என் மலர்
நீங்கள் தேடியது "செல்வப்பெருந்தகை"
- மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் என்பது காரணம் கிடையாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
- தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இச்சம்பவம் அரசியலாக்கப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
"தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த 2022 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மதமாற்ற அழுத்தம் காரணமாகவே அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அப்போது பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அண்ணாமலை ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறியது, தற்போது சி.பி.ஐ. விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது.
தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது மதமாற்ற அழுத்தத்தினால் இல்லை என்று சி.பி.ஐ. தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வினர் மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தினர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதை சி.பி.ஐ. உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் என்பது காரணம் கிடையாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அண்ணாமலையின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு மூலமாக மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மத அமைதிக்கு கேடு விளைவித்து அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பா.ஜ.க.வின் கீழ்த்தரமான மதவெறுப்பு அரசியல் வெளிப்பட்டிருக்கிறது.
பா.ஜ.க.வின் அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாவட்ட பா.ஜ.க. தலைவர் உள்ளிட்டோர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இது மதமாற்ற தற்கொலை என்று முத்திரை குத்தி, தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இச்சம்பவம் அரசியலாக்கப்பட்டது. மகளை இழந்து துயரத்தில் இருந்த பெற்றோரை ஆறுதல்படுத்தாமல் அவர்களை தவறாக வழிநடத்தி, மகளின் உடலைப் பெற விடாமல் தடுத்து போராட்டக் களத்திற்கு இழுத்து வந்த பா.ஜ.க. தலைவரின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலமாக கல்விச் சேவை மூலம், சிறுபான்மை கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் ஏழை,எளிய மக்களுக்கு ஆற்றி வருகிற தூய்மையான பணியை கொச்சைப்படுத்துகிற வகையில் மதமாற்றத்திற்கு துணை போகிறார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி மதநல்லிணக்கத்தை சீர்குலைத்த அண்ணாமலையின் செயல் சி.பி.ஐ. விசாரணையின் மூலமாக அம்பலத்திற்கு வந்துள்ளது.
இத்தகைய சட்டவிரோத செயல்களை செய்து மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற அன்றைய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆகியோர் மீது தமிழ்நாடு காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். " எனக் குறிப்பிட்டுள்ளார்.
- காங்கிரஸை பலமாக்குவதுதான் எங்களின் வேலை
- முதலமைச்சர் கூறியதுபோல தமிழ்நாடு - டெல்லிக்கு இடையேதான் போட்டி என போராடுகிறோம்
நீண்ட நாட்களாகவே தமிழ்நாட்டின் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் திமுகவை கடுமையாக சாடிவருகின்றனர். அதில் ஒருவர் மாணிக்கம் தாகூர். இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பு நிலவிவந்தது.
நேற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதனைத்தொடர்ந்து மாணிக்கம் தாகூர் மீது தொடர்ந்து எழுந்துவரும் புகார்கள் தொடர்பாக பேச இன்று பெங்களூரு செல்வதாக மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்,
"மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது டிஎன்டி (பிரமலைக்கள்ளர், நரிக்குறவர் உள்ளிட்ட சமூகங்கள் ) சமூகத்தினருக்கு தனியாக ஒரு பத்தியை சேர்க்கவேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை குறித்து தலைமைக்கு தெரியும். ஏற்கெனவே கடந்த 17-ம் தேதி கட்சியின் தலைமையிடம் பேசிவிட்டுதான் வந்தேன்" என தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது
தொடர்ந்து கார்கே, ராகுல் காந்தியைவிட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா? என செல்வப்பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு, அதெல்லாம் அண்ணனையும், தம்பியையும் பொறுத்த அளவில் பெரிய பிரச்சனையில்லை. நாங்கள் எல்லாம் சகோதரர்கள். காங்கிரஸை பலமாக்குவதுதான் எங்களின் வேலை." என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி வருங்காலத்தில் வளர்ச்சிக்காக இருக்க போகிறதா அல்லது வெற்றிக்காக இருக்கப் போகிறதா என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டின் நன்மைக்காக போராடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் முதலமைச்சர் கூறியதுபோல தமிழ்நாடு - டெல்லிக்கு இடையேதான் போட்டி என போராடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் நம்பிக்கை உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்நாடு வெற்றிப்பெறும்." என தெரிவித்தார்.
- மாணிக்கம் தாகூரின் பேச்சு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
- கார்கேவை சந்திக்க மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூரு புறப்பட்டார்.
மதுரையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
இந்த கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், "எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் (திமுக) அரியணையில் ஏறி இருக்க முடியாது என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்ததையும் நாங்கள் மறக்கவில்லை. தோழமையாக இருக்கும்போது நாங்கள் கேட்பது என்னவென்றால், நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களும் எங்களுக்கு அதே மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதுதான். எங்களுக்கு மரியாதை கொடுக்கவில்லையென்றால் திருப்பி அடிப்போம்" என்று தெரிவித்தார்.
மாணிக்கம் தாகூரின் பேச்சு திமுக - காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்திக்க மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பெங்களூரு புறப்பட்டார்.
இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, "மதுரை காங்கிரஸ் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து எனக்குத் தெரியாது. இத்தனை காலம் பேசாமல் தேர்தல் நேரத்தில் சர்ச்சை கருத்தை பேசுவது ஏன்?"
கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது என காங்கிரஸ் தலைமை கூறியுள்ளது. அகில இந்தியத் தலைவர்களை விட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா?
அறைக்குள் பேச வேண்டியதை பொது வெளியில் பேசினால் எப்படி அனுமதிக்க முடியும்? அவர் மீதான புகார் குறித்து ஆலோசிக்கவே பெங்களூரு செல்கிறேன்" என்று தெரிவித்தார்
- கூட்டணியில் இழுபறி எதுவும் கிடையாது. பேசிக் கொண்டு இருக்கிறோம்.
- கூட்டணிக்காக அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தந்து உள்ளோம்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் அறிமுக கூட்டமும் பயிற்சி முகாமும் டெல்லியில் நடக்கிறது. கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.கூட்டணியில் இழுபறி எதுவும் கிடையாது. பேசிக் கொண்டு இருக்கிறோம்.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு என்ன கவலை இருக்கிறது. அ.தி.மு.க. கட்சியை விட்டு விடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள். பா.ஜ.க ஆக்டோபஸ் மாதிரி எல்லா கட்சிகளையும் விழுங்கி இருக்கிறது. அடுத்து விழுங்க போக இருக்கிற கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க.வை முக்கால் வாசி விழுங்கி விட்டது.இன்னும் கொஞ்சம் இருக்கும் கட்சியை விட்டு விடாமல். எடப்பாடி பழ்னிச்சாமி பாதுகாப்பாக வைத்து கொள்வதே பெரிய விசயம்.
அ.தி.மு.க. கூட்டணி மேடை ஏறிவிட்டார்கள் என்கிறீர்கள். கார்ல் மாக்ஸ் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி தலைவர்களும் கைகோர்ந்து இருந்தோம். 18-ந் தேதி எல்லாரும் சேர்ந்து மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளோம். எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.
பா.ம.க.வை சேர்ப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார். பிற கட்சிகளின் பிரச்சினைகளில் காங்கிரஸ் மூக்கை நுழைக்காது. இதை தவறாக பதிவு செய்து உள்ளனர். ஆனால் அதுபோல் எதுவும் சொல்லவில்லை. கூட்டணிக்கு தமிழ்நாடு தலைவராக உள்ள முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார்.
நாடாளுமன்றத்தில் தான் ஜனநாயகம் பிறக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும். பேசவிட மாட்டோம் என்பது சர்வாதிகாரம். நாடாளுமன்ற பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தந்து உள்ளனர்.100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கூட்டணிக்காக அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தந்து உள்ளோம். கட்சி மேலிடம் பேசி கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருங்க்ள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை கூட நீக்குவார்கள்.
- பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணியை தமிழ்நாடு மக்கள் புறக்கணிப்பார்கள்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி சட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியில் பாதயாத்திரை நடைபெற்றது. பின்னர் மரக்கடை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு பேசியதாவது:-
"மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை. ஆனால் நமது மாநிலம் மற்றும் பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை அவர்கள் ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரித்து வழங்குகிறார்கள்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு வைக்கப்பட்டிருந்த தேசத் தந்தை மகாத்மா காந்தி பெயரை நீக்கி இருக்கிறார்கள். ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை கூட அவர்கள் நீக்குவார்கள். அவர்கள் தமிழகத்தை ஒரு போதும் ஆள முடியாது. திருச்சி மலைக்கோட்டை நகரில் இருந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை நாங்கள் பிடிக்க போகிறோம் என உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.
மகாத்மா காந்தி பெயரை மீண்டும் வைக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது. அதற்கான சபதத்தை இன்று ஏற்று இருக்கிறோம். 3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெறுவதற்காக 13 மாதங்கள் போராட்டம் நடத்தி வெற்றி அடைந்ததை போல் இதற்கும் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சுமூகமாகத்தான் இருக்கிறோம். எந்தவிதமான இழுபறியும் இல்லை. காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும், ஆட்சியில் பங்கு போன்றவை குறித்து அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் விருப்பம். நாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்கும் அளவிற்கு தி.மு.க. தலைவருக்கு பெரிய மனது உள்ளது. அதேபோல் ஆட்சியில் பங்கு தரும் மனசும் அவருக்கு இருக்கிறது.
எம்.பி.க்கள் தன்னை தாக்க முயற்சித்தார்கள் என உண்மைக்கு புறம்பான செய்தியை பிரதமர் கூறியுள்ளார். இதுபோல் எந்த பிரதமரும் பேசியதில்லை. பிரதமர் மோடி ஏன் இப்படி பேசுகிறார் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தையும் பா.ஜ.க. அரசு பறித்து விட்டது. பட்ஜெட்டில் ஒரு பைசா கூட தமிழ்நாட்டிற்கு ஒதுக்கவில்லை. பா.ஜ.க-அ.தி.மு.க. கூட்டணியை தமிழ்நாடு மக்கள் புறக்கணிப்பார்கள் என தெரிந்தே தமிழ்நாட்டை அவர்கள் புறக்கணித்து உள்ளார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து ஆட்சியில் பங்கு தருகிறோம் எனக் கூறும் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களா? என்ற கேள்விக்கு நாங்கள் என்ன பங்காளிகளா? பங்கு தருவதற்கு என பதில் அளித்தார்.
- தி.மு.க.மீது எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் முரணும் இல்லை.
- காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்திற்கு முன்மாதிரியான கட்சி.
மதுரையில் இன்று காங்கிரஸ் கட்சி இல்ல திருமண விழாவில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நூறு நாள் வேலை திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியதை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.
தி.மு.க. இது தொடர்பாக போராட்டத்தை அறிவித்து உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கும். கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து ஓரிரு தினங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்படும். தி.மு.க.மீது எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் முரணும் இல்லை.
சட்டமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு, கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். கூட்டணி குறித்து மாவட்ட தலைவர்கள் அல்லது நிர்வாகிகள் பேசுவது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிரானது. எனவே இதனை தவிர்க்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்திற்கு முன்மாதிரியான கட்சி. தங்களது ஆசையை நிர்வாகிகள் வெளிப்படுத்துவதில் தவறில்லை.
தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி என எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். பிரதமர் என்டி.ஏ. கூட்டணி என்று கூறுகிறார். மோடி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா பேசி வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தால் பா.ஜ.க.வினர் இதுபோல பேச முடியுமா?
காங்கிரஸ் கட்சி வருகிற தேர்தலில் தி.மு.க.வுடன் தான் பயணிக்கும். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சபாநாயகர் ஓம்பிர்லா குற்றம்சாட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டிக்கின்றேன்.
- அகிம்சையே காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை.
காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி, சுதா இருவரும் பிரதமரை தாக்க திட்டமிட்டதாக சபாநாயகர் கூறியதற்கு தமிழக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வி ஜோதிமணி, செல்வி சுதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடி தாக்க திட்டமிட்டிருந்தார்கள் என்று உண்மைக்கு புறம்பாக சபாநாயகர் ஓம்பிர்லா குற்றம்சாட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டிக்கின்றேன். அவருக்கு எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் அவைக்கு வந்து சீனா ஊடுருவல் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனைக்கு பணிந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்கட்சிகள் கூறிய நிலையில், இன்று அவர் அவைக்கு வரவில்லை. அதற்கு சபாநாயகர் மேற்கண்டவாறு விளக்கமளித்திருக்கார்.
நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அகிம்சையே காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை. எனவே, அவர் கூறிய அபாண்டமான குற்றச்சாட்டை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.
- ராகுல் காந்தி பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த நடவடிக்கை, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துச் சுதந்திரத்துக்கும் நாடாளுமன்ற மரபுக்கும் எதிரானது.
மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியின் உரிமையை பறிப்பது, அதிகாரத்தை விமர்சனத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியாகும். இது ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும், பொறுப்புணர்வையும் அடக்கும் செயலாகும்.
ஒன்றிய பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு துரோகம் அல்ல. அது ஜனநாயகத்தின் வலிமை. திரு.ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய, இத்தகைய அடக்குமுறைகளை மக்கள் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- வேலையில்லா திண்டாட்டம் தொடர்வதற்கு உற்பத்தித் துறையின் முடக்கம் ஒரு முக்கியமான காரணமாகும்.
- 16 வது நிதிக்குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
2026-2027ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மக்கள் விரோத பட்ஜெட்டாகத்தான் இது அமைந்திருக்கிறது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"2026-27 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை சம்பிரதாய நடைமுறைகளை மீறி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்திருக்கிறார். தனது 83 நிமிட உரையில் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. ஆனால் நாட்டில் நிலவுகிற வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் வருமானத்தை கூட்டுவது, விலைவாசிகளை கட்டுப்படுத்துவது. சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் தருகிற வகையில் எந்த விதமான அறிவிப்பும் வரவில்லை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பின் படி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு 50 சதவீத வரிவிதிப்பில் இருந்து நாட்டில் உள்ள தொழில்களை எப்படி பாதுகாக்க போகிறார் என்பதற்கான எந்த விதமான அறிவிப்பும் இல்லை. நாட்டில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடைந்த வகையில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் எதையும் பட்ஜெட் அறிவிப்பில் காண முடியவில்லை.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 4.2 லட்சம் கோடி. இதில் 30 சதவீதம் சிறு குறு நடுத்தர தொழில்களில் இருந்து வருகிறது. இதை நம்பி 22 கோடி பேரின் வாழ்வாதாரம் இருக்கிறது. அத்துறைக்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறும் ரூ. 10 ஆயிரம் கோடி. இது யானைப் பசிக்கு சோளப்பொரி போட்டது போல் அமைகிறது. கடந்த பட்ஜெட்டில் இதே துறைக்கு ரூ.22 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு அதில் ரூ. 7 ஆயிரம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது. சிறு, குறு தொழில்கள் கடன் பெறுவது தற்போது உள்ள கடினமான நிலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிற பொருட்களை சந்தை படுத்த அந்நிய நிறுவனங்களை தான் நம்பி இருக்கிறது.
அதற்கு மாற்றாக உள்ளூார் சந்தைகள் உருவாக்கப்படவில்லை. இந்த பின்னணியில் கார்ப்பரேட்டுகளின் தயவில் தான் பொருள்களை சந்தைப்படுத்தப்பட வேண்டிய நிலை இருக்கிறது. கார்ப்பரேட்டுகளின் பிடியில் இருக்கிற தரவு மையங்களுக்கு 2047 ஆம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்க வேண்டிய அவசியம்? இதனால் பயனடையப்போகிற கார்ப்பரேட் தொழிலதிபர்கள் யார்? இந்த மையம் உற்பத்தி சார்ந்ததோ, வேலை வாய்ப்பு வழங்குவதோ அல்ல, இது ஒரு தொழில் நுட்ப அமைப்பு.
இந்தியாவில் 25 கோடி பேரை வறுமையில் இருந்து மீட்டு விட்டதாக நிர்மலா சீதாராமன் உரையில் கூறியிருக்கிறார். ஆனால் நம்பகத்தகுந்த சர்வதேச நிறுவனங்கள் வெளியிட்ட வறுமை குறியீடு தாவரிசை பட்டியலில் இந்தியா 109 வது இடத்தில் இருக்கிறது. இந்த பின்னணியில் நிர்மலா சீதாராமன் அறிக்கை என்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.ல நகரங்களிலும், கிராமங்களிலும் வாழ்கிற மக்களிடையே வருமான ஏற்றத்தாழ்வுகள் மோடி ஆட்சியில் அதிகரித்துக்கொண்டே போகின்றன. பெரும்பாலான கிராமங்களில் வாழுகின்ற மக்கள் இதனால் நகரங்களை நோக்கி குடி பெயர்ந்து வருகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 64.9 சதவீதம் பேர் வறுமையின் பிடியில் இருப்பதாக புள்ளி விபரம் கூறுகிறது.
இதில் பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். இவர்களது வாழ்வாதாரத்தை உறுதி செய்யதற்காக நான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் படி ஒவ்யொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. அதனால் 15 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டார்கள். இத்தகைய வறுமை ஒழிப்பு திட்டத்தின் பெயரை மாற்றி புதிய திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இது எப்படி நடைமுறைபடுத்த போகிறார்கள் என்கிற அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
16 வது நிதிக்குழு அறிக்கையை ஏற்றுக்கொண்டதாக நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார். இதில் மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் 41 சதவீதமாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு உற்பத்தித்துறையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. ஆனால் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்கு12.9 சதவீதமாக தான் இருக்கிறது. இத்தகைய குறைவான உற்பத்தியினால் வேலை வாய்ப்புகள் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. வேலையில்லா திண்டாட்டம் தொடர்வதற்கு உற்பத்தித் துறையின் முடக்கம் ஒரு முக்கியமான காரணமாகும்.
எனவே 12 ஆண்டு கால பாஜக ஆட்சியில் 2014 ஆம் ஆண்டு கொடுத்த எந்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகள் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை சட்டபூர்வமாக்குவது போன்ற வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாத நிலையில்தான் 2019, 2024 ஆகிய தேர்தல்களில் மக்களிடையே வகுப்புவாத அரசியலை பயன்படுத்தி வாக்குகளை பெற்று பாஜக ஆட்சியில் அமர்ந்தது. அன்று முதல் இன்று வரை மக்களை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லுகிற உருப்படியான திட்டங்களோ, நிதி ஒதுக்கீடோ இல்லாத ஒரு மக்கள் விரோத பட்ஜெட்டாக தான் இது அமைந்திருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- எல்லா தரவுகளும் வந்த பிறகு, பேச்சுவார்த்தை முடிந்த பிறகு விவரமாக நாங்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுவோம்.
- கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து மாநிலத்தலைவர் நான் கூற வேண்டும்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க.வுடன் நல்ல முறையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த கூட்டணிக்கான நிறைவான முடிவு எடுக்கப்படும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். வதந்திகள் எல்லாவற்றிற்கும் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இது ஒரு இயற்கையான கூட்டணி என்பதை மீண்டும், மீண்டும் அவர் நிரூபித்திருக்கிறார்.
ஆகவே, எல்லா தரவுகளும் வந்த பிறகு, பேச்சுவார்த்தை முடிந்த பிறகு விவரமாக நாங்கள் பத்திரிகையாளர்களிடம் கூறுவோம்.
தேர்தலைப் பற்றி எண்ணிக்கைகள், உடன்பாடுகள் அனைத்தும் எங்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முடிவெடுப்பார்கள்.
கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து மாநிலத்தலைவர் நான் கூற வேண்டும். இல்லையென்றால் அகில இந்திய தலைமை கூறுவார்கள். மீதி பேர் நினைக்கிற கருத்துக்கள் எங்ககிட்ட வந்து சொல்லலாம். பொதுவெளியில் சொல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று பலமுறை நானும் சொல்லியிருக்கிறேன். அகில இந்திய தலைமையும் சொல்லியிருக்கிறது. பொதுவெளியில் கூட்டணியைப் பற்றி பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள் என்றார்.
- எந்தவித ஆயுதமும் இல்லாமல் இந்த தேசத்திற்கு மகாத்மா காந்தி விடுதலையைப் பெற்றுத் தந்தார்.
- காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை வீடு தோறும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.
சென்னை:
இந்திய குடியரசின் 77-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இன்று, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசியதாவது:-
பா.ஜ.க தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி வருகிறது. பா.ஜ.க.வினர் முதலில் வரலாறு படிக்க வேண்டும். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் இந்த தேசத்தின் வரலாற்றைப் படிக்க வேண்டும்.
எந்தவித ஆயுதமும் இல்லாமல் இந்த தேசத்திற்கு மகாத்மா காந்தி விடுதலையைப் பெற்றுத் தந்தார். அகிம்சை முறையில் யாத்திரைகள், பேரணிகள் நடத்தி மகாத்மா காந்தியடிகள் போராடியது பிரிட்டிஷ்காரர்களைக் கலங்கடிக்கச் செய்தது.
இதெல்லாம் தெரியாத பா.ஜ.க அரசும், பா.ஜ.க தலைவர்களும், மோடியும் வரலாறு தெரியாமல் வரலாற்றுப் பிழைகளைச் செய்து வருகிறார்கள்.
இந்தக் குடியரசு தினத்தில் நாம் சபதம் ஏற்போம். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியை காங்கிரஸ் கட்சி தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் வரலாற்றை வீடு தோறும் எடுத்துச் செல்ல இருக்கிறோம்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைச் சிதைக்க நினைக்கும் பிரதமர் மோடி அரசை எதிர்த்து வருகிற 2-ந்தேதி முதல் பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.
சென்னை, கன்னியாகுமரி, கோவை, திருச்சி உள்ளிட்ட பல மண்டலங்களை உருவாக்கி, மண்டலங்கள் வாரியாகப் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், மாநிலத் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், இதயத்துல்லா, பொதுச்செயலாளர் எஸ்.ஏ.வாசு, சுமதி அன்பரசு மாவட்டத் தலைவர்கள் கராத்தே ஆர்.செல்வம், ஜெ.டில்லிபாபு, திலகர், கவுன்சிலர் சுமதி புத்தநேசன், மாநிலச் செயலாளர் அகரம் கோபி, எம்.ஜி.ராம்சாமி, கராத்தே ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மத்திய சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் அண்ணா நகர் தொகுதி 2-வது சர்க்கிள் சார்பில் எம்.ஆர்.ஏழுமலை தலைமையில், மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் எம்.எம்.டி.ஏ.கோபி, தேசியக்கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், பூக்கடை ஏ.தேவேந்திரன், எம்.தி.சேகர், என்.தாமஸ், பாலன், சண்முகம், காடகிருஷ்ணன், ராகுல் காந்தி, சுபாஷ், லெனின் குமார், சந்தன் பாபு, ஈஸ்வரன், சந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இபிஎஸ் பெயரை சொல்லவே டிடிவி தினகரன் தயங்குகிறார்.
- தற்போதுவரை பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை கொடுக்கவில்லை.
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 49-வது சென்னை புத்தக கண்காட்சியை கடந்த 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த இந்த புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இன்று புத்தக கண்காட்சியை காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த கண்காட்சி பலருக்கும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் அ.ம.மு.க. தே.ஜ.கூட்டணியில் இணைந்தது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,.
"இயற்கைக்கு முரணான கூட்டணி. தமிழ்நாடு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. ஒருநாளும் மக்கள் அந்தக் கூட்டணியை ஏற்கமாட்டார்கள். நேற்றுவரை இபிஎஸ்-க்கு துரோகி பட்டத்தை கொடுத்துவந்தார் டிடிவி தினகரன். இனி எப்படி அவருடன் வாக்கு கேட்பார், களம் காண்பார்? இன்று அவரது பெயரை சொல்லவே தயங்குகிறார். தற்போதுவரை பள்ளிக்கல்வித்துறைக்கான நிதியை கொடுக்கவில்லை. ரூ.3400 கோடி வரை நிலுவையில் உள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் இந்த நிதி விடுவிக்கப்படும் என கூறுகிறார்கள். அவர்கள் எப்படி தமிழ்நாட்டு மக்களிடம் வாக்கு கேட்பார்கள்? இந்த கூட்டணியின் படையெடுப்பை தமிழ்நாடு மக்கள் முறியடிப்பார்கள்." என தெரிவித்தார்.






