என் மலர்
நீங்கள் தேடியது "Rajendra Balaji"
- அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
- தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் ராஜேந்திர பாலாஜி வழிபாடு செய்தார்.
விருதுநகர்:
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பா.ஜ.க.வுன் கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க.வும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள தாணிப்பாறை சர்வேஸ்வரர் கோவிலில் ராஜேந்திர பாலாஜி வழிபாடு செய்தார். இதன்பின் தியானத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். இதன்பின்னர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பு நள்ளிரவில் தியானத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வில் பல சலசலப்புகள் ஏற்பட்டது.
- என் மீது நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு போடப்பட்டது.
- நான் பயந்து விட்டேனா? ஒடுங்கி விட்டேனா?. ஓரம் போய்விட்டேனா?
அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி "என் மீது நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு போடப்பட்டது. நான் பயந்து விட்டேனா? ஒடுங்கி விட்டேனா?. ஓரம் போய்விட்டேனா? அல்லது சேர்ந்து விட்டேனா?. திமுக-வை வீட்டுக்கு அனுப்பும் வரை நான் ஓய மாட்டேன். உறங்க மட்டேன்.
பிரபாகரனுக்கு ஈடான வீரம் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக ஒரு அற்புதமான அணையாத விளக்கு. எடப்பாடி பழனிசாமி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது. மதவாதம் துளிர்விட்டால் அங்கு எடப்பாடி பழனிசாமி இருக்கமாட்டார்." தெரிவித்துள்ளார்.
- முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.
- பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகள்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய ராணுவத்தால் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில்," பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பிரதமரின் தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழித்து மக்களை பாதுகாப்பதற்கான அசைக்க முடியாத உறுதியை காட்டுகிறது.
பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்த இந்திய ராணுவத்தை பாராட்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்" என்றார்.
இந்நிலையில், சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேசுயுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,"எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டால் விருதுநகர் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் யுத்த களத்தில் எனது தலைமையில் துப்பாக்கி ஏந்தி போராட தயாராக உள்ளனர்" என்றார்.
- ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.
- இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது.
சென்னை:
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல் செய்த மேலமுறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 17-ம் தேதி விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவுசெய்து கொண்ட சுப்ரீம் கோர்ட், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
மேலும், இரு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கவர்னருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிட்டது. மொழியாக்கம் கிடைக்கப் பெற்ற உடனே ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கடிதம்மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில், ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கவர்னரின் ஒப்புதலை அடுத்து ஓரிரு நாட்களில் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- 2-வது இடத்திற்குதான் போட்டி என மு.க. ஸ்டாலின் கூறியது கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக... அது உண்மையல்ல.
- கூட்டணியின் முடிவுகளை எடப்பாடி பழனிசாமி ஒருவர்தான் எடுப்பார். அவர் அறிவிப்பார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பேட்டியளிக்கும்போது அவர் கூறியதாவது:-
* திருப்பதி ஏழுமலையான் கோவில் வாழ்க்கைக்கு நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய ஸ்தலம்.
* விஜய் திமுகவுக்கும்- தவெக-வுக்கும் இடையில்தான் போட்டி என்பதற்கு எங்கள் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். அந்தந்த கட்சி தலைவர்கள் தொண்டர்களை ஊக்கப்படுத்த தங்களுடைய பேச்சுகளில் கவனம் செலுத்துவார்கள். போட்டி என்பது திமுக-வுக்கும் அதிமுகவுக்கும் இடையில்தான் என்பதை உலகம் அறியும், ஊர் அறியும். நாடு அறியும்.
* 2-வது இடத்திற்குதான் போட்டி என மு.க. ஸ்டாலின் கூறியது கட்சித் தொண்டர்களை ஊக்கப்படுத்துவதற்காக... அது உண்மையல்ல.
* கூட்டணியை பொறுத்த வரையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அருமையான வெற்றிக் கூட்டணி அமைப்பார்.
* கூட்டணியின் முடிவுகளை அவர் ஒருவர்தான் எடுப்பார். அவர் அறிவிப்பார்.
* ஒருநாள் திட்டத்தில் இருந்து 100 வேலை திட்டம் வரை அனைத்திலும் ஊழல் நடப்பதாக பொதுவாக தமிழகத்தின் மத்தியில், இளைஞர்கள் மத்தியில், சமூக ஆர்வலர்கள் மத்தியல் பேச ஆரம்பித்து விட்டார்கள். அதனால் திமுக-வுக்கு இனிமேல் வீழ்ச்சிதான்.
* அற்புதமான ஆட்சி கொடுத்த ஆட்சி அதிமுக என்ற நம்பிக்கை மக்களிடத்தில் வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அற்புதமான ஆட்சி அமையும். அதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். 2026ஆம் ஆண்டு தேர்தல் அதிமுக-வுக்கான தேர்தல்.
இவ்வாறு ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
- முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என ஆளுநர் கூறினார்.
- தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழி பெயர்த்து கொடுக்குமாறு கேட்கின்றார்- தமிழக அரசு
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருவதாகவும், இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு கடந்த ஜனவரி 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, தனக்கு எதிரான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, 'ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு நியாயமானதாக இல்லை. கவர்னரிடமிருந்து ஒப்புதல் ஆணை பெறுவதில் சிக்கல் உள்ளது' என தெரிவித்தார்.
ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி சி.பி.ஐ. விசாரிக்க கோரிய ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வாதிட்டார்.
பின்னர் கடந்த 7-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, 'இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சூசகமான உத்தரவு பிறப்பிக்கவில்லையென்றால் ஒப்புதல் ஆணை பெறுவதில் மேலும் தாமதம் ஏற்படும்' என வாதிட்டார்.
ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் வி.கிரி வாதிட முற்பட்டபோது, மனுதாரருக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் என்ன? என நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு மூத்த வக்கீல் வி.கிரி, மனுதாரருக்கான எதிரான புலன்விசாரணை நிறைவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் மனுதாரர் ராஜேந்திர பாலாஜி கடந்த 5 ஆண்டுகளாக ஆஜராகியுள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், நேரடியாக புலன் விசாரணையை தொடங்க முடியும் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் ஆணை கோரி தமிழ்நாடு அரசு எழுதிய கடிதங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும் பிரமாண பத்திரத்தை தமிழ்நாடு கவர்னரின் முதன்மைச் செயலாளர் அடுத்த விசாரணை நடைபெறும் வருகிற மார்ச் 17-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக் வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் "முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என ஆளுநர் சொன்னார். ஆனால் தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழி பெயர்த்து கொடுக்குமாறு கேட்கின்றார்" எனக் கூறப்பட்டது.
அப்போது, ஆளுநர் வேண்டுமென்றே தாமதம் செய்கிறாரா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர். இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து தமிழக அசு ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.
மொழி பெயர்த்து தந்ததும், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
- ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ராஜேந்திர பாலாஜி மோசடி செய்ததாக வழக்கு.
- விசாரணை முடிய 6 மாதம் ஆகும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனது ஜாமின் நிபந்தனைகளை முழுமையாக தளர்த்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துஇருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் விசாரணை நடந்தபோது, தமிழக அரசு சார்பில் இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து வருவதாகவும், எனவே அந்த விசாரணை முடிய 6 மாதம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரத்தில் விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 6 மாதம் வரை ராஜேந்திர பாலாஜியை கைது செய்வதற்கான தடையை நீட்டிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் உயர்நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவை பெறும்படியும் உத்தரவிடப்பட்டது.
- ராஜேந்திர பாலாஜியின் தந்தை மு. தவசிலிங்கம் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
- பெற்றோரை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய இழப்பாகும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜியின் தந்தை மு. தவசிலிங்கம் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.
பெற்றோரை இழப்பது என்பது ஒருவர் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய இழப்பாகும். அந்த வகையில், தந்தையை இழந்து மிகுந்த துயரத்தில் இருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், தவசிலிங்கம் அவர்களுடைய ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை தளர்த்தி ஜாமின் வழங்கி உத்தரவு.
- மோசடி தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என தமிழக அரசு தகவல்.
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி அளவில் மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இதைதொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை தளர்த்தி ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளி மாநிலங்கள் செல்லும்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையையும் தளர்த்தி ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால், வெளிநாடு செல்லும்போது சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி தொடர்பான புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி புகார் தொடர்பான வழக்கின் புலன் விசாரணை நிறைவடைந்து உள்ளது.
- 10 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர கவர்னரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம்.
புதுடெல்லி:
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் 3 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு மோசடி செய்ததாக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சங்கரமூர்த்தி பட்டியைச் சேர்ந்த ஆர்.முருகன் தாக்கல் செய்த இடையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இதற்கிடையே விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு உதயசூரியன் சார்பில் வக்கீல் சபரீஷ் சுப்ரமணியன் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார்.
அதில், ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி புகார் தொடர்பான வழக்கின் புலன் விசாரணை நிறைவடைந்து உள்ளது. இந்த வழக்கில் 70 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, 7 சாட்சியங்கள் இணைக்கப்பட்டு, 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜி மீது குற்றவழக்கு தொடுப்பதற்கான அனுமதி வழங்க கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.ஜி.பி.க்கு கடந்த 18-ந் தேதி கடிதம் எழுதியுள்ளார். அனுமதி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, ஆர்.முருகன் சார்பில் வக்கீல் எஸ்.பெனோ பென்ஸிகர் ஆஜராகி, இந்த விவகாரத்தை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, நிலை அறிக்கையை குறிப்பிட்டு வாதிட்டார்.
அப்போது, ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சர் என்பதால், அவருக்கு எதிராக வழக்கு தொடர கவர்னரிடம் அனுமதி கேட்டு உள்ளோம். இதுபோல 10 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக வழக்கு தொடர கவர்னரின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம் என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு விசாரணையை தள்ளிவைத்தது.
- முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
- விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனம் உள்ளிட்ட அரசுத்துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 33 பேரிடம் 3 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்தி, விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, புகார்தாரரான முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பி நல்லதம்பி, சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், வேலைக்காக பணம் கொடுத்தவர்களை அழைத்து, ரூ.70 லட்சம் வரை திருப்பிக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்கு மூலத்தை மாற்றிச் சொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்துள்ளார்.
பணத்தை திருப்பிக் கொடுத்தது, சாட்சிகளை மிரட்டியது தொடர்பாக ஆதாரங்களுடன், மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார் அளித்தேன். அதில் மேல் விசாரணை நடத்த கேட்டுக்கொண்டேன்.
கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் மாவட்ட குற்றப்பிரிவிடம் அளித்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காததால், அதனை பரிசீலித்து, மேல் விசாரணை நடத்தி, விரைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட குற்றப் பிரிவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், 4 வாரங்களில் பதிலளிக்கும் படி, ராஜேந்திர பாலாஜிக்கும், போலீசாருக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
- ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 33 பேரிடம் ரூ.3 கோடி பணம் வசூல் செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட கோரி பணத்தை இழந்தவர்களில் ஒருவரான ரவீந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. எனினும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அடுத்த கட்டமாக அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வழக்கை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.