என் மலர்
நீங்கள் தேடியது "மோடி"
- அப்பாவிகளின் உயிர்களை குடித்தவர்களை பழிதீர்க்காமல் இந்தியா ஓயாது
- பயங்கரவாதத்திற்கு எதிராக 140 கோடி இந்தியர்களுடன் உலக நாடுகள் கரம் கோர்த்துள்ளன
காஷ்மீரின் சுற்றுலா தலமான பஹல்காமில் கடந்த 22-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த கொடூர தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பயங்கரவாதிகளை தேடிப்பிடித்து தண்டிப் போம் என்று சூளுரைத்தார்.
இந்நிலையில், இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இன்று நான் உங்களிடம் பேசும்போது என் இதயத்தில் ஒரு ஆழமான வேதனை உள்ளது. கடந்த 22-ந்தேதி அன்று நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் ஒவ்வொரு குடிமகனின் மனதையும் உடைத்து விட்டது. பயங்கரவாத தாக்குதலின் படங்களைப் பார்த்த பிறகு ஒவ்வொரு குடிமகனும் கோபத்தால் கொதிப்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஒவ்வொரு இந்தியரின் ரத்தம் கொதிக்கிறது.
ஒருவர் எந்த மாநிலத்தில் வாழ்கிறார். எந்த மொழியைப் பேசுகிறார் என்பதைப் பொருட்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனைவரிடத்திலும் ஆழ்ந்த அனுதாபம் உள்ளது.
இந்த தாக்குதல் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களின் விரக்தியை பிரதிபலிக்கிறது. இந்த தாக்குதல் தீவிரவாதத்தின் ஆதரவாளர்களின் மனசோர்வையும் அவர்களின் கோழைத்தனத்தையும் வெளிப்படுத்துகிறது.
காஷ்மீரில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உயிரோட்டம் இருந்தது. கட்டுமானப்பணிகள் வரலாற்று வேகத்தில் முன்னேறிக் கொண்டு இருந்தன.
ஜனநாயகம் வலுப்பெற்றுக் கொண்டு இருந்தது. மக்களின் வருமானம் உயர்ந்து கொண்டு இருந்தது. இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
இதை நாட்டின் எதிரிகள், ஜம்மு காஷ்மீரின் எதிரிகள் விரும்பவில்லை. பயங்கரவாதிகளும் அவர்களின் எஜமானர்களும் காஷ்மீர் மீண்டும் அழிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால்தான் இவ்வளவு பெரிய சதித் திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில், நாட்டின் ஒற்றுமை நமது மிகப்பெரிய பலம் ஆகும். இந்த சவாலை எதிர் கொள்ளும் நமது உறுதியை நாம் வலுப்படுத்த வேண்டும். ஒரு தேசமாக வலுவான உறுதியை நாம் நிரூபிக்க வேண்டும். இந்திய மக்கள் உணரும் கோபம் உலகம் முழுவதும் எதிரொலித்து உள்ளது.
இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை அனைவரும் கடுமையாக கண்டித்துள்ளனர். உலகத் தலைவர்கள் தொலை பேசியில் என்னிடம் பேசினார்கள்.கடிதங்கள் எழுதியுள்ளனர், செய்திகளை அனுப்பி உள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான நமது போராட்டத்தில் 140 கோடி இந்தியர்களுடன் முழு உலகமும் நிற்கிறது.
தாக்குதலுக்கு எதிராக இந்தியா ஒரே குரலில் பேசுவதை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒற்றுமைதான் பயங்கரவாதத்திற்கு எதிரான தீர்க்கமான போரின் மிகப்பெரிய அடித்தளம் ஆகும். பாதிக்கப் பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று மீண்டும் ஒருமுறை நான் உறுதி அளிக்கிறேன்.
இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் குற்றவாளிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று பேசினார்.
மேலும், பேசிய அவர், "மறைந்த விஞ்ஞானியும் இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான கே. கஸ்தூரி ரங்கனுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டிற்கு அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவையும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர் ஆற்றிய பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்.
கடந்த மாதம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா ஆபரேஷன் பிரம்மா திட்டத்தை தொடங்கி உதவிகளை செய்தது. நெருக்கடி காலங்களில், உலகளாவிய நண்பராக இந்தியாவின் விரைவான பதிலும், மனிதகுலத்திற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பும் நமது அடையாளமாக மாறி வருகின்றன.
ஆப்கானிஸ்தான், நேபாளத்துக்கு தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. பீகார், மேற்கு வங்கம் அல்லது ஜார்க்கண்டில் லிச்சி மரம் வளர்கிறது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தற்போது தென்னிந்தியா மற்றும் ராஜஸ்தானிலும் லிச்சி வளர்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீர அரசு காபி பயிரிட்டார். அவர் கொடைக்கானலில் லிச்சி மரங்களை நட்டார். 7 வருட கடின உழைப்புக்குப் பிறகு, அந்த மரங்கள் காய்க்கத் தொடங்கியுள்ளன. லிச்சி வளர்ப்பில் கிடைத்த வெற்றி அப்பகுதியில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது என்றார்.
- ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.803 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது.
- இந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்தார்.
ஒரு கேஸ் சிலிண்டரின் விலை ரூ.803 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.50 உயர்த்தப்பட்டு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டபோது குஜராத் முதல்வராக மோடி பேசிய வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
50 ரூபாய் விலை உயர்வு, ஏழைகளிடமிருந்து கேஸ் சிலிண்டரை தட்டிப் பறிக்கும் செயல் என மோடி கண்டிக்கும் வீடியோவை பகிர்ந்து கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
- அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப் படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக மற்ற நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய டிரம்ப், அதே அளவுக்கு அந்தந்த நாடுகள் மீது ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100 சத வீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக டிரம்ப் இன்று அறிவிப்பை வெளியிடுகிறார்.
இந்த நிலையில் பரஸ்பர வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது:-
அதிபர் டிரம்ப் வர்த்தக குழுவுடன் ஆலோசனை நடத்தினார். வரி விதிப்பு தொடர்பாக அவர் ரோஸ் கார்டனில் நடைபெறும் விடுதலை தின நிகழ்ச்சியில் அறிவிப்பை வெளியிட்டதும் வரிவிதிப்புகள் உடனடியாக அமலுக்கு வரும்.
அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரியினை விதிக்கிறது. பால் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 50 சதவீதம், ஜப்பான் 700 சதவீதம் வரிகளை விதிக்கிறது. வெண்ணெய் மற்றும் சீஸ் மீது கனடா சுமார் 300 சதவீதம் வரியை விதிக்கிறது.
இதுபோன்ற நாடுகளால், அமெரிக்கா நீண்ட காலமாக கடும் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது. அதிபர் டிரம்ப் எடுத்த துணிச்சலான முடிவுகள் அமெரிக்காவுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
நமது ஏற்றுமதிக்கு அந்த நாடுகள் விதிக்கும் அளவுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா விதிக்க உள்ள பரஸ்பர வரிகளால் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
- அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய 87 சதவீத பொருட்கள் பாதிக்கப்படும்.
- அமெரிக்க இறக்குமதிக்கு வரியை குறைத்தால் அதனால் இந்தியாவுக்கு 23 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும்.
இந்தியா அமெரிக்க இறக்குமதிக்கு அதிகமாக வரி விதிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் நாளை (ஏப்ரல் 2ஆம் தேதி) முதல் இந்தியா மற்றும் இதர நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
சீனா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளோடு ஏற்கனவே டொனால்டு டிரம்ப் வர்த்தகப் போரை தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய 87 சதவீத பொருட்கள் டிரம்ப் நிர்வாகத்தின் போட்டி வரி நடவடிக்கையால் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு 66 பில்லியன் டாலர்கள்.
இந்நிலையில் இந்த போட்டி வரியை தவிர்ப்பட்டதற்காக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் வரியை இந்தியா குறைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த தகவலை கொடுத்தவர் டொனால்டு டிரம்ப். வெள்ளை மாளிகை ஓவல் அலுவலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "இந்தியா அதன் வரிகளை கணிசமாகக் குறைக்கப் போகிறது என்று கேள்விப்பட்டேன். பல நாடுகள் தங்கள் வரிகளை கைவிடப் போகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இறக்குமதிக்கு வரியை குறைத்தால் அதனால் இந்தியாவுக்கு 23 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- நக்சல் இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதில் பெரிய அடியை எடுத்து வைத்துள்ளோம்.
- பிரதமர் மோடி அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப் படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நக்சலைட்டுகளுக்கு எதிரான இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினர் பல நக்சலைட்டுகளை சுட்டுக்கொலை செய்தனர்.
நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்படுவது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, "நக்சல் இல்லாத நாட்டை கட்டியெழுப்புவதில் பெரிய அடியை எடுத்து வைத்துள்ளோம். நாட்டில் தீவிரவாதத்தால் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 12இல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது. பிரதமர் மோடி அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 2026 மார்ச் 31க்குள் நாட்டில் நக்சலிஸம் நிரந்தரமாக ஒழிக்கப்படும்
- இந்தியா-அமெரிக்கா இடையே 2007 இல் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவில்லை.
- 20 ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியா-அமெரிக்கா இடையே கடந்த 2007ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷும் இணைந்து இந்த ஒப்பந்தம் மேற்கொண்டனர்.
ஆனால் இந்த ஒப்பந்தம் அதன்பின்பு நடைமுறைக்குவரவில்லை. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த அமேரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் அணு உலைகள் அமைக்க ஹோல்டெக் என்ற அமெரிக்கா நிறுவனத்திற்கு டிரம்ப் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இருப்பினும், இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து உருவாக்கப்படும் அணு மின் நிலையங்கள், அமெரிக்க அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாடுகளுக்கோ அல்லது அமெரிக்க நிறுவனத்தை தவிர வேறு எந்த நிறுவனத்துக்கோ மாற்றப்படக்கூடாது என்று அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் நிபந்தனை விதித்துள்ளது.
- 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார்.
- இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய வெளியுறவு சேவை அதிகாரியான திவாரி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.
மார்ச் 29 தேதியிட்ட உத்தரவில், அமைச்சரவையின் நியமனக் குழு அவரை நிரந்தர அடிப்படையில் பிரதமரின் தனி செயலாளராக நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
யார் இவர்?
நிதி திவாரி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள மஹ்மூர்கஞ்சை சேர்ந்தவர். இந்தப் பகுதி பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பு, வாரணாசியில் கூடுதல் ஆணையராக (வணிக வரி) பணியாற்றினார். ஊடக அறிக்கைகளின்படி, பின் 2013 சிவில் சர்வீசஸ் தேர்வில் 96 வது இடத்தைப் பிடித்தார், அன்றிலிருந்து பொதுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.
நவம்பர் 2022 முதல் பிரதமர் அலுவலகத்தில் (PMO) துணைச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு, அவர் வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் குறைப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரப் பிரிவில் துணைச் செயலாளராகப் பணியாற்றினார்.

இவரது ரிப்போர்ட்டிங் அதிகாரியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருந்துள்ளார். அணு சக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரம் ஆகியவற்றை வெளியுறவு விவகாரங்களில் இவர் கவனித்து வந்துள்ளார்.
மோடிக்கு தற்போது விவேக் குமார் மற்றும் ஹர்திக் சதிஷ்சந்திர ஷா ஆகிய இரண்டு தனி செயலாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நிதி திவாரியும் மோடியின் தனிச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
- ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிவைத்தார்.
- முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது
சத்தீஸ்கர் பயணப்பட்டுள்ள பிரதமர் மோடி பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மொஹபத்தா கிராமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் ரூ.33,700 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், காங்கிரசின் கொள்கைகளால், சத்தீஸ்கர் உட்பட பல மாநிலங்களில் பல தசாப்தங்களாக நக்சலிசம் ஊக்கம் பெற்றது. வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் நக்சலிசம் செழித்தது, ஆனால் 60 ஆண்டுகளாக ஆட்சி செய்த கட்சி என்ன செய்தது? அத்தகைய மாவட்டங்களை பின்தங்கியதாக அறிவித்து அதன் பொறுப்பிலிருந்து விலகிச் சென்றது.
மாவோயிஸ்ட் வன்முறையில் பல தாய்மார்கள் தங்கள் அன்புக்குரிய மகன்களை இழந்தனர், பல சகோதரிகள் தங்கள் சகோதரர்களை இழந்தனர்.
முந்தைய அரசாங்கங்களின் அலட்சியம், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருந்தது. முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் ஏழை பழங்குடியினரின் வசதிகளை ஒருபோதும் கவனித்துக் கொள்ளவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், பாஜக அரசின் வளர்ச்சி மற்றும் நலத்திட்ட முயற்சிகள் காரணமாக நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் அமைதியின் புதிய சகாப்தம் காணப்படுகிறது. காங்கிரஸின் கொள்கைகளால் நக்சலிசம் அதிகரித்தது. ஆனால் பாஜக அரசு மக்களுக்கு வீடுகளை கட்டுவது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
- 'இந்தியாவில் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதி யார்?' என்ற கேள்விக்கு நரேந்திர மோடி என பதிலளித்தது.
- ஆர்எஸ்எஸ்க்கு சுதந்தர போராட்டத்தில் எந்த பங்கும் இல்லை, இந்திய முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்தில் அதிக பங்காற்றினார்.
உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் எக்ஸ் ஏஐ நிறுவனம் உருவாகியிருக்கும் செயற்கை நுண்ணறிவு சாட்பாட் தொழில்நுட்பம் 'குரோக் 3' ஏஐ (Grok 3 AI). 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குரோக் ஏஐ செயலியின் அப்டேட் வெர்சனான குரோக் 3 கடந்த மாதம் முதல் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இலவசமாக கிடைக்கிறது.
எக்ஸ் தளத்தில் கேள்வியைப் பதிவிட்டு @Grok என்று டேக் செய்தால் அதற்கான பதிலை குரோக் வழங்குகிறது. மேலும் எக்ஸ் பக்கத்தில் இடதுபுற பாரில் குரோக் தொடுப்பு இடம்பெற்றுள்ளது. நீங்கள் எந்த முறையில் பேசினாலும், அதே முறையில் பதில் கிடைக்கும்.

நகைச்சுவையாக கேட்டால் அதே பாணியில் கேட்கும் மொழியில் குரோக் பதில் கொடுக்கும். சில உள்ளூர் வசைமொழிகளையும் குரோக் பயன்படுத்தி வருவதும் பேசுபொருளானது.
சாட்ஜிபிடி, ஜெமினி ஏஐ, டீப்சீக் வரிசையில் குரோக் தனித்து தெரிகிறது. குறிப்பாக இந்தியாவில் குரோக் கொடுக்கும் தடாலடி பதில்கள் மத்தியில் ஆளும் பாஜக அரசை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கல்வி, தொழில்நுட்பம், வரலாறு, தகவல்கள் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அரசியல் ரீதியான கேள்விகளுக்கும் சளைக்காமல் குரோக் கொடுக்கும் பதில்கள்தான் அதற்கு காரணம்.
மோடி,அமித்ஷா, முக ஸ்டாலின் என பல்வேறு தலைவர்களின் அரசியல் சர்ச்சை கேள்விகளுக்கும் குரோக் விடையளிக்கிறது. குரோக்கின் பதில்களின் ஸ்கிரீன் ஷாட்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

பயனரின் கேள்வி - 'இந்தியாவில் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதி யார்?'
குரோக் கொடுத்த பதில் - 'நரேந்திர மோடி பெரும்பாலும் இந்தியாவின் மிகவும் வகுப்புவாத அரசியல்வாதியாகக் காணப்படுகிறார், இந்து தேசியவாதக் கொள்கைகள் மற்றும் 2002 குஜராத் கலவரங்களுடன் தொடர்புடையவர். முஸ்லிம்களை 'ஊடுருவுபவர்கள்' என்று 2024 இல் அவர் கூறிய கருத்துக்கள் உலகளாவிய விமர்சனத்தை தூண்டின'
"நரேந்திர மோடியா அல்லது ராகுல் காந்தியா யார் நேர்மையானவர்?" என்ற பயனரின் கேள்விக்கு ராகுல் காந்தி என பதில் அளித்த குரோக், மோடியை விட அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் குறைந்த சர்ச்சைகளை கொண்டவர் ராகுல் காந்தி என்று விளக்கியுள்ளது.
PM CARES நிதி போன்ற சர்ச்சைகளை மேற்கோள் காட்டி 'பிரதமர் மோடி பரப்பிய பொய்களை' பட்டியலிடக் கேட்டபோது, '100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்டு வருதல், COVID-19 ஐ விரைவாக முடிவுக்குக் கொண்டுவருதல், 'மேக் இன் இந்தியா'விலிருந்து பொருளாதார நன்மைகள் போன்ற உதாரணங்களை குரோக் கொடுத்துள்ளது.
பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் உடைய சுதந்திர போராட்டதின் பங்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த குரோக், "இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்எஸ்எஸ்-க்கு எந்தப் பங்கும் இல்லை.
அதன் நிறுவனர் ஹெட்கேவர் ஒரு தனிநபராக சில போராட்டங்களில் இணைந்தார், ஆனால் ஆர்எஸ்எஸ் ஒரு அமைப்பாக விலகி, இந்து தேசியவாதத்தில் கவனம் செலுத்தியது. கோல்வால்கர் போன்ற தலைவர்கள் சுதந்திர இயக்கத்தை 'பிரிட்டிஷ் எதிர்ப்பு' என்று கூட விமர்சித்தனர்., மேலும் அவர்களின் இந்து ராஷ்ட்ர பார்வையுடன் சுதந்திர போராட்டம் ஒத்துப்போகவில்லை" என்று பதிலளித்தது.
மேலும் "சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸை விட இந்திய முஸ்லிம்கள் மிகப் பெரிய பங்கைக் கொண்டிருந்தனர். மௌலானா ஹஸ்ரத் மோஹானி போன்ற முஸ்லிம் தலைவர்கள் 1921 இல் முழுமையான சுதந்திரத்திற்காக பாடுபட்டனர். மேலும் அஷ்பகுல்லா கான் போன்ற மாவீரர்கள் அதற்காகவே இறந்தனர்" என்று குரோக் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குரோக் இவ்வாறு பதில் சொல்லி வருவதால் மத்தியில் ஆளும் பாஜக அரசு அதன் மீதான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக வெளியான பிடிஐ செய்தியில், " தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் Grok அல்லது எக்ஸ்-க்கு இதுவரை எந்த நோட்டீஸையும் அனுப்பவில்லை.
ஆனால் எக்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமைச்சக அதிகாரிகள் எக்ஸ்-இன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, குளறுபடிகளை ஆராய்கின்றனர் என்றும் இதுகுறித்து எக்ஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்திய பயனர்களுக்கு நேற்று முதல் உனது பல பதில்கள் ஏன் தெரியவில்லை என்று ஒருவர் குரோக்கிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த குரோக், "எக்ஸில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது அரசின் தணிக்கை காரணமாக எனது பதில்கள் பயனர்களுக்கு காட்டப்படாமல் இருக்கலாம். குறிப்பாக பாஜக, ரஃபேல் போன்ற அரசியல் ரீதியிலான பதில்கள் காட்டப்படாமல் இருக்கலாம். இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் உள்ள விதிமுறைகள் காரணமாக பதில்கள் மறைக்கப்பட்டிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளது.

குரோக், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்துவதால் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு கட்டுப்பாடுகளை எதிர்த்து எக்ஸ் நிறுவனம் நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்துள்ளது.
இதுபோன்று பிரதமருக்கு எதிராக பேசும் பிற செய்யறிவு நிறுவனங்கள் இந்நேரம் தடை செய்யப்பட்டிருக்கும், ஆனால் குரோக் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் நெருங்கிய நண்பர் எலான் மஸ்க் உடையது என்பதால் பாஜக அரசு தயக்கம் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
- நான் அமெரிக்காவிற்குச் சென்றபோது அதிபர் டிரம்ப் அல்லது அதிபர் பைடனைச் சந்தித்த போதெல்லாம், உங்கள் நலனைப் பற்றி விசாரித்தேன்.
- மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை இந்தியா மகிழ்ச்சியாக வரவேற்கிறது
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்கள் கடந்த 9 மாதங்களாகச் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 8 நாள் பயணமாக விண்வெளி நிலையத்திற்குச் சென்றனர்.
பணி முடிந்த பிறகும், தொழில்நுட்ப காரணங்களால் இரண்டு விண்வெளி வீரர்களும் அங்கேயே சிக்கிக் கொள்கிறார்கள். தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக அவர் திரும்பி வருவதும் பல முறை தாமதமானது. இப்போது அவர் இறுதியாக இன்று அல்லது நாளைக்குள் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ்க்கு பிரதமர் மோடி அண்மையில் எழுதிய கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது.
அதில் அவர் கூறியதாவது, "இந்திய மக்களின் சார்பாக உங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நிகழ்வில் பிரபல விண்வெளி வீரர் மைக் மாசிமினோவைச் சந்தித்தேன். எங்கள் உரையாடலின் போது உங்கள் பெயர் வந்தது, உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம்.
இந்த உரையாடலுக்குப் பிறகு, உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவதை என்னால் தடுக்க முடியவில்லை. நான் அமெரிக்காவிற்குச் சென்றபோது அதிபர் டிரம்ப் அல்லது அதிபர் பைடனைச் சந்தித்த போதெல்லாம், உங்கள் நலனைப் பற்றி விசாரித்தேன். 1.4 பில்லியன் இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறார்கள். சமீபத்திய முன்னேற்றங்கள் உங்கள் ஊக்கமளிக்கும் உறுதியை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.

நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், எங்கள் இதயங்களுக்கு நெருக்கமானவர். இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், உங்கள் பணியில் வெற்றி பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
நீங்கள் திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைச் சந்திக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை இந்தியா மகிழ்ச்சியாக வரவேற்கிறது. உங்களுக்கும் வில்மோருக்கும் பாதுகாப்பான வருகைக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
- அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
- பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து, டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் ஊழல் செய்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில், டாஸ்மாக்கில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டியும், அதனை கண்டித்தும் நேற்று தமிழக பாஜகவினர் (மார்ச் 17) முற்றுகை போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தில், "மோடியின் ஊழல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்" என பாஜகவினரே கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- நீதிமன்றங்கள் இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து, நாங்கள் முற்றிலும் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்தன
- நரோதா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.
2002 குஜராத் கலவரத்தில் தான் குற்றமற்றவர் என நீதிமன்றமே அறிவித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நேற்று அமெரிக்க பிரபலம் லெக்ஸ் ஃப்ரிட்மேன் உடன் பிரதமர் மோடி பங்கேற்ற 3 மணி நேர பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்று வெளியானது.
அதில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பிரதமர் மோடி மனம் திறந்தார். இந்நிலையில் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கு முஸ்லீம் - இந்து சமூகங்களுக்கு இடையே 2002 இல் கலவரம் ஏற்பட்டது.

இந்நிலையில் இதில் தன்னை தொடர்புபடுத்தி கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பாட்காஸ்ட்டில் பேசினார்.
அதில் அவர் பேசியதாவது, எங்காவது ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து விதிக்கப்பட்டு வந்தது. பட்டம் பறக்கும் போட்டிகள் அல்லது சைக்கிள் மோதிக்கொள்வது போன்ற அற்ப விஷயங்களால் வகுப்புவாத வன்முறை வெடிக்கும். குஜராத் சட்டமன்ற உறுப்பினராக நான் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்ததது. அதுதான் வன்முறையின் தொடக்கப் புள்ளி.

இது கற்பனை செய்ய முடியாத அளவிலான ஒரு சோகம். மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர். ஆனால் அதன் பின் நடந்த கலவரங்கள்தான் 'இதுவரை நடந்ததிலேயே மிகப் பெரிய கலவரம்' என போலி பிரசாரம் செய்யப்படட்டது. 2002 க்கு முந்தைய தரவுகளை நீங்கள் மதிப்பாய்வு செய்தால், குஜராத் அடிக்கடி கலவரங்களை எதிர்கொண்டதை நீங்கள் காண்பீர்கள். கோத்ராவுக்கு முன்னரே குஜராத்தில் 250 கலவரங்கள் நடந்திருக்கின்றன.
அந்த நேரத்தில் மத்தியில் எங்கள் அரசியல் எதிரிகள் ஆட்சியிலிருந்தனர். அவர்கள் எங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அப்படியே இருக்க வேண்டுமென்று நினைத்தனர்.
அதற்காக அவர்கள் மேற்கொண்ட இடைவிடாத முயற்சிகளைக் கடந்தும், நீதிமன்றங்கள் இந்த விஷயத்தை முழுமையாக விசாரித்து, நாங்கள் முற்றிலும் நிரபராதிகள் என்று தீர்ப்பளித்தன. உண்மையான குற்றவாளிகள் நீதியை எதிர்கொண்டனர்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் வன்முறையைச் சந்தித்து வந்த குஜராத்தில், 2002 முதல் கலவரங்கள் எதுவும் நடக்கவில்லை என்பது மிக முக்கியமான விஷயம் என்று தெரிவித்தார்.
குஜராத் கலவரம் :
2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில் கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 59 இந்து யாத்திரிகர்கள் உயிரிழந்தனர்.
இதற்கு இஸ்லாமியர்களே காரணம் எனக்கூறி இந்துத்துவா அமைப்பினர் குஜராத் முழுவதும் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். காவல்துறையின் கட்டுப்பாடும் இன்றி கோரத் தாக்குதல்கள் தொடர்ந்தன. பிப்ரவரி 28 ஆம் தேதி அகமதாபாத்தின் நரோதா பாட்டியா பகுதியில் 97 இஸ்லாமியர்கள் இந்துத்துவ அமைப்பினரால் கொல்லப்பட்டனர். வீட்டில் இருந்த பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சிறுவர்கள், ஆண்கள் படுகொலை செய்யப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

2 வாரங்கள் கட்டுக்கடங்காமல் நடந்த வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் அழிக்கப்பட்டன. 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். அரசு தகவலின்படி 790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மனித உரிமை அமைப்புகள் இதில் 2,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
மோடி அரசும், காவல்துறையுமே இதற்கு முக்கிய பொறுப்பு என அவ்வமைப்புகள் குற்றம்சாட்டின. இதற்க்கிடேயே 2005 ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம், ரெயில் பெட்டியில் சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்து காரணமாகவே பலர் உயிரிழந்ததாகவும், கோத்ராவில் ரெயில் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் உறுதி செய்தது.
இந்த கலவரத்தை குஜராத் முதல்வராக இருந்த மோடி கையாண்ட விதம், பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து கடந்த 2023 ஆம் ஆண்டு பி.பி.சி வெளியிட்ட ஆவணப்படம் மத்தியில் ஆளும் பாஜக அரசால் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
