என் மலர்
நீலகிரி
- ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.
- தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.
குன்னூர்:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பனும் இணைந்தனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தது தவறான முடிவு என அவரது ஆதரவு நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்த பாரதியார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு 3 முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.
அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கவும், அ.தி.மு.க. ஒன்றிணையவும் எத்தனையோ முறை கோரிக்கை விடுத்து பார்த்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை கண்டு கொள்ளவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு பொதுச்செயலாளர் எடப்பாடியே காரணமாக அமைந்துவிட்டார்.
பலமுறை கோரிக்கை விடுத்தும் அ.தி.மு.க.வில் சேர்க்காததால், ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.கவில் இணைந்து விட்டார். அவர் சூழ்நிலை காரணமாக தி.மு.க.வில் இணைந்து இருந்தாலும் அவர் எடுத்த இந்த முடிவு என்பது தவறான முடிவு.
ஏனென்றால் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.
தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்று விட்டதால், நாங்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளோம்.
அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டது. இணைப்புக்கான தேதியை அவர்கள் அறிவிப்பார்கள். இருப்பினும் இன்றோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களாகிய நாங்கள் இணைய உள்ளோம்.
தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மக்கள் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெரிய வரவேற்பு அளிக்கிறார்கள். அவர் சட்டசபை தேர்தலில் கட்டாயம் முதலமைச்சராக பதவியேற்றார். வருகிற தேர்தலில் விஜயை முதலமைச்சராக அரியணையில் ஏற்றுவதற்காக நாங்கள் தீவிர களப்பணியாற்ற உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ஆண்டுதோறும் கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வரும் நாரைகள், சுமார் 3-4 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்கும்.
- ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் முகாமிட்டு உள்ள இந்த நாரைகள், நகரின் அதிகாலைநேரங்களை இன்னும் அழகாக மாற்றுகின்றன.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியின் அடையாளமாக திகழும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் தற்போது வெளிநாட்டு பறவைகள் அதிக அளவில் முகாமிட்டு வருகின்றன.
இந்த காட்சிகள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு மட்டுமல்ல, உள்ளூர் மக்களின் காலை நேர ரம்மியத்துக்கும் ஒரு அபூர்வ காட்சியை வழங்குகிறது. ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் வெண்ணிற மலர்கள் போல பரவி நிற்கும் வெள்ளை நாரைகள், கண்களை ஈர்க்கும் சிவப்பு நிற கால்களுடன் உலா வருகின்றன. அந்த பகுதியில் இயற்கையாக உருவான சதுப்பு நிலங்களும், ஈர புல்வெளிகளும் அவைகளின் வாழ்வாதார முகாமாக மாறியுள்ளன.
மேலும் கூட்டமாக இரை தேடும் நாரைகள் தங்களுக்கே உரிய ஒலிகளால் ஒன்றோடு ஒன்று உரையாடும் காட்சி, பார்வையாளர்களின் மனதை பெரிதும் கவர்ந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து வரும் இந்த நாரைகள் அனைத்தும் வெள்ளை நிற இனத்தை சேர்ந்தவையே.
இமயமலை, விந்திய மலைத்தொடர் மற்றும் சத்பூரா மலைத்தொடர் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவுக்கு பயணித்து, கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வந்தடைகின்றன.
ஆண்டுதோறும் கோடை கால தொடக்கத்தில் ஊட்டிக்கு வரும் இந்த நாரைகள், சுமார் 3-4 மாதங்கள் வரை இங்கேயே தங்கியிருக்கும். இந்த காலகட்டத்தில் அவை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. பின்னர் அவை மீண்டும் தங்கள் பழைய வாழிடங்களை நோக்கி பறந்து செல்கின்றன.
ஊட்டி ரேஸ்கோர்ஸ் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 'கிக்கியூ' புல்வெளி பகுதிகளில் புழு-பூச்சிகள் மற்றும் சிறு உயிரினங்களை உணவாக்கி கொள்ளும் இந்த நாரைகள், சதுப்பு நிலங்களில் மெதுவாக சுழன்று, தரையை உற்று நோக்கி உணவுத் தேடும் காட்சி, இயற்கையின் ஒழுங்கை உணர்த்துவதாக அமைந்து உள்ளது.
"சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமா இந்த ஊட்டி சொந்தம்? நாங்களும் சுற்றுலாவாகத்தான் இங்கு வந்து தேனிலவு கொண்டாடுகிறோம்" என்று சொல்லாமல் சொல்லும் வெள்ளை நாரைகள், அதிகாலை நேரங்களை சினேகமாக்கும் இயற்கை நண்பர்களாக உள்ளன.
நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் எப்போதும் களைகட்டி இருக்கும். இந்த நிலையில் ஊட்டி ரேஸ்கோர்ஸ் புல்வெளிகளில் முகாமிட்டு உள்ள இந்த நாரைகள், நகரின் அதிகாலைநேரங்களை இன்னும் அழகாக மாற்றுகின்றன.
ஊட்டி சுற்றுலா பயணிகளின் கேமராவில் மட்டுமின்றி உள்ளூர் மக்களின் மனங்களிலும், இந்த பருவகால பறவைகளின் பரவச முகாமிடல் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன.
- வனத்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
- இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊட்டி:
ஊட்டி அருகே உள்ள சின்ன காடிமந்து பகுதியை சேர்ந்தவர் புஷ்தாள் குட்டன்(57). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாக தெரிகிறது.
அப்போது அங்கு மறைந்திருந்த புலி, புஷ்தாள் குட்டனை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வனப்பகுதிக்குள் உடலில் காயங்களுடன் கிடந்த அவரது உடலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் ஊட்டி சுற்றுவட்டார பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே புலி தாக்குதலை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சோலூர் சந்திப்பு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
- காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் விலகி, த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
- ஓ.பன்னீர்செல்வம் சில தினங்களுக்கு முன்பு சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.
ஊட்டி:
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க., விஜயின் த.வெ.க என இந்த முறை 4 முனை போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன.
இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேனி தொகுதியில் போட்டியிட்டார்.
கடந்த முறை தனியாக போட்டியிட்ட பா.ஜ.க இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் ஓ.பி.எஸ்.சையும் சேர்த்து கொள்ள முயற்சிகள் நடந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓ.பி.எஸ்.சை சேர்த்து கொள்ள தயாராக இல்லை.
இதனால் தற்போது அரசியல் களத்தில் ஓ.பி.எஸ். தனியாக நிற்கிறார். ஓ.பி.எஸ். தேர்தல் தொடர்பாக இதுவரை எந்தவொரு நிலையான முடிவையும் எடுக்காததால் அவருடன் பயணித்த மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் அவரை விட்டு விலகி மாற்றுக்கட்சிகளில் சேர்ந்து விட்டனர்.
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் விலகி, த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். ஆனால் ஓபிஎஸ் இதுவரை தெளிவான முடிவு எடுக்கவில்லை.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் பேசி வருகின்றனர்.
அத்துடன் ஓ.பன்னீர்செல்வம் சில தினங்களுக்கு முன்பு சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அந்த சந்திப்பு முடிந்து வெளியில் வந்த அவர், தி.மு.க அரசையும், முதலமைச்சரையும் பாராட்டி பேசினார். இதனால் அவர் தி.மு.க. கூட்டணிக்கு நெருங்கி வருவதாக பார்க்கப்படுகிறது.
ஓ.பி.எஸ்.சின் இந்த முடிவுக்கு அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் மாவட்ட செயலாளர் பாரதியார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பந்தலூர், கூடலூர் பகுதியை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்றால் அவருடன் நிர்வாகிகள் நாங்கள் யாரும் செல்லமாட்டோம். ஓ.பி.எஸ்., தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால் நாங்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் அணியை விட்டு வெளியேறுவோம் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக நீலகிரியை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறியதாவது:-
சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது எங்களிடம் ஒரு படிவம் வழங்கப்பட்டு, அதில் தி.மு.க.விற்கு செல்வதா? அல்லது வேறு கட்சிக்கு செல்வதா? என 2 விருப்பங்கள் கேட்கப்பட்டன.
அப்போதே நாங்கள் தி.மு.க. என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு என்று குறிப்பிட்டோம். மேலும் 88 மாவட்ட செயலாளர்களில் 11 பேர் மட்டுமே தி.மு.க.வுக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வாக வருகிற சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த நாங்கள் விஜயின் த.வெ.கவுக்கு செல்வதை தவி வேறு வழியில்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓபிஎஸ் கூறியிருந்தார், இந்த நிலையில் தை முடிந்து மாசி தொடங்கிவிட்டது. ஆனாலும் அவரால் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்காமல் குழம்பியபடியே இருப்பது அவரது ஆதரவாளர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
- குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவு.
- கடும் குளிரால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் தயக்கம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டி, பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்திலும் தொடரும் கடும் உறைபனி தாக்கத்தால், 'குட்டி காஷ்மீர்' போல் காட்சியளிக்கிறது.
ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸ் வரை சரிந்து, கடும் குளிர் நிலவுகிறது.
அதிகாலை நேரங்களில் புல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வீடுகளின் கூரைகள் முழுவதும் வெண்மையாக உறைந்த பனிப்படலத்தால் மூடப்பட்டு, சுற்றுப்புறம் முழுவதும் கண்கவர் காட்சியாக மாறியுள்ளது.
தொடர்ந்து நிலவும் கடும் குளிர் காரணமாக, பொதுமக்கள் வெளியே செல்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். குறிப்பாக முதியோர், குழந்தைகள் மற்றும் தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் விவசாயிகளும் அதிகாலையில் ஏற்படும் உறைபனி காரணமாக பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறு, பிப்ரவரி மாதம் தொடங்கிய பின்னும் குறையாத உறைபனி தாக்கம் காரணமாக, ஊட்டியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
- நீலகிரியில் ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்த அளவே உள்ளது.
- தற்போது ஊட்டியில் ரோஜா மற்றும் கொய்மலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
ஊட்டி:
உலகெங்கும் வருகிற 14-ந் தேதி காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் அதிகரித்த பின்பு இந்தியாவிலும் காதலர் தினத்தை இளசுகள் வெகு விமரிசையாக கொண்டாட தொடங்கியுள்ளனர்.
காதலர்கள் பலரும் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக மலைம மாவட்டமான நீலகிரியில் குவிந்து வருகிறார்கள். அங்குள்ள விடுதிகளில் தற்போது முன்பதிவுகளும் தொடங்கி விட்டது.
அவ்வாறு வரும் காதலர்கள் காதலர் தினத்தன்று தங்களது காதலிகளுக்கு தங்களது காதலிகளுக்கு வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம்.
அத்துடன் பல்வேறு விதமான ரோஜா மலர்கள், கொய்மலர்களையும் தங்களது காதலிகளுக்கு பரிசாக வழங்கி தங்களது காதலை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் தற்போது ஊட்டியில் ரோஜா மற்றும் கொய்மலர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
நீலகிரியில் ரோஜா மலர்கள் உற்பத்தி குறைந்த அளவே உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவு ரோஜா மலர்கள் கொண்டு வரப்பட்டு இங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேசமயம் கொய்மலர்கள் நீலகிரியிலேயே தாராளமாக கிடைக்கிறது. இதனால் அதனை வாங்கி பலரும் பரிசாக கொடுக்க தொடங்கி விட்டனர். வருகிற 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தற்போதே மலர்களுக்கான முன்பதிவு தொடங்கி விட்டது.
சாதாரணமாக ஒரு ரோஜா மலர் ரூ.5 முதல் ரூ.10 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வருகிற 14-ந் தேதி காதலர் தினத்தன்று ரூ.20 முதல் ரூ.50 வரைக்கும் விற்பனையாக வாய்ப்புள்ளது. அதேபோன்று கொய்மலர்களான லில்லியம், ஜெர்பரா, ஆந்தூரியம் உள்பட பல்வேறு கொய்மலர்களுக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் கொய்மலர் விவசாயிகளுக்கு தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இன்னும் 4 நாட்களே உள்ளதால் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் பரிசு பொருட்களுடன் காத்திருக்கும் ஏராளமான காதல் ஜோடிகளை காண முடியும்.
- புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.
- பல்வேறு தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் குன்னூர், மஞ்சூர் பகுதிகளில் உறைபனி தொடங்கியது. அதனை தொடர்ந்து ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் உறைபனி காணப்பட்டது.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக உறைபனி காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் அவலாஞ்சி, தலைகுந்தா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகமான உறைபனி காணப்பட்டது. தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான மலைப்பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இதனால் அங்கு கடும் குளிரும் நிலவியது.
இன்றும் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் உறைபனி காணப்பட்டது. உறைபனியால் ஊட்டி குதிரை பந்தய மைதானம், காந்தல், தலைகுந்தா, அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளி மைதானங்கள் வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.
இதுதவிர சாலையோரப் புல்வெளிகள், வீடுகளின் மேற்கூரைகள், வாகனங்களின் கண்ணாடிகள், தோட்டப் பயிர்கள் அனைத்தும் உறைபனியால் மூடப்பட்டு காணப்பட்டன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று 3.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், இன்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் குறைந்தபட்சமாக 5.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
கடும் உறைபனியால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் காய்கறி அறுவடை, தேயிலை தோட்டப் பணிகள், பால் சேகரிப்பு, கட்டுமான வேலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.
மேலும், உறைபனி காரணமாக சில இடங்களில் பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட் உள்ளிட்ட பயிர்களின் இலைகள் கருகி உள்ளதாகவும், தொடர்ந்து இதே நிலை நீடித்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
- மத்திய மந்திரி எல்.முருகன் உடனடியாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார்.
- கல்லூரியில் சேர்ந்து மீண்டும் டி.பார்ம் படிப்பை தொடங்கி உள்ளார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியை சேர்ந்த ஆலு குறும்பா பழங்குடி ஓவியர் கிருஷ்ணனுக்கு மத்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருது அறிவித்து பெருமைப்படுத்தியது.
இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மரணம் அடைந்தார். இதனால் அவரது மனைவி சுசீலா மேட்டுப்பாளையம் பாக்கு தோப்பில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.
கிருஷ்ணன்-சுசீலா தம்பதியின் மூத்த மகள் வாசுகி, தந்தை இறப்புக்கு பிறகு கல்வி கட்டணம் செலுத்த வழியின்றி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார். இதுகுறித்த செய்தி பத்திரிகையில் வெளியானது.
இதுகுறித்து தகவலறிந்த மத்திய மந்திரி எல்.முருகன் உடனடியாக பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் கிருஷ்ணன் குடும்பத்தினரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினார். மேலும் வாசுகி மீண்டும் கல்லூரியில் படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ளும்படி நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீருவிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து கலெக்டர் அறிவுரையின்பேரில் நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ் பத்மஸ்ரீ விருது பெற்ற ஓவியர் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து வாசுகி ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் சேர்ந்து படிப்பை தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அவர் நேற்று கல்லூரியில் சேர்ந்து மீண்டும் டி.பார்ம் படிப்பை தொடங்கி உள்ளார்.
இதுகுறித்து வாசுகியின் தாயார் சுசீலா கூறியதாவது:-
"எனது மகள் படிக்க நடவடிக்கை எடுக்க உதவிய பத்திரிகைகள், மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. எனது மகள் முழுமையாக படிக்க அனைத்து உதவிகளையும் செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் எங்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. அவர்களின் கல்விக்கான உதவி மற்றும் நாங்கள் குடியிருக்க அரசு சார்பில் கோத்தகிரியில் ஒரு வீடும் கட்டி கொடுத்தால் மிகுந்த உதவியாக இருக்கும்" என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு தவறு செய்துள்ளது.
ஊட்டி:
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான நிவேத் ஆல்வா ஊட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சி பணிகள் மேற்கொள்வது குறித்தும், வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இதற்கான அனைத்து நிர்வாகிகள், தொண்டர்களையும் சந்தித்து ஆலோசனை கேட்பதற்காக வந்துள்ளேன்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் பெயரை மாற்றி மத்திய அரசு தவறு செய்துள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த சட்டத்தை மாற்றுவது குறித்து பாராளுமன்றத்தில் எந்த ஒரு தகவலும் அளிக்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்து அதனை மாற்றியது தவறு.
வருகிற சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் எந்த கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்பதை காங்கிரஸ் கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் கேபினட் பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு 3-வது வரிசையில் இடம் ஒதுக்கீடு செய்ததன் மூலம் மத்திய அரசு எப்படி எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மற்ற தலைவர்களுக்கு மரியாதை கொடுக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. இதுபோன்று செய்வது மத்திய அரசின் தவறான செயல்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- மாலை நேரம் என்பதால் தண்டவாளத்தில் விழுந்த மரம் மற்றும் மண்சரிவை அகற்றுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டது.
குன்னூர்:
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த மலை ரெயில் அடர்ந்த வனங்களுக்கு நடுவே பயணிப்பதால் இதில் பயணிக்க உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஏராளமான சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டுவர்கள்.
கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மலை ரெயில் வந்து கொண்டிருந்தது. அதில் 191 பயணிகள் இருந்தனர்.
மலை ரெயில் கல்லாறு-ஹல்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே பல்வேறு இடங்களில் ராட்சத மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதம் அடைந்தது. மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதனால் அடர்லி ரெயில் நிலையத்தில் இருந்து 191 பயணிகளுடன் மலை ரெயில் குன்னூருக்கு புறப்பட்டு சென்றது. அங்கு சென்றதும் பயணிகள் அனைவரும் பஸ்கள் மூலமாக மேட்டுப்பாளையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மாலை நேரம் என்பதால் தண்டவாளத்தில் விழுந்த மரம் மற்றும் மண்சரிவை அகற்றுவதில் சற்று சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை ரெயில்வே ஊழியர்கள் தண்டவாள சீரமைப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதன் காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் மலை ரெயில் இன்று ஒருநாள் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
- சாலைகளே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியதால், சாலைகளில் வந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
- ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் இந்த பனி மூடிய இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகள், தலைக்குந்தா மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் அதிக அளவில் பனிப்பொழிவு மற்றும் உறைபனி காணப்பட்டது.
அதிகாலை முதலே அடர்த்தியான பனி மூட்டம் சூழ்ந்ததால், வீடுகள், தோட்டங்கள், புல்வெளிகள் அனைத்தும் வெள்ளைத் திரை போர்த்தியது போல் காட்சியளித்தன.
தலைக்குந்தா, எமரால்டு, அவலாஞ்சி உள்ளிட்ட உயரமான பகுதிகளில் உறை பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் புல்வெளிகள், தேயிலை தோட்டங்கள், வாகனங்கள் மற்றும் கூரைகளின் மேல் உறைபனி படர்ந்து அந்த பகுதியே வெள்ளை கம்பளம் போர்த்தியது போன்று காட்சியளித்தது.
கடும் பனிப்பொழிவால் காலை நேரத்தில் கடும் குளிரும் காணப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
சாலைகளே தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் நிலவியதால், சாலைகளில் வந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
பொங்கல் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள் இந்த பனி மூடிய இயற்கைக் காட்சிகளை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.
- ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
- காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊட்டி:
பொங்கல் பண்டிகையின் முக்கிய நிகழ்வான காணும் பொங்கல் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் உறவினர் இல்லங்களுக்கும், பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலா தலங்களுக்கு சென்றும் பொழுதை போக்குவது வழக்கம்.
பொங்கல் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் கடந்த 2 நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இன்று காணும் பொங்கல் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள இத்தாலியன் பூங்கா, பெரணி இல்லம், இலை பூங்கா போன்றவற்றை பார்வையிட்டனர்.
மேலும் கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய பல்வேறு வகையான பூக்களையும் கண்டு ரசித்ததோடு அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
அங்குள்ள புல்வெளி மைதானத்தில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.
இதேபோன்று ஊட்டி தொட்டபெட்டா சிகரத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அங்குள்ள தொலைநோக்கி இல்லத்தில் உள்ள நவீன தொலைநோக்கிகள் மூலம் ஊட்டி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்.
ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, பைக்கார படகு இல்லம், பைக்கார நீர்வீழ்ச்சி, ஊட்டி படகு இல்லம், கோத்தகிரி நேரு பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்து காணும் பொங்கலை தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். காணும் பொங்கலையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கோவை மாநகரில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவுக்கு இன்று காலை முதலே ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். அவர்கள் அங்குள்ள 23 வகையான தோட்டங்கள், செயற்கை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களையும் கண்டு ரசித்தனர். அத்துடன் அதன்முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
செம்மொழி பூங்காவில் உள்ள குழந்தைகள் பூங்காவில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் உற்சாகமாக விளையாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
பொள்ளாச்சி ஆழியார் அணை, ஆழியார் அணை பூங்காவிலும் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
கோவை மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் அணையின் இயற்கை அழகை கண்டு ரசித்ததோடு, அதன் அருகே உள்ள பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாக விளையாடி விடுமுறையை கழித்தனர்.
இதேபோன்று கோவை குற்றாலம், குரங்கு நீர்வீழ்ச்சி, வால்பாறை, டாப்சிலிப் யானைகள் முகாம், கோவை மாநகரில் உள்ள வ.உ.சி. உயிரியல் பூங்கா, உக்கடம் பெரிய குளம், சிறுவர் பூங்கா, வாலாங்குளம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து பொங்கல் விடுமுறையை கொண்டாடினர்.
காணும் பொங்கலையொட்டி கோவை மாநகரில் போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புறநகரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






