என் மலர்
நீங்கள் தேடியது "US President"
- ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
- போர் விமானங்கள் மத்திய கிழக்குக்கு நெருக்கமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் ஈரானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அந்நாட்டின் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் உங்களின் ராணுவத்தை அழிப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்கா கடந்த 24 மணி நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களை மேற்கு ஆசியா நோக்கி அனுப்பி வைத்து உள்ளது.
இதையடுத்து இந்த வார இறுதியில் ஈரானை தாக்க அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதிபர் டிரம்ப் ஆயுத மோதலுக்கு அனுமதி அளிப்பாரா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை கூறும்போது, இந்த வார இறுதியில் ராணுவம் தாக்குதலுக்கு தயாராக உள்ளது. ஆனால் அதுதான் சிறந்த நடவடிக்கை என்பதில் அதிபர் டிரம்ப் இன்னும் உறுதியாக இல்லை.
அமெரிக்க தலைமைத் தளபதி தனிப்பட்ட முறையில் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிட்டார். சிறந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசகர்கள் மற்றும் நட்பு நாடுகளிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதிக்குள் டிரம்ப் ஒரு முடிவை எடுப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் இதைப் பற்றி சிந்திக்க நிறைய நேரம் செலவிடுகிறார் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா மேற்கு ஆசியாவிற்கு 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அனுப்பி நிலை நிறுத்தியுள்ளது. எப்-16, எப்-22, எப்-35 போர் விமானங்கள் உட்பட பல நவீன விமானங்கள் அங்கு சென்று உள்ளன.
யு.எஸ்.எஸ். ஜெரால்ட் போர்டு போர் கப்பல் இந்த வார இறுதியில் ஈரான் அருகே செல்ல உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க விமானப்படை டேங்கர்கள் மற்றும் போர் விமானங்கள் மத்திய கிழக்குக்கு நெருக்கமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரான் நிச்சயமாக பதிலடி கொடுக்கும். இதன் காரணமாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எந்நேரத்திலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
- இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு
- அமெரிக்கா 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை
அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு 'சீனாவுக்கு ஆதரவாக' செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இது ஒரு வருடத்திற்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது.
பெருந்தொற்றை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அதற்கு இல்லை என்றும், அதன் உறுப்பு நாடுகளின் அரசியல் செல்வாக்கிற்கு அது உட்பட்டுள்ளது என்றும் கூறி, அதிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. மேலும், இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு என்று அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். அமெரிக்கா பாரம்பரியமாக உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை, இது ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பெரும் வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழக்கறிஞர்கள் அமெரிக்கா நிலுவைத் தொகையை செலுத்த கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாலும், அவ்வாறு செய்ய எந்தக் காரணத்தையும் காணவில்லை என்று வாஷிங்டன் (அமெரிக்கா) கூறியுள்ளது.
- கோப்புகளில் உள்ளவற்றைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று தெரிவித்தார்.
- கியூபா அல்லது சோவியத் யூனியனுக்குத் இடம்பெயர அனுமதி கோரினார் என்பதைக் குறிக்கிறது.
அமெரிக்காவின் அதிபராக பதவி வகித்த ஜான் எஃப் கென்னடி, 1963-ம் ஆண்டு நவம்பர் மாதம் 22-ந்தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் கார் அணிவகுப்பின்போது ஆஸ்வால்டு என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆனாலும் அவருடைய படுகொலை குறித்து பல்வேறு கருத்துகள், அதன் பின்னணி போன்றவை குறித்த சந்தேகங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுப்பப்பட்டு வருகிறது.

இது தொடர்பான அலுவல் ரீதியான கோப்புகளை அமெரிக்க அரசாங்கம் ரகசியமாக பாதுகாத்து வருகிறது. இந்த நிலையில் ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான ஆவணங்களை வெளியிடுவதாக அதிபர் டிரம்ப் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 80 ஆயிரம் பக்க ஆவணங்களை அமெரிக்க அரசு வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்த ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு காணக்கிடைக்கிறது.
கோப்புகளில் உள்ளவற்றைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியடைவார்கள் என்று வெள்ளை மாளிகையின் துணை ஊடகச் செயலாளர் ஹாரிசன் ஃபீல்ட்ஸ் கூறினார். ஆவணங்கள் எந்தவித திருத்தங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
புதிதாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் குறிப்பிடத்தக்க பகுதிகள் கொலையாளி லீ ஹார்வி ஆஸ்வேலடின் செயல்பாடுகளை விவரிக்கின்றன.
படுகொலைக்கு சில வாரங்களுக்கு முன்பு மெக்சிகோவில் உள்ள சோவியத் மற்றும் கியூப தூதரகங்களுக்கு ஆஸ்வேல்டு மேற்கொண்ட பயணங்களை CIA குறிப்புகள் கோடிட்டுக் காட்டுகின்றன. அவர் கியூபா அல்லது சோவியத் யூனியனுக்குத் இடம்பெயர அனுமதி கோரினார் என்பதை இது குறிக்கிறது.
படுகொலைக்கு ஒரு வருடம் கழித்து, அதிபர் லிண்டன் பி ஜான்சன் விசாரிக்க நிறுவிய வாரன் கமிஷன், ஆஸ்வேல்டு தனியாக செயல்பட்டதாகவும், சதித்திட்டத்திற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் முடிவு செய்தது.

ஆனால் தற்போது வெளியாகி உள்ள கோப்புகளில் உள்ள அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில் அந்த வாதம் பொருந்தவில்லை. இந்த ஆவணங்கள், கென்னடியின் வாகன அணிவகுப்புக்கு அருகில் உள்ள ஒரு உயரமான பகுதியான புல்வெளி மேட்டில் இருந்து மற்றொரு துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று கூறுகின்றன. எனவே ஆஸ்வேல்டு தனியாக செயல்பட்டார் என்பதில் இருந்து இது முரண்படுகிறது.
ரஷியாவின் உளவுத்துறையான KGB ஆஸ்வேல்டை கண்காணித்து வந்ததாக தற்போது வெளியான ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க உளவுத்துறையான CIA அறிக்கை ஒன்று , 1963 இல் செப்டம்பரில் மெக்சிகோ நகரத்தில் உள்ள சோவியத் தூதரகத்தில் ஒரு KGB அதிகாரியுடன் ஆஸ்வேல்டு பேசியதைக் குறிக்கும் தொலைபேசி அழைப்பு ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதன் மூலம் கேஜிபியுடன் ஆஸ்வேல்டின் ஒத்துழைப்பையோ அல்லது வழிநடத்துதலையோ உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் ஆஸ்வால்டை KGB நெருக்கமாகக் கண்காணிப்பது உறுதிப்படுத்த முடிகிறது.
இதுபோல பல்வேறு புதிய தகவல்கள் தற்போது வெளியான ஆவணங்களில் தெரியவந்துள்ளது. இந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணிகளில் அரசியல் விமர்சகர்கள் மற்றும் ஆர்வலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

- கொரோனா போன்ற தொற்று வைரஸ்கள் கணிசமாக எளிதாக பரவும்.
- அமெரிக்காவில் போதுமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை பெறவில்லை.
வாஷிங்டன் :
கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரசின் தாக்கம் அங்கு தீவிரமாக உள்ளது. குறிப்பாக கொரோனாவால் நிகழும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் புதுப்பிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று முன்தினம் செலுத்தி கொண்டார்.
அதைத்தொடர்ந்து அவர் பேசுகையில், "இந்த வைரஸ் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் புதிய மாறுபாடுகள் தோன்றியுள்ளன. உங்கள் பழைய தடுப்பூசி அல்லது உங்கள் முந்தைய கொரோனா தொற்று உங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை அளிக்காது.
அமெரிக்காவில் போதுமான மக்கள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோசை பெறவில்லை. வானிலை குளிர்ச்சியாகி வருகிறது. மக்கள் வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுவார்கள்.
எனவே கொரோனா போன்ற தொற்று வைரஸ்கள் கணிசமாக எளிதாக பரவும். நாட்டில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 400 பேர் கொரோனாவால் இறக்கின்றனர். இந்த குளிர்காலத்தில் அந்த எண்ணிக்கை இன்னும் உயர வாய்ப்புள்ளது" என எச்சரித்தார்.
- தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா, அமெரிக்கா இடையே பதற்றம் நீடித்து வருகிறது.
- 3வது முறையாக சீன அதிபரான பிறகு ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார்.
வாஷிங்டன்:
இந்தோனேசியாவின் பாலியில் வரும் 14ந்தேதி ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட அந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன. தைவான் பிரச்சினை தொடர்பாக சீனா அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் 3வது முறையாக சீன அதிபரான பின்பு, ஜி ஜின்பிங்கை, ஜோ பைடன் சந்திக்க உள்ளார். அப்போது இரு தலைவர்கள் இடையே தகவல் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளிடையேயான உறவுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
- தாக்குதலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்
- ஜோ பைடன், ஜில் பைடன், கமலா ஹாரிஸ் ஆகியோர் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு
2001ல் செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவின் புகழ் பெற்ற உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்களின் மீதும், அமெரிக்க ராணுவ தலைமையகம் இருக்கும் பென்டகன் கட்டிடம் மீதும், கடத்தப்பட்ட விமானங்களை கொண்டு பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். மேலும் வேவ்வேறு இடங்களில் இரு தாக்குதல்களை பயங்கரவாதிகள் நிறைவேற்றும் முன்பாக அவை முறியடிக்கப்பட்டது.
9/11 தாக்குதல் எனப்படும் இந்த நாச வேலையினால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். சம்பவம் நடந்து 22 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் நினைவு தினம் இன்று அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள ஆன்கரேஜ் (Anchorage) எனும் இடத்தில் இது தொடர்பாக நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு வியட்னாம் நாட்டிற்கு சென்ற அவர், திரும்பி வரும் போது இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் கூச்லேண்ட் கவுன்டி எனும் இடத்தில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் ஆகிய இடங்களில் நடந்த தாக்குதலுக்கு பிறகு எஞ்சியிருந்த எக்கு தகடுகளை கொண்டு அத்தாக்குதலில் உயிரிழந்தோருக்கு 2013ல் ஒரு நினைவில்லம் அமைக்கப்பட்டது. இங்கு 2 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 25 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கவுன்டி பகுதியில் பேரிடர் மற்றும் ஆபத்தான நேரங்களில் உதவிக்கு விரைந்து வரும் வீரர்களுக்கு காலையிலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மாலையிலும் அவர்களை நினைவு கூறும் விதமாக நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மவுன அஞ்சலி, மெழுகுவர்த்தி ஏந்திய ஊர்வலம் உட்பட பல நிகழ்ச்சிகள் அமெரிக்கா முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
மற்றொரு அமெரிக்க மாநிலமான இண்டியானாவில் உள்ள கொலம்பஸ் பகுதியில் அமெரிக்காவின் அவசர மற்றும் ஆபத்து காலசேவை பணியாளர்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் அவசர மருத்துவ சேவை பணியாளர்கள் (EMS) ஆகியோருக்கு நன்றி கூறி அவர்களை நினைவுகூறும் விதமாக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
ஆண்கள் மற்றும் பெண்கள் சாரணர் படையினர் மிசோரி மாநில ஃபெண்டன் பகுதியில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்ச்சியில் 9/11 தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள்.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் தரைமட்டமான உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்களின் நிலப்பகுதி, கிரவுண்ட் ஜீரோ (Ground Zero) என அழைக்கப்படும். இங்கு அமெரிக்க துணை அதிபர் பங்கு பெறும் நிகழ்ச்சியில் மேடையில் அத்தாக்குதலில் இறந்தவர்களின் பெயர்கள் ஒவ்வொன்றாக படிக்கப்படும்.
முதல் பெண்மணி என அழைக்கப்படும் அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் பென்டகனில் உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
- 2009-லிருந்து 2017 வரை உதவி ஜனாதிபதியாக பைடன் பதவி வகித்தார்
- பரிஸ்மா எனும் உக்ரைன் நிறுவனம் மூலம் சட்டவிரோதமாக லாபம் அடைந்தனர்
ஆட்சியமைப்பிலும், நீதித்துறையிலும் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் சட்டவிரோதமாக செயல்பட்டிருந்தாலும் அவர்களை உடனடியாக ஒரு உத்தரவின் மூலம் பதவியிலிருந்து நீக்க முடியாது. குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டு, விசாரிக்கப்பட்டு, அது உறுதியானதும் சில வழிமுறைகள் பின்பற்றப்பட்டு விவாதங்கள் நடைபெற்று ஒருமித்த சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளின் அடிப்படையில்தான் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.
இது அரசியலமைப்பில் இம்பீச்மென்ட் (impeachment) எனப்படும்.
இரு நாட்களுக்கு முன், அமெரிக்காவில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கெவின் மெக்கார்த்தி (Kevin McCarthy) அந்நாட்டில் இம்பீச்மென்ட் நடவடிக்கையை தொடங்க முன்மொழிந்துள்ளார்.
உதவி ஜனாதிபதியாக 2009-லிருந்து 2017 வரை பதவி வகித்தபோது ஜோ பைடன், தனது மகன் ஹன்டர் பைடன் (Hunter Biden) செய்து வரும் பல தொழில்களிலிருந்து, குறிப்பாக உக்ரைன் நாட்டின் பரிஸ்மா (Burisma) எனும் நிறுவனத்திலிருந்து சட்டவிரோதமாக லாபம் அடைந்தார் என பைடன் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.
அயல்நாட்டு நிறுவனங்களிலிருந்து சுமார் ரூ.165 கோடிகள் ($20 மில்லியன்) அளவிற்கு பைடன் குடும்பத்தினர்கள் ஆதாயம் அடைந்துள்ளனர் என தெரிய வந்திருக்கிறது. இருப்பினும், பயனாளிகளில் பைடனின் பெயர் இருப்பதை உறுதி செய்ய தற்போது வரை எந்த நேரடி ஆவணங்களும் கிடைக்கவில்லை என தெரிகிறது.
குற்றச்சாட்டுக்களை விசாரிக்க இதற்கான கமிட்டியின் தலைவர் ஜேம்ஸ் கோமர் (James Comer) தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாக ஜோ பைடன் மீது சுமத்தி வருகிறார்.
இந்தியாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் இந்திய ஜனாதிபதி ஆகியோர் இம்பீச்மென்ட் முறையில்தான் பதவியிலிருந்து நீக்கப்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- திடீரென ஹமாஸ் நடத்திய இந்த பயங்கரவாத தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
- எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றார் ஹாரிஸ்
கடந்த சனிக்கிழமையன்று பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது ஒரு எதிர்பாராத தாக்குதலை நடத்தியது.
வான்வழியாக 5000 ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசியும், தரை வழியாகவும், நீர் வழியாகவும் தாக்குதல் நடத்தி அந்நாட்டிற்குள்ளே ஹமாஸ் ஊடுருவியது. இத்தாக்குதலில் பல இஸ்ரேலியர்கள் பலியானார்கள்; பல இஸ்ரேலியர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிணையக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவர் மீதும் நடந்த இந்த தாக்குதல் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதில் ஆத்திரமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை முற்றிலும் ஒழிக்க போவதாக கூறி, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் அவர்களை தேடித்தேடி வேட்டையாடி வருகிறது.
இப்போர் 6-வது நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்நிலையில், அமெரிக்கா உட்பட பல உலக நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இது குறித்து பேசிய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்ததாவது:
எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் பயங்கரவாத செயல்களை கண்டிக்க வேண்டும். இது போன்ற பயங்கரவாத செயல்களை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இஸ்ரேலில் நடந்த தாக்குதல்களால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன். இஸ்ரேலை ஆதரித்துள்ள அமெரிக்காவின் நிலைப்பாடு மிகவும் உறுதியானது. தன்னை காத்து கொள்ள இஸ்ரேலுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம். அங்குள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பே இப்போது மிகவும் முக்கியம். நானும் அதிபர் ஜோ பைடனும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொடர்பில் உள்ளோம். இஸ்ரேலிய மக்களுக்கு நாங்கள் உறுதுணையாக உள்ளோம் என்பதை தெரிவித்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஹமாஸ் தாக்குதலில் இருபதிற்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இரு நாட்டு உறவை பலப்படுத்த ஜின்பிங் அமெரிக்கா சென்றார்
- ஜின்பிங்கின் காரை கண்டு "அழகான கார்" என்றார் பைடன்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலத்தில் தொடங்கி அமெரிக்க-சீன உறவு பல சிக்கல்களையும், சச்சரவுகளையும் எதிர்நோக்கி வருகிறது.
2021ல் ஜோ பைடன் பதவியேற்றதும் இந்த நிலை மாறும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்திருந்தாலும் ரஷிய-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் பின்னணியில் நிலைமை மேலும் சிக்கலானது. இதில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இரு நாட்டு வர்த்தக உறவு மேலும் அதிக பாதிப்புக்குள்ளானது.
இதன் காரணமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சென்ற வாரம் அமெரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டார். நவம்பர் 14 அன்று தொடங்கி 17 வரை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரு நாடுகளுக்குமிடையே உயர்மட்ட பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றன.
தான் செல்லும் நாடுகளுக்கெல்லாம், சீன அதிபர், அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஹாங் கி (Hongqi) எனும் நவீன காரில் பயணிக்கிறார். அவர் அயல்நாடுகளுக்கு சுற்று பயணம் செல்லும் போது அவருக்காக அங்கெல்லாம் அந்த கார் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் இரு நாட்டு அதிபர்களுக்கும் நடந்த பல சந்திப்புகளில் ஒரு சந்திப்பு முடிந்து இருவரும் வெளியே வரும் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெளியே நின்றிருந்த சீன அதிபரின் காரை கண்டு வியந்தார்.
"இது மிக அழகான கார்" என ஜோ பைடன் பாராட்டினார்.
அதற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், "ஆம், இதன் பெயர் ஹாங் கி" என பதிலளித்தார்.
மீண்டும் ஜோ பைடன், "இது எங்கள் நாட்டின் கேடிலாக் (Cadilac) காரை போன்று உள்ளது. சர்வதேச பயணங்களில் என்னுடன் அதுவும் பயணிக்கும். கேடிலாக் காரை இங்கு என்னவென்று அழைப்பார்கள் தெரியுமா? மிருகம் (beast) என்று" என கருத்து தெரிவித்தார்.
இதனையடுத்து இருவரும் கைகுலுக்கி கொண்டனர். பின் சீன அதிபர் விடை பெற்றார்.
இரு நாட்டு அதிபர்களும் தங்கள் கார்களை குறித்து சில நொடிகள் தங்கள் மொழியில் பேசுவதும், அவற்றை இருதரப்பு மொழிபெயர்ப்பாளர்கள் விளக்கும் காட்சிகளும் ஒரு வீடியோவில் பதிவாகி, அது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கடினமான சிக்கல்களை தீர்க்க இரு நாட்டு அதிபர்களும் முயன்று வரும் போது, இது போன்ற மென்மையான தருணங்கள் இணைய தளத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் பயணிக்கும் கேடிலாக், 8 ஆயிரம் கிலோ எடையுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியே பகிரப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் சீன அதிபர் பயணிக்கும் ஹாங் கி, 6-லிட்டர் வி12 (V12) எஞ்சின் உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களும், வசதிகளும் நிறைந்திருந்தாலும், இவை குறித்த தகவல்களும் வெளியே பகிரப்படுவதில்லை.
- கடைகள் மட்டுமின்றி இணையதள வழியாகவும் மக்கள் பொருட்களை அதிகம் வாங்குகின்றனர்
- வர்த்தகர்கள் அறிவித்த அதிக தள்ளுபடி, அதிக விற்பனைக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர்
அமெரிக்காவில், நவம்பர் மாத நான்காவது வியாழக்கிழமை "தேங்க்ஸ்கிவிங் டே" (Thanksgiving Day) என்றும் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை "ப்ளாக் ஃப்ரைடே" (Black Friday) என்றும் கொண்டாடப்படுகிறது.
கருப்பு வெள்ளி என நவம்பரில் அழைக்கப்படும் இந்நாளில் தொடங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடக்கம் வரை அமெரிக்கர்கள், தங்கள் குடும்பத்தினருடன் ஆடைகள், அணிகலன்கள், புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்கி கொண்டாடி மகிழ்வது வழக்கம்.
இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதும். மேலும், வர்த்தகர்கள், தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக பல தள்ளுபடி அறிவிப்புகளையும், ஊக்க தொகை மற்றும் பரிசு பொருட்கள் போன்ற பல சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள்.
கடைவழி வர்த்தகத்தை போன்றே இணையதள வழி வர்த்தகமும் மிகவும் மும்முரமாக நடைபெறும்.
இந்நிலையில், அமெரிக்காவில் கருப்பு வெள்ளி அன்று நடைபெற்ற இணையவழி வர்த்தகம், $9.8$ பில்லியன் அளவிற்கு நடைபெற்றதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதிக தள்ளுபடிகள் மற்றும் மின்னணு சாதனங்களை வாங்க அதிகரிக்கும் விருப்பம் ஆகியவையே இதற்கு காரணம் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்கள் மக்களால் முதலில் விரும்பப்படும் பொருட்களாக உள்ளன.
கடந்த சில மாதங்களாக விலைவாசி உயர்வின் காரணமாக மக்கள் அதிக செலவு செய்வதை தவிர்த்து வந்ததால், வர்த்தகர்களிடம் பொருட்கள் தேங்கி கிடந்தது. ஆனால், தற்போது விற்பனை சூடு பிடித்திருப்பதை வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.
கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு பிறகு தொய்வடைந்திருந்த சில்லறை வர்த்தகத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என தெரிவிக்கும் பொருளாதார நிபுணர்கள், அடுத்து வரும் நாட்களில் விற்பனையின் அளவு இதே போன்று நீடிக்குமா என்பது இனிதான் தெரிய வரும் எனவும் கூறுகின்றனர்.
- 2015 முதல் 2021 வரையிலான காலகட்டம் கணக்கெடுக்கப்பட்டு உள்ளது
- "முதல் குடும்பம்" அலட்சியமாக இருந்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகள், 42 வயதான ஆஷ்லி பைடன் (Ashley Biden).
சமூக ஆர்வலராகவும், ஆடை வடிவமைப்பு கலைஞராகவும் உள்ள ஆஷ்லி, பல சமூக நல தொண்டுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். இது மட்டுமின்றி, டெலாவேர் மாநில நீதி மையத்தில் (Delaware Center for Justice) கிரிமினல் சட்டவிதிகளில் மாற்றம் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து ஆஷ்லி பைடன் அமெரிக்க அரசுக்கு வருமான வரி பாக்கியாக ரூ.4 லட்சத்திற்கு ($5000) மேல் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த டிசம்பர் 1 அன்று, பிலடெல்பியா கவுன்டி பகுதியில் உள்ள பென்சில்வேனியா மாநில வருவாய் துறை, ஆஷ்லிக்கு இது குறித்து தகவல் அனுப்பியது.
ஒபாமா அதிபராக இருந்த போது துணை அதிபராக ஜோ பைடன் இருந்த 2015 ஜனவரி 1 தொடங்கி, பைடன் அதிபராக பதவி ஏற்கும் சில தினங்களுக்கு முன்பு 2021 ஜனவரி 1 வரையுள்ள காலகட்டம் இதில் கணக்கிடப்பட்டுள்ளது.
தற்போது வரை இது குறித்து ஆஷ்லி பைடன் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
2023 டிசம்பர் 7 அன்று ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் (Hunter Biden) மீதும் வரி ஏய்ப்பு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"பணக்காரர்களும் உயர்ந்த இடங்களில் தொடர்பு வைத்துள்ளவர்களும் தாங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சரியான பங்கை செலுத்துவதில்லை என ஜோ பைடன் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால் அவரது இரு குழந்தைகளும் வருமான வரி செலுத்தவில்லை. மிக அலட்சியமாக அமெரிக்காவின் முதல் குடும்பமான பைடன் குடும்பம் இருந்துள்ளது" என பைடன் எதிர்ப்பாளர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
- 46 சதவீதம் பேர், குடும்பங்களின் நிதி நிலைமை மோசமடைந்ததாக தெரிவித்தனர்
- அனைத்தும் நன்றாக உள்ளது என ஜோ பைடன் பதிலளித்தார்
அடுத்த வருடம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
அமெரிக்க பொருளாதாரத்தை தற்போதைய அதிபர் ஜோ பைடன் சரிவர கையாளாததால் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்தன.
இதன் காரணமாக கருத்து கணிப்புகளில் ஜோ பைடனுக்கு ஆதரவு குறைய தொடங்கியது. சுமார் 14 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ஜோ பைடன் பொருளாதாரத்தை சரியாக கையாளுவதாக தெரிவித்தனர். மக்கள் தொகையில் சுமார் 46 சதவீத மக்கள் பைடனின் ஆட்சிமுறை அவர்கள் குடும்பங்களின் நிதி நிலைமையை மோசமடைய செய்ததாக தெரிவித்தனர்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வெள்ளை மாளிகையிலிருந்து அமெரிக்க அதிபர் புறப்பட்ட போது அவரிடம் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து கேட்கப்பட்டது.
"2024ல் நுழையவிருக்கும் அமெரிக்க பொருளாதாரம் எவ்வாறு உள்ளது?" என பைடனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த பைடன், "அனைத்தும் நன்றாக உள்ளது. நீங்கள் நன்றாக பாருங்கள். செய்திகளை சரியான முறையில் வெளியிட தொடங்குங்கள்" என தெரிவித்தார்.
சில மாதங்களாகவே அதிபர் ஜோ பைடன் ஊடகங்கள் தனது நிர்வாகத்தில் உள்ள எதிர்மறை செய்திகளில் கவனம் செலுத்தி நேர்மறை செய்திகளை இருட்டடிப்பு செய்வதாக குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.






