என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா கூட்டணி"

    • விளம்பர வெளிச்சத்தில் காலத்தை கடத்தும் விடியல் அரசு தேசிய அரசியலுக்கு வழித்தேடப்போகிறதாம்.
    • கையில் குறிப்பு இல்லாமல் மேடையில் ஒரு நிமிடம் கூட பேசத்தெரியாதவர் இந்திய தலைவர்களுக்கு ஆலோசனை.

    இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என்று உத்தவ் சிவசேனா கட்சியின் சாம்னா நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து விமர்சித்த தவெக பரப்புரை செயலாளர நாஞ்சில் சம்பத்," இந்தியா கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமையேற்க வேண்டுமென சிலர் பிதற்றுவதை கேட்டால் ரத்தக்கண்ணீர் தான் வருகிறது" என்றார்.

    இதுகுறித்து நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தலைமை தகுதிக்கு ஒரு தராசு வேண்டாமா?

    இண்டி (I.N.D.I.A) கூட்டணிக்கு அண்ணன் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என்று சிலர் பிதற்றுகிறார்கள். இதைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பு வரவில்லை, நாட்டின் கதியை நினைத்து ரத்தக் கண்ணீர் தான் வருகிறது!

    தமிழகத்தின் திசையெங்கும் திராவிட மாடல் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, திக்கெட்டும் வெறும் விளம்பர வெளிச்சத்திலேயே காலத்தைக் கடத்தும் ஒரு விடியல் அரசு, இப்போது தேசிய அரசியலுக்கு வழி தேடப் போகிறதாம்! கதர் சட்டையை குறைத்து மதிப்பிடுகிறார்களா?

    மதிப்பிற்குரிய முதல்வர் அவர்கள், கையில் குறிப்பு எடுத்துத் தராமல் மேடையில் ஒரு நிமிடம் கூட பேசத் தெரியாதவர். அகில இந்தியத் தலைவர்களுக்கு ஆலோசனைக் கூறப் போகிறாராம். பீகாரில் பரப்புரை தாக்கத்தை நாடு பார்த்ததே. தமிழ்நாட்டிலேயே விடிவெள்ளி எப்போது வரும் என்று மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் தேசிய அளவில் டார்ச் அடிக்கப் போவதாகக் கிளம்பிவிட்டார்கள்.

    கொள்கைக் குன்றாக, மக்களின் நாடித்துடிப்பை அறிந்த தலைவர் விஜய் அவர்கள் களமிறங்கிய பிறகு, பலருக்குக் கை, கால் நடுக்கம் எடுக்கத் தொடங்கிவிட்டது. அதிலிருந்து தப்பிக்கவே 'தேசியத் தலைமை' என்கிற பொருந்தா பட்டத்தை சூட்டி, இவரை இங்கிருந்து அனுப்பிவிட சிலர் துடிக்கிறார்கள் போலிருக்கிறது.

    தலைமை என்பது பெறுவது அல்ல; அது தகுதியால் தானாக சேர வேண்டிய இடம். இங்கே பலருக்கு தகுதியே தட்டுப்பாடாக இருக்கும்போது, தலைமைக்கு ஆசைப்படுவது 'ஆகாசத் தாமரைக்கு' ஆசைப்படுவது போன்றது! சரிதான், தாமரை அவர்களுக்கு பிடித்த ஒன்று தானே..

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உத்தவ் சிவசேனா கட்சியின் 'சாம்னா' நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.
    • முரண்பாடுகளை களைந்து, ஒற்றுமையாக ஒரு தலைவருக்குக் கீழ் பணியாற்ற வேண்டும்.

    இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினை தலைவராக்க வேண்டும் -உத்தவ் சிவசேனா கட்சி வலியுறுத்தல்

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியிருந்த நிலையில், உத்தவ் சிவசேனா கட்சியும் இதே கருத்தை தெரிவித்துள்ளது.

    இந்தியா கூட்டணிக்கு தேசிய அளவில் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜியை தலைவராக்க வேண்டும் என்று உத்தவ் சிவசேனா கட்சியின் 'சாம்னா' நாளிதழ் தலையங்கம் எழுதியுள்ளது.

    அந்த தலையங்கத்தில், "இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்குள் வெவ்வேறு மாநிலங்களில் நிலவும் முரண்பாடுகளை களைந்து, ஒற்றுமையாக ஒரு தலைவருக்குக் கீழ் பணியாற்ற வேண்டும். அந்த தலைவர் ஸ்டாலினா, மம்தாவா அல்லது வேறு ஒருவரா என்பதை சீக்கிரம் முடிவு செய்வது அவசியம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில் தான் உள்ளது.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார்.

    திருச்சி:

    தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெறும் நிதி அளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை சுட்டிக்காட்டி அடுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து அகற்ற தொடர் போராட்டம் நடத்தினேன். அதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த சூழலில் பசுமை தாமிரம் என்ற பெயரில் தொழிற்சாலை ஆரம்பிக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி மேற்கொள்கிறது. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து எந்திரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

    இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார மக்களை கொண்டு மனுகொடுக்க செய்து எங்களுக்கு ஸ்டெர்லைட் வேண்டும் என்று சொல்ல வைத்திருக்கிறார். பொதுமக்கள் ஸ்டெர்லைட் நிறுவனம் வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

    காங்கிரஸ், இந்தியா கூட்டணியில் நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. காங்கிரக் கட்சியை சேர்ந்த ஓரிருவர் விமர்சனம் செய்து அறிக்கை கொடுத்து வருகிறார்கள். காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்றே நம்புகிறேன்.

    தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்தப் போக்கு உள்ளது. இடைக்கால பட்ஜெட் பொதுமக்களுக்கு காதுகுத்து வேலை என எடப்பாடி விமர்சித்துள்ளர். இடைக்கால பட்ஜெட் காதிலே பொன் ஆபரணம் சூட்டுகிற வேலை.

    தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில் தான் உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார். மீண்டும் முதல்வர் ஆவார் என்றார்.

    • இந்தியாவில் கூட்டாட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை ஸ்டாலின் தொடர்ந்து செய்து வருகிறார்.
    • இந்தியா கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய திறன் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது

    இந்தியா கூட்டணியின் தலைவராக தகுதியுள்ள நபர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறியுள்ளார்.

    ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய மணிசங்கர் அய்யர், "நேருவுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ஆகுமாறு காமராஜரிடம் கேட்டபோது அவர் அதை மறுத்தார். அந்த இடத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு அவர் துணை நிற்பார். இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க அவரால் மட்டுமே முடியும்.

    வெற்று முழக்கங்களை மட்டும் எழுப்பாமல் இந்தியாவில் கூட்டாட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்தியா கூட்டணியை ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய திறன் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது" என்று தெரிவித்தார்.

    முன்னதாக 2026 சட்டசபை தேர்தலில் பினராயி விஜயன் மீண்டும் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்படுவார் என்று அவர் பேசியது கேரளா காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அன்றாடம் தாக்குதல் நடத்தினார்கள்.
    • புதுச்சேரி மக்கள் மோடி மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கிறார்கள்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரசுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. திட்டமிட்டு உள்ளது.

    புதுச்சேரியில் பா.ஜ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை உறுதிபடுத்தும் வகையில் பா.ஜக. தேர்தல் பிரசார பொதுக்கூட்டம், புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு திருச்சி வந்தார்.

    அவருடன் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான மன்சுக் மாண்டவியா, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோரும் வந்தனர். திருச்சி வந்த அமித்ஷாவை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கி ஓய்வெடுத்தனர்.

    இன்று காலை அமித்ஷா நட்சத்திர ஓட்டலில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்ட 15 பேர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனை கூட்டம் சுமார் 30 நிமிடம் நடந்தது. இதில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வெற்றி வியூகம், தொகுதி பங்கீடு, தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு முன் தேதியிட்டு அவர்களின் வங்கிக் கணக்கில் கோடை சிறப்பு தொகுப்புடன் சேர்த்து ரூ.5,000 வழங்கியதால் ஏற்பட்டுள்ள அரசியல் தாக்கம் ஆகியவை தொடர்பாக அமித்ஷா விரிவாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

    இதனை எதிர் கொண்டு பெண் வாக்காளர்களை பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி பக்கம் திருப்பி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டு ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் மத்திய மந்திரி அமித்ஷா திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்கால் வரிச்சிக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள ஹெலிபேடு மைதானத்துக்கு வந்தார்.

    அங்கு அவரை புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பா.ஜ.க. மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க் கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பின்னர் அமித்ஷா அங்கிருந்து காரில் பாரதியார் சாலை, திருநள்ளாறு சாலை வழியாக நகராட்சி சந்தை திடலை அடைந்தார். அங்கு நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசினார். கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

    திருநள்ளாறு சனீஸ்வரன், பத்ர காளியம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன். உலகின் தொன்மையான மொழியான தமிழில் உரையாற்ற முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

    நான் இங்கு வந்திருப்பதற்கு 2 நோக்கங்கள் இருக்கின்றன. முதல் நோக்கம் நமது பிரதமர் மோடி தலைமையிலும், புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலும் இத்தனை ஆண்டு காலம் என்ன நடந்திருக்கிறது என்பதற்கான பட்டியலை, அறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிக்க வந்திருக்கிறேன்.

    இந்த இந்தியா கூட்டணி இருக்கிறதே இவர்களுடைய தீய நோக்கம், அந்த திரையை கிழித்து எறிவதற்காகவும் நான் இங்கு வந்திருக்கிறேன்.

    புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 3 வேலைகளை செய்து இருக்கிறது. ஒன்று ஊழலை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது. 2-வது விஷயம் முன்பு இங்கு இருந்த காங்கிரஸ் அரசு புதுச்சேரியை டெல்லிக்கு அடிமையாக ஆக்கி வைத்திருந்தது.

    ஆனால் எங்கள் அரசு இங்கு சுயமாக செயல்படும் அரசுக்கு ஆதரவு அளித்து அதை உருவாக்கி இருக்கிறது. 3-வது பணி புதுச்சேரியில் அரசியல் நிலைத்தன்மையை நாங்கள் அமைத்திருக்கிறோம்.

    காங்கிரஸ் ஆட்சியின் போது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அன்றாடம் தாக்குதல் நடத்தினார்கள்.

    மோடி பிரதமராக ஆன பிறகு 2019-ல் முதல் முறையாக புல்வாமாவில் தாக்குதல் நடந்த பிறகு அவர்களின் வீடு புகுந்து தாக்கினோம். வான் வழியே சென்று தாக்குதல் தொடுத்தோம். முதல் துல்லிய தாக்குதல், பிறகு வான்வழி தாக்குதல், நிறைவாக ஆபரேஷன் சிந்தூரை அரங்கேற்றினோம். அவர்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறோம்.

    பிரதமர் மோடியின் அரசை பார்த்து எந்த ஒரு தீய சக்தியும் கண்ணெடுத்து கூட பார்க்க முடியாது. இந்தியாவுக்கு பிரதமர் மோடி வலிமையை மட்டும் அளிக்கவில்லை. போதுமான பாதுகாப்பையும் அளித்துள்ளார். புதுச்சேரி மக்கள் மோடி மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கிறார்கள்.

    புதுச்சேரியில் நாராயணசாமி ஆட்சியில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்துள்ளது. புதுச்சேரியின் உரிமைகளை ஏலத்தில் விட்டவர் நாராயணசாமி. ரூ.15 ஆயிரம் கோடி என்பது புதுச்சேரியின் 3 ஆண்டு பட்ஜெட். தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களை அபகரித்தவர் நாராயணசாமி. அவரது ஆட்சியின் முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும். நாராயணசாமிக்கு டெல்லி கஜானாவை நிரப்புவதுதான் வேலையாக இருந்தது. காங்கிரசால் புதுச்சேரி பின்னடைவை சந்தித்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அமித்ஷா, திருநள்ளாறு சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து காரைக்கால் பா.ஜ.க. கிளை கமிட்டி நிர்வாகி ஒருவரது இல்லத்தில் கட்சி கொடி ஏற்றி வைத்தார்.

    அதன்பிறகு அமித்ஷா மாலையில் மீண்டும் திருச்சி புறப்பட்டு செல்கிறார். பின்னர் திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் அமித்ஷா டெல்லி புறப்படுகிறார். அமித்ஷா வருகையையொட்டி காரைக்கால், திருச்சியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.
    • காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ராகுல்காந்தி முடிவு செய்வார்

    தமிழ்நாட்டில் 2026 ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளாக திமுக, அதிமுக கூட்டணியை இறுதிசெய்துவிட்டன. ஒருசில கட்சிகள் மட்டுமே இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை.

    நாடாளுமன்ற தேர்தலின்போது உருவான திமுக தலைமையிலான இந்தியக் கூட்டணியே தொடரும் என திமுக தரப்பும், காங்கிரஸும், அதில் இடம்பெற்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகள் கூறினாலும், திமுக- காங்கிரஸ் இடையே உரசல் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் திமுக-காங்கிரஸ் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. திமுக மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏ தளபதி, 'வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்' என பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    "மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என அவர்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை 'சீட்'டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்" என மதுரையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியிருந்தார்.

    இது கூட்டணிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்த இவரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக மதுரை வடக்கு தொகுயில் போட்டியிட கார்கேயிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். மேலும் அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  

    "திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள், நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.

    அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம்.

    கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன். வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • சிபிஐ(எம்) தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும்
    • கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல

    கடந்த சில நாட்களாகவே காங்கிரஸில் உட்கட்சி மோதல் நிலவிவருகிறது. அதில் பெட்ரோல் ஊற்றும்விதமாக அமைந்தது பிரவீன் சக்ரவர்த்தியின் தமிழ்நாடு நிலுவைக்கடன் தொடர்பான கருத்து. இவரின் இந்த கருத்து தொடர்பாக விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன. இதனிடையே பிரவீன் சக்ரவர்த்தி தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக செல்வப்பெருந்தை தெரிவித்திருந்திருந்தார்.

    தொடர்ந்து இன்றும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது. அவர்மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம். இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது என தெரிவித்தார். இந்நிலையில் தங்கள் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிடக்கூடாது என எச்சரிக்கை அளிக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ராகுல் காந்தியிடம் "நடவடிக்கை எடுக்க" கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி கூறியதை ஒரு செய்தியில் படித்தேன். ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை விசிகவின் ரவிக்குமார், மதிமுகவின் துரைவைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் "உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்" என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா? கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.

    ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும். சிபிஐ(எம்) தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    அதேபோல், துரைவைகோ, திருமாவளவனும் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் "லக்ஷ்மண் ரேகை"யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல — ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • நயினார் நாகேந்திரன் ஆசைப்படுவதற்கு எல்லாம், நான் பதில் கூற முடியாது.
    • தேர்தல் நேரத்தில் எல்லா இயக்கங்களும், மாநாடுகள் நடத்துவது வழக்கம்.

    தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

    முன்னதாக கனிமொழி எம்.பி. சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. தேர்தலுக்கு மட்டும் மக்களை சந்திக்கும் கட்சி அல்ல. முதலமைச்சரில் இருந்து, தி.மு.க.வில் உள்ள அனைத்து தலைவர்களும், தொடர்ந்து கூட்டங்களை நடத்திக் கொண்டு வரும் இயக்கம் தான் தி.மு.க.

    தேர்தல் நேரத்தில் எல்லா இயக்கங்களும், மாநாடுகள் நடத்துவது வழக்கம். ஆனால் இதற்கு முன்னதாகவே, மகளிர்களை, இளைஞர்களை சந்திக்கும் கூட்டங்களை, தி.மு.க. தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.

    இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று நயினார் நாகேந்திரன் ஆசைப்படுவதற்கு எல்லாம், நான் பதில் கூற முடியாது. அவர் இந்தியா கூட்டணி உடைந்து விடும் என்று கனவு கண்டு கொண்டு இருக்கிறார். அவர் கனவு காண்பது தப்பு அல்ல. அவர் கனவு கண்டு கொண்டே இருக்கட்டும்.

    ஆனால் நிச்சயமாக, தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு இடம் இல்லை என்பதை நயினார் நாகேந்திரன் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

    • நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 எம்பிக்கள் கையெழுத்து
    • வாக்கு வங்கிகளை காப்பாற்றி கொள்வதற்காகவே இந்த செயல்

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. மற்றும் பல அரசியல் விமர்சகர்களும் இந்த கருத்தை முன்வைத்தன. 

    இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் 'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அவர் சொன்னவாறே இந்தியா கூட்டணி தலைவர்கள் நேற்று, ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கூறி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதத்தை அளித்தனர். அதில் நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 எம்பிக்கள் கையொமிட்டிருந்தனர்.  

    இந்நிலையில் நீதிபதி சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவையில் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசிய அமித்ஷா, நீதிபதிக்கு எதிரான இந்த தீர்மானம் அர்த்தமற்றது என்றும், தங்களது வாக்கு வங்கிகளை காப்பாற்றி கொள்வதற்காக எதிர்க்கட்சியினர் இவ்வாறு செய்வதாக தெரிவித்தார். இதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவையில் சிறிதுநேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து தனது உரையை நிகழ்த்தி வருகிறார். 

    • சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் நோக்கில் தான் இந்தியா கூட்டணி, நீதிபதி மீது தகுதிநீக்க நோட்டீஸ் அளித்துள்ளது.
    • நீதித்துறையை அச்சுறுத்தும் கருவியாக தகுதி நீக்க நோட்டீசை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பயன்டுத்துகின்றனர்.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்தன.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதத்தை அளித்தனர்.

    இதுதொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திருப்பரங்குன்றம் வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதி நீக்க நோட்டீசா?

    சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் நோக்கில் தான் இந்தியா கூட்டணி, நீதிபதி மீது தகுதிநீக்க நோட்டீஸ் அளித்துள்ளது.

    நீதித்துறையை அச்சுறுத்தும் கருவியாக தகுதி நீக்க நோட்டீசை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பயன்டுத்துகின்றனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 150 மக்களவை எம்பிக்கள் கையொப்பம்
    • அப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இம்பீச்மெண்ட் முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயரை ஜி.ஆர். சுவாமிநாதன் பெறுவார்.

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக திமுக கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. மற்றும் பல அரசியல் விமர்சகர்களும் இந்த கருத்தை முன்வைத்தன.

    இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன், சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் 'இம்பீச்மெண்ட்' செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் சொன்னவாறே இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று, ஜி.ஆர். சுவாமிநாதனை பதவிநீக்கம் செய்யவேண்டும் எனக்கூறி சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதத்தை அளித்தனர்.

    நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக 120 மக்களவை எம்பிக்கள் கையொப்பமிட்ட தீர்மான கடிதத்தை டி.ஆர். பாலு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், எம்.பி. கனிமொழி, புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக எம்.பி. துரை வைகோ உள்ளிட்டோர் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அளித்தனர். 

    சுவாமிநாதன் பதவிநீக்கம் செய்யப்படுவாரா?

    ஒருவேளை இந்த தீர்மானம் ஏற்கப்பட்டால், மூன்று பேர் கொண்ட குழு நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும். நீதிபதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை என்று விசாரணைக் குழு உறுதி செய்யும்பட்சத்தில் நாடாளுமன்ற அவையில் இந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படும்.

    அதன்பின் நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறும். இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்படும். அவர், நீதிபதியை பதவி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பிப்பார். அப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் இம்பீச்மெண்ட் முறையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் நீதிபதி என்ற பெயரை ஜி.ஆர். சுவாமிநாதன் பெறுவார். 




    ×