என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தவெக"

    • வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
    • த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, இந்த வழக்கில் த.வெ.க. முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்தில் வருகிற 29-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து நிர்வாகிகள் டெல்லி சென்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.

    • மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும்.
    • எஸ்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் அந்த திட்டத்திற்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் வழங்க வேண்டும் என்று புதிய சட்டம் இயற்றி உள்ளனர்.

    இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எம்.பி.க்கள் மனு அளித்துள்ளோம்.

    ஏனென்றால் அந்தந்த மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு நிதி வழங்குவது சாத்தியமில்லை. மேலும் மகாத்மா காந்தி பெயரை நீக்கக்கூடாது.

    மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகும். முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆட்சி நடத்தி வருகிறது. மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகின்றனர்.

    நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கி உள்ளார். ஆனால் அவர் தீய சக்தி தி.மு.க., தூய சக்தி த.வெ.க. என கூறியது ஏற்புடையதல்ல. ஏனென்றால் தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்னும் சில நாட்களில் மேலிட பொறுப்பாளர்கள் பேசுவர். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. கண்டிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.

    தி.மு.க. கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என முதலமைச்சர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் கூட்டணி கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.

    எஸ்ஐஆர் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பம். எங்கள் தலைவர் ராகுல்காந்தி கூட இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

    தமிழகத்தில் பல லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் இப்படி வாக்குகள் நீக்கப்படுவது ஏற்புடையதல்ல. பீகாரில் கூட கடைசி நேரத்தில் பல வாக்குகள் சேர்க்கப்பட்டது. இந்த எஸ்ஐஆர் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
    • 10-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டதால் மயக்க நிலையில் உள்ளார்.

    தூத்துக்குடியை சேர்ந்தவர் அஜிதா ஆக்னல். தமிழக வெற்றிக்கழக கட்சி நிர்வாகி. இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத காரணத்தினால் சென்னை பனையூரில் அக்கட்சி தலைவரான நடிகர் விஜயின் காரை முற்றுகை யிட்டு அஜிதா மற்றும் அவரது ஆதர வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் கட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் அஜிதா ஆக்னல் 3 நாட்களாக உணவு அருந்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் நேற்று காலை வீட்டில் 15 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவரை அவரது கணவர் உள்ளிட்டோர் உடனடியாக தூத்துக்குடியில் தங்கள் வீட்டருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி தமிழ் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறும்போது, அஜிதா ஆக்னலுக்கு தற்போது எக்ஸ்ரே போன்ற பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தூக்க மாத்திரைகளின் செயல்பாட்டை குறைக்கும் விதமான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்பு இல்லை. 10-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டதால் மயக்க நிலையில் உள்ளார்.விரைவில் குணமடைவார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அவருக்கு இன்று 2-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அஜிதா ஆக்னல் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட உள்ளார்.

    • காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் பூதாகரமாகியுள்ளது.
    • நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் தான் காங்கிரசின் அடிபட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள்.

    திருச்சி:

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே உள்ள நிலையில் ஓராண்டுக்கு முன்னரே களத்தில் அனல்பறக்க தொடங்கிவிட்டது. தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளப்போகும் கட்சியும் தங்களுக்கான கூட்டணியை இன்னும் இறுதிசெய்யாத நிலையில் அத்தனை தொகுதிகளில் வெல்வோம், இத்தனை தொகுதிகளில் வெல்வோம் என்று கூக்குரலிட்டு வருகிறார்கள்.

    கடைசி நேரத்தில் கூட்டணியில் மாற்றங்கள் வரும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருந்தபோதிலும், தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியில் ஒரு அணியும், விஜய்யின் த.வெ.க. கூட்டணியும், சீமானின் நாம் தமிழர் கட்சி ஒரு அணியாகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டன. இதர கட்சிகளாக தே.மு.தி.க. தனது கூட்டணி குறித்து வருகிற 9-ந்தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்போம் என்று அதன் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

    அ.ம.மு.க., பா.ம.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. தொண்டர் மீட்புக்குழு போன்றவை விரைவில் தங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் என கூறியுள்ளன. அதன் அடிப்படையில் 4 முனை போட்டியா அல்லது 5 முனை போட்டியா என்பது வெகுவிரைவில் தெரியவரும்.

    கட்சி தொடங்கிய பின்னர் முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் விஜயின் த.வெ.க. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்காக அக்கட்சியும் கூட்டணி கதவுகளை திறந்து வைத்துள்ளது.

    இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் இடம்பெற வாய்ப்புள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தபோதிலும் அதன் மூத்த நிர்வாகிகள் தற்போது வரை எந்த விமர்சனமும் செய்யாதது சந்தேகங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான திருச்சி வேலுசாமி கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக சூசகமாக தெரிவித்த கருத்துகள் அரசியல் அரங்கில் பூதாகரமாகியுள்ளது.

    இது தொடர்பாக திருச்சி வேலுச்சாமியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அதில் நான் மட்டுமல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் எங்களது மாவட்ட தலைவர், மாநில பொதுச்செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசியுள்ளனர். விஜய் பற்றி பேசும்போது அங்கு திரண்டிருந்த கூட்டம் ஆர்ப்பரித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விஜய்க்கு இருக்கும் செல்வாக்கு ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு உள்ளது.

    காங்கிரசின் அடிமட்ட தொண்டர்கள் தி.மு.க. மீது கோபத்தில் இருப்பது உண்மைதான். ஒரு இயக்கம் அடிமட்டத்தில் வளர வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். ஆனால் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் அவமானப்படுத்தியதாக தொண்டர்கள் கருதுகிறார்கள்.

    பல இடங்களில் பிரதிநிதித்துவம் வழங்கவில்லை. ஒரு சில இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்கிவிட்டு அந்த இடங்களிலும் பண பலத்தை பயன்படுத்தி காங்கிரஸ் வேட்பாளர்களை தோற்கடித்தார்கள். அந்த குமுறல் தான் இன்றைக்கு ஆர்ப்பரிப்பாக வெளிப்படுகிறது. எரிவதை இழுத்தால் கொதிப்பது அடங்கிவிடும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

    எம்.எல்.ஏ., எம்.பி.யாக இருப்பவர்கள், ஒரு சில பயனாளிகளை தவிர யாரும் தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓரிருவரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு மற்ற காங்கிரஸ் கட்சியினரை கீழ்த்தரமாக நடத்துவதாக நினைக்கிறார்கள். கூட்டணி தோழமை என கூறிவிட்டு காங்கிரசை வேரறுக்கும் வேலையைத்தான் தி.மு.க. செய்தது.

    நம்மை அவமானப்படுத்தியவர்களை வீழ்த்த வேண்டும் என்ற வெறி உணர்வில் தான் காங்கிரசின் அடிபட்ட தொண்டர்கள் இருக்கிறார்கள். இது நூற்றாண்டுகளைக் கடந்த காங்கிரஸ் கட்சி தலைமைக்கும் தெரியும். தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே அது பெருந்தலைவர் காமராஜர் தான். ஆனால் அவரையும் அவமானப்படுத்தினார்கள். ஆனால் தி.மு.க. தலைமை உடனடியாக அதை கண்டிக்கவில்லை. இது போன்ற கோபத்தின் வெளிப்பாடுதான் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை சரியான முடிவு எடுக்கும் என தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும் தொண்டர்களின் மனநிலையை புரிந்து கொண்டு முடிவெடுக்க வேண்டும். காங்கிரசும் அவ்வாறு முடிவு எடுக்கும் என தொண்டர்கள் நம்புகிறார்கள்.

    ஒரு சாரார் தி.மு.க. கூட்டணியை விரும்புவதாகவும், மற்றொரு தரப்பினர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணியை விரும்புவதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை. அவ்வாறு கூறி காங்கிரசை துண்டாக்க முடியாது. அடிபட்ட காங்கிரஸ் தொண்டர்களின் ஒட்டுமொத்த மனநிலையும் தி.மு.க. கூட்டணி கூடாது என்பதாகத்தான் இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் காங்கிரசை த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க தூண்டுகிறது என்றார். 

    • மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 வேட்பாளர்களின் பெயர்களையாவது விஜயால் சொ்லல முடியுமா?.
    • இந்தியாவையே நாளை பிடித்து விடுவேனு கூட விஜய் சொல்லலாம்.

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கிடையே நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து அதற்கான பணியை தொடங்கியுள்ளார்.

    அவர் மக்களை சந்திக்கும்போதெல்லாம் தமிழகத்தில் திமுக- தவெக இடையில்தான் கூட்டணி எனப் பேசி வருகிறார். இந்த தேர்தலில் அவர் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதலில் அதிமுக கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. ஆனால், பாஜக-வுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக அறிவித்ததால் அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பில்லை. மேலும், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என தவெக அறிவித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமியும் தவெக உடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. இதனால் அதிமுக-வினர் விஜய் மற்றும் விஜய் கட்சியை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர். பாஜக-வினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் "இந்தியாவையே நாளை பிடித்து விடுவேனு கூட விஜய் சொல்லலாம். ஆனால், இது சினிமா அல்ல. தவெக-வுக்கு கட்டமைப்பு கிடையாது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 10 வேட்பாளர்களின் பெயர்களையாவது விஜயால் சொல்ல முடியுமா?" என நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்துள்ளார்.

    • தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார்.
    • ஆனால் சாமுவேல்ராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டதால் விஜய் காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சி ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு புதிய பொறுப்பாளர்களை த.வெ.க. தலைவர் விஜய் நியமனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிப்பு இதுவரை வெளியிடபடாமல் இருந்தது.

    இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்றுமுன்தினம் கட்சி தலைவர் விஜய் வெளியிட்டார். தூத்துக்குடி மத்திய மாவட்டத்திற்கு எஸ்.டி.ஆர். சாமுவேல்ராஜ், வடகிழக்கு மாவட்டத்திற்கு ஏ.கே. மகேஷ்வரன், புறநகர் மாவட்டத்திற்கு மதன்ராஜா, தெற்கு மாவட்டத்திற்கு விர்ஜின் ஆரோக்கிய பிரைட்டர், வடக்கு மாவட்டத்திற்கு பாலசுப்பிரமணியன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டனர்.

    மேலும் மாவட்ட இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர் பதவிகளையும் கட்சி தலைவர் விஜய் நேற்று அறிவித்து புதிய நிர்வாகிகளுக்கு பனையூர் கட்சி அலுவலகத்தில் சான்றிதழை வழங்கினார்.

    தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி தனக்கு கிடைக்கும் என தூத்துக்குடியை சேர்ந்த அஜிதா ஆக்னல் எதிர்பார்த்து இருந்தார்.

    ஆனால் அந்த பதவிக்கு சாமுவேல்ராஜ் நியமனம் செய்யப்படுவதை அறிந்து பனையூர் த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் கட்சி அலுவலகம் வந்த விஜய் காரை தனது ஆதரவாளர்களுடன் மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாதுகாவலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் போராட்டக்காரர்களை விலக்கி விஜய் காரை தலைமை அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து அஜிதா ஆக்னல் கட்சி அலுவலகத்தின் நுழைவு வாயிலில் தர்ணா போராட்டம் நடத்தினார். தொடர்ந்து த.வெ.க. நிர்வாகிகள் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அஜிதா ஆக்னல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடல்நிலை மோசமானால் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே அஜிதா ஆக்னல் "இறுதி மூச்சு உள்ளவரை என் தாய் கழகமான தமிழக வெற்றிக் கழகத்தோடும் எம் தலைவர் தளபதி விஜய் யோடு மட்டும்தான் எனது அரசியல் பயணம் தொடரும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

    • டெல்லியில், சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த பெண்களை விரட்டி அடித்திருக்கிறது ஒரு கும்பல்.
    • பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலைப் பாடிய சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

    வடமாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டாட்டத்தில் சிறுபான்மையினர் தாக்கப்பட்டதற்கு தவெக கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அன்பு மற்றும் கருணையின் வெளிப்பாடாக உலகம் எங்கும் கொண்டாடப்படுவதே கிறிஸ்துமஸ் பெருவிழா. உலகில் உள்ள அனைத்து மக்களும் அக்கொண்டாட்டத்தில் பங்கேற்பதும், அதனை ஆதரிப்பதும் இயல்பான ஒன்றுதான். ஆனால், மதச்சார்பின்மை மண்ணான நம் இந்தியத் திருநாட்டில் தற்போது உலக நீதி மற்றும் இயல்புக்கும் எதிரான சில நிகழ்வுகள் நடந்தேறி உள்ளதாகச் சில தகவல்கள் வந்துள்ளன. மனதை வேதனையுறச் செய்யும் அவை நம் தேசத்தின் ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் சவால் விடுவதாக உள்ளன.

    டெல்லியின் ஒரு பகுதியில், சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்த பெண்களை விரட்டி அடித்திருக்கிறது ஒரு கும்பல்.

    ஒடிசாவில் கிறிஸ்துமஸ் தொப்பிகளை விற்ற ஓர் ஏழைக் குடும்பத்தை சிறுவன் ஒருவன் கொடுமைக்குள்ளாக்கி விரட்டி அடித்திருக்கிறான்.

    மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடந்த மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி ஒன்றில் பார்வையற்ற சிறுமியை அவளுடைய பிறவிக் குறைபாட்டை ஏளனமாகப் பேசியவர் யார் தெரியுமா? அஞ்சு பார்கவ் என்ற பா.ஜ.க.வின் மாவட்டத் துணைத்தலைவராம்.

    உத்தரகாண்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை ஹோட்டலில் நடத்தக்கூட விடாமல் ரத்து செய்ய வைக்கப்பட்டிருக்கிறது.

    இவையெல்லாம் வடமாநிலங்களில் என்றால், நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் இருக்கும் பாலக்காட்டில் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பாடலைப் பாடிய சிறுவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளது யார் தெரியுமா? தீவிர ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வின்ராஜ் என்பவர்தான்.

    இந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், இனி வரும் காலங்களில், இந்தியாவின் எந்த மூலையிலும் நடைபெற அனுமதிக்கவே கூடாது. இதுபோன்ற வன்செயல்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்கிறது. கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா ஆராதனையில் பங்குபெற்ற மாண்புமிகு ஒன்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இதற்கான கண்டனத்தைத் தெரிவித்து, சிறுபான்மை சகோதரர்களின் பாதுகாப்பை உண்மையாகவே உறுதி செய்ய வேண்டும் என்பதை தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

    "எம்மதமும் நம்மதமே" என்ற பேரன்பு மனப்பான்மையுடன் நல்லிணக்கம் காப்பவரே நம் வெற்றித் தலைவர் அவர்கள். ஆகவே, சிறுபான்மை சகோதரர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களின் நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதே நம் வெற்றித் தலைவர் மற்றும் நமது தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதியான, சமரசமற்ற மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை ஆகும். இதை நம் வெற்றித் தலைவரின் ஒப்புதலுடன் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.
    • சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார்.

    வீரமங்கை ராணி வேலு நாச்சியார் நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வீரத்தின் விளைநிலமான தமிழ் மண்ணிலிருந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி, சமூக, சமய நல்லிணக்கத்தைப் பேணிய எங்கள் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன் என்று தெரிவித்துள்ளார்.

    • தமிழ்நாட்டில் ஆளும் இரு கட்சிகள் மட்டுமே ஆள வேண்டுமா? புதிய கட்சி ஆளக்கூடாதா?
    • கூட்டணியை பொறுத்தவரையில் யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம்.

    கோபி:

    தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவரான வீரமங்கை வேலு நாச்சியாரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை ஒட்டி இன்று ஈரோடு மாவட்டம் கோபி, கரட்டூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில் நிர்வாகிகள் வீரமங்கை வேலுநாச்சியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். இன்று த.வெ.க.கொள்கை தலைவர்களில் ஒருவராக உள்ள வேலு நாச்சியாருக்கு அவரது நினைவு நாளை ஒட்டி அஞ்சலி செலுத்தப்பட்டு உள்ளது.

    வெள்ளையனை எதிர்த்து போராடி வெற்றி பெற்றவர் வேலுநாச்சியார். இது ஒரு வரலாறு. எதிர்கால தமிழகத்தின் நாயகன் விஜய் 2026-ல் முதலமைச்சர் நாற்காலில் அமர போகிறார்.

    தமிழ்நாட்டில் ஆளும் இரு கட்சிகள் மட்டுமே ஆள வேண்டுமா? புதிய கட்சி ஆளக்கூடாதா?

    தலைவர் விஜய் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி வாக்காளர் வரைவு பட்டியலை சரிபார்ப்பு பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.

    ஒ.பி.எஸ் பொறுத்தவரையிலும் அவர் உடன் உள்ள மாவட்ட செயலாளர் த.வெ.க.வுடன் செல்ல வேண்டும் என்று சொல்லி இருக்கின்றனர். அதனை பொறுத்தவரையில் அவர் தான் முடிவு செய்ய வேண்டும்.

    ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் 2 லட்சம் பேர் முன்னிலையில் தலைவர் விஜய் கருத்துகளை தெளிவாக சொல்லி இருக்கிறார்.

    கூட்டணியை பொறுத்தவரையில் யார் வேண்டுமானாலும், யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். கருத்துக்கள் கூறலாம். தலைமை தான் முடிவு செய்யும்.

    பொறுத்திருந்து பாருங்கள்... அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய புள்ளிகள் மிக விரைவில் வந்து த.வெ.க.வில் இணைவார்கள். அதை நீங்கள் பார்க்க தான் போகின்றீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தவுடன் கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். குறிப்பாக பல்வேறு கட்சிகளில் இருக்கும் அதிருப்தி தலைவர்களிடம் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

    அ.தி.மு.க.வில் இருக்கும் அதிருப்தி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொங்கல் பண்டிகைக்கு பிறகு பெரிய அளவில் இணைப்பு விழா நடத்தி பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களை த.வெ.க.வில் சேர்ப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • பலரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • அகிலம் எங்கிலும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த தினம்.

    சென்னை:

    நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,

    மனித குலத்தில் அமைதி, கருணை, சகோதரத்துவம், நல்லிணக்கம், ஆகியவை தழைத்துச் செழிக்க நற்போதனைகளை வழங்கி, அகிலம் எங்கிலும் அன்பின் ஒளியாகத் திகழும் இயேசு கிறிஸ்து பிறந்த இந்நாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் பெருவிழா நல்வாழ்த்துகள் என கூறியுள்ளார். 



    • வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும்.
    • உறுதியாகவில்லை எனில் அவர்களின் வாக்குரிமை உறுதியாக, நம் கழகத் தோழர்கள் விரைந்து உதவிட வேண்டும்.

    தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம்.

    சூழ்ச்சிகளால் நம்மை வீழ்த்த நினைத்தவர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளால் சொல்லொணா வேதனைக்குப் பிறகு, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு என மூன்று மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை நாம் கண்டோம்.

    அதிலும் ஈரோடு மக்கள் சந்திப்பிற்கோ இந்தியாவில் எந்த அரசியல் கட்சிக்கும் விதிக்கப்படாத எண்ணிலடங்கா நிபந்தனைகள். அதிகார முகமூடியின் எண்ணங்களே நிர்பந்தங்களாகவும் நெருக்கடிகளாகவும் நம்முன் வைக்கப்பட்டன. அத்தனையையும் அநாயாசமாக எதிர்கொண்டு வெற்றிகரமாக நம் மக்களைச் சந்தித்து, அவர்களுக்காகக் குரல் கொடுத்துவிட்டு வந்தோம்.

    நம்மை முடக்க நினைத்தவர்கள், மக்கள் நம்முடன் முன்னைவிட அதிகமாக, அதீதப் பாசத்துடன் ஆணித்தரமாக அணிவகுத்து நிற்பதைப் பார்த்து விழிபிதுங்கி தங்கள் மூளைத்தறி முடங்கி முனகத் தொடங்கினர். நமக்கு எதிராகத் தலையங்கம் என்ற பெயரில் பிழையங்கம் எழுதியதும் அவர்கள்தான். நம்மால் கூட்டம் சேர்க்க இயலாது என்று எழுதிய அவர்களே கூட்டம் சேருகிறது என்றும் எழுதினர். முரசொலியாக இருக்கும் என்று நினைத்து அவர்கள் எழுதியது முரணொலியாக மாறிப் போனது. இதைப் பார்த்து, பரணில் கிடக்கும் அவர்களின் பழைய பேனா பகடி செய்து சிரிக்கிறதாம்.

    தாங்கள் தெரிந்தே இட்ட கையெழுத்தையே தெரியாமல் இட்டுவிட்டதாகத் தகிடுதத்தம் செய்த முரண்களின் முன்னேற்றக் கழகத்தினர், நம்மீது அவதூறு பூசலாம் என்ற நப்பாசையில், தங்கள் முகமூடியைத் தாங்களே கழற்றிக்கொண்டனர். ஆம். அவர்கள் கட்சியின் தலைவரான முதல்வரே பழைய அடிமை, புதிய அடிமை என்று பூடகமாகப் பேசி, யார் மீதோ கல்லெறிவதாக எண்ணிக் களிப்புறுகின்றார். பாவம் அவர்கள், தங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்புதான் நின்று பேசுகிறோம் என்பதை ஏனோ மறந்துவிட்டனர்.

    குறைந்தபட்ச செயல்திட்டம் என்றெல்லாம் மக்களைக் குழப்பி, 1999 முதல் 2003 வரை தாங்கள் அடைக்கலமாகி, முதல் அடிமையாக இருந்து, தமிழ்நாட்டில் தாமரை மலருக்குத் தரிசனம் செய்து தாங்கள் இருந்த இடத்தை மறைக்க முடியாமல், மனத்தில் இருந்ததை ஒருவித மறதியால் பேசி இருக்கலாமோ? காரணம் எதுவாயினும் கொண்டையை மறைக்க இயலாமல் குட்டு வெளிப்பட்டுவிட்டது.

    வழியெங்கும் வாஞ்சையுடன் நின்று நம் மக்கள் நம்மை வரவேற்பதைப் பார்க்கும் அவர்களுக்கு, வாக்குச்சாவடி முன்பும் இதேபோல அணிதிரண்டு வந்து நமக்காக நிற்பார்கள்; நமக்கே வாக்களிப்பார்கள் என்பதை எண்ணி எண்ணி இப்போதே குமைச்சல் அடைகின்றனர். அதிலும் குறிப்பாக இளைஞர் பெருங்கூட்டமும் பெண்கள் பெரும்படையும் நம்முடன் மனத்தளவிலும் உறுதியாக இணைந்துவிட்டனர். அதை ஆழமாக அறிந்ததால் தான் அவர்களை விவகாரமாகப் பேச வைக்கிறது.

    இனி, அவர்களின் ஏசுதலையும் ஏகடியம் பேசுதலையும் புறந்தள்ளி மக்களுடன் மக்களாக இணைந்து களமாடுவதில்தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் என்றாலே தகுதி மிக்க, தரம் மிக்க, ராணுவக் கட்டுப்பாடு மிக்க, கண்ணியம் மிக்க அரசியல் போர்ப் பெரும்படை என்பதைத் தரணிக்கு உணர்த்த வேண்டும். உணர்த்தியே ஆக வேண்டும்.

    நம் அரசியல் மற்றும் கொள்கை எதிரிகளின் நரித் தந்திரச் சூழ்ச்சிகளை ஆழமாகப் புரிந்து, உணர்ந்து மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் நாம், எப்போதும் களத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

    வாக்குரிமை உள்ளவர்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் உறுதியாகிவிட்டதா என்று பார்க்க வேண்டும். உறுதியாகவில்லை எனில் அவர்களின் வாக்குரிமை உறுதியாக, நம் கழகத் தோழர்கள் விரைந்து உதவிட வேண்டும். புதிய வாக்காளர்களில் ஒருவர்கூட விடுபடாமல் பார்த்துப் பார்த்துச் சேர்க்க வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டில் உள்ள ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியப் பொக்கிஷம். அந்த வாக்குகள் அனைத்தும் த.வெ.க.விற்கு ஒதுக்கப்படும் சின்னத்திற்கானது என்பதை உறுதிப்படுத்த, நாம் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும்.

    இச்சூழலில், நாம் ஏற்கெனவே சொன்னது போல, செயல்மொழியே நமது அரசியலுக்கான தாய்மொழி. அதை மனத்தில் கொண்டு, தொடர்ந்து களமாடுங்கள். தொய்வின்றிக் களமாடுங்கள். இப்போதே துரிதமாகக் களமாடுங்கள். விவேகம் இன்னும் விசாலமாகட்டும். வெற்றி நம் விலாசமாகட்டும்.

    வாகை சூடுவோம். வரலாறு படைப்போம்.

    • சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி.
    • எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்.

    தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,

    சமூக நீதியின் முன்னோடி,

    சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் தகர்த்தெறியப் போராடிய பகுத்தறிவுப் போராளி, எமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளில், அவரின் திருவுருவப் படத்திற்கு எமது அலுவலகத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினேன்.

    தந்தை பெரியார் அவர்கள் காட்டிய சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுக்க உறுதியேற்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×