என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் ஆகும்.
- ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் ஜனவரி 3 ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- 2025 டிசம்பர் 25-ந்தேதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் அழியும் என கூறினார்.
- தீர்க்கத்தரிசி என்று கூறிய எபோ நபோ திடீரென தனது பேச்சை மாற்றிக்கொண்டார்.
கானா நாட்டைச் சேர்ந்த 30 வயதான எபோ நோவா என்ற நபர் தன்னைத்தானே தீர்க்கத்தரிசி என்று கூறிக்கொள்கிறார். அவர் சாக்கு உடை அணிந்து கொண்டு மக்களுக்காக உண்ணாவிரதம், பிரார்த்தனை மேற்கொள்வதாக கூறிக்கொண்டு வரவிருக்கும் பேரழிவு குறித்து எச்சரிப்பதாக இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், 2025 டிசம்பர் 25-ந்தேதி முதல் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் உலகம் அழியப்போகிறது. உலகம் அழியும்போது மக்களைக் காப்பாற்ற கடவுளின் உத்தரவின் பேரில், பைபிளில் வருவது போல 8 பெரிய கப்பல்களை (பேழைகளை) கட்டி வருவதாக கூறினார்.
இவரது பேச்சைக் கேட்ட மக்கள் அதை நம்பி, பேழைகளைக் கட்டுவதற்கு பலர் தங்கள் உடைமைகளை விற்று பணத்தை அவருக்குக் கொடுத்துள்ளனர். மேலும் அந்த பேழையில் இடம் பிடிக்க அவரை தேடிச் செல்லவும் தொடங்கினர்.
இந்த நிலையில் தான், தன்னை தீர்க்கத்தரிசி என்று கூறிய எபோ நபோ திடீரென தனது பேச்சை மாற்றிக்கொண்டார். அதாவது, அவர் கடவுளிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ததால், அதனை ஏற்றுக்கொண்ட கடவுள் உலக அழிவை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.
இந்நிலையில், டிசம்பர் 25-ம் தேதி உலகம் அழியப்போகிறது" என்று கூறி மக்களிடையே பீதியை ஏற்படுத்திய எபோ நோவா என்பவரை கானா நாட்டு காவல்துறையினர் கைது செய்தனர்.
எபோ நோவா மழுப்பலாக வீடியோ வெளியிட்ட நிலையில், அவரை பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக்கூறி காவல்துறை கைது செய்தது.
- ஓவியத்தின் தொடக்க விலை ரூ.8.5 லட்சமாக இருந்தது.
- மேடையிலேயே இசைக்கு ஏற்ப நடனமாடியபடி இயேசுவின் உருவப்படத்தை வரைந்தார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டொனால்ட் டிரம்ப்பிற்கு சொந்தமான 'மார்-ஏ-லாகோ' (Mar-a-Lago) இல்லத்தில் ஒரு தொண்டு நிறுவன ஏல நிகழ்ச்சி நடைபெற்றது.
வெனெசா ஹோரபியூனா என்ற பிரபல கிறிஸ்தவ ஆன்மீக ஓவியர், மேடையிலேயே இசைக்கு ஏற்ப நடனமாடியபடி இயேசுவின் உருவப்படத்தை வரைந்தார்.
இந்நிலையில், புத்தாண்டு கொண்டாட்ட விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் ஏலத்தில் இயேசு ஓவியத்தை சுமார் ரூ.23 கோடிக்கு விற்றார்.
டிரம்ப் அந்த ஓவியத்தில் தனது கையெழுத்தைப் போட்ட பிறகு, அதன் மதிப்பு உயர்ந்து இறுதியில் $2.75 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதன் இந்திய மதிப்பு சுமார் ₹23 கோடி ஆகும்.
வெனெசா ஹோரபியூனா என்ற ஓவியர் வரைந்த இந்த ஓவியத்தின் தொடக்க விலை ரூ.8.5 லட்சமாக இருந்தது.
இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த தொகை முழுவதையும் டிரம்ப் St. Jude's குழந்தைகள் மருத்துவமனை மற்றும் ஒரு உள்ளூர் ஷெரிப் அலுவலகத்தின் தொண்டு பணிகளுக்காக வழங்கப்பட்டது.
- மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
- உத்தவ் காம்ப்ளே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தல் வருகிற 15-ந்தேதி நடக்கிறது. மும்பை, புனே உள்பட 29 மாநகராட்சி களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. புனே மாநகராட்சியின் 34-வது வார்டுக்கு சிவசேனா சார்பில் உத்தவ் காம்ப்ளே, மச்சிந்திரா தவலே ஆகியோர் போட்டியிட்டனர்.
அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவிக்க ஏ, பி விண்ணப்பங்களை வழங்கும். இந்த இருவருக்கும் அந்த வார்டில் போட்டியிடுவதற்கான விண்ணப்ப கடிதத்தை சிவசேனா கட்சி வழங்கி இருந்தது. இதனால் வேட்பு மனு தாக்கலின்போது வார்டு அலுவலகத்தில் இருவருக்கும் இடைேய கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் உத்தவ் காம்ப்ளே ஆத்திரமடைந்து மச்சிந்திரா தவலேயின் கையில் இருந்த கட்சி வழங்கிய அங்கீகார விண்ணப்ப கடிதத்தை பிடுங்கி கிழித்து வாயில் போட்டு விழுங்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிவசேனா வேட்பாளர் உத்தவ் காம்ப்ளே மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, தேர்தல் பணியின் போது அரசு ஊழியரை அவரது கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக உத்தவ் காம்ப்ளே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.
- இந்த மோசடிக் கும்பல் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்று தந்துள்ளது.
- கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது
கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை என எந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்தாலும், அவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் ஜாமின் பெற்றுத்தரும் மோசடி கும்பலை உத்தரப்பிரதேச காவல்துறை கைது செய்துள்ளது.
போலி நில வருவாய் ஆவணங்கள், போலியான ஆதார் அட்டைகள் மற்றும் ஜோடிக்கப்பட்ட அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் கிடைக்க உதவும் வகையில், தொழில்முறை ஜாமின் தாரர்களாக இந்தக்குழு செயல்பட்டு வந்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடிக் கும்பல் 23 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஜாமின் பெற்றுதந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதற்காக ஒரு வழக்கிற்கு சுமார் 20,000 ரூபாய் வரை வசூலித்துள்ளது. இந்த வழக்கில், கொலை வழக்கில் தண்டனை பெற்று ஜாமினில் வெளிவந்த குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பேசிய எஸ்பி சுபோத் கவுதம், பிரவீன் தீட்சித் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஒரு கொலைக் குற்றவாளி. ஆனால் தற்போது உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமினில் வெளியே உள்ளார். இதில் நீதிமன்ற வளாகத்தில் விண்ணப்பங்களை எழுதித் தரும் வேலை பார்த்து வந்த பிங்கு என்கிற பிரேம் சங்கர் தொழில்முறை குற்றவாளிகளுக்கு ஜாமின் தரக்கூடிய நபர்களை ஏற்பாடு செய்வதிலும் மற்றும் போலி ஆவணங்களைத் தயாரிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
ராம் கிஷோர் என்பவர் 13 வழக்குகளில் போலி நில வருவாய் ஆவணங்களை ஏற்பாடு செய்ததாகவும், அவரது கூட்டாளியான விஸ்வநாத் பாண்டே மற்றும் பிரவீன் தீட்சித் ஆகியோர் தலா இரண்டு வழக்குகளில் ஜாமின் கையெழுத்து போட்டதாகவும், மற்ற கூட்டாளிகளான தர்மேந்திரா இரண்டு வழக்குகளிலும், பிங்கு ஒரு வழக்கிலும், அமித் மூன்று வழக்குகளிலும் இவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
- பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
- இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார். மொழிப் போராட்ட பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது.
இந்நிலையில், புத்தாண்டையொட்டி வடபழனி முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
- இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி நேரம் தாமதமானது.
- விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை அதிகாரிகள் கவனித்தனர்.
கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில், மது அருந்திய நிலையில் பணிக்கு வந்ததாக ஏர் இந்தியா விமானி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இதனால் டெல்லி வர வேண்டிய ஏர் இந்தியா விமானம் பல மணி நேரம் தாமதமானது.
வான்கூவரில் இருந்து டெல்லிக்கு புறப்பட வேண்டிய ஏர் இந்தியா விமானத்தின் விமானி, விமானம் புறப்படுவதற்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனையில் மது அருந்தியிருந்தது தெரியவந்தது.
விமானியின் உடலில் மதுவின் வாசனை வீசுவதை கவனித்த பாதுகாப்பு அதிகாரிகள், அவரை உடனடியாகக் கைது செய்தனர். கனடா சட்டப்படி விமானிகள் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபடுவது கடுமையான குற்றமாகும்.
விமானி கைது செய்யப்பட்டதால், பயணிகள் அனைவரும் விமான நிலையத்திலேயே காத்திருக்க நேரிட்டது. மாற்று விமானி ஏற்பாடு செய்யப்படும் வரை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய அந்த விமானி மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி தொடங்குகிறது.
- இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றனர். இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்து விட்டனர். மற்ற நாடுகள் இன்னும் அறிவிக்கபடாமல் உள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அனைத்து அணிகளும் ஜனவரி 31-ம் தேதி வரை தங்கள் அணியில் மாற்றங்களைச் செய்யலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.
- இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது.
- அதர்வாவுடன் ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் 4-வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், படம் "இதயம் முரளி". படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
இப்படத்தில் அதர்வாவுடன் தமன் எஸ், ப்ரீத்தி முகுந்தன், கயாடு லோஹர் மற்றும் நிஹாரிகா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடும், ரொமான்ஸ் திரைப்படமாக இதயம் முரளி உருவாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகர் முரளியின் மறக்கமுடியாத பாத்திரம் இதயம் முரளி, அவரது மகன் அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இதயம் முரளி படம் இந்தாண்டு காதலர் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 'இதயம் முரளி' படக்குழு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
- பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காகப் பதிலடி கொடுத்தனர்.
- 5.56 மி.மீ INSAS ரகத் துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி, 25 தோட்டாக்களும் மற்றும் 15 பயன்படுத்தப்பட்ட (வெற்று) தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர்.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ரூ. 50,000 வெகுமதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் தடைசெய்யப்பட்ட சிபிஐ-மாவோயிஸ்ட் (CPI-Maoist) அமைப்பின் வட-பீகார் மத்திய மண்டலக் குழுவின் செயலாளர் தயானந்த் மலக்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடைய கூட்டாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.
"14-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த மலக்கர் என்ற சோட்டு என்ற நக்சலைட், பெகுசராய் மாவட்டத்தின் தேக்ரா பகுதியில் புதன்கிழமை மாலை சிறப்பு அதிரடிப் படை மற்றும் மாவட்ட காவல்துறையினர் அடங்கிய கூட்டுக்குழுவுடன் நடந்த மோதலில் (Encounter) உயிரிழந்தார்.
பாதுகாப்பு படையினர் தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மலக்கர் தனது கூட்டாளிகளுடன் ஒளிந்திருந்த இடத்திற்கு சென்றனர். காவல்துறையினரைக் கண்டதும், மலக்கர் அங்கிருந்து தப்பிக்க முயன்று அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். பாதுகாப்புப் படையினர் தற்காப்பிற்காகப் பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் அந்த நக்சலைட் காயமடைந்தார் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
மலக்கர் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த மோதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை" என பீகார் காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திலிருந்து ஒரு 5.56 மி.மீ INSAS ரகத் துப்பாக்கி, ஒரு நாட்டுத் துப்பாக்கி, 25 தோட்டாக்களும் மற்றும் 15 பயன்படுத்தப்பட்ட (வெற்று) தோட்டாக்களையும் போலீசார் மீட்டனர். முன்னதாக வட பீகாரில் பல்வேறு நக்சலைட் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மலக்கரை பற்றி தகவல் வழங்குபவர்களுக்கு ரூ.50,000 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.
- காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.
- எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்.
நெல்லை வண்ணார்பேட்டை கொக்கிரகுளத்தில் உள்ள தனியார் மஹாலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பூத் கமிட்டி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி கட்டமைப்பை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கணக்கை தொடங்குகிற விதத்தில் எங்கள் பணிகள் தொடங்கி இருக்கிறது. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் சட்டசபையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் குரல் எழுப்புவார்கள்.
தாமிரபரணியை காக்க அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும். ஆணயத்தை அமைக்க வேண்டும். பொருநை அருங்காட்சியகம் நெல்லைக்கு பெருமை. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திறந்து வைத்தார். அவருக்கு நன்றி, பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல காயிதே மில்லத் பெயரில் நூலக பணிகளை விரைந்து நடத்தி அதனை திறக்க வேண்டும்.
எங்களுடைய கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம். தமிழகத்தில் முழுவதுமாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். நடிகர் விஜய்யின் தாக்கம் தேர்தல் முடிந்த பிறகு தான் தெரியும். அரசியல் பொதுவெளியில் செய்யக்கூடிய விஷயம். அதை வீட்டுக்குள் இருந்து கொண்டு செய்ய முடியாது. நடிகர் விஜய்க்கு கட்டுப்பாடுகள் விதிப்பது சரிதான்.
பா.ஜ.கவால் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் வர முடியவில்லை என்ற காரணம் என்னவென்றால் மக்கள் அனைத்தும் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். மாநில பொதுக்குழுவைக் கூட்டி தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள பாரில் நிகழ்ந்தது.
- தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள கிரான்ஸ்-மொன்டானா என்ற புகழ்பெற்ற ரிசார்ட் நகரில் உள்ள ஒரு பாரில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
நள்ளிரவு 1:30 மணியளவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உச்சத்தில் இருந்தபோது அந்த பாரில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புப் படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 100 கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் சுவிஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் என கூறப்படுகிறது.
வெடிப்புக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியவில்லை. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் காரணமாக இருக்கலாம் எனச் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.






