என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய தூதரகம்"

    • உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவர் விடுதியில் தங்கியிருந்தார்.
    • பால் வாங்கி வருவதாகக் கூறி, விடுதியில் இருந்து காலை 11 மணிக்கு கிளம்பியுள்ளார்.

    ரஷியாவில் காணமால் போன இந்திய மாணவரின் சடலமாக மீட்கப்பட்ட சமபவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் அல்வாரைச் சேர்ந்த 22 வயதான அஜித் சிங் சவுத்ரி 2023 ஆம் ஆண்டு எம்பிபிஎஸ் படிக்க ரஷியா சென்றார்.

    ரஷியாவின் உஃபா நகரில் உள்ள பாஷ்கிர் மாநில மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த அவர் விடுதியில் தங்கியிருந்தார்.

    இந்நிலையில் கடந்த 19ம் தேதி பால் வாங்கி வருவதாகக் கூறி, விடுதியில் இருந்து காலை 11 மணிக்கு கிளம்பியுள்ளார். அதன்பிறகு, அவர் மீண்டும் விடுதிக்கு வரவில்லை.

     இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், வொயிட் நதியின் அருகே உள்ள அணையில் அஜித் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

    அஜித்தின் உடல் நண்பர்களால் அடையாளம் காணப்பட்டது. அஜித் இறந்தது குறித்து இந்திய தூதரகம் எந்த அறிக்கையும் வெளியிடாத நிலையில் நேற்று அஜித்தின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நிலத்தை விற்று அஜித்தை ரஷியாவுக்கு படிக்க அனுப்பிய நிலையில் அவர் உயிரிழந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

    அஜித்தின் உடலை விரைந்து இந்தியா கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அஜித் சவுத்ரியின் மரணத்திற்குப் பின்னால் ஒரு மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.

    இதனைத்தொடர்ந்து மாணவரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. 

    • இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
    • இந்திய தூதரகங்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து உளவு வலையமைப்பை நடத்தி வருவதாகக் SFJ குற்றம் சாட்டியுள்ளது.

    அமெரிக்காவைச் சேர்ந்த "Sikhs for Justice" (SFJ) என்ற காலிஸ்தான் அமைப்பு, கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய தூதரகத்தை செப்டம்பர் 18 அன்று முற்றுகையிடப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

    அந்த அமைப்பின் அறிவிப்பின்படி, செப்டம்பர் 18 காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, 12 மணி நேரத்திற்கு இந்திய தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்திய-கனடா வம்சாவளியினர் தூதரகத்திலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

    மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களைக் குறிவைத்து உளவு வலையமைப்பை நடத்தி வருவதாகக் SFJ குற்றம் சாட்டியுள்ளது.

    2023 இல் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய உளவு அமைப்பின் பங்கு குறித்து அப்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்ததை SFJ அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

    இதற்கிடையே சில வாரங்கள் முன்பு கனடா அரசு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தங்கள் நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், அவற்றுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி கிடைப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • கம்போடியா-தாய்லாந்து இடையே நீடிக்கும் எல்லை பிரச்சினை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.
    • எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களை இரு நாடுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகிறது.

    புதுடெல்லி:

    தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே உள்ள எல்லையில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகள் இடையே நீடிக்கும் எல்லை பிரச்சினை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

    எல்லையில் இரு நாடுகளும் பீரங்கி மற்றும் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தி தாக்கிக்கொண்டனர். தாய்லாந்து F16 விமானங்களைப் பயன்படுத்தி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

    இரு நாடுகள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு ராணுவ வீரர் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர். எனவே எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களை இரு நாடுகளும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றி வருகிறது.

    இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    அதில், தாய்லாந்து-கம்போடியா மோதல் காரணமாக அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. எனவே தாய்லாந்தின் சுரின், சிசாகெட் உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கு இந்தியர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • இரவு நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் இருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • இந்த தாக்குதலுக்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் ஸ்பானிஷ் போர்க் என்ற பகுதியில் இந்து மத கோவிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. இந்த கோவில் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    20 முதல் 30 துப்பாக்கி குண்டுகள் வரை கோவிலின் கட்டிடம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்கள் மீது பாய்ந்துள்ளன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இரவு நேரத்தில் பக்தர்கள் கோவிலுக்குள் இருந்தபோது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக தூதரகம் கூறும்போது, இஸ்கான் கோவில் மீது நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். அனைத்து பக்தர்களுக்கும், சமூகத்திற்கும் துணைத் தூதரகம் முழு ஆதரவை வழங்குகிறது. குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த உள்ளூர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

    • கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
    • இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.

    ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், கத்தாரில் தோஹாவில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானப்படை தளம் மீது நேற்று இரவு ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

    அமெரிக்கா ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கையாக வளைகுடா நாடுகள் தங்கள் வான்வழியை மூடியுள்ளன.

    இந்நிலையில், கத்தாரில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரானின் தாக்குதல் எதிரொலியாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பதிவில், "கத்தாரில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், வீட்டிலேயே இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. கத்தார் அதிகாரிகளிடமிருந்து வரும் உள்ளூர் செய்திகள், அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள்" என்று தெரிவித்துள்ளது. 

    • இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
    • ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலை குறித்து 24/7 கட்டுப்பாட்டு அறை ஒன்று வெளியுறவு அமைச்சகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் இருந்து 110 இந்திய மாணவர்கள் அர்மேனியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டதாக என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ஈரானில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாக தெஹ்ரானில் இருந்த 110 இந்திய மாணவர்கள் அர்மேனியாவுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 90 பேர் காஷ்மீரை சேர்ந்தவர்கள்.

    மேலும் தெஹ்ரானில் இருந்து சொந்த ஏற்பாடுகளில் வெளியேறக்கூடிய மற்ற இந்தியர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

    ஈரான் மற்றும் இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலை குறித்து 24/7 கட்டுப்பாட்டு அறை ஒன்று வெளியுறவு அமைச்சகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.  

    தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் 24/7 அவசர உதவி எண்ணை (98 9128109115, 98 9128109109) அமைத்துள்ளது. வாட்ஸ்அப் எண்களும் (98 901044557, 98 9015993320, 91 8086871709) வழங்கப்பட்டுள்ளன.

    இஸ்ரேல் கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் அணு, ஏவுகணை மற்றும் இராணுவத் தளங்களைத் தாக்கியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இந்தியா இரு நாடுகளையும் பதற்றத்தைத் தணிக்கவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் வலியுறுத்தியுள்ளது. வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இஸ்ரேல் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர்களுடன் நிலைமை குறித்து விவாதித்தார்.

    • 28 இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானது.
    • பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது.

    கென்யாவில் நடந்த கோரமான சாலை விபத்தில் கத்தாரில் வசிக்கும் ஐந்து இந்தியர்கள் உயிரிழந்தனர்.

    கத்தாரில் இருந்து கென்யாவுக்கு சுற்றுலா சென்ற 28 இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதாக கத்தாரில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 

    மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் அவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

    20 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 5 பேரின் நிலை கலவைகிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

    விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  

    • என்ஜினீயர் வீரமணி பாண்டியன் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது.
    • சமூக ஆர்வலர் ஷாஹிப் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

    திருச்சி:

    திருச்சியை சேர்ந்தவர் வீரமணி பாண்டியன் (வயது 45). மெக்கானிக்கல் என்ஜினீயரான இவர் கடந்த செப்டம்பர் மாதம் சவுதி அரேபியா நாட்டுக்கு வேலைக்காக புறப்பட்டுச் சென்றார். பின்னர் புதிய வேலையில் சேர்ந்த அவர் வேலை பிடிக்காமல் ஓரிரு தினங்களில் ஊர் திரும்ப முடிவு செய்தார்.

    அதற்காக அவர் ரியாத் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சுமார் 2 மாத சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு சுய நினைவு திரும்பி உள்ளது. அதைத்தொடர்ந்து மீண்டும் ஊர் திரும்புவதற்கு அவர் முயற்சித்தார். ஆனால் அவரது மருத்துவ செலவினத்தை பார்த்தபோது அவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு 1.4 லட்சம் சவுதி ரியால்கள் மருத்துவ கட்டணமாக செலுத்தக் கூறி இருந்தது.

    இது இந்திய ரூபாயின் பண மதிப்பில் ரூ.30 லட்சம் ஆகும். இப்போது அவர் சமூக ஆர்வலர் ஷாஹிப் என்பவரது பராமரிப்பில் இருந்து வருகிறார். அவர் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு வீரமணிக்கு உதவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, சம்பவம் நடந்தபோது சுயநினைவின்றி இருந்ததால், குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிப்பது வீரமணியின் விருப்பமாக இருக்க வாய்ப்பு இல்லை. இந்த விவகாரம் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.

    மருத்துவமனையில் வீரமணி அனுமதிக்கப்பட்ட நேரத்தில் அடையாளம் தெரியாத சிலர் மருத்துவமனை பதிவேட்டில் கையெழுத்திட்டுள்ளனர். வீரமணி கடந்த செப்டம்பர் 24-ந்தேதி நஜ்ரான் மினரல் வாட்டர் பாட்டில் ஆலையில் பணியில் சேர்ந்தார். இரண்டு நாட்களில் வேலை பிடிக்காததால் வீடு திரும்ப முடிவு செய்தார். அவரை பணியமர்த்திய ஒப்பந்ததாரரும் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு செல்ல அனுமதித்தார்.

    இப்போது மீண்டும் ஊர் திரும்ப மருத்துவமனையின் அனுமதிக்காக வீரமணி காத்திருக்கிறார். உறவினர்களும் இந்திய தூதரகத்தின் உதவியை நாடி இருக்கின்றனர்.

    மருத்துவக்கட்டணத்தை செலுத்தாததால் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வரும் அவரை பத்திரமாக அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளளதோடு, அவரது வருகையை எதிர்பார்த்துள்ளனர்.

    • இலங்கைக்கு வரும் இந்தியர்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுரை வழங்கி உள்ளது.
    • தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பயணிகள் இலங்கை வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்

    கொழும்பு:

    இலங்கையில் கொரோனா தொற்று தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அந்த நாட்டின் சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டது.

    அதன்படி இலங்கை வரும் சர்வதேச பயணிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பயணிகள் இலங்கை வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகடிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இலங்கைக்கு வரும் இந்தியர்கள் இலங்கையின் புதிய கொரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    இது குறித்து தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைக்கு வருகை தரும் இந்திய குடிமக்கள் சமீபத்திய கொரோனா வழிகாட்டுதல்களுக்கு இணங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.

    • போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
    • போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், முட்டை மற்றும் மைகளை வீசினர். மேலும் புகை குண்டுகளை வீசினர்.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு கடந்த 19-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

    இந்தியாவின் பஞ்சாப்பில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித் பால்சிங்குக்கு எதிரான போலீஸ் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூதரகத்தில் இருந்த இந்திய தேசிய கொடியை அகற்றினர்.

    இந்நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அங்கு ஏராளமானோர் திரண்டு கோஷம் எழுப்பினர். இதையடுத்து தூதரகத்தில் இருந்து பல அடி தூரத்துக்கு தடுப்பு அமைக்கப்பட்டு நிறுத்தப்பட்டனர். அப்பகுதியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தூதரகத்துக்குள் யாரும் நுழைந்து விடாதபடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் இந்திய தூதரகத்தை நெருங்கிவிடாதபடி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், முட்டை மற்றும் மைகளை வீசினர். மேலும் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, இந்திய தூதரகம் முன்பு போராட்டம் சிறியதாக தொடங்கினாலும் மாலையில் எண்ணிக்கை அதிகரித்தது. சுமார் 2 ஆயிரம் போராட்டக்காரர்கள் திரண்டனர். அவர்கள் தடுப்புகளை உடைக்க முயன்றனர். அப்போது போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள், மை மற்றும் வண்ண பொடிகளை வீசினர் என்றனர்.

    இந்திய தூதரகத்தில் தேசியக் கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் அகற்றியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தூதரக கட்டிடம் முன்பு பெரிய அளவில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டு இருக்கிறது.

    • சூடான் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் வெடித்தது.
    • இருதரப்பினர் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    கார்டோம்:

    சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.

    துணை ராணுவக் குழுவினரின் சமீபத்திய நடவடிக்கைகள் ஒருங்கிணைப்பு இல்லாமல் நடந்ததாகவும், அவை சட்டவிரோதமானவை எனவும் ராணுவம் கூறியிருந்தது. இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்து, அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

    இந்நிலையில், சூடானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூடானின் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் தொடர்கின்றன. எனவே சூடானில் வசிக்கும் இந்தியர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

    • ராணுவ தளங்கள் மீது துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.
    • போர் விமானங்கள் பறந்ததால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். தலைநகரில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றிலும் தாக்குதல் நடந்தது.

    ஹர்டோம்:

    வடகிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

    இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். அதே போல் ஆட்சியின் துணை தலைவராக துணை ராணுவ படை தளபதி ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ உள்ளார்.

    இதற்கிடையே துணை ராணுவ படை பிரிவான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி முயற்சி மேற்கொண்டார். இதற்கு துணை ராணுவப்படை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இதில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ராணுவ தளங்கள் மீது துப்பாக்கி சூடு, குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்தது.

    துணை ராணுவத்தின் அதிவிரைவு ஆதரவு படை (ஆர்.எஸ்.எப்.) தளங்களை குறி வைத்து ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் தலைநகர் ஹர்டோமில் பதற்றம் நீடித்து வருகிறது.

    போர் விமானங்கள் பறந்ததால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர். தலைநகரில் உள்ள விமான நிலையம், அதிபர் மாளிகை ஆகியவற்றிலும் தாக்குதல் நடந்தது.

    விமான நிலையத்தில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட தயாராக இருந்த பயணிகள் விமானம் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இது தொடர்பாக சவுதி அரேபியா கூறும்போது, ஏர்பஸ் ஏ330 விமானம் ரியாத்துக்கு புறப்படுவதற்கு முன்பு துப்பாக்கி சூட்டில் சேதம் அடந்தது. அனைத்து பயணிகள், விமான ஊழியர்களும் சூடானில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர் என்று தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் ராணுவம்-துணை ராணுவம் இடையேயான கடும் சண்டையில் பொதுமக்கள் உள்பட 56 பேர் பலியாகி உள்ளனர். 500 பேர் காயம் அடைந்துள்ளனர். அங்கு தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.

    சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. ராணுவ வாகனங்கள், வீரர்கள் சாலைகளில் சுற்றி வருகிறார்கள்.

    இதற்கிடையே சூடானில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சூடானில் உள்ள அனைத்து இந்தியர்களும் மிகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    வீட்டுக்குள்ளேயே இருக்கவும் வெளியில் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அமைதியாக இருந்து மறு தகவலுக்கு காத்திருக்க கேட்டுக கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது.

    ×