என் மலர்
நீங்கள் தேடியது "அண்ணாமலை"
- பள்ளிக் கல்வியின் இறுதியாண்டில் இருக்கும் உங்கள் அனைவருக்கும், சிறப்பான எதிர்காலம் அமைய எனது பிரார்த்தனைகள்.
- நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உங்கள் பெற்றோரையும், ஆசிரியப் பெருமக்களையும் பெருமைப்படுத்த நல்வாழ்த்துகள்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 பேர் எழுதுகின்றனர்.
இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்று தொடங்கவுள்ள, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும், இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிக் கல்வியின் இறுதியாண்டில் இருக்கும் உங்கள் அனைவருக்கும், சிறப்பான எதிர்காலம் அமைய எனது பிரார்த்தனைகள். அனைவரும் நம்பிக்கையுடன் தேர்வுகளை எழுதி, நல்ல மதிப்பெண்கள் பெற்று, உங்கள் பெற்றோரையும், ஆசிரியப் பெருமக்களையும் பெருமைப்படுத்த நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும்.
- சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை காக்கும் உங்கள் பயணம் தொடரட்டும்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மு.க.ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழ பிரார்த்திக்கிறேன்" என கூறியுள்ளார்.
கனிமொழி எம்.பி.வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சமூக நீதியையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் இருகண் எனக் கொண்டு, நாடு போற்றும் நல்லாட்சியை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கி வரும் மாண்புமிகு முதலமைச்சர் - கழகத் தலைவர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என்றும் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் அண்ணன் தளபதி அவர்கள், இன்னும் பல ஆண்டுகள் வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாட்டை வழிநடத்திச்செல்ல விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள் புரியட்டும் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கூறுகையில், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன்
மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! நலனும் நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் எப்போதும் உங்களை சூழ வாழ்த்துகள். சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தை காக்கும் உங்கள் பயணம் தொடரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
- எம்.ஜி.ஆருக்கும் சோதனைகள் ஏற்பட்டது.
- அநாகரிகமான அரசியல் செய்பவன் நான் அல்ல.
சென்னை:
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த விவகாரம் பற்றி முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
நடிகர் விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி கடந்த டிசம்பர் மாதமே செங்கல்பட்டு கோர்ட்டில் மனு கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தை பொறுத்தவரை விஜய், அவரது மனைவி சங்கீதா, நீதித்துறை ஆகிய 3 பேருக்கும் சம்பந்தப்பட்டது. அதுவும் தனிப்பட்ட மனிதருக்கான, தனிப்பட்ட வாழ்க்கை விஷயம்.
விஜய்யின் அரசியல் பற்றி கருத்து கேட்டால் எப்போதும் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். ஆனால் இது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. மனைவி, கணவர் ஆகிய இருவரும் எங்கிருந்தாலும் அவர்களுக்குள் சந்தோசம் நிலைக்கட்டும். அவர்களுக்கு அமைதி கிடைக்கட்டும்.
அரசியல் ரீதியாக இதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. நான் ஏற்கனவே சொன்னது போல் இந்த விவகாரம் விஜய்க்கும், அவரது மனைவிக்கும் நீதித்துறைக்கும் இடையேயான பிரச்சனையாகத்தான் பார்க்கிறேன்.
எப்போதுமே அரசியலுக்கு வந்துவிட்டால் தீப்பந்தத்துக்குள் நுழைந்து வெளியே வருவது மாதிரி தான். அதுவரை தோண்டப்படாத தனிப்பட்ட வாழ்க்கையையும் தோண்டுவார்கள். இது விஜய்க்கு மட்டுமல்ல, எல்லா தலைவர்களுக்கும் இருந்ததுதான்.
அரசியலுக்கு வரும் போதே இதை விஜய்யும் உணர்ந்தே வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இதையும் கடந்துதான் அவர் போக வேண்டும். இதையும் தாண்டிதான் அவரது அரசியல் இருக்கிறது. இவற்றை எல்லாம் பார்த்து மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? என்பது எல்லாம் தேர்தலில்தான் தெரிய வரும்.
விஜய்யை பொறுத்தவரை இது அவருக்கு தீயை எதிர்கொள்ளும் சோதனையை போன்றதுதான். அரசியலுக்கு வராமல் நிம்மதியாக வீட்டில் இருந்து இருக்கலாம். நட்சத்திர அந்தஸ்துடன் இருந்து இருக்கலாம். நான் கையை தூக்கினால் 1 லட்சம் பேர் ஆரவாரம் செய்வார்கள் என்றெல்லாம் நினைக்கலாம்.
சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட நிலைதான். எத்தனையோ பெரிய நடிகர்கள் அரசியலுக்கு வந்த பிறகு இதைப் போன்ற அழுத்தங்களையும், சோதனைகளையும் தாண்டியே வந்து இருக்கிறார்கள். எம்.ஜி.ஆருக்கும் சோதனைகள் ஏற்பட்டது. எனவே இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை.
விஜய் இதை எல்லாம் கடந்துதான் சென்றாக வேண்டும். இதற்கான விலையை அவர் கொடுக்க வேண்டும். நியாய தர்மங்களை தாண்டிதான் அவர் பயணம் செய்ய வேண்டும். என்னைப் பொறுத்தவரை தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கையாகவே பார்க்கிறேன். தனிப்பட்ட மனிதனைப் பற்றி விமர்சனம் செய்து அநாகரிகமான அரசியல் செய்பவன் நான் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- “கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம்.
- முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம்.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து கூறியிருப்பதாவது:-
சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று "கந்த சஷ்டி கவசம்" பாடி முருகனை போற்றுவோம்.
அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றும் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக வருகிற 2-ந்தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. சதுர்த்தியும், கிருத்திகையும் இணைந்து வரும் இன்று முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரூ.888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவு.
- அனைத்து ஊழல்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது.
அமைச்சர் கே.என்.நேரு மீதான ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ரூ.888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை வரவேற்கிறோம்.
கடந்த அக்டோபர் மாதம், தமிழக அரசு தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோருக்கு, இந்த ரூ.888 கோடி ஊழலில், அமைச்சர் கே.என்.நேரு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரி, கடிதம் மூலம் அமலாக்கத்துறை வலியுறுத்தியிருந்தது.
அதே போல, கடந்த டிசம்பர் மாதம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்கள் வழங்குவதில் சுமார் ரூ.1,020 கோடி ரூபாய் லஞ்ச ஊழல் நடந்திருக்கிறது எனக் கூறி, அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரியிருந்தது. இது தவிர, இந்த ஆண்டு ஜனவரி மாதம், இதே துறையில், பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் பெற்ற வகையில் ரூ.365.87 கோடி லஞ்ச ஊழல் நடைபெற்றிருப்பதாகக் கூறி, மூன்றாவது முறையும், அமலாக்கத்துறை ஆதாரங்களை அனுப்பியிருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மூன்று கடிதங்களையும் இத்தனை மாதங்களாக திமுக அரசு கிடப்பில் போட்டிருந்தது.
தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் திரு. கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது என்ன பதில் கூறப் போகிறார்?
திமுக ஆட்சியில், ஒரு ஆண்டில், ஒரு துறையில் மட்டுமே, சுமார் ரூ.2,300 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்றால், தமிழகம் என்ன நிலையில் இருக்கிறது? இந்த ஊழல்கள் எல்லாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியாமல் நடந்தது என்று கூறப் போகிறாரா?
உடனடியாக, அமலாக்கத்துறை கடந்த டிசம்பர் மாதம் அனுப்பிய ரூ.1,020 கோடி பணி ஒப்பந்தங்கள் வழங்கியதில் நடைபெற்ற லஞ்ச ஊழல் வழக்கிலும், ரூ.365.87 கோடி பணியிட மாற்ற லஞ்ச வழக்கிலும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இல்லையேல், இந்த அனைத்து ஊழல்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தெரிந்தே நடந்திருக்கிறது என்ற முடிவுக்கே, மக்கள் வருவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் என்பது காரணம் கிடையாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
- தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இச்சம்பவம் அரசியலாக்கப்பட்டது.
கடந்த 2022ஆம் ஆண்டு உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவி லாவண்யா விவகாரத்தில் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
"தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டியில் பள்ளி மாணவி லாவண்யா கடந்த 2022 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். மதமாற்ற அழுத்தம் காரணமாகவே அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக அப்போது பா.ஜ.க. மாநில தலைவராக இருந்த அண்ணாமலை ஆதாரமற்ற அவதூறு கருத்துக்களை கூறியது, தற்போது சி.பி.ஐ. விசாரணையின் மூலம் அம்பலமாகியுள்ளது.
தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டது மதமாற்ற அழுத்தத்தினால் இல்லை என்று சி.பி.ஐ. தனது அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வினர் மாணவி கட்டாய மதமாற்றம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தினர்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதை சி.பி.ஐ. உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம் என்பது காரணம் கிடையாது என்று தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், அண்ணாமலையின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டு மூலமாக மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, மத அமைதிக்கு கேடு விளைவித்து அதன்மூலம் அரசியல் ஆதாயம் தேடியது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பா.ஜ.க.வின் கீழ்த்தரமான மதவெறுப்பு அரசியல் வெளிப்பட்டிருக்கிறது.
பா.ஜ.க.வின் அப்போதைய மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாவட்ட பா.ஜ.க. தலைவர் உள்ளிட்டோர் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இது மதமாற்ற தற்கொலை என்று முத்திரை குத்தி, தமிழ்நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், அமைதிக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகின்ற வகையில் இச்சம்பவம் அரசியலாக்கப்பட்டது. மகளை இழந்து துயரத்தில் இருந்த பெற்றோரை ஆறுதல்படுத்தாமல் அவர்களை தவறாக வழிநடத்தி, மகளின் உடலைப் பெற விடாமல் தடுத்து போராட்டக் களத்திற்கு இழுத்து வந்த பா.ஜ.க. தலைவரின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகாலமாக கல்விச் சேவை மூலம், சிறுபான்மை கிறிஸ்துவ கல்வி நிறுவனங்கள் ஏழை,எளிய மக்களுக்கு ஆற்றி வருகிற தூய்மையான பணியை கொச்சைப்படுத்துகிற வகையில் மதமாற்றத்திற்கு துணை போகிறார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி மதநல்லிணக்கத்தை சீர்குலைத்த அண்ணாமலையின் செயல் சி.பி.ஐ. விசாரணையின் மூலமாக அம்பலத்திற்கு வந்துள்ளது.
இத்தகைய சட்டவிரோத செயல்களை செய்து மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்ற அன்றைய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மாவட்ட பா.ஜ.க. தலைவர் ஆகியோர் மீது தமிழ்நாடு காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். " எனக் குறிப்பிட்டுள்ளார்.
- வருமானம் ஈட்டாத கடனை வாங்கி செலவு செய்யும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
- உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2% அளவிற்கு குறைந்துள்ளது.
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க. அரசின் பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை.
* வருமானம் ஈட்டாத கடனை வாங்கி செலவு செய்யும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
* தி.மு.க. அரசு தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.
* பல்வேறு மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் பட்ஜெட்டில் பொய் சொல்லுவேன் என நிதி அமைச்சர் அடம்பிடித்திருக்கிறார்.
* எது குறித்தும் அக்கறை இல்லாமல் வழக்கம்போல பட்ஜெட்டில் பொய்களை வாசித்துள்ளார் நிதி அமைச்சர்.
* 2027 மார்ச் 31-ல் தமிழகத்தின் மொத்த கடன்தொகை 10.62 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் உள்ளது.
* கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்க திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை நிதியமைச்சர் ஏன் சமர்ப்பிக்கவில்லை.
* உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2% அளவிற்கு குறைந்துள்ளது.
* கோவில்கள் புனரமைப்புக்காக ரூ.8,200 கோடி செலவு செய்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
* வெறும் ரூ.82 கோடி மட்டுமே கோவில்கள் புனரமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது.
* கோவில்கள் புனரமைப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
* தி.மு.க. அரசின் தோழி திட்டம், கலைஞர் கனவு திட்டம் ஆகியவை மத்திய அரசின் திட்டங்கள்.
* தமிழ்நாட்டுக்கு மொத்தமாக பூஜ்ஜியத்தை மட்டுமே கொடுத்துள்ளது தி.மு.க. அரசின் பட்ஜெட்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? எங்கே சென்றது இந்த நிதி மொத்தமும்?
- நான்கு மாதங்கள் ஆகியும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.
தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியப் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளை விற்பனை செய்து வரும் திமுக அமைச்சர்களை எதிர்த்துப் போராடும் இளைஞர்கள் என கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர்.
கட்டிடங்கள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நம் குழந்தைகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாணவர் விடுதிகள், பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் போதைப் பொருள் கலாச்சாரம் என எது குறித்தும் அக்கறை இல்லாமல், வழக்கம்போல பொய்களை வாசித்துச் சென்றிருக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், திமுக வாங்கிக் குவித்த தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10,62,248 கோடியாக இருக்கும் என கூறியிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை. எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? எங்கே சென்றது இந்த நிதி மொத்தமும்?
திமுகவுக்கு வாக்களிக்காத கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில், மெட்ரோ திட்டம் வரக்கூடாது என்று, வேண்டுமென்றே தவறான திட்ட அறிக்கையை வழங்கிவிட்டு, தற்போது மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் தமிழக நிதியமைச்சர், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை? உண்மையாகவே மெட்ரோ திட்டம் வர வேண்டுமென்று அக்கறை திமுகவுக்கு இல்லை. அதனால்தான், நான்கு மாதங்கள் ஆகியும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், அவசர அவசரமாக பட்ஜெட் அறிக்கையை வாசித்ததைப் பார்த்தால், 'அப்பாடா, இதை விரைவில் முடித்து விட்டால், இனி எப்போதும் நமக்கு இந்த பட்ஜெட் அறிக்கை வாசிக்கும் தொல்லை இருக்காது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பொழுது போக்கலாம்' என்ற நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்படுகிறது.
முதலமைச்சரின் தந்தை மறைந்த கருணாநிதி அவர்கள் காலத்தில் இருந்து, திமுக பட்ஜெட் என்றாலே தவறாமல் இடம்பெறும், கூவத்தைச் சுத்தம் செய்வோம், அடையாறை சுத்தம் செய்வோம் என்று கூறி ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யும் நகைச்சுவை, இந்த ஆண்டு இடம்பெறவில்லை என்பது, உண்மையாகவே வருத்தமளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடையாறைச் சுத்தம் செய்ய ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்ததாகக் கூறிய நிதி எங்கு போனது என்பதும் தெரியவில்லை.
- பாஜக-ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
- ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கேசவ விநாயகத்துக்கு புதிய பதவி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற பாஜக-ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை தரப்பின் புகாரால் இந்த முடிவு எனவும் தேர்தல் வரை அப்பதவியை கூட்டு தலைமையின் கீழ் கொண்டு வரவும் முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கேசவ விநாயகத்துக்கு புதிய பதவி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கேசவ விநாயகம் 2015-ம் ஆண்டு முதல் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
- தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதற்கு தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்று நடைபெறவிருந்த டிஎன்பிஎஸ்சி குரூப்2, குரூப் 2 ஏ தேர்வுகள், தேர்வு மையங்களை அமைப்பதில் தி.மு.க. அரசு செய்த குளறுபடியால் ரத்து செய்யப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசுத் தேர்வுகளுக்கான அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்ய முடியாத கையாலாகாத நிலையில், தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
அரசுப் பணிகளுக்காக, பல ஆண்டு காலம் கடுமையாக தங்கள் உழைப்பைக் கொடுத்து, தேர்வு மையங்களுக்குச் சென்ற இளைஞர்களின் கனவு பறிக்கப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டு காலம் இல்லாத இந்தக் குளறுபடி, லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணி வழங்கும் வரலாறு கொண்ட தி.மு.க. அமைச்சர்களால் நடத்தப்பட்டதா என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.
லஞ்சம் ஊழல் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற கையாலாகாத அரசை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின், தமிழக இளைஞர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தவெகவோ அல்லது விஜய்யோ அக்கட்சியில் இருக்கும் அல்லு சில்லுகளை வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு வம்பிழுத்தால் என்னுடைய பதிலும் மிக கடுமையாக இருக்கும்
- விஜய்யின் பேச்சு ஒரு ஆழம், ஒரு சிந்திக்க வைக்கக்கூடிய, எதற்காக அவருக்கு ஓட்டுப்போட வேண்டும், எதற்கு மாற்றம் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக இல்லை.
மதுரையில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
"நான் இன்னும் விஜய்யையும், தவெகவையும் அடிக்கவே ஆரம்பிக்கவில்லை. ஏனெனில் தமிழ்நாடு அரசியலில் என்றும் என் பேச்சை மாற்றிப் பேசும் ஆள் நான் இல்லை. தவெக தொடங்கிய முதல்நாள் நான் கூறிய கருத்தையே மீண்டும் கூறுகிறேன். அரசியலுக்கு புதிய ஆட்கள் வரவேண்டும். அவர் பாதையில் அவர் போகட்டும். ஆனால், தவெகவோ அல்லது விஜய்யோ அக்கட்சியில் இருக்கும் அல்லு சில்லுகளை வைத்துக்கொண்டு வைத்துக்கொண்டு வம்பிழுத்தால் என்னுடைய பதிலும் மிக கடுமையாக இருக்கும். விஜய்யையும் நான் விமர்சிப்பேன்.
இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட, நான்கு கட்சிகள் மாறிவந்தவர்களை வைத்துக்கொண்டு விஜய் பேசினால், அதே விஜய்க்கு அதே பாணியில் பதிலளிக்க எனக்குத் தெரியும். அரசியல் களம் நாகரீகமாக இருக்கவேண்டும். இதை ஒரு எச்சரிக்கையாக கூட எடுத்துக்கொள்ளட்டும்.
எம்.எல்.ஏ.பழனியாண்டிமீது நடவடிக்கை எடுத்தால் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு இருக்கிறது என்று அர்த்தம். எங்கள் கூட்டணி என்ன, கூட்டணித் தலைவர் யார் என எல்லாவற்றையும் சொல்லிவிட்டோம். விஜய் கைதட்டல் வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்வார்.
விஜய்யின் பேச்சு ஒரு ஆழம், ஒரு சிந்திக்க வைக்கக்கூடிய, எதற்காக அவருக்கு ஓட்டுப்போட வேண்டும், எதற்கு மாற்றம் வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக இல்லை. தமிழ்நாட்டில் முதலமைச்சர் யார், எதிர்க்கட்சித் தலைவர் யார், தேர்தல் களம் எப்படி இருக்கிறது என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். அதனால் அவரது பேச்சை கடந்துபோய்விட வேண்டும். ஓட்டுக்காக திருப்பரங்குன்றம் பிரச்சனையை உருவாக்கியதே திமுகதான். ஆனால் இன்று மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் பலி ஆடாக இருக்கின்றனர்.
தொண்டர் மீது நடவடிக்கைகூட எடுக்க முடியாதவர் காங்கிரஸ் மாநிலத் தலைவராக உள்ளார். எதற்கெடுத்தாலும் டெல்லியை எதிர்பார்க்கும் நிலையில் இருப்பதால்தான் காங்கிரஸ் வீழ்ந்தது." என தெரிவித்தார்.
- பழனியாண்டி கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது
- கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது
திமுக எம்.எல்.ஏ பழனியாண்டியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி நடத்தும் சட்டவிரோத கல்குவாரியைக் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற NewsTamilTV24x7 செய்தியாளர் திரு. கதிரவன் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது, பழனியாண்டியே நேரடியாகக் கொலைவெறி தாக்குதல் நடத்தும் காணொளி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகவியலாளர்கள் மீதான திமுக சட்டமன்ற உறுப்பினரின் கொலைவெறித் தாக்குதல், ஜனநாயகத்துக்கே அவமானம்.
கடத்தல்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் என, கிரிமினல்கள் அனைவரையும் தேடித் தேடி பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் மு.கஸ்டலின், இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? திமுக சட்டமன்ற உறுப்பினர் என்ற பதவி, கனிம வளங்களைக் கடத்துவதற்கும், கொலைவெறித் தாக்குதல் நடத்துவதற்கும் கொடுக்கப்பட்ட லைசன்சா?
இந்த சம்பவம் குறித்து கரூர் மாவட்டக் காவல்துறை வெளியிட்ட செய்தியில், இந்த திமுக எம்எல்ஏ பழனியாண்டி என்ற நபர், அன்று சம்பவ இடத்தில் இருந்ததாகவே எங்கும் குறிப்பிடவில்லை. ஒரு கொலைமுயற்சி நடந்திருக்கிறது. கரூர் மாவட்டக் காவல்துறை, முக்கியக் குற்றவாளிகளில் ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறது. எத்தனை மோசமான நிலையில் தமிழகக் காவல்துறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு, இது மற்றும் ஒரு உதாரணம்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்ட அனைவர் மீதும், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்தார்.






