என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் சமத்துவ நடைபயணம்- வைகோவை வரவேற்ற அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
- போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார்.
- கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்
திருச்சியில் கடந்த 2-ந்தேதி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ போதைப்பொருள் ஒழிப்பு, மத மோதல் தடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி சமத்துவ நடைபயணம் தொடங்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சியிலிருந்து நடைபயணம் தொடங்கிய வைகோ புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நடைபயணத்தை மேற்கொண்டார். அவருடன் துரை வைகோ எம்.பி., மற்றும் முக்கிய நிர்வாகிகள் 100 தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாள்தோறும் வைகோ 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் மேலூர் பகுதிக்கு வைகோ வந்தார். அப்போது கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் உத்தங்குடியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்றைய பயணத்தை முடித்துக் கொண்டார்.
தொடர்ந்து இன்று 11-வது நாள் நடைபயணமாக காலை ஒத்தக்கடையில் இருந்து மதுரை நகரை நோக்கி தனது நிறைவு நடைபயணத்தை வைகோ தொடங்கினார்.
இன்று மாலை மதுரை ஓபுளா படித்துறையில் வைகோ தனது நடை பயணத்தை நிறைவு செய்கிறார்.
இந்நிலையில், மதுரையில் சமத்துவ நடைபயணம் மேற்கொண்டுள்ள வைகோவை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார்.
அண்ணா நகர், தெப்பக்குளம், கீழ வெளி வீதி வழியாக செல்லும் அவர் இன்று மாலை 6 மணிக்கு தனது பயணத்தை நிறைவு செய்கிறார் என்பது குறிப்பிடதக்கது.






