என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "India alliance"

    • முந்தைய ஆர்ஜேடி ஆட்சியை 'காட்டு ராஜ்ஜியம்' என பிரதமர் மோடி கூறியது குறித்து தேஜஸ்வி பேசினார்.
    • நிதிஷ் குமார் அரசில் 55 ஊழல்கள் நடந்ததாக பிரதமர் மோடியே கடந்த காலத்தில் கூறியிருந்தார்.

    பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மகாபந்தன்(இந்தியா கூட்டணி) முதலமைச்சர் வேட்பாளரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.

    ஏற்கனவே பீகாரில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தேஜஸ்வி வாக்குறுதி அளித்திருந்தார்.

    இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி, பெண் வாக்காளர்களை குறிவைத்து, தான் ஆட்சிக்கு வந்தால், வெறும் ரூ.500க்கு எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் முதியோர் ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,500 ஆக உயர்த்துவதாகவும் அவர் உறுதியளித்தார்.

    மாநில மக்களுக்கு சிறந்த கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவோம் என்று அவர் உறுதியளித்தார்.

    முந்தைய ஆர்ஜேடி ஆட்சியை 'காட்டு ராஜ்ஜியம்' என பிரதமர் மோடி கூறியது குறித்து பேசிய தேஜஸ்வி, "நிதிஷ் குமார் அரசில் 55 ஊழல்கள் நடந்ததாக பிரதமர் மோடியே கடந்த காலத்தில் கூறியிருந்தார். அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?" என்று அவர் வினவினார்.

    மேலும், "நான் செய்வதைத்தான் சொல்வேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்திய கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால், நான் மக்களின் முதல்வராக இருப்பேன். பீகாரில் ஊழல் இல்லாத பாதுகாப்பான அரசாட்சியை நான் வழங்குவேன்" என்று தேஜஸ்வி தெரிவித்தார்.    

    • விகாஷீல் இன்சான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
    • அந்த கட்சி வேட்பாளர் சந்தோஷ் சாகினியை இந்தியா கூட்டணி ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்படவில்லை. இந்த குழப்பத்தில் நட்பு போட்டிகள் ஏற்பட்டு உள்ளன. கூட்டணியினரே ஒருவருக்கொருவர் எதிராக போட்டியிடுகிறார்கள்.

    தர்பங்கா கவுரா பவுராம் தொகுதி யாருக்கு என்று இறுதி செய்யப்படுவதற்கு முன்பே ராஷ்டிரீய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) அப்சல் அலிகானை வேட்பாளராக அறிவித்தது. கட்சி தலைமை அதற்கான ஆவணங்களையும் வழங்கியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்சல் பிரசாரம் செய்ய தொகுதிக்கு சென்றார்.

    அப்போது அவரது தொகுதி கூட்டணியில் உள்ள விகாஷீல் இன்சான் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த கட்சி வேட்பாளர் சந்தோஷ் சாகினியை இந்தியா கூட்டணி ஆதரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ராஷ்டிரீய ஜனதா தளம் அப்சல்கானை தொடர்பு கொண்டு கட்சி சின்னத்தின் ஆவணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவர் மறுத்து விட்டார். ராஷ்டிரீய ஜனதா தள வேட்பாளராக அவர் மனுதாக்கல் செய்தார்.

    அப்சல் அலிகானை தாங்கள் ஆதரிக்கவில்லை என்று ஆர்.ஜே.டி. தெரிவித்தது. முறையான ஆவணங்களுடன் அவர் வேட்புமனு தாக்கல் செய்ததால் நிராகரிக்க முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் கூறி விட்டனர். இதனால் அந்த தொகுதியில் தனது கட்சி வேட்பாளரை எதிர்த்து ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ்வுக்கு பிரசாரம் செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

    • ஒன்று நண்பர்களாக இருக்க வேண்டும். இல்லை எதிரியாக ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும்.
    • தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடும்போது தலைவர்களை எதிர்த்து பேச வேண்டியிருக்கும்.

    பீகார் மாநிலத்தில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் (NDA)- இந்தியா கூட்டணிக்கும் (India Bloc) இடையில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

    இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. அந்தக் கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏற்பட்டுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 143 தொகுதிகளிலும், காங்கிரஸ் 55 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக முடிவு செய்யப்பட்டது.

    இன்றுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலும் முடிவடைந்துள்ளன. ஆனால் காங்கிரஸ் 60 தொகுதிகளுக்கு மேலான இடங்களில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதனால் ஒரே தொகுதியில் இரண்டு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதை நட்பான சண்டை என இந்தியா கூட்டணி அழைக்கிறது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக்சன சக்தி கட்சியின் தலைவரான சிராக் பஸ்வான், நட்பான சண்டை என்பது கிடையாது என தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்தியா கூட்டணியில் உள்ள ஒற்றுமையின்மையை குறித்து அவர் கூறியதாவது:-

    ஒன்று நண்பர்களாக இருக்க வேண்டும். இல்லை எதிரியாக ஒருவருக்கொருவர் சண்டையிட வேண்டும். தேர்தலில் ஒருவருக்கொருவர் எதிர்த்து போட்டியிடும்போது அவர்களுடைய தலைவர்களை எதிர்த்து பேச வேண்டியிருக்கும். அது எப்படி இன்னொரு தொகுதிகளில் பாதி்ப்பை ஏற்படுத்தாமல் இருக்கும். இந்தியா கூட்டணியில் உள்ள பிளவு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும்.

    நான் அரசியலை நன்றாக புரிந்தவன். தொகுதி பங்கீடுகளில் பிரச்சனை ஏற்படலாம். ஆனால் இந்தியா கூட்டணியில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை முடிவு கூட செய்ய முடியவில்லை. ஒரு தேர்தலில் பெரிய கூட்டணி பிளவு படும் விளிம்பில் இருப்பது போன்றதை இதற்கு முன் நான் பார்த்ததில்லை.

    இவ்வாறு சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் சிராக் பஸ்வான் கட்சி 29 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக மற்றும் நிதிஷ் குமார் கட்சி தலா 101 இடங்களில் போட்டியிடுகிறது.

    இந்தியா கூட்டணியில் லாலு கட்சி (RJD) 143 இடங்களிலும், காங்கிரஸ் 55 இடங்களிலும், சிபிஐ-எம்எல் 20 தொகுதிகளிலும், சிபிஐ 6 தொகுதிகளில், சிபிஐ-எம் 4 தொகுதிகளிலும், விஐபி 15 தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் 60 தொதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

    • ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையைில் இந்தியா கூட்டணி, NDA-வை எதிர்கொள்கிறது.
    • தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராக களம் நிறுத்தப்படலாம் என எதிர்பார்ப்பு.

    பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகாருக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் முன்னணி வகிக்கும் மகாகத்பந்தன் (மகா கூட்டணி) களம் இறங்கும். இதனால் பீகாரில் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், நிதிஷ் குமார்தான் முதல்வர் என்பது ஏற்கனவே உறுதியான விசயம். அதேவேளையில் மாகா கூட்டணியில் (தற்போது இந்தியா கூட்டணி) யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    அந்த கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்தான் முதல்வர் வேட்பாளராக பார்க்கப்படுகிறது. ஆர்.ஜே.டி. தொண்டர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.

    இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் உதித் ராஜியிடம், முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதித் ராஜ் கூறியதாவது:-

    ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு வேண்டுமென்றால் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் முகமாக இருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கூட்டாக முடிவு செய்யப்படும். எந்தவொரு கட்சியின் ஆதரவாளர்களும், அவர்களுடைய கட்சித் தலைவரை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்ய முடியும். ஆனால், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை. காங்கிரஸ் தலைமையகம் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பார்ப்போம்" என்றார்.

    முதலமைச்சர் வேட்பாளரை முன்நிறுத்தாமல் நாங்கள் போட்டியிடமாட்டோம் என சில வாரங்களுக்கு முன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்த நிலையில், உதித் ராஜ் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு உடனடியான ராஷ்டிரிய ஜனதா தளம் அல்லது தேஜஸ்வி யாதவ் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

    • தமிழகத்தில் இருந்தும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.
    • தமிழ்நாடு காவல்துறை சிறப்பான காவல்துறை. விரைவில் சரியான குற்றவாளியை கைது செய்வார்கள்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வருகிற 7-ந் தேதி வாக்கு திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது.

    பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறும் இந்த மாநாடு இடத்தை இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லையில் நடைபெற உள்ள வாக்கு திருட்டை தடுப்போம், வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் மாநாட்டுக்கு கால் கோள் நாட்டு விழாவில் பங்கேற்றுள்ளேன்.

    இந்த மாநாடு ஒரு திருப்பு முனையான மாநாடாக அமையும். இந்த மாநாட்டில் ஒரு லட்சம் தொண்டர்கள் திரள்வார்கள். டெல்லியில் இருந்து மேலிட தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்தும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

    அ.தி.மு.க. ஆட்சியிலும், பொறுப்பு டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது ஒன்றும் புதிது அல்ல. உத்தரபிரதேசத்தில் இதுவரை 5 முறை பொறுப்பு டி.ஜி.பி.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழக முதலமைச்சரிடம் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும் போது கூட வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டவர் பிரதமர் மோடி. அவர் வெள்ளை அறிக்கை விடட்டும். அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம்.

    நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் இதுவரை துப்பு துலக்கப்படவில்லை. ஒரு வருடத்தை கடந்துவிட்டது. இது தொடர்பாக காவல்துறையினரிடம் கேட்கும்போது இந்த கொலை வழக்கில் சரியான கொலைக் குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. அதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறை சிறப்பான காவல்துறை. விரைவில் சரியான குற்றவாளியை கைது செய்வார்கள்.

    இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. இணக்கமாக உள்ளது. இந்த கூட்டணி 5 தேர்தல்களில் வெற்றி கண்ட கூட்டணி. தமிழகத்திற்கு கல்வி நிதியை மத்திய அரசு வழங்கக்கோரி சசிகாந்த் செந்தில் எம்.பி. உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரது உடல்நலம் கருதி தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜனநாயகத்தை பாதுகாக்க நடத்தும் அவரது போராட்டம் வரவேற்கத்தக்கது. ஆனாலும் அவரது உடல் நலம் முக்கியம்.

    ஜி.கே.மூப்பனார் ஒரு காலமும் பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்தது கிடையாது. சமீபத்தில் அவரது நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது கூட காங்கிரஸ் திடலில் தான்.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., தே.மு.தி.க., ஓ.பி.எஸ். வெளியேறி உள்ளனர். ஆனால் இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.
    • வரும் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத்தான் சீமானும் விஜய்யும் போட்டியிடுகிறார்கள்.

    முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. எல்லா மாநில முதல்வர்களும் தங்கள் மாநில மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.

    ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை. இதன் மூலம் அவர் எந்த அளவுக்கு வாக்கு வங்கி அரசியல் எண்ணத்தோடு செயல்படுகிறார் என்பது தெரியும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் தான் போட்டி. தமிழகத்தில் அ.தி.மு.க.வு டன் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.

    பா.ஜனதா பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடுகளை நடத்தி அடிமட்டத்தில் பா.ஜ.க.வின் வலிமையினை வெளிப்படுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் அவலநிலையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ கருத்து திணிப்புகளை புகுத்தி தி.மு.க. தான் முன்னிலையில் இருப்பது போல் கூறி வருகிறார்கள்.

    ஆனால் கள நிலவரம் தி.மு.க.வுக்கு எதிராகவே உள்ளது. அதை மறைக்கவே நாடகம் போடுகிறார்கள். தி.மு.க.வின் செல்வாக்கு மிகப்பெரிய அளவு சரிந்து இருக்கிறது. இன்னும் 8 மாதத்தில் மேலும் குறையும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதியானது.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் சித்தாந்தமும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி வருகிறது. தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் அதை மக்கள் நேரிலேயே பார்த்தார்கள்.

    இந்த அவல ஆட்சி மாற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை தேர்தல் மூலம் மக்கள் கொண்டு வருவார்கள். மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து வரும் திமுக கூட்டணிக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

    நடிகர் விஜய் அடுத்த முதலமைச்சர் நான் தான் என்பது போல் பேசி வருகிறார். ஆனால் மூன்றாவது இடத்துக்குத்தான் சீமானும் விஜய்யும் போட்டியிடுகிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்தபோது மாற்றத்தை தருவார் என்று மக்கள் நம்பினார்கள். ஆரம்பத்தில் காமராஜர், அஞ்சலை அம்மாள் போன்றோரின் படத்தை போட்டு மக்கள் மத்தியில் வலம் வந்தார்.

    ஆனால் இப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் படத்தை போட்டு மக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். ஆக இவருக்கு நிலையான கொள்கை எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர். அரசியல் பின்புலம் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கவர்ந்து ஆட்சிக்கு வந்தவர். விஜயகாந்தும் அரசியல் அனுபவத்தோடு தான் அரசியலுக்கு வந்தார். ஆனால் விஜய் ஒவ்வொரு மாநாட்டை நடத்தும் போதும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்.

    அவர் அரசியலில் வெற்றிக்கு பக்கம் கூட நெருங்கவில்லை. தொண்டர்கள் கூட நெருங்க முடியாத தலைவராக தான் விஜய் இருக்கிறார். எந்த கட்சியிலும் கேள்விப்படாத பவுன்சர் கலாச்சாரம் அந்த கட்சியில் தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தெற்கும், தெற்கும் மோதிக்கொள்வதாக டெல்லியில் தலைவர்கள் பேசுகிறார்கள்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

    காலியாக இருக்கும் துணை ஜனாதிபதி பதவிக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி நேற்றோடு முடிவடைந்தது.

    இதனை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க. கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் நேற்று முன்தினம் பிரதமர் மோடி மற்றும் பல முக்கிய மந்திரிகள் முன்னிலையில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

    இந்த தேர்தலில் ஆளும் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் போட்டி இருக்காது என முதலில் கருதப்பட்டது.

    ஆனால் 'இந்தியா' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி பேசி, போட்டி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் வேட்பாளராக சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். 'இந்தியா' கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர்கள் 2 பேருமே தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் தெற்கும், தெற்கும் மோதிக்கொள்வதாக டெல்லியில் தலைவர்கள் பேசுகிறார்கள்.

    வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று சுதர்சன் ரெட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் இந்தியா கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி நாளை மறுநாள் தமிழ்நாடு வர உள்ளார்.

    அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார். மேலும் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து அவர் ஆதரவு திரட்ட உள்ளார்.

    • நாளை மனுக்கல் பரிசீலனை செய்யப்படும்.
    • 25-ந் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்.

    குடியரசு துணை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந் தேதி நடைபெற உள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

    இவரை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மேல்சபை செயலாளர் பி.சி.மோடியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மொத்தம் 4 தொகுப்பு வேட்புமனு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த ஆவணங்களை தேர்தல் அதிகாரிகள் சரிபார்த்த பிறகு அதற்கான பதிவேட்டில் சி.பி.ராதாகிருஷ்ணன் கையெழுத்திட்டார். அதன்பிறகு அதற்கான ஒப்புகை சீட்டை பிரதமர் மோடியிடம் அதிகாரிகள் வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு திரட்டும் பணியை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தொடங்கி உள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி நேற்று டெல்லி சென்றார். அவரை காங்கிரஸ் தலைவர்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

    அந்த கூட்டத்தில் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை காங்கிரஸ் தலைவர் கார்கே எம்.பி.க்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இதில் ராகுல்காந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

    இன்று இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி மனு தாக்கல் செய்தார். இதற்காக அவர் இந்தியா கூட்டணி தலைவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்திற்கு வந்தார்.

    அங்கு அவர் தனது வேட்பு மனுவை மேல்சபை செயலாளர் பி.சி.மோடியிடம் வழங்கினார். அப்போது இந்தியா கூட்டணி தலைவர்கள் உடன் இருந்தனர்.

    சுதர்சன் ரெட்டியின் மனுவை இந்தியா கூட்டணி எம்.பி.களில் 20 பேர் முன்மொழிந்திருந்தனர். 20 எம்.பி.க்கள் வழி மொழிந்திருந்தனர்.

    குடியரசு துணை தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவுபெறுகிறது. நாளை மனுக்கல் பரிசீலனை செய்யப்படும். 25-ந் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாள். அன்று மாலை போட்டி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படும்.

    இதைதொடர்ந்து வருகிற 9-ந் தேதி பாராளுமன்ற அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு நடைபெறும். பாராளுமன்ற இருசபை எம்.பி.க்களும் வாக்களிப்பார்கள். அன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியிடப்படும்.

    பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அதிக எம்.பி.க்கள் ஆதரவு இருப்பதால் அவர் வெற்றி பெற்று குடியரசு துணை தலைவர் ஆவது ஏற்கனவே உறுதியாகி உள்ளது.



    • இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • சுதர்சன் ரெட்டி அவர்களை ஆதரிப்பதுதான் அவர்களது முடிவுக்கும் உணர்வுக்கும் மதிப்பளிப்பதாக அமையும்.

    தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா கூட்டணி சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டி அவர்களுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகள். நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் சமூகநீதியை உயர்த்திப் பிடித்த நீதியரசராக விளங்கிய அவர், தமது பணிக்காலம் முழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைப் போற்றிப் பாதுகாத்தவர் ஆவார். நமது நாட்டின் அமைப்புகளெல்லாம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் சூழலில், சுதர்சன் ரெட்டி அவர்களை வேட்பாளராக்கியதன் மூலம், மக்களாட்சியையும் அரசியலமைப்பின் விழுமியத்தையும் பாதுகாப்பதில் நமது ஒருமித்த உறுதிப்பாடு வலுப்படுகிறது.

    சுதந்திரமாகச் செயல்பட்டு, இந்திய மக்களாட்சியைப் பாதுகாக்க வேண்டிய தன்னாட்சி அமைப்புகள் அத்தனையும் பா.ஜ.க.வின் துணை அமைப்புகளாக மாற்றப்பட்டு, அரசியலமைப்புச் சட்டமே ஆபத்தில் சிக்குண்டுள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சியியல், சமூகநீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமையில் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவரை ஆதரிப்பதுதான் நம்முன் உள்ள கடமை!

    நீட் விலக்கு, கீழடியின் தொன்மையை ஏற்றுக்கொண்டு அங்கீகரிப்பது, நியாயமான நிதிப் பகிர்வு, கல்வி நிதி விடுவிப்பு உள்ளிட்ட தமிழ்நாட்டின் நியாயமான பல கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், ஒன்றிய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்து வருகிறது. ஆளுநர்கள் மூலமாக இணை அரசாங்கம் நடத்தி, மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கி, உயர்கல்வி நிறுவனங்களை வலுவிழக்கச் செய்யும் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது.

    மாநில உரிமைகள் பறிப்பு, அதிகாரக்குவிப்பு, வெறுப்பு பிரசாரம் தீவிரமாக முன்னெடுப்பு, இடைவிடாத இந்தி & சமஸ்கிருதத் திணிப்பு என அரசியலமைப்பைக் குழிதோண்டிப் புதைக்கும் அநீதிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்து தீவிரமாகக் குரலெழுப்பி வருகிறது.

    மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் காக்க, மதநல்லிணக்க உணர்வு கொண்ட தமிழ்நாட்டு மக்கள் அடுத்தடுத்த தேர்தல்களில் தொடர்ந்து தி.மு.கழகக் கூட்டணி எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுக்கே வாக்களித்துள்ளனர். எனவே, சுதர்சன் ரெட்டி அவர்களை ஆதரிப்பதுதான் அவர்களது முடிவுக்கும் உணர்வுக்கும் மதிப்பளிப்பதாக அமையும்!

    அரசியலமைப்பு, பன்மைத்துவம், சமூகநீதி, மொழியுரிமைகள் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஜனநாயகவாதியாக, நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு இடமளித்து அவையில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு வாய்ப்பளிக்க கூடியவராக, திரு. சுதர்சன் ரெட்டி அவர்கள் திகழ்கிறார்.

    கூட்டாட்சியலுக்கு எதிரான போக்கு, எதேச்சாதிகாரம் மற்றும் வெறுப்புணர்வைப் பரப்புவது ஆகியவற்றை எதிர்த்து நிற்கக் கூடியவராக சுதர்சன் ரெட்டி அவர்கள் மிகச் சரியான தேர்வு என கூறினார்.

    • பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
    • புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

    பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து 52 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

    இதற்கான காரணங்கள் வாக்காளர்களின் இறப்பு மற்றும் இடம்பெயர்வு ஆகும். வரைவு வாக்காளர் பட்டியலில் தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி பட்டியல் வெளியிடப்படும் என்று ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    அந்த அறிக்கையில், இதுவரை நடத்தப்பட்ட பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் 18 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டதாகவும், 26 லட்சம் பேர் வெவ்வேறு தொகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும், 7 லட்சம் பேர் இரண்டு இடங்களில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்த (SIR) நடவடிக்கைக்கு எதிராக இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • 2024 மக்களவை தேர்தலுக்காக இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டது.
    • தற்போது தேசிய அளவில் இக்கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது. இந்த கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்றாலும், பாஜக-வை வீழ்த்தியே தீர வேண்டும் என்பதற்காக ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் சேர்ந்தது.

    இந்தியா கூட்டணி 2024 மக்களவை தேர்தலுக்காக மட்டுமே அமைக்கப்பட்டது என அதிலுள்ள பெரும்பாலான கட்சிகள் தெரிவித்து வந்தன. இருந்தபோதிலும் பாராளுமன்ற கூட்டம் போன்றவற்றில் ஒருமித்த எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் இந்தியா கூட்டணி என்ற பெயரில்தான் ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தது.

    இந்த நிலையில் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேசவுள்ளனர்.
    • இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

    காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆர்ஜேடி, திமுக, சமாஜ்வாதி, சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்எல்)எல் போன்ற காட்சிகள் சிறப்பு கூட்டத்தொடரைக் கோரியுள்ளன.

    இது தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று சந்தித்து பேசவுள்ளனர். பின்னர் அவர்கள் தனித்தனியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    பயங்கரவாத தாக்குதல்கள், பூஞ்ச், உரி மற்றும் ரஜோரியில் பொதுமக்கள் கொல்லப்படுதல், போர் நிறுத்த அறிவிப்புகள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தில் மத்தியஸ்தம் செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியது, தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பாக நாடு எதிர்கொள்ளும் பிரசனைகள் குறித்து விவாதிக்க கூட்டு அமர்வுக்கு ஏற்பாடு செய்யவும் கோரிக்கை வைக்கவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளனர்.

    ×