என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    #Congress போட்டி கடுமையான தொகுதிகளில் சவாலை சந்திப்பவர் மு.க.ஸ்டாலின் - செல்வப்பெருந்தகை
    X

    #Congress போட்டி கடுமையான தொகுதிகளில் சவாலை சந்திப்பவர் மு.க.ஸ்டாலின் - செல்வப்பெருந்தகை

    • நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண வரவேற்பு விழாவுக்கு சென்றது, அவருடைய தனிப்பட்ட விவகாரம்.
    • ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கும் கண்டிப்பாக பிரசாரத்திற்கு வெகு விரைவில் வருவார்.

    ஆலந்தூர்:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளாக அழைத்து அவரவர்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருக்கிறார். தொகுதி ஒதுக்கீடுகள் முடிந்த பின்பு, அடுத்த கட்டமாக எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

    அவ்வாறு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் பொழுது, எங்கெங்கெல்லாம் கடுமையான போட்டிகள் இருக்கிறதோ, அந்தத் தொகுதிகளில் தி.மு.க.வை போட்டியிட செய்து, எதிரணியினரை தோல்வி அடைய செய்து, வெற்றி கண்டுள்ளார். கடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்த வித்தியாசமான அனுபவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நான் முதல்முறையாக பார்த்தேன்.

    முன்பெல்லாம் எங்கெல்லாம் போட்டி கடுமையாக இருக்கிறதோ? அந்தத் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு கொடுப்பார்கள். ஆனால் முதல் முறையாக, தமிழ்நாட்டு அரசியலில் ஏறக்குறைய 40 ஆண்டுகால எனது அரசியல் வாழ்க்கையில் வித்தியாசமான அணுகுமுறையை அவர் மேற்கொண்டார்.

    கூட்டணி கட்சிகளை அழைத்து, கடுமையான போட்டிகள் உள்ள தொகுதிகளில், நீங்கள் வெற்றி காண முடியாது. எனவே அந்தத் தொகுதிகளை நான் எதிர்கொள்கிறேன் என்று கூறி, சவால்களை தானே சந்திக்க தயாராக கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். எனவே தொகுதிகள் பங்கீடுகள் கூட்டணிக் கட்சிகள் இடையே நல்லபடியாக நடந்து முடியும்.

    எடப்பாடி பழனிசாமி வருகிற சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த பின்பு, முதலமைச்சராக மட்டுமல்ல, அவர் எதிர்க்கட்சி தலைவராக கூட ஆக முடியாது. அவர் எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையில் இனிமேல் அமர்வதற்கு வாய்ப்பே இல்லை.

    ராகுல்காந்தி தேர்தல் நடக்கும் அனைத்து மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். எனவே ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கும் கண்டிப்பாக பிரசாரத்திற்கு வெகு விரைவில் வருவார்.

    காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுவதற்கு விருப்ப மனுக்கள் கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்துவதற்கு, ஸ்கிரீனிங் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. எனவே வெகு விரைவில், நேர்காணல் தொடங்க இருக்கிறது.

    நடிகர் விஜய் நடிகை திரிஷாவுடன் ஜோடியாக திருமண வரவேற்பு விழாவுக்கு சென்றது, அவருடைய தனிப்பட்ட விவகாரம். அதைப்பற்றி எல்லாம் பேசிக்கொண்டே இருப்பது நாகரிகமாக இருக்காது. கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கீடு மகிழ்ச்சியானதாக இல்லை. ஆனாலும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்று கிரீஷ் சோடங்கர் கூறி இருப்பது அவருடைய கருத்து. தொகுதிகளை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்கி றோம் என்பது எனது கருத்து.

    இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

    Next Story
    ×