என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • தேர்தல் என்றாலே திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ.
    • கமலாலயத்தில் எழுதி தரும் அறிக்கையை, அதிமுக லெட்டர்பேடில் எழுதி தருகிறார் பழனிசாமி.

    திருப்பூர் பல்லடத்தில் திமுக மகளிரணி சார்பில்  நடைபெற்ற 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 

    "தேர்தல் என்றாலே திமுகவின் தேர்தல் அறிக்கைதான் ஹீரோ. அந்த ஹீரோவையே தயாரிப்பவர்தான் கனிமொழி. நாடாளுமன்ற தேர்தலில் அவரின் இந்தப் பணியால் வெற்றிப் பெற்றோம். வரும் சட்டமன்ற தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெறுவோம். பெண்களின் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்.

    பகுத்தறிவை கையில் ஏந்தி பெரியார், அண்ணா, கருணாநிதி கட்டியெழுப்பிய தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் தொடர்ந்து செல்கிறது. நீதிக்கட்சியின் முதல் கூட்டத்திலேயே கலந்துகொண்ட பெண் அலமேலு மங்கை தாயாளு அம்மாள். அதுபோல திராவிட இயக்கம், திமுக தொடங்கியபோதும் பல பெண்கள் கலந்துகொண்டனர். அண்ணா தலைமையில் அமைந்த அமைச்சரவையிலும் பெண்கள் பங்கேற்றனர். அண்ணா மகளிர் மன்றத்தை தொடங்கினார். அதை மகளிர் அணியாக விரிவாக்கி, வலுவான கட்டமைப்பை உருவாக்கினார் கருணாநிதி.

    பெண்கள் படிக்கக்கூடாது, அடுப்படியைத் தாண்டி செல்லக்கூடாது என அடிமைப்படுத்தப்பட்டனர். அதை எல்லாம் உடைத்தெறிந்தது திராவிட இயக்கம்தான். தேவதாசியை முறையை ஒழித்தோம். திராவிட இயக்கமும், நம்முடைய தலைவர்களும் செய்த புரட்சியின் விளைவுதான் பெண் விடுதலை, மகளிர் முன்னேற்றம். இன்றைக்கு எல்லா கட்சிகளிலும் பெண்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளதற்கு நாம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான் காரணம்.

    உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு சட்டத்தை உருவாக்கியவர் கருணாநிதி. தமிழ்நாட்டில் பெண் மேயர்கள்தான் அதிகம் உள்ளனர். உள்ளாட்சி அமைப்புபோல சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதுதான் திமுகவின் வெற்றி. தேவையே இல்லாத நிபந்தனையோடு பெண்களுக்கான 33 விழுக்காடு மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றி உள்ளது. அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை சொல்ல முடியாது. இது ஆபரேஷன் Success ஆனால் Patient dead என்பதை போல் உள்ளது.

    1.30 கோடி மகளிருக்கு, மாதந்தோறும் மகளிர் உரிமைத் தொகை தருகிறோம். உரிமைத் தொகை பல பெண்களுக்கு சுயமரியாதையை, தன்னம்பிக்கையை அளித்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகையை ஒவ்வொரு குடும்பத்திலும் ரூ.28 ஆயிரம் வரை கொடுத்திருக்கிறோம். இதுபோன்ற மற்றொரு திட்டம்தான் மகளிர் விடியல் திட்டம். முதலமைச்சராக நான் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயண திட்டம். நான் முதலமைச்சரான அடுத்த நாள் பேருந்தில் ஏறியதும் டிக்கெட் வாங்க பணம் கொடுத்த பெண்களிடம் "மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துவிட்டார். இனிமேல் நீங்கள் பணம் கொடுக்க தேவையில்லை" என சொல்லப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்முதலாக பெண்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினோம்.

    அதன்பின் புதுமைப் பெண்திட்டம். பெண்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். இதில் பல லட்சம் பெண்கள் பயன் பெறுகின்றனர். திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி. பெண்கள் முன்னேறினால்தான் ஒட்டுமொத்த சமூகமும் முன்னேறும் என இவ்வளவும் செய்கிறோம். 88% பெண்கள் பயனடைந்த 100 நாள் வேலைத் திட்டத்தை பாஜக அரசு சிதைத்துள்ளது. அதற்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். கமலாலயத்தில் எழுதி தரும் அறிக்கையை, அதிமுக லெட்டர்பேடில் எழுதி தருகிறார் பழனிசாமி. 

    திராவிட மாடல் ஆட்சிபோல பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்த ஆட்சி இருக்கவே முடியாது. திராவிட மாடல் 2.0 ஆட்சியில், பெண்களுக்கான திட்டங்களை விரிவுபடுத்தப் போகிறோம்." என தெரிவித்தார். 

    • கர்நாடகாவில் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றப்பட்டன.
    • இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரள மாநில எம்.பி. பெங்களூரு சென்று பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டார்.

    கர்நாடக மாநில அரசு பெங்களூருவில் ஆக்கிரமிப்புக்காரர்களால் கட்டப்பட்ட குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்தியது. குடிசை அமைத்தவர்கள் அனைவரும் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள். கர்நாடக மாநில நடவடிக்கைக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்திருந்தார். கர்நாடக மாநில அரசு அதற்கு பதில் அளித்திருந்தது.

    இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை எம்.பி. ஏ.ஏ. ரஹிம் பெங்களூரு சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்திக்கும்போது, ஆங்கிலத்தில் உரையாடினார். அப்போது, ஆங்கில இலக்கணம் தவறாக உச்சரித்ததாக கேலி கிண்டல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில், எம்.பி.யை கிண்டல் செய்ததற்கு, கேரள மாநில கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி பதில் கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக சிவன்குட்டி கூறுகையில் "பேட்டியின்போது எம்.பி. பயன்படுத்திய ஆங்கில இலக்கணத்தை விமர்சனம் செய்தவர்கள் ஒரு விசயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பிரதிநிதியின் திறமை, அலங்கார வார்த்தைகளால் மதிப்பிடுவதில்லை. அவரின் செயலால் மதிப்பிடப்படும். ரஹிம் தலையிடுவது பொறுப்பான அரசியல் தலையீடு ஆகும்" என்றார்.

    • புளோரிடாவில் டிரம்ப்- ஜெலன்ஸ்கி சந்திப்பு நடைபெற்றது.
    • ரஷியா போர் தொடுக்காத வகையில் 50 வருட உத்தரவாதத்தை ஜெலன்ஸ்கி கோரியுள்ளார்.

    ரஷியா- உக்ரைன் இடையிலான 4 வருட போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவர் 20 அம்ச திட்டத்தை பரிந்துரை செய்தார். இது தொடர்பாக உக்ரைனுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, புளோரிடாவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து பேசினார்.

    அப்போது, அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, உக்ரைனுக்கு 15 வருட பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க முன்வந்துள்ளதாக ஜெலன்ஸ்சி தெரிவித்துள்ளார். மேலும், ரஷியா, உக்ரைன் மீது வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பை முயற்சியை மேற்கொள்ளாதவாறு, 50 வருடத்திற்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், யதார்த்தம், பாதுகாப்பு உத்தரவாதம் இன்றி இந்த போர் முடிவுக்கு வராது என்றார்.

    இந்த சந்திப்பின்போது, உக்ரைன்- ரஷியா இடையே அமைதி ஒப்பந்தம் முன்பைவிட நெருக்கமாகியுள்ளது என டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், ஒரு மாதத்திற்கு மேலான அமெரிக்கா தலைமையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை முறிந்து போகக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

    முக்கிய பிரச்சினையில் ஒருமித்த கருத்து ஏற்பட இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    • திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று 1.30 கோடி மகளிர் சொல்வார்கள்.
    • கோவை பெண் வழக்கில் 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் திமுக மகளிரணி சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, 

    பெண்களுக்கான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்லும் மாநாடுதான் இந்த மாநாடு. நீதி, சமத்துவம், சகோதரத்துவத்தை காக்கக்கூடிய ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். தமிழ்நாட்டை அல்ல நாட்டை காக்கக்கூடிய பொறுப்பு முதலமைச்சர் கையில் உள்ளது.

    திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றியது என்று 1.30 கோடி மகளிர் சொல்வார்கள். இந்தியாவிலேயே வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். அதற்கான காரணம் நமக்கான கல்வி இங்கு வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கி உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 56% பெண்களால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 48%. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் இது அதிகம். 

    ஆனால் எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத மாநிலம் தமிழ்நாடு என கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாட்சி கொடூரம் நம் அனைவருக்கும் தெரியும். அந்த பெண்களுக்கு நீதி கிடைத்தது நம் ஆட்சியில்.  உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியின் ஜாமினை எதிர்த்து போராடும் பெண் நடுத்தெருவிற்கு இழுத்து வரப்படுகிறார். இதுதான் பாஜக பெண்களுக்கு வழங்கும் பாதுகாப்பு. ஆனால் கோவை பெண் வழக்கில் 30 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுதான் திமுகவிற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கும் வித்தியாசம்.

    நாம் உண்மையில் பெண்களின் எதிர்காலம், பாதுகாப்பு குறித்து கவலைப்படக் கூடியவர்கள். நூறுநாள் வேலைத் திட்டத்திற்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக மட்டும்தான். இது தமிழ்நாட்டை மட்டுமல்ல, நாடு முழுவதையும் பாதிக்கக்கூடியது. நாட்டில் மதக்கலவரத்தை, வெறுப்பை, காழ்ப்புணர்ச்சியை உருவாக்கி அரசியல் செய்துவிடலாம் என துடித்துக் கொண்டிருக்கக்கூடிய பாஜகவிற்கு சம்மட்டி அடியாக இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னால் அணி திரள்வோம், அணி திரள்வோம், அணி திரள்வோம்'" எனப் பேசினார்.

    • இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு சொத்துரிமை உண்டு எனும் சட்டத்தை கொண்டுவந்தவர் கருணாநிதி.
    • தற்போது கொண்டுவரப்பட்ட அனைத்தும் திராவிட மாடல் பார்ட் ஒன் மட்டும்தான்.

    திருப்பூர் பல்லடத்தில் திமுக மகளிரணி சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, திமுக அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

    மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

    'இந்த மகளிர் மாநாடு கூட்டத்தைப் பார்த்தால் அடுத்த 10 நாட்களுக்கு சங்கி கூட்டமும், அடிமைக் கூட்டமும் தூங்கமாட்டார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள மகளிரின் குரலாக முதலமைச்சரின் குரல் உள்ளது. மொழி உரிமை, மாநில உரிமை, பெண் உரிமை என வந்தால் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட தமிழ்நாடு முதலமைச்சர் பெயர்தான் நியாபகம் வரும்.1924ஆம் ஆண்டு போராட்டத்தின்போது பெரியார் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த போராட்டத்தை கையிலெடுத்து பெரியம்மை மணியம்மை முடித்துவைத்தார். இப்படி தொடக்கம் முதலே இந்த இயக்கத்திற்காக மகளிர் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துள்ளனர். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் ஏராளமான திட்டங்களை முதலமைச்சர் வழங்கிவருகிறார்.

    சுயமரியாதை திருமணங்கள் செல்லும் எனும் சட்டத்தை கொண்டுவந்தார் அண்ணா. கருணாநிதிதான் முதல்முறையாக காவல்துறையில் பெண்களுக்கு பணி வழங்கினார். அரசு தொடக்கப்பள்ளிகளில் பெண்கள் மட்டும்தான் ஆசிரியராக இருக்கவேண்டும் எனும் திட்டத்தை கொண்டுவந்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கு சொத்துரிமை உண்டு எனும் சட்டத்தை கொண்டுவந்தவர் கருணாநிதி. 


     'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டதும் கருணாநிதி ஆட்சியில்தான். உள்ளாட்சியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்தது கருணாநிதி ஆட்சியில். அதை 50 சதவிதமாக உயர்த்தியது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில். ஸ்டாலின் முதலில் போட்ட கையெழுத்து மகளிருக்கான விடியல் பயணத் திட்டம். இந்த நான்கரை வருடத்தில் 860 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். அதுபோல காலை உணவுத்திட்டம். 22 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகின்றனர். பெண்களுக்கு மகளிர் உதவித்திட்டம் மூலம் மாதம் ரூ.1000. இதுபோன்று மகளிருக்கான திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்த்து பார்த்து செய்துவருகிறார். இவை அனைத்தும் திராவிட மாடல் பார்ட் ஒன் மட்டும்தான். 2.0வில் மேலும் பல திட்டங்களை முதலமைச்சர் கொடுப்பார்.

    ஆனால் இந்த வளர்ச்சி பிடிக்காத மத்திய அரசு பல்வேறு வகையில் தொல்லைகளை கொடுக்கின்றனர். கல்வி, மொழி என ஒவ்வொரு மாநில உரிமைகளையும் பறித்துக்கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் நூறுநாள் வேலை திட்டத்தை சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். அதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின்தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பாசிஸ்டுகளில் பாட்சா எப்போதும் தமிழ்நாட்டில் எடுபடாது. அவர்கள் பழைய அடிமைகள், புதிய அடிமைகள் என எத்தனை பேரை கொண்டுவந்தாலும், தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான். 2026 தேர்தல் மீண்டும் அடிமைகளையும், பாசிஸ்டுகளையும் விரட்டி அடிக்கும் தேர்தல். 7வது முறை மீண்டும் கழகம் ஆட்சி அமைக்க, முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் பொறுப்பேற்க நீங்கள் உழைக்க வேண்டும்' என தெரிவித்தார். 

    • உன்னாவ் பாலியல் வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியது.
    • உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும், பாதிக்கப்பட்ட பெண் உள்பட உறவினர்கள் காரில் சென்றபோது லாரி மோதி 2 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் குல்தீப்சிங் செங்காருக்கு டெல்லி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இதற்காக சிறப்பு மனுவை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் என முறையிடப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பெண், உச்சநீதிமன்றத்தை நாடுவோம். எங்களுக்கு அங்கு நீதி கிடைக்கும் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில், சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, உன்னாவ் தொகுதி முன்னாள் பாஜக எம்எல்ஏ செங்காரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை பாதிக்கப்பட்ட பெண் வரவேற்றுள்ளார். மேலும், குற்றவாளியான முன்னாள் எம்.எல்.ஏ. செங்காருக்கு மரண தண்டனை கிடைக்கும் வரை ஓயமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

    உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது:-

    இந்த முடிவால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். உச்சநீதிமன்றத்தில் இருந்து நீதியை பெற்றுள்ளேன். தொடக்கத்தில் இருந்தேன நீதிக்காக நான் எனது குரலை உயர்த்தி வந்தேன். எந்த நீதிமன்றத்தின் மீதும் நான் குற்றச்சாட்டு வைக்கவில்லை. நான் அனைத்து நீதிமன்றங்களின் மீது நாம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால், உச்சநீதிமன்றம் எனக்கு நீதி வழங்கியுள்ளது. தொடர்ந்து அவ்வாறு செய்யும்.

    செங்காருக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன். நான் தொடர்ந்து போராடுவேன். அப்போதுதான் எனக்கும் என் குடும்பத்திற்கும் நீதி கிடைக்கும். இன்றும் எங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன.

    இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

    • பா.ஜ.க. அரசு மேலும் 5 ஆண்டுகள் ஆட்சி புரிய அருள் புரியுங்கள்.
    • ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா இன்று அசாமில் 5 ஆயிரம் பேர் இருக்கும் வகையிலான மிகப்பெரிய ஆடிட்டோரியத்தை திறந்து வைத்தார்.

    அப்போது அமித் ஷா பேசியதாவது:-

    அடுத்த வருடம் மார்ச்- ஏப்ரல் நடைபெறும் தேர்தலில், ஊடுருவலை அனுமிக்காத, அசாம் வளர்ச்சிக்கான பணிக்கான அரசை தேர்ந்தெடுங்கள். அசாமில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசின் கீழ் பெரும் முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன. பாஜக அரசு மேலும் 5 ஆண்டுகள் ஆட்சி புரிய அருள் புரியுங்கள். ஒவ்வொரு ஊடுருவல்காரர்களும் அடையாளம் காணப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    வாக்கு வங்கிக்காக, இன்று அசாம் அடையாளத்திற்கு மிரட்டலாக இருக்கும் ஊடுருவலை காங்கிரஸ் ஊக்குவித்தது. மாநிலத்தில் கலாச்சாரம், பொருளாதர மறுமலர்ச்சிக்காக பாஜக தலைமையிலான அரசு தற்போது பணியாற்றி வருகிறது.

    இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

    • நக்சல், பி.எஃப்,ஐ, சிமி உறுப்பினர்கள் போன்ற பயங்கரவாதிகளை சகோதரர்கள் என அழைக்கின்றனர்.
    • அப்சல் குரு, யாகூப் மேமன் போன்ற உண்மையான பயங்கரவாதிகளில் சமாதான தூதர்களையும் காண்கின்றனர்.

    ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக-வின் அமைப்பு வலிமையை திக் விஜய் சிங் பாராட்டியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மாணிக்கம் தாகூர் எம்.பி., பாஜக வெறுப்பால் கட்டமைக்கப்பட்ட அமைப்பு. அது வெறுப்பை பரப்புகிறது எனக் கூறியதுடன் தடை செய்யப்பட்ட அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாக ஷேசாத் பூனாவாலா, மாணிக்கம் தாகூர் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ஷேசாத் பூனாவாலா கூறியிருப்பதாவது:-

    அவர்கள் தேசியவாதிகளில் பயங்கரவாதிகளையும், அப்சல் குரு, யாகூப் மேமன் போன்ற உண்மையான பயங்கரவாதிகளில் சமாதான தூதர்களையும் காண்கின்றனர். காங்கிரஸ் தேசியவாதிகளை இழிவுப்படுத்துகிறது. நக்சல், பி.எஃப்,ஐ, சிமி உறுப்பினர்கள் போன்ற பயங்கரவாதிகளை சகோதரர்கள் என அழைக்கின்றனர். அவர்கள் இதை மட்டுமே செய்கின்றனர்.

    ஆர்எஸ்எஸ் 100 ஆண்டுகளாக நாட்டை கட்டமைப்பதற்கான தனிநபர் குணநலன்களை உருவாக்குவதில் பங்களித்துள்ளது. ஆனால், காங்கிரஸ் அவதூறு மற்றும் மறைமுக குற்றச்சாட்டு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

    ஆர்எஸ்எஸ் பயங்கரவாத அமைப்பு என்பதால், நேரு மற்றும் அவரது அரசு ஆர்எஸ்எஸ்-ஐ குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்ததா? என்பதை மாணிக்கம் தாகூர் மற்றும் காங்கிரஸ் சொல்ல வேண்டும்.

    முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்றது ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைமையகத்திற்கு சென்றதா என்பதையும் காங்கிரஸ் கூற வேண்டும். மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் ஜெய் பிரகாஷ் நாராயண் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ்.-ஐ புகழ்ந்தபோது ஒரு பயங்கரவாத அமைப்பைப் பாராட்டினார்களா என்பது கூற வேண்டும்.

    இவ்வாறு ஷேசாத் பூனாவாலா குறிப்பிட்டுள்ளார்.

    • அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 3 ஆண்டு காலம் மசோதா நிலுவையில் இருந்தநிலையில் தற்போது திருப்பி அனுப்பியுள்ளார்

    சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினார்.

    சென்னை பல்கலை கழகத்தின் துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில், அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாமீது விவாதங்கள் நடத்தப்பட்டு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பினார். 

    இந்நிலையில் சுமார் 3 ஆண்டு காலம் மசோதா நிலுவையில் இருந்தநிலையில் தற்போது திருப்பி அனுப்பியுள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. 

    • தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
    • ஆனால், இது குறித்த எந்த கவலையும் இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    அரசு பள்ளிகளில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேருக்கும் உடனடியாக காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் சென்னையில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டமும், அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் மாற்றுத்திறனாளி தற்காலிக பணியாளர்கள் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தி சென்னையில் குடும்பத்துடன் தொடர்போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். அரசு பணியில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் எளிய மக்களை போராடும் சூழலுக்கு திமுக அரசு தள்ளியிருப்பது கண்டிக்கத்தக்கது.

    அரசுப் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியம், கணினி, தையல், உடற்கல்வி உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2012-ம் ஆண்டில் ரூ.5 ஆயிரம் ஊதியத்தில் அமர்த்தப்பட்ட அவர்களுக்கு, இன்றுவரை பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. கடந்த 13 ஆண்டுகளில் அவர்களுக்கு ரூ.7,500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. பணி நிலைப்பு என்ற நியாயமான கோரிக்கையைக்கூட ஏற்க மறுத்து திமுக அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

    தமிழக அரசுத் துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால், அவர்களுக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்கப் பட வேண்டும் என்று கடந்த 2008&ஆம் ஆண்டு அக்டோபர் 16&ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 151-ஐயும், மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலை வழங்க சிறப்பு ஆள் தேர்வுகளை நடத்தலாம் என்று 2023&ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 20-ஐயும் செல்லாததாக்கும் வகையில் கடந்த அக்டோபர் 30&ஆம் தேதி 24 என்ற எண் கொண்ட அரசாணையை திமுக அரசு பிறப்பித்திருக்கிறது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகம் ஆகும்.

    அரசாணை எண் 24-ஐ ரத்து செய்து விட்டு, முந்தைய அரசாணைகளின் அடிப்படையில் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளி பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. ஆனால், அதைக் கூட நிறைவேற்றுவதற்கு திமுக அரசு மறுத்து வருகிறது.

    2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், 181-ஆம் வாக்குறுதியாக திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரும் பணி நிலைப்பு செய்யப்படுவர் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், சொல்வதைச் செய்வதாகக் கூறிக் கொள்ளும் திமுக ஆட்சிக்கு வந்து 55 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இன்று வரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி போராடினால், அடக்குமுறையைத் தான் பரிசாக அளிக்கிறது திமுக அரசு.

    சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து நான்காம் நாளாக போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் இன்றும் கைது, அரசு ஊழியர்கள் போராட்டம், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் என தமிழ்நாட்டில் எங்கு திரும்பினாலும் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இது குறித்த எந்த கவலையும் இல்லாமல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    பகுதிநேர சிறப்பாசிரியர்கள், மாற்றுத்திறனாளி பணியாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு தொடர்ந்து துரோகம் செய்து வரும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் மக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்; திமுகவை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றுவார்கள்.

    • 17 வருடத்திற்குப் பிறகு வங்கதேசம் திரும்பியுள்ளார்.
    • இவரது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க தேர்தல் ஆணையம் சம்மதம் தெரிவித்துள்ளது.

    வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டது. முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 12-ந்தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து 17 வருடமாக வெளிநாட்டில் (இங்கிலாந்து) தங்கியிருந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகன் தாரிக் ரகுமான் கடந்த 25-ந்தேதி தனது மனைவி, மகளுடன் நாடு திரும்பினார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது தாயாரை சென்று பார்த்தார். பின்னர், தேர்தலுக்கான வேலையில் இறங்கினார். முதற்கட்டாக தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க பதிவு செய்தார்.

    இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். டாக்கா 17 தொகுதியில் தாரிக் ரகுமான் போட்டியிடுகிறார். ரகுமான் பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    • நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் என லலித் மோடி வீடியோ வெளியீடு.
    • இருவரையும் இந்தியா கொண்டு வந்தே தீருவோம் என இந்திய வெளியுறவுத்துறை பதில் அளித்திருந்தது.

    விஜய் மல்லையாவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட லலித் மோடி, நாங்கள் இருவரும் இந்தியாவின் மிகப்பெரிய தப்பி ஓடியவர்கள் என வீடியோ வெளியிட்டிருந்தார்.

    பொருளாதார குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக இந்திய அரசால் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய நிலையில் இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டிருந்தார் லலித் மோடி. இதற்கு இணைய தளவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இந்திய அரசு அவர்களை நாட்டிற்கு அழைத்து வர முடியாதது குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.

    இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இருவரையும் இந்தியா கொண்டு வர அரசு உறுதிப் பூண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில் "இந்தியாவில் இருந்து தப்பி ஓடியவர்கள், இந்திய சட்டத்தால் தேடப்படுபவர்கள், இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவார்கள் என்பதில் நாங்கள் உறுதிப்பூண்டுள்ளோம்.

    குறிப்பாக இந்த இருவரையும் இந்தியா கொண்டு வர, நாங்கள் பல்வேறு அரசுகளுடன் பேசி வருகிறோம். அதற்கான செயல்முறை நடைபெற்று கொண்டிருக்கிறது. பல்வேறு வழக்குகளில், ஏராளமான வழக்கறிஞர்கள் சட்டப்பூர்வமாக ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும், நாங்கள் அவர்கள் இந்தியா கொண்டு வர உறுதிப்பூண்டுள்ளோம். ஆகவே, இந்திய நீதிமன்றங்கள் முன் விசாரணையை எதிர்கொள்வார்கள்" எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என லலித் மோடி தெரிவித்துள்ளார்.

    "யாருடைய உணர்வையும் புண்படுத்தியிருந்தார், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக நான் அதிக மரியாதை கொடுக்கும் இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய அறிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது, வெளியான செய்தி போன்று ஒருபோதும் எனக்கு நோக்கம் கிடையாது. ஆழ்ந்த மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ×