என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் கட்டணம்"

    • எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
    • நேற்று வரையில் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை.

    சென்னை:

    எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரெயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதாவது, குளிர்சாதன மற்றும் குளிர்சாதன வசதி அல்லாத முன்பதிவு பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசுகள் வீதமும், முன்பதிவில்லாத சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு ஒரு காசு வீதமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    தேஜஸ், சதாப்தி, ராஜ்தானி, வந்தே பாரத், அந்தியோதியா, வந்தே மெட்ரோ, அம்ரித் பாரத் உள்ளிட்ட ரெயில்களிலும் கட்டணம் உயர்ந்தது.

    இந்திய ரெயில்வே நிர்வாகம் அறிவித்த புதிய ரெயில் கட்டண உயர்வு நாடு முழுவதும் இன்று அமலுக்கு வந்தது.

    நேற்று வரையில் முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. இன்று (26-ந்தேதி) முதல் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டும் புதிய கட்டணம் பொருந்தும்.

    நாடு முழுவதும் ரெயில் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் புறநகர் மின்சார ரெயில் கட்டணங்களில் மாற்றம் இல்லை என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    • டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
    • கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் டிசம்பர் 26-ந் தேதி முதல் ரெயில் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, 215 கி.மீ.க்கு மேல் பயணிக்கும் தூரத்திற்கு 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா வீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    215 கி.மீ.க்கு மேல் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கிலோ மீட்டருக்கு 1 பைசா கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

    மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் பயணிக்க 1 கி.மீ.க்கு 2 பைசா உயர்த்தப்படும்.

    500 கி.மீ தூரம் ஏசி அல்லாத பெட்டியில் பயணிக்கும் பயணிகள் கூடுதலாக 10 ரூபாய் செலுத்த வேண்டும்.

    உதாரணமாக சென்னையில் இருந்து மதுரை மற்றும் கோவைக்கு செல்லும் ரெயில்களில் ரூ10 கட்டணம் கூடுதலாக செலுத்த வேண்டும்.

    இதுதவிர்த்து அனைத்து ஏசி வகுப்புகளுக்கும் 1 கிலோமீட்டருக்கு 2 பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேநேரம், 215 கி.மீ வரை பயணிக்க கட்டண உயர்வு இல்லை. மேலும் புறநகர் ரெயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு மூலம் ரெயில்வே ரூ.600 கோடி கூடுதல் வருவாயை ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே ஊழியர் ஊதியச் செலவு ரூ. 1,15,000 கோடியாகவும், ஓய்வூதியச் செலவு ரூ. 60,000 கோடியாகவும் அதிகரித்துள்ளதால் 2024-25 நிதியாண்டில் மொத்த ரெயில்வே துறையின் செலவு ரூ. 2,63,000 கோடியாக உயர்ந்துள்ளது.

    எனவே இந்த செலவுகளை சமாளிக்க பயணிகளுக்கான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ரெயில்வே தெரிவித்துள்ளது.

    முன்னதாக கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி தேதி ரெயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரே ஆண்டில் 2வது முறையாக ரெயில்வே கட்டணங்களை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.        

    • ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகின்றனர்.
    • அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் ஏ.சி. ரெயிலை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே மூலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்பட்டது. கடற்கரை- தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் இந்த ரெயில் தற்போது இயக்கப்படுகிறது.

    தினமும் 8 சேவைகள் இருந்த நிலையில் மே மாதத்தில் 10 சேவைகளாக அதிகரிக்கப்பட்டன.

    12 பெட்டிகளை கொண்ட ஏ.சி. ரெயிலில் உட்கார்ந்தும் நின்று கொண்டும் மொத்தம் 4,914 பயணிகள் பயணம் செய்ய முடியும். 8 சேவைகள் அடிப்படையில் 100 சதவீத பயன்பாட்டில் 39,312 பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். 50 சதவீத பயன்பாடாக இருந்தால் 19,656 பேர் செல்ல வேண்டும். 25 சதவீத பயன்பாட்டில் 9828 பேர் பயணிக்க வேண்டும்.

    ஆனால் 2,800 பேர் மட்டுமே தினமும் பயணம் செய்துள்ளனர். இது ரெயிலின் மொத்த பயன்பாட்டில் 10 சதவீதம் கூட எட்டவில்லை.

    ஏ.சி. மின்சார ரெயிலில் எதிர்பார்த்த கூட்டமும் இல்லை. காலியாகவே ஓடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் கட்டணம் அதிகமாகும். மேலும் மெட்ரோ ரெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்து வருவதும் ஒரு முக்கிய காரணமாகும் என்று பயணிகள் தெரிவிக்கின்றனர். இது தவிர ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் கால அட்டவணையும் பயணிகள் கூட்டம் இல்லாததற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகின்றனர்.

    காலை மற்றும் மாலை நெரிசல் மிகுந்த வேளையில் ஏ.சி. ரெயில் சரியான நேரத்தில் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நெரிசல் மிகுந்த கடற்கரை-தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் அதிக பயணிகளை ஈர்க்கும் திறன் இருந்த போதிலும் மோசமான நிலையே காணப்படுகிறது. ஏ.சி. மின்சார ரெயிலில் 1-5 கி.மீ. ரூ.35-ம், 11-15 கி.மீ.க்கு ரூ.40-ம், 16-25 கி.மீ. ரூ.60-ம், 26-40 கி.மீ.க்கு ரூ.85-ம், 56-60 கி.மீ.க்கு ரூ.105-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதிக கட்டணம் வசூலிப்பதால் பயணிகள் ஏ.சி. ரெயிலை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. கட்டணத்தை குறைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? தற்போது உள்ள குளறுபடிகளை சரி செய்தால் தான் புறநகர் பயணிகளை கவர முடியும்.

    இனி மழைக்காலம் என்பதால் பொதுவாக ஏ.சி. ரெயில் பயணம் குறையும். அவற்றையெல்லாம் கருதி கட்டணத்தை குறைக்க பரிசீலிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

    • ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளின் திறன் 190% அதிகரித்துள்ளது. ஆனால், இரண்டாம் வகுப்பு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் வெறும் 15% மட்டுமே அதிகரித்துள்ளது.
    • ஒரு வந்தே பாரத் ரெயிலின் செலவு சுமார் ரூ.120 கோடி, இது வழக்கமான ரெயிலை விட இரு மடங்கு அதிகம்.

    இன்று (ஜூலை 1) முதல் ரெயில் கட்டணங்கள் உயர்வு அமலாகி உள்ளது. இதற்கு பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் எந்த சமரசமுமின்றி கட்டண உயர்வை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் மக்களுக்கான ரெயில் சேவைகளில் சமீப காலங்களாக அதிக சரமரசங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று வந்தே பாரத் ரெயில்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கவனம் ஆகும்.

    இந்திய ரயில்வே கடந்த ஆறு ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரெயில்கள் மணிக்கு 160 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டவை. சிறந்த உள் வசதிகளுடன் இவை பயணிகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. ஆனால் இது அனைவரும் எட்டும் சேவையாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

    இந்திய ரெயில்வேயில் பயணிக்கும் மொத்தப் பயணிகளில் சுமார் 90% பேர் இரண்டாம் வகுப்பு அல்லது குளிர்சாதன வசதியற்ற ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கின்றனர். அதாவது 146 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், வந்தே பாரத் சேவைகள் 90% இந்தியர்களுக்கு எட்டாத தொலைவில் உள்ளன.

    வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டவையாகவும், கட்டணம் அதிகமாகவும் உள்ளன. எனவே இது பெரும்பான்மையான இந்தியர்களுக்கு வந்தே பாரத் பயணத்தை எட்டாததாக ஆக்குகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில், ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளின் திறன் 190% அதிகரித்துள்ளது. ஆனால், இரண்டாம் வகுப்பு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் வெறும் 15% மட்டுமே அதிகரித்துள்ளது. இது, ரெயில்வேயின் கவனம் வசதி படைத்த ஏசி பயணிகள் மீது மட்டுமே உள்ளதைக் காட்டுகிறது.

    2013-14 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023-24 ஆம் ஆண்டில் ஏசி அல்லாத பயணிகள் பிரிவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனுக்கும் மேல் குறைந்துள்ளது. வந்தே பாரத் போன்ற முழுவதும் ஏசி ரயில்களின் பெருக்கம், இந்த ஏழை, நடுத்தர பயணிகள் எண்ணிக்கைக் குறைவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். 

    பெரும்பாலான வந்தே பாரத் ரெயில்கள் 16 பெட்டிகளுடன் 1128 இருக்கைகளுடன் இயங்குகின்றன. ஆனால், பல சமயங்களில் இந்த ரெயில்களில் இருக்கைகள் முழுமையாக நிரம்புவதில்லை. அதே நேரத்தில், வழக்கமான ரயில்களில், குறிப்பாக இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    ஒரு வந்தே பாரத் ரெயிலின் செலவு சுமார் ரூ.120 கோடி, இது வழக்கமான ரெயிலை விட இரு மடங்கு அதிகம். இவ்வளவு அதிக செலவில் உருவாக்கப்பட்ட ரெயில்கள் வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.  

    அதிக செலவில் உருவாக்கப்பட்ட இந்த ரெயில்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது வளங்களை வீணடிப்பதாகக் கருதப்படுகிறது. இதனோடு தற்போதைய ரெயில் கட்டண உயர்வை பொருத்திப்பார்க்க வேண்டி உள்ளது.

    ஏற்கனவே நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படுவது, சரக்கு போக்குவரத்து மற்றும் ஒட்டுமொத்த ரெயில்வே அமைப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    உயர்வருவாய் கொண்ட பயணிகளுக்கு விமானப் பயணங்கள் ஒரு மாற்றாக இருக்கும் நிலையில், குறைந்த வருவாய் பிரிவினருக்கு நீண்ட தூரப் பயணங்களுக்கு ரெயில்வேயைத் தவிர வேறு வழியில்லை.

    ரெயில்வே தனது சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது பரந்த மக்கள் தொகையின் தேவைகளை புறக்கணித்து, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே சேவை செய்வதாக இருக்கக் கூடாது.

    புதிய ரெயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள ரெயில்களின் கொள்ளளவை அதிகரிப்பதும், குறிப்பாக ஏசி அல்லாத பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதும் மிக அவசியம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.   

    • இந்தியா முழுவதும் நாளை முதல் தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    • இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    இந்தியா முழுவதும் நாளை முதல் தொடர்வண்டிக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புறநகர் தொடர்வண்டிகளிலும், சாதாரண தொடர்வண்டிகளில் 500 கி.மீ வரையிலும் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், விரைவு வண்டிகளில் சாதாரண வகுப்புகளில் கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதமும், குளிரூட்டி வசதி கொண்ட தொடர்வண்டிகளில் கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிற்குள் அதிகபட்ச பயணதூரமான சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சாதாரண தொடர்வண்டிகளில் பயணம் செய்ய 5 ரூபாயும், விரைவு வண்டிகளின் சாதாரண வகுப்புகளில் பயணிக்க 8 ரூபாயும், குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க 15 ரூபாயும் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஒப்பீட்டளவில் இந்தக் கட்டண உயர்வு பெரிதல்ல. ஆனாலும் இந்த சுமை கூட மக்கள் மீது சுமத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

    மேலும் இந்தக் கட்டண உயர்வின் மூலம் தொடர்வண்டித்துறைக்கு கிடைக்கும் கூடுதல் வருமானமான ரூ.1,100 கோடி என்பது, நடப்பாண்டில் பயணியர் போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருமானமான ரூ. 92,800 கோடியில் 1.18% மட்டும் தான். இதை வேறு ஆதாரங்களின் மூலம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் திரட்ட முடியும். எனவே, தொடர்வண்டிக் கட்டண உயர்வை ரயில்வே வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
    • இந்திராநகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரகேட்டு போராடி வரும் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    இந்திய ரெயில்வே துறையில் தெற்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே, கொங்கன் ரயில்வே என 18 மண்டலங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 13 ஆயிரத்துக்கும் அதிகமான எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 8 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

    பாதுகாப்பான, வசதியான பயணம் கிடைக்கும் என்பதால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களின் முதல் தேர்வு ரெயில் தான். வந்தே பாரத், ராஜ்தானி உள்ளிட்ட ரெயில்களை தவிர மற்ற ரெயில்களில் கட்டணம் என்பது பிற போக்குவரத்துகளை விட குறைவுதான். எனவே அனைத்து தரப்பு மக்களின் விருப்ப தேர்வாக இருக்கிறது.

    ரெயில் கட்டணத்தை பொறுத்தவரை, கடந்த 2013-ம் ஆண்டு கிலோ மீட்டருக்கு 2 பைசா முதல் 10 பைசா வரை உயர்த்தப்பட்டது. அப்போது, மின்சார ரெயில்களுக்கு 2 பைசாவும், மெமு மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 பைசாவும், ஏ.சி. வகுப்பு பெட்டிகளுக்கு 6 முதல் 10 பைசா வரையிலும் கட்டணம் உயர்ந்தது.

    இதையடுத்து, 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் மீண்டும் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது, 2-ம் வகுப்பு படுக்கை வசதி இருக்கைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்ந்தது. ஏ.சி. வகுப்புகளில் ஏ.சி. சேர்கார், முதல் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு ஏ.சி. வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா வீதம் அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரெயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணையை ஜூலை 1-ந் தேதி ரெயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டும் வருகிற ஜூலை 1-ந்தேதி திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணை ரெயில்வே வாரியத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது. அதன்படி, ஏ.சி. வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், ஏ.சி. அல்லாத சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு அரை பைசா கூடுதலாகவும் உயர்த்தப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.



    அதே நேரம் புறநகர் ரெயில்கள் மற்றும் 500 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவு செல்லும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு கட்டண உயர்வு இருக்காது என்றும், மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெயில்வே இணை மந்திரி சோமண்ணா, நேற்று சென்னை வந்தார். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தனி ரெயிலில் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் வந்தார். வழிநெடுகிலும் நடைபெறும் ரெயில்வே பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய மந்திரி சோமண்ணா, இந்திராநகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரகேட்டு போராடி வரும் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரெயில் கட்டணம் பொது மக்களை பாதிக்காத வகையில் படிப்படியாக உயர்த்தப்படும். இது குறித்து விவாதம் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலைய பகுதியில் ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. அது தற்போது பரிசீலனையில் உள்ளது,

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத் பி.ஈர்யா மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல.
    • உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?

    "நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக ரயில் கட்டண உயர்வை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் சென்றபோது, அங்குள்ள பயணிகளின் முகத்தில் வழக்கமான உற்சாகமும், மகிழ்ச்சியும் குறைந்திருந்தது என்றும், ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரயில் கட்டணங்களும், குறைந்து வரும் சாதாரண வகுப்பு பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியை களவாடியிருக்கிறது என்றும், ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல், சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் என்று மாண்புமிகு இந்தியப் பிரதமருக்கு ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

    நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் முடிவு ஏற்கத்தக்கதல்ல. உடனடியாக ரயில் கட்டண உயர்வை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ஆனால், ரயில்களுக்கான கட்டணத்தில் பைசா கணக்கில் உயர்த்தப்பட உள்ளதாக வந்த செய்தியைக் கேட்ட மக்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் களவாடப்பட்டிருக்கிறது என்று கூறும் பொம்மை முதலமைச்சரே...

    கடந்த நான்காண்டுகளாக உங்களது ஏமாற்று மாடல் ஆட்சியில் ஆயிரக் கணக்கில் ஏற்றப்பட்ட சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, தொழில்வரி உயர்வு, பதிவுக் கட்டணங்கள் உயர்வு என்று அரசின் அனைத்து வரி மற்றும் கட்டணங்கள் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் உள்ள நடுத்தரக் குடும்பங்களின் முகங்களில் உற்சாகமும், மகிழ்ச்சியும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதைப் பற்றி தினமும் கண்ணாடி முன் நின்று நீங்கள், உங்கள் முகத்தைப் பார்க்கும்போது சிந்திக்கவில்லையா?

    உங்களால் ஏற்றப்பட்ட வரி, கட்டண உயர்வுகளைக் குறைக்க வேண்டும் எனத் தோன்றவில்லையா?

    தமிழக மக்களின் சந்தோஷங்களை எல்லாம் கொள்ளையடித்த ஒரு நபர், களவாடுவது பற்றி புலம்புவது 'சாத்தான் வேதம் ஒதுவது போல்' உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • உயர்த்தப்படவுள்ள ரெயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.
    • ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று காட்பாடி செல்ல ரெயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரெயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.

    பிரதமர் மோடி மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது…

    AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரெயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.

    ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!

    இந்திய ரெயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட உள்ளது.
    • இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

    இந்திய ரெயில்வே, ரெயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு 1 பைசாவும் உயர்த்தப்பட உள்ளது.

    புறநகர் ரெயில்கள் மற்றும் 500 கிலோமீட்டருக்கு குறைவான தொலைவு பயணங்களுக்கு இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குறுகிய தூர பயணிகள் மற்றும் புறநகர் ரெயில் பயணிகள் இந்த உயர்வால் பாதிக்கப்பட மாட்டார்கள். இந்த கட்டண உயர்வு ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. 

    • பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது.
    • புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன.

    புதுடெல்லி

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம்வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த சலுகை நிறுத்தப்பட்டது.

    சுமார் 3 ஆண்டுகளாக சலுகை இல்லாத நிலையில், மீண்டும் எப்போது கட்டண சலுகை அளிக்கப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் சுயேச்சை உறுப்பினர் நவ்நீத் ராணா கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கட்டண சலுகை இப்போதைக்கு கிடையாது என்று சூசகமாக தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது:-

    பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது. இது பெரிய தொகை. சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது.

    ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஆகிறது. சம்பளத்துக்கு ரூ.97 ஆயிரம் கோடியும், எரிபொருளுக்கு ரூ.40 ஆயிரம் கோடியும் செலவிடப்படுகிறது.

    புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன. புதிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டி இருந்தால், அதை எடுப்போம். ஆனால், இப்போதைக்கு ரெயில்வேயின் நிலைமையை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற 8-ந்தேதி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட உள்ள ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
    • ரெயில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதையானது 21.09.2012 அன்று அகலப்பாதையாக மாற்றப்பட்டது.

    இந்த வழித்தடமானது அகலப்பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் இன்று வரை அந்த வழித்தடத்தில் சென்னைக்கு நேரடி ரெயில்கள் இல்லாத நிலையே இருந்து வருகிறது.

    இதுதொடர்பாக பயணிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் வகையில் புதிய ரெயில் ஒன்று இயக்கப்பட உள்ளது.

    செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக இயக்கப்படும் இந்த ரெயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 8-ந்தேதி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட உள்ள இந்த ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த ரெயில்(16103) தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 தினங்களிலும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை வந்தடைகிறது. மறுமார்க்கமாக வருகிற 10-ந்தேதி முதல் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் வண்டி எண் 16104 என்ற ரெயில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    இந்த ரெயிலில் சாதாரண இருக்கை கட்டணம் ரூ.240, படுக்கை வசதி கட்டணம் ரூ.435, மூன்றாம் வகுப்பு ஏசிக்கு ரூ.1,150, இரண்டாம் வகுப்பு ஏசிக்கு ரூ.1,575 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    செங்கோட்டை - தாம்பரம் மும்முறை ரெயிலானது பாவூர்சத்திரம், நெல்லை, விருதுநகர், திருவாரூர், மயிலாடுதுறை விழுப்புரம் வழியாக இயக்கப்பட உள்ளது. தற்போது பொதிகை செங்கோட்டை - தாம்பரம் இடையே மதுரை வழியாக 10 மணி 30 நிமிடத்திலும், சிலம்பு எக்ஸ்பிரஸ் 11 மணி நேரத்திலும் கடக்கின்றன.

    புதிதாக இயங்க இருக்கும் இந்த ரெயிலை தனது மொத்த தொலைவான 766 கிலோமீட்டர் தூரத்தை 60 கிலோமீட்டர் வேகத்துடன் 13 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைக்க உள்ள இந்த ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரிட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட ஏழைகள் ரதம் ரெயில் நவீன வசதிகளுடைய ஹம்சேபர் எக்ஸ்பிரசாக மாற்றப்படுவதால் வரும் 29-ந்தேதி முதல் ரெயில் கட்டணம் உயருகிறது. #IndianRailways
    சென்னை:

    வசதி இல்லாதவர்களும் குளு-குளு ரெயிலில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக கடந்த 2005-ம் ஆண்டு “ஏழைகள் ரதம்” எனும் கரீப்ரத எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. நாடு முழுவதும் 26 ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயில் முழுக்க - முழுக்க ஏ.சி. வசதி செய்யப்பட்டதாகும். அனைத்துப் பெட்டிகளிலும் 3 அடுக்கு படுக்கை வசதி உள்ளது. சென்னையில் இருந்து டெல்லிக்கு ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    பொதுவாக சென்னையில் இருந்து டெல்லிக்கு ஏ.சி. வசதி பெட்டிகளில் ரூ.2050 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.1380 கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

    என்றாலும் ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. அதே சமயத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு ஏ.சி. ரெயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வசதி குறைவு காரணமாக ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயிலை தேர்வு செய்வதில்லை.

    இதனால் சென்னையில் இருந்து புறப்படும் ஏழைகள் ரதம் ரெயில் விஜயவாடாவுக்கு பிறகு முன்பதிவு செய்யாதவர்களும் ஏறி தூங்கும் நிலைக்கு மாறுகிறது. இதன் காரணமாக அந்த ரெயிலில் இடிப்பு அதிகரித்தப்படி உள்ளது. எனவே அந்த எக்ஸ்பிரஸ் ரெயிலை மாற்ற ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


    அதன்படி டெல்லி- சென்னை ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயில் திரும்பப் பெறப்பட உள்ளது. அதற்கு பதில் ஹம்சேபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை விட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த மாற்றம் வரும் 29-ந்தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

    ஹம்சேபர் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளும் 3 அடுக்கு படுக்கை வசதி கொண்டதாகும். ஆனால் ஏழைகள் ரதம் ரெயிலை விட இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிக அளவில் நவீன வசதிகள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த ஹம்சேபர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எல்.இ.டி. திரை இருக்கும். அதில் பயணிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் தெரிவிக்கப்படும். சொகுசு மெத்தை படுக்கை, ஏ.டி.எம். எந்திரம், பயோ-டாய்லட், அதிநவீன பாதுகாப்பு வசதிகள், பருத்தி துணி விரிப்புகள், தனிமை வசதி, சி.சி.டி.வி. காமிரா கண்காணிப்பு ஆகியவையும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் உண்டு.

    இதன் காரணமாக இந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் கட்டணமும் சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயிலின் குறைந்தபட்ச கட்டணமே ரூ.2200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சென்னை-டெல்லி வழித்தடத்தில் ஏழைகள் ரதம் எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்படுவது போல வடக்கு மண்டலத்திலும் ஏழைகள் ரதம் ரெயில்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளனர். #IndianRailways #HumsafarExpress #GaribRathExpress
    ×