என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "US"

    • குடியரசு கட்சி எம்.பி.க்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள்.
    • ஜனாபதிபதி டிரம்பும் அவருடைய குழுவும் ரஷியாவுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு போரிடுகிறார்கள்.

    அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்வைத்து பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்தார். மேலும் உலக நாடுகளிடையே நிலவி வரும் மோதல்களை நிறுத்துவதாக கூறி வர்த்தக தடை, வரிவிதிப்பு என மிரட்டி வருகிறார்.

    2022-ம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்த நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைவிதித்தன. குறிப்பாக, ரஷியாவின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக உள்ள கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இதற்கு ஒருபடி மேல் ஏறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குதி செய்யும் நாடுகள் மீது அதிகப்பட்ச வரிவிதித்தார்.

    ஏற்கனவே இந்தியா மீது 25 சதவீதம் வரிவிதித்தநிலையில் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீதம் என உச்சபட்சமாக 50 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் சிறு-குறு-நடுத்தர தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இந்தநிலையில் ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாடாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர், "குடியரசு கட்சி எம்.பி.க்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான மசோதாக்களை தாக்கல் செய்து கொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும்.

    இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்க சொல்லியுள்ளேன்" என்றார். குடியரசு கட்சி செனட் சபை எம்.பி. லின்ட்லே கிராகம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ரஷிய எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் இறக்குமதி வரிவிதிக்கும் வகையில் புதிய மசோதாவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கு செனட் சபையில் 85 எம்.பி.க்கள் ஆதரவளித்திருந்தனர். மீண்டும் இதற்கான வாக்களிப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து லின்ட்லே கூறுகையில், "ஜனாபதிபதி டிரம்பும் அவருடைய குழுவும் ரஷியாவுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு போரிடுகிறார்கள். இதன்மூலம் ரத்த ஆறு ஓடுவது நிறுத்தப்படும். புதினின் போர் எந்திரத்திற்கு கச்சா எண்ணெய் வாங்கி நிதியளிக்கும் சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் மீது விரைவில் சம்மட்டி அடி கொடுக்கப்படும்" என்றார்.

    • வெள்ளை ஆப்பிரிக்க விவசாயிகள் துன்புறுத்தப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதி அளிக்கிறது.
    • டிரம்ப்பின் குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

    ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வருகிற 22, 23-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    தென் ஆப்பிரிக்காவில் ஜி-20 மாநாடு நடைபெறுவது முற்றிலும் அவமானகரமானது. அங்கு வெள்ளை நிற விவசாயிகளிடம் இருந்து நிலம் பறிக்கப்பட்டு தாக்குதல், கொலை செய்யப்படுகின்றனர்.

    அங்கு சிறுபான்மையினராக உள்ள வெள்ளை ஆப்பிரிக்க விவசாயிகள் துன்புறுத்தப்படுவதற்கும் தாக்கப்படுவதற்கும் தென் ஆப்பிரிக்க அரசு அனுமதி அளிக்கிறது. இதனால் அமெரிக்காவில் இருந்து ஜி 20 உச்சி மாநாட்டில் யாரும் பங்கேற்க மாட்டார்கள்' என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். தற்போது இந்த மாநாட்டை அமெரிக்கா முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளார்.

    டிரம்ப்பின் இந்த குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உலகின் பிற நாடுகளுடன் உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளோம்.
    • வெளிநாடுகளுடன் சிறந்த உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

    அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக கனடா வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையானது. இதையடுத்து கனடாவுடனான அனைத்து விதமான வர்த்தக பேச்சுவார்தையை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    இந்த நிலையில் கனடா பிரதமர் மார்க் கார்னி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    உலகின் பிற நாடுகளுடன் உறவை கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளோம். உலக பொருளாதாரத்தில் 60 சதவீத பங்களிப்பை வழங்கும் ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதை விட சிறந்த இடம் வேறு இல்லை.

    இந்தியாவுடனான உறவில் நாங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், இந்தியாவுடனான வர்த்தக உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இந்திய பிரதமர் மோடியை சந்தித்தது இல்லை. ஆனால் எங்களது வெளியுறவு துறை மந்திரி உள்ளிட்ட பிற மந்திரிகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளுடன் சிறந்த உறவை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

    அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்கும் தன்மையை மாற்ற வேண்டும். இது ஒரே இரவில் நடக்காது என எனக்கு தெரியும். நாங்கள் மிக விரைவில் முன்னேறி வருகிறோம் என்றார். 

    • இந்த நடைமுறை வருகிற டிசம்பர் 26-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
    • புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் போது போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து செல்பவர்களை எளிதில் தடுக்க முடியும்.

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் குடியேற்றம், வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவுக்கு வந்து, செல்வதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

    அதாவது வெளிநாட்டவர்கள் மற்றும் கிரீன் கார்டு உள்ளவர்கள் அமெரிக்காவுக்கு வரும் போதும், செல்லும் போதும், தங்களது புகைப்படங்கள் மற்றும் கைரேகை விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    அமெரிக்காவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் மட்டும் இது நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளிலும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நடைமுறை வருகிற டிசம்பர் 26-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்த புதிய விதியின் கீழ், அமெரிக்காவிற்கு வரும் போது அல்லது வெளியேறும்போது அமெரிக்க குடிமக்கள் அல்லாதவர்களிடம் இருந்து புகைப்படங்கள் மற்றும் பிற பயோமெட்ரிக் தகவல்களை சேகரிப்பார்கள். முன்பு 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 79 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இது அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டு பாதுகாப்பு துறை ஒவ்வொரு பயணியுடனும் இணைக்கப்பட்ட புகைப்பட தரவுத்தளங்களை தொகுத்து, பாஸ்போர்ட்டுகள், பயண ஆவணங்கள் மற்றும் எல்லை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட புகைப்படங்களை இணைக்கும். இந்த படங்கள் பின்னர் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் எடுக்கப்பட்ட நிகழ்நேர புகைப்படங்களுடன் ஒப்பிடப்பட்டு சரி பார்க்கப்படும்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் போது போலி ஆவணங்கள் மூலம் அமெரிக்காவுக்கு வந்து செல்பவர்களை எளிதில் தடுக்க முடியும். அதேபோல, இந்த நடவடிக்கையின் மூலம் எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதோடு, ஆள்மாறாட்டம் மற்றும் விசா காலம் முடிவடைந்தும் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டு பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆஷ்லே டெல்லிஸ் ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளை சந்தித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
    • அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க ஆய்வாளரும், தெற்காசிய வெளியுறவு கொள்கை ஆலோசகருமான ஆஷ்லே டெல்லிஸ், அமெரிக்க விமானப் படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கியதாகவும், சீன அரசு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஆஷ்லே டெல்லிஸ் (64), வர்ஜீனியாவின் வியன்னாவில் உள்ள அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் ரகசிய ஆவணங்கள் உட்பட தேசிய பாதுகாப்பு தகவல்களை சட்டவிரோதமாக வைத்து இருந்ததாக நீதித்துறை தெரிவித்துள்ளது.

    அமெரிக்க-இந்திய உறவுகள் குறித்து மரியாதைக்குரிய குரலாகக் கருதப்படும் டெல்லிஸ், பல நிர்வாகங்களின் கீழ் பணியாற்றியுள்ளார். இவர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர்.

    மேலும், வெளியுறவுத்துறைக்கு ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பென்டகனின் நிகர மதிப்பீட்டு அலுவலகத்தின் ஒப்பந்ததாரராகவும் FBI பிரமாணப் பத்திரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்.

    ஆஷ்லே டெல்லிஸ் வாஷிங்டன் சிந்தனைக் குழுவான கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸில் ஒரு மூத்த உறுப்பினராகவும் உள்ளார்.

    • கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல அல்லாமல், தபால் சேவை பொருட்களுக்கு கூடுதல் அடிப்படை அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை.
    • இந்த சாதகமான வரி அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவுச் சுமையை கணிசமாக குறைக்கிறது.

    புதுடெல்லி:

    இந்திய தபால் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தபால் துறை இன்று முதல் அமெரிக்காவுக்கான அனைத்து வகை சர்வதேச தபால் சேவைகளையும் மீண்டும் தொடங்குகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

    அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படி, புதிய கட்டண விதியின் கீழ் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் தபால் ஏற்றுமதிகளுக்கான அறிவிக்கப்பட்ட சரக்கு வரி மதிப்பில் 50 சதவீத சலுகையில் அனுப்ப முடியும்.

    கூரியர் அல்லது வணிக சரக்குகளைப் போல அல்லாமல், தபால் சேவை பொருட்களுக்கு கூடுதல் அடிப்படை அல்லது தயாரிப்பு சார்ந்த வரிகள் எதுவும் விதிக்கப்படுவதில்லை. இந்த சாதகமான வரி அமைப்பு ஏற்றுமதியாளர்களுக்கான ஒட்டுமொத்த செலவுச் சுமையை கணிசமாக குறைக்கிறது. இதனால் இந்த அஞ்சல் சேவையில் சிறுகுறு தொழில் செய்பவர்கள், கைவினைஞர்கள், சிறு வணிகர்கள் மற்றும் மின் வணிக ஏற்றுமதியாளர்கள் மிகவும் மலிவு விலையில் ஏற்றுமதி செய்து தொழில் வளர்ச்சியை பெருக்கிக்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கடந்த ஆகஸ்டு 25-ந்தேதிக்கு பின்னர், அமெரிக்காவுக்கு இந்திய தபால் துறையின் தபால், ஆவணங்கள் தவிர்த்த இதர சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. புதிய வரி விகிதம் மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்காக இந்த சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடி பிரச்சனை என்பதே அமெரிக்காவின் நீண்டகால கொள்கை.
    • காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதை இந்தியா-பாகிஸ்தானிடமே விட்டுவிட்டோம்.

    நியூயார்க்:

    காஷ்மீர் பிரச்சனை இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நீடிக்கிறது. இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் காஷ்மீர் பிரச்சனையில் 3-ம் நபர் தலையீட்டை அனுமதிக்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

    இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை என அமெரிக்கா கூறியுள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நேரடி பிரச்சனை என்பதே அமெரிக்காவின் நீண்டகால கொள்கை. இதில் இந்தியா-பாகிஸ்தான் இடையே அமெரிக்காவை நிறுத்துவதில் விருப்பம் இல்லை' என தெரிவித்தார்.

    மேலும் அவர், 'அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கையில் போதுமான பிரச்சனைகள் இருக்கின்றன. எனவே காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதை இந்தியா-பாகிஸ்தானிடமே விட்டுவிட்டோம். எந்த பிரச்சனை தொடர்பாகவும் அமெரிக்காவிடம் உதவி கேட்டால் செய்வதற்கு தயாராக உள்ளோம்' என்றும் கூறினார்.

    அதேநேரம் இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் நடந்த ராணுவ மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு டிரம்ப் உதவினார் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • ரஷியாவிடம் வர்த்தகம் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார்.
    • ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் மிகவும் தெளிவாக கூறி உள்ளார்.

    வாஷிங்டன்:

    இந்திய பொருட்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் அறிவித்தார்.

    மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அபராதமாக மேலும் 25 சதவீத வரியையும் விதித்தார்.

    ரஷியாவிடம் வர்த்தகம் செய்வதன் மூலம் உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக உதவுகிறது என்று டிரம்ப் குற்றம்சாட்டினார். இதற்கிடையே உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் புதின்-டிரம்ப் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இந்த நிலையில் உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷியாவுக்கு நெருக்கடி கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி செயலாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷியா மீது மறைமுக அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் மீது கடுமையான வரிகளை விதித்து உள்ளார்.

    இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர மிகப் பெரிய பொது அழுத்தத்தை அளித்துள்ளார். இதில் இந்தியா மீதான தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்து உள்ளார். ரஷியா-உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் மிகவும் தெளிவாக கூறி உள்ளார்.

    ரஷியாவும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவை மீண்டும் மதிக்கின்றன. இது ரஷியா- உக்ரைனுடன் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள 7 மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.

    இந்தியா-பாகிஸ்தான் மோதலை தடுத்து நிறுத்தினோம். இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் வர்த்தகத்தை மிகவும் சக்திவாய்ந்த முறையில் பயன்படுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • டி.ஆர்.எப்பை லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் இணைப்பது தவறானது.
    • அந்த அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானால் அகற்றப்பட்டது.

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை இயக்கமான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (டி.ஆர்.எப்) பொறுப்பேற்றது.

    இதையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. அதன்பின் இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதற்கிடையே தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்து அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. இதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்தது.

    அதேவேளையில் இதற்கு பாகிஸ்தான் ஆட்சேபனை தெரிவித்தது. லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு முடக்கப்பட்டுவிட்டது என்றும் தாக்குதலில் தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் இயக்கம் ஈடுபட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இஷாக் தார் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி இஷாக் தார் அமெரிக்காவுக்கு சென்றார். அப்போது வாஷிங்டனில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:-

    டி.ஆர்.எப் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்துள்ளது அந்நாட்டின் இறையாண்மை முடிவு ஆகும். டிஆர்எப்பை பயங்கரவாதக் குழுவாக அமெரிக்கா பட்டியலிடுவதில் பாகிஸ்தானுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தாக்குதலில் அந்த இயக்கத்தினர் சம்பந்தப்பட்டதற்கான ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் நாங்கள் வரவேற்கிறோம். டி.ஆர்.எப்பை லஷ்கர்-இ-தொய்பா அமைப்புடன் இணைப்பது தவறானது. அந்த அமைப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானால் அகற்றப்பட்டது என்றார்.

    இதற்கிடையே இஷாக் தார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோவை சந்தித்து பேசினார். இதில் பயங்கரவாத எதிர்ப்பு, வர்த்தகம், கனிமங்கள் மற்றும் சுரங்கத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். இந்த சந்திப்பின்போது, இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் ஆக்கப்பூர்வமான பங்கை பாராட்டியதாக இஷாக் தார் தெரிவித்தார்.

    • ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
    • குடிமக்களை பாதுகாக்க மாகாண மற்றும் மத்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

    அமெரிக்க இராணுவம், ஈரானில் உள்ள இஸ்ஃபஹான், ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

    இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய நகரங்களான லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டன் டிசி ஆகியவற்றில் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கை நிலையில் உள்ளன.

    இந்த நகரங்களில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளன.

    நியூயார்க் நகர காவல்துறை (NYPD) வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகரின் மத, கலாச்சார மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் கூடுதல் படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரானில் உருவாகி வரும் சூழ்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், எந்தவொரு சாத்தியமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள மத்திய படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் NYPD கூறியுள்ளது.

    வாஷிங்டன் டிசியின் பெருநகர காவல்துறை (Metropolitan Police Department) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணித்து வருவதாகவும், குடிமக்களை பாதுகாக்க மாகாண மற்றும் மத்திய அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றாலும், மத தளங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை (LAPD) - யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பை அதிகரித்துள்ளது. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் இடங்கள் போன்ற இடங்களில் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் தெரிவித்துள்ளார்.

    தற்போது நம்பகமான அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றும், ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தில் 40 சதவீதம் செங்கடலில் தான் நடைபெறுகிறது.
    • செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கக் கூடாது

    இஸ்ரேலுடன் இணைந்து ஈரானை தாக்கினால், அமெரிக்க கப்பல்களை செங்கடலில் மூழ்கடிப்போம் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

    "ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்தால், ஹவுதி ஆயுதப் படைகள் செங்கடலில் உள்ள அமெரிக்க சரக்குக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை குறிவைக்கும்" என்று ஹவுதி இராணுவ செய்தித் தொடர்பாளர் சஹ்யா சாரி கூறினார்.

    முன்னதாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய பின்னர், ஹவுதிகள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான கப்பல்களைத் தாக்கினர். இஸ்ரேலை ஆதரிக்கும் நாடுகளின் கப்பல்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்களும் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, ஹவுதிகள் மீது அமெரிக்கா பெரிய அளவில் தாக்குதலை நடத்தியது.

    மே மாதம் அமெரிக்காவும் ஹவுதிகளும் ஓமானின் மத்தியஸ்தத்துடன் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை எட்டினர். இந்த ஒப்பந்தம் செங்கடல் மற்றும் பாப் அல்-மந்தாப் ஜலசந்தியில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கக் கூடாது என்று கூறுகிறது.

    உலகின் வணிகக் கப்பல் போக்குவரத்தில் 40 சதவீதம் செங்கடலில் தான் நடைபெறுகிறது. செங்கடலையும் மத்தியதரைக் கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய், உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் பாதையாகும்.

    செங்கடல் வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டால் அது உலக சந்தைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னதாக, ஹவுதி தாக்குதலைத் தொடர்ந்து, கப்பல்கள் பாதையிலிருந்து திசைதிருப்பப்பட்டு ஆப்பிரிக்காவின் குட் ஹோப் முனையிலிருந்து சில காலம் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    • திபெத்திய பவுத்த தலைவரான 14-வது தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாள் ஜூலை மாதம் 6-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
    • தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து இரு அவைகளில் உள்ள எம்.பி.கள் வாக்களிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி டிரம்புக்கு இந்த தீர்மானம் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

    வாஷிங்டன்:

    திபெத்திய பவுத்த தலைவரான 14-வது தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாள் ஜூலை மாதம் 6-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்தநிலையில் தலாய் லாமாவின் பிறந்தநாளை கருணை தினமாக கொண்டாட அறிவிக்கக்கோரி அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ஆளும் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் கட்சி பாகுபாடின்றி இந்த தீர்மானத்தை முன்மொழிந்தனர். இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து இரு அவைகளில் உள்ள எம்.பி.கள் வாக்களிக்கும் பட்சத்தில் ஜனாதிபதி டிரம்புக்கு இந்த தீர்மானம் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். தொடர்ந்து தலாய் லாமாவின் பிறந்தநாளான ஜூலை 6-ந் தேதி அமெரிக்காவில் கருணை தினமாக அனுசரிக்கப்படும். இந்த தீர்மானம் வெற்றிப்பெற்று அமல்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    ×