என் மலர்
இந்தியா

நீ வங்கதேசத்தவன்.. ஆந்திராவில் மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளியை கடத்திக் கொலை செய்த கும்பல்
- மஞ்சூர் ஆலம் ஒரு வங்கதேசத்தவர் என முத்திரை குத்தி இந்துத்துவா கும்பல் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்துள்ளதாக அவரது சகோதரர் குற்றம்சாட்டினார்.
- பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை பெங்காலி தொழிலாளர்கள் குறிவைக்கப்படுகின்றனர்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி மஞ்சூர் ஆலம் லஷ்கர் (32). இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆந்திராவில் வேலை செய்து வந்தார்.
பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கோமரோலு பகுதியில் வேலை செய்து வந்த அவரை வங்கதேசத்தவர் என்று கூறி அங்கிருந்த கும்பல் மிரட்டி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் மஞ்சூர் ஆலத்தை அந்த கும்பல் கடந்த செவ்வாய்க்கிழமை கடத்தியுள்ளது. அவரது குடும்பத்தினரை அழைத்து மஞ்சூரை விடுவிக்க ரூ.25,000 பணம் கேட்டுள்ளது.
மஞ்சூரின் குடும்பத்தினர் பயந்துபோய் ஆன்லைன் மூலம் ரூ.6,000 செலுத்தியுள்ளனர். ஆனால், புதன்கிழமை இரவு மஞ்சூர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் குடும்பத்தினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
மஞ்சூர் ஆலம் மீது திருட்டுப் பட்டம் கட்டி, அவர் ஒரு வங்கதேசத்தவர் என முத்திரை குத்தி இந்துத்துவா கும்பல் திட்டமிட்டு இந்தக் கொலையைச் செய்துள்ளதாக அவரது சகோதரரும் திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகருமான கியாசுதீன் லஷ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை பெங்காலி தொழிலாளர்கள் குறிவைக்கப்படுவதாகத் திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மேற்கு வங்க அரசு தலையிட்டு முறையான விசாரணைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மஞ்சூர் ஆலம் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.






