search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP"

    • மகாராஷ்டிரா மாநிலத்தின் கோண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் குதே.
    • இவர் கடந்த 2018-ம் ஆண்டு சிவசேனா கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தின் கோண்டியா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ரமேஷ் குதே.

    இந்நிலையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், பா.ஜ.க. தலைவருமான ரமேஷ் குதே இன்று சிவசேனா கட்சியில் இணைந்தார். கட்சி தலைவரான உத்தர தாக்கரே முன்னிலையில் கட்சியில் இணைந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

    இவர் கடந்த 2018-ம் ஆண்டு அப்போதைய சிவசேனா கட்சியில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்தார். தற்போது 6 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தாய் கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.
    • ராகுல்காந்தி மீண்டும் கோர்ட்டில் ஆஜராகத் தேவையில்லை என்று கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

    சுல்தான்பூர்:

    கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.

    இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பா.ஜனதா தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.

    அப்போது, உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி சுல்தான்பூா் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் நேரில் ஆஜரானாா். அதைத் தொடா்ந்து அவருக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே இன்று (ஜூலை 26-ந்தேதி) விசாரணைக்கு வரும்போது ராகுல்காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா். அதன்படி எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இன்று சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கோர்ட்டில் ஆஜரானார்.

    விசாரணைக்கு பின்னர் இவ்வழக்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்று ராகுல்காந்தி மீண்டும் கோர்ட்டில் ஆஜராகத் தேவையில்லை என்று கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

    • பாஜக தலைவர் பிர்பால் சிங் மகன் அபினவ் சிங், வயதான தம்பதியை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    • சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியவரின் மனைவியை அபினவ் மிரட்டும் காட்சிகளும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது

    உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் பிர்பால் சிங். இவரது மகன் அபினவ் சிங், வயதான மூத்த தம்பதியை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் பரவி வரும் அந்த சிசிடிவி வீடியோவில், முதியவரை மிரட்டும் அபினவ் அவரது கன்னத்தில் ஓங்கி அறைகிறார். இதனால் அந்த முதியவர் நிலை தடுமாறுகிறார்.

    சத்தம் கேட்டு உள்ளிருந்து வந்த முதியவரின் மனைவியை அபினவ் மிரட்டும் காட்சிகளும் அந்த சிசிடிவி வீடியோவில் பதிவாகியுள்ளது. முதிய தம்பதிக்கும் அபினவுக்கும் என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகவில்லை.

    கடந்த ஜூலை 23 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி கண்டனங்களை குவித்து வருகிறது. ஆனால் வீடியோ ஆதாரம் இருந்தும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ஆளும் கட்சித் தலைவரின் மகன் என்பதால் போலீசார் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதாக நெட்டிசன்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

    • கடலூர் மாநகராட்சி ஆணையர் அணு விசாரணை நடத்தினார்.
    • விசாரணையில் ஒப்பந்ததாரரின் பதில் திருப்தி அளிக்காததால் ஒப்பந்தம் ரத்து.

    கடலூர் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளி ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரரை நேரில் அழைத்து கடலூர் மாநகராட்சி ஆணையர் அணு விசாரணை நடத்தினார். விசாரணையில் ஒப்பந்ததாரரின் பதில் திருப்தி அளிக்காததால் அவரது ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

    பாதாள சாக்கடை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த 2018 - 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளில், நாட்டிலேயே அதிகமாக, 52 கழிவு நீர் அகற்றும் தொழிலாளர்கள் பலியான அவலம் தமிழகத்தில்தான் ஏற்பட்டது.

    ஆனால், அதன் பின்னரும், தமிழகத்தில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தீராத அவலம் தொடர்வது வேதனைக்குரியது.

    இன்றைய தினம், கடலூரில் பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை அடைப்பு காரணமாக, கழிவு நீரை அகற்ற, தொழிலாளர்கள், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் காணொளிகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று, கடந்த ஆண்டு மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள், மாற்று சுயதொழில் திட்டங்கள், இயந்திரமயமாகச் சுத்தம் செய்வதற்கான கருவிகள், வாகனங்கள் வாங்க மூலதன மானியம் ரூ.5,00,000 உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி உட்பட, பல்வேறு திட்டங்களையும், நிதி உதவிகளையும் அளித்து வருகிறது.

    இவை தவிர, இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (NAMASTE) திட்டத்திற்கு, வரும் 2025-2026 ஆண்டுவரை ரூ. 349.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கையால் துப்புரவு செய்பவர்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளைப் பாதுகாப்பின்றி சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும், பாதுகாப்பான, இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் புறக்கணித்திருப்பதோடு, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கப்படாமல், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய வைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மனித உரிமைகளுக்கே எதிரான திமுக அரசின் இந்த செயல்பாடு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் விரோதமானது.

    தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் போக்கினை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும், இந்த நிகழ்வுக்குக் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும், அவர்களுக்கு முழுமையாகச் சென்றடையும்படி, திமுக அரசு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ பதிலளித்தார்.
    • ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. ஜூலை 23ஆம் தேதி 2024-25 நிதி அண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று மக்களவையில் பேசிய திமுக எம்பி கனிமொழி, கோவை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் தொக்கன் சாஹூ பதிலளித்தார்.

    அதில், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு, ஒருங்கிணைந்த இயக்கத் திட்டம், மாற்று ஆய்வு திட்டம் இன்றி திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது என்று விளக்கமளித்தார்.

    அதைத் தொடர்ந்து நாட்டில் கவாச் அமைப்பை நிறுவுவதற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த விவரங்களை கனிமொழி எம்பி கோரி இருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கவாச் பணிகளுக்கு இதுவரை ஆயிரத்து 216 கோடியே 77 லட்ச ரூபாய் நிதி பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், நடப்பு 2024-25 நிதி ஆண்டில் ஆயிரத்து 112 கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் கூறினார்.

    • தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
    • சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஒரு நாட்டின் நிதிநிலை அறிக்கை என்பது இந்தியத் திருநாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் உரிய பங்கினை பகிர்ந்தளித்து நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை உருவாக்கிட உதவுவதுடன், நாட்டில் வாழும் கடைக்கோடி மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் கொள்கை பிரகடனமாகவே இருக்க வேண்டும்.

    ஆனால் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாக தெரியவில்லை. மாறாக, தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தை கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.

    மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி, தமிழ்நாடு சந்தித்த இரண்டு தொடர் பேரிடர் இழப்புகள் ஆகியவற்றிற்கு நிதி வழங்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் முன்வைத்த கோரிக்கைகளை முற்றிலுமாக புறக்கணித்து, சில மாநிலங்களுக்கு மட்டும் பேரிடர் நிதி அள்ளி வழங்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதிநிலை அறிக்கையில் மாற்றாந்தாய் போக்குடன் தமிழ்நாட்டை வஞ்சித்த பாசிச பா.ஜ.க. மத்திய அரசைக் கண்டித்து வருகிற ஜூலை 27, சனிக்கிழமை, காலை 10.00 மணியளவில், மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.

    மாவட்டக் கழக நிர்வாகிகள் - கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமையில், கழக முன்னணியினர் முன்னிலையில் நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள், அனைத்து அமைப்புகளில் உள்ள அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கின்ற வகையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் உரிய ஏற்பாடுகளை செய்து, தமிழ்நாடு அரசை வஞ்சிக்கும் மத்திய பாசிச பா.ஜ.க. அரசுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    தத்தமது மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்த விவரத்தை தலைமைக் கழகத்திற்கு உடனே தெரிவித்திட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    • வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.
    • காலை 9 மணிக்கு ராகுல் காந்தி லக்னோ விமான நிலையம் வருகிறார்.

    லக்னோ:

    கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந்தேதி அப்போதைய பா.ஜ.க. தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. பா.ஜ.க. பிரமுகர் விஜய் மிஸ்ரா என்பவர் உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ. கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு கடந்த பிப்ரவரி 20-ந்தேதி கோர்ட்டு ஜாமின் வழங்கியது.

    இந்த வழக்கில் ஜூலை 26-ந்தேதி (நாளை) வாக்கு மூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து அவதூறு வழக்கில் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாளை ஆஜராகுகிறார். இதை காங்கிரஸ் மாவட்ட தலைவர் அபிஷேக் சிங் ராணா இன்று தெரிவித்தார்.

    காலை 9 மணிக்கு ராகுல் காந்தி லக்னோ விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் சுல்தான்பூர் சென்று கோர்ட்டில் ஆஜராகுகிறார்.

    • சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார்.
    • திரவுபதி முர்மு அவர்களின் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நம் இந்திய திருநாட்டின் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் தனது பணிகளை தொடங்கியிருக்கும் மரியாதைக்குரிய திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    பெருமைமிகு நம் பாரத தேசத்தில் 15-வது குடியரசுத்தலைவராக பெண் குடியரசுத்தலைவர் தேர்வானதும் உலக அரங்கில் பெண்ணுரிமையை வலிமையாக நிலைநாட்டிய குடியரசு நாடாக இந்தியா மிளிர்ந்துகொண்டிருக்கிறது.

    சவாலான சூழ்நிலைகளை சந்திக்கும் பெண்களுக்கு அவர் ஒரு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்கிறார். நம் முதல் குடிமகளாக திகழும் மரியாதைக்குரிய திரவுபதி முர்மு அவர்களின் மக்கள் பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்திய பட்ஜெட்டை கண்டித்து 40 எம்.பி.க்களும் போராட்டம் நடத்தப் போகிறார்களாம்.
    • தாமரை மலர்ந்தே தீரும்.

    சென்னை:

    வடசென்னை மாவட்ட பாஜக சார்பில் திருவொற்றியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய பட்ஜெட்டை கண்டித்து 40 எம்.பி.க்களும் போராட்டம் நடத்தப் போகிறார்களாம். அது மட்டும் தான் அவர்களால் முடியும். ஆனால் பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தால் உரிமையோடு பல திட்டங்களை கேட்டு பெற்றுத் தந்திருக்க முடியும்.

    எதிர்க்கட்சியாக இருக்கும்போது எவ்வளவு ஆட்டம் ஆடினீர்கள்? விலைவாசி உயர்வு என்றீர்கள்? மின் கட்டணம் உயர்வு, பால் கட்டணம் உயர்வு என்றீர்கள் ஆனால் இன்று நீங்கள் பல மடங்கு உயர்த்தி இருக்கிறீர்களே இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்.

    தி.மு.க.வின் வேஷம் நிச்சயம் 2026 தேர்தலில் கலையும். சூரியன் உதிக்கிறதோ இல்லையோ? இலைகள் துளிர்கிறதோ இல்லையோ? கைகள் உயர்கிறதோ இல்லையோ? தாமரை மலர்ந்தே தீரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
    • 6 ஆண்டுகளும் காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ளது. ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகு சிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.

    நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

    திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?

    பிரதமர் மோடி அரசு, கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையின் மூலமாகத் தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?

    மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதலமைச்சர்?

    தொகுதியின் தேவைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 5 ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளைக் குறித்துப் பேசவே இல்லை என்பதுதான் உண்மை. தற்போது முதலமைச்சர்கள் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியை குறிக்கோளாய் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் வரவேற்புக்குரியது.
    • தொழிலாளர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் முன்னேற்றத்தின் மீதான மத்திய அரசின் கூடுதல் கவனத்தை வெளிப்படுத்துகிறது.

    அமமுக கட்சி பொது செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    உற்பத்தி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, நகர்ப்புற மேம்பாடு, எரிசக்தி பாதுகாப்பு, உட்கட்டமைப்பு, சீர்திருத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது அம்சங்களை இலக்காக நிர்ணயித்திருப்பதோடு, இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்புக்குரியது.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தும் திட்டம், விவசாயத்துறையில் டிஜிட்டல் புரட்சி செய்வதற்கான கட்டமைப்புகள், தோட்டக்கலைகளில் 109 வகையிலான அதிக மகசூல் தரும் பயிர்கள் அறிமுகம், தானியம் மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தி மற்றும் சேமிப்புக்கு முக்கியத்துவம் என வேளாண்மையை மேம்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் புதிய முன்னெடுப்புகள் ஒட்டுமொத்த விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தையும், வருமானத்தையும் உயர்த்தும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

    உள்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பத்து லட்சம் வரை கல்விக்கடன், நாடு முழுவதும் நான்கு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திறன் பயிற்சி, இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி, அடுத்த ஐந்தாண்டுகளில் ஆயிரம் ஐடிஐகள் (ITI), உற்பத்தி துறையில் முதன்முறை பணியில் சேருவோருக்கு சிறப்பு நிதி, வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதோடு, வேலைவாய்ப்பை அதிகளவு உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருப்பது இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

    நியாய விலைக்கடைகள் மூலமாக ஏழை மக்களுக்கு தானியம் வழங்கும் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் (PM-GKAY) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பு, பிரதமர் வீட்டுவசதி திட்டத்தின் (PMAY) கீழ் நாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்பங்களுக்கு வீடுகள், வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய ஒளித் தகடுகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியை குறிக்கோளாய் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் வரவேற்புக்குரியது.

    ரூ.3 லட்சம் கோடியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள், பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதிகள் என பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையிலும், முத்ரா திட்டத்தின் கடன் வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு, சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, புதிய தொழில் பூங்காங்கள் போன்ற புதிய அறிவிப்புகள் தொழிலாளர்கள் மற்றும் தொழில்நிறுவனங்களின் முன்னேற்றத்தின் மீதான மத்திய அரசின் கூடுதல் கவனத்தை வெளிப்படுத்துகிறது.

    அதே நேரத்தில் தமிழகத்திற்கு சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

    • நாட்டு மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.
    • வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோடிக்கான நடுத்தர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையும் ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது வெட்கக்கேடானது. விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளுக்கு போதிய நிதியை ஒதுக்காததது நாட்டு மக்களின் நலன்மீதான பாஜக அரசின் அக்கறையின்மையை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துகிறது.

    தங்கம், வெள்ளி, அலைபேசி உள்ளிட்ட விலை உயர் ஆடம்பர பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம்கூட அன்றாடம் மக்களின் பசியைப்போக்கும் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனையளிக்கிறது. வேளாண்மையை முற்று முழுதாக அழித்துவிட்டு '2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவோம்' என்ற அறிவிப்பு வேடிக்கையானதாகும். வருமானவரி செலுத்துவதற்கான உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோடிக்கான நடுத்தர மக்களின் நீண்டகாலக் கோரிக்கையும் ஏற்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.

    பாஜக அரசின் முதன்மை கூட்டணிக் கட்சிகள் ஆளும் பீகாருக்கு 26000 கோடிகளும், ஆந்திராவிற்கு 15000 கோடிகளும் ஒதுக்கியுள்ள இந்நிதிநிலை அறிக்கை மூலம், இந்தியாவின் இதர மாநில மக்களைத் தெருக்கோடியில் நிறுத்தியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா? நாட்டிலேயே ஆந்திராவில் மட்டும்தான் பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளதா? தமிழ்நாட்டில் இல்லையா? இந்தியாவிலேயே அதிகம் வரிச்செலுத்துவதில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எவ்வித சிறப்புத் திட்டத்தையும் கடந்த 11 ஆண்டுகால நிதிநிலை அறிக்கையில் ஒருமுறைகூட பாஜக அரசு அறிவிக்காதது ஏன்? தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாகப் பழிவாங்குவதைப்போலவே ஒவ்வொரு பாஜக ஆட்சியின் நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி, வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தாததைக் கண்டித்து 'வரிகொடா' இயக்கத்தை முன்னெடுப்பதைத் தவிர தமிழ்நாட்டு மக்களுக்கு வேறுவழியில்லை எனும் பரிதாப நிலைக்குத் தள்ளியுள்ளது பாஜக அரசு.

    ஒட்டுமொத்தமாக பாஜக அரசின் 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரிந்தும் நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகர அறிவிப்புகளைக் கொண்ட கற்பனை அறிக்கையாகும். தமிழ்நாடு உள்ளிட்ட இதர மாநிலங்களை முற்று முழுதாக புறக்கணித்து, கூட்டணி ஆட்சியைத் தக்க வைப்பதையே குறிக்கோளாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள, இந்நிதிநிலை அறிக்கையிலிருந்து இந்தியா முழுமைக்குமான பாஜகவின் வீழ்ச்சி உறுதியாய் தொடங்கும் என்று கூறியுள்ளார்.

    ×