோடி ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான அம்மோனியா-யூரியா உரத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
- மோசமான வானிலை காரணமாக பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.
- அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது.
கொல்கத்தா:
மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ள தாஹேர்பூரில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இன்று ஹெலிகாப்டர் மூலம் பயணம் மேற்கொண்டார். ஆனால் அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக, ஹெலிகாப்டரை தரையிறக்க முடியவில்லை.
அதன்பின், பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தாவுக்கு திருப்பி விடப்பட்டது. பிரதமரின் வருகைக்காக மாநாட்டுத் திடலில் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.
இந்நிலையில், மாநாட்டுத் திடலில் காத்திருந்தவர்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. இப்போது மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் காட்டு ராஜ்ஜியத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
ஊடுருவல்காரர்களை அடையாளம் காண உதவும் எஸ்.ஐ.ஆரை திரிணமுல் காங்கிரஸ் எதிர்க்கிறது. ஊடுருவல்காரர்கள் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவில் உள்ளனர்.
அந்தக் கட்சி என்னையும், பா.ஜ.க.வையும் எவ்வளவு வேண்டுமானாலும் எதிர்க்கட்டும், பேசட்டும். ஆனால் மாநிலத்தின் முன்னேற்றத்தை தடுக்கக்கூடாது.
பின்தங்கிய, மேற்கு வங்கத்தின் தொலைதூர பகுதிகளுக்கு நவீன வசதிகளை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். இங்கு வளர்ச்சியைக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்.
மாநிலத்தில் இரட்டை எஞ்சின் அரசாங்கத்தை அமைக்க பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு அளியுங்கள் என தெரிவித்தார்.
- டெல்லி வந்த அதிபர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.
- அதிபர் புதினுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார்.
புதுடெல்லி:
சுகுமார் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தான். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஊர் திரும்பினான்.
கடைக்குச் சென்று கொண்டிருந்த சுகுமாரை எதிரில் வந்த அவனது நண்பன் சுந்தர் பார்த்தான். உடனே, வாடா சுகுமார் எப்படி இருக்கே என கேட்டான் சுந்தர்.
நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்கே என்றான் சுகுமார்.
ஊருக்குப் போயிருந்தியே என்ன விஷயம்? ஊருல எல்லாம் நல்லா இருக்காங்களா என்றான் சுந்தர்.
எல்லாம் நல்லா இருக்காங்க. சரி, நாட்டு நடப்புல என்ன முக்கியமான விஷயம் சொல்லு என ஆரம்பித்தான் சுகுமார்.
கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் இந்திய நாட்டின் மதிப்பு அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் பிரதமர் மோடிக்கும் நல்ல வரவேற்பு அளிக்கிறார்கள். பிரதமரின் வெளிநாட்டு பயணங்களிலும் அந்நாட்டு உயரிய விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இவை எல்லாம் இந்தியாவுக்கு பெருமைதானே என்றான் சுந்தர்.
ஆமாம், அதுபோலவே இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு தலைவர்களுக்கும் நாம் அளிக்கிற மரியாதை உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது தெரியுமா என கூறினான் சுகுமார்.
இந்த ஆண்டு இந்தியா வந்த அதிபர் புதினின் பயணம் உலக அளவில் பெரும் கவனத்தைப் பெற்றது எனக்கூறிய சுந்தர், அதிபர் புதினின் இந்திய பயணம் குறித்து சொல்லியதன் சாராம்சம் பின்வருமாறு:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 ஆண்டுகளைக் கடந்துள்ளது. அதன் காரணமாக உலக அரங்கில் ரஷியா மிகவும் தனிமைப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரஷியா சென்றார். அப்போது, இந்தியாவுக்கு வருமாறு அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்தார். அதிபர் புதினும் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று வருவதாக உறுதியளித்தார்.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமர் புதின் டிசம்பர் 4, 5 ஆகிய இரு தினங்கள் இந்தியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

டிசம்பர் 4-ம் தேதி டெல்லி வந்த அதிபர் புதினை, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். அதிபர் புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும், அணிவகுப்பு மரியாதைம் வழங்கப்பட்டது. இருவரும் ஒரே காரில் பயணம் செய்தது உலக அளவில் கவனம் பெற்றது. அதிபர் புதினுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார்.
தலைநகர் டெல்லியில் நடந்த இந்தியா-ரஷியா இடையிலான 23-வது உச்சி மாநாட்டில் அதிபர் புதினும், பிரதமர் மோடியும் பங்கேற்றனர். அதன்பின், இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்தப் பயணத்தின்போது இந்தியா-ரஷியா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ரஷிய அதிபர் விளாடிமர் புதினுக்கு ஜனாதிபதி மாளிகையில் அரசு சார்பில் விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விருந்தில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த எம்.பி.யான சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
வெளிநாட்டு தலைவர்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வரும்போது, ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மற்றும் மூத்த எம்.பி.க்கள் அழைக்கப்படுவது வழக்கம். இந்த நடைமுறையில் ராகுல் காந்தி அழைப்பில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ரஷிய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அளித்திருந்த பரிசுப் பொருட்கள்:
காஷ்மீர் குங்குமப்பூ, அசாமின் கருப்பு தேயிலை, ஆக்ராவின் பளிங்கு செஸ் செட், கைகளால் வடிவமைக்கப்பட்ட வெள்ளி குதிரை சிற்பம், முர்ஷிதாபாத் வெள்ளி தேநீர் கோப்பைகள், ரஷிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை புத்தகம் ஆகியவை.
இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த பரிசுப் பொருட்கள் பலரது கவனத்தை ஈர்த்தன.

இந்தியாவில் தனது அரசுமுறை பயணத்தை நிறைவு செய்த அதிபர் புதின் ரஷியா புறப்பட்டுச் சென்றார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விமான நிலையத்திற்கு நேரில் சென்று அதிபர் புதினை வழியனுப்பி வைத்தார்.
அதிபர் புதினின் இந்திய பயணம் இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதாக உள்ளது. உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷிய அதிபர் புதின் இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தான்.
பரவாயில்லையே, அதிபர் புதின் - பிரதமர் மோடி இடையிலான நட்பு இரு நாடுகளுக்கும் நல்ல பலனை அளித்தால் சரிதான் என சொன்னபடியே வீட்டுக்குப் புறப்பட்டான் சுகுமார்.
- இதனால் அவர் இந்த பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசுவார் என்று தெரிகிறது.
- பிரதமர் இன்று மாலை அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் மோடி இன்று பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மேற்கு வங்கம் வந்துள்ளார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள தஹெர்பூர் பகுதியில் நடைபெறவிருந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பினார்.
ஆனால் அங்கு நிலவும் அடர் மூடுபனி மற்றும் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் அவரது ஹெலிகாப்டர் கொல்கத்தா விமான நிலையத்திற்கே திரும்பியது.
அடர் மூடுபணியால் தெரிவுநிலை குறைந்து சிறிது நேரம் வானிலேயே வட்டமடித்த ஹெலிகாப்டர், பாதுகாப்பு கருதி மீண்டும் கொல்கத்தா விமான நிலையத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. இதனால் அவர் இந்த பொதுக்கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசுவார் என்று தெரிகிறது.
இந்தப் பொதுக்கூட்டத்தைத் தொடர்ந்து, பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் இன்று மாலை அசாம் மாநிலம் கவுஹாத்திக்கு செல்லத் திட்டமிட்டுள்ளார்.
- டெல்லியில் ரஷிய அதிபர் புதினுடன் மோடி ஒரே காரில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அதிகம் விரும்பப்பட்டு உள்ளது.
- விரும்பப்பட்ட பதிவுகளை கொண்ட முதல் 10 பேர் பட்டியலில் இடம் பெற்ற ஒரே அரசியல்வாதியும் மோடிதான்.
புதுடெல்லி:
கடந்த 30 நாட்களில் எக்ஸ் சமூக வலைதளத்தில் அதிகம் விரும்பப்பட்ட மற்றும் மறுபதிவு செய்யப்பட்ட பதிவுகள் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் பிரதமர் மோடி வெளியிட்ட 8 கருத்துகள் அல்லது படங்கள்தான் அதிகம் விரும்பப்பட்ட மற்றும் மறுபதிவு செய்யப்பட்ட பதிவுகளாக தெரியவந்துள்ளது.
டெல்லியில் ரஷிய அதிபர் புதினுடன் மோடி ஒரே காரில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் அதிகம் விரும்பப்பட்டு உள்ளது. அந்த புகைப்படம் 34 ஆயிரம் மறுபதிவுகளையும், 2 லட்சத்து 14 ஆயிரம் விருப்பங்களையும் பெற்றது.

எக்ஸ் வலைதளத்தில் மோடியின் 8 வலைத்தள பதிவுகளும் சேர்த்து ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 700 மறு பதிவுகளையும், 14.76 லட்சம் விருப்பங்களையும் பெற்றுள்ளன.
இப்படி அதிகம் பகிரப்பட்ட மற்றும் விரும்பப்பட்ட பதிவுகளை கொண்ட முதல் 10 பேர் பட்டியலில் இடம் பெற்ற ஒரே அரசியல்வாதியும் மோடிதான். அவரது 8 பதிவுகளே முதல் 10 இடங்களை ஆக்கிரமித்து உள்ளன.
- பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொள்கிறார்.
- நாடியா மாவட்டத்தில் நெடுஞ்சாலை திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
கொல்கத்தா:
தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தீவிரப்பணிகள் (எஸ்ஐஆர்) நடந்தது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆர்) மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று காலை பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள நாடியா மாவட்டத்தில் நெடுஞ்சாலை திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
இதையடுத்து, இன்று மதியம் அசாம் செல்லும் பிரதமர் மோடி கவுகாத்தியில் அமைக்கப்பட்டுள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறார். மேலும் அசாமில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
- பிரதமர் மோடி கலாச்சாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும், சிற்பங்களையும் பார்வையிட்டார்.
- ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும்.
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திரமான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி தொடங்கியது.
விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் (ஜூலை மாதம் 27-ந்தேதி) பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தார். அவர், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்து வந்தார்.

அங்கிருந்து கோவிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கலாச்சாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும், சிற்பங்களையும் பார்வையிட்டார்.
பின்னர், காசியிலிருந்து பிரதமர் மோடி கொண்டு வந்திருந்த கங்கை நீரைக் கொண்டு பெருவுடையாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, பிரதமர் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து விழா மேடைக்கு வந்த பிரதமருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் கோவில் ஓவியத்தையும், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வீணை ஓவியத்தையும் பரிசாக வழங்கினர். விழாவில் ஓதுவார்கள் தேவாரப் பாடல்கள் பாடினர்.

தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இளையராஜா இசைத்த `ஓம் சிவோஹம்' பாடலை பிரதமர் மோடி ரசித்து மகிழ்ந்தார்.

பின்னர், ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயம், திருவாசக தொகுப்பு நூலை பிரதமர் வெளியிட்டார்.
இதையடுத்து உரையாற்றிய பிரதமர் மோடி, 'வணக்கம் சோழ மண்டலம்' என்று தொடங்கி, 'நமசிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க' என்ற திருவாசகத்தை மேற்கோள் காட்டி தமிழில் பேசினார்.
ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமைக்குரியவர்கள். சோழரசின் வரலாறு மற்றும் பாரம்பரியம் நாட்டின் வலிமையும், திறனையும் பிரதிபலிக்கிறது. சோழர்களின் காலம் இந்திய வரலாற்றில் பொற்காலமாகும். ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில், உலகம் முழுவதும் கட்டிடக் கலையின் அதிசயமாக பார்க்கப்படுகிறது.
சோழர்களின் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சி, தற்போதும் நம்மை ஊக்குவிக்கிறது. ராஜராஜ சோழன் சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழர் அதை மேலும் வலுப்படுத்தினார். சோழர்கள் இலங்கை, மாலத்தீவுகள், தென்கிழக்காசிய நாடுகளுடன் தூதரகம் மற்றும் வர்த்தக உறவுகளை வளர்த்தனர்.

ராஜேந்திர சோழன் கங்கை நீரை பொன்னேரியில் ஊற்றினார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், காசியில் இருந்து கங்கை நீர் தற்போது மீண்டும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு கொண்டுவரப்பட்டது.
சோழர்கள் கடற்படை, வரி அமைப்புகள், நகராட்சி நிர்வாகங்கள் மூலம் வலிமையான அரசை உருவாக்கினர். இந்தியாவின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகம் தற்போது இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளை பார்த்து வியக்கிறது.
சோழ அரசர்கள் பாரதத்தை கலாசார ஒற்றுமை என்ற இழைகொண்டு இணைத்தார்கள். இன்று நமது அரசாங்கம் சோழர்களுடைய இதே கருத்துக்களை முன்னெடுத்துச் செல்கிறது.
தமிழ் கலாச்சாரத்தோடு இணைந்த புனித செங்கோல் பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இன்றைய பாரதம் தனது வரலாற்றின் மீது பெருமிதம் கொண்டிருக்கிறது.
தேசத்தின் கலை சின்னங்கள் களவாடப்பட்டு அயல்நாட்டில் விற்கப்பட்டு விட்டன. இவற்றை நாங்கள் மீட்டெடுத்து வந்திருக்கிறோம்.
2014-ம் ஆண்டுக்கு பின்பு 600-க்கும் அதிகமான தொன்மையான கலை படைப்புகள் உலகின் பல்வேறு தேசங்களில் இருந்தும் பாரதம் வந்தன. இவற்றில் 36 கலைப்பொருட்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
ராஜராஜ சோழன் சக்தி வாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழன் அதை மேலும் பலப்படுத்தினார்.
யாராவது பாரதத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீது தாக்குதல் தொடுத்தால் பாரதம் எப்படிப்பட்ட பதிலடி கொடுக்கும் என்பதை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் உலகமே உற்றுப் பார்த்தது.
ராஜேந்திர சோழன் தனது தந்தையின் கோவிலைவிட உயரம் குறைந்த விமானம் அமைத்தார். இது தாழ்மையின் அடையாளம். அவ்வாறு புகழ்பெற்ற ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று கூறினார்.
- பொய்யான உறுதிமொழி அளிக்கப்பட்டு ரஷிய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படுகின்றனர்.
- இந்த ஆண்டு செப்டம்பர் முதல் உக்ரைன் போர் மண்டலத்தில் குறைந்தது நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 59 பேர் காணாமல் போயுள்ளனர்.
உக்ரைன் உடனான போரில் ரஷிய ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட்டு பணியாற்றிய 2 இந்தியர்கள் அண்மையில் சண்டையில் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் கடந்த புதன்கிழமை இந்தியா வந்தடைந்தது.
இறந்தவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த அஜய் கோதர் (22) மற்றும் உத்தரகண்டைச் சேர்ந்த ராகேஷ் குமார் (30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஒரு வருடம் முன்பு, அஜய் மற்றும் ராகேஷ் இருவரும் மாணவர் விசாவில் ரஷ்யாவுக்குச் சென்றிருந்தனர். அங்கு பொய்யான வேலைவாய்ப்பு உறுதிமொழி அளிக்கப்பட்டு இருவரும் ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராகப் போராட போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த ஆண்டு செப்டம்பர் முதல் உக்ரைன் போர் மண்டலத்தில் குறைந்தது நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 59 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதற்கிடையே நேற்று மாநிலங்களவையில் கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் பதில் அளிக்கையில், ரஷிய ஆயுதப் படைகளில் பணியாற்றிய 26 இந்தியர்கள் இறந்துள்ளதாகவும், ஏழு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்திய குடிமக்கள் இராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்பட மாட்டார்கள் என்று ரஷியா கடந்த ஆண்டு உறுதியளித்த போதிலும், ரஷிய தரைப்படைகளில் இந்தியர்கள் தொடர்ந்து சேர்க்கப்படுவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்து பிரதமர் மோடியுடன் டெல்லியில் இந்தியா - ரஷியா உச்சிமாநாட்டில் கலந்துகொண்டபோதும் தீர்வு எட்டப்படாமல் இந்தியர்களின் உயிரிழப்புகள் தொடர்கின்றன.
- இரட்டை தண்டவாளங்களுடன் அமைந்துள்ள இந்த பால வேலை கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.
- கப்பல்கள் செல்லும்போது இந்த செங்குத்து பாலம் செங்குத்து வடிவில் திறக்கும்.
தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்து உள்ளது ராமேசுவரம். புனித நகரமான இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள்.
ரெயிலில் வருபவர்கள் ராமேசுவரம் செல்வதற்காக மண்டபத்தையும் ராமேசுவரத்தையும் இணைக்கும் வகையில் கடல் மீது ரெயில் பாலம் அமைக்கப்பட்டது.
1914-ல் அமைக்கப்பட்ட இந்த பாலம் சுமார் 2.3 கி.மீ. நீளம் உடையது. இந்தியாவின் முதல் கடல் பாலம் என்ற பெருமையுடையது. நிலப்பரப்பை ராமேசுவரம் தீவுடன் இணைக்கும் இந்த பாலத்தை கப்பல் கடந்து செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுவில் கத்திரி வடிவில் தூக்குகளும் அமைக்கப்பட்டது. கப்பல் வரும்போது அந்த தூக்கு திறந்து கொள்ளும். அதன் பிறகு மூடிக் கொள்ளும்.

இந்த பாலம் நூறு வயதை தாண்டி விட்டதால் இதன் அருகிலேயே கடந்த 2020-ம் ஆண்டில் புதிய பாலம் கட்டுமான பணி தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஏற்பட்ட கடல் அரிப்பின் காரணமாக பழைய பாலத்தில் இருந்த 'ஷெர்ஜர்' தூக்கு பாலத்திலும் விரிசல் ஏற்பட்டது. இதனால் பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில்கள் இயக்குவது நிறுத்தப்பட்டது.
ராமேசுவரம் செல்லும் ரெயில்கள் அனைத்தும் மண்டபம் வரை மட்டுமே இயக்கப்பட்டது. அங்கிருந்து பயணிகள் கடல் மீது அமைந்துள்ள சாலை பாலம் வழியாகவே ராமேசுவரம் சென்று வந்தனர்.
இதனிடையே, பாம்பன் கடலில் ரூ.546 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நடுவில் 650 டன் எடை கொண்ட தூக்குப் பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. கப்பல்கள் செல்லும்போது இந்த செங்குத்து பாலம் செங்குத்து வடிவில் திறக்கும்.
இரட்டை தண்டவாளங்களுடன் அமைந்துள்ள இந்த பால வேலை கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.

அதன் பின்பு பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு ரெயில் போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி பிரதமர் மோடி இந்த பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் ராமேசுவரம் - தாம்பரம் இடையேயான புதிய ரெயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதன் மூலம், இந்தியாவின் மிக நீளமான கடல் பாலங்களில் ஒன்றான பாம்பன் புதிய ரெயில் பாலம், தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்றுப் பாரம்பரியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்துள்ளது. 111 ஆண்டுகள் பழமையான பாம்பன் ரெயில் பாலத்தின் வாரிசாக, புதிய தலைமுறையினருக்கு தமிழ்நாட்டின் பொறியியல் திறமையை எடுத்துக்காட்டும் வகையில் இப்புதிய பாலம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.






