என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Train Fares"

    • ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளின் திறன் 190% அதிகரித்துள்ளது. ஆனால், இரண்டாம் வகுப்பு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் வெறும் 15% மட்டுமே அதிகரித்துள்ளது.
    • ஒரு வந்தே பாரத் ரெயிலின் செலவு சுமார் ரூ.120 கோடி, இது வழக்கமான ரெயிலை விட இரு மடங்கு அதிகம்.

    இன்று (ஜூலை 1) முதல் ரெயில் கட்டணங்கள் உயர்வு அமலாகி உள்ளது. இதற்கு பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் எந்த சமரசமுமின்றி கட்டண உயர்வை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் மக்களுக்கான ரெயில் சேவைகளில் சமீப காலங்களாக அதிக சரமரசங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று வந்தே பாரத் ரெயில்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கவனம் ஆகும்.

    இந்திய ரயில்வே கடந்த ஆறு ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய வந்தே பாரத் ரெயில்கள் மணிக்கு 160 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டவை. சிறந்த உள் வசதிகளுடன் இவை பயணிகளுக்கு ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தருகின்றன. ஆனால் இது அனைவரும் எட்டும் சேவையாக இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

    இந்திய ரெயில்வேயில் பயணிக்கும் மொத்தப் பயணிகளில் சுமார் 90% பேர் இரண்டாம் வகுப்பு அல்லது குளிர்சாதன வசதியற்ற ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கின்றனர். அதாவது 146 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், வந்தே பாரத் சேவைகள் 90% இந்தியர்களுக்கு எட்டாத தொலைவில் உள்ளன.

    வந்தே பாரத் ரெயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டவையாகவும், கட்டணம் அதிகமாகவும் உள்ளன. எனவே இது பெரும்பான்மையான இந்தியர்களுக்கு வந்தே பாரத் பயணத்தை எட்டாததாக ஆக்குகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில், ஏசி ஸ்லீப்பர் பெட்டிகளின் திறன் 190% அதிகரித்துள்ளது. ஆனால், இரண்டாம் வகுப்பு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் வெறும் 15% மட்டுமே அதிகரித்துள்ளது. இது, ரெயில்வேயின் கவனம் வசதி படைத்த ஏசி பயணிகள் மீது மட்டுமே உள்ளதைக் காட்டுகிறது.

    2013-14 ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023-24 ஆம் ஆண்டில் ஏசி அல்லாத பயணிகள் பிரிவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனுக்கும் மேல் குறைந்துள்ளது. வந்தே பாரத் போன்ற முழுவதும் ஏசி ரயில்களின் பெருக்கம், இந்த ஏழை, நடுத்தர பயணிகள் எண்ணிக்கைக் குறைவுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். 

    பெரும்பாலான வந்தே பாரத் ரெயில்கள் 16 பெட்டிகளுடன் 1128 இருக்கைகளுடன் இயங்குகின்றன. ஆனால், பல சமயங்களில் இந்த ரெயில்களில் இருக்கைகள் முழுமையாக நிரம்புவதில்லை. அதே நேரத்தில், வழக்கமான ரயில்களில், குறிப்பாக இரண்டாம் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    ஒரு வந்தே பாரத் ரெயிலின் செலவு சுமார் ரூ.120 கோடி, இது வழக்கமான ரெயிலை விட இரு மடங்கு அதிகம். இவ்வளவு அதிக செலவில் உருவாக்கப்பட்ட ரெயில்கள் வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.  

    அதிக செலவில் உருவாக்கப்பட்ட இந்த ரெயில்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பது வளங்களை வீணடிப்பதாகக் கருதப்படுகிறது. இதனோடு தற்போதைய ரெயில் கட்டண உயர்வை பொருத்திப்பார்க்க வேண்டி உள்ளது.

    ஏற்கனவே நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படுவது, சரக்கு போக்குவரத்து மற்றும் ஒட்டுமொத்த ரெயில்வே அமைப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    உயர்வருவாய் கொண்ட பயணிகளுக்கு விமானப் பயணங்கள் ஒரு மாற்றாக இருக்கும் நிலையில், குறைந்த வருவாய் பிரிவினருக்கு நீண்ட தூரப் பயணங்களுக்கு ரெயில்வேயைத் தவிர வேறு வழியில்லை.

    ரெயில்வே தனது சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது பரந்த மக்கள் தொகையின் தேவைகளை புறக்கணித்து, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே சேவை செய்வதாக இருக்கக் கூடாது.

    புதிய ரெயில் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள ரெயில்களின் கொள்ளளவை அதிகரிப்பதும், குறிப்பாக ஏசி அல்லாத பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதும் மிக அவசியம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.   

    • மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
    • இந்திராநகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரகேட்டு போராடி வரும் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    இந்திய ரெயில்வே துறையில் தெற்கு ரெயில்வே, வடக்கு ரெயில்வே, கொங்கன் ரயில்வே என 18 மண்டலங்கள் உள்ளன. இவற்றின் மூலம் தினசரி 13 ஆயிரத்துக்கும் அதிகமான எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 8 ஆயிரத்துக்கும் அதிகமான சரக்கு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.

    பாதுகாப்பான, வசதியான பயணம் கிடைக்கும் என்பதால் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களின் முதல் தேர்வு ரெயில் தான். வந்தே பாரத், ராஜ்தானி உள்ளிட்ட ரெயில்களை தவிர மற்ற ரெயில்களில் கட்டணம் என்பது பிற போக்குவரத்துகளை விட குறைவுதான். எனவே அனைத்து தரப்பு மக்களின் விருப்ப தேர்வாக இருக்கிறது.

    ரெயில் கட்டணத்தை பொறுத்தவரை, கடந்த 2013-ம் ஆண்டு கிலோ மீட்டருக்கு 2 பைசா முதல் 10 பைசா வரை உயர்த்தப்பட்டது. அப்போது, மின்சார ரெயில்களுக்கு 2 பைசாவும், மெமு மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 பைசாவும், ஏ.சி. வகுப்பு பெட்டிகளுக்கு 6 முதல் 10 பைசா வரையிலும் கட்டணம் உயர்ந்தது.

    இதையடுத்து, 2020-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் மீண்டும் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது, 2-ம் வகுப்பு படுக்கை வசதி இருக்கைக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசா உயர்ந்தது. ஏ.சி. வகுப்புகளில் ஏ.சி. சேர்கார், முதல் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு ஏ.சி. வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா வீதம் அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ரெயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணையை ஜூலை 1-ந் தேதி ரெயில்வே வாரியம் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டும் வருகிற ஜூலை 1-ந்தேதி திருத்தப்பட்ட ரெயில்வே அட்டவணை ரெயில்வே வாரியத்தின் மூலம் வெளியிடப்பட உள்ளது. அதன்படி, ஏ.சி. வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், ஏ.சி. அல்லாத சாதாரண வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு அரை பைசா கூடுதலாகவும் உயர்த்தப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.



    அதே நேரம் புறநகர் ரெயில்கள் மற்றும் 500 கிலோ மீட்டருக்கு குறைவான தொலைவு செல்லும் 2-ம் வகுப்பு டிக்கெட் பயணிகளுக்கு கட்டண உயர்வு இருக்காது என்றும், மாதாந்திர சீசன் டிக்கெட் வாங்கி பயன்படுத்துவோருக்கும் எந்த ஒரு கட்டணம் மாற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் ரெயில்வே இணை மந்திரி சோமண்ணா, நேற்று சென்னை வந்தார். சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தனி ரெயிலில் அரக்கோணம் வழியாக காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையம் வந்தார். வழிநெடுகிலும் நடைபெறும் ரெயில்வே பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    காஞ்சிபுரம் புதிய ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய மந்திரி சோமண்ணா, இந்திராநகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரகேட்டு போராடி வரும் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரெயில் கட்டணம் பொது மக்களை பாதிக்காத வகையில் படிப்படியாக உயர்த்தப்படும். இது குறித்து விவாதம் நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதியதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலைய பகுதியில் ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. அது தற்போது பரிசீலனையில் உள்ளது,

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத் பி.ஈர்யா மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • உயர்த்தப்படவுள்ள ரெயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.
    • ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று காட்பாடி செல்ல ரெயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள ரெயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.

    பிரதமர் மோடி மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது…

    AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரெயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.

    ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!

    இந்திய ரெயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது.
    • புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன.

    புதுடெல்லி

    ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம்வரை சலுகை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவலைத் தொடர்ந்து இந்த சலுகை நிறுத்தப்பட்டது.

    சுமார் 3 ஆண்டுகளாக சலுகை இல்லாத நிலையில், மீண்டும் எப்போது கட்டண சலுகை அளிக்கப்படும் என்று பாராளுமன்ற மக்களவையில் சுயேச்சை உறுப்பினர் நவ்நீத் ராணா கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், கட்டண சலுகை இப்போதைக்கு கிடையாது என்று சூசகமாக தெரிவித்தார்.

    அவர் கூறியதாவது:-

    பயணிகள் சேவைக்காக ரெயில்வே ரூ.59 ஆயிரம் கோடி மானியம் அளித்துள்ளது. இது பெரிய தொகை. சில மாநிலங்களின் வருடாந்திர பட்ஜெட் தொகையை விட பெரியது.

    ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஆகிறது. சம்பளத்துக்கு ரூ.97 ஆயிரம் கோடியும், எரிபொருளுக்கு ரூ.40 ஆயிரம் கோடியும் செலவிடப்படுகிறது.

    புதிய வசதிகள் அமல்படுத்தப்படுகின்றன. புதிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டி இருந்தால், அதை எடுப்போம். ஆனால், இப்போதைக்கு ரெயில்வேயின் நிலைமையை ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×