என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress"

    • சிபிஐ(எம்) தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும் ,கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும்
    • கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல

    கடந்த சில நாட்களாகவே காங்கிரஸில் உட்கட்சி மோதல் நிலவிவருகிறது. அதில் பெட்ரோல் ஊற்றும்விதமாக அமைந்தது பிரவீன் சக்ரவர்த்தியின் தமிழ்நாடு நிலுவைக்கடன் தொடர்பான கருத்து. இவரின் இந்த கருத்து தொடர்பாக விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தன. இதனிடையே பிரவீன் சக்ரவர்த்தி தொடர்பாக காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளதாக செல்வப்பெருந்தை தெரிவித்திருந்திருந்தார்.

    தொடர்ந்து இன்றும் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது. அவர்மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம். இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது என தெரிவித்தார். இந்நிலையில் தங்கள் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் தலையிடக்கூடாது என எச்சரிக்கை அளிக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 

    விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ராகுல் காந்தியிடம் "நடவடிக்கை எடுக்க" கோரி காங்கிரஸ் கட்சியின் ஒரு நிர்வாகியைப் பற்றி கூறியதை ஒரு செய்தியில் படித்தேன். ஒரு அடிப்படை கேள்வியை எழுப்புகிறது: காங்கிரஸ் தனது உள்கட்சி விஷயங்களை எப்படி நடத்த வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் உத்தரவிடத் தொடங்கியது எப்போது? தங்களது உள்கட்சி விஷயங்களில் இதுபோன்ற பொது கருத்துக்களை இக்கட்சிகள் ஏற்றுக்கொள்வார்களா?

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை விசிகவின் ரவிக்குமார், மதிமுகவின் துரைவைகோ, சண்முகம், வீரபாண்டியன் ஆகியோரிடம் "உங்கள் கட்சி உறுப்பினர்களை இப்படிச் சமாளியுங்கள்" என்று சொன்னால், அவர்கள் அதை சகிப்பார்களா? கூட்டணிகள் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் உருவாகின்றன — பொது அழுத்த அரசியலால் அல்ல. ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவை ஊடக அறிக்கைகள் மூலம் அல்ல; கூட்டணி மேடைகளுக்குள் பேசப்பட வேண்டும்.

    ஒரு கூட்டணி கட்சியின் உள்கட்சி செயல்பாடுகளை பொது வெளியில் விமர்சிப்பது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது; இது BJP–RSS அமைப்புகளுக்கு எதிரான கூட்டு வலிமையையே பலவீனப்படுத்தும். இது கட்சி செயல் வீரர்கள் தன்மான உணர்வை தூண்டும். சிபிஐ(எம்) தேசிய தலைமைகள் தங்களது மாநில செயலாளர்களுக்கு குறைந்தபட்ச அரசியல் மரியாதையையும், கூட்டணி ஒழுக்கத்தையும் பேண அறிவுறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

    அதேபோல், துரைவைகோ, திருமாவளவனும் கூட்டணி கட்சிகளுடன் நடக்கும் விஷயங்களில் "லக்ஷ்மண் ரேகை"யை மதிக்குமாறு தங்களது எம்.பிக்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். ஒற்றுமை என்பதன் அர்த்தம் மௌனம் அல்ல — ஆனால் அது கட்டுப்பாட்டையும் பொறுப்பையும் குறிக்கிறது. கூட்டணி தர்மம் அனைவருக்கும் சமமாகவே பொருந்த வேண்டுமே ஒழிய அது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அல்ல." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
    • கதவை திறந்து வைத்துக்கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசு மீது குறை சொல்வதை காங்கிரஸ் அனுமதிக்காது. பிரவீன் சக்கரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தேசிய தலைமைக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

    தமிழக அரசுக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசும் நிர்வாகிகள் மீது அகில இந்திய தலைமையிடம் புகார் அளித்து உள்ளோம்.

    இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. யாராலும் கூட்டணியை உடைக்க முடியாது. கூட்டணி சமுத்திரம் போன்றது. அதில் சில அலைகள் வரலாம். போகலாம். கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது.

    கதவை திறந்து வைத்துக்கொண்டு கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என்று எடப்பாடி பழனிசாமி காத்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமி கதவை திறந்து வைத்துக்கொண்டு இருந்தாலும் யாரும் செல்லவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தலைவர் சிவக்குமார் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் என்றால், நிச்சயமாக அப்படி ஒரு ஒப்பந்தம் இருந்தால்தான் சொல்வார்.
    • சித்தராமையா மற்றும் சிவகுமார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட 'பதவிப் பகிர்வு' ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஊகங்கள் எழுகின்றன

    கர்நாடக மாநில முதலமைச்சராக டி.கே. சிவகுமார் அடுத்த மாத தொடக்கத்தில் பதவியேற்பார் என காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் மீண்டும் கூறியுள்ளார். சிவகுமாரின் ஆதரவாளரான ராமநகரம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ இக்பால் உசேன் இதுதொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜனவரி 6 அல்லது 9 ஆம் தேதிகளில் 200% சிவகுமார் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என தெரிவித்தார். 

    இதற்கு காங்கிரஸ் தலைமை ஒப்புதல் அளித்ததா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 'தலைவர் சிவக்குமார் ஒரு விஷயத்தைச் சொல்கிறார் என்றால், நிச்சயமாக அப்படி ஒரு ஒப்பந்தம் இருந்தால்தான் சொல்வார். இல்லையென்றால் அவர் அப்படி சொல்லியிருக்கமாட்டார்' என தெரிவித்தார்.

    கர்நாடகாவில் ஆளும் கட்சிக்குள் அதிகார மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தப் பேச்சுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. 2023-ல் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது சித்தராமையா மற்றும் சிவகுமார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட 'பதவிப் பகிர்வு' ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இந்த ஊகங்கள் எழுந்து வருகின்றன. 

    சிவக்குமாரின் தீவிர ஆதரவாளர்கள் அவருக்குப் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், சித்தராமையாவிற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் ஜனவரி 25-ல் மைசூரில் பெரிய அளவிலான மாநாடு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

    இதனிடையே ஜனவரி 6-ஆம் தேதிக்குப் பிறகு, முதலமைச்சர் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவரையும் டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்புக்குப் பிறகே முதலமைச்சர் மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு தலைவர்களும் தாங்கள் கட்சி மேலிடத்தின் முடிவிற்குக் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறியுள்ளனர். அதேசமயம் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மேலிடம் தன் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், தான்தான் ஐந்தாண்டு காலமும் பதவியில் நீடிப்பேன் என்றும் டிசம்பர் 19 அன்று சட்டப்பேரவையில் தெரிவித்த்து குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ்நாடு சட்டசபைப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
    • பைகிராப்ட்ஸ் ரோடு என்று பெயர் கொண்டிருந்த சாலைக்கு பாரதி சாலை எனப் பெயர்வர முனைந்து வென்றவர்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 93. குமரி அனந்தன் தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும், தமிழக அரசியலுக்கு ஆற்றிய பங்கு மகத்தானது. அவரது வாழ்க்கை வரலாற்றின் சுருக்கம் இது...

    கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருஷ்ணன் - தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933-ம் ஆண்டு மார்ச் 19-ந் தேதி பிறந்தவர் குமரி அனந்தன்.

    பெருந்தலைவர் காமராஜரின் தீவிர ஆதரவாளராக விளங்கியவர். காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தவர். மக்கள் நலனுக்காகப் பதினேழு முறை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டவர். ஏழை விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டுமென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைபயணம் மேற்கொண்டதன் விளைவாக 15.08.1984 அன்று 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் பெற்றுத் தந்தவர்.

     

    இலக்கியச் செல்வராகவும், மேடைப் பேச்சாளராகவும் எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாக திகழ்ந்தவர். 1977-ம் ஆண்டு நாகர்கோவில் தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாளிலிருந்து தமிழில் பேசுவதற்குப் பலமுறை அவையில் போராடி, பத்து முறைக்கு மேல் தொடர்ந்து காவலர்களால் வெளியேற்றப்பட்டு, சோர்ந்துவிடாமல் அவரின் தொடர் முயற்சியால் 20.11.1978-ல் தமிழில் பேசுவதற்கு அனுமதி கிடைத்து, பாராளுமன்றத்தில் தொடர்ந்து தமிழிலேயே பேசியவர். இதுகுறித்து மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, "தனிமரம் தோப்பாகாது" என்ற பழமொழியை மாற்றி அமைத்து விட்டார் என்ற பாராட்டினைப் பெற்றவர்.

    தமிழ்நாடு சட்டசபைப் பேரவையின் உறுப்பினராக 1980, 1984, 1989 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழகத்தில் பனைவளம் பெருக முழங்கியவர். தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகப் படிவங்கள் அனைத்திலும் தமிழுக்கு முதலிடம் தரப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய அரசின் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்.

    தமிழகத்தில் தாய்மொழித் தமிழுக்கு எங்கும் முதலிடம் தரப்படவேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது மற்றும் பெருந்தலைவர் காமராஜர் விருது பெற்றவர். செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்தவர். எட்டயபுரம் கூட்டுறவு நூற்பாலைக்கு பாரதியார் பெயரிட உண்ணா நோன்பிருந்து கோரிக்கையில் வெற்றி பெற்றவர்.

    பைகிராப்ட்ஸ் ரோடு என்று பெயர் கொண்டிருந்த சாலைக்கு பாரதி சாலை எனப் பெயர்வர முனைந்து வென்றவர். வானொலி என்பதை ஆகாஷ்வாணி என்றாக்க முனைந்தபோது எதிர்த்து சென்னையில் பேரணியும் சாத்தூர் வைப்பாற்று மணல் வெளியில் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்; தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆகியோரை அழைத்து பெரிய மாநாடு நடத்தி வானொலி தொடர்ந்து நிலைக்க வழி வகுத்தவர்.

     

    பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்ட போது POST- CARD; MONEY ORDER FORM என்பனவற்றைத் தமிழில் அஞ்சலட்டை, பணவிடைத்தாள் என்று தமிழில் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து நிறைவேற்றி CHEQUE என்பது காசோலை என அழைக்கவும், தந்தியை விரைவு வரைவு என அழைத்துச் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தவர்.

    நல்லாட்சி தந்த நாயகன் காமராஜ், குமரி அனந்தனின் தமிழ் அமுது, சிந்தனைப் பண்ணையில் பாரதியார், சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன், பார் அதிரப் பாடிய பாரதி உட்பட 29 நூல்களை எழுதியவர்.

    சென்னையில் உள்ள பெரும்பான்மை கல்லூரிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் சென்று சொற்பொழிவாற்றியதோடு, மாணவ, மாணவிகளுக்கும் இக்கலையில் பயிற்சி அளித்ததோடு, மாணவர்களை மேடைகளில் பேச ஆக்கமும், ஊக்கமும் அளித்த சிறப்பிக்குரியவர்.

    சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே - அதைத் தொழுது படித்திடடி பாப்பா' என்ற பாரதியின் வாக்கை செயல்படுத்தியவர் என போற்றி, தமிழ் மக்கள் மனதில் தனக்கெனத் தனியிடம் பெற்ற, இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தனுக்கு 2024-ல் சுதந்திர தின விழாவில் 'தகைசால் தமிழர் விருது' வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    இதனை தொடர்ந்து வயது மூப்பின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி குமரி அனந்தன் தனது 93 வது வயதில் காலமானார். அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது.

    பா.ஜ.க. மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் இவரது மகளாவார். மறைந்த தொழிலதிபர் எச். வசந்தகுமார் இவரது தம்பி ஆவார்.

    • நக்சல், பி.எஃப்,ஐ, சிமி உறுப்பினர்கள் போன்ற பயங்கரவாதிகளை சகோதரர்கள் என அழைக்கின்றனர்.
    • அப்சல் குரு, யாகூப் மேமன் போன்ற உண்மையான பயங்கரவாதிகளில் சமாதான தூதர்களையும் காண்கின்றனர்.

    ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-வின் அமைப்பு வலிமையை திக் விஜய் சிங் பாராட்டியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணிக்கம் தாகூர் எம்.பி., பாஜக வெறுப்பால் கட்டமைக்கப்பட்ட அமைப்பு. அது வெறுப்பை பரப்புகிறது எனக் கூறியதுடன் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாக ஷேசாத் பூனாவாலா, மாணிக்கம் தாகூர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ஷேசாத் பூனாவாலா கூறியிருப்பதாவது:-

    அவர்கள் தேசியவாதிகளில் பயங்கரவாதிகளையும், அப்சல் குரு, யாகூப் மேமன் போன்ற உண்மையான பயங்கரவாதிகளில் சமாதான தூதர்களையும் காண்கின்றனர். காங்கிரஸ் தேசியவாதிகளை இழிவுப்படுத்துகிறது. நக்சல், பி.எஃப்,ஐ, சிமி உறுப்பினர்கள் போன்ற பயங்கரவாதிகளை சகோதரர்கள் என அழைக்கின்றனர். அவர்கள் இதை மட்டுமே செய்கின்றனர்.

    ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளாக நாட்டை கட்டமைப்பதற்கான தனிநபர் குணநலன்களை உருவாக்குவதில் பங்களித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் அவதூறு மற்றும் மறைமுக குற்றச்சாட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பு என்பதால், நேரு மற்றும் அவரது அரசு ஆர்எஸ்எஸ்-ஐ குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்ததா? என்பதை மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் சொல்ல வேண்டும்.

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றது ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்திற்கு சென்றதா என்பதையும் காங்கிரஸ் கூற வேண்டும். மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜெய் பிரகாஷ் நாராயண் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்.-ஐ புகழ்ந்தபோது ஒரு பயங்கரவாத அமைப்பைப் பாராட்டினார்களா என்பது கூற வேண்டும்.

    இவ்வாறு ஷேசாத் பூனாவாலா குறிப்பிட்டுள்ளார்.

    • ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது.
    • 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் ஒப்பிட வேண்டும்.

    கடந்த சிலநாட்களாகவே காங்கிரஸின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் சிலர் பாஜகவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இது உள்கட்சி மோதலுக்கு வழிவகுத்து வருகிறது. சசி தரூர், திக்விஜய சிங் ஆகியோரை தொடர்ந்து தற்போது காங்கிரஸின் முக்கிய நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார். கனிமொழி பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக, உத்தரப்பிரதேசத்தை விட தமிழ்நாட்டின் கடன்நிலுவை தொகை அதிகமாக இருக்கிறது என அவர் கூறிய கருத்து தற்போது இந்தியா கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இவரது கருத்து தொடர்பாக ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியுள்ளதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் பிரவீன் சக்ரவர்த்தி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷா நவாஸும் தனது பதிவை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், 

    'காங்கிரஸ் இல்லாத இந்தியா' என்று சொல்லி அதை செயல்படுத்தத் துடிக்கும் பாஜக தான், ஒவ்வொரு காங்கிரஸ்காரருக்கும் எதிரியாக இருக்க முடியும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, 'காங்கிரசுடன் துணை நிற்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடலை, காங்கிரசை அழிக்க முயலும் உ.பி.யின் புல்டோசர் மாடலோடு' ஒப்பிடுகிறார்.

    60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற கடனை விட, 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பெற்ற கடன் அதிகம் என்று தான் காங்கிரஸ்காரர்கள் ஒப்பிட வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, தமிழ்நாட்டின் கடனை உ.பி.யுடன் ஒப்பிடுகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து, அதிகாரங்களை குறைத்து, சட்டமன்றத்தை அவமதிக்கும் மத்திய அரசை நோக்கித்தான், காங்கிரஸ்காரர்கள் கேள்வி எழுப்ப வேண்டும். ஆனால், ஒரு காங்கிரஸ்காரரோ, நெருப்பாற்றில் நீந்தி நலத்திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசை நோக்கி கேள்வி கேட்கிறார்.

    'காங்கிரசுடன் எந்தக் கட்சியும் அணி சேர்ந்து விடக்கூடாது' என்பதுவே பாஜகவின் எண்ணம். அதை முறியடிப்பது தான் ஒவ்வொரு காங்கிரஸ்காரரின் கடமையாக இருக்க முடியும். ஆனால், சில காங்கிரஸ்காரர்களோ, இங்குள்ள வலிமையான கூட்டணியை சிதைக்கத் துடிக்கின்றனர்.

    'ஆதிக்கவாதிகளின் கூடாரமே காங்கிரஸ்' என்று அறச்சீற்றத்துடன் பெரியார் வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. ஒரு நூற்றாண்டே ஆனாலும், காங்கிரசுக்குள் அந்தச் சிந்தனை கொண்டோர் இன்னும் இருக்கிறார்கள் என்பது அவ்வப்போது வெளிப்படுகிறது. ராகுல் காந்தி பெரியார் வழியில் செல்கிறார். ஆனால், காங்கிரசுக்கு உள்ளிருந்தே சிலர் RSS வழியில் பயணிப்பது தான், காங்கிரஸ் சந்திக்கும் மிகப்பெரும் சிக்கல்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • தமிழகத்தில் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும்.
    • நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை யாராலும் முறிக்க முடியாது. காங்கிரசை சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி தமிழக அரசின் கடன் குறித்து விமர்சித்து இருப்பது அவரது சொந்த கருத்து.

    கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்ற அவரது பகல் கனவு பலிக்காது. உத்தரபிரதேச புல்டோசர் ஆட்சியின் யோகி ஆதித்யநாத் குரலாக பிரவீன் சக்கரவர்த்தி பேசுகிறார்.

    தமிழகத்தில் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். பிரவீன் சக்கரவர்த்தி தன்னுடைய வளர்ச்சி மற்றும் விளம்பரத்திற்காக பேசுகிறார். அவர் மீது அகில இந்திய தலைமையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை காலூன்ற வைக்க உளவு வேலை பார்ப்பவர்களை அனுமதிக்க முடியாது.

    ஜோதிமணி எம்.பி. வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில், 'தமிழ்நாட்டை உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாடுகள் கவர்னர் மூலம் முடக்கப்படுகிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

    நம் மாநிலத்தின் சாதனைகளை நாமே குறைத்து மதிப்பிடுவது சரியல்ல. பா.ஜ.க.விற்கு ஆயுதம் எடுத்து கொடுப்பது நமது வேலையல்ல' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • காங்கிரஸ் கட்சி இப்போது ராகுல் குழு மற்றும் பிரியங்கா குழு என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது.
    • ராகுல் பிரிவினர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள், அவர் மீதான நம்பிக்கையின்மையை உணர்த்துகின்றன.

    காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங்கின் சமீபத்திய ட்வீட் குறித்து, பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி இப்போது ராகுல் குழு மற்றும் பிரியங்கா குழு என இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுள்ளது. ராகுல் பிரிவினர் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள், அவர் மீதான நம்பிக்கையின்மையை உணர்த்துகின்றன.

    அடுத்தடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுலுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டு வருகின்றனர்.

    இப்போது, ராகுல் காந்தியின் வழிகாட்டியான திக்விஜய் சிங், ராகுலை சமாதானப்படுத்த முடியாது என்று பகிரங்கமாக மீண்டும் மீண்டும் ட்வீட் செய்து வருகிறார்.

    வாக்கு மோசடியால் அல்ல, மாறாக அமைப்பு ரீதியான பலவீனங்களால்தான் காங்கிரஸின் தோல்வி ஏற்பட்டது என்று அவர் தெளிவாகக் கூறுகிறார். டி.எஸ். சிங் தியோ மற்றும் ரஷீத் ஆல்வி ஆகியோர் இதை ஆதரிக்கின்றனர். ஒட்டுமொத்தத்தில், இது ராகுல் மீதான நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கும் ஒரு ராகுலை அகற்று பிரச்சாரமாகத் தெரிகிறது.

    இவ்வாறு ஷேசாத் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக் விஜய் சிங், மோடியின் படத்தை காண்பித்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வலிமையை பாராட்டி பேசினார்.

    தலைவர்கள் காலடியில் இருந்த ஒரு சாதாரண தொண்டன் முதல்வர் மற்றும் பிரதமராகியுள்ளார் எனக் கூறியதாக தெரிகிறது. அந்த அளவிற்கு அந்த அமைப்பு வலிமையாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கு மற்ற தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்து தற்போதுள்ள விசயங்கள் குறித்து பேசுமாறு வலியுறுத்தியதாக தகவல் வெளியானது.

    பின்னர், எக்ஸ் பக்கத்தில் திக் விஜய் சிங் விளக்கம் அளித்திருந்தார். அதில் நான் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை பாராட்ட வில்லை. அமைப்பின் வலிமையை சுட்டிக்காட்டினேன் எனத் தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சி முடிந்தது என்று சொல்பவர்களுக்கு நான் ஒரு விசயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.
    • எங்களுடைய சக்தி குறைவாக இருக்கலாம். ஆனால் எங்களுடைய முதுகெலும்பு இன்னும் நேராகத்தான் இருக்கிறது.

    காங்கிரஸ் கட்சியின் 140-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் தலைமையகத்தில் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கார்கே பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இன்று காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட நாள். காங்கிரஸ் கட்சி முடிந்தது என்று சொல்பவர்களுக்கு நான் ஒரு விசயத்தை தெளிவாக சொல்ல விரும்புகிறேன். எங்களுடைய சக்தி குறைவாக இருக்கலாம். ஆனால் எங்களுடைய முதுகெலும்பு இன்னும் நேராகத்தான் இருக்கிறது. ஏழை மக்களின் உரிமைகள், மதச்சார்பின்மை, அரசியலமைப்பு ஆகியவற்றில் நாங்கள் சமரசம் செய்து கொள்ளமாட்டோம். ஆட்சியில் இல்லை என்றாலும், சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.

    காங்கிரஸ் ஒன்றிணைக்கிறது. பாஜக பிளவுப்படுத்துகிறது. காங்கிரஸ் மதம் என்பதை ஒரு நம்பிக்கையாக மட்டும் வைக்கிறது. சிலர் மதத்தை அரசியலாக மாற்றுக்கின்றனர்.

    இன்று, பாஜக-விடம் அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவர்களிடம் உண்மை இல்லை. அதனால்தான், சில சமயங்களில் தரவுகள் மறைக்கப்படுகின்றன, சில சமயங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நிறுத்தப்படுகிறது, சில சமயங்களில் அரசியலமைப்பை மாற்றுவது பற்றிய பேச்சுகள் எழுகின்றன.

    காங்கிரஸ் என்பது ஒரு சித்தாந்தம், மேலும் சித்தாந்தங்கள் ஒருபோதும் அழிவதில்லை.

    இவ்வாறு கார்கே பேசினார்.

    • நாம் காங்கிரஸ்காரர்கள் என்று அழைக்கப்படுகிறோம்.
    • இந்த வரலாறு மற்றவர்களுக்கு இல்லை. பாஜக-விடம் என்ன வரலாறு இருக்கிறது?

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை ரத்து செய்து அதற்குப் பதிலாக VB-G RAM G என்ற சட்ட மசோதாவை பாஜக அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    காங்கிரஸ் கட்சி அடுத்த மாதம் 5-ந்தேதி நாடு தழுவிய மக்கள் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 140 ஆண்டுகள் ஆகிறது. இதை காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தொண்டரக்ள் கொண்டாடி வருகின்றனர்.

    கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் 140-வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சியில் மேடையில் அமர்ந்திருப்பவர்கள் தலைவர்கள் அல்ல, வாக்குச்சாவடி மட்டத்தில் பணியாற்றும் தொண்டர்கள்தான் உண்மையான தலைவர்கள். நமது காங்கிரஸ் கட்சி 140 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

    நாம் காங்கிரஸ்காரர்கள் என்று அழைக்கப்படுகிறோம். இந்த வரலாறு மற்றவர்களுக்கு இல்லை. பாஜக-விடம் என்ன வரலாறு இருக்கிறது? நாங்கள் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் பிறந்தவர்கள்.

    மகாத்மா காந்தியின் பெயரை வரலாற்றிலிருந்து நீக்க முடியுமா?. நான் காந்தி பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளேன். அதைத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களைக் கொண்டு வெளியிடப் போகிறேன். 100 காங்கிரஸ் அலுவலகங்களைக் கட்டத் திட்டமிட்டுள்ளேன். 70 அலுவலகங்கள் ஏற்கனவே கட்டப்பட்டுவிட்டன. பெங்களூருவில் மாநில மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்டிடங்களைக் கட்டப் போகிறோம். இதுகுறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிப்போம்.

    இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

    • ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். ஆனால், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன்.
    • ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா? என கேள்வி எழுப்பினார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்ளும் முன் மத்தியப் பிரதேச முன்னாள் முதல் மந்திரியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

    அதில், இணையத்தில் தான் பார்த்த ஒரு புகைப்படம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும் அமைப்பின் சக்தி என்றால் இதுதான் என குறிப்பிட்டிருந்தார்.

    அந்த பதிவில், பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் அவரது காலடியில் தரையில் நரேந்திர மோடி அமர்ந்திருந்த பழைய புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். தனது பதிவை, அகில இந்திய காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் ஆகியோருக்கும் பகிர்ந்துள்ளார். பிரதமர் மோடிக்கும் இதை அவர் பகிர்ந்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், 'நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். ஆனால், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன். அமைப்பைத்தான் பாராட்டி உள்ளேன். ஆர்.எஸ்.எஸ். மற்றும் மோடியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா? என கேள்வி எழுப்பினார்.

    • பிரதமர் மோடிக்கும், பிரதமராக நினைக்கும் காங்கிரசின் ராகுல் காந்திக்கும்தான் நேரடி போட்டி.
    • நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே அவருக்கு பிரதமராக வாய்ப்பு.

    புதுடெல்லி:

    இந்தியாவில் பல தலைமுறைகளாகக் கொண்டாடப்படும், படிக்க படிக்கத் திகட்டாத கதைகளில் விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்று.

    உஜ்ஜயினி மன்னன் விக்கிரமாதித்தன் மற்றும் வேதாளம் (ஒரு பூதம்) இடையிலான தர்க்கம் நிறைந்த, நீதிபோதனை கொண்ட அற்புதமான கதைகளின் தொகுப்பே விக்கிரமாதித்தன் கதை ஆகும்.

    வேதாளம் ஒரு மரத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் உடலுடன் வரும். விக்கிரமாதித்தன் அதைத் தூக்கிக் கொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு கதையைச் சொல்லி, இறுதியில் ஒரு கேள்வியைக் கேட்கும். அதற்கு விக்கிரமாதித்தன் பதிலளிக்கத் தவறினால், வேதாளம் மீண்டும் மரத்திற்குத் திரும்பிவிடும். இதனால் விக்கிரமாதித்தன் சாகசம் தொடரும்.

    தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் முருங்கை மரம் ஏறி வேதாளத்தைச் சுமந்தது போல, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி தொடர்ந்து தேர்தல்களில் அக்கட்சியை வெற்றி பெற வைக்க போராடி வருகிறார்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பிரசாந்த் கிஷோரை அழைத்துப் பேசியது அதற்காகவே. ஆனாலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரளவு இடங்கள் கிடைத்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


    மத்தியில் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துள்ள மோடிக்கும், பிரதமராக அமர நினைக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும்தான் நேரடி போட்டி. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே ராகுல்காந்தி பிரதமராக அமர வாய்ப்பு உள்ளது.

    காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி நியமனம் செய்யப்பட்ட பின் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் தோல்விகளைச் சந்தித்திருந்தார். ஆனலும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்பட 3 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் ஆளும் பாஜக அரசை வீட்டுக்கு அனுப்பி ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்.

    சினிமாவில் ஹீரோவுக்குத் துணையாக காமெடி நடிகர்கள் வருவார்கள். அதனால் படமும் சுவாரசியமாகப் போகும். ஆனால், நிஜத்தில் யாருடைய துணையும் இல்லாமல் ஹீரோவாக தனி ஆளாக நின்று போராடி வருகிறார் ராகுல் காந்தி. அவரை 'பப்பு' என விமர்சிக்கும் பா.ஜ.க.வினரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால் ராகுலின் தைரியம். சுருக்கமாகச் சொன்னால் ராகுல் காந்தி ஒன் மேன் ஆர்மி.

    அண்மைக் காலங்களில் ராகுல் காந்தி அளவுக்குக் கிண்டலடிக்கப்பட்ட, தனிப்பட்ட முறையில் தாக்கப்பட்ட, இன்னொரு தலைவர் இந்திய அரசியலில் இல்லை.

    கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை 20 ஆண்டுகளில் நடைபெற்ற 95 தேர்தல்களில் ராகுல் காந்தி தோல்வி அடைந்துள்ளார் என பா.ஜ.க. வரைபடம் வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.


    காங்கிரஸ் ஒரு போராட்ட இயக்கம். போராடிப் போராடி மக்கள் மத்தியில் வலுவடைந்த இயக்கம். ஆனால், இன்று போராட்டம் என்றால் என்ன என கேட்கிறார்கள்.

    எனவே ராகுல் காந்தி மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு அமர்த்த வேண்டும் என்பதே அக்கட்சி தொண்டர்களின் கருத்தாக உள்ளது என்றால் நிச்சயம் மிகையில்லை.

    ×