என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "West Bengal"

    • உங்களைப் போன்ற திறமையற்ற ஆளுநர், பாஜகவின் ஊழியர், தொடரும் வரை, மேற்கு வங்கத்தில் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை.
    • ஆளுநரிடம் ராஜ்பவனில் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.

    மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் அண்மையில் ஆதரித்து பேசியிருந்தார்.

    இது முறைகேடுகளை நீக்கி, தேர்தல் முறையில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், பீகார் தேர்தல்கள் SIR-க்கு பரந்த அளவிலான மக்கள் அங்கீகாரத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து ஆளுநர் ஆனந்தா போஸை விமர்சித்த ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பாராளுமன்ற எம்.பி கல்யாண் பானர்ஜி, "முதலில், ஆளுநரிடம் ராஜ்பவனில் பாஜக குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். அவர் குற்றவாளிகளை அங்கேயே வைத்திருக்கிறார்.

    அவர்களுக்கு துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வழங்குகிறார். திரிணாமுல் தொண்டர்களை தாக்கச் சொல்கிறார். முதலில் இதை அவர் நிறுத்தட்டும். உங்களைப் போன்ற திறமையற்ற ஆளுநர், பாஜகவின் ஊழியர், தொடரும் வரை, மேற்கு வங்கத்தில் எந்த நல்லதும் நடக்கப்போவதில்லை" என்று கூறினார்.

    ராஜ்பவனில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் இருப்பதாக கூறும் எம்.பி மாநில காவல்துறை மீது நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துகிறாரா, கல்யாண் பானர்ஜி, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்கு ராஜ்பவன் திறந்திருக்கும். அனைவரும் வந்து பார்க்க வரவேற்கப்படுகிறார்கள் என்று ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஆளுநர் மாளிகையில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் இருப்பதாக கல்யாண் பேனர்ஜி கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுநர் மாளிகையான ராஜபவன் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    • யூசுப் பதான் மேற்குவங்க மாநிலம் மால்டாவில் உள்ள பழமையான ஆதீனா மசூதிக்கு சென்றார்.
    • கி.பி 1373-1375 காலகட்டத்தில் இந்த மசூதி கட்டப்பட்டது.

    முன்னாள் கிரிக்கெட் வீரரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான யூசுப் பதான் மேற்குவங்க மாநிலம் மால்டாவில் உள்ள பழமையான ஆதீனா மசூதிக்கு சென்றார்.

    இது தொடர்பான புகைப்படங்களை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அந்த பதிவில், "மேற்கு வங்காளத்தின் மால்டாவில் உள்ள ஆதீனா மசூதி, 14 ஆம் நூற்றாண்டில் இலியாஸ் ஷாஹி வம்சத்தின் இரண்டாவது ஆட்சியாளரான சுல்தான் சிக்கந்தர் ஷாவால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க மசூதியாகும். கி.பி 1373-1375 இல் கட்டப்பட்ட இந்த மசூதி அந்த காலத்தில் இந்திய துணைக் கண்டத்தின் மிகப்பெரிய மசூதியாக இருந்தது. இது இப்பகுதியின் கட்டிடக்கலை மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.

    யூசுப் பதானின் இந்த பதிவை பகிர்ந்த மேற்குவங்க பாஜக, "இது ஆதீனா மசூதி அல்ல ஆதிநாத் கோவில்" என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு, ஆதீனா மசூதிக்குள் நுழைந்த பூசாரிகள் இந்து சடங்குகளை நடத்தினர். பிருந்தாவனத்தில் உள்ள விஸ்வவித்யா அறக்கட்டளையின் தலைவரான ஹிரன்மோய் கோஸ்வாமி, இந்து கோவிலின் மீது மசூதி கட்டப்பட்டதாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து கோஸ்வாமி மீது இந்திய தொல்லியல் துறை வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

    • நான்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஒருவரை ஏற்கனவே கைது செய்தனர்.
    • என் சகோதரன் மிகப் பெரிய தவறு செய்துள்ளான்.

    மேற்குவங்க மாநிலம் துர்காபூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒடிசாவை சேர்ந்த 23 வயது பெண் எம்பிபிஎஸ் பயின்று வந்தார்.

    கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே செல்ல முற்படும்போது வழிமறித்த கும்பல் ஒன்று மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள காட்டுகப்பகுதியில் மாணவியை இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது.

    மாணவியின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நான்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஒருவரை ஏற்கனவே கைது செய்தனர்.

    தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சஃபீக் என்பவரைத் தேடி வந்தனர்.

    இந்நிலையில் சஃபீக்கின் மூத்த சகோதரி ரோசீனா, தனது சகோதரன் துர்காபூரில் உள்ள அன்டால் வாண்டேன் பகுதியில் பதுங்கியுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். அந்தத் தகவலின் பேரில் போலீஸார் சஃபீக்கை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

    ஊடகங்களிடம் பேசிய ரோசீனா, "என் சகோதரன் மிகப் பெரிய தவறு செய்துள்ளான். அதனால் அவனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போலீஸுக்குத் தகவல் கொடுத்தேன்" என்று தெரிவித்தார்.

    கைது செய்யப்பட்ட ஐந்து குற்றவாளிகளையும் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர்.
    • இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் உள்ள பர்தமான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை 4 மற்றும் 5வது நடைமேடைகளில் ஒரே நேரத்தில் ரெயில்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    ரெயில்களில் ஏறவும் இறங்கவும் பயணிகள் முண்டியடித்து முயன்றதால் பலர் கீழே விழுந்து மிதிபட்டு காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உட்பட 8 பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு ரெயில்வே மருத்துவர்கள் முதலுதவி அளித்த பின்னர் சிகிச்சைக்காக பர்தாமன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்

    இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பண்டிகை கால கூட்டம் காரணமாக ரெயில் நிலையில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    • ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
    • கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டது.

    துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது ஆங்காங்கே ஏற்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியாகி பரவிய வண்ணம் உள்ளன.

    அந்த வகையில் கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையையொட்டி பூஜை பந்தல் அமைப்பது வாடிக்கை. அவ்வாறு கொல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்ட பூஜை பந்தல் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட ஏர் இந்திய விமான விபத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

    260 பேரின் உயிர்களை காவு வாங்கிய அந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அடுக்குமாடி கட்டிடத்தை மோதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அனைவரும் மறக்க வேண்டிய இந்த கொடூர நிகழ்வை நினைவுப்படுத்தியது ஏன்? என்ற பதிவுகளுடன் இது தொடா்பான வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

    • சிலிகுரி - மிரிக் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
    • விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேற்குவங்கம் மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விபத்தால் சிலிகுரி - மிரிக் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலம் இடிந்த விபத்தில் பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. 

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது.
    • 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக 12 பேர் பலியானார்கள். ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில், அக்டோபர் 1-ந் தேதி முதல் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு துரிதப்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தல் செய்தியை அனுப்பி இருக்கிறார்.

    அனைத்துத் துறையும் உயர்நிலை எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் நிலைமையை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு, மக்களிடம் இருந்து ஆலோசனைகளும் பெறப்பட்டு வருகிறது.

    • மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கின. பல வீடுகள், குடியிருப்பு வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.
    • இதனால் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அங்கு மீட்புப் பணிகள் நடந்துவருகிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல பகுதிகள் முழங்கால் அளவு நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நள்ளிரவுக்கு பிறகு தொடங்கிய மழை காரணமாக சாலைகள் நீரில் மூழ்கியதால், பல வீடுகள் மற்றும் குடியிருப்பு வளாகங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அங்கு மீட்புப் பணிகள் நடந்துவருகிறது. இதற்கிடையே மேற்கு வங்க மாநிலத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வங்காள விரிகுடாவின் வடகிழக்குப் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்றும், தெற்கு வங்காள மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட கனமழை முதல் மிக கனமழை வரை பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொல்கத்தாவில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளன.

    பயணிகள் தங்கள் பயணங்களை அதற்கேற்ப திட்டமிட வேண்டும். விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், பயணிகள் தங்கள் விமான நிலையை விமான நிறுவனத்தின் செயலி அல்லது வலைதளம் மூலம் தவறாமல் சரிபார்க்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இந்நிலையில், கனமழை காரணமாக நாளை மற்றும் நாளை மறுதினம் என இரு நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    • இந்த சம்பவம் ரெயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.
    • இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் உள்ள பங்குரா ரெயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் ஏற முயன்றபோது தடுமாறி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் உடனடியாக அப்பெண்ணை பத்திரமாக காப்பாற்றினர்.

    இந்த சம்பவம் ரெயில்வே நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்த 30 லட்சம் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று வெட்கமின்றி அழைப்பவர்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.
    • இது மேற்கு வங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

    வங்காளிகளை வெளிநாட்டினராக சித்தரித்தால் பாஜக எம்எல்ஏவின் வாயில் ஆசிட் வீசுவேன் என்று திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்ட டிஎம்சி தலைவர் அப்துர் ரஹீம் பக்ஷி இந்த சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.

    வங்காளத்திலிருந்து குடிபெயர்ந்த தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று கோஷ் முன்னர் சட்டமன்றத்தில் பேசியதை மேற்கோள் காட்டி அவரின் பெயரை குறிப்பிடாமல் அப்துர் ரஹீம் இந்த மிரட்டலை விடுத்துள்ளார்.

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வங்காள மொழி பேசுபவர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அட்டூழியங்களுக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் நேற்று அப்துர் ரஹீம் பக்ஷி கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது, "வேறு மாநிலங்களில் பணிபுரியும் வங்காளத்திலிருந்து புலம்பெயர்ந்த 30 லட்சம் தொழிலாளர்களை ரோஹிங்கியாக்கள் மற்றும் வங்கதேசத்தினர் என்று வெட்கமின்றி அழைப்பவர்களுக்கு நான் நினைவூட்டுகிறேன்.

    எந்த பாஜக எம்எல்ஏவாவது மீண்டும் அதே வார்த்தைகளைக் உதிர்த்தால், நான் உங்கள் வாயில் ஆசிட் ஊற்றி எரிப்பேன். இது மேற்கு வங்கம் என்பதை மறந்துவிடாதீர்கள். நாங்கள் வங்காளிகள் உங்களை சும்மா விடமாட்டோம். உங்கள் முகத்தில் ஆசிட் ஊற்றி எரிப்போம்" என்று தெரிவித்தார்.

    இந்த மிரட்டலுக்கு பாஜக தரப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

    • மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் யானை வருவதை அறிந்து ரயில் நிறுத்தப்பட்டது.
    • முதலில் ரயிலின் ஓசையைக் மிரண்ட யானை, பின் வளத்திற்கும் சென்றது

    மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தில் யானை வருவதை அறிந்து ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

    ரெயில் தண்டவாளத்தில் நடந்து செல்லும் யானை, ரெயில் வருவதை கண்டதும் திடீரென வேகத்தை அதிகரித்து அலறல் சத்தம் எழுப்பும் வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்துள்ளார்.

    ரெயில் நின்றபிறகு யானை தண்டவாளத்தை விட்டு நகர்ந்து காட்டுக்குள் சென்றது. 

    • புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் அரசாங்கம் கவனித்துக் கொள்ளும்
    • ஓராண்டிற்கு இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    பிற மாநிலங்களில் இருந்து மேற்கு வங்கத்திற்கு திரும்பும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித் தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான 'ஷ்ரமஸ்ரீ' என்ற திட்டத்தை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

    திரும்பி வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மேற்கு வங்கத்தில் வேலை கிடைக்கும் வரையிலோ அல்லது ஓராண்டிற்கோ இந்த உதவித் தொகை வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவையும் அரசாங்கம் கவனித்துக் கொள்ளும் என்று அத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக ஆளும் மாநிலங்களில் சுமார் 22 லட்சம் மேற்குவங்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் 'துன்புறுத்தப்படுகிறார்கள்' என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×