என் மலர்
நீங்கள் தேடியது "Train"
- ரெயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- தண்டவாளத்தில் இருந்த போல்ட்- நட் மற்றும் சிறிய இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர்.
திருவள்ளூர்:
சென்னை சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் நோக்கி செல்லும் ரெயில்கள் திருவாலங்காடு ரெயில் நிலையம் வழியாக கடந்து செல்லும். மின்சார ரெயில்கள், சரக்கு ரெயில்கள் மற்றும் விரைவு ரெயில்கள் போக்குவரத்திற்கு இந்த ரெயில்பாதை முக்கியமானதாக உள்ளது.
இதில் திருவாலங்காடு- அரிச்சந்திராபுரம் இடையே பிரதான தண்டவாளத்தில் இருந்து பிரியும் "லூப் லைன்" பாதை உள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 1.15 மணியளவில் இந்த இணைப்பு தண்டவாளத்தில் இருந்த போல்ட்- நட் மற்றும் சிறிய இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று விட்டனர். இதனால் அங்கிருந்த சிக்னலில் கோளாறு ஏற்பட்டது.

ரெயில் பாதையில் சிக்னல் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த திருவாலங்காடு நிலைய அலுவலர் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக தண்டவாளத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது திருவாலங்காடு- அரிச்சந்திராபுரம் அருகே இணைப்பு தண்டவாளத்தில் இருந்த போல்ட்-நட் மற்றும் இரும்பு துண்டுகளை மர்ம நபர்கள் கழற்றி எடுத்துச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் பிரதான தண்டவாளத்தில் இருந்து லூப்லைனுக்கு மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. நள்ளிரவு நேரத்தில் அவ்வழியே மற்ற பயணிகள் ரெயில் மற்றும் சரக்கு ரெயில் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

இதுகுறித்து உடனடியாக ரெயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இரவு நேரம் என்பதால் லூப்லைனை உடனடியாக சரிசெய்வதில் சிரமம் ஏற்பட்டது. பிரதான தண்டவாளத்தில் எந்த பிரச்சினையும் இல்லாததால் அவ்வழியே மற்ற ரெயில்கள் பாதிப்பு இல்லாமல் இயக்கப்பட்டன.
தகவல் அறிந்ததும் தெற்கு ரெயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி.ஈஸ்வர ராவ், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத், தமிழக ரெயில்வே ஐ.ஜி ஏ.ஜி.பாபு திருத்தணி டி.எஸ்.பி.கந்தன், கைரேகை நிபுணர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விரைந்து வந்தனர். சென்னையில் இருந்து மோப்ப நாய்கள் ஜான்சி, தாராவும் வரவழைக்கப்பட்டன.
போலீசார் மற்றும் அதிகாரிகள் தண்டவாளத்தில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்ட இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய்கள் அங்கிருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடி நின்றது.
அதிகாலை முதல் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தண்டவாளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். காலை 8.30 மணி அளவில் தண்டவாள இணைப்புகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டது. பின்னர் அரக்கோணத்தில் இருந்து வந்த சரக்கு ரெயிலை சரி செய்யப்பட்ட தண்டவாளத்தில் இயக்கி சரிபார்த்தனர். திருவாலங்காட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் இறந்து உள்ள நிலையில் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் திருவாலங்காடு அருகே தண்டவாளத்தில் இருந்து போல்ட்-நட்டுகளை மர்ம நபர்கள் கழற்றி சென்று உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரெயிலை கவிழ்க்கும் முயற்சியாக இது நடந்து இருக்கலாம் என்று ரெயில்வே போலீசாரும், அதிகாரிகளும் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக அரிச்சந்திராபுரம் பகுதியை சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் லூப்லைனில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்டதால் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது.
சரக்கு ரெயில் மீது கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்தனர். எனினும் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.
இந்தநிலையில் தற்போது மீண்டும் திருவாலங்காடு அருகே அதேபோல் தண்டவாள லூப்லைன் பகுதியில் போல்ட்-நட்டுகள் கழற்றப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணைக்காக திவாரியை அழைத்துச் சென்றனர்.
- கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு வழியாக நாள் ஒன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சமீப காலமாக ஈரோடு வழியாக வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு வாரம் ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று இரவு ஜோலார்பேட்டை வந்தது. பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஈரோடு ரெயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா சாய் ஸ்ரீ தலைமையில் ரெயில்வே போலீசார் ராஜ்குமார், செந்தில் ராஜா, சதீஷ்குமார் ஆகியோர் ரெயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது எஸ் 4 பெட்டியில் இருக்கை எண் 28-ல் பயணம் செய்த ஒடிசா மாநிலம் பலாங்கிரியை சேர்ந்த அபினேஷ் திவாரி (வயது 28) என்பவரின் பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் 13 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்ததும் 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணைக்காக அபினேஷ் திவாரியை ஈரோடு ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அபினேஷ் திவாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரெயில் நிலையங்களை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
- ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த இரண்டு ரெயில் நிலையங்களையும் பயன்படுத்தி வந்தனர்.
மதுரை:
தென் மாவட்ட ரெயில்வே திட்டங்களின் சேவை மற்றும் வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை விரகனூரில் இன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூட்டம் நடைபெற்ற நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு இன்று நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமை தாங்கினார்.
இதில் எம்.பி.க்கள் வைகோ, துரை. வைகோ (திருச்சி), சு.வெங்கடேசன் (மதுரை), தங்கதமிழ்செல்வன் (தேனி), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), முகமது அப்துல்லா, ராணிஸ்ரீ குமார் (தென்காசி), ராபர்ட் புரூஸ், சச்சிதானந்தம் (திண்டுக்கல்), தர்மர் உள்ளிட்ட 11 பேர் கலந்துகொண்டு தங்கள் பகுதிக்கான ரெயில்வே திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுக்களை அளித்து பேசினர்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அளித்த கோரிக்கை மனுவில், விருதுநகர் மற்றும் செங்கோட்டை இடையே அகல ரெயில் பாதை மாற்றத்தின் போது கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் ஆகிய 2 ரெயில் நிலையங்கள் முற்றிலுமாக மூடப்பட்டது. இந்த ரெயில் நிலையங்களை சுற்றி 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த இரண்டு ரெயில் நிலையங்களையும் பயன்படுத்தி வந்தனர். மேலும் இந்த பகுதியைச் சேர்ந்த அதிகமானோர் ராணுவத்தில் பணிபுரிகின்றனர். கரிவலம்வந்தநல்லூர் மற்றும் சோழபுரம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் இந்த சிரமத்தை தவிர்க்க கரிவலம் வந்தநல்லூர் நிலையத்தை உடனடியாக ஹால்ட் ஸ்டேஷனாக மீண்டும் திறந்து, பின்னர் பிளாக் ஸ்டேஷனாக மாற்றவேண்டும்.
மதுரை கோட்ட காலியிடங்களை மீண்டும் சென்னை கோட்ட ரெயில்வே வாரியத்தின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும், திருநெல்வேலி-சென்னை எழும்பூர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் தற்போது நிறைவடைந்து உள்ளது. கோவில்பட்டி-திண்டுக்கல் இடையே நான்கு ஜோடி மெமு ரெயில் சேவைகளை இயக்க வேண்டும். இது சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான் மற்றும் கொடைரோடு ஆகிய முக்கிய வர்த்தக நகரங்களை இணைக்கிறது. இதனால் பயணிக்கும் பொது மக்களும், வியாபாரிகளும் பயனடைவார்கள்.
சுதந்திரத்திற்கு பிறகு ரெயில்வேயால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட முக்கிய திட்டங்களில் கொங்கன் ரெயில் பாதையும் ஒன்றாகும். கொங்கன் ரெயில்வே 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் தமிழக மக்கள் கொங்கன் ரெயில் வேயின் பயன்பாட்டை பெறவில்லை. தற்போது திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே ஒரு வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண் : 22629/22630) அதிக ஆதரவுடன் கொங்கன் ரெயில்வே வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயில் திருநெல்வேலி மற்றும் மும்பை இடையே தினசரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட வேண்டும்.
மதுரை-கோவை இடையே 5 ரெயில்கள் இயப்பட்டது. எனவே ராமேசுவரம் மற்றும் செங்கோட்டையில் இருந்து கோவைக்கு கூடுதல் ரெயில்களை அறிமுகப்படுத்த வேண்டும். செங்கோட்டையிலிருந்து பெங்களூருக்கு ஒரு புதிய தினசரி ரெயிலை அறிமுகப்படுத்த வேண்டும்.
மதுரை-கோவை (வண்டி எண்: 16721/16722) எக்ஸ்பிரஸ் ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும். இந்த இரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு கோவையை அடைகிறது. திரும்பும் திசையில் இந்த ரெயில் கோவையில் இருந்து மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 7.35 மணிக்கு மதுரையை அடைகிறது. இந்த ரெயில் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும். இதனால் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள்.
சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில் ஆகிய இடங்களுக்கு இணைப்பு வசதிகளை வழங்குவதற்காக மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும், திருச்செந்தூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்த வேண்டும், திருமங்கலம் ரெயில் நிலையத்தின் வடக்கு முனையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தார்.
- மன்மத் ரெயில் நிலைய பணிமனையில் இதற்கான வேலைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.
- ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம் நிறுவப்பட்டது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்கள் வங்கி கணக்கில் இருந்து எளிதாக பணத்தை எடுத்துக்கொள்ள ஏதுவாக ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்பட்டு வந்தது. பிரதான சாலைகள், மார்க்கெட் பகுதிகள், ரெயில் நிலையம், பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு இருக்கும் ஏ.டி.எம். எந்திரம் வாடிக்கையாளர்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து வருகிறது. வங்கிக்கு சென்று கால்கடுக்க நின்று பணம் எடுக்கும் காலத்தை ஏ.டி.எம். எந்திரங்கள் மலையேற செய்தன. சமீபகாலமாக யு.பி.ஐ. வசதி பிரபலமானாலும், ரொக்கத்தை கையில் எடுத்து செலவு செய்வதை பலரும் விரும்புகின்றனர்.
இந்த நிலையில் ஏ.டி.எம். எந்திரம் தற்போது பயணிகளின் வசதிக்காக ரெயிலுக்கு உள்ளேயும் இடம்பிடித்து விட்டது. சோதனை முயற்சியாக மகாராஷ்டிராவில் மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரெயில் நிலையம்- நாசிக் மாவட்டம் மன்மத் ரெயில் நிலையம் இடையே இயக்கப்படும் பஞ்சவட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம் நிறுவப்பட்டு உள்ளது. மன்மத் ரெயில் நிலைய பணிமனையில் இதற்கான வேலைகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன.
தனியார் வங்கியால் வழங்கப்பட்ட இந்த ஏ.டி.எம். எந்திரம் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சொகுசு இருக்கை வசதி கொண்ட ஏ.சி. பெட்டியில் நிறுவப்பட்டு உள்ளது. ரெயிலில் உள்ள பெட்டிகள் அனைத்திற்கும் பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் பாதைகள் இருப்பதால் பயணிகள் ஏ.டி.எம். எந்திரத்தை எளிதாக அணுக முடியும் என்று மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
இந்த ரெயிலில் ஏ.டி.எம். எந்திரம் நிறுவப்பட்டது பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் மற்ற ரெயில்களிலும் இதேபோன்ற வசதியை பயணிகள் எதிர்பார்க்கலாம்.
- ரெயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டிட முடிக்கப்பட்டது.
- முப்பரிமாண கட்டிடம் கான்கிரீட் கட்டிடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது.
டோக்கியோ:
ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள அரிடா ரெயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மரத்தால் ஆன பழைய கட்டிடம் அகற்றப்பட்டது. பின்னர் முப்பரிமாண அச்சு பொருத்தப்பட்ட ரெயில் நிலையம் 6 மணி நேரத்தில் கட்டிட முடிக்கப்பட்டது.
இது முப்பரிமாணம் அச்சிடப்பட்ட உலகின் முதல் ரெயில் நிலையம் ஆகும். அதேசமயம் இந்த முப்பரிமாண கட்டிடம் கான்கிரீட் கட்டிடத்தைப் போல் நிலநடுக்கத்தையும் தாங்கும் திறன் கொண்டது என ஜப்பான் வீட்டு வசதி நிறுவனமான செரெண்டிக்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த முப்பரிமாண ரெயில் நிலையம் வருகிற ஜூலை மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என ஜப்பான் மேற்கு ரெயில்வே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- பொன்னேரி-கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
- இன்று முதல் 12ஆம் தேதி வரை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் 18 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இன்று முதல் 12ஆம் தேதி வரை பொன்னேரி-கவரைப்பேட்டை இடையிலான தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் 2 ரெயில்கள் சென்னை பீச் வரை தான் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார்.
- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் சங்கரி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். அப்போது திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றது. இதனால் ரெயில் அந்த பகுதியில் மெதுவாக சென்றது. அதை பயன்படுத்திக் கொண்ட ஒரு வாலிபர் சங்கரி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட சங்கரி சங்கிலியை பிடித்து கொண்டு சத்தம் போட்டார்.
இருந்த போதும் பாதி அறுந்த சங்கிலியுடன் அந்த வாலிபர் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். அதேபோல் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த செல்வி (வயது 55) 3 ஆண்டுகளுக்கு முன்பு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரைக்கு சென்றார். அந்த ரெயில் அம்பாதுரை அருகே மெதுவாக சென்றபோது அவர் அணிந்து இருந்த 6 பவுன் சங்கிலியை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவங்கள் தொடர்பாக இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சக்திவேல் பயணிகளிடம் நகை பறித்தது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார். பின்னர் அவர் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தலைமறைவானார். இதையடுத்து திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அருணோதயம் ஆகியோர் சக்திவேலை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் மீண்டும் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் மூலம் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
- மதுரை ரெயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பயணிகளை பிடித்து அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர்.
மதுரை:
மதுரை ரெயில் நிலையத்திற்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மதுரை ரெயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடக்கூடிய பயணிகளிடம் ரெயில்வே மற்றும் இருப்புபாதை போலீசார் அவர்களின் உடமைகளை சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக மதுரை ரெயில் நிலையத்திற்கு வெளி மாநிலத்திலிருந்து வரக்கூடிய ரெயில்களில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை அவ்வப்போது கடத்தி வருவதால், ரெயில்வே போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக வெளி மாநிலத்தில் இருந்து வரக்கூடிய ரெயிலில் வரும் பயணிகள் மற்றும் சந்தேகப்படும்படியாக வருபவர்களை விசாரித்து அனுப்புகின்றனர்.
ெரயில்களில் பயணிகள் மூலமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை ரெயில் நிலையத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது.
இதனையடுத்து மேற்குவங்க மாநிலம் புருளியா-நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரை ரெயில் நிலையத்திற்கு வந்தபோது கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சந்தேகத்துக்குரிய வகையில் வந்த 3 பயணிகளை பிடித்து அவர்களின் உடமைகளை சோதனையிட்டனர்.
அப்போது அவர்களது கைப்பைகளில் சுமார் 8 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கஞ்சா பண்டல்களை பறிமுதல் செய்து மூன்று பேரையும் ரெயில்வே இருப்புப் பாதை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த டேவிட் ராஜா (வயது 20), அஜித் குமார் (30) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. அவர்கள் எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்தனர் என்று விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கடத்தி வரப்பட்டு அவை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைத்து சில்லறையாக விற்பனை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர்.
கைதான 3 பேரும் கஞ்சா பொட்டலங்களை யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பது குறித்த பின்னணி தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
- அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு இராமேஸ்வரம் ரயிலில் ஏறி சிவகங்கை சென்றுள்ளார்
- பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே 20 ஆண்டுகளுக்கும் மேல் கொத்தடிமையாக ஆடு மேய்த்த முதியவர் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளி அப்பாராவ், 20 ஆண்டுகளுக்கு முன்பு ரெயிலில் செல்கையில் டீ குடிக்க இறங்கியவர் தவறுதலாக இராமேஸ்வரம் ரயிலில் ஏறி, விபரம் அறியாமல் சிவகங்கை சென்றுள்ளார்
கடம்பங்குளம் பகுதியைச் சேர்ந்த மலைக்கண்ணு, அவரை கூட்டிச் சென்று ஆடு மேய்க்க வைத்துள்ளார். மலைக்கண்ணு இறந்துவிட, அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவரும் ஊதியம் இல்லாமல் உணவு மட்டும் கொடுத்து ஆடுமேய்க்க வைத்துள்ளார்.
சொந்த ஊருக்கும் செல்ல அனுமதிக்கப்படாமல் பல ஆண்டுகளாக கொத்தடிமையாக்கப்பட்ட இவரின் விபரம், தொழிலாளர் நலத்துறைக்கு தெரியவந்து விசாரணை நடத்தி குடும்பத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர்.
அப்பாராவின் மனைவி சீத்தாம்மா இறந்து விட்டதாகவும் மகளுக்கு திருமணமான தகவலும் தெரியவந்துள்ளது. மகள் மற்றும் மருமகனை அதிகாரிகள் வரவழைத்து அப்பாராவை ஒப்படைத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக பிஎல்ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
- 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் ராணும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடத்தல் விவகாரத்தில், பணைய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட ராணுவ வீரர்கள் 214 பேரும் தூக்கிலிடப்பட்டதாக பிஎல்ஏ கிளர்ச்சி படையை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஜீயாந்த் பலோச் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, கிளர்ச்சிப்படை மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை வெளியிடுவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
354 பணைய கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், 33 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் பாகிஸ்தான் ராணும் தெரிவித்துள்ளது.
மேலும், கிளர்ச்சி படையால் வேறு எந்த பணைய கைதிகளும் கொல்லப்பட்டதற்கோ, அழைத்து செல்லப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
- ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
- 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பெஷாவர் செல்லும் பயணிகள் ரெயில் நேற்று கடந்தப்பட்டது. 400க்கும் மேற்பட்ட பயணிகளை, பெரும்பாலும் பாதுகாப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ், சிபி நகரம் வழியாகச் சென்றபோது இந்த கடத்தல் நிகழ்ந்தது.
பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தானைப் பிரிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினைவாதக் குழுவான பலுச் விடுதலைப் படையின் மஜீத் படைப்பிரிவால் இந்த கடத்தல் அரங்கேறியது.
ரெயிலில் பெண்கள், குழந்தைகளை விடுவித்த பின்னர், மீதமிருந்த 214 ஆண் பயணிகள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டனர். மேலும் குறைந்தது ரெயிலில் 30 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகும் பாகிஸ்தான் ராணுவம் எடுத்த நடவைக்கையில் பாதுகாப்புப் படையினரால் 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டு ரெயில் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரெயில் கடத்தப்பட்ட பரபரப்பு வீடியோவை பலுச் விடுதலைப் படை வெளியிட்டுள்ளது. 17 சுரங்கப்பாதைகளைக் கொண்ட குவெட்டா-பெஷாவர் ரெயில்பாதை, ரயில்கள் அதிவேகத்தில் செல்வதை கடினமாக்குகிறது.
இதை பயன்படுத்திய கிளர்ச்சியாளர்கள் சுரங்கப்பாதை எண் 8 அருகே ஜாபர் எக்ஸ்பிரஸ் வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தை வெடிக்கச்செய்து ரெயிலை நிறுத்தி உள்ளே ஏறியுள்ளனர்.
ரெயில் தண்டவாளம் வெடிப்பது, ரெயில் நிறுத்தப்படுவது உள்ளிட்ட காட்சிகள் அவர்கள் வெளியிட்ட வீடியோவில் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல மாதங்களாக திட்டமிட்டு இந்த கடத்தல் நடத்தப்பட்டுள்ளது புலனாகிறது.
- ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 11.40 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும் ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது முன்பதிவு அல்லாத பெட்டி ஒன்றில் இருக்கைக்கு கீழே ஒரு டிராலி பேக் கிடந்தது. இதைப்பார்த்த போலீசார் உடனே பேக்கை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 12 பொட்டலங்கள் கஞ்சா இருந்தன.இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கஞ்சாவை வெளி மாநிலத்தில் இருந்து மர்ம ஆசாமிகள் கடத்தி வந்துள்ளனர். ஆனால் கஞ்சாவானது நேராக குமரி மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்டதா? அல்லது ரெயில் வரும் வழியில் வேறு ஏதாவது ஊருக்கு அனுப்பி வைத்ததை எடுக்காமல் விட்டதால் அது நேராக குமரி மாவட்டத்துக்கு வந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.