என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்வபெருந்தகை"

    • ஏரி உபரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக தகவல் சொல்லவில்லை என்றார்.
    • எம்.எல்.ஏ. செல்வபெருந்தகை அதிகாரிகளை வசைபாடியது சலசலப்பை ஏற்படுத்தியது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100 கன அடி நீர் திறக்கப்பட்டது.

    இதற்கிடையே, நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும், நீர்மட்டம் 21 அடியை நெருங்குவதாலும் கூடுதலாக உபரி நீர் திறக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏரியின் ஐந்து கண் மதகில் மூன்று செட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.

    இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மாநில தலைவருமான செல்வபெருந்தகை அதிகாரிகளுடன் சேர்ந்து நேற்று ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.

    அதன்பின், மக்கள் பிரதிநிதிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தண்ணீரை திறந்து விடுகிறீர்கள். கடந்த 3 ஆண்டுகள் நான் திறந்து விட்டேன். கடந்த ஆண்டு என்னிடத்தில் சொல்லவில்லை. மக்கள் பிரதிநிதிகளுக்கு சொல்லாமல் நீங்களே மக்கள் பிரதிநிதியாக ஆகிவிட்டால் பிறகு எதற்கு அரசாங்கம்? என பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார். இச்சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

    • கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுத்து வருகிறோம்.
    • ஆட்சியில் பங்கு என தலைவர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றனர்.

    சென்னை:

    காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பழனிசாமி ஒருமையிலும், கொச்சைப்படுத்தியும் பேசி தரம்தாழ்ந்த அரசியலை செய்கிறார். எங்களை வம்புக்கு இழுத்து அநாகரிகமாக பேசி வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியை விட்டுக் கொடுக்காமல் இருந்தாலும், மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு என மக்கள் பிரச்சனை என்று வரும்போது நாங்கள் சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளோம்.

    எடப்பாடி பழனிசாமி நாளிதழ்களை படிப்பதில்லை. அரசியலும் தெரிவதில்லை. வாயில் வந்தபடி பேசிவிட்டு செல்கிறார். அவரைப் போன்று கொச்சைப்படுத்தி பேச எங்களுக்கு தெரியாது.

    கூட்டணியில் கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என தலைவர்கள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்துகின்றனர். அதுபோன்று நான் பொதுவெளியில் பேச முடியாது.

    நாங்கள் கூடுதல் தொகுதி கேட்கவில்லை என யார் சொன்னது. எங்களுடைய பிரச்சாரங்களை ஆரவாரம் இல்லாமல், உயிரிழப்பு இல்லாமல் செய்து வருகிறோம். எங்கள் தேர்தல் பிரச்சாரத்தை கடந்த ஜனவரியிலேயே தொடங்கிவிட்டோம் என தெரிவித்தார்.

    • கூட்டத்தில் சிலர் த.வெ.க. கொடியுடன் கலந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    • இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

    சென்னை:

    சென்னை சத்தியமூர்த்தி பவனில், முன்னாள் முதலமைச்சர் பக்தவத்சலத்தின் 129-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    அதன்பின், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேகமான வளர்ச்சி பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில்கள் தொடங்குவதற்கான அனுமதி வழங்குவதில் தாமதம் செய்கிறார்கள்.

    காஞ்சீபுரம் மாவட்டம் அல்ல எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட நிர்வாகம் கோப்புகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தில் த.வெ.க. கொடியுடன் சிலர் கலந்து கொண்டதாகவும், இதனால் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

    அவர் காண்பது கூட்டணி கனவு. அது பகல் கனவாகத்தான் இருக்கும். காங்கிரஸ் கூட்டத்திலும் த.வெ.க. கொடி பறக்கத்தான் செய்கிறது. அதற்காக நாங்களும் கூட்டணி கனவு காண முடியுமா? என தெரிவித்தார்.

    • தி.மு.க.வில் உள்ள அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர்.
    • காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொல்கிறார்.

    ஊட்டி:

    'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார்.

    கூடலூர் பஸ் நிலையம் அருகே இன்று திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    இந்தியாவிலேயே கல்வியில் தமிழகம் முதல் இடம் பிடிப்பதற்கு அ.தி.மு.க. தான் காரணம். அ.தி.மு.க ஆட்சியில் ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கையை 54 சதவீதமாக உயர்த்தியது அ.தி.மு.க அரசு தான். கல்விக்கு அதிக நிதி ஒதுக்கி, கல்வியில் புரட்சி செய்தது அ.தி.மு.க.

    தி.மு.க. 4 ஆண்டு ஆட்சியில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரியாவது கொண்டு வரப்பட்டதா? மத்திய அரசு கொடுக்கவில்லை என்பார்கள். ஆனால் அது தவறு. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம்.

    நேற்று உதயநிதி ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார். அப்படியா செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே அதிக கடன் வாங்குவதில் முதல் ரோல் மாடல் தான் ஸ்டாலினின் அரசு. கமிஷன், ஊழலில் ரோல்மாடல் தி.மு.க., குடும்ப ஆட்சி, வாரிசு அரசியல் மற்றும் ஸ்டிக்கர் ஓட்டி திறப்பதில் ரோல் மாடல் தி.மு.க தான்.

    எதிர்கட்சி தலைவராக இருந்தபோது ஸ்டாலின் 525 வாக்குறுதிகளை கொடுத்தார். அதில் 98 சதவீதம் நிறைவேற்றியதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அத்தனையும் பொய். அதிலும் நீங்கள் ரோல் மாடல் தான். போட்டோ சூட் நடத்துவதிலும் நீங்கள் தான் ரோல் மாடல்.

    கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தி.முக.வோடு அங்கம் வகிப்பதாக அவர்கள் கூறி வருகின்றனர். காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஒரு கருத்தை சொல்ல, அதற்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு கருத்தை சொல்கிறார். சாறை முழுவதுமாக குடித்து விட்டு சக்கையை வழங்குகிறார்கள் என தெரிவித்து இருந்தார்.

    உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலினையும், ஸ்டாலின் உதயநிதியையும் புகழ்ந்து பேசுகிறார்கள். இவர்கள் போதாது என்று இப்போது துர்கா ஸ்டாலினும் வந்து விட்டார். அவரும் ஸ்டாலினை புகழ்கிறார். இவர்களை நாட்டு மக்கள் புகழ்ந்து பேசவில்லை. குடும்ப மக்கள் தான் அவர்களை புகழ்ந்து பேசிக் கொள்கின்றனர்.

    தி.மு.க.வில் உள்ள அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர். தி.மு.க. குடும்ப கட்சி. கருணாநிதி குடும்பம் இருக்கும் வரை தி.மு.க.வில் யாரும் உயர்ந்த பதவிக்கு வர முடியாது. உழைப்பை சுரண்டும் குடும்பம் ஸ்டாலின் குடும்பம்.

    நாட்டில் உள்ள எந்த கட்சியாலாவது இப்படி குடும்ப ஆட்சி நடப்பதை பார்க்க முடிகிறதா? கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி தி.மு.க.வில் கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் வரமுடியும். இப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? ஒரு குடும்பம் 8 கோடி மக்களை சுரண்டி பிழைப்பதற்கு நாம் அனுமதிக்கலாமா? இதற்கு ஒரு முடிவு கட்டுவிங்களா? என மக்களை பார்த்து கேட்டார்.

    செல்வப்பெருந்தகை பல கட்சியில் இருந்து வந்தவர். இவர் பல கட்சிகளுக்கு போய்விட்டு வந்து விட்டார். காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் ஆட்சியில் பங்கு கேட்டு பேசி வருகின்றனர். ஆனால் இவர் சொல்கிறார் ராகுல்காந்தி ஆட்சியில் பங்கு கேட்க சொல்லவில்லை என சொல்கிறார். உண்மையில் ஒரு காங்கிரஸ் தொண்டனாக இருந்திருந்தால் அந்த எண்ணம் இவருக்கு வந்திருக்குமா?. அவர் தி.மு.க.வை தாங்கி பிடித்து கொண்டிருக்கிறார். அவர் காங்கிரஸ் கட்சியை வளர்க்க பார்க்கவில்லை.

    செல்வப்பெருந்தகை காங்கிரசுக்கு விசுவாசமாக இல்லை. தி.மு.க.வுக்கு தான் விசுவாசமாக உள்ளார்.

    தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியில் பிளவு வந்துவிட்டது. ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தி.மு.க கூட்டணி நிலையான கூட்டணியாக உள்ளது. ஆனால் அ.தி.மு.க அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கிறார்கள்.

    அ.தி.மு.க.வை பொறுத்தவரை எப்போதும் கூட்டணியை நம்பி இருந்தது இல்லை. ஆனால் தி.மு.க எப்போதும். கூட்டணியை நம்பி தான் இருக்கிறது. மக்கள் எங்களோடு கூட்டணி வைத்துள்ளார்கள். 2026 தேர்தலில் அ.தி.மு.க வெல்லும். ஆட்சிக்கு வரும். அதனை ஸ்டாலின் பார்க்க தான் போகிறார்.

    மக்களின் எழுச்சியே எங்களது ஆட்சி வருவதற்கான அடையாளம். தேர்தலில் அ.தி.முக. தான் முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்துக்கு தான் தற்போது மற்ற கட்சிகள் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன.

    அ.தி.மு.க. பா.ஜ.க.வின் அடிமை என ஸ்டாலின் பேசுகிறார். தலைவன் மட்டும் அல்ல தொண்டன் கூட யாருக்கும் அடிமை இல்லை. நாங்கள் சொந்த காலில் நிற்கிறோம்.

    உங்களை போன்று கூட்டணியை நம்பி இல்லை. கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது வேறு. தேர்தல் நேரத்தில் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்கே கூட்டணி அமைக்கிறோம். உங்களை போன்று பல கட்சிகளை கூட்டணியில் வைத்து அவர்களை அடிமையாக்க நாங்கள் விரும்பவில்லை. எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக உள்ளனர்.

    தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை தி.மு.க. தான் நியமிக்கிறது. தி.மு.க. யாரை பரிந்துரை செய்கிறதோ அவரை தான் காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கிறது. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்யும் கட்சி தி.மு.க.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.ம.வேலு சாமி, மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து தாக்கும் மோடி அரசின் ஆட்டம் தான் இது.
    • எவ்வளவு சதி செய்தாலும், காங்கிரசின் குரலை அடக்க முடியாது என தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடகப்பிரிவு தலைவர் பவன் கெரா மீது தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கியிருப்பது மிகக் கொடூரமான அரசியல் பழிவாங்கல்.

    மக்கள் தலைவர் ராகுல் காந்தி, நரேந்திர மோடி அரசின் வாக்குத் திருட்டை அம்பலப்படுத்தியவுடன், அதற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் தலைவர்களைக் குறிவைத்து தாக்கும் மோடி அரசின் ஆட்டம் தான் இது.

    இன்று இந்தியாவில் மோடி அரசு என்றால் அது வாக்குத் திருட்டின் சின்னம். மக்களால் நேசிக்கப்படாததால் தேர்தலில் நேர்மையாக வெல்ல முடியாத அரசுதான் பா.ஜ.க. அரசு. சதி, வஞ்சகம், வாக்குத்திருட்டு என்ற மூன்று தூண்கள்மேல் தான் இந்த அரசு தாங்கிக் கொண்டு நிற்கிறது. அதன் தோல்வியையும் பயத்தையும் மறைக்கவே ஒரே நபர் பல இடங்களில் வாக்காளர் என்ற சிரிக்கத்தக்க பொய்க்குற்றச்சாட்டு பவன் கெரா மீது சுமத்தப்பட்டுள்ளது.

    உண்மையை வெளிப்படையாகச் சொன்ன காங்கிரஸ் தலைவர்களை மௌனப்படுத்த வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கம்.

    ஆனால் இந்த நாட்டின் மக்கள் தெளிவாக உணர்ந்து விட்டார்கள். வாக்குத் திருடனை வாக்குத் திருடன் என்றுதான் அழைப்போம். எவ்வளவு சதி செய்தாலும், காங்கிரசின் குரலை அடக்க முடியாது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி, பவன் கெரா அவர்களுடன் உறுதியுடன் நிற்கிறது. மோடி எத்தனை தந்திரங்கள் செய்தாலும், இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்கும் காங்கிரசின் போராட்டம் இன்னும் தீவிரமாவதே தவிர தளராது என பதிவிட்டுள்ளார் .

    • ஞானசேகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.
    • தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது எனக்கூறிய தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஞானசேகரன் சம்பவம் நடந்த அன்றும், மறுநாளும் யார் யாரிடம் தொலைபேசியில் பேசினான் என்ற விவரங்களையும் அதில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கு குற்றவாளி ஞானசேகரன், குற்றம் நடந்த அன்றும், அதற்கு அடுத்த தினமும், யார் யாருடன் தொலைபேசியில் பேசினான், அவனுடன் பேசியவர்கள் வேறு யார் யாருடன் பேசினார்கள் என்ற முழு விவரங்களையும், எனது காணொளியில் கூறியிருந்த பின்னரும், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, அதே தகவல்களை ஏன் வெளியிடவில்லை என கேட்கிறார். அதிலும், குறிப்பாக அவர் ஏன் இத்தனை பதட்டம் அடைகிறார் என்று தெரியவில்லை.

    ஒரு பொதுப் பிரச்சனை குறித்து கருத்து தெரிவிக்கும் முன்னர், அது குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது ஒரு நல்ல அரசியல் தலைவருக்கு அழகு. செல்வப்பெருந்தகை எனது காணொளியை முழுமையாகக் காணும்படி கேட்டுக் கொள்கிறேன். வேண்டுமென்றால், அவருக்கு வாட்ஸ் அப்பில் அந்தக் காணொளியை அனுப்பி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைகளுக்காகவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் போராடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார்.
    • பெரியாரை நேசிக்கும் அனைவரும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூட நம்பிக்கைகளை மக்களிடம் இருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைகளுக்காகவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் போராடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார். தமிழ்நாட்டில் பெரியாரையும், அவரின் குடும்பத்தார்களையும் நேசிக்கும் ஜனநாயக சக்திகள், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் களம் காணும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சபாநாயகருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது
    • உடனே சபாநாயகர் அப்பாவு, செல்வபெருந்தகை பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கினார்.

    கொரோனா வைரஸ் குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது செல்வபெருந்தகை (காங்கிரஸ்) பேசும்போது, கடந்த அ.தி.மு.க. ஆட்சி மீது குற்றம் சுமத்தும் வகையில் பேச முயன்றார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    அப்போது சபாநாயகருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் செல்வ பெருந்தகை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே சபாநாயகர் அப்பாவு, செல்வபெருந்தகை பேசிய ஆட்சேபகரமான வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கினார். ஆனாலும் செல்வபெருந்தகை மீண்டும் சில வார்த்தைகள் பேச முயன்றார். அப்போது எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

    எடப்பாடி பழனிசாமி பேசும் போது, இவருக்கு இதே வாடிக்கையாகி போய்விட்டது. எங்களை குற்றம் சாட்டி பேசுவதுதான் இவருக்கு வேலையா என்று ஆவேசத்துடன் கூறினார். உடனே அமைச்சர் துரைமுருகன் குறுக்கிட்டு, பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதன் பின் சபை அமைதியானது.

    • அமைச்சர் பொன்முடி மீது 12 ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள வழக்கை தோண்டி எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது.
    • மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழக தலைவர்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள்.

    நெல்லை:

    கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நெல்லையில் நடத்திய அமைதி ஊர்வலத்தில் போலீசார் நடத்திய தடியடியில் 17 பேர் இறந்தனர்.

    இதன் நினைவுதினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் நெல்லை தாமிரபரணி ஆற்றில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கமிட்டி தலைவரும், தமிழ்நாடு மாநில தணிக்கை பொதுக்குழு தலைவருமான செல்வப் பெருந்தகை எம். எல்.ஏ., மாநில காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் தலைவர் விச்சு லெனின் பிரசாத் ஆகியோர் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் தமிழக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    உரிமைக்காக போராடிய போராளிகள் 17 பேருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளோம். உயிர்நீத்த போராளிகளுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    நிதிநிலையை கருத்தில் கொண்டு அதற்கான வாய்ப்பு இல்லை என்றால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செலவில் உயர்நீத்த 17 பேருக்கு மணிமண்டபம் அமைப்பதற்கான ஏற்பாட்டை செய்வோம்.

    மணிப்பூரில் அங்குள்ள மக்கள் உரிமைக்காக போராடி வருகின்றனர். மணிப்பூர் மக்களின் உரிமையை மீட்டெடுப்பதுதான் தலைவர் ராகுல் காந்தியின் முக்கிய பணியாக உள்ளது.

    ஜாதியாக, மதமாக, இனமாக மக்களை பிரித்தாலும் பா.ஜ.க.விற்கு விடுக்கும் எச்சரிக்கை என்னவென்றால் ஒருபோதும் இந்திய மக்கள் ஏமாறமாட்டார்கள். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

    அமைச்சர் பொன்முடி மீது 12 ஆண்டுகளுக்கு முன்னாள் உள்ள வழக்கை தோண்டி எடுத்து அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் வீரமணி, விஜயபாஸ்கர் மீது உள்ள வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கேட்டால் அதற்கு ஆளுநர், சி.பி.ஐ. விசாரணை நடப்பதாக மறுக்கிறார். இதே நடைமுறைதான் அமைச்சர் பொன்முடிக்கும் பொருந்தும்.

    நீதிமன்ற நிலுவையில் இருக்கும் வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவது பழிவாங்கும் நடவடிக்கை. மிரட்டல் உருட்டல்களுக்கு தமிழக தலைவர்கள் ஒருபோதும் பணியமாட்டார்கள். குறிப் பாக காங்கிரஸ், தி.மு.க. தலைவர்கள் இதனை எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
    • தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள், தலித்துகள் தான்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு, மாநிலத் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். அவர் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சி சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடை பெற்றது.

    இதையொட்டி அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சத்தியமூர்த்தி பவனை அடைந்த செல்வப் பெருந்தகை, கட்சியின் மேலிட பார்வையாளர் அஜோய் குமார் முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண் டார். முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்புகளை ஒப்படைத்தார். அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை பதவியேற்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ''தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் விளிம்பு நிலை மக்கள், தலித்துகள் தான். கடந்த 70 ஆண்டுகளாக அவர்களிடம் நிறைய வாக்குகளை பெற்றிருக்கிறோம். ஆனால் அவர்களுக்கு நாம் குறைவாகவே செய்துஇருக்கிறோம். இன்று செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் அவரை நான் மனமார வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன்.

    நான் திருநாவுக்கரசரிடமிருந்து தலைவர் பதவியை பெற்றபோது மகிழ்ந்தேன். அதே மகிழ்ச்சியோடு இந்த பதவியை செல்வப் பெருந்தகைக்கு வழங்குகிறேன்'' என்றார். நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-

    இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆபத்து வந்திருக்கிறது. நாட்டை காப்பாற்ற ராகுல்காந்தி பிரதமராக வேண்டும். மல்லிகார்ஜூன கார்கே நம்பிக்கையோடு இந்த பொறுப்பை எனக்கு வழங்கி இருக்கிறார். இந்த நாட்டை காக்க முடியும் என்றால் அது காங்கிரசால் மட்டுமே முடியும். அழகிரியின் பணி பாராட்டுக்குரியது. அவர் எல்லோரையும் அரவணைத்துச் சென்றார். 18 எம்.எல்.ஏ.க்கள், 8 எம்.பி.க்களை பெற்றுத்தந்தார்.


    காங்கிரஸ் தொண்டர்கள் ஒருபோதும் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற அனுமதிக்கமாட்டார்கள். அனைவரும் கூட்டு முயற்சி மேற்கொண்டால் காமராஜர் ஆட்சி கொண்டுவர முடியும். அதற்கு எல்லோரும் சேர்ந்து களம் அமைப்போம். இன்று இல்லை என்றாலும் ஒருநாள் நடந்தே தீரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தலைவர் சிவ.ராஜ சேகரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தேசிய செயலாளர் சிரி வெல்ல பிரசாத், பெ.விஸ்வநாதன், முன்னாள் மாநில தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, கிருஷ்ணசாமி, திரு நாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் மணி சங்கர் அய்யர், சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன், மாநில சிறு பான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல் போன்ஸ், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மாநில பொருளாளர் ரூபி மனோகர், சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்.பி.க்கள் விஜய்வசந்த், ஜோதிமணி, ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், ரஞ்சன்குமார், முத்தழகன், டில்லி பாபு, மகளிர் அணி தலைவி சுதா ராமகிருஷ்ணன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் ரவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.
    • தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

    திமுக-காங்கிரஸ் இடையே ஓரிரு நாட்களில் 2ம் கட்ட பேச்சுவார்தை நடக்க போகிறது.

    இந்த சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு இன்று பிற்பகல் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை டெல்லி செல்கிறார்.

    அங்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை நேரில் சந்திக்கிறார்.

    • தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போது இதுபோன்று காலதாமதம் ஏற்படுவது இயல்புதான்.
    • தி.மு.க. தலைமையுடன் டெல்லி மேலிட தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எத்தனை? என்பது இன்னும் முடிவாகாமலேயே உள்ளது.

    இதுதொடர்பாக தி.மு.க.வுடன் தமிழக காங்கிரசார் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

    இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, சட்டமன்ற கட்சி தலைவர் ராஜேஸ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

    காங்கிரஸ் மேலிட தலைவர்களின் அழைப்பை ஏற்று டெல்லிக்கு பயணமான இருவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றியும், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின்போது நடந்த விஷயங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார்கள்.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் இருவரும் சென்னை திரும்பினார்கள்.

    தொகுதி பங்கீடு தொடர்பாக செல்வபெருந்தகையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நேரத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகளின்போது இதுபோன்று காலதாமதம் ஏற்படுவது இயல்புதான். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? எந்தெந்த இடங்களில் களம் காண்பது என்பது பற்றியெல்லாம் தி.மு.க. தலைமையுடன் டெல்லி மேலிட தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

    இந்த பேச்சுவார்த்தையில் விரைவில் சுமூக உடன்பாடு எட்டப்படும். காங்கிரசுக்கு கவுரவமான தொகுதிகளை தி.மு.க. தலைமை ஒதுக்கி தரும் என்கிற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு செல்வ பெருந்தகை கூறினார்.

    ×