என் மலர்
நீங்கள் தேடியது "மத்திய பட்ஜெட் 2026"
- ராணுவத்தில் தங்களது முழு பணிக்காலத்தையும் முடித்துவிட்டு ஓய்வுபெற்ற வீரர்கள், பணி காலத்தில் மாற்றுத்திறனாளி ஆகியிருந்தாலும் வரி விலக்கு கிடையாது.
- முதலில் அக்னிவீர் திட்டம் நாட்டின் பாதுகாப்பைச் சிதைத்தது, இப்போது மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்தின் மீதான இந்தத் தாக்குதல் ராணுவ வீரர்களின் மன உறுதியைக் குறைக்கும்.
2026-27 பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான வருமான வரி விலக்கை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இதற்கு நாடு முழுவதும் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பட்ஜெட் அறிவிப்பின்படி, உடல் குறைபாடு காரணமாக ராணுவ சேவையிலிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட வீரர்களுக்கு மட்டுமே இனி வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
ராணுவத்தில் தங்களது முழு பணிக்காலத்தையும் முடித்துவிட்டு ஓய்வுபெற்ற வீரர்கள், பணி காலத்தில் மாற்றுத்திறனாளி ஆகியிருந்தாலும், அவர்களுக்கு இனி அந்த ஓய்வூதியத்திற்கு வரி விலக்கு கிடையாது.
பெரும்பாலான மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களது பணிக்காலத்தை முடித்த பிறகே ஓய்வு பெறுகிறார்கள். எனவே அரசின் இந்த முடிவால் பலர் பாதிக்கப்படுவர்.
பணியின் போது காயமடைந்து அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளி ஆகும் வீரர்களுக்கு, நிர்வாகப் பணிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அவர்கள் ஓய்வு பெறும்போது வரி விலக்குடன் கூடிய கூடுதல் ஓய்வூதியம் மற்றும் மருத்துவச் சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.
தற்போது அந்த வரி விலக்குச் சலுகையை அரசு பறிக்கப்பட்டுள்ளது நாட்டின் பாதுகாப்பிற்காகப் போராடி ஊனமுற்ற வீரர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருப்பதாகப் முன்னாள் ராணுவ வீரர்கள் அமைப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.
முன்னாள் மேஜர் ஜெனரல் ஷைல் ஜா இது குறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில், "முதலில் அக்னிவீர் திட்டம் நாட்டின் பாதுகாப்பைச் சிதைத்தது, இப்போது மாற்றுத்திறனாளி ஓய்வூதியத்தின் மீதான இந்தத் தாக்குதல் ராணுவ வீரர்களின் மன உறுதியைக் குறைக்கும்" என்று விமர்சித்துள்ளார்.
- ரூ.11.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
- மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சென்னை கொளத்தூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.11.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையத்தையும் திறந்து வைத்தார்.
கொளத்தூர் தொகுதியில் கட்டப்பட்டுள்ள மறுவாழ்வு மையம், நியாய விலைக்கடைகளை அவர் திறந்து வைத்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. வரும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.
- அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
- அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது. பட்ஜெட்டில், பங்குகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான வரி சற்றே உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் முதியீட்டாளர்கள் பீதியடைந்தனர்.
எனவே மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி சுமார் 500 புள்ளிகள் வரை சரிந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.
இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம். இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
டிரம்பின் இந்த அறிவிப்பால் இன்று இந்திய பங்குச்சந்தை தாறுமாறாக உயர்ந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 4000 புள்ளிகள் வரையும் தேசிய பங்குச்சந்தை எண் நிஃப்டி 1200 புள்ளிகள் வரையும் உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது.
11 மணிநேர நிலவரப்படி சென்செக்ஸ் 84,000 புள்ளிகளிலும் நிஃப்டி 25,750 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது.
- மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.
- மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது.
மத்திய பட்ஜெட் குறித்த கேள்விக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர்,
ராணிப்பேட்டை, மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டத்தில் மருத்துவக்கல்லூரி வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து இருந்தோம்.
இந்த மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு இடம் பெறும் என எதிர்பார்த்தோம்.
அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பா.ஜ.க. சார்பில் சர்பானந்த சோனோவால் விவாதத்தை தொடங்கி பேசவுள்ளார்.
- இந்த விவாதத்திற்காக மொத்தமாக 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வாரம் (ஜன. 28) குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றினார்.
2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று (பிப். 1) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த விவாதம் இன்று (பிப். 2) மக்களவையில் தொடங்குகிறது. இந்த விவாதம் பாராளுமன்றத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

பா.ஜ.க. சார்பில் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால், இந்த விவாதத்தை தொடங்கி பேசவுள்ளார். அவரை தொடர்ந்து, தேஜஸ்வி சூர்யா இந்த நன்றி தீர்மானத்தை ஆதரித்து உரையாற்ற உள்ளார்.
இந்த விவாதத்திற்காக மொத்தமாக 18 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களவைச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைக்கவுள்ளனர்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற பிப்ரவரி 4ஆம் தேதி பதிலளிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- வருமான வரி சலுகையை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டே போதுமான சலுகைகளை அறிவித்துவிட்டார்கள்.
- கண்டெய்னர் உற்பத்திக்கு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார்கள்.
சென்னை:
மத்திய அரசின் பட்ஜெட்டில் வருமான வரி சலுகை அறிவிப்புகள் இடம்பெறாதது குறித்து, பொருளாதார நிபுணர் ராமசேசன் கூறியதாவது:-
நடுத்தர மக்கள் எப்போதும் வருமான வரி சலுகையை எதிர்பார்ப்பார்கள். இந்த பட்ஜெட்டில் வருமான வரி சலுகை அறிவிப்பு எதுவும் இல்லை.
தற்போதுள்ள சூழலில் பொருளாதாரத்தில் நிலையான தன்மையை தக்க வைத்து கொள்வது அவசியம் என்ற அடிப்படையில் இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு டிரம்ப் விதித்த 50 சதவீத வரி தான் காரணமாகும். இந்தியா அதிகளவு இறக்குமதியும், குறைந்த அளவு ஏற்றுமதியும் செய்கிறது. இதை சரி செய்வதற்கு நிலையான அறிவிப்புகளை மட்டுமே வெளியிட முடியும்.
வருமான வரி சலுகையை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டே போதுமான சலுகைகளை அறிவித்துவிட்டார்கள். எனவே, இந்த ஆண்டு மேலும் வருமான வரி சலுகைகளை கொடுக்க முடியாத நிலை இருக்கிறது.
பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டே சில துறைகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.
சீனா தயாரிக்கும் 'செமி கண்டக்டர்' மீது மற்ற நாடுகளுக்கு நம்பிக்கை இல்லாததால் செமி கண்டக்டர் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்திக்கு, இந்த பட்ஜெட்டில் ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மிகப்பெரிய தொழில் மாற்றத்தை உண்டாக்கும். கண்டெய்னர் உற்பத்திக்கு ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளார்கள். இதன் மூலம் ஏற்றுமதிக்கு தேவையான செலவினம் குறையும்.
உற்பத்தி அமைப்புகளுக்கு தேவையான அறிவிப்புகள் அனைத்தும் தற்போதைய பட்ஜெட்டில் வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது வரவேற்கக்கூடிய பட்ஜெட்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப்படவில்லை.
- கூடுதல் வருமான வரிச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
ஒன்றிய அரசின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை எரியும் பொருளாதார பிரச்சனைகள் எதற்குமே தீர்வு காண்பதாக அமையவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளர்ச்சி, மக்களின் எதிர்பார்ப்புகள், அனைவருக்குமான பயன் என்பதை மூன்று குறிக்கோள்கள் என நிதிநிலை அறிக்கை உரையை நிதியமைச்சர் துவங்கினாலும் அது உண்மையில் கார்ப்பரேட் வளர்ச்சி, செல்வந்தர்களின் எதிர்பார்ப்புகள், பெரும்பான்மை மக்களிடமிருந்து பறிப்பு என்பதாகவே அமைந்திருக்கிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, செல்வக்குவிப்பிற்கு வழிவகுக்கிற இன்னொரு நிதிநிலை அறிக்கையாகவே இது அமைந்திருக்கிறது. ஆகவே, எளிய நடுத்தர மக்களின் நலனுக்கோ, சிறு தொழில்களை நெருக்கடியிலிருந்து மீட்கவோ, கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கோ இந்த நிதிநிலை அறிக்கை உருப்படியான முன்மொழிவுகள் எதையும் உள்ளடக்கியதாக இல்லை.
நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான பகுதியாக திகழும் வருமான வரி திரட்டல் வர்க்க பாரபட்சத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் 10 சதவிகித மேல் தட்டு மக்கள் 65 சதவிகித செல்வத்தை வைத்துள்ள நிலையிலும் செல்வ வரி போன்ற ஆலோசனைகளை கருத்தில் கொள்ளவில்லை. கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப்படவில்லை. மறுபுறம் மத்தியதர ஊழியர்களின் எதிர்பார்ப்பான கூடுதல் வருமான வரிச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. வருமான வரிகளின் பங்கு கார்ப்பரேட் வரிகளை விட மொத்த வரி வசூலில் அதிகமாக உள்ளது. ஜிஎஸ்டி வரிச் சலுகைகள் அறிவித்ததாக இந்த அரசு பறைசாற்றி கொண்டாலும் வருவாய் திரட்டலில் பெருமளவு மறைமுக வரிகள் வாயிலாகவே வசூலிக்கப்படுவது சாதாரண மக்கள் மீதே சுமைகளை ஏற்றுவதாக உள்ளது.
கிராமப்புற மக்களுக்கு இந்தநிதிநிலை அறிக்கை வஞ்சனை இழைத்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை ஒழித்து, 100 வேலை நாட்களாக இருந்ததை 125 நாட்களாக உயர்த்தப்படுவதாக படாடோபமாக அறிவித்தாலும், அதற்கான ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. ஆண்டிற்கு 125 வேலை நாட்களை சராசரி நாட்கூலி ரூ 355 என்பதை கொண்டு கணக்கிட்டால் 9 கோடி பயனாளிகளுக்கு ரூ 4 லட்சம் கோடி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் வி பி ஜி ராம் ஜி திட்டத்திற்கு ரூ 95692 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. நான்கில் ஒரு பங்கு கூட இல்லை எனும் போது அரசின் பொய்மைகள் அம்பலம் ஆகியுள்ளன. கிராமப்புற மேம்பாட்டிற்கு ரூ 8000 கோடி அதாவது 4 சதவிகிதம் மட்டுமே கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பணவீக்கத்தோடு ஒப்பிடும்போது அதிகரிப்பல்ல, உண்மை மதிப்பில் வெட்டே ஆகும். கடந்தாண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளை விட கிராம சாலைகள் மேம்பாடு, கிராமப்புற மக்கள் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றுக்கான திருத்திய மதிப்பீடுகள் குறைவாக உள்ளன. நிதிநிலை அறிக்கையில் குறைவாக ஒதுக்கப்படும் தொகைகள் கூட இன்னும் குறைவாகவே மக்களுக்கு போய்ச் செல்கின்றன.
அமெரிக்காவின் 50 சதவிகித இறக்குமதி வரிகளும், அச்சுறுத்தப்படும் 500 சதவிகித உத்தேச வரிகளும் இந்திய நாட்டின் சிறுதொழில்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில் அவற்றின் மீட்சிக்கான நம்பிக்கையான அறிவிப்புகள் எதுவும் இல்லை. சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி நிதியத்திற்கு 10000 கோடி, சுயசார்பு இந்தியா நிதியத்திற்கு ரூ 2000 கோடி என்ற அறிவிப்புகள் எல்லாம் யானை பசிக்கு சோளப் பொரி போன்றதே ஆகும்.
இந்திய நாட்டின் பெரும் பிரச்சனையாக உள்ள வேலையின்மைக்கு நிதிநிலை அறிக்கை உரிய கவனம் எதுவும் செலுத்தவில்லை. 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் 14 சதவிகித வேலையின்மை நிலவுகிற சூழலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமும், வேலை வாய்ப்பு ஊக்கத்தொகை திட்டமும் கார்ப்பரேட்டுகளுக்கு பயனளித்துள்ளனவே தவிர, வேலை வாய்ப்புகளில் பிரதிபலிக்கவில்லை. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான பொது முதலீடுகள் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்கிற சூத்திரமும் நடைமுறையில் பொய்த்து போய் உள்ளது. கல்வி, சுகாதார ஒதுக்கீடுகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்போடு ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க உயர்வும் இல்லை.
பொதுத்துறை பங்கு விற்பனைக்கு 80000 கோடி ரூபாய் இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் பங்குகளை 51 சதவிகிதத்திற்கும் கீழே 26 சதவிகிதம் வரை கூட குறைக்கலாம் என்பதும் அபாயகரமான முன்மொழிவு. அரசு உடமை என்பதிலிருந்து அரசின் கட்டுப்பாடு என்பதாக தரம் இறக்குவது எதிர்காலத்தில் முழுமையாக தனியார்கள் வசம் ஒப்படைப்பதற்கான திட்டமே தவிர வேறொன்றுமில்லை. இத்தகைய முன்மொழிவு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி ஏற்பாடுகள் மீதும் கடும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டின் நீண்ட கால கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரயில்வே திட்டங்களில் வஞ்சனை தொடர்ந்து உள்ளது. அரிய வகை கனிம வளங்கள் பற்றிய அறிவிப்பு கார்ப்பரேட் சுரண்டலுக்கான வழி ஏற்படுத்திக் கொடுப்பதே ஆகும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கீழடிக்கான எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டில் உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, எந்த வகையிலும் தேசத்தின் நலனுக்கோ, மக்களின் வாழ்வுக்கோ, தமிழ்நாட்டின் உரிமைக்கோ உதவாத இந்த நிதிநிலை அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை எதிர்த்து மக்கள் அனைவரும் கண்டன குரல் எழுப்பிட முன்வருமாறு அனைத்து பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது
- பௌத்தச் சுற்றுலா வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தில் ஒடிசா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் குழப்பமளிக்கிறது.
ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"ஒன்றிய அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட் மீதான எனது ஏமாற்றத்தை இங்கு வெளிப்படுத்துகிறேன். இந்த பட்ஜெட் ஒடிசா மாநிலத்திற்கும், அதன் மக்களுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகள் எதையும் வழங்கவில்லை.
இரட்டை என்ஜின் அரசு, உள்கட்டமைப்பு வசதிகள், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் என்று ஒடிசா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாநிலத்திற்கு மிகக் குறைந்த அளவே கிடைத்துள்ளது.
ஒடிசாவில் அரிய மண் தாது வழித்தடத்தை அமைப்பதற்கான முன்மொழிவை நான் வரவேற்கிறேன். ஒடிசா பல முக்கிய கனிமங்களை உற்பத்தி செய்வதில் முன்னணி மாநிலமாக உள்ளது. மேலும் தனது வளமான இயற்கை வளங்கள் மூலம் தேசத்தை கட்டியெழுப்பும் பணிகளில் எப்போதும் தனது பங்களிப்பை வழங்கும்.
கனிம வளம் நிறைந்த பகுதிகள் மற்றும் தொழில் மையங்களைத் துறைமுகங்களுடன் இணைக்க தேசிய நீர்வழிகளை அமைப்பதாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பே இது அறிவிக்கப்பட்டதுதான். தற்போது வரை காகித அளவில் மட்டும்தான் இருக்கிறது. களத்தில் எந்த பணியும் நடக்கவில்லை.
ஏழு அதிவேக ரயில் வழித்தடங்களை உருவாக்கும் அறிவிப்பில் ஒடிசா இடம்பெறாதது ஒடிசா மக்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒடிசா பாஜக ஏற்கனவே புவனேஸ்வர் மெட்ரோ திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டது; மக்களின் தேவைகளைப் புறக்கணிப்பது வழக்கம் போல இப்போதும் தொடர்கிறது.
எங்களது டைமண்ட் ட்ரையாங்கிள் உள்ளிட்ட மிக முக்கியமான பல பௌத்தத் தலங்கள் இருந்தபோதிலும், பௌத்தச் சுற்றுலா வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தில் ஒடிசா முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் குழப்பமளிக்கிறது.
மத்திய பட்ஜெட்டை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஒடிசாவின் இயற்கை வளங்களை வெளியே கொண்டு செல்வதற்கான பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; ஆனால், மக்கள் நலனுக்கான நிதி ஒதுக்கீடு என்று வரும்போது ஒடிசா முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
மாநில பாஜக அரசு ஒடிசா மக்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டிய நேரமிது; மத்திய அரசிடமிருந்து மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் ஒடிசாவும் அதன் மக்களும் இன்னும் சிறப்பான திட்டங்களை பெற தகுதியுடையவர்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய அரசின் தொடர்ச்சியான பாகுபாடு மற்றும் கேரள மீதான புறக்கணிப்பை அம்பலப்படுத்துகிறது
- கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்தப் புறக்கணிப்பு குறித்துப் பதிலளிக்க வேண்டும்
2026-27ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, மத்திய அரசின் தொடர்ச்சியான பாகுபாடு மற்றும் கேரள மீதான புறக்கணிப்பை அம்பலப்படுத்துகிறது என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவும் இந்தியாவின் வரைபடத்தில் இருப்பதை நிர்மலா சீதாராமன் மறந்துவிட்டதாகவும், வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் "கேரளாவின் நீண்ட கால கோரிக்கைகளான எய்ம்ஸ் மருத்துவமனை, 7 அதிவேக ரயில் வழித்தடங்கள் மற்றும் விழிஞ்சம் துறைமுகத்திற்கான சிறப்புத் தொகுப்புத் திட்டம் ஆகியவை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன" என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வு 41 சதவீதத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், சாதாரண மக்களை வறுமையில் தள்ளும் வகையிலும் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இந்தப் புறக்கணிப்பு குறித்துப் பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- அரசும், நிதி அமைச்சரும் 2025-26-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை படித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை.
- அமெரிக்கா விதித்துள்ள வரிகள் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு அழுத்தத்தை உருவாக்கியுள்ளன.
மத்திய அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"அரசும், நிதி அமைச்சரும் 2025-26-க்கான பொருளாதார ஆய்வறிக்கையை படித்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் அதைப் படித்திருந்தால், அதை முழுமையாகத் நிராகரித்துவிட்டு, வழக்கமாக மக்களுக்கு புரியாத வார்த்தைகளை, குறிப்பாக சுருக்கப்பெயர்களை வீசியெறியும் தங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கிற்குத் திரும்பியதாக தெரிகிறது.
பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பல அறிவுசார் வல்லுநர்களால் அடையாளம் காணப்பட்ட குறைந்தது 10 சவால்களை என்னால் எண்ணிச் சொல்ல முடியும். அமெரிக்கா விதித்துள்ள வரிகள் உற்பத்தியாளர்களுக்கு, குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு அழுத்தத்தை உருவாக்கியுள்ளன. வளர்ந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை, குறிப்பாக சீனாவுடனான வர்த்தகம், இந்தியாவிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீட்டின் நிச்சயமற்ற போக்கு மற்றும் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிறுவன முதலீடு இவை எதையுமே நிதி அமைச்சரின் உரை கையாளவில்லை.
எனவே, கைதட்டல்கள் கடமைக்காக இருந்ததிலும், பெரும்பாலான பார்வையாளர்கள் விரைவிலேயே அதிலிருந்து கவனத்தைத் திருப்பியதிலும் ஆச்சரியமில்லை. சன்சத் டிவி ஒளிபரப்பு கூட சில முறை துண்டிக்கப்பட்டது. ஒரு கணக்காளரின் தரப்பிலிருந்து பார்த்தால் கூட, 2025-26 நிதி நிர்வாகத்தைப் பற்றிய மிக மோசமான அறிக்கையாகவே இது இருந்தது..." என தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை
- இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி பல்வேறு வகைகளில் விலைவாசி உயர்வை தூண்டி வருகிறது
மத்திய பட்ஜெட் யானைப் பசிக்கு சோளப்பொறி போல் உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இதன்மூலம் திமுக கூட்டணியில் பிரேமலதாஇணைவார் என்ற தகவல் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
மத்திய பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இணைக்கும் பிரத்யேக சரக்கு எயில் பாதை அமைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. புதிதாக அதிவேக ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும் திட்டமும் போக்குவரத்து வளர்ச்சிக்கு முக்கியமான படியாகும். சென்னை -பெங்களூர் மற்றும் ஐதராபாத் சென்னை இடையே அதிவேக ரயில் பாதை அமைப்பது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். செமி மின்னணுவியல் வளர்ச்சி திட்டம் பல லட்சம் இலைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திறன் கொண்டது.
நகரங்களை ஒட்டி உற்பத்தி மையங்களை உருவாக்க ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை உடணடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவது அவசியம். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பது தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமாகும். பால் உற்பத்தி மற்றும் கோழி வளர்ப்பு, தேங்காய் உற்பத்தி தொடர்பான திட்டங்கள் கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்தும். மாற்றுத் திறணயிகளுக்கு உதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படுவது வரவேற்கதக்கது. அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய நீர்வழிப் பாதைகள் அமைக்கப்படும் திட்டமும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு பயனளிக்கும் முக்கியமான முயற்சியாகும்.
வாரணாசி பாட்னா நதி போக்குவரத்து இணைப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. தென் மாநிலங்களின் நீர்வல தேவைகள் மற்றும் வேளாண் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு திட்டங்கள் அறிவிக்கப்படாதது கவலைக்குரியது. இளைஞர்களுக்கான தொழில் சார்ந்த, நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பெரிய அளவிலான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. வேலை இழப்பு பிரச்சினையை சமாளிக்க கூடிய தொழிற்துறை முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் பற்றிய தெளிவான அறிவிப்புகள் இல்லாதது இளைஞர்களுக்கு விரக்தியை ஏற்படுத்துகிறது.
தமிழ்நாடு இந்தியாவின் முக்கியமான கடல்சார் மாநிலங்களில் ஒன்றாகும். இந்நிலையில், கடல் வழி போக்குவரத்து, வணிகம், மீன்வள வளர்ச்சி மற்றும் துறைமுக சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஏதும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறதாது ஏமாற்றமளிக்கின்றது. அதேபோல், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் அறிவிக்கப்படாதது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு சுமையாக உள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி பல்வேறு வகைகளில் விலைவாசி உயர்வை தூண்டி வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தினந்தோலும் குறைந்து கொண்டே இருக்கும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்புக்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே சமயம் தங்கம், வெள்ளி போன்ற அத்தியாவசிய முதலீட்டு உலோங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. அவற்றை கட்டுப்படுத்துவதற்கான அறிவிப்பு இல்லை. இந்நிலை நாட்டின் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கிறது. ஜிஎஸ்டி போன்ற வரிகளை குறைத்து, மக்களுக்கு சுமையில்லாத, வலி இல்லாத ஒரு பட்ஜெட்டாக இருந்திருக்கலாம். மொத்ததில்
இந்த பட்ஜெட் 'யானைப் பசிக்கு சோளப்பொறி" என்ற பழமொழிக்கு ஏற்ப அமைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது
- கச்சா எண்ணெயின் விலை 50 டாலர் அளவில் இருக்கின்றபோதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை
மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2026 - 27ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒன்பதாவது முறையாக வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்திருப்பது மகிழ்ச்சியே!
இந்தியாவை 2047இல் வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான செயல் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார். இதுவரை பொருளாதார வளர்ச்சியின் பயன் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை நிலவரம் ஆகும்.
புவிசார் பதற்றங்கள், வர்த்தக நெருக்கடிகள், அமெரிக்க வரி கொள்கைகள் போன்றவை இந்திய பொருளாதாரத்தை பாதிக்கும் அபாயம் நிறைந்த காலகட்டத்தில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை அவற்றை எதிர்கொள்கின்ற வகையில் இல்லாதது ஏமாற்றம் தருகிறது.
அமெரிக்காவின் வரி பயங்கரவாதத்தால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு தீர்வாக ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் அமையும் என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஐரோப்பிய யூனியனின் 23 நாடுகளின் ஒப்புதல் பெறப்பட்டு 2027 ஏப்ரல் மாதம் தான் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும். இன்னும் ஓராண்டு காலத்திற்கு அமெரிக்க வரி பயங்கரவாதத்தை இந்தியா எப்படி எதிர் கொள்ளப் போகிறது என்பதற்கான விடை இல்லை.
வளர்ச்சியை ஊக்குவிக்க முன்மொழியப்படும் 6 துறைகள் என கூறப்பட்டிருப்பது புதிது அல்ல. முந்தைய நிதிநிலை அறிக்கைகளிலும் இடம்பெற்றவையே. நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 11.7 இலட்சம் கோடி கடன் வாங்கும் நிலையில் 7 சதவீதம் பொருளாதார வளர்ச்சியை நோக்கி அரசு எப்படி நடை போடும்?
பாஜக அரசின் 12 ஆண்டு காலத்தில் பணவீக்க விகிதம் நிலையாக உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும் பார்க்க வேண்டும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை 50 டாலர் அளவில் இருக்கின்றபோதும் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
மாநிலங்களுக்கு 16 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த நிதி பகிர்வு 41 சதவீதம் என்பதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதன் மூலம் நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசின் பாரபட்ச அணுகுமுறை தொடர்கிறது.
உற்பத்தி தொழில்துறை வளர்ச்சிக்கு புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உற்பத்தி தொழில்துறை சரிவை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. வாகன உற்பத்தி தொழில் துறைக்கான வரி உயர்வு என்பது வாகன உற்பத்தி கேந்திரமான தமிழ்நாட்டிற்கு இழப்பாகும்.
நாட்டின் ஜவுளித் துறையில் அதிக பங்களிப்பை அளிக்கும் தமிழ்நாட்டின் திருப்பூர் ,கோவை, கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களின் ஜவுளித் தொழில் துறையினருக்கு நிதிநிலை அறிக்கை ஊக்கமளிக்கவில்லை. வேலூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வும் இல்லை.
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறு குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் நெருக்கடிகளுக்கு முறையான தீர்வு காணப்படவில்லை. மேலும் சிறு குறு நடுத்தர தொழில் வளர்ச்சிக்கான ஒதுக்கீடு வெறும் 10 ஆயிரம் கோடி என்பது சொற்ப தொகையே.
சென்னை - பெங்களூரு, சென்னை- ஹைதராபாத் புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லாதது வருந்தத்தக்கது. கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய அறிவிப்பும் இல்லை.
கல்வி, சுகாதாரத்திற்கான டிடிஎஸ் 5 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பது, வாகன விபத்து இழப்பீட்டிற்கான வரி விலக்கு, புற்றுநோய் சிகிச்சைக்கு 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு, ஏழு அரிய வகை நோய்களுக்கு மருந்து இறக்குமதி வரி குறைப்பு போன்ற வரவேற்கத்தக்க கூறுகள் இருந்தாலும், ஒன்றிய வரவு செலவுத் திட்ட அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக இல்லை; ஏமாற்றத்தையே தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.






