search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "India alliance election"

  • பாஜக தனது வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்த பார்க்கிறது.
  • பாராளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சி அகற்றப்படும்.

  திருச்சி:

  திருச்சியில் இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

  இந்தியாவில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு, பெண்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. உப்பு சத்தியாகிரகத்தை பற்றி, இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை பற்றி மோடியும், அண்ணாமலையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

  பாஜக தனது வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்த பார்க்கிறது. இதனை ஒரு நாளும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ஜாதி, மத அரசியலை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ் இன துரோகி அண்ணாமலை தான். கர்நாடக எம்.பி. தமிழர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்திய போது அதற்கு அண்ணாமலை பதில் ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்?தமிழகத்தின் உரிமை எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி நிச்சயம் குரல் எழுப்பும். காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழக அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் உரிமையை விட்டுக் கொடுக்காது. இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சி அகற்றப்படும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • ராபர்ட் வதேரா இதுவரை நேரடிடையாக அரசியலில் ஈடுபட்டது இல்லை.
  • சோனியா காந்தியின் குடும்பத்தை விமா்சிப்பதைத் தவிர, வேறெந்த பணியும் அவா் மேற்கொள்ளவில்லை.

  அமேதி:

  உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி, ரேபரேலி ஆகிய 2 தொகுதிகளும் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக திகழ்ந்தவை. இந்திராகாந்தி காலத்தில் இருந்தே அங்கு காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்று வருகிறது.

  அமேதி தொகுதியில் கடந்த 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ராகுல் காந்தி தொடா்ந்து வெற்றி பெற்றாா்.

  கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்றத் தோ்தலில் ராகுலை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி ஸ்மிருதி இரானியை நிறுத்தியது. மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக சுமாா் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வியை தழுவினார்.

  வெற்றி பெற்ற ஸ்மிருதி இரானி மத்திய மந்திரியாக பொறுப்பேற்றார். அதன் பிறகு அவர் அமேதி தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற் கொண்டு அந்த தொகுதியை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவான தொகுதியாக மாற்றி இருக்கிறார்.

  இந்த நிலையில் தற்போதைய பாராளுமன்ற தோ்தலில் அமேதி தொகுதியில் பா.ஜ.க. சாா்பில் மீண்டும் ஸ்மிருதி இரானி களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடப் போவது யார் என்பது தொடர்ந்து சஸ்பென்சாக உள்ளது.

  உத்தரபிரதேசத்தில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட காங்கிரஸ் அமேதி தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் உள்ளது

  கடந்த முறை தோல்வியை தழுவிய ராகுல் மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிட மனு செய்து உள்ளார். அவர் அமேதியில் ஸ்மிருதி இரானியை எதிர்த்து மீண்டும் போட்டியிடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அமேதியில் மே 20-ந்தேதி 5-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரியங்கா ரேபரேலி தொகுதியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதற்கிடையே அமேதியில் பிரியங்காவின் கணவர் ராபர்ட்வதேராவை போட்டியிட செய்ய முயற்சி நடப்பது தெரிய வந்துள்ளது.

  இது தொடர்பாக பேட்டியளித்த ராபா்ட் வதேரா, 'ஸ்மிருதி இரானியை தோ்வு செய்ததன் மூலம் தாங்கள் செய்த தவறை அமேதி தொகுதி மக்கள் இப்போது உணா்ந்து விட்டனா். சோனியா காந்தியின் குடும்பத்தை விமா்சிப்பதைத் தவிர, வேறெந்த பணியும் அவா் மேற்கொள்ளவில்லை.

  சோனியா குடும்பத்தைச் சோ்ந்த ஒருவா்தான் தங்கள் தொகுதியை மீண்டும் பிரதி நிதித்துவப்படுத்த வேண்டும் என அமேதி தொகுதி மக்கள் எதிா்பார்க்கின்றனா். நான் அரசியலில் ஈடுபட முடிவு செய்தால், அமேதி தொகுதியை தோ்வு செய்ய வேண்டும் என்று அந்த தொகுதி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வருகின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம் என்றாா்.

  ராபர்ட் வதேரா இதுவரை நேரடிடையாக அரசியலில் ஈடுபட்டது இல்லை. அவர் மீது நில மோசடி வழக்குகள் உள்ளன. அரசு நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி ரியல் எஸ்டேட் அதிக விலைக்கு விற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

  அவர் தேர்தலில் போட்டியிட்டால் அந்த மோசடி புகார்களை பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் எழுப்புவார்கள் என்று கூறப்படுகிறது.

  • புதுவை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.
  • வைத்திலிங்கம் வேனில் நின்ற படி பிரசாரம் செய்தார்.

  புதுச்சேரி:

  இந்தியா கூட்டணி கட்சி சார்பில் புதுவை பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார்.

  அவர் தொகுதி வாரியாக கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் வீதி, வீதியாக திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் வைத்திலிங்கம் வேனில் நின்ற படி பிரசாரம் செய்தார். அப்போது வள்ளலார் சாலையில் வாக்கு கேட்டு வேனில் சென்று கொண்டிருந்தார்

  இன்று காலை முதலே புதுவையில் வெயில் சுட்டெரித்தது. காலை 11.10 மணி அளவில் வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து பிரசாரம் செய்த வைத்திலிங்கம் திடீரென மயங்கி அருகில் இருந்த வைத்தியநாதன் எம்.எல்.ஏ. மீது சரிந்தார்.

  உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கி பிடித்தனர். வேனை நிறுத்தி அருகேயிருந்த வீட்டில் அமர வைத்தனர்.

  அருகாமையில் இருந்த டாக்டர் அங்கு வரவழைக்கப்பட்டார். அவர் வைத்திலிங்கத்தை பரிசோதித்தார். அப்போது குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் அதிக வெயில் இருப்பதால் குடிநீர், ஜூஸ் பருகும்படி டாக்டர் அறிவுருத்தினார்.

  இதையடுத்து வைத்திலிங்கத்துக்கு எலுமிச்சை ஜூஸ் அளிக்கப்பட்டது. சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு பகல் 11.30 மணியளவில் மீண்டும் ஜீப்பில் ஏறி வாக்கு சேகரிப்பை தொடர்ந்தார்.

  • மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும்.
  • தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.

  தஞ்சாவூர்:

  தஞ்சையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

  பா.ஜனதா 3-வது முறையும் ஆட்சி அமைத்தால், இதுதான் கடைசி தேர்தல் என்கிற சூழ்நிலை ஏற்பட்டு விடும். இதை காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை மக்கள் புரிந்து கொண்டனர். எனவே, வருகிற தேர்தல் மூலம் இந்தியா கூட்டணியின் ஆட்சிதான் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதைத்தான் மக்கள் உணர்வுகள் பிரதிபலிக்கின்றன.

  வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு தேர்தலில் நிற்பதற்கு கூட வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. அதனால் பிரதமர் அசாமுடன் திரும்பி வந்து விட்டார். இச்சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் மிகவும் அமைதியாக பெரிய அளவில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.


  எனது பிரசாரம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி தொடங்கி 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

  மோடியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என நினைக்கிறவர்கள் தங்களது வாக்கை பயனுள்ளதாக ஆக்க வேண்டும். இதன் அடிப்படையில் எங்களது பிரசாரம் அமையும்.

  தமிழகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு பிரதமர் வந்து பேசுகிறாரோ, அவ்வளவுக்கு அவ்வளவு எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கிறது. எனவே, தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கு பிரதமர் ஒவ்வொரு முறையும் உரம் போடுவது போல உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.
  • தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது.

  அம்பத்தூர்:

  அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்களின் பேராதரவு உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் பேராதரவை கொடுக்க காத்திருக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.

  சிதம்பரம் தொகுதியில் வருகிற 25-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். முதலமைச்சர்களை கைது செய்யும் புதிய நடைமுறையை அரசியலில் பா. ஜனதா கையாண்டு வருகிறது. பழிவாங்கும் வெறியோடு பா.ஜ.க. செயல்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜனதா தோல்வி பயத்தில் இது போன்று செய்து வருகிறது.

  தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த முறை 40-க்கு 40தையும் வெல்வோம். தேர்தல் முடிவுகள் வரத் தான் போகிறது. அப்போது மக்கள் பா.ஜனதாவிற்கு எவ்வளவு மதிப்பெண் போட போகிறார்கள் என்பது தெரியவரும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • பாரதிய ஜனதா கட்சி மிக தந்திரமாக செயல்பட்டு வருகிறது.
  • பாரதிய ஜனதாவின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. பலியாகாது என்று நம்புகிறேன்.

  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

  பாரதிய ஜனதா கட்சி மிக தந்திரமாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியிலும் காலூன்றுவதற்காக அவர்கள் புதிய யுக்தியை கையாள்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள சிறிய கட்சிகளிடம் சேர்ந்து கொண்டு ஊடுருவுகிறார்கள்.

  பிறகு அந்த கட்சிகளின் வாக்கு வங்கியை சீர் குலைத்து சூறையாடி விடுவதை பா.ஜ.க. வழக்கத்தில் வைத்திருக்கிறது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் 2-வது இடத்தை பிடிப்பதை வழக்கத்தில் வைத்திருக்கிறது. அ.தி.மு.க. இதை புரிந்து கொள்ள வேண்டும்.


  தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க.வினர் இதை புரிந்து கொள்ளாவிட்டால் அவர்களும் நாளடைவில் தங்களது வாக்கு வங்கியை இழக்க நேரிடும்.

  பாரதிய ஜனதாவின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. பலியாகாது என்று நம்புகிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகும் அ.தி.மு.க. வின் வாக்கு வங்கி நிலை குலையாமல் இருக்கிறது. அதுதான் அந்த கட்சியின் பலம்.

  நாங்கள் தி.மு.க.வுடன் கொள்கைரீதியாக மட்டுமே உடன்பாடு வைத்திருக்கிறோம். பா.ஜ.க. தலைவர்கள் மத ரீதியிலான பிரசாரத்தை மட்டுமே செய்கிறார்கள். அவர்கள் என்ன சாதனைகள் செய்தார்கள் என்று சொல்வதே இல்லை.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • வாக்காளர்களை 3 பிரிவாக பிரித்து வாக்களிக்க செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
  • 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3-வது பிரிவில் உள்ளனர்.

  சென்னை:

  தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களிப்பதற்காக 68,320 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களை 3 பிரிவாக பிரித்து வாக்களிக்க செய்ய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

  நேரடியாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பவர்கள் முதல் பிரிவில் உள்ளனர். தபால் வாக்குகள் அளிப்பவர்கள் 2-வது பிரிவில் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் 3-வது பிரிவில் உள்ளனர்.

  முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்பதால் அவர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர் உள்ளனர் என்பது கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

  அவர்களுக்கு தனி விருப்ப படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த விருப்ப படிவங்கள் வாக்குச் சாவடிகள் அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை அவர்கள் பட்டியலில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளில் இன்று (புதன் கிழமை) முதல் வழங்குகிறார்கள்.

  அந்த விருப்ப படிவத்தை முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் பூர்த்தி செய்து கொடுக்கலாம். ஆனால் இது கட்டாயம் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள முதியவர்கள் நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கலாம்.


  விருப்ப படிவத்தை முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் கொடுப்பதற்கு வருவாய், காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பணிபுரிவது தொடர்பாக கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

  காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் நேற்று கட்டவாக்கம் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வீட்டுக்கு சென்று வாக்களிப்பதற்கான விண்ணப்ப படிவங்களை வழங்கி பேசினார். அவர் 3 இடங்களில் முதியோர்களை சந்தித்து உரையாடினார்.

  பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  "முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் எத்தனை பேர் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க விரும்புகிறார்கள் என்று 20, 21-ந் தேதிகளில் விண்ணப்பங்கள் வழங்கி தகவல்கள் சேகரிக்கப்படும். அதன் அடிப்படையில் எத்தனை பேர் தங்கள் வீட்டில் இருந்த படி தபால் வாக்கு அளிக்க உள்ளனர் என்பது தெளிவாக தெரியவரும்.

  வாக்குப்பதிவுக்கு முன்பு அவர்களது வீட்டுக்கு சென்று வாக்குப்பதிவு செய்யப்படும். அந்த வாக்குச் சீட்டுகள் அடங்கிய பெட்டி குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.

  வீட்டில் இருந்து வாக்கு அளிக்க சம்மதம் தெரிவித்து விருப்ப படிவத்தில் பூர்த்தி செய்து கொடுத்த பிறகு அந்த முதியவர் அல்லது மாற்றுத்திறனாளி தபால் வாக்கு மட்டுமே அளிக்க முடியும். கடைசி நிமிடத்தில் வாக்குச்சாவடிக்கு செல்கிறேன் என்று சொல்ல இயலாது.

  இவ்வாறு கலெக்டர் கலைச்செல்வி மோகன் கூறினார்.

  • பிரதமர் மோடி 5 தடவை என்ன 50 தடவைகள் இங்கு வந்தாலும் தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது.
  • விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளக்கமாக தெரிவித்து உள்ளது.

  சென்னை:

  பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக திருப்பூரில் போட்டியிடும் சுப்பராயன், நாகையில் போட்டியிடும் வை.செல்வராஜ் ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உடனிருந்தார்.

  அதேபோல் ம.தி.மு.க. சார்பில் திருச்சியில் போட்டியிடும் துரை வைகோவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உடனிருந்தார்.

  பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

  தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கத்துக்கு ஒரு கோட்டையாக அண்ணா காலத்தில் இருந்தே திகழ்ந்து வந்த திருச்சியை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கி தந்துள்ளார்.

  பிரதமர் மோடி 5 தடவை என்ன 50 தடவைகள் இங்கு வந்தாலும் தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவிக்க முடியாது. அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுகிறார். மோடியின் கனவு பலிக்காது.

  இந்த தேர்தலில் 40-க்கு 40 வெற்றி கொடி நாட்டியது இந்தியா கூட்டணி என்ற செய்தியை மக்கள் பார்க்கத் தான் போகிறார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.


  இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விளக்கமாக தெரிவித்து உள்ளது. அது எல்லா கட்சி களுக்கும் பொதுவானது. இதை யாரும் மீறக்கூடாது.

  ஆனால் நாட்டின் பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறுகிற வகையில் தொடர்ந்து அவர் தனது பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிரதமர் மோடி கோவையில் ரோடு ஷோ என்கிற பெயரில் பெரிய ஆர்ப்பாட்டத்தோடு பிரசாரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

  மோடி எதிர்பார்த்தபடி பொதுமக்கள் வரவில்லை. அதற்கு மாறாக பள்ளி குழந்தைகளை கொண்டு வந்து தெருவில் நிறுத்தி வரவேற்பு கொடுத்ததை போல் செய்திருக்கிறார்கள். இது அப்பட்டமான விதி மீறல் ஆகும். இதுபற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்போம்.

  தமிழகம்-புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் மகத்தான வெற்றி பெறும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.
  • மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

  அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு பாரத ஒற்றுமை யாத்திரையை செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையை 2023-ம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார்.

  அதன் பிறகு 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை' என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கி மும்பை தாராவி வழியாக சென்று அம்பேத்கர் சமாதியான சைத்ய பூமியில் நிறைவு செய்தார். இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.

  இன்று காலையில் ராகுல் காந்தி மும்பையில் நியாய சங்கல்ப் பாதயாத்ரா என்ற பெயரில் மணிபவன் முதல் ஆகஸ்டுகிராந்தி மைதானம் வரை நடைபயணம் மேற்கொண்டார்.


  இதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

  இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார்.


  இதே போல் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன் ஆகியோரும் மும்பை சென்றுள்ளனர்.

  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார், கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

  இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசிய பிறகு இன்று இரவே சென்னை திரும்புகிறார்.