என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதிமுக"

    • இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது.
    • கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம்.

    சென்னை:

    தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியே வந்த ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜூனராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமாக நடைபெற்றது. எங்களது கோரிக்கைகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவினரிடம் சமர்ப்பித்து இருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் அவர்களை சந்தித்த பிறகு பேச்சுவார்த்தையின் முடிவுகளை தெரிவிக்கிறோம். சொந்தம் எப்போதும் தொடர் கதை தான். அது முடிவில்லாதது. அதனால் தொடரும். மேல்சபை எம்.பி. சீட் ஒதுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறோம். கூடுதல் தொகுதிகளும் கேட்டுள்ளோம். அவர்கள் தகவல் கொடுத்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.

    தொகுதிகள் பட்டியலை இன்னும் அவர்களிடம் கொடுக்கவில்லை. போட்டியிட்ட தொகுதிகளை குறைக்குமாறு எங்களிடம் சொல்லவில்லை. நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்றார். 

    • அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம்.
    • டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது.

    நெல்லை:

    ம.தி.மு.க நெல்லை மண்டல தேர்தல் நிதி மற்றும் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ. நிஜாம் வரவேற்றார்.

    பொதுச்செயலாளர் வைகோ, அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் கலந்து கொண்டு நிதியினை பெற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சியில் நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய கட்சி ரீதியிலான 10 மாவட்டங்கள் சார்பில் சுமார் ரூ.2 கோடி வரை தேர்தல் நிதி வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்கள் நிஜாம், ரைமன்ட், சுதா பாலசுப்பிரமணியன், உதயசூரியன், ஆர்.எஸ்.ரமேஷ், ரஞ்சன், வெற்றிவேல், வேல்முருகன், ரவிச்சந்திரன், கண்ணன் ஆகியோர் தலைமையில் நிதி வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் சதன் திருமலைகுமார் எம்.எல். ஏ., ரகுராமன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி சிப்பிபாறை ரவிச்சந்திரன், சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் திவான், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராணி செல்வின், மாநில செய்தி தொடர்பாளர் மின்னல் முகமது அலி மற்றும் திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    முன்னதாக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ம.தி.மு.க.வுக்கு போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள்? என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக 4 பேர் கொண்ட குழு அமைத்துள்ளோம். அந்த குழு தி.மு.க.வில் அமைக்கப்படும் பேச்சுவார்த்தை குழுவுடன் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும்.

    எங்கள் கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது கூடுதல் பலமாக அமைந்துள்ளது. ஓ.பி.எஸ்.சும் எங்கள் கூட்டணியில் வந்துள்ளார். அ.தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்தவர் ஓ. பன்னீர் செல்வம். அவர் அரசியல் அனுபவம் மிக்கவர்.

    திராவிட இயக்கங்கள் விழிப்பாக உள்ளது. திருக்குறள் குறித்து பேசி தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார். அது நடக்காது.

    வாஜ்பாய் போன்று ஒரு தலைவரை நான் பார்க்கவில்லை. ஆனால் இப்போது பா.ஜ.கவின் நிலை வேறு. அதேபோல் அத்வானியும் ஒரு வினோதமான தலைவர் தான். அவரிடம் நான் மத சார்பின்மையை ஆதரிக்கிறீர்களா? என்று நேருக்கு நேர் நான் கேட்டபோது அவர் ஆம் என்று தைரியமாக சொன்னார். எனது குரல் பாராளுமன்றத்தில் மீண்டும் ஒலிப்பது குறித்து காலம் பதில் சொல்லும்.

    நான் இதுவரை பாராளுமன்றத்தில் 1360 முறை பேசியுள்ளேன். அதனை 5 தொகுப்புகளாக புத்தகமாக வடிவமைத்து ஒவ்வொரு முக்கிய தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறேன்.

    வந்தே மாதரம் பாடலில் நீக்கப்பட்ட 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும், அதனை பள்ளி, கல்லூரிகளில் இசைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 4 வரிகளை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதனை ம.தி.மு.க. சார்பில் எதிர்க்கிறோம். இந்தியா என்பதை பாரத் என்று மாற்றவும் பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்.

    அதேபோல் இந்தியாவின் தலைநகரான டெல்லியை வாரணாசிக்கு மாற்றுவதற்கு பா.ஜ.க. அரசு முயற்சி செய்து வருகிறது. இது வரும் காலங்களில் அபாயகரமானதாக மாறும். இதனையும் அனைத்து மாநிலத்தவர்களும் சேர்ந்து முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்றார். 

    • தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் கடந்த ஒரு மாத காலமாகவே அரசியல் களம் சூடுபிடித்து உள்ளது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளும், அ.தி.மு.க. அணியில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க., த.மா.கா.. புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழு அமைத்து பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த குழுவில் ம.தி.மு.க. அவைத் தலைவர் அர்ஜுனராஜ், செந்திலதிபன், ஜீவன், சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    தி.மு.க. சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமையிலான குழுவில் கே.என்.நேரு, திருச்சி சிவா, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    • வருகிற சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ம.தி.மு.க.வுக்கு என்பது முக்கியமல்ல.
    • தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை.

    மதுரை:

    மதுரையில் ம.தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

    ம.தி.மு.க.வில் சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் ம.தி.மு.க. தொண்டர்கள் ராணுவ உறுதி கொண்டவர்கள். கொண்ட லட்சியத்தில் உறுதியாக நடப்பவர்கள். எனவே ஒவ்வொரு கிராமங்களிலும் 10 பேர் ம.தி.மு.க.வினர் இருந்தாலும் அவர்கள் லட்சியம் மிக்க வீரர்களாக திகழ்வார்கள்.

    தி.மு.க. என்ற திராவிட இயக்கம் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். தென்னாட்டில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரால் பாராட்டப்பட்ட இயக்கம் தி.மு.க. இந்த இயக்கம் வளர பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் பெரும் உதவியாக இருந்தார். அதுபோல தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வை வளர்க்க எனது கால் படாத இடமே இல்லை என்று சொல்லலாம்.

    அந்த அளவுக்கு தி.மு.க.வின் வளர்ச்சியில் எனக்கும் பங்கு இருக்கிறது. எனவே இந்த ஆட்சி தொடர வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை தமிழ்நாட்டில் தொடரும் வகையில் ம.தி.மு.க. கேடயமாக இருக்கும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்கள் ம.தி.மு.க.வுக்கு என்பது முக்கியமல்ல. தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்பது தான் எங்களது லட்சியம். அதனை கொண்டு வர கேடயமாக ம.தி.மு.க. இருக்கும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பு இல்லை. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எனவே பொதுமக்கள் திடீரென முளைக்கும் நடிகர்கள் கலை துறையில் முகத்தை காட்டி உங்களை வசியம் செய்ய நினைப்பார்கள். அவர்களுக்கு பண்பாடு இல்லை, லட்சியம் இல்லை வேலு நாச்சியார் போன்ற வரலாற்று தலைவர்களை தங்களது லட்சிய தலைவர்களாக சொல்லுவார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த தலைவர்களின் வரலாறு தெரியாது. எனவே அவர்களை நம்பி மக்கள் ஏமாந்து விட வேண்டாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம் என கிண்டல் செய்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ.
    • பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, 'காங்கிரஸ் உட்கட்சி மோதலில் கதர் சட்டைகள் கிழிவது வழக்கம்' என கிண்டல் செய்து இருந்தார்.

    இந்நிலையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வைகோவுக்கு பதிலடி அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    கூட்டணி குறித்து பேசக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைமை சொன்ன ஒத்த வார்தைக்கு மரியாதை கொடுத்து இதை தாண்டி பொறுமையுடன் கடந்து போறேன்.

    பயந்துகிட்டு இல்ல அண்ணன் வைகோ அவர்களே என்று தெரிவித்துள்ளார்.

    • தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது.
    • ம.தி.மு.க. இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.

    மதுரையில் ம.தி.மு.க. பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கட்சி பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

    தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. வரும் தேர்தல் கடுமையாக இருக்கும் என சில ஏடுகள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். நாங்கள் தி.மு.க.வோடு பேசும் போதுதான், எத்தனை தொகுதிகள் கேட்கிறோம் என தெரியவரும்.

    அதுபற்றி முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டதால் 234 தொகுதிகளில் நிற்பேன் என கூறினேன். மைக்கேல்பட்டி மாணவி இறப்பை மத மாற்றம் என பா.ஜ.க. அபாண்டமான குற்றச்சாட்டை வைத்தது.

    தற்போது சி.பி.ஐ. விசாரித்தது. மத மாற்றம் காரணம் இல்லை என கூறி உள்ளது. பா.ஜ.க. பழி சொன்னதற்காக அப்போது யாரெல்லாம் பழித்து பேசினார்களோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி, தித்திப்பான செய்தி. மகிழ்ச்சியோடு தே.மு.தி.க.வை வரவேற்கிறோம். தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது. தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது. இதனால் எதிர்தரப்பு கலகலத்து கொண்டிருக்கிறது.

    ம.தி.மு.க. இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். அ.தி.மு.க. குறித்து நான் பேசியதை முழுமையாக வெளியிடவில்லை. முழுமையாக பேசியதை பார்த்தால் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்கும்.

    ம.தி.மு.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது. தொண்டர்களுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கலாம், அது இயற்கை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில் தான் உள்ளது.
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார்.

    திருச்சி:

    தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெறும் நிதி அளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை சுட்டிக்காட்டி அடுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து அகற்ற தொடர் போராட்டம் நடத்தினேன். அதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த சூழலில் பசுமை தாமிரம் என்ற பெயரில் தொழிற்சாலை ஆரம்பிக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி மேற்கொள்கிறது. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து எந்திரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை.

    இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார மக்களை கொண்டு மனுகொடுக்க செய்து எங்களுக்கு ஸ்டெர்லைட் வேண்டும் என்று சொல்ல வைத்திருக்கிறார். பொதுமக்கள் ஸ்டெர்லைட் நிறுவனம் வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

    காங்கிரஸ், இந்தியா கூட்டணியில் நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. காங்கிரக் கட்சியை சேர்ந்த ஓரிருவர் விமர்சனம் செய்து அறிக்கை கொடுத்து வருகிறார்கள். காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்றே நம்புகிறேன்.

    தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்தப் போக்கு உள்ளது. இடைக்கால பட்ஜெட் பொதுமக்களுக்கு காதுகுத்து வேலை என எடப்பாடி விமர்சித்துள்ளர். இடைக்கால பட்ஜெட் காதிலே பொன் ஆபரணம் சூட்டுகிற வேலை.

    தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில் தான் உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார். மீண்டும் முதல்வர் ஆவார் என்றார்.

    • மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.
    • பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய அளவில் நல்ல பெயர் இல்லை.

    கோவை:

    ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

    சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் மக்கள் நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் பொய்த்து உள்ளது.

    கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 50 டாலர்களாக குறைந்தபோதிலும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாதது பொதுமக்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. மக்களின் மீதான சுமையை குறைக்க மத்திய அரசு எந்த முனைப்பும் காட்டவில்லை.

    11 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ள நிலையில், 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய முடியும் என்பது நடைமுறைக்கு சார்ந்தது அல்ல. அதுவும்தவிர இது நாட்டின் எதிர்கால பொருளாதார நிலைக்கு நல்ல அறிகுறி அல்ல.

    கோவை, ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள நூற்பாலைகள் மற்றும் ஜவுளித் துறைக்காக எந்தவித சிறப்பு திட்டங்களும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை.

    அதேபோல மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இருப்பினும் சுங்கவரியை குறைத்து உள்ளது மட்டும் வரவேற்கத்தக்க நடவடிக்கை.

    ஆட்சியில் அதிகாரப் பங்கு கோரிக்கை வைப்பது ம.தி.மு.க.வின் நோக்கம் அல்ல. வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். திராவிட மாடல் ஆட்சி தொடரும். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்பார்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு தேசிய அளவில் நல்ல பெயர் இல்லை. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கேட்பது குறித்த பேச்சுகளை முன்கூட்டியே பேச முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தபிறகே சீட் பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நான் பிரசாரம் மேற்கொள்ள உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட செயலாளர் கணபதி செல்வராஜ், உ யர்மட்டக்குழு உறுப்பினர்மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார்.
    • கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்

    திருச்சியில் கடந்த 2-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    திருச்சியிலிருந்து நடைபயணம் தொடங்கிய வைகோ புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாள்தோறும் வைகோ 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வைகோ வந்தார். அப்போது கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.

    தொடர்ந்து இன்று 11-வது நாள் நடைபயணமாக காலை ஒத்தக்கடையில் இருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை வைகோ தொடங்கினார்.

    இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்கிறார்.

    இந்நிலையில், மதுரையில் சமத்துவ நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார்.

    அண்ணா நகர், தெப்பக்குளம், கீழ வெளி வீதி வழியாக செல்லும் அவர் இன்று மாலை 6 மணிக்கு தனது பயணத்தை நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

    • நடைபயணத்தின் 10-வது நாளான நேற்று இரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதிக்கு வைகோ வந்தடைந்தார்.
    • கடந்த 11 நாட்கள் சுமார் 150 கி.மீட்டருக்கு மேல் வைகோ தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டார்.

    மதுரை:

    திருச்சியில் கடந்த 2-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    திருச்சியிலிருந்து நடைபயணம் தொடங்கிய வைகோ புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாள்தோறும் வைகோ 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வைகோ வந்தார். அப்போது கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    இந்த நிலையில் நடைபயணத்தின் 10-வது நாளான நேற்று இரவு மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒத்தக்கடை பகுதிக்கு வைகோ வந்தடைந்தார். அவரை புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.

    அப்போது வைகோ நிருபர்களிடம் கூறுகையில், வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தி.மு.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். விஜய் அரசியலில் சாதித்து விடலாம் என மணல் கோட்டை கட்டுகிறார். ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. எத்தனை தொகுதியில் போட்டி என்பது கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்றார்.

    துரை வைகோ நிருபர்களிடம் கூறுகையில், வைகோ தனது 82 வயதில் நடைபயணத்தை அறிவித்தார். இதற்கு டாக்டர்கள் மறுத்தபோதிலும் அவர் ஏற்கவில்லை. நடைபயணத்தின் போது அவர் சிரமப்பட்டார். ஆனாலும் அவரின் சுயநலத்திற்காக எந்த சமரசத்தையும் மேற்கொள்ளவில்லை. வைகோவின் தியாகத்தை கொச்சைபடுத்தக்கூடாது. கடந்த கால பா.ஜ.க. தலைவர்கள் வைகோவை மதிக்கிறார்கள். ஆனால் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் போன்றவர்கள் அரசியல் வன்மத்தை வைகோ மீது வைக்கிறார்கள். இது ஏற்புடையதல்ல என்றார்.

    தொடர்ந்து இன்று 11-வது நாள் நடைபயணமாக காலை ஒத்தக்கடையில் இருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை வைகோ தொடங்கினார். மாட்டுத் தாவணியில் அவருக்கு கட்சியினர் திரண்டு வரவேற்பு அளித்தனர். இதில் துரை வைகோ எம்.பி., புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ. மாவட்ட செயலாளர் முனியசாமி, ஏர்போர்ட் பாண்டியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    கடந்த 11 நாட்கள் சுமார் 150 கி.மீட்டருக்கு மேல் வைகோ தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண் டார்.

    இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்கிறார். அதனை தொடர்ந்து அங்கு ம.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் அவர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    • அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
    • ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கும் தி.மு.க.விற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.

    மதுரை:

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் இருந்து இன்று 7-வது நாள் சமத்துவ நடைபயணத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடங்கினார். வழிநெடுகிலும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கருங்காலக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் இந்துத்துவா சக்திகள் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அது முறியடிக்கப்படும்.

    மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆணவம், அகம்பாவமிக்க வார்த்தைகளை தமிழ்நாட்டு மண்ணிற்கு வந்து சொல்லிவிட்டு போகின்ற துணிச்சல் வந்துள்ளது. வியர்வை ரத்தம் சிந்தி எண்ணற்றவர் உயிர் பலி கொடுத்து பெரியார், அண்ணா, கருணாநிதி கட்டிக்காத்த திராவிட கோட்டை வெறும் எக்கு இரும்பால் கட்டப்பட்டது அல்ல. ரத்தமும் சதையால் பாதுகாக்கப்பட்டன.

    'ஜன நாயகன்' திரைப்படத்திற்கும் தி.மு.க.விற்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை. வழக்கமாக எத்தனையோ படங்களுக்கு அது நடந்திருக்கிறது. அதுபோல விஜயின் படத்துக்கும் நடந்திருக்கக்கூடும். திரைப்படத்தை வெளியிடுவதை தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ அல்லது கூட்டணி கட்சிகளோ எதிர்க்கவில்லை.

    நாங்கள் இதுவரை ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று ஒரு சொல் கூட, தப்பி தவறி பேசியது கூட கிடையாது. எங்களைப் பொறுத்தவரை நேற்று வரை வைக்கவில்லை இனியும் வைக்க மாட்டோம் என்றார். 

    • மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம்.
    • வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன்.

    திருச்சி:

    சமத்துவ நடைபயண தொடக்க விழாவில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-

    பொங்கிவரும் பொன்னி ஆற்றங்கரையில், மலைக்கோட்டை நகரமாம் திருச்சி உறையூரில் 1938-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந்தேதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் நடைபயணத்தை தொடங்கி வைக்க பெரியார், மறைமலை அடிகளார், சோமசுந்தரம் பாரதியார், மணவை திருமலைச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்து சிறப்பித்தனர். அதேபோன்ற எனது இந்த நடைபயணத்தையும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    1982-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந்தேதி நான்மாடக்கூடல் சங்கம் வளர்த்த மதுரை மாநகரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, திருச்செந்தூரில் வைரவேல் காணாமல் போனதாக பிரச்சனை எழுந்த போதும், தூக்கிலே தொங்குகிறார் சுப்ரமணிய பிள்ளை என்றபோது அது தற்கொலை அல்ல படுகொலை என்று நீதி கேட்டு கலைஞர் அன்று மதுரையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டார்.

    108 திருப்பதிகளில் ஒன்றான தென் திருப்பேரையில் ஆபரணங்கள் திருடுபோய்விட்டதாக மக்கள் கவலைப்பட்டபோது, கலைஞர் நேரில் வந்து தென்திருப்பேரை ஆலயத்திற்குள் வந்து மக்களை சந்தித்து காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து என்னை அழைத்து நடைபயணமாக வந்து மனு கொடுக்க சொன்னார். நானும் 1986-ம் ஆண்டில் அந்த பகுதி மக்களுடன் நடைபயணமாக வந்து திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் வரை முதல் நடைபயணம் மேற்கொண்டேன்.

    அதனை தொடர்ந்து 1994-ல் குமரியில் இருந்து சென்னை வரை ஆயிரத்து 600 கிலோ மீட்டர் அன்றைய ஊழல் ஆட்சியான அ.தி.மு.க.வை எதிர்த்து நடைபயணம், வரிசையாக நதிகள் இணைப்புக்காக 2002-ம் ஆண்டு மாவட்டங்கள் தோறும் சென்று நடைபயணம், நல்லிணக்கம் தழைக்க நடைபயணம், முல்லை பெரியாரை காக்க 3 முறை நடைபயணம், 2018-ம் ஆண்டு மதுரையில் இருந்து இடுக்கி, பென்னிகுயிக் அணைகளை காக்க நடைபயணம் என பல்வேறு நடைப்பயணங்கள் மேற்கொண்டுள்ளேன்.

    அதில் பலவற்றில் எனக்கு இன்றைய முதலமைச்சர் உறுதுணையாக இருந்துள்ளார். யாதும் ஊரே யாவரும் கேளீர், பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் எனபதற்கு ஏற்ப, இந்த தமிழகத்தில் மத பூசல்களுக்கு இடமில்லை என்பதை நிலை நாட்ட, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நானும், எனது தம்பிமார்களும் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளோம்.

    இந்த பயணத்தில் மக்களை சந்திக்கும் போதெல்லாம் இந்த பொற்கால ஆட்சி தொடர வேண்டும் என்று கோரிக்கை வைப்பேன். வரும் தேர்தலில் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தி.மு.க.வின் திட்டங்களை எடுத்து சொல்லுவேன். வெல்க திராவிடம், வெல்க திராவிடம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×