search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Annamalai"

    • கடலூர் மாநகராட்சி ஆணையர் அணு விசாரணை நடத்தினார்.
    • விசாரணையில் ஒப்பந்ததாரரின் பதில் திருப்தி அளிக்காததால் ஒப்பந்தம் ரத்து.

    கடலூர் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளி ஈடுபடுத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரரை நேரில் அழைத்து கடலூர் மாநகராட்சி ஆணையர் அணு விசாரணை நடத்தினார். விசாரணையில் ஒப்பந்ததாரரின் பதில் திருப்தி அளிக்காததால் அவரது ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டார்.

    பாதாள சாக்கடை விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கடந்த 2018 - 2022 வரையிலான ஐந்து ஆண்டுகளில், நாட்டிலேயே அதிகமாக, 52 கழிவு நீர் அகற்றும் தொழிலாளர்கள் பலியான அவலம் தமிழகத்தில்தான் ஏற்பட்டது.

    ஆனால், அதன் பின்னரும், தமிழகத்தில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் தீராத அவலம் தொடர்வது வேதனைக்குரியது.

    இன்றைய தினம், கடலூரில் பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை அடைப்பு காரணமாக, கழிவு நீரை அகற்ற, தொழிலாளர்கள், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் காணொளிகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று, கடந்த ஆண்டு மாண்புமிகு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது. மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும், கையால் துப்புரவு செய்பவர்களின் மறுவாழ்வுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டங்கள், மாற்று சுயதொழில் திட்டங்கள், இயந்திரமயமாகச் சுத்தம் செய்வதற்கான கருவிகள், வாகனங்கள் வாங்க மூலதன மானியம் ரூ.5,00,000 உதவித்தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி உட்பட, பல்வேறு திட்டங்களையும், நிதி உதவிகளையும் அளித்து வருகிறது.

    இவை தவிர, இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவு சுற்றுச்சூழல் அமைப்புக்கான தேசிய நடவடிக்கை (NAMASTE) திட்டத்திற்கு, வரும் 2025-2026 ஆண்டுவரை ரூ. 349.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கையால் துப்புரவு செய்பவர்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளைப் பாதுகாப்பின்றி சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும், பாதுகாப்பான, இயந்திரங்களைப் பயன்படுத்தி சுத்தம் செய்வதை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

    ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளைக் கடந்தும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் திட்டங்கள் எதையும் செயல்படுத்தாமல் புறக்கணித்திருப்பதோடு, மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கப்படாமல், பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்ய வைத்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. மனித உரிமைகளுக்கே எதிரான திமுக அரசின் இந்த செயல்பாடு, உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் விரோதமானது.

    தமிழகத்தில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் போக்கினை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்றும், இந்த நிகழ்வுக்குக் காரணமான அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துப்புரவுத் தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் அனைத்துத் திட்டங்களும், அவர்களுக்கு முழுமையாகச் சென்றடையும்படி, திமுக அரசு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால், அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம்.
    • கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் இருந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பவதாது,

    தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனராக, முதலமைச்சர் முக ஸ்டாலின்நெருக்கமானவரான, ஹாசன் முகமது ஜின்னா நியமிக்கப்பட்டிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பதவியில் இருந்த அவரை, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக நியமித்தனர். தற்போது மூன்று ஆண்டுகள் கடந்ததும், அவரை துறை இயக்குனராக நியமித்திருக்கிறார்கள்.

    ஹாசன் முகமது ஜின்னாவை இந்தப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆறு மாதங்களாக தமிழக அரசின் குற்ற வழக்குகள் துறை இயக்குனர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் இருந்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

    தமிழகத்தில் எத்தனையோ திறமை வாய்ந்த மூத்த வழக்கறிஞர்கள், குற்ற வழக்குகள் துறை இணை/துணை இயக்குனர்கள் எனத் தகுதி வாய்ந்தவர்கள் இருக்கும்போது, ஒட்டு மொத்த குற்ற வழக்குகள் துறையின் தலைவர் பொறுப்புக்கு, தங்களுக்கு நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்துக்காக அரசுப் பதவி வழங்கியிருப்பது, முற்றிலும் திமுகவின் அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

    தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதும், பல குற்றங்களில் திமுகவினருக்கு நேரடித் தொடர்பு இருப்பதும் வெளிப்படையாகத் தெரிய வரும் நிலையில், மாநிலத்தின் ஒட்டு மொத்த குற்ற வழக்குகளைக் கையாளும் முக்கியப் பொறுப்பில், மூன்று ஆண்டுகள் முன்பு வரை திமுக இளைஞரணித் துணைச் செயலாளராக இருந்த ஒருவரை நியமித்திருப்பது, திமுகவின் நோக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

    முதலமைச்சர் ஸ்டாலின், தனக்கு நெருக்கமானவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டுமென்றால், அவரது கட்சியில் முக்கியப் பதவிகள் கொடுக்கலாம். அதை விடுத்து, பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில், இது போன்ற அதிகார துஷ்பிரயோகம் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

    • பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.
    • 6 ஆண்டுகளும் காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 2024-25ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்றைய தினம் தாக்கல் செய்துள்ளது. ஏழை எளிய மக்கள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரும் பயனடையும்படி, வெகு சிறப்பானதாக அமைந்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற பெயர் இடம்பெறவில்லை என்று காரணம் கூறி, அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்கும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கவுள்ளதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லியிருப்பது நகைப்புக்குரியது.

    நிதிநிலை அறிக்கை உரையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கான நலத்திட்டங்களைத் தவிர, பிற மாநிலங்களுக்கு எந்த நலத்திட்டங்களும் கிடைக்கப்பெறாது என்ற தோற்றத்தை ஏற்படுத்த, முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சிக்கிறார்.

    திமுக, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கடந்த 2004 முதல் 2014 வரை பத்து ஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது, தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில், 6 ஆண்டுகள், தமிழகத்தின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 ஆண்டுகளும், காங்கிரஸ் திமுக கூட்டணியிலான மத்திய அரசு, தமிழகத்துக்கு எந்தத் திட்டங்களும் வழங்கவில்லை என்று கூறுவாரா?

    பிரதமர் மோடி அரசு, கடந்த 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகளில், நிதிநிலை அறிக்கையின் மூலமாகத் தமிழகத்திற்கு வழங்கிய நலத்திட்டங்களில் பத்தில் ஒரு பங்கு கூட, திமுக காங்கிரஸ் கட்சியின் கூட்டணி, ஆட்சியிலிருந்தபோது அறிவிக்கப்படவில்லை என்பது, முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்குத் தெரியுமா?

    மாநிலங்களின் நலனுக்காக, மத்திய அரசுடன் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு, தமிழகத்தின் தேவைகளை எடுத்துக் கூறி, நலத்திட்டங்களைப் பெறுவதை விட்டுவிட்டு, கூட்டத்தைப் புறக்கணிக்கிறோம் என்று நாடகமாடி, யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார் முதலமைச்சர்?

    தொகுதியின் தேவைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசத் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள், கடந்த 5 ஆண்டுகளில், பாராளுமன்றத்தில் தங்கள் தொகுதி சார்ந்த பிரச்சனைகளைக் குறித்துப் பேசவே இல்லை என்பதுதான் உண்மை. தற்போது முதலமைச்சர்கள் கூட்டத்தையும் புறக்கணிக்க முடிவு செய்தால், பாதிக்கப்படுவது தமிழக மக்களே.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு நாள் விளம்பரத்துக்காக இது போன்ற வீண் நாடகங்களை அரங்கேற்றுவதை நிறுத்திவிட்டு, தமிழகத்தின் நலனை முன்னிறுத்தி ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • மத்திய அரசின் பட்ஜெட்டை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி பதிவிட்டுள்ளார்.
    • ஜூலை 31 பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல.

    2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

    இந்நிலையில் மத்திய அரசின் பட்ஜெட்டை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டி பதிவிட்டுள்ளார்.

    ராஜ்பவனின் பதிவில், "வறியநிலை மக்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நிதிநிலை அறிக்கையை வழங்கிய பிரதமர் மோடி அவர்களுக்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த முன்னோக்கு நிதிநிலை அறிக்கை, வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளிப்பதுடன், மேம்பாடு, தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முன்முயற்சிகளை கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அணுகுமுறையை ஊக்குவிப்பதற்காகவும் இந்த பட்ஜெட்டை குறிப்பாகப் பாராட்டுகிறோம்.

    2047-ம் ஆண்டுக்குள் சமமான, அனைவரையும் உள்ளடக்கிய, வலிமையான மற்றும் நிலையான தன்னிறைவு பாரதத்தை வளர்த்து, 2030-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறுவதற்கு இந்த நிதிநிலை அறிக்கை வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது" என்று பதிவிடப்பட்டுள்ளது.

    கவர்னர் மாளிகையின் இந்த பதிவை மதுரை எம்பி சு. வெங்கடேசன் விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரின் எக்ஸ் பதிவில், "அண்ணாமலையை முந்த போட்டி போடும் ஆர். என்.ரவி. தமிழ், தமிழ்நாடு என்ற வார்த்தையே இல்லாத பட்ஜெட்டை "முன்னோக்கு நிதிநிலை அறிக்கை" என்கிறார் தமிழ்நாட்டின் ஆளுநர். ஜூலை 31 பணி ஓய்வு பெறுபவர் எங்கேயோ துண்டைப் போட்டு வைக்கிறார் போல" என்று பதிவிட்டுள்ளார்.

    • பத்திரிகையாளர், புரட்சியாளர், சன்னியாசி, சமூகச் சீர்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டவர்.
    • மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆகியோரின் நெருங்கிய நண்பர்.

    சென்னை:

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில்,

    தமது பேச்சு மற்றும் எழுத்துக்கள் மூலம், சுதந்திரப் போராட்டத்தில் விடுதலைக் கனலை மூட்டிய அமரர் சுப்பிரமணிய சிவா நினைவு தினம் இன்று.

    பத்திரிகையாளர், புரட்சியாளர், சன்னியாசி, சமூகச் சீர்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டவர். ஊர் ஊராக நடந்து சென்று சுதந்திர தாகத்தை ஏற்படுத்தியவர். மகாகவி பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, ஆகியோரின் நெருங்கிய நண்பர்.

    தங்களுடைய உயிரைத் துச்சமென எண்ணிப் போராடிய தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு பாஜக சார்பாக புகழஞ்சலி செலுத்தி வணங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    • கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தோல்வி என்று சொல்லக்கூடாது.
    • எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன்.

    கோவை குஜராத் சமாஜத்தில் இன்று தன்னார்வலர்கள் கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில் தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியில் தேர்தலுக்கு பணியாற்றியபோது பா.ஜ.க. களப்பணியாளர்கள் 28 நாட்கள் மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் மேற்கொண்டனர்.

    மக்கள் அருகில் சென்று அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ள முடிந்தது. இதில் பல சம்பவங்களை அனைவரும் சந்தித்தீர்கள். பலமுறை பலர் போலீஸ் நிலையங்களில் அமர வைக்கப்பட்டனர்.

    அதுபோன்ற நேரங்களில் எல்லாம் எனக்கு தகவல்கள் பலரிடம் இருந்து கொந்தளிப்பாக வந்து கொண்டிருந்தன. கோவை பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. தோல்வி என்று சொல்லக்கூடாது.

    நமது வெற்றி சிறிது தள்ளிப்போய் உள்ளது என்று தான் கூற வேண்டும். கோவை தொகுதியில் 33 சதவீத வாக்குகளை பெற்றுள்ளோம். 100 பூத்களில் 1 அல்லது 2-ம் இடத்துக்கு வந்துள்ளோம்.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 68 ஆயிரம் பூத்களில் 8 ஆயிரம் பூத்களில் முதலிடம் பெற்றுள்ளோம். எனவே பா.ஜ.க. வெற்றி சிறிது தள்ளிப்போய் உள்ளது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சைனா வேம்பு என்ற மரம் உள்ளது. இதற்கு 90 நாட்கள் வரை தண்ணீர் ஊற்ற வேண்டும். பல முறை தண்ணீர் ஊற்றினாலும் செடி வளருவது போல் இருக்காது. ஆனால் 90 நாட்கள் கடந்த பிறகு தான் அதன் வேர் நன்கு ஊன்றிருப்பதை காண முடியும். அதேபோல பா.ஜ.க. களப்பணியாளர்களின் செயல்பாடுகள் ஆழமாக வேரூன்ற தண்ணீர் ஊற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

    கோவை பாராளுமன்ற தேர்தல் நமக்கு ஒரு ஆன்மீக பயணம். கூட்டணி இல்லாமல், பணம் இல்லாமல் பலவகையான சவால்களை சந்தித்து இந்த நிலையை அடைந்துள்ளோம். இது நமக்கு தோல்வி அல்ல.

    பா.ஜ.க.வினர் பிரதமர் மோடியை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும். எத்தனையோ சவால்களை எதிர்கொண்டு மூன்றாவது முறையாக அவர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளார்.

    பா.ஜ.க.வினர் பணத்துக்காகவோ, பதவிக்காகவோ எதையும் எதிர்நோக்குபவர்கள் அல்ல. நாட்டு முன்னேற்றத்தை மட்டுமே கொண்டு உழைப்பவர்கள். பா.ஜ.க. தலைவர்கள் பலர் சொத்துக்களை இழந்துள்ளனர்.

    நாம் சில நேரம் கால்களை பின்னால் வைக்க நேரிடும். சில சமயம் காலை முன்னால் வைக்க வேண்டும். எப்போது முன்னால் வைக்க வேண்டும், எப்போது பின்னால் வைக்க வேண்டும் என்பது தெரிய வேண்டும்.

    அரசியலில் சகிப்பு தன்மை, பொறுமை, சமரசம் மூன்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். எப்போதும் எதிர்க்கட்சியினர் மட்டுமல்ல, நமது கட்சியில் இருப்பவர்கள் கூட குறைகூறிக் கொண்டு தான் இருப்பார்கள்.

    அனைத்தும் சகித்துக் கொள்ளும் தன்மை வேண்டும். எப்போதும் 5-வது கியரிலும் செல்லக்கூடாது. முதல் கியரிலேயே சென்று கொண்டும் இருக்கக் கூடாது.

    அரசியலில் இருக்க வேண்டுமா என்ற எண்ணம் மனதில் தோன்றியது உண்டு.

    எதற்கும் ரியாக்ஷன் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன். தனித்தன்மை இழக்காமல் இருக்க வேணடும் என்றால் கட்சியில் இணையாமல் செயல்பட வேண்டும்.

    தனி மனிதனாக சமுதாயத்திற்கு வேலை செய்து கிடைக்கும் மகிழ்ச்சி, எதற்கும் ஈடு ஆகாது.

    என் வாழ்க்கையில் கடந்த 3 ஆண்டுகள் மிகவும் கடினமான காலம். 3 ஆண்டுகள் கஷ்டப்பட்டு தான் தலைவர் பதவியில் அமர்ந்து உள்ளேன். எல்லாவற்றையும் வெளிப்படையாக பேச வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணாமலை சர்வதேச அரசியல் படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார்.
    • படிப்பு முடிந்து திரும்புவதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சர்வதேச அரசியல் தொடர்பாக படிப்பதற்காக லண்டன் செல்ல உள்ளார். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28-ந் தேதி அவர் லண்டன் செல்கிறார்.

    அவர் படிப்பு முடிந்து திரும்புவதற்கு 6 மாதங்களுக்கு மேல் ஆகும். இந்த கால கட்டத்தில் கட்சி பணியை பார்ப்பது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழக பா.ஜ.க. அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் டெல்லி செல்கிறார். அங்கு தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த ஆலோசனையின் போது அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக யாரையாவது நியமிக்கலாமா? அல்லது தற்காலிகமாக செயல் தலைவராக யாரையாவது நியமிக்கலாமா என்றும் விவாதித்ததாக கூறப்படுகிறது.

    புதிய தலைவருக்கான பரிசீலனையில் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபடுவதாக கூறப்படுகிறது. இது பற்றி அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, தற்காலிகமாக தலைவரை நியமிப்பது சாத்தியமில்லை.

    ஏற்கனவே மத்திய மந்திரி எல். முருகன் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகி மத்திய மந்திரி ஆனபோது 8 மாதம் தலைவர் இல்லாமல் தான் இருந்தது. அதேபோல் இப்போதும் அப்படியே விட்டு விட அதிக வாய்ப்பு இருக்கிறது.

    ஒரு வேளை புதிய தலைவரை நியமிக்க முடிவு செய்தால் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகிய மூவரில் ஒருவரை நியமிக்கலாம் என்றார்.

    • தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகளால் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடந்து வருகிறது.
    • மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் யு.பி.எஸ்.சி.யிலும் ஊழல்கள் வெளியாகி அதன் தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உச்சநீதிமன்ற ஆணையின்படி நாடு முழுவதும் நடந்த நீட் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் அம்பலமாகி உள்ளன. குறிப்பாக தமிழ்நாட்டில் எழுதியவர்களின் புள்ளி விபரங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் நடந்த தேர்வில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதி அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி நீட் முடிவு வெளியான அறிவிப்பில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 920 பேர் தமிழ்நாட்டில் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று நகரங்கள், மையங்கள் வாரியாக வெளியான மதிப்பெண் பட்டியலில் 744 பேர் கூடுதலாக எழுதி இருப்பதாக இருந்த தகவல் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மோசடிகளால் மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நடந்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கும் நடந்துவருகிறது. அதேபோல மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் யு.பி.எஸ்.சி.யிலும் ஊழல்கள் வெளியாகி அதன் தலைவர் ராஜினாமா செய்திருக்கிறார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப் பணி இடங்களை நிரப்புவதற்கான ஒன்றிய பணியாளர் தேர்வாணையத்திலும் பல மோசடிகள் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி ஆட்சியில் நீட் தேர்வினால் மருத்துவத் துறை சீரழிந்து வருகிறது. யு.பி.எஸ்.சி. தேர்வினால் குடிமைப்பணி தேர்வுகளும் ஊழலுக்கு இரையாகி உள்ளன.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தியாகப் பெருநாள்.
    • அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் தியாகப் பெருநாளான, முஹர்ரம் திருநாளை அனுசரிக்கும் இஸ்லாமியச் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தமிழக பா.ஜ.க. சார்பாக நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்தப் புனித நாளில், சமத்துவமும், சகோதரத்துவமும் பெருகவும், அனைவர் வாழ்விலும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.
    • GR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே.

    பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது,

    மத்திய அரசின் Revamped Distribution Sector Scheme (RDSS) திட்டத்தில் நிதி பெறவே மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அதே பொய்யை மீண்டும் சொல்கிறது திமுக அரசு.

    இது தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து திமுகவின் திசைதிருப்பும் முயற்சியைத் தமிழக மக்களிடம் எடுத்துரைத்தோம்.

    கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக என்ன செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்.

    * பொருத்தப்படவேண்டிய ஸ்மார்ட் மீட்டர், DT மீட்டர், Feeder மீட்டர்களின் எண்ணிக்கை: 3,06,82,343 (மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய எண்ணிக்கை)

    * பொருத்தப்பட்ட மீட்டர்களின் எண்ணிக்கை: 1,30,861 (4%)

    * தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் தனியாரிடம் செய்த மின் கொள்முதல் மதிப்பு.

    2021-22: 39,365 கோடி ரூபாய்

    2022-23: 50,990 கோடி ரூபாய்

    2023-24: 65,000 கோடி ரூபாய்

    * கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த தனியார் மின் கொள்முதல் மதிப்பு: 1,55,355 கோடி ரூபாய்.

    * RDSS திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளவேண்டிய எந்த பணிகளையும் திமுக செய்யவில்லை, மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.

    * கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ஒரே மாற்றம், நலிவடைந்த BGR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே.

    இவ்வாறு அவர் கூறியுள்ளர்.

    • திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
    • மத்திய அமைச்சர் பதவிகளே பெரிது என்று மௌனமாக இருந்து விட்டு, தற்போது நாடகம் ஆடுவது ஏன்?

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    காங்கிரஸ் ஆட்சியில், ஜனநாயகத்துக்கு விரோதமாகக் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதியை, அரசியலமைப்புச் சட்டம் படுகொலை தினமாக ஆண்டு தோறும் அனுசரிக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்துள்ளது.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நமது நாட்டில், காங்கிரஸ் கட்சி சர்வாதிகாரமாகக் கொண்டு வந்த நெருக்கடி நிலை, பொதுமக்களுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்களுக்கும், எத்தனை துயரங்களையும், இடையூறுகளையும் ஏற்படுத்தியது என்பதை, இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

    தங்கள் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் மனதைக் குளிர்விக்க, ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெருக்கடிக் காலத்தில் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசு தயாரா என்று கேட்டுள்ளார்.

    மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போதெல்லாம், திமுகவுக்கு இந்த கோரிக்கைகள் நினைவுக்கு வராதது ஆச்சரியம். நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட பிறகு, அடுத்த வந்த 1980ஆம் ஆண்டு தேர்தலில், நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று இந்திரா காந்தி அவர்களுக்கும், அதன் பின் 2004ஆம் ஆண்டு, இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவின் திருமகளே வெல்க என்று சோனியா காந்தி அவர்களுக்கும் சிவப்புக் கம்பளம் விரித்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியிலிருந்து, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது, கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற அவர் மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக மக்களுக்குச் சொல்வாரா?

    கடந்த 2006ஆம் ஆண்டு, திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. மத்தியில் அன்று காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஆட்சியில், அதிகாரமிக்கக் கட்சியாக, சர்வ வல்லமையுடன் சுற்றிவந்த திமுக, இந்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை? திமுக நினைத்திருந்தால், காங்கிரஸ் கட்சியை வலியுறுத்தியிருக்க முடியாதா? மத்திய அமைச்சர் பதவிகளே பெரிது என்று மௌனமாக இருந்து விட்டு, தற்போது நாடகம் ஆடுவது ஏன்?

    கடந்த பத்து ஆண்டு காலமாக, திமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் இல்லை. இனி வரும் ஆண்டுகளிலும் இடம் கிடைக்கப் போவதில்லை. மத்திய அமைச்சர் பதவிகளிலிருந்து பல ஆயிரம் கோடி ஊழல் செய்தே பழகிய திமுகவுக்கு, தற்போது பதவி இல்லாமல் என்ன செய்வது என்றே தெரியாமல், பொதுமக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

    திமுக அரசு, தமிழகத்தில் தங்கள் முதல் கடமையான சட்டம் ஒழுங்கைச் சரிசெய்ய முதலில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும். நீட் தேர்வு மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கும் கிடைத்து வரும் மருத்துவக் கல்வியை, தங்கள் கட்சியினர் வருமானத்துக்காக மட்டுமே பயன்படுத்த முயற்சி செய்வதற்காக, மாநில உரிமை என்ற போலி நாடகத்தை அரங்கேற்ற வேண்டாம் என்றும் தமிழக பா.ஜ.க. சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அண்ணாமலை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் அவரது புகைப்படத்தை ஆட்டின் கழுத்தில் கட்டி மர்மநபர்கள் பலியிட்டனர்.
    • ஆடு தலையில் அண்ணாமலை படத்தை மாட்டி வெட்டிய தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் கோவை தொகுதியில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். ஆனால் அவர் 4,50,132 வாக்குகளை பெற்று 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியை தழுவினார்.

    அண்ணாமலை தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் அவரது புகைப்படத்தை ஆட்டின் கழுத்தில் கட்டி மர்மநபர்கள் பலியிட்டுள்ளனர். இச்சம்பவம் எங்கு? எப்போது? நடைபெற்றது என்பது தெரியவில்லை.

    அண்ணாமலைக்கு எதிராகவும் கோஷமிட்டுள்ளனர். இந்த பயங்கர செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க. சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இந்நிலையில், அண்ணாமலை தோல்வியைக் கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரியில் ஆடு வெட்டப்பட்டதாக பாஜக பிரமுகர் மோகன் தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆடு தலையில் அண்ணாமலை படத்தை மாட்டி வெட்டிய தி.மு.கவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "அண்ணாமலை படத்துடன் சாலையில் ஆடு வெட்டியதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

    ×