search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selvaperunthagai"

    • பிரதமர் மோடி அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும்.
    • கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூபாய் 12,210 கோடி.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியமைந்து நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த முதல் நிதிநிலை அறிக்கையில் பீகார் மாநிலத்திற்கு ரூபாய் 59,000 கோடியும், ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு நிதியாக ரூபாய் 15,000 கோடியும் வழங்கப்பட்டு தமிழகம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுள்ளன.

    கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாடு வழங்கிய மொத்த ஜி.எஸ்.டி. தொகை ரூபாய் 12,210 கோடி. ஆனால், தமிழகத்திற்கு சல்லிக்காசு கூட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.

    பா.ஜ.க. கட்சியின் சார்பாக பிரதமர் மோடி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும் பதவியேற்ற பிறகு அனைத்து மக்களுக்கும் பொதுவானவராக அவர் இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்ற நோக்கத்தில் ஒன்றிய அரசின் நிதியை பாரபட்சமாக சில மாநிலங்களுக்கு வழங்கி, தமிழகத்தை வஞ்சிப்பதை கண்டித்து நாளை (சனிக்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையம் அருகில், தாராபூர் டவர் முன்பாக சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில், எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் ஒன்றிய அரசின் தமிழகத்தை வஞ்சிக்கிற போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகளால் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடந்து வருகிறது.
    • மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் யு.பி.எஸ்.சி.யிலும் ஊழல்கள் வெளியாகி அதன் தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்ற ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகி உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் எழுதியவர்களின் புள்ளி விபரங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த தேர்வில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதி அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி நீட் முடிவு வெளியான அறிவிப்பில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியான மதிப்பெண் பட்டியலில் 744 பேர் கூடுதலாக எழுதி இருப்பதாக இருந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகளால் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது. அதேபோல மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் யு.பி.எஸ்.சி.யிலும் ஊழல்கள் வெளியாகி அதன் தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப் பணி இடங்களை நிரப்புவதற்கான ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்திலும் பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி ஆட்சியில் நீட் தேர்வினால் மருத்துவத் துறை சீரழிந்து வருகிறது. யு.பி.எஸ்.சி. தேர்வினால் குடிமைப்பணி தேர்வுகளும் ஊழலுக்கு இரையாகி உள்ளன.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • சுற்றுப் பயணத்தின் போது எந்தெந்த மாவட்டங்களில் நிர்வாகிகள் கண்துடைப்புக்காக வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணித்து பட்டியல் தயாரிக்கப்படும்.
    • அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் முடிந்ததும் திருப்தி இல்லாத நிர்வாகிகளை மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை பொறுப்பேற்ற பிறகு கட்சியை வலுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் செயல்பாடுகள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் பற்றி தொண்டர்களிடம் நேரில் கருத்து கேட்டு வருகிறார்.

    இதுவரை 50-க்கும் மேற்பட்ட கட்சி மாவட்டங்களுக்கு சென்றுவிட்டார். இடையில் விக்கிரவாண்டி தேர்தல் நடந்ததால் செல்லவில்லை. மீண்டும் நாளை முதல் தனது சுற்றுப் பயணத்தை தொடங்குகிறார்.

    நாளை மாலை திருவள்ளூரில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கருத்து கேட்கிறார். நாளை மறுநாள் (18-ந் தேதி) திண்டுக்கல், கரூர். 19-ந் தேதி திருச்சி, புதுக்கோட்டை 20-ந் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்கிறார்.

    இதுபற்றி கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    இந்த சுற்றுப் பயணத்தின் போது எந்தெந்த மாவட்டங்களில் நிர்வாகிகள் கண்துடைப்புக்காக வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணித்து பட்டியல் தயாரிக்கப்படும்.

    அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் முடிந்ததும் திருப்தி இல்லாத நிர்வாகிகளை மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றார்.

    • ஆலோசனை கூட்டத்தில், பிஎஸ்என்எல் பொது மேலாளர் கதிர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    • பிஎஸ்என்எல் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க செய்ய ஆலோசனை.

    கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடைபெற்ற தொலை தொடர்பு ஆலோசனை கூட்டத்தை காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தலைமையேற்று நடத்தினார். 

    இந்த ஆலோசனை கூட்டத்தில், பிஎஸ்என்எல் பொது மேலாளர் கதிர், டிஜிஎம் பழனி முருகன் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பிஎஸ்என்எல் சேவைகளை கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்க செய்ய ஆலோசனைகள் மேற்கொண்டதாக விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

    • ஆறுகளில் அணைகளை கட்டி நீர்ப்பாசன பரப்பை அதிகப்படுத்தி இன்றைய நவீன தமிழகத்திற்கு அன்று அடித்தளமிட்டவர் காமராஜர்.
    • தமிழக காங்கிரசின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் என்றைக்கும் திகழ்பவர் காமராஜர்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியாவின் தென்கோடியில் உள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்திலிருந்து இந்தியாவின் தலைநகரான புதுதில்லியில் உள்ள ஜந்தர் மந்தர் வரை சென்று இந்திய குடியரசின் நிலைப்பாட்டிற்கு உதவியதை பெருந்தலைவர் காமராஜர் மேற்கொண்ட அரசியல் பயணத்தின் மிகப்பெரிய வெற்றியாக கூறலாம்.

    விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று 9 ஆண்டுகள் சிறைவாசம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தொடர்ந்து 12 ஆண்டு காலம் பதவி வகித்து, 1954 முதல் 1963 வரை ஒன்பதரை ஆண்டுகாலம் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தியவர். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருமுறை பதவி வகித்து பண்டித நேரு மறைவிற்கு பிறகு மூன்று முறை பிரதமர்களை தேர்வு செய்து இந்திய வரலாற்றில் காலத்தால் அழியாத சரித்திர சாதனை படைத்தவர். பெருந்தலைவர் காமராஜருக்கு 122-வது ஆண்டு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் ஜூலை 15 அன்று கோலாகலமாக கொண்டாட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியினரை அன்போடு வேண்டுகிறேன்.

    அதிகம் படிக்காத, ஆதரவற்ற, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த, ஒரு துணிக்கடையில் விற்பனையாளராக வாழ்வை துவக்கிய மிகமிக சாதாரண மனிதராக இருந்து இந்திய அரசியலில் அற்புதங்களை நிகழ்த்தியவர். தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற 1954 இல் ஆண்டு பட்ஜெட் தொகை ரூபாய் 27 கோடி. 1963 இல் பதவி விலகியபோது பட்ஜெட் தொகை ரூபாய் 120 கோடி. குறைந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு தமிழகத்தில் சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியவர்.

    ஈராயிரம் ஆண்டுகளாக தமிழர்களுக்கு கிடைக்காத கல்வி என்ற சொத்தை வழங்க இலவச கல்வி திட்டம், மதிய உணவு திட்டம், நீர்ப்பாசன திட்டங்கள், விவசாயத்தில் வளர்ச்சி, கிராமங்கள்தோறும் மின்சாரம் வழங்க மின் உற்பத்தி திட்டங்கள், அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்கி மக்களுக்கே அதிகாரம் வழங்குதல், தொழிற்புரட்சி மூலம் வேலைவாய்ப்புகளை பெருக்குதல், அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு கண்டு பரம்பிக்குளம் - ஆழியாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் அணைகளை கட்டி நீர்ப்பாசன பரப்பை அதிகப்படுத்தி இன்றைய நவீன தமிழகத்திற்கு அன்று அடித்தளமிட்டவர் காமராஜர்.

    சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக் காலங்களில் நிகழாத அற்புதங்கள் எல்லாம் காமராஜர் ஆட்சியில் நிகழ்வதாக தந்தை பெரியார், அன்றைய முதலமைச்சர் காமராஜரை பாராட்டியது இன்றைக்கும் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருக்கிறது. 1961 இல் காரைக்குடியில் தந்தை பெரியார் மரண வாக்குமூலம் வழங்குவதைப் போல, 'காமராஜர் ஆட்சி மீண்டும் அமைய வேண்டும், தமிழன் உருப்பட வேண்டுமானால் காமராஜரை விட்டால் வேறு ஆளே சிக்காது. எனவே அவரை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஆதரியுங்கள்" என்று பகிரங்கமாக பேசியதை எவரும் மறந்திட இயலாது.

    தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரும், பெருந்தலைவரும் பிரிக்க முடியாத சக்தியாக இருந்ததை வரலாற்று ஏடுகள் மூலம் புரிந்து கொள்ளலாம். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றதைப் போல பாராட்டுகளை பெற்ற பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி முறையை தான் காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.

    தமிழக காங்கிரசின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் என்றைக்கும் திகழ்பவர் காமராஜர். காமராஜரையும், காங்கிரசையும் பிரித்துப் பார்க்க முடியாது. பெருந்தலைவர் காமராஜரின் புகழை பாடுவதற்கு எல்லோரையும் விட நமக்கு அதிகப்படியான உரிமை இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் நமது இயக்கத்தின் உயிர் மூச்சாக இருப்பவர் காமராஜர்.

    எனவே, பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியின் சாதனைகளை விளக்குகிற வகையில் கருத்தரங்குகள், ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஏழைப் பங்காளனாக இருந்து வேட்டி கட்டிய தமிழர் எவரும் நிகழ்த்தாத சாதனைகளை இந்திய அரசியலில் செய்து காட்டிய பெருந்தலைவரின் புகழை தமிழகம் முழுவதும் பரப்புகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் அவரது பிறந்தநாளை தேசியத் திருவிழாவாக கொண்டாட வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
    • மணிக்கூண்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆத்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை மற்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகையை இழிவாக பேசியதாக கூறி பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஆத்தூர் பஸ் நிலையம் மணிக்கூண்டு பகுதியில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அர்த்தனாரி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான காங்கிரசார் கலந்துகொண்டு அண்ணாமலைக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

    மேலும் ஆட்டுக்குட்டியுடன் திடீரென அவர்கள் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். மேலும் அண்ணாமலையின் உருவப்படத்தையும் எரிக்க முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • செல்வப்பெருந்தகை 2 நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் பாஜகவில் ரவுடிகள் சேருவதாக குற்றம் சாட்டியிருந்தார்.
    • தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார் என்பது தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளை பட்டியல் போட்டு ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த நிலையில் மீண்டும் அவர் இன்று செல்வப்பெருந்தகையை குற்றம்சாட்டி பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    செல்வப்பெருந்தகை 2 நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் பா.ஜ.க.-வில் ரவுடிகள் சேருவதாக குற்றம் சாட்டியிருந்தார். அதனால் அவரது பின்னணி பற்றி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    1885-ல் தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சியில் வேறு எந்த மாநிலத்திலும் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து விட்டு வெளியில் வந்தவர் மாநில தலைவராக இல்லை. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு அனைவருக்குமே தெரியும்.

    செல்வப்பெருந்தகையை கைது செய்ய சென்ற போது குதித்து காலை உடைத்துக் கொண்டதும் அனைவருக்கும் தெரியும்.

    இன்று பசுத்தோல் போர்த்திய புலியாகதான் காந்தி வழியில் வந்தவன், நான் நல்லவன் என்று சொல்லும் போது வேறு வழியில்லாமல் அவர் மீதான எல்லா வழக்குகளையும் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.



    அவர் மீது குண்டர் சட்டம் போட்டது ஜெயலலிதா தான். ஆனால் தற்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் மத்திய அரசுதான் காரணம் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

    செல்வப்பெருந்தகை மீது சி.பி.ஐ. வழக்கு உள்பட பல வழக்குகள் உள்ளன. என்னை ரவுடி என்று கூறி விட்டார். நான் கோர்ட்டுக்கு போகப் போகிறேன் என்று செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

    லண்டனில் நீங்கள் முதலீடு செய்த பணம் பற்றிய விஷயத்தையெல்லாம் நான் கொண்டு வருகிறேன். இதுதான் தமிழகத்தின் தலைவிதி என்றால் அதை கையில் எடுக்க நான் தயாராகவே உள்ளேன். ஒவ்வொருவரிடமும் சண்டை போட்டால் தான் தமிழகத்தின் அரசியல் திருந்தும் என்றால் என்னை அர்ப்பணிப்பதற்கு தயாராகவே உள்ளேன்.

    ரிசர்வ் வங்கியில் கடை நிலை ஊழியராக இருந்த செல்வப்பெருந்தகை லண்டனில் என்னவெல்லாம் வாங்கியுள்ளார்? அவரது மனைவி பெயரில் என்ன உள்ளது? ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கில் எதற்காக மாற்றிப் பேசினார்கள்? என்பது பற்றியெல்லாம் பேசுவோம்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார்? என்பது தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும். அதைப் பார்த்துதான் மக்கள் ஓட்டு போட வேண்டும். இது போன்ற நபர்களை படம் பிடித்து காட்டாமல் விடமாட்டேன்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • அண்ணாமலை நேற்று துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசி இருக்கிறார்.
    • நான் புகார் கொடுத்தால் அண்ணாமலை மீது பல்வேறு வழக்குகளில் நடவடிக்கை எடுக்க முடியும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சாமியார் போலே பாபா இதுவரை கைது செய்யப்படவில்லை. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் குழு அமைத்து அவரை பிடிப்பார்களா? காமராஜர் பிறந்த நாளை வருகிற 15-ந்தேதி கன்னியாகுமரியில் கொண்டாட இருக்கிறோம்.

    அண்ணாமலை நேற்று துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் அரசியல் பேசி இருக்கிறார். இது என்ன நாகரிகம்? என்னை சமூக விரோதி, ரவுடி என்றும் கூறி அவதூறாக பேசியுள்ளார். எல்லா அரசியல் கட்சி தலைவர்களையும் பிளாக்மெயில் செய்து வருகிறார். அதிகாரம் எல்லாம் தங்களிடம் இருக்கிறது என்பதற்காக இவ்வாறு அவர் பேசுகிறாரா?

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பா.ஜனதாவை சேர்ந்த ஒருவர் சரண் அடைந்துள்ளார். அவர் என்ன பொறுப்பில் இருக்கிறார்? என்பதை அண்ணாமலை விளக்க வேண்டும்.

    நான் புகார் கொடுத்தால் அண்ணாமலை மீது பல்வேறு வழக்குகளில் நடவடிக்கை எடுக்க முடியும். அரசியல் நாகரிகம் கருதி இதை வேண்டாம் என்று கருதுகிறேன். என்னை அவதூறாக பேசியதற்காக அண்ணாமலை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ரெயில்தான் வந்தே பாரத்.
    • 50 சதவீதத்துக்குமேல் டிக்கெட் பதிவு செய்யப்படாமல் காலியாக பயணிக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ரெயில்தான் வந்தே பாரத். ஆனால் அந்த ரெயிலில் பல பகுதிகளில் இயங்கும் 50 சதவீதத்துக்குமேல் டிக்கெட் பதிவு செய்யப்படாமல் காலியாக பயணிக்கிறது. இது போன்ற தேவையில்லாத செலவுகளுக்கு பதிலாக சாதாரண மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ரெயிலில் அடிப்படை கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

    1924-ம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த ரெயில்வே பட்ஜெட் 2016-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்து பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரெயில்வே துறைக்கான பட்ஜெட்டையும் இணைத்தனர்.

    இந்திய ரெயில்வே தனி பட்ஜெட் இருந்திருந்தால் ரெயில்வேக்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து வெளியே தெரிந்திருக்கும். ஆனால் அவையெல்லாம் பா.ஜ.க. அரசால் மூடி மறைத்ததும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ரெயில் விபத்துகள் ஏராளமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம்.

    பா.ஜ.க. அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்த ரெயில்வேக்கான தனி பட்ஜெட் முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்பி ரெயில்வேக்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து அதை முறையாக பராமரித்து சாதாரண மக்கள் வசதியாக பயணம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.
    • வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நெருக்கடி நிலை முடிந்தவுடன் ராஜீவ்காந்தியும், சஞ்ஜய் காந்தியும் ஆட்சியாளர்களுக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பியோட முயன்றார்கள் என்று ஒரு அப்பட்டமான அவதூறு செய்தியை அண்ணாமலை கூறியிருக்கிறார். அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிகளின்படி தான் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்தார்.

    நெருக்கடி நிலை முடிந்ததும் பிரதமர் இந்திரா காந்தி நடத்திய தேர்தலில் அவரே வெற்றி வாய்ப்பை இழந்ததின் மூலம் ஜனநாயகத்தை உலகத்திற்கு நிரூபித்தார். நேரு பாரம்பரியத்தில் வந்த இந்திரா காந்தியின் பெருமையை விடுதலைப் போராட்டத்தில் கடுகளவும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க. அறிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அண்ணாமலை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. எனவே, வரலாற்றுத் திரிபு வாதங்களை அண்ணாமலை நிறுத்திக் கொள்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
    • தமிழகத்தில் தோன்றிய எதிர்ப்பு நாடு முழுவதும் இன்றைக்கு கடும் எதிர்ப்பாக மாறியிருக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் அளித்ததில் முறைகேடுகள் என நாடு முழுவதும் உருவாகியிருக்கிற எதிர்ப்பை வீதி முதல் பாராளுமன்றம் வரை நீட் தேர்வு ஊழலை எழுப்புவோம் என்று ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.

    நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தொடர்ந்து நீட் தேர்வு திணிப்பை ஒன்றிய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தோன்றிய எதிர்ப்பு நாடு முழுவதும் இன்றைக்கு கடும் எதிர்ப்பாக மாறியிருக்கிறது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ கல்லூரிக்கான நுழைவு தேர்வு நடத்தும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்க வேண்டுமென்ற ராகுல்காந்தியின் வாக்குறுதியை நிறைவேற்றுகிற வகையில் நமது கண்டனக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென அன்போடு அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நீட் தேர்வில் யார் மருத்துவர் ஆகவேண்டும், ஆக கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., தான் முடிவு செய்கிறார்கள்.
    • இந்தியா பாதுகாப்புடன் இருக்கிறது என்று மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். ஆனால் பிரதமராக மோடி பதவியேற்ற நாளில் 10 பேரை பயங்கரவாதிகள் கொன்றார்கள்.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்கட்சித் தலைவராக கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

    நீட் தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நீட் என்ற கொடிய எமனை அகற்ற வேண்டும்.

    பாராளுமன்றத் தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4-ந்தேதி, நீட் தேர்வு முடிவை வெளியிட்டார்கள். நீட் தேர்வில் மிகப்பெரிய குளறுபடி நடந்துள்ளது. இது மாணவர்களை ஏமாற்றும் செயல். நீட் தேர்வு வர்த்தக சூதாட்டம்.

    நீட் தேர்வை உடனடியாக நீக்க வேண்டும். நீட் தேர்வில் யார் மருத்துவர் ஆகவேண்டும், ஆக கூடாது என்று ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., தான் முடிவு செய்கிறார்கள்.

    இந்தியா பாதுகாப்புடன் இருக்கிறது என்று மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். ஆனால் பிரதமராக மோடி பதவியேற்ற நாளில் 10 பேரை பயங்கரவாதிகள் கொன்றார்கள்.

    நாளை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 1,500 பேர் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில், கட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்படும்.

    நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளார்கள்.

    அவர்களுக்கு ஒரு நீதி தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஒரு நீதி. வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து கட்சி பணியாற்றிய

    தமிழிசை சவுந்தர ராஜனை பா.ஜ.க. கைவிட்டு விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், பொதுச் செயலாளர் எஸ்.ஏ.வாசு மற்றும் டி.என்.அசோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×