என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Coronavirus"
- தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.
- இந்த ஆண்டு உலகம் முழுவதுமே டெங்கு பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அதேபோல் இந்தியா முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களையே டெங்கு காய்ச்சல் அதிகமாக தாக்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் முதல்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் டெங்கு பாதிப்பு யாருக்கு அதிகம் ஏற்படுகிறது என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டன.
இந்த ஆய்வு முடிவுகளின்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களிடம் டெங்கு பாதிப்பு அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதேபோல் அமெரிக்கன் சொசைட்டி ஆப் டிராபிக்கல் மெடிசின் மற்றும் ஹைஜின் வெளியிட்ட ஆய்வின்படி 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று முதல் அலையின்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா பாதிக்காதவர்களை விட டெங்கு தாக்குவதற்கான வாய்ப்பு 2 மடங்கு அதிகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கும் டெங்கு அதிக விகிதத்தில் தாக்கி இருப்பதை கண்டறிந்தனர். மேலும் ஆய்வகத்தில் ஆய்வு செய்ததில் கொரோனாவுக்கு எதிராக உருவாக்கப்படும் தடுப்பு மருந்துகள் முன்னிலையில், ஆய்வக செல்களை டெங்கு வைரஸ் எளிதில் தாக்கியதும் தெரிய வந்தது. இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்காலத்தில் டெங்கு பரவல் வாய்ப்பு அதிகம் என்று முதல்கட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு உலகம் முழுவதுமே டெங்கு பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. இது 2017-ம் ஆண்டுக்கு பிறகு மிகப்பெரிய பாதிப்பு என்று நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
- தற்போது இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா குறித்த அச்சம் மக்களிடம் இன்னமும் உள்ளது.
- 341 வகையான பூச்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட 682 மாதிரிகளில் வைரஸ்களை அடையாளம் கண்டுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனாவால் லட்சக்கணக்கான வீடுகளில் மரண ஓலம் கேட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
2-வது அலை, 3-வது அலை என அலை அலையாய் வந்து அச்சுறுத்திய கொரோனா பின்னர் படிப்படியாக கட்டுக்குள் வந்தது. எனினும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை.
தற்போது இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா குறித்த அச்சம் மக்களிடம் இன்னமும் உள்ளது.
இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தெற்கு சீனாவில் அமைந்துள்ள வெப்பமண்டல தீவான ஹைனானில் இதுவரை கண்டிராத 8 வைரஸ்களை சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வை சீன மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த வைரஸ் இனங்கள் பெருகினால் மனிதர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு காரணமான சார்ஸ்-கோவி-2 உடன் தொடர்புடைய வைரசும் இதில் அடங்கும். 341 வகையான பூச்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட 682 மாதிரிகளில் இந்த வைரஸ்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறும்போது "ஹைனானில் வசிக்கும் கொறித்துண்ணி பூச்சிகளிடமிருந்து 700-க்கும் மேற்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வு செய்தோம், மேலும் 8 வைரஸ்களைக் கண்டறிந்தோம். வைரஸ்களில் ஒன்று, கொரோனா வைரஸின் அதே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ்கள் கொறித்துண்ணி பூச்சிகளில் காணப்பட்டன, இந்த வைரஸ் எப்போதாவது பரவத்தொடங்கினால் மனிதர்களை அதிகமாக பாதிக்கும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார்
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில், ஒன்று கோவிஎச்.எம்.யு-1 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் என அடையாளம் காணப்பட்டது. இது கொரோனாவுக்கு காரணமான அதே குழுவைச் சேர்ந்தது. கூடுதலாக, பல புதிய நோய்க்கிருமிகள் வெவ்வேறு வைரஸ் வகைகளில் கண்டறியப்பட்டன. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வைரஸ்களில் மஞ்சள் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற வைரஸ்களுடன் தொடர்புடைய இரண்டு புதிய பூச்சி வைரஸ்கள், ஒரு புதிய ஆஸ்ட்ரோவைரஸ், இது வயிற்றுப் பூச்சிகள் போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்துவதாக அறியப்படு கிறது. 2 புதிய பார்வோ வைரஸ்கள், இது காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். 2 புதிய பாப்பிலோமா வைரஸ்கள், அவை பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் மனிதர்களில் சில புற்றுநோய்கள் போன்ற நிலைமைகளுடன் தொடர்புடைய வைரஸ்கள். ராட்சத எலி மற்றும் சிக்கிம் எலி ஆகிய 2 எலி இனங்களில் புதிய பூச்சி வைரஸ்கள் மற்றும் பார்வோ வைரஸ்கள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- தங்களுக்கும், பிராணிகளுக்கும் தேவையான உணவு பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து, சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
- கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண், கடந்த ஆண்டு இதேபோல் மகனுடன் பூட்டிய வீட்டுக்குள் இருந்ததும், அவர்களை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டதும் குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின் தொற்று பரவல் படிப்படியாக குறைந்தவுடன் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.
தற்போது மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். இந்தநிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது 11 வயது மகன் மற்றும் 9 நாய்கள், ஆடு, கோழி, முயல்களுடன் கொரோனா தொற்று பயத்துடன் வீட்டின் உள்பக்கம் தாழ்பாள் போட்டுக்கொண்டு கடந்த 6 மாதம் வீட்டிலேயே இருந்துள்ளார்.
மேலும் அவர்கள் தங்களுக்கும், பிராணிகளுக்கும் தேவையான உணவு பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து, சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
இதுபற்றி அக்கம் பக்கத்தினர் புதுவை குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த வீட்டிற்கு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் சென்றனர். அவர்கள் வீட்டின் கதவை திறந்து அந்த பெண்ணையும், அவரது மகனையும் மீட்டனர். பின்னர் மருத்துவ ஆலோசனை வழங்க தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இந்த பெண், கடந்த ஆண்டு இதேபோல் மகனுடன் பூட்டிய வீட்டுக்குள் இருந்ததும், அவர்களை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டதும் குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் ஒமைக்ரானில் இருந்து 2 வகை புதிய வைரஸ்கள் உருவாகி இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர்.
- கொரோனா வைரஸ் தொற்று பற்றி கண்டுபிடிக்க வெறும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே போதுமானதல்ல.
சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் முற்றிலும் இல்லை என்றுதான் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் புதிது புதிதாக அவதாரம் எடுத்து அது தனது வேலையை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை தமிழக பொது சுகாதாரத்துறை ஆய்வில் கண்டுபிடித்து உள்ளது.
உருமாறி உருமாறி வரும் வைரசை கண்டுபிடிப்பதற்காக மரபணு பரிசோதனை நிலையம் தமிழக அரசு சார்பில் ரூ.4 கோடி செலவில் கொரோனா காலத்தில் அமைக்கப்பட்டது.
இதனால் புது புது வைரஸ்கள் அவ்வப்போது அடையாளம் காணப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒமைக்ரானில் இருந்து 2 வகை புதிய வைரஸ்கள் உருவாகி இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர். இது கொரோனா வைரசை போல் வீரியமிக்கது அல்ல. ரொம்ப சாதுவாகத்தான் இருக்கிறது. இது தாக்குபவர்கள் உடல்வலி, காய்ச்சல் என்று ஓரிரு நாட்கள் புரட்டி எடுத்து விடுகிறது. ஆபத்து எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த புதுவகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது பற்றி அதிகாரி கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று பற்றி கண்டுபிடிக்க வெறும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மட்டுமே போதுமானதல்ல. அது எந்த வகை வைரஸ் என்பதை கண்டுபிடிக்க மரபணு பரிசோதனை அவசியம். கொரோனா நெருக்கடி காலத்தில் உடனுக்குடன் கண்டுபிடித்து கட்டுப்படுத்துவதற்காக இந்த ஆய்வகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இந்த மாதிரி ஆய்வகம் இருப்பது தமிழகத்தில் மட்டும்தான்.
2021-ல் ஒமைக்ரான் வகை வைரஸ் பரவியதை கண்டுபிடித்தது. நைஜீரிய நாட்டு பயணியிடம் இருந்து நமது நாட்டுக்குள் வந்தது உறுதி செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் மட்டும்தான் இந்த வகை இருக்கும் என்று கருதப்பட்ட நிலையில் 'கிளஸ்டர்' உருவானது. அதை கண்டுபிடித்ததால் வேகமாக கட்டுப்படுத்த முடிந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எக்ஸ்.பி.பி. என்ற வகை வைரசை கண்டுபிடித்தோம். இது இரண்டு வகையான ஒமைக்ரான் வைரஸ் சேர்ந்து உருவாவது.
எனவே இது வீரியம் மிகுந்ததாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் வரை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. இந்த வகை வைரஸ் தாக்கியதில் 2 மற்றும் 3 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 81 சதவீதம் பேர். எனவே நாம் எடுத்துக் கொண்ட கொரோனா தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தியின் வீரியம் குறைந்து இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டது.
இன்புளூயன்சா வந்த பிறகு அது முற்றிலுமாக ஒழியவில்லை. பருவ காலங்களில் வரத்தான் செய்கிறது. எனவே வெளிநாடுகளில் அதில் இருந்து தப்பிக்க தடுப்பூசி கண்டுபிடித்து செலுத்திக் கொள்கிறார்கள்.
அதே போல் இனி கொரோனா வைரஸ் தொடர்பான தடுப்பூசிகள் தயாரிக்கும் போது தற்போது எந்த வகை வைரஸ் சுற்றிக் கொண்டிருக்கிறதோ அதில் இருந்து தயாரிக்க வேண்டும்.
இந்த மாதிரி அடுத்தகட்ட ஆய்வுக்கு நாம் கண்டுபிடித்து இருக்கும் வைரஸ் மற்றும் அது தொடர்பான தரவுகள் கைகொடுக்கும் என்றார்.
தமிழகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை உலக அளவில் பிரபலமான 'லான்செட்' மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது.
- ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது.
- ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்திருந்தாலும் நாள்தோறும் அவருக்கு பரிசோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது. இதை ஏற்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க இசைந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை மறுநாள் அதாவது 7-ந்தேதி இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில் அவர் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜோ பைடனுக்கும், அவரது மனைவி ஜில் பைடனுக்கும் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜில் பைடனுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஜோ பைடனுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்திருந்தாலும் நாள்தோறும் அவருக்கு பரிசோதனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அவர் டெல்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் உருவாகியுள்ளது.
- அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது.
- புதிய வைரஸ் தொடர்பாக உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 69 கோடிக்கு அதிகமானோரை தாக்கி உள்ளது. இதில் 69 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த வைரஸ் அடுத்தடுத்து மாறுபாடு அடைந்து புதிய வகை வைரசாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை தாக்கி வருகிறது.
கொரோனாவின் வீரியம் சமீப காலமாக குறைந்து இருக்கும் நிலையில், புதிய வகை கொரோனா ஒன்று தற்போது கண்டறியப்பட்டு இருக்கிறது.
அமெரிக்கா, டென்மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ள இந்த வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த வைரசின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி.) தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் தனது எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில், 'கொரோனாவை ஏற்படுத்தும் வைரசின் புதிய வகை ஒன்றை சி.டி.சி. கண்காணித்து வருகிறது. இந்த வகைக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது. இது அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் கண்டறியப்பட்டு உள்ளது' என கூறியுள்ளது.
இந்த வைரஸ் குறித்த மேலும் பல்வேறு தகவல்களை சேகரித்து வருவதாக கூறியுள்ள சி.டி.சி., அது குறித்து விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த புதிய வைரஸ் தொடர்பாக உலக நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
குஜராத் தலைநகர் காந்திநகரில் நேற்று தொடங்கிய ஜி20 நாடுகளின் சுகாதார மந்திரிகள் கூட்டத்தில் பேசிய இந்த அமைப்பின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ், இது தொடர்பாக கூறியதாவது:-
சுகாதாரம் ஆபத்தில் இருக்கும்போது, அனைத்து அம்சங்களும் ஆபத்தை எதிர்கொள்ளும் என்ற முக்கியமான பாடத்தை கொரோனா நமக்கு கற்றுத்தந்தது. வலி நிறைந்த இந்த பாடத்தை கொரோனா தொற்று காலத்தில் உலகம் அறிந்து கொண்டது.
தற்போதைய நிலையில் கொரோனா தொற்று உலகளாவிய சுகாதார அவசர நிலையாக இல்லை என்றாலும், உலக அளவில் சுகாதார அச்சுறுத்தலாகவே தற்போதும் நீடிக்கிறது.
ஏனெனில் ஏராளமான பிறழ்வுகளுடன் கூடிய கொரோனாவின் மாறுபாடு வைரஸ் ஒன்றை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் வகைப்படுத்தி இருக்கிறது.
பிஏ.2.86 என்ற அந்த மாறுபாடு தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது. இது அனைத்து நாடுகளும் கண்காணிப்பை தொடர வேண்டியதன் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.
இந்த சந்தர்ப்பத்தில், தொற்றுநோய் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்துமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக்கொள்கிறேன். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலக சுகாதார சபையில் அது ஏற்றுக்கொள்ளப்படும்.
தொற்றுநோய் ஒப்பந்தம் மற்றும் சர்வதேச சுகாதார விதிமுறைகளில் திருத்தங்கள் பற்றிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் உள்ளன.
நாளை (இன்று) முறைப்படி தொடங்கப்படும் டிஜிட்டல் சுகாதாரம் தொடர்பான உலகளாவிய முன்முயற்சியை மேம்படுத்துவதில் இந்தியா மற்றும் அனைத்து ஜி20 நாடுகளுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.
இது டிஜிட்டல் சுகாதாரத்துக்கான உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய வியூகங்களை ஆதரிப்பதுடன், உலகளாவிய டிஜிட்டல் சுகாதார சான்றிதழ் நெட்வொர்க் உள்பட பிற முயற்சிகளையும் வலுப்படுத்தும்.
இவ்வாறு உலக சுகாதார அமைப்பு இயக்குனர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் தொலைநிலை மருத்துவ திட்டத்தை டாக்டர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் பாராட்டினார். மேலும் உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தையும் அவர் புகழ்ந்துரைத்தார்.
இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா உள்பட ஜி20 நாடுகளின் சுகாதார மந்திரிகள் கலந்து கொண்டனர்.
- உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் விவேகானந்தனின் மனைவி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரியிருந்தார்.
- கொரோனா கால கட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்காக விதியை திருத்தம் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென்று கோரியவர் மு.க. ஸ்டாலின்.
அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால், அந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது.
அப்படி இருக்கையில், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில், தங்கள் உயிரை துச்சமென மதித்து, பொதுமக்களுக்காக சேவை புரிந்து, அதன் காரணமாக தொற்று ஏற்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் இதர அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது, மறுக்கப்படுகிறது என்பது மிகுந்த மன வேதனை அளிக்கும் செயலாகும்.
உயிரிழந்த 11 அரசு மருத்துவர்களில் ஒருவரான மருத்துவர் விவேகானந்தனின் மனைவி கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குமாறு கோரியிருந்தார். அந்தப் பணி இதுநாள் வரை வழங்கப்படவில்லை.
கொரோனா கால கட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்காக விதியை திருத்தம் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது.
கொரோனா தொற்று தாக்கி உயிரிழந்த மருத்துவர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், அரசு அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை வழங்குவது குறித்து நல்ல அறிவிப்பினை வரும் சுதந்திர தினத்தன்று வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் குணம் அடைந்து வீடு திரும்பினார்.
- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆக குறைந்துள்ளது.
சென்னை :
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. சில நேரங்களில் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. சில நேரங்களில் தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படுவதில்லை.
அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்று 1,412 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் குணம் அடைந்து வீடு திரும்பினார்.
மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆக குறைந்துள்ளது. இதைபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- கொரோனா பாதிப்பு குறைந்து தற்போது பூஜ்ஜிய நிலைக்கு வந்திருந்தாலும், தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
- கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் கொரோனா பாதிப்பே பதிவாகாத நிலை தற்போது எட்டப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல் இருந்தாலும் அதற்காக கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள எவரும் முன்வராததுகூட அதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மற்றொருபுறம் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் சமூகத்தில் உருவாகி இருப்பதும் இத்தகைய நிலையை எட்டக் காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பு குறைந்து தற்போது பூஜ்ஜிய நிலைக்கு வந்திருந்தாலும், தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். கண்காணிப்பு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சமரசம் இருக்காது.
அதேபோன்று, பருவ காலங்களில் பரவும் சிக்குன்குனியா, டெங்கு, மலேரியா, எலிக்காய்ச்சல் பாதிப்புகளைக் கண்காணித்து தகவல் அளிக்கவும், கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.