என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK"

    • பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா.
    • தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும்.

    சென்னை:

    பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் தமிழர் திருநாளாம் பொங்கல் வாழ்த்து மடல்.

    தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.

    கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் இயற்கையும் அரசு நிர்வாகமும் பருவம் தவறாமல் பணி செய்ததன் விளைவாக, விளைநிலங்கள் செழித்து, உழவர்களுடைய உழைப்பின் விளைச்சலையும், அதற்குரிய பலன்களையும் அதிகமாக்கியிருப்பதால் அவர்களின் நெஞ்சத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் துணையாகவும் அரணாகவும் நின்றது உங்களில் ஒருவனான என் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

    பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் சாதி பேதம் கிடையாது. மத வேறுபாடுகள் கிடையாது. ஏழை - பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வு கிடையாது. பெண் - ஆண் என்ற பாகுபாடு கிடையாது. எல்லாருக்குமான திருநாள் பொங்கல். எல்லாருக்குமான அரசு, திராவிட மாடல்.

    ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா இரண்டாவது பேரலையின் கடுமையான தாக்கம், அதனைத் தொடர்ந்து நிரந்தரக் கொரோனா போல தாக்கிக் கொண்டே இருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசின் தமிழ்நாட்டின் மீதான வஞ்சகம், அவ்வப்போது எதிர்கொண்ட இயற்கைப் பேரிடர்கள் என எல்லாவற்றையும் கடந்து, தமிழ்நாடு இன்று பல்வேறு இலக்குகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. அதை ஒன்றிய அரசின் துறைகள் வெளியிடும் புள்ளிவிவரங்களும் தரவரிசைகளுமே உறுதிப்படுத்துகின்றன.

    ஐந்து ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களிடமும் சென்று சேர்ந்து, அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதுடன், ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சியையும் உறுதி செய்துள்ளது. நிரந்தரத் தடைகளை ஏற்படுத்த முயலும் சக்திகளைக் கடந்து, நிரந்தர மகிழ்ச்சியை மக்களுக்குத் தருவதுதான் திராவிட மாடல் அரசின் உன்னத நோக்கமாகும்.

    திராவிட மாடல் அரசின் திட்டங்களை நாம் பட்டியலிட்டுச் சொல்வதைவிட, அதனால் பயனடைந்து வரும் மக்களும், இத்தகைய திட்டங்களால் தமிழ்நாடு கண்டுள்ள வளர்ச்சியை உணர்ந்துள்ள பல்வேறு துறைகளின் பிரமுகர்களும் தங்களின் உள்ளத்திலிருந்து பேசுவதை, 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு', 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்', 'உலகம் உங்கள் கையில்' உள்ளிட்ட நிகழ்வுகளில் கண்டோம். இதுதான் திராவிட மாடல் அரசு கட்டி எழுப்பியுள்ள இன்றைய தமிழ்நாடு. எனினும், இது போதாது என்பதே உங்களில் ஒருவனான என்னுடைய எண்ணம். இன்னும் பல உயர்வுகளை நாம் அடைந்திட வேண்டும். அதற்கேற்ப நம் அரசு உழைத்திடும். உழைக்கின்ற மக்களின் உணர்வுகளை மதித்திடும்.

    1 கோடியே 30 இலட்சம் குடும்பத் தலைவியருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் வாயிலாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வரும் திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டில் உள்ள ஏறத்தாழ 2 கோடியே 23 இலட்சம் அரிசி அட்டைதாரர்களுக்கு மூவாயிரம் ரூபாய் ரொக்கத்துடனான பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது. தமிழர் திருநாளில், தமிழர்களின் வீடுகள்தோறும் மகிழ்ச்சி பொங்குகிற வகையில் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இந்தப் பொங்கல் தொகுப்பைப் பெற்றுச் செல்லும் தாய்மார்களின் மலர்ந்த முகமும் அவர்களின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் நல்வாழ்த்துகளும்தான் திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்று.

    தமிழ்நாட்டின் பத்தாண்டுகால இருளை விரட்டி, விடியலைக் கொண்டு வந்த திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு ஓயாது பாடுபட்டவர்கள் நம் உடன்பிறப்புகள். அந்த உடன்பிறப்புகளின் மனதிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும் என்பதால்தான் கழகத்தின் மாவட்ட – ஒன்றிய – நகர – பகுதி -பேரூர் கிளைகள் சார்பில் மாநிலம் முழுவதும் பொங்கல் விழாக்கள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கழகத்தினர் நடத்துகின்ற பொங்கல் விழாக்கள் பற்றிய செய்தி ஒவ்வொன்றையும் நான் ஆர்வத்துடன் கவனித்து வருகிறேன்.

    கழகத்தினருடன் பொதுமக்களும் இந்தப் பொங்கல் விழாக்களில் பங்கேற்று, திராவிடப் பொங்கலைக் கொண்டாடி வருவதைக் கண்டு உள்ளத்தில் மகிழ்ச்சி ததும்புகிறது. பொங்கல் விழாவையொட்டித் தலைமைக் கழகம் அறிவித்தவாறு, கழகத்தினர் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை, தொடர்ந்து நடத்தி வருவதுடன், கோலப் போட்டிகளும் மிகப் பிரம்மாண்டமான முறையிலே நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    கோலப்போட்டிகளில் பங்கேற்கும் மகளிர் வண்ணக் வண்ணக் கோலங்களை வரைந்து, சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், திராவிட மாடல் அரசு தொடரட்டும் என்ற வாசகங்களை எழுதுவதும், கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அதிலும் மகளிர் நலன் காக்கும் திட்டங்களையே வண்ணக் கோலங்களாக வரைந்து, பார்வையாளர்களின் கண்களை ஈர்த்து, நெஞ்சில் பதிய வைப்பதும் அருமையான நிகழ்வுகளாகத் தொடர்கின்றன.

    உங்களில் ஒருவனான என்னுடைய கொளத்தூர் தொகுதியிலும் சமத்துவப் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி பங்கேற்ற பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது. மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்புடன் கழக நிர்வாகிகள் நடத்துகிற ஒவ்வொரு பொங்கல் விழாவும் தமிழ் மணத்துடனும் தமிழர் பண்பாட்டுத் திறத்துடனும் கொண்டாடப்படுகின்றன.

    கழகம் நடத்துகின்ற பொங்கல் விழாக்களில் வழங்கப்படும் அன்பான பரிசுகள், அனைத்து நிர்வாகிகளுக்கும், செயல் வீரர்களுக்கும், அல்லும் பகலும் அயராது பணியாற்றும் உடன்பிறப்புகளின் கைகளுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை உங்களில் ஒருவனாக உரிமையுடன் தெரிவித்திடக் கடமைப்பட்டுள்ளேன்.

    தமிழரின் தனிப்பெரும் திருவிழாவாக பொங்கலைக் கொண்டாடும் பண்பாட்டு மரபை மீட்டெடுத்ததில் திராவிட இயக்கத் தலைவர்களான தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோருக்கு முதன்மையான பங்கு உண்டு. மாநகரம் தொடங்கி சிறு கிராமம் வரை தமிழர்களின் மரபை உணர்த்திடும் வகையிலான கலை - இலக்கிய நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்துவதை திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் முக்கால் நூற்றாண்டு காலமாகக் கடைப்பிடித்து வருகிறது.

    தமிழ் இனத்தின் பண்பாட்டுப் பெருமைகளில் ஒன்றான, ஜல்லிக்கட்டு எனப்படும் ஏறுதழுவுதல் நிகழ்வைப் பார்ப்பதற்கு உங்களில் ஒருவனான நான், உங்களால் தமிழ்நாட்டு முதலமைச்சரான நான் ஜனவரி 17-ஆம் நாள் அதாவது, தை மாதம் 3-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூருக்கு நேரில் செல்கிறேன். அந்த அலங்காநல்லூரில் உலகத்தரத்திலான ஏறுதழுவுதல் அரங்கத்தை நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் அவரது நூற்றாண்டு நினைவாக அமைத்துத் திறந்ததும் நமது திராவிட மாடல் அரசுதான்.

    தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட தமிழர் பண்பாட்டு நிகழ்வான சென்னை சங்கமம் நிகழ்வை, இந்த ஆண்டும் பொங்கல் விழாவின்போது கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் தங்கை கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னின்று நடத்துகிறார். தமிழர்களின் கலைத்திறனைக் காட்டும் பாரம்பரியக் கலைகள் அரங்கேறும் சென்னை சங்கமம் நிகழ்வையும் உங்களில் ஒருவனான நான் ஜனவரி 14 அன்று தொடங்கி வைக்க இருக்கிறேன். சென்னை மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் சென்னை சங்கமம் 2026 கலைவிழாக்களில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, நம் மண்ணின் மரபார்ந்த நாட்டுப்புறக் கலைவடிவங்களையும் கலைஞர்களையும் ஆதரித்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

    தை முதல் நாளில், தமிழர்களின் இல்லங்கள்தோறும் மகிழ்ச்சி பொங்கட்டும். அந்த மகிழ்ச்சி நம் அனைவருக்கும் ஊக்கத்தையும் உத்வேகத்தையும் வழங்கட்டும். சூரியனைப் போற்றும் பொங்கல் நன்னாள், உடன்பிறப்புகளின் உழைப்பினால் கழகத்திற்கு வெற்றிப் பொங்கலாக அமையட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! என கூறியுள்ளார். 

    • இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் தமிழ்நாடு இந்தி திணிப்பை எதிர்க்கும்.
    • தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தார் அண்ணா.

    சென்னையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் தமிழ்நாடு இந்தி திணிப்பை எதிர்க்கும். ஒரு வரலாறை இங்கே சொல்ல விரும்புகிறேன். 1968ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனபோது ஒரு வேலையை செய்தார். அதைப் பற்றி சட்டசபையிலும் பேசி பதிய வைத்திருக்கிறார்.

    சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்தார். தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கையே தவிர, தமிழ்நாட்டில் எப்போதும் மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி கிடையாது என்றார்.

    தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். அதற்கு முன்பு வரை சென்னை பிரசிடென்ஸி என்று இருந்தது.

    இதை மூன்றையும் செய்துவிட்டு அண்ணா சொன்னார், நான் ஆட்சியில் இருப்பதனால் இந்த மூன்று திட்டத்தையும் அமல்படுத்தினேன்.

    பிற்காலங்களில், யாராவது இதை மாற்ற வேண்டும் என்று நினைத்தார்கள் என்றால், அவர்கள் மனதில் பயம் வரும். அந்த பயம் இருக்கும் வரை இந்த தமிழ்நாட்டை ஆள்வது அண்ணாதுரைதான் என்றார்.

    நம் அண்ணா வடிவில் இன்றைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்பற்றி நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அண்ணா பற்ற வைத்த தீயை யாராலும் அழிக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும்.
    • தி.மு.க.வுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது.

    சென்னை:

    டாக்டர் அன்புமணி தரப்பு பா.ம.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதிப்படுத்தி உள்ளது. எனவே டாக்டர் ராமதாஸ் தரப்பு பா.ம.க. எந்த பக்கம் செல்லும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் உள்ளது.

    தி.மு.க.வுடனும், த.வெ.க.வுடனும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அணியில் இணைப்பதற்கான முயற்சியும் நடைபெறுகிறது என்ற பேச்சு அடிபடுகிறது.

    இது பற்றி சென்னையில் முகாமிட்டு உள்ள டாக்டர் ராமதாசிடம் இன்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் கூறியதாவது:-

    தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? என்கிறீர்கள். தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி பல யூகங்கள், பேச்சுக்கள் வரத்தான் செய்யும். இதில் உண்மையும் இருக்கும். பொய்யும் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இல்லை என்று இன்னும் நான் முடிவு எடுக்கவில்லை.

    விரைவில் முடிவு எடுப்போம். நாட்களும் போய்க்கொண்டுதான் இருக்கிறது. புதிய கூட்டணிக்கு செல்வோமா என்பதை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் எதுவும் நடக்கலாம். நடக்காமலும் போகலாம். புதிய கூட்டணி ஏற்படுமா என்பதற்கு பொறுத்து இருந்து பதில் சொல்கிறேன்.

    தி.மு.க.வுடன் கூட்டணி இருக்குமா என்பதை தற்போதைய நிலையில் உறுதிப்படுத்த முடியாது என்றார்.

    டாக்டர் ராமதாஸ் சென்னையில் முகாமிட்டு உள்ளார். அவரை கூட்டணியில் இழுப்பதற்கு பல கட்சிகளை சேர்ந்தவர்களும் ரகசியமாக பேசி வருவதாக கூறப்படுகிறது.

    • இன்றைக்கு எத்தனையோ வறுமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
    • கேரளாவில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தை நடத்த அங்குள்ள அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது.

    நாகர்கோவில்:

    அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணாவின் பெயரை சொல்லி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதை மறந்துவிட்டு, மதுரையில் அண்ணா பெயரில் உள்ள பூங்கா பெயரை மாற்றவுள்ளது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். தி.மு.க.வுக்கு 5 முழக்கம் இருக்கிறது. அதில் 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற முழக்கமும் ஒன்று.

    அண்ணா எதை கற்றுத்தந்தாரோ, எதை முன் வைத்தாரோ, அதை இத்தனை ஆண்டுகளாக தி.மு.க. முன்வைத்து வருகிறது. 'ஆதிக்கமற்ற சமுதாயம் படைத்தே தீருவோம்' என்பது அண்ணாவின் 2-வது முழக்கம். அதனால் தான் ஒரு ஆதிக்க சமூகத்தை கட்டமைக்க நினைக்கின்ற பாசிச சிந்தனை கொண்ட பா.ஜ.க. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து வருகிறார்.

    அதே போன்று 'இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்' என்று சொன்னோம். இன்றைக்கும் நம்முடைய கொள்கையில் கடுகளவு கூட விட்டுக்கொடுக்காமல் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம். அதேபோன்று 'வன்முறை தவிர்த்து வறுமை ஒழிப்போம்' என்று சொன்னோம். இன்றைக்கு எத்தனையோ வறுமை ஒழிப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டை பார்த்து மற்ற மாநிலங்கள் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் கொண்டு வருகிற அளவுக்கு அந்த முழக்கத்தை நிறைவேற்றி உள்ளோம்.

    அதேபோன்று 'மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற தத்துவத்திலும் உறுதியாக இந்த இயக்கம் நின்று கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது அந்த தத்துவத்திற்கு முற்றிலும் எதிராக செயல்படும், மாநில சுயாட்சிகளை, மாநில உரிமைகளை, மாநிலத்திற்கான நிதி ஆதாரங்களை தராமல் வஞ்சகம் செய்யும் பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து அவர்களின் இசைக்கெல்லாம் ஆடுகின்ற ஒரு கட்சியாக அ.தி.மு.க. உள்ளது. சொந்தக் கட்சியில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை, பஞ்சாயத்தை தீர்ப்பதற்கு டெல்லியில் போய் அமித்ஷாவிடம் முழங்காலிடுகிறார்கள். இந்த கூத்தையெல்லாம் செய்பவர்கள் இந்தியை பற்றி பேசுவதற்கு தகுதியில்லை.

    தி.மு.க. என்றைக்கும் தன்னுடைய முதல் முழக்கமான 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்' என்ற தத்துவத்திலிருந்து கடுகளவும் வழிதவறாது. 23-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வர உள்ளார். அவரது வருகையால் தமிழக அரசியலில் கண்டிப்பாக மாற்றம் இருக்காது. அவர் இந்த முறையும் 100 சதவீதம் வெறுங்கையோடு தான் வரப்போகிறார்.

    தமிழ்நாட்டு மக்களுக்குத் தர வேண்டிய நிதியை அவர் தரப்போவதில்லை. அதை அவர் முடிவோடு வைத்திருக்கிறார். கேரளாவில் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தை நடத்த அங்குள்ள அரசு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த முறையும் கண்டிப்பாக தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கக்கூடிய திட்டங்களையோ, நமக்கு சேர வேண்டிய நிதியையோ அவர் கொண்டு வரப்போவதில்லை.

    வெறும் வார்த்தை ஜாலங்களோடு வரப்போகிறார். எப்படியாவது குட்டையை குழப்பி மீன் பிடிக்க முடியுமா என்று சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த குட்டை குழம்பாது, மீன் பிடிக்கவும் அவர்களால் முடியாது. பா.ஜ.க.வின் முகத்திரை வெகு விரைவில் கிளிய இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது பராசக்தி படத்தின் விமர்சனம் எப்படி இருக்கிறது? என்று கேட்டபோது, நான் சினிமா பார்க்கவில்லை என கூறினார்.

    • இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
    • இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை :

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், பொதுமக்களும் வந்து செல்லும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்குள் புகுந்து கர்ப்பிணி பெண்கள் இருக்கும் மகப்பேறு மருத்துவ பிரிவின் அருகில்

    ஆதி என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியிருக்கிறது.

    பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள் இந்த வெற்று விளம்பர மாடல் அரசில், உயிரை பறிக்கும் களமாகவும், கஞ்சா செடி வளர்க்கும் இடமாகவும் மாறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது மட்டுமல்ல கண்டனத்திற்குரியது.

    சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சரோ, தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என வழக்கம் போல பொய்யான அறிக்கையை படித்துவிட்டு போலி நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்.

    பேருந்து நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், அரசு மருத்துவமனைகள் என கொலைகள் நடைபெறாத இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு கொலைக்களமாகவும், ரவுடிகளின் தலைமையிடமாகவும் தமிழகம் மாறிவருவதை அறியாமல், சிலம்பம் சுற்றுவதையும், விண்டேஜ் கார் ஓட்டுவதையும் ரீல்ஸ் எடுத்து பதிவிட்டு விளையாடும் ஒரு பொம்மை முதலமைச்சரை பெற்றிருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு.

    தமிழக காவல்துறைக்கென நிரந்தர டிஜிபியை கூட நியமிக்க வக்கற்ற பொம்மை முதல்வராலும், தலைமையில்லாமல் சரியானபடி செயல்படாத காவல்துறையாலும் தமிழக மக்கள் இன்னும் என்னென்ன துயரங்களை சந்திக்க வேண்டியிருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.

    நான் ஏற்கனவே சொன்னது போல பொம்மை முதலமைச்சரின் கீழ் இயங்கும் விளம்பர அரசையும், காவல்துறையையும் இனியும் நம்பி எந்தவித பயனும் இல்லை என்பதால், பொதுமக்களே அவரவர் உயிர் பாதுகாப்பை அவரவர்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதுடன், இன்னும் மூன்று மாதங்களில் இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முடிவு எட்டப்படும் எனவும் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். 

    • மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை.
    • பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைத் தானே பூங்காவிற்கு தொடர்ந்து சூட்டியிருக்க வேண்டும்?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஆட்சிக்கு வரும்போது "அண்ணா வழி நடப்போம்" என்று கூறிய விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடனே மறந்தது அப்பேரறிஞர் பெருந்தகையைத் தான்.

    மேடைகளில் பேசும் வெற்று வாய்ச் சவடாலுக்கும், குடும்ப தயாரிப்புப் படங்களில் வசனம் வைத்து வியாபாரம் செய்ய மட்டுமே இவர்களுக்கு அண்ணாவின் தேவை உண்டு.

    ஆனால், மக்கள் நலன் சார்ந்த எந்த ஒரு இடத்திலும் இந்த விடியா திமுக அரசு அண்ணாவின் பெயரை முன் நிறுத்தியது இல்லை.

    அஇஅதிமுக திட்டங்களுக்கு ஒட்டிய ஸ்டிக்கர்களில் கூட தன் தந்தை கருணாநிதி பெயரை வைத்தாரே தவிர, அண்ணாவின் திருப்பெயரை வைக்கவில்லை!

    தற்போது ஒருபடி மேலே போய், மதுரை திருநகர் "அறிஞர் அண்ணா பூங்கா" என்ற பெயரில் உள்ள அறிஞர் அண்ணாவை நீக்கிவிட்டு, "ஸ்டெம்" பூங்கா என்று பெயர் வைத்துள்ளது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.

    தங்களை ஏதோ பெரிய கொள்கைக் குன்று போல பாவித்துக் கொள்ளும் திமுக, தங்கள் கட்சியை நிறுவிய தலைவரின் பெயரையே அழிக்க நினைப்பது கொடுர எண்ணமல்லவா ?

    இந்த தீயசக்திதனம் தான், இதை எதிர்த்தொழிக்கதான், அண்ணாவின் பெயர்தாங்கி, கொடியில் அவர் உருவம் தாங்கி, அண்ணாயிசக் கொள்கை ஏந்தி நிற்கும் மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க. தோற்றுவிக்கப்பட்டக் காரணம்.

    அறிவியல், பொறியியல், கணிதம் சார்ந்த பூங்காவாக மாற்றுவதாக சொல்பவர்கள், இவை அனைத்திற்கும் தமிழ்நாட்டில் அடித்தளமிட்ட பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரைத் தானே பூங்காவிற்கு தொடர்ந்து சூட்டியிருக்க வேண்டும்?

    "அறிஞர் அண்ணா பூங்கா", தொடர்ந்து அப்பெயரிலேயே இயங்க உடனடியாக வழிவகை செய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    • அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.
    • கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி எண். 311 (சமவேலைக்கு சம ஊதியம்) நிறைவேற்றக் கோரி தொடர்ந்து 17-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராடிவரும் நிலையில்,

    இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளான ராபர்ட், ரெக்ஸ் ஆனந்தகுமார், கண்ணன் உள்ளிட்ட 8 பேரை, நேற்று காலை 8 மணியளவில் இருந்து #HouseArrest செய்துள்ள ஸ்டாலின் அரசு, வீட்டுச் சிறையில் வைத்து, அவர்கள் செல்போனைக் கூட பறித்துக்கொண்டு Switch Off செய்து தற்போது வரை அவர்களை விடுக்கவில்லை என செய்திகள் வருகின்றன.

    சுமூகமான முறையில் போராட்டத்தை எதிர்கொள்ளத் தெரியாத கையாலாகாத பொம்மை முதல்வரின் அரசு, இப்படி சட்டத்திற்கு புறம்பான வகையில் கைதுகளில் ஈடுபடுவதும், ஒரு செல்போன் போன்ற அடிப்படை உரிமைகளைக் கூட மறுப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.

    திமுக அரசால் அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் உள்ளோருக்கு சிறு தீங்கு நேர்ந்தாலும், அதற்கு முழு பொறுப்பும் மு.க.ஸ்டாலின் ஏற்க வேண்டும். அறவழியில் போராடியதற்காக , ஆசிரியர்களை கைது செய்து, மறைத்து வைத்து துன்புறுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது.

    கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார். 



    • திமுகவின் ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
    • சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்

    பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின், 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று கோவை வந்தார். இன்று 2-வது நாளாக அவர் கோவையில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ள அவர், 

    'சனாதன பண்பாட்டிற்கு ஒரு மகத்தான, பெருமைமிக்க வரலாறு உள்ளது. அதற்கு தமிழ்நாட்டின் பங்களிப்பு உண்மையிலேயே ஒப்பற்றது. இந்தியாவின் ஆன்மா உலகத்திடம் உரையாடிய புண்ணிய பூமி. 1892 ஆம் ஆண்டு கன்னியாகுமரியில் உள்ள கடற்கரைப் பாறையில் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட தியானம், ஒரு ஆன்மிக சாதனை மட்டுமல்ல; அது இந்திய மறுமலர்ச்சியின் பிரகடனமாகும். இங்கிருந்தே அவர் தேசத்தின் எழுச்சிக்கான உறுதியை எடுத்துக் கொண்டு, சனாதன சிந்தனையை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்றார்.

    இன்று பிரதமர் மோடியும், தமிழ் மொழிக்கும், தமிழ் பண்பாட்டிற்கும் உலகளாவிய அங்கீகாரத்தை வழங்கி வருகிறார். காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள், நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவியது மூலம் தமிழர் பெருமையை நிலைநாட்டியது , திருக்குறளின் போதனைகளையும், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கருத்துகளையும் தேசிய சிந்தனையுடன் இணைப்பது ஆகியவற்றின் மூலம், தமிழின் பெருமை இமாலய உச்சத்தை எட்டியது.

    பிரதமர் தலைமையில், ராமர் கோயில், காசி விஸ்வநாதர் வழித்தடம், சோமநாத், மத்திய பிரதேசத்தின் மகாகால் லோக் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களின் மூலம், இந்தியா ஒரு முழுமையான மத-பண்பாட்டு மறுமலர்ச்சியை கண்டுள்ளது. இது பாரதத்தின் பண்டைய ஆன்மிக இறையான்மையும் தேசிய விழிப்புணர்வையும் மீட்டெடுப்பதில் ஒரு சகாப்தம் படைக்கும் தருணமாகும்.

    ஆனால் அதே சமயம், தமிழ்நாட்டின் இந்த மகத்தான பாரம்பரியம், திமுக ஆட்சியின் கீழ் அவமதிக்கப்படுகிறது. தமிழ் கடவுளான முருகனுக்கு தீபம் ஏற்றுதல் முதல் இந்து நம்பிக்கைகளை சிதைப்பது வரை, சனாதன வேள்விகள் தொடர்ந்து கேலி செய்யப்படுகின்றன. ஊழல், குடும்ப அரசியல், மற்றும் போலி மத அரசியல் மக்கள் மனதில் தீராத வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    ராமசேதுவை எதிர்த்ததன் மூலம் காங்கிரஸ் தன் வீழ்ச்சிக்கான விதைகளை விதைத்தது போல, கோயம்புத்தூரின் புனித மண்ணிலிருந்து நான் உறுதியாக கூறுகிறேன்—சனாதன மரபுகளை தொடர்ந்து இகழும் திமுகவின் அரசியல் வீழ்ச்சி இம்மண்ணிலிருந்து துவங்கும்.

    ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழ்நாடு விடுபட்டு, நிர்வாகத் திறனற்ற திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி; வளர்ச்சி, பொறுப்புள்ள ஆட்சி, மற்றும் சனாதன நாகரிகச் சிந்தனையில் வேரூன்றிய எதிர்காலத்தை நோக்கி முன்னேறிச் செல்வோம்..! வாழ்க தமிழ்நாடு..! வளர்க பாரதம்..! " எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று கணக்கெடுக்கவே முடியாத அளவுக்கு ஏராளமான அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • கடந்த 6 நாள்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஊராட்சிகளில் முக்கியமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;

    "தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் 12,500-க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் தங்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து ஆறாம் நாளாக இன்றும் சென்னையில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊராட்சி செயலாளர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதற்குக் கூட திமுக அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சி செயலாளர்களில் பெரும்பான்மையினர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். தொடக்கத்தில் குறைந்த ஊதியத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட அவர்கள், தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2006-ஆம் ஆண்டில் ரூ.1,300 அடிப்படை ஊதியத்தில் பணி நிலைப்பு செய்யப்பட்டு 2018-ஆம் ஆண்டு முதல் ரூ.15,900 அடிப்படை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு ரூ.2,000 மட்டுமே மாத ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது எந்த வகையிலும் நியாயமல்ல.

    ஊராட்சி செயலாளர்களுக்கு இணையான ஊதியம் பெற்று வரும் ஊராட்சி ஒன்றிய பதிவுறு எழுத்தர்களுக்கு அவர்களின் ஊதிய விகிதத்திற்கு ஏற்ற வகையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற ஓய்வூதியம் நடைமுறையில் உள்ளது. ஆனால், அதே ஊதிய விகிதம் பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற ஓய்வூதியம் வழங்க மறுப்பதும், ரூ.2000 மட்டுமே ஓய்வூதியம் வழங்குவதும் பெரும் அநீதியாகும்.

    ஊரக உள்ளாட்சிகளின் முதுகெலும்பாக திகழ்பவர்கள் ஊராட்சி செயலாளர்கள் தான். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் 28 மாவட்டங்களில் ஊராட்சித் தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்து விட்ட நிலையில், அனைத்துப் பணிகளையும் ஊராட்சி செயலாளர்கள் தான் கவனித்து வருகின்றனர். கடந்த 6 நாள்களாக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், ஊராட்சிகளில் முக்கியமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், அது குறித்த எந்தக் கவலையும், அக்கறையும் இல்லாமல் இந்த சிக்கலுக்கு தீர்வு காணாமல் அலட்சியம் காட்டி வருகிறது.

    தமிழ்நாட்டில் எந்தெந்த அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று கணக்கெடுக்கவே முடியாத அளவுக்கு ஏராளமான அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை வைத்துப் பார்க்கும் போது திமுக ஆட்சியால் பாதிக்கப்படாதவர்களே இல்லையோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், இதுகுறித்த கவலையே இல்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு விழித்துக் கொண்டு ஊராட்சி செயலாளர்களுக்கு தகுதிக்கேற்ற உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அதன் மூலம் அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • அ.தி.மு.க. கூட்டணியில் அன்புமணி தரப்பு பா.ம.க இணைந்துள்ளது.
    • த.வெ.க. நிர்வாகிகள் ஜி.கே.மணி மகன் மூலம் ராமதாஸ் தரப்பிடம் பேச்சு

    தமிழ்நாடு சட்டசபைக்கு விரைவில் தேர்தல் வர உள்ளது. இதனால் கூட்டணி அமைக்கும் முயற்சியில் பல்வேறு அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் தற்போது அன்புமணி தலைமையிலான பா.ம.க.வும் இணைந்துள்ளது.

    ஆனால் ராமதாஸ், அந்த கூட்டணி செல்லாது. சட்டரீதியாகவும் இந்த கூட்டணி செல்லாது. என்னுடன் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி பெறும் என சமீபத்தில் நிரூபர்களிடம் கூறி இருந்தார். மேலும் பழம் நழுவி பாலில் விழுந்துவிட்டது. தைலாபுரத்திலிருந்து தைலமும் சென்றுவிட்டது என சூசகமாக தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தது போல் தெரிவித்திருந்தார். அதேபோல தமிழக வெற்றிக் கழக முக்கிய நிர்வாகிகளும் ஜி.கே. மணியின் மகன் தமிழ் குமரன் மூலமாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த பரபரப்பான நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இருந்து இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னைக்கு புறப்படுகிறார். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை முடித்த பிறகு நாளை காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    • திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.

    விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு, வாக்குச்சாவடி மாநாடு என பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.

    • அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.
    • ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தாலும் கூட அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை திமுக அரசு அறிவிக்கவில்லை.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    திமுக அரசால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் மோசடியானது. அரசு ஊழியர்களை ஏமாற்றும் தன்மை கொண்டது என்ற குற்றச்சாட்டு அனைத்துத் தரப்பிலிருந்தும் எழுந்துள்ள நிலையில், அந்தத் திட்டம் கூட திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படாது என்று தெரியவந்திருக்கிறது. அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது.

    பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள இருந்த நிலையில், அந்தப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற மோசடியான திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. அதனால், ஏற்படும் பலன்களை விட பாதிப்புகள் தான் அதிகம் என்று பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

    ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்தாலும் கூட அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை திமுக அரசு அறிவிக்கவில்லை. ஓய்வூதியத் திட்டத்திற்கான அரசாணையையும் பிறப்பிக்கவில்லை. அதனால் திமுக ஆட்சியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாது என்று அஞ்சிய அரசு ஊழியர்களில் சிலர், இந்தத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, திட்டத்திற்கான அரசாணை எப்போது வெளியிடப்படும் என்று வினா எழுப்பியது. அதற்கு 2 வாரங்களில் அரசாணை வெளியிடப் படும் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, அதன்படி நேற்றைய தேதியிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது.

    கடந்த 3-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு தான் இப்போது அரசாணையாக வெளியிடப்பட்டது. ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு ஊழியர்கள் எழுப்பிய எந்த வினாவுக்கும் அதில் விடை அளிக்கப்படவில்லை. இதன் மூலம் தமிழக அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டம் மோசடியானது; ஏமாற்று வேலை; யாருக்கு பயனளிக்கப் போவதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட திட்டத்தின் பயன்கள் 01.01.2026 முதல் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்பது அறிவிக்கப்படவில்லை. ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் அடங்கிய விதிகள் தனியாக வகுக்கப்பட்டு வருவதாகவும், அந்த விதிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பிறகே இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இன்னும் 40 நாள்களில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இதற்கான விதிகள் வகுக்கப்பட வாய்ப்பில்லை.

    எனவே, திமுக ஆட்சி முடிவதற்கு முன்பாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டுக்கு வராது என்பதை அரசாணையில் திமுக அரசு மறைமுகமாக தெரிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் இன்னொரு துரோகம் ஆகும். இதற்கான தண்டனையை அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வரும் தேர்தலில் திமுகவுக்கு தருவார்கள்.

    ×