என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Court"

    • ஆன்லைன் போர்டல் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.
    • விசாரணை தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாகத் தாக்கல் செய்ய வேண்டும்.

    வழக்கு விசாரணையின்போது வழக்கறிஞர்கள் தாங்கள் வாதாட எடுத்துக்கொள்ளும் நேரத்தை ஒருநாள் முன்னரே தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. 

    இதுதொடர்பாக வழக்கறிஞர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 

    "மூத்த வழக்கறிஞர்கள், வாதிடும் வழக்கறிஞர்கள் மற்றும்/அல்லது பதிவுபெற்ற வழக்கறிஞர்கள், நோட்டீஸ் அனுப்பப்பட்ட மற்றும் வழக்கமான விசாரணை என அனைத்து விவகாரங்களிலும், தங்களது வாய்மொழி வாதங்களை முன்வைப்பதற்கான கால அளவை விசாரணை தொடங்குவதற்கு குறைந்தது ஒரு நாளைக்கு முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும். பதிவுபெற்ற வழக்கறிஞர்களுக்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 'வருகை சீட்டுகளை' சமர்ப்பிக்கும் ஆன்லைன் போர்டல் வாயிலாகவே இதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    வாதாடும் வழக்கறிஞர்கள் மற்றும்/அல்லது மூத்த வழக்கறிஞர்கள், தங்களின் 'பதிவுபெற்ற வழக்கறிஞர்' மூலமாகவோ அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நோடல் வழக்கறிஞர் மூலமாகவோ, ஐந்து பக்கங்களுக்கு மிகாத ஒரு சுருக்கமான குறிப்பு அல்லது எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். அந்த காலக்கெடுவை உறுதி செய்யும் வகையில், அதன் நகலை எதிர் தரப்பினருக்கு வழங்கிய பிறகு, விசாரணை தேதிக்கு குறைந்தது மூன்று நாட்களுக்கு முன்னதாகத் தாக்கல் செய்ய வேண்டும். அனைத்து வழக்கறிஞர்களும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் மற்றும் தங்களுடைய வாய்மொழி வாதங்களை அதற்குள் முடித்துக் கொள்ள வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • உண்மைக்கு ஆர்ப்பாட்டம் தேவையில்லை என்று நாங்கள் நம்பினோம்.
    • அழுத்தங்களும் பொதுமக்களின் ஆவேசமும் மேலோங்கத் தொடங்கினால், ஒரு சாதாரண குடிமகனுக்கு உண்மையான பாதுகாப்பு என்ன இருக்கிறது?

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரின் இடைக்கால ஜாமின் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகள் இஷிதா செங்கார், 'கடந்த எட்டு ஆண்டுகளாகத் தனது குடும்பம் அமைதியாகச் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து காத்திருந்ததாகவும், ஆனால் தற்போது அந்த நம்பிக்கை மெல்லத் தேய்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 

    "இந்தியக் குடியரசின் மாண்புமிகு அதிகாரிகளுக்கு,

    களைப்படைந்த, அச்சமடைந்த மற்றும் மெல்ல மெல்ல நம்பிக்கையை இழந்து வரும் ஒரு மகளாக நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஆனாலும், செல்வதற்கு வேறு இடம் இல்லாததால் இன்னும் நம்பிக்கையை மட்டும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறேன். எட்டு ஆண்டுகளாக, நானும் என் குடும்பமும் காத்திருந்தோம், அமைதியாக. பொறுமையாக. 'சரியான வழியில்' அனைத்தையும் செய்தால், உண்மை இறுதியில் தானாகவே வெளிப்படும் என்று நம்பினோம்.

    நாங்கள் சட்டத்தை நம்பினோம். அரசியலமைப்பை நம்பினோம். இந்த நாட்டின் நீதி என்பது சத்தம் போடுவதிலோ, ஹேஷ்டேக்குகளிலோ (hashtags) அல்லது பொதுமக்களின் கோபத்திலோ இல்லை என்று நம்பினோம். இன்று, அந்த நம்பிக்கை சிதைந்து வருவதால் நான் இதை எழுதுகிறேன்.

    எனது வார்த்தை கேட்கப்படுவதற்கு முன்பே, எனது அடையாளம் ஒரு முத்திரைக்குள் சுருக்கப்படுகிறது, 'ஒரு பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரின் மகள்' என்று. என்னை ஒருமுறைகூட பார்த்திடாத, ஒரு ஆவணத்தையும் படிக்காத, ஒரு நீதிமன்றப் பதிவைக்கூடப் பார்க்காதவர்கள், என் வாழ்க்கைக்கு எந்த மதிப்பும் இல்லை என்று தீர்மானித்துவிட்டார்கள். 

    இத்தனை ஆண்டுகளில் சமூக வலைதளங்களில், உயிருடன் இருப்பதற்காகவே நான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட வேண்டும், கொல்லப்பட வேண்டும் அல்லது தண்டிக்கப்பட வேண்டும் என்று எண்ணற்ற முறை சொல்லப்பட்டிருக்கிறேன். இந்த வெறுப்பு வெறும் கற்பனையல்ல. இது தினசரி நடப்பது. இடைவிடாதது. நீங்கள் வாழ்வதற்கு கூட தகுதியற்றவர் என்று இத்தனை பேர் நம்புகிறார்கள் என்பதை உணரும்போது, அது உங்களுக்குள் இருக்கும் எதையோ ஒன்றை உடைத்துவிடுகிறது. 

    நாங்கள் அமைதியாக இருந்தோம். காரணம் எங்களிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அல்ல, மாறாக நம் அமைப்புகளின் மீது (Institutions) நம்பிக்கை வைத்திருந்ததால். நாங்கள் போராட்டங்களை நடத்தவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் கத்தவில்லை. உருவ பொம்மைகளை எரிக்கவில்லை அல்லது ஹேஷ்டேக்குகளை (Hashtags) டிரெண்ட் செய்யவில்லை. நாங்கள் காத்திருந்தோம், ஏனெனில் உண்மைக்கு ஆடம்பரம்/ஆர்ப்பாட்டம்  தேவையில்லை என்று நாங்கள் நம்பினோம்.

    அந்த மௌனத்திற்கு நாம் கொடுத்த விலை என்ன?

    எட்டு ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டும், கேலி செய்யப்பட்டும், மனிதத்தன்மையற்ற முறையிலும் நடத்தப்பட்டு, நமது கண்ணியம் சிறுகச் சிறுகப் பறிக்கப்பட்டுள்ளது. ஒரு அலுவலகத்திலிருந்து இன்னொரு அலுவலகத்திற்கு ஓடியும், கடிதங்கள் எழுதியும், தொலைபேசி அழைப்புகளைச் செய்தும், எங்களைக் கேளுங்கள் என்று கெஞ்சியும்,  நிதி ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடைந்துவிட்டோம். நாம் தட்டாத கதவுகளே இல்லை. நாம் அணுகாத அதிகாரிகளே இல்லை. நாம் கடிதம் எழுதாத ஊடக நிறுவனங்களே இல்லை.

    இருப்பினும் யாரும் கேட்கவில்லை.

    அதற்குக் காரணம் உண்மைகள் பலவீனமாக இருந்ததல்ல. ஆதாரங்கள் பற்றாக்குறையாக இருந்ததும் அல்ல. மாறாக, எங்கள் உண்மை அவர்களுக்கு இடையூறாக இருந்தது என்பதே காரணம். மக்கள் எங்களை 'அதிகாரம் படைத்தவர்கள்' என்கிறார்கள். நான் உங்களிடம் கேட்கிறேன், ஒரு குடும்பத்தை எட்டு ஆண்டுகளாகப் குரலற்றதாக ஆக்கும் சக்தி (மௌனமாக்கி) என்ன வகையான அதிகாரம்? உங்கள்பேரில் நாள்தோறும் சேற்றை வாரி இறைப்பதைக் கண்டும், உங்களைக் கண்டுகொள்ளாத ஒரு அமைப்பை (system) நம்பி நீங்கள் அமைதியாக அமர்ந்திருப்பது என்ன வகையான அதிகாரம்?

    இன்று என்னை அச்சுறுத்துவது அநீதி மட்டுமல்ல, திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள 'பயம்' தான் என்னை அச்சுறுத்துகிறது.

    நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் சாதாரண குடிமக்கள் என அனைவரும் மௌனத்திற்குள் தள்ளப்படும் அளவுக்கு உரத்த ஒரு பயம். எவரும் நமக்கு ஆதரவாக நிற்கவோ, நாம் சொல்வதைக் கேட்கவோ, அல்லது 'உண்மை என்ன என்று ஆராய்ந்து பார்ப்போம்' என்று துணிச்சலாகக் கேட்கவோ கூடாது என்பதற்காகவே இந்த பயம் மிகக் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிகழ்வுகளைப் பார்ப்பது என்னை ஆழமாக உலுக்கியுள்ளது. ஆத்திரத்தாலும், தவறான தகவல்களாலும் உண்மையை இவ்வளவு எளிதாக மூழ்கடிக்க முடியும் என்றால், என்னைப்போன்ற ஒருவர் எங்கே செல்வது? ஆதாரங்களையும் முறையான சட்ட நடைமுறைகளையும் விட, அழுத்தங்களும் பொதுமக்களின் ஆவேசமும் மேலோங்கத் தொடங்கினால், ஒரு சாதாரண குடிமகனுக்கு உண்மையான பாதுகாப்பு என்ன இருக்கிறது?

    நான் இந்தக் கடிதத்தை யாரையும் அச்சுறுத்துவதற்காக (மிரட்டுவதற்காக) எழுதவில்லை. நான் இந்தக் கடிதத்தை யாருடைய அனுதாபத்தையும் பெறுவதற்காக எழுதவில்லை. நான் பயந்துபோயிருப்பதாலும், எங்காவது யாராவது ஒருவராவது இதைக் கேட்கும் அளவிற்கு அக்கறை காட்டுவார்கள் என்று நான் இன்னும் நம்புவதால் இதை எழுதுகிறேன்.

    நாங்கள் எந்தச் சலுகையையும் கேட்கவில்லை. நாங்கள் யார் என்பதற்காகப் பாதுகாப்பையும் கேட்கவில்லை. நாங்கள் மனிதர்கள் என்பதால் நீதியைக் கோருகிறோம்.

    சட்டம் அச்சமின்றிப் பேசட்டும். ஆதாரங்கள் எவ்வித அழுத்தமுமின்றி ஆய்வு செய்யப்படட்டும். உண்மை விரும்பத்தகாததாக இருந்தாலும் இருந்தாலும், அது உண்மையாகவே கருதப்படட்டும். இன்னும் இந்த நாட்டை நம்பும் ஒரு மகள் நான். தயவுசெய்து அந்த நம்பிக்கையை நான் இழக்கும்படி செய்துவிடாதீர்கள்.

    மரியாதையுடன்,

    நீதிக்காக இன்னும் காத்திருக்கும் ஒரு மகள்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது.
    • டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என முறையிடப்பட்டது.

    உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும், பாதிக்கப்பட்ட பெண் உள்பட உறவினர்கள் காரில் சென்றபோது லாரி மோதி 2 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் குல்தீப்சிங் செங்காருக்கு டெல்லி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்தது. இதற்காக சிறப்பு மனுவை தாக்கல் செய்யப்பட்டது. அதில், குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என முறையிடப்பட்டது.

    சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது.

    இந்நிலையில், உன்னாவ் தொகுதி முன்னாள் பாஜக எம்எல்ஏ செங்காரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • செங்காருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டெல்லி ஐகோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
    • இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப்சிங் செங்கார் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    மேலும் பாதிக்கப்பட்ட பெண் உள்பட உறவினர்கள் காரில் சென்றபோது லாரி மோதி 2 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி படுகாயங்களுடன் உயிர் பிழைத்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கில் குல்தீப்சிங் செங்காருக்கு டெல்லி கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.

    இதை எதிர்த்து குல்தீப் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த சில தினங்களுக்கு முன் அவருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது. இதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட் முன் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதற்கிடையே, டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளது. இதற்காக சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், குல்தீப் சிங் செங்காரின் ஆயுள் தண்டனையை நிறுத்திய டெல்லி ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என முறையிட்டுள்ளது.

    இந்நிலையில், சி.பி.ஐ.யின் மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நாளை (திங்கள் கிழமை) விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
    • த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கோர நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்ட அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதனிடையே, இந்த வழக்கில் த.வெ.க. முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூன் ஆகியோருக்கு டெல்லி சி.பி.ஐ. தலைமையகத்தில் வருகிற 29-ந்தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோருக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து நிர்வாகிகள் டெல்லி சென்று சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.

    • மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தல்.
    • மசோதாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்புதல்.

    2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மாநில ஆளுநர்களின் மசோதா அதிகாரம் மற்றும் அவர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடு குறித்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

    இந்த தீர்ப்பில் சட்டப்பிரிவு 200க்கின் கீழ் ஆளுநருக்கான வாய்ப்புகள் குறித்து கூறப்பட்டது. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநருக்கு மூன்று வாய்ப்புகள் மட்டுமே உள்ளன என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.


    மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்தல். இதில், மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்தல். மசோதாவை மறுபரிசீலனை செய்யச் சொல்லி சட்டமன்றத்திற்கே திருப்பி அனுப்புதல் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    மசோதாக்கள் மீது எந்த முடிவும் எடுக்காமல் அவற்றை நீண்ட காலம் கிடப்பில் போடுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று நீதிமன்றம் கண்டித்துள்ளது.

    ஒரு மாநிலத்தில் ஆளுநர் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என இரண்டு தனித்தனி அதிகார மையங்கள் இருக்க முடியாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே இறுதி அதிகாரம் உள்ளது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

    குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் மசோதாக்கள் மீது முடிவெடுக்க நிச்சயமான காலக்கெடுவை நீதிமன்றம் விதிக்க முடியாது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அவ்வாறு காலக்கெடு நிர்ணயிப்பது ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனக் கோட்பாடுகளுக்கு எதிரானது என நீதிபதிகள் தெரிவித்தனர். 

    ஆளுநர் ஒரு மசோதா மீது எந்தக் காரணமும் இன்றி நீண்ட காலம் முடிவெடுக்காமல் தாமதப்படுத்தினால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்று இந்தத் தீர்ப்பு அனுமதி அளித்துள்ளது.

    ஆளுநரின் கையொப்பம் அல்லது ஒப்புதல் இல்லாமல், மாநில சட்டமன்றம் நிறைவேற்றிய ஒரு மசோதா நடைமுறைக்கு வந்த சட்டமாகக் கருதப்படாது என்பதையும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

    இந்தத் தீர்ப்பு, மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பாக நிலவி வந்த நீண்ட கால மோதல்களுக்கு ஒரு சட்டரீதியான தீர்வை வழங்கியுள்ளது.

    • 16 வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
    • 2019 ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரின் சிறைத்தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

    நீதிபதிகள் சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனிப்பட்ட பிணையில் செங்காரை ஜாமினில் விடுவித்துள்ளது.

    மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டைச்சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு செங்கார் செல்லக்கூடாது என்றும், அப்பெண்ணையோ அல்லது அவரது தாயாரையோ அச்சுறுத்தக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது. வாரம் ஒருமுறை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    கடந்த 2017 ஆம் ஆண்டு 16வயதான சிறுமி செங்காரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு செங்காருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே இந்த குற்றத்திற்கு நீதிக்கேட்டு போராடியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் இருக்கும்போது இச்சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இந்த காவல் மரண வழக்கிலும் செங்கருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் இதுதொடர்புடைய பிற வழக்குகள் அனைத்தும் ஆகஸ்ட் 1, 2019 அன்று உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் உத்தரபிரதேசத்தில் உள்ள விசாரணை நீதிமன்றத்திலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டன. இந்நிலையில் செங்காரின் மேல்முறையீட்டில் டெல்லி உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்தது.

    இன்னலையில், செங்காருக்கு ஆயுள் தண்டனையை, டெல்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்ததற்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

    மேலும், டெல்லி இந்தியா கேட் பகுதியில் அப்பெண், போராட்டத்தில் ஈடுபட போலீசார் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர்

    • ரிலீஸுக்கு தயாராகியும் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது.
    • பட வெளியீட்டிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

    'மெய்யழகன்' படத்திற்கு பிறகு, நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'வா வாத்தியார்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் எப்போதோ வெளியாகி கவனம் ஈர்த்தன. ஆனால் ரிலீஸுக்கு தயாராகியும் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது. காரணம் படத்தை ஸ்டுடியோ க்ரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் என்பவரிடம் இருந்து ரூ.21 கோடியை கடனாகப் பெற்றதாக கூறப்படுகிறது. இப்பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடக்கூடாது என, அர்ஜுன்லால் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் படவெளியீடு இன்னும் தள்ளிப்போகும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

    உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஸ்டுடியோ கிரீன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. 

    • ஐகோர்ட் பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பின்னர் அதுகுறித்து விசாரிக்கலாம்.
    • பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    புதுடெல்லி:

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் மாதம் 27-ந்தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இதுபற்றி கரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

    இதற்கு எதிராகவும், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். அதேபோல் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியும் கரூர் சென்று நேரில் ஆய்வு செய்தார். இந்த நிலையில் கரூர் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில் சென்னை ஐகோர்ட்டு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவும், மாநில அரசு அமைத்த ஒரு நபர் விசாரணை ஆணையமும் தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள். 'அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் நோக்கம் என்ன? சென்னை ஐகோர்ட்டு கரூர் சம்பவம் தொடர்பாக ரிட் மனுவை விசாரித்ததில் சில தவறுகள் உள்ளன. சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடைமுறையில் தவறுகள் உள்ளது என்றே கருதுகிறோம்.

    மதுரை அமர்வு விசாரித்து வந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு பிரதான அமர்வு விசாரித்தது எப்படி? மதுரை கிளை விசாரித்து இருக்க வேண்டிய விவகாரம் குறித்த கேள்விக்கு சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் பதில் அளித்துள்ளார். அது ஏன்' என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.

    அதற்கு தமிழக அரசு சார்பில், 'அருணா ஜெகதீசன் ஆணையத்தை தொடர அனுமதிக்க வேண்டும். அதற்கான தடையை நீக்க வேண்டும். கூட்ட நெரிசல் சம்பவம் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க பரிந்துரைகளை ஒருநபர் ஆணையம் வழங்கும். எதிர்காலத்தில் கூட்டங்கள் நடத்த விதிமுறைகளை வகுப்பதற்கும், நிவாரணம் பரிந்துரைக்கவுமே ஆணையம் அமைக்கப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து நீதிபதிகள், மதுரை ஐகோர்ட்டு கிளையில் விசாரணை நடக்கும் நிலையில் சென்னை ஐகோர்ட்டு வழக்கை எப்படி எடுத்தது என சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை தர உத்தரவிட்டனர். ஐகோர்ட்டு பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்த பிறகு பின்னர் அதுகுறித்து விசாரிக்கலாம்.

    பதிவாளர் தாக்கல் செய்யும் அறிக்கையை அனைத்து தரப்புக்கும் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

    • கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
    • தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சைதை துரைசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    புதுடெல்லி:

    கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி போட்டியிட்டார்.

    இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றார். இந்த வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி சைதை துரைசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அவர் தனது மனுவில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகைக்கு அதிகமாக மு.க.ஸ்டாலின் செலவு செய்ததுடன், அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சைதை துரைசாமி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, விஜய் விஷ்னோயி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று மீண்டும் விசாரித்தது.

    அப்போது, வழக்கு விசாரணயை தள்ளிவைக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை ஜனவரி 20-ந் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

    ஜனவரி 22-ந் தேதி வரை இறுதி விசாரணை நடைபெறும் என அறிவித்த நீதிபதிகள், அதற்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    • மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
    • தலைமை நீதிபதி அமர்வு எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும்.

    எஸ்ஐஆர் வழக்கில் ஜனவரி மாதம் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு அறிவித்துள்ளது.

    எஸ்ஐஆர் விவகாரத்தில் இதற்குமேல் புதிதாக எந்த வழக்குகளும் அனுமதிக்கப்படாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.

    எஸ்ஐஆர் தொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகள் தாக்கல் செய்த மனுக்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

    இந்நிலையில், எஸ்ஐஆர் வழக்குகளில் இம்மாத இறுதிவரை வாதங்களை கேட்கும் தலைமை நீதிபதி அமர்வு ஜனவரி மாதத்தில் தீர்ப்பு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.
    • இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு இருந்தார்.

    முக்கியமாக, மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வகை செய்யும் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அறிவித்தார்.

     

    இதனால் அந்த மசோதாக்களை தமிழக அரசு, 2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அவற்றை அவர் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.

    எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.

     இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீண்ட கால விசாரணைக்குப்பின் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

     

    அப்போது தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என நீதிபதிகள் அறிவித்தனர்.

    மேலும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அத்துடன் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றன.

     

    அதேநேரம் இந்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் கேட்டிருந்தார்.

    இந்த கேள்விகள் தொடர்பாக 5 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சுந்துர்கர் அடங்கிய இந்த அமர்வில் நடந்த விசாரணை நிறைவடைந்து கடந்த செப்டம்பர் 11-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 20-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    அதன்படி மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு அளித்தனர்.

    5 நீதிபதிகளும் ஒருமித்த வகையில் வழங்கிய தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது:-

    மாநில சட்டசபைகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை, ஆளுநர்கள் அரசியல் சட்டப்பிரிவு 200-ன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தை மீறி நீண்ட காலம் கிடப்பில் போட முடியாது.

    அந்தவகையில், மாநில அரசில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்க முடியாது என பஞ்சாப் அரசுக்கு எதிராக ராம் கபூர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அளித்த தீர்ப்பில் உடன்படுகிறோம்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.

    மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட அனுமதிப்பது என்பது சட்டசபை அதிகாரத்தை மதிப்பிழக்கச்செய்வதாகவும், கூட்டாட்சி கொள்கைக்கு எதிராகவும் அமையும் என கருதுகிறோம்.

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்களுக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அதாவது ஒப்புதல் அளிப்பது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது அல்லது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, தனது கருத்துடன் சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது ஆகியவை.

    இதில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டும். இதில் மத்திய அரசு கூறுவது போல 4-வது வாய்ப்பு இல்லை. இதில் அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் தன் விருப்புரிமையுடன் செயல்பட முடியும்.

    நிதி மசோதாவாக இல்லாத பட்சத்தில் அந்த மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியும் அல்லது கருத்துகளுடன் சட்டமன்றத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்கலாம்.

    அதேநேரம் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கெடு விதிப்பது பொருத்தமாக இருக்காது.

    மசோதாக்கள் சட்டமாகி நடைமுறைக்கு வராத நிலையில், அவை குறித்த ஆளுநர்கள், ஜனாதிபதியின் முடிவுகளை கோர்ட்டு விசாரணைக்கு உட்படுத்த முடியாது. சட்டமாகாத மசோதாக்களின் பொருளடக்கம் குறித்து கோர்ட்டு விசாரிக்க முடியாது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கோர்ட்டு விசாரணைக்கு உட்பட்டதல்ல. எனவே, ஆளுநர்களின் முடிவுகளை கோர்ட்டுகள் ஆய்வு செய்ய முடியாது. இது மசோதாக்கள் மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளுக்கும் பொருந்தும்.

     

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஜனாதிபதிக்கு கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு ஜனாதிபதியையும் கட்டுப்படுத்தாது.

    இருப்பினும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் வகையில், ஆளுநர்களின் விருப்புரிமை குறித்து கருத்து தெரிவிக்காமல் முடிவுகளை எடுக்க அளவான உத்தரவுகளை கோர்ட்டு பிறப்பிக்க முடியும்.

    ஆளுநர்களுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர முடியாத வகையில் அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. இருப்பினும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது கோர்ட்டு அளவாக தலையிட முடியும்.

    ஆளுநர்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு மசோதாவுக்கும் ஒப்புதல் அளிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற தேவையில்லை.

    அதேநேரம் மசோதா குறித்த தெளிவில்லாதபோது அல்லது சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனை தேவைப்படும்போது, ஜனாதிபதி அரசியலமைப்பு சாசனத்தின் 143-வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை கேட்டுப்பெறலாம்.

    ஆளுநர்களின் அரசியலமைப்பு அதிகாரங்களையும், அவர்களின் உத்தரவுகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்புப்பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியாது.

    அந்தவகையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்ற கோட்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரம் அனுமதிக்கவில்லை.

    ஆளுநர்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மசோதா சட்டமாகுமா என்ற கேள்விக்கே இடமில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் சட்டமியற்றும் பணியை ஐகோர்ட்டுகளோ, சுப்ரீம் கோர்ட்டோ பறித்துக்கொள்ள முடியாது.

    அரசியல்சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற விதி தொடர்பான கேள்வி நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு அதிகாரம் குறித்து ஏற்கனவே விரிவாக பதில் அளித்து விட்டதால், குறிப்பிட்ட பாணியில் பதில் அளிப்பது சாத்தியமில்லை.

    மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவும் தாவாக்களை தீர்வுகாணும் சுப்ரீம் கோர்ட்டின் வரம்பு எல்லை குறித்த கேள்வியும் நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை என்று தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    ×